அதீதம்-மின்னிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதீதம்-மின்னிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.1.14

அம்மா



அதீதம் மின்னிதழில் வெளிவந்த என் படைப்பு.

                                                 அம்மா

ஆஃபீஸில் ஒரு பிஸியான நேரத்தில் சுதா ஃபோன் செய்தாள்.

“ஏங்க.. எத்தனை மணிக்கு வருவீங்க?”

“எங்கே?” வேலையில் கவனமாக, அசுவாரஸ்யமாகக் கேட்டான் ரகு.

“என்ன கேள்வி… வீட்டுக்குத்தான்”

“வழக்கம் போலத்தான்… என்ன விஷயம்?”

“இன்னிக்கி பெர்மிஷன் போட்டுட்டுக் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்..”

“என்ன விஷயம்?”

“இன்னிக்கி ‘மதர்ஸ் டே’. சாயங்காலம் அம்மாவைப் பார்க்கப் போலாம்னுதான்”

செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தான் ரகு. ஃபோனை வைத்துக் கொண்டு இவன் வெறிப்பதை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்த PA ஜமுனா தனது நாற்காலியிலிருந்து பாதி எழுந்து ‘கூப்பிடறீங்களா என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

பதிலொன்றும் சொல்லாமல் பார்வையை மாற்றிய ரகு, “என்ன சத்தத்தையே காணோம்… ஹலோ…” என்ற சுதாவின் குரலைக் கேட்டு “ம்…. யோசிக்கறேன்…” என்றான்.

“யோசிக்க என்ன இருக்கு… நேரா டவுன் ஹால் ரோட் வந்துடுங்க… அங்க ஜாயின் செய்துக்குவோம்” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

அப்புறம் வேலையில் பாதி கவனம்தான் இருந்தது.

‘அம்மா இந்நேரம் என்ன செய்வாள்? ஒரு மூக்குக் கண்ணாடி அணிந்து ஒன்று ஏதாவது தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை என்றால் ஏதாவது மேகசீன், அல்லது பழைய பைண்டிங் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள்.’

டவுன் ஹால் ரோட்டில் அவள் சொன்ன இடம் வந்து சேர்ந்தபோது சுதா ஏற்கெனவே அங்கு நின்றிருந்தாள். தூரத்திலிருந்து பார்த்தபோதே வாட்ச்சை வாட்சைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் உருவம் தென்பட்டு விட்டது.

அருகில் சென்றதும் புன்னகைத்தாள். “வாங்க..உள்ளே போவோம்” என்று காதியைக் காட்டினாள். உள்ளே சென்றனர். ஒரு சந்தன மாலை மற்றும் ஒரு தேன் பாட்டில் வாங்கிக் கொண்டாள். அங்கே மட்டுமே கிடைக்கும் ஒரு இருமல் மருந்து வாங்கிக் கொண்டாள்.

“இப்பல்லாம் சாப்பாடே பிடிக்கலைடா ரகு… வாய்க்கு ஒண்ணுமே பிடிக்க மாட்டேங்கறது…’

”…………………….’

‘மோருஞ்சாதம் போரும்…யதேஷ்டம்… கொஞ்சம் நாரத்தை இலைப்பொடி போரும், இல்லேன்னா மாகாளி… தேவாமிர்தம்’

‘சும்மா இரேம்மா… தொணதொணன்னு… வேலை செய்ய விடாம…’
சுதா அடுத்த கடைக்குள் நுழைந்து நாரத்தை இலைப் பொடி வாங்கிக் கொண்டாள். தேவாங்க சத்திரத்தில் நுழைந்து அலசி (எதை வாங்கினாலும் ஏற்கெனவே இருப்பது போலவே இருக்கும்… ஆனா இதுதான் அம்மாவுக்குப் பிடிக்கும்…ஹூம்”) ஒரு சுங்கடிப் புடைவை எடுத்துக் கொண்டாள்.

பக்கத்து மெடிகல் ஷாப்பில் நுழைந்து ஒரு ‘வாலினி ஸ்ப்ரே’ வாங்கிக் கொண்டாள்.

‘அம்மாடி.. படியேற முடியலைடா ரகு… முட்டி எல்லாம் வலிக்கறது… இழுக்கறது…’

‘உன்னை யாரும்மா மேல வரச் சொன்னா…சுதா கிட்டயோ முரளி கிட்டயோ கொடுத்து விட வேண்டியதுதானே…’

‘ஏண்டா சள்ளுனு விழறே… ரகு நீ ரொம்ப மாறிப் போயிட்டேடா…’

‘என்னம்மா மாறிப் போயிட்டேன்? தொணதொணன்னு ஒரே புலம்பலா நீதான் மாறிட்டே… தொல்லைம்மா’

“இன்னும் என்னங்க வாங்கலாம்?” சுதாவின் குரல் கலைத்தது.

“போறும் சுதா… அவ்வளவுதான். எனக்கு ஒண்ணும் தோணலை”

“எங்க யோசனை… டல்லா இருக்கீங்க…”

“ஒண்ணுமில்லே சுதா… லேசா தலை வலிக்கறா மாதிரி இருக்கு…”

“வலிக்கும்… வலிக்கும்..”

‘இன்னிக்கி என்ன கிழமை? வியாழன். அம்மா சாயங்காலம் ராகவேந்திரா கோவில் போவாள். “கொஞ்சம் சீக்கிரம் வந்தியான்னா என்னை அங்க விட்டுட்டுக் கூப்பிட்டு வருவியாம்” என்பாள்….’

“சரி, வாங்க… லைட்டா டிஃபன் சாப்பிட்டுவிட்டுப் போவோம்” – சுதா.

கௌரி ஷங்கரில் சாப்பிடும்போது தனது ‘ஹாட் பாக்ஸை’ வெந்நீர் விட்டுக் கழுவி, சுத்தமாகத் துடைத்து விட்டு அதில் அம்மாவுக்குப் பிடித்த பூரி உருளைக் கிழங்கு வாங்கிக் கொண்டாள்.

பைக்கை எடுத்துக் கொண்டு இருவருமாய் பழங்கானத்தத்தம் வந்து சேர்ந்தபோது மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த போர்டை நிமிர்ந்து பார்த்தான் ரகு.

 ‘ஜானகி முதியோர் இல்லம்’

தயங்கி வெளியே நின்றவனைத் திரும்பிப் பார்த்தாள் சுதா.

“வாங்க… அம்மாவைப் பார்த்து நாளாச்சு… எப்பப் பாரு சள்ளு சள்ளுனு விழுந்து அவங்க மனசைக் காயப்படுத்தி, ஒரு பெரிய சண்டைல சொல்லாம கொள்ளாம அவங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டீங்க… எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாங்க… நினைச்சுப் பார்த்தா எனக்குக் கண்ணுல்லாம் கலங்கிடும் ரகு… நானாவது வாரா வாரம் வந்து பார்க்கறேன்… நீங்க அம்மாவைப் பார்த்து மூணு மாசமாச்சு… அம்மாவும் கேட்கறதே இல்லை தெரியுமோ… வைராக்கியம்! அவங்க மனசு வெறுத்துப் போகக் கூடாது ரகு… இப்பக் கூட ஒண்ணுமில்ல.. அப்படியே அம்மாவ வீட்டுக்குக் கூப்பிட்டுப் போகலாம்னா எனக்கும் சந்தோஷமா இருக்கும்… இன்னிக்காவது நல்ல முடிவு எடுங்க…பாவங்க… ஆனா, கூப்பிட்டாக் கூட அம்மா வருவாளோ என்னவோ…நாளக்கி உங்களையும் என்னையும் இப்படித்தான் முரளி பண்ணப் போறான் பாருங்க …”

அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுதா.


படம் நன்றி: உஷா சாந்தாராம்