இன்று ஜனவரி 23 நேதாஜியின் பிறந்தநாள்.
இன்றைய தமிழ் இந்துவில் தலையங்கக் கட்டுரையாக நேதாஜி பற்றி வந்துள்ள தகவல்களைப் படித்தபோது, பல நாட்களுக்குமுன் மதுரையிலிருந்து வந்த ஒரு பார்சலில் கட்டியிருந்த தினமலர் செய்தித்தாளின் கட்டிங் வைத்திருந்த நினைவு வந்தது. அதைத் தேடித் பிடித்து தினமலர் வலைப் பக்கத்துக்குச் சென்று பிப்ரவரி 2, மற்றும் 3, 2013 ஆம் ஆண்டில் தேடினால் அதற்கு வாய்ப்பே தரவில்லை அதன் இணையப்பக்கம்!
எனவே, மடித்து வைத்திருந்த அந்த கட்டிங்கை
அப்படியே தட்டச்சு செய்கிறேன்! இதன் தொடர்ச்சியாக தி இந்துவின் இன்றைய
தலையங்கக் கட்டுரையின் லிங்க் கொடுத்து விடுகிறேன். ஆர்வம் இருப்பவர்கள்
பொறுமையாகப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!
உத்தரப்
பிரதேசம் பைசலாபாத்தில் வசித்து 1985 ஆம் ஆண்டில் மறைந்த கும்னாபி
பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸா? என்று கண்டுபிடிக்க விசாரணைக்கமிட்டி
அமைப்பது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை
அறிவுறுத்தியது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதிக்காலம்
பற்றிய மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தைவான் நாட்டில் 1945
ஆகஸ்ட் 18ஆம் தேதி விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தத்
தகவலை தைவான் அரசு அந்த வேளையிலேயே மறுத்துள்ளது.
நேதாஜி மரண மர்மம்
குறித்து விசாரிக்க ஜஸ்டிஸ் எம்.கே முகர்ஜி கமிஷனை மத்திய அரசு நியமித்தது.
கடந்த 2005 ல் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், 'தைவான் விபத்தில் நேதாஜி
இறக்கவில்லை' ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டிருப்பது நேதாஜி அஸ்தி அல்ல'
என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி அருகில் உள்ள
பைசாபாத்தில் 'ராம்பவன்' என்ற வீட்டில் வசித்து வந்த கும்னாபி பாபா
பகவான்ஜி என்ற துறவிதான், நேதாஜி என்ற பரபரப்பு இருந்து வந்தது. 'சில
ரகசியக் காரணங்களுக்காக நேதாஜி துறவியாக வாழ்ந்து வந்தார்.
நேரு,
சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி போன்ற பல
தலைவர்களுக்கும் கும்னாபி பாபாதான் நேதாஜி என்று தெரியும். அவர்கள்,
அவரிடம் ரகசிய ஆலோசனை பெற்று வந்தனர்.
நேரு மரணம் அடைந்த போது கும்னாபி
பாபாவும் மாறு வேடத்தில் டெல்லி வந்து அஞ்சலி செலுத்தினார். அவரிடம் பல .
தளபதிகளும் ஆலோசனை பெற்று வந்தனர்' என்றெலாம் அவ்வபோது பரபரப்பு தகவல்கள்
வந்தன.
கும்னாபி பாபா, 1985 செப்டம்பரில் மறைந்தார்.
செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த அவரது இறுதிச்சடங்கில் சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள், சில தளபதிகள், நேதாஜி உருவாக்கிய
இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உட்பட பல பிரமுகர்கள்
பங்கேற்றனர். அவரது உடல் தகனம் செய்யப்பட இடத்தில் சமாதி
அமைக்கப்பட்டுள்ளது. அதை 'நேதாஜி சமாதி' என்றுதான் பலரும் குறிப்பிட்டு
வருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில், நேதாஜி வாழ்க்கைத்
தொடர்பான 'ப்ளாக் பாக்ஸ் ஆஃ ப் ஹிஸ்டரி' என்ற ஆவணப்படத்தை அம்லங்குஷும்
கோஷ் என்ற வங்காள இயக்குனர் வெளியிட்டார். அதில் 'கும்னாபி பாபாதான்
நேதாஜி' என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதற்கு ஆதாரமாக பல
தகவல்களை கோஷ் குறிப்பிட்டிருந்தார். 'கும்னாபி பாபாவின் தனிப்பட்ட
டாக்டர்கள் ஆர் கே மிஸ்ராவும் பி. பண்டோபாத்யாவும், அவர்கள் நேதாஜி என்று
கருதுகின்றனர். அவர் பத்திரமாகப் பாதுகாத்து வந்த 40 க்கும் மேற்பட்ட
பெட்டிகளில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஆவணங்களும், நேதாஜி
குடும்பத்தினரின் புகைப்படங்களும் இருந்தன என்று அவர்கள் தெரிவித்தனர்.
நேதாஜி கையெழுத்தும், கும்னாபி பாபாவின் கையெழுத்தும் ஒன்றுதான் என்று
தேசியத் தடயவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டாக்டர் பி.
லால் உறுதி செய்துள்ளார்' என்றெல்லாம், கோஷ் அதிரடித்திருந்தார். இந்த
ஆதாரங்கள் பற்றி அரசுத் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப் படவில்லை.
'இன்னும் விலகாத மர்மம்' என்ற தலைப்பில் இன்றைய 'தி இந்துவில் கட்டுரை. முத்துராமலிங்கத் தேவர், தான் நேதாஜியை உயிருடன் சந்தித்து விட்டு வந்ததாகச் சொன்னதாகவும், இன்றைய இந்தக் கட்டுரை சொல்கிறது!