புதன், 19 பிப்ரவரி, 2014

என் காதலி... யார் சொல்லவா.. ?



கல்யாணங்களுக்குச் செல்வது ஒரு தனி அனுபவம். 


 


நேற்றைய ரிசப்சனுக்கும் வந்திருந்தான். அலுவலகக் கும்பல். இன்று வந்தால்தான் பல உறவுகளைக கண்டு பேச முடியும் என்கிற எண்ணத்தினால்தான் இன்றும் வந்திருக்கிறான்.  கல்யாணக் கும்பல் மற்ற உறவுகளோடு ஓடிப்போன அப்பாக்களையும் காட்டுகிறது. அதை முன்னாலேயே சொல்லியாகி விட்டது. பிரிந்து சென்ற காதலியையும் காட்டுகிறது. இப்போது ரெண்டாவது ரகம். இது அந்நாளைய சோக ராகம்.

 

கல்யாணக் கும்பலில் ஆங்காங்கே நின்று, நின்று உறவுகளைப் பார்த்து, பேசி, சிரித்து என்று சுற்றி வந்து கொண்டிருந்தபோது அவள் 'சட்' டெனக் கண்ணில் பட்டு விட்டாள். இவன் கண்களும் நிலைகுத்தி நின்றன. உடனே அடையாளம் புரிந்து விட்டது. நாற்காலியில் சற்றே தனியாக அமர்ந்திருந்தாள்.  நீண்ட நேரமாக இவனைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்று தெரிந்தது. 

அவளை நோக்கி உடனே முன்னேறத் துடித்த கால்களை மனம் அடக்கியது.  இவன் பார்த்து விட்டதை அவளும் பார்த்தாள். மெல்லப் புன்னகைத்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான். நம் கண்களை ஆழமாகப் பார்ப்பாள். நிறுத்திப் புன்னகைப்பாள். அளந்து பேசுவாள். யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவாள்.

சுவாமிக்குப் பூத் தொடுப்பவன் நல்ல மலர்களைப் பொறுக்கி எடுத்து பூ கட்டுவது போல அவள் பேச்சில் வார்த்தைக்கோவை இருப்பதாக எண்ணியிருந்த காலம் ஒன்று இருந்தது. பொருத்தமில்லாத சொற்களே இல்லாத வரிகளில் பேசுவாள். அல்லது அவள் வாயிலிருந்து வருவதாலேயே எல்லா வார்த்தைகளும் புதிய மதிப்பைப் பெற்று விடுகின்றன என்று எண்ணியிருந்த காலம் அது. இப்போது தீர்மானமாகப் புன்னகைப்பதைப் பார்த்தபோது இவை எல்லாம் நினைவுக்கு வந்தது.

நீண்ட நேரமாக அவள் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்ததால் அவள் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருப்பாள் என்று தனக்குள் நினைத்தான் இவன். ஆனால் தனக்கு இன்னமும் அந்த சௌஜன்யம் ஏற்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. 

கல்லூரி நாட்களில் ஓடி ஓடி காதலித்தது நினைவுக்கு வந்தது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டவள் அவள். அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்று அறியவந்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. தன் கூடப் படிக்கும் சதீஷ், குமாரவேல் போன்றவர்களுக்கு இருந்த ஒரு ஆளுமை தன்னிடம் இல்லையென்று எண்ணியிருந்தான். அதனாலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆனால் இவனுக்கும் அவளிடமிருந்த ஈர்ப்பு அந்தப் பிரியத்தை ஏற்றுக் கொண்டது.
அவள் அருகில் காலியாய் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான். மறுபடி அழகாய்ப் புன்னகைத்தாள்.

"சௌக்யமா?"

"ம்... "

"பொண்ணு பக்கமா, மாப்பிள்ளை பக்கமா?" என்றாள்.

"மாப்பிள்ளை. சந்த்ரு என் அத்தைப் பையன்" என்றான் இவன். தான் அவளை நலம் விசாரிக்கவில்லை என்று ஞாபகம் வந்து உறுத்தியது. 

"நீ........ ங்க?"

"நீன்னே சொல்லலாம். நாம ஒரே க்ளாஸ்தான படிச்சோம்" என்றாள்.

'அவ்வளவுதானா?'

"நீ...  பொண்ணு  உனக்கு உறவா?"

"ஃபிரெண்ட்... அவள் என் ஃபிரெண்டோட தங்கை"

அவள் அவனையே பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தாள். இவன் மேடையைப் பார்ப்பதும், மற்றவர்களைப் பார்ப்பதும் அவளைப் பார்ப்பதுமாய் இருந்தான்.

அவளுக்குத் திருமணமாகி விட்டதா என்று தெரியவேண்டும் என்று தவித்தான். எப்படிக் கேட்பது என்று யோசித்தான். திரும்பி அவள் கழுத்தைப் பார்க்கும் துணிவு வரவில்லை. இதே கழுத்தில் இவன் விரல்களால் கோலம் போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. 

"அவர் வரல்லியா?"

"கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்தாள். "எவர்?"

சங்கடத்துடன் அசைந்தான் இவன். "உங்க.. உன் வீட்டுக்காரர்"

"ஹௌஸ் ஓனரைச் சொல்றியா... நான் இருப்பது சொந்த வீடு"

அவள் பதிலில் பழைய குறும்பு அவளை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. தன்னால் ஏன் இப்படி சகஜமாக இருக்க முடியவில்லை? அதே நேரம், இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லையோ... அதைத்தான் சொல்கிறாளோ... 

ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். 'என்ன எதிர்பார்க்கிறேன்?'

"அவள்  தன் கைவிரல் மோதிரத்தைத் திருகியபடியே சொன்னாள், "பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். நானும் பையனும்தான் வந்தோம். அதோ... அங்கே விளையாடிகிட்டிருக்கான் பார்... சிகப்பு டீ ஷர்ட்..."

அவள் காட்டிய திசையில் சிவப்பாக ஒரு பையன் களையான முகத்துடன் இன்னொரு சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
இவள் ஜாடையும் தெரிந்தது. 


"உன் மனைவி வரவில்லையா?"

"இல்லை. அவள் ஊருக்குப் போயிருக்கிறாள். அவள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை"

மனைவி பற்றிய மேற்கொண்டு பேசுவதைத் தவிர்க்க அவசரமாகக் கேட்டான். "இந்த ஊர்லயா இருக்கே?"

"ஊ...ஹூம்! இன்னமும் அதே தஞ்சாவூர்தான்"

தன்னுடன் இவள் சினிமாவுக்கு வரவில்லை என்று தான் முறைத்துக் கொண்டதும், அவள் சமாதானப்படுத்தியதும், அப்புறம் இவனையும் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் லைப்ரரி சென்றதும் நினைவுக்கு வந்தது.

"இங்கயும் யாரும் இருக்க மாட்டாங்க... இன்னும் சொல்லப் போனா தள்ளித்தான் இருப்பாங்க" என்று இவன் முழங்கையைப் பற்றிக்கொண்டு கிசுகிசுத்தது நினைவுக்கு வந்தது. 

திரும்பிச் சுதந்திரம் எடுக்க முனைந்தபோது தடுத்தாள். "தப்பு... சும்மா கூட இருந்தால் போதும்....  இப்போதைக்கு" என்றாள்.

பேசுவது தவிர தினமும் ஒரு லெட்டர் கொடுப்பான் அவளுக்கு.  இரவு உட்கார்ந்து உருகி உருகி எழுதியிருப்பான். வாங்கிக் கொள்வாள். 

எப்போதாவது அவளும் பதிலுக்கு ஒரு லெட்டர் தருவாள். அதிகபட்சமாய் ஒருமுறை அவளைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறான். அவ்வளவுதான். அதற்கே கோபத்தினாலும் முகம் சிவந்து விலகியவள், அடுத்த சிலநாள் பொது இடங்களிலும், அங்கேயும் கூட, பாதுகாப்பான தூரத்தில் நின்றுமே பேசினாள்.

15 நாள் இவன் வெளியூர் சென்று வந்தபோது தவித்துப் போனவள். இப்போது அந்த மாதிரி எந்தச் சுவடும் தெரியாமல் பேசுகிறாளே...

'அதுசரி! பார்க்காதது போலவே கூடப் போயிருக்கலாமே.. பேசுகிறாளே.. பரவாயில்லையே...' மனம் தன்போக்கில் எண்ணங்களுடன் ஓடியது.

நடுவில் ஆங்காங்கே பிரிந்து சென்று மற்றவர்களுடன் பேசி வந்தாலும் முடிந்தவரை சேர்ந்தே அமர்ந்திருந்தார்கள். பார்த்தாள், புன்னகைத்தாள், பேசினாளே தவிர, உரையாடலில் அவள் காட்டிய தூரம் புரிந்தும் ஏன் இன்னும் திரும்பத் திரும்ப இவள் பக்கத்தில் வந்து அமர்கிறோம் என்று புரியவில்லை அவனுக்கு.

தனக்குப் பழைய நினைவுகள் வந்தது போல அவளுக்கும் வந்திருக்குமா என்று யோசித்தான்.

'வராமலா என்னுடன் பேசுகிறாள்?' 'அப்புறம் ஏன் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை? 

'நாம் மட்டும் பேசுகிறோமா என்ன?' எதற்காகப் பிரிந்தோம் என்று நினைக்கவே பிடிக்கவில்லை இவனுக்கு.
 'பந்தி ரெடி, சாப்பிட வரலாம்' என்று அழைத்தார்கள்.

வரிசையாக எழுந்தவர்களுடன் இவர்களும் எழுந்து சாப்பிடப் போனார்கள்.  இவன் முதலிலேயே தண்ணீர் பாட்டிலைத் திறந்து கடகடவெனக் குடித்தபோது திரும்பி அவனை ஒருமுறை பார்த்தாள். அவளுக்கு சாப்பிடுமுன் நிறையத் தண்ணீர் குடிப்பது பிடிக்காது. 



அந்நாட்களில் ஹோட்டலில் அருகில் அமர்ந்து ருசித்துச் சாப்பிட்டது போலவே, இன்றும் ஒவ்வொரு ஐட்டத்தையும் நிதானமாக, ரசித்துச் சாப்பிட்டாள். சாப்பிடும்போது பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் பதில் சொல்வாள். இன்று இவனும் அவளை ஒன்றும் கேட்கவில்லை.

இவன் தான் கிளம்பவேண்டும் என்று நினைத்திருந்த நேரம் தாண்டியும் அமர்ந்திருந்தான். 

அவ்வப்போது அலைபேசியைப் பார்த்துக் கொண்டாள். இரண்டுமுறை அவளே அதிலிருந்து யாருக்கோ ட்ரை செய்துவிட்டு லைன் கிடைக்காமல் கட் செய்தாள்.  கொஞ்சநேரம் கழித்து அலைபேசியில் ஓசை வர, எடுத்துப் பேசினாள். அருகிலிருக்கும் இவனுக்குக் கூட என்ன பேசுகிறாள் என்று தெரியாத மென்மையான பேச்சு. அலைபேசியை வைத்தவள், தன்னைச் சரிப் படுத்திக் கொண்டாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். 
 இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"ஸோ...  கிளம்பறேன்..."

தலையசைத்தான். 

பையனை அருகில் அழைத்தாள். 'அங்கிளுக்கு டாட்டா சொல்லு' என்றாள்.

அவன் கன்னத்தைத் தட்டியவன் "உன் பேர் என்ன? என்ன கிளாஸ் படிக்கிறே" என்றான்.

ஒரு சின்ன எதிர்பார்ப்பு...

அவன் இவன் பெயரைச் சொல்லவில்லை என்பதாலோ என்னவோ அவன் என்ன படிக்கிறான் என்று சொன்னது இவன் காதில் விழவில்லை!

மகனின் கையைப் பிடித்தபடி நிதான நடையில் சென்றுகொண்டிருக்கும் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

22 கருத்துகள்:

  1. கௌரவமான முடிவு. ஆண்கள்தான் பழைய காதலை நினைத்து உருகிக்கொண்டிருப்பார்கள்.பெண்கள், தோல்வியில் முடிந்த காதலை, வெற்றியாக முடியும் திருமணத்தின்போது அக்கினியில் போட்டுத் தலை முழுகிவிடுவார்கள். எனவே, நப்பாசையோடு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையவேண்டாம் காதல் தோல்வியாளர்களே! (2) அழகான, சுவாரசியமான, உறுதியான கட்டமைப்புள்ள, சிறுகதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. என்னங்க..?

    என்ன என்னங்க ?

    கல்யாண வீட்டுக்குத்தானே போனீங்க ?

    ஆமாம்.

    பின்னே சாப்பிடலையா ?

    சாப்பிட்டேனே.

    பின்னே என்ன மூஞ்சியை அப்படி வச்சுட்டு இருக்கீக ?

    ஒண்ணுமில்ல.

    என்ன ஒண்ணுமில்ல ?

    ஒண்ணுமில்ல அப்படின்னா ஒண்ணுமில்ல.

    நான் நம்பிட்டேன்.

    அது உன் இஷ்டம்.

    தைரியமா சொல்லுங்களேன்.

    என்ன சொல்ல சொல்றே ?

    என்ன நடந்ததோ அதை சொல்லுங்க..
    ........
    என்ன ஒன்னும் பேசலேன்னா என்னது ?

    நான் தான் ஒண்ணுமில்ல அப்படின்னு சொல்லிட்டேன் இல்ல.

    நீங்க பொய் சொல்றீங்க. எனக்குத் தெரியும்.

    என்ன தெரியும் ?

    நீங்க மறைக்கிறது எல்லாமே எனக்குத் தெரியும்.

    அதான் என்ன தெரியும் ?

    எல்லாத்தையும் என் தங்கச்சி புட்டு புட்டு cell pesitta.
    .
    என்னத்த..!!

    என்ன அப்படி பேசினீக ?

    உன் தங்கச்சி அங்க எங்க வந்தா ?

    சந்த்ருவோட கூட படிச்சவ அவ. சந்துரு இன்வைட் பண்ணி கூப்பிட்டு இருக்காரு இவ போனா..

    அப்படியா..

    அது மட்டும் இல்லங்க. சந்துரு அப்பாதான் இவ ஜாதகம் பொருந்தல்லெ அப்படின்னு சொல்லிட்டாரு இல்லையா.

    அதுக்காவ...?

    ஜாதகம் பொருந்தினவ எப்படித்தான் இருக்கா அப்படின்னு பார்க்கனும்லெ..

    சே

    என்ன சே ?

    காதலாவது கத்திரிக்காயாவது ?

    அது தெரியதுல்ல ... வாங்க. வெத்தக்குழம்பு சுட்ட அப்பளம் வச்சிருக்கேன். நீங்க சாப்பிட்ட மாதிரியே இல்ல

    பதிலளிநீக்கு
  3. வெகு பிராக்டிகலான முடிவு. என்றோ காதலித்தவளை நினைத்து இப்போதும் உருகிக் கொண்டிருப்பது ஆண்களால் மட்டுமே சாத்தியம். பெண்கள்...?

    பதிலளிநீக்கு
  4. பெண்கள் எதையுமே வெளிப்படுத்துவதில்லை என்பதே உண்மை...!

    Note : எதையுமே

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹா.. இதுதானா அந்த டிராப்டில் நீண்ட நாட்கள் தூங்கிய பதிவு.. அசத்தல்.. சில இடங்களில் கதாபாத்திரத்தோடு ஒன்ற வைத்துவிட்டீர்கள்.. நிறைய சிமிலாரிட்டீஸ்.. ரொம்பவே ரசித்துப் படித்தேன்.. முடிவு கூட நிஜத்தில் நடந்ததை நினைவு படுத்துவது போல இருந்தது... ஹேட்ஸ் ஆப் சார்..

    பதிலளிநீக்கு
  6. மிகவும் யதார்த்தமான கதை. நேர்த்தியான பாத்திர அமைப்பு, கச்சிதமான உரையாடல், அலைபாயும் மனத்தின் அடியில் ஒளிந்திருக்கும் அற்ப ஆசை என்று கதையின் ஒவ்வொரு அம்சமும் பிரமாதம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா.

    கதையை படிப்பதற்கு உரிய வகையில் நல்ல கற்பனையில் நல்ல கருத்தாடலுடன் பின்னப்பட்டுள்ளது..... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. பிரியம் கொள்கிறார்கள் ! பிரிவு பிரியத்தைகுறைத்ததில்லை ! அதோடு வாழ்க்கையை இணைத்து பார்க்க வேண்டாம் என்று தோன்றுகிறது ! அடிநாதமாக எனக்குத்தோன்றியது ! ( வத்தக் குழம்பு ,அப்பளாம் என்று சாப்பிடக்க்கூப்பிட்டவள் தான் ) யதார்த்தம் ! வாழ்த்துக்கள் ---காஸ்யபண்.

    பதிலளிநீக்கு
  9. எத்தனை உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன ஒரு சிறுகதையில். உண்மையில் இது போல எத்தனை ஜோடிகளோ.ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் திருமணம் ஆனதும் பழசெல்லாம் போகித்தீயில் விழுந்துவிடும்.வெகு யதார்த்தமான அழகான நடை. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. அவன் என்ற இடத்தில் 'எங்கள்' பெயரில் யார் பெயரை போட்டால் சரியாக இருக்கும் ஸ்ரீராம் சார்... வாத்தியார் சொன்னது மாதிரி வெகு பிராக்கிடிகலான முடிவு.. அதுதான் எதார்த்தமும் கூட :-)

    பதிலளிநீக்கு
  11. மிகவும் யதார்த்தமான முடிவு. திரும்பவும் இந்த ஜோடி எங்கும் சந்திக்காமலிருப்பதே, இவர்களுக்கு மட்டுமல்ல இவர்கள் குடும்பங்களுக்கும் நல்லது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
    நல்ல கதை .

    பதிலளிநீக்கு
  12. கதையை கொண்டு சென்ற விதம் வெகு அருமை.நிரம்பவே ரசித்து வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. யதார்த்தமான கதை. கொண்டு சென்ற விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  14. வழக்கம் போலவே வெகு அழகான நடை. யதார்த்தமான முடிவு. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  15. மகனின் கையைப் பிடித்தபடி நிதான நடையில் சென்றுகொண்டிருக்கும் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.//

    யோவ் !! இன்னமும் அங்கேயே உட்கார்ந்து இருக்கியா ?
    வீட்டுக்கு போவலியா ?
    அங்கே உன்னோட பொஞ்சாதி உன்னையே நம்பி வந்தவ சாப்பிடாம உனக்காக காத்துட்டு இருக்காய்யா ...

    வீட்டுக்கு போ.
    இத்தனை பேரு சொல்லிருக்கோம். ஒத்தருக்கு கூட உன்னோட பதில் என்னன்னு போடல்லே ?

    லோகத்துலே சில ஆசைகள் நடக்கும்.பல ஆசைகள் நீர்க்குமிழி போல உடஞ்சு போகும்.

    அதுனாலே மனசு உடஞ்சு போனா, அது உன்ன மட்டும் இல்ல. உன்னை சேர்ந்தவங்க எல்லாரையும் பாதிக்கும்.

    வீட்டுக்கு போயிட்டு ஒரு செல் அடி.
    மனசை சந்தோசமா, இன்னிக்கு என்ன கிடைச்சிருக்கொ அத வச்சுண்டு நிம்மதியா இருக்க கத்துக்கோ.
    ou need to match your desires to your abilities. Somewhere you need to let go, and somewhere you need to hold on. Hold on to faith, and let go of cravings. If you let go of cravings, you will be happy. +Sri Sri Ravi Shankar

    meenaachi paati,
    wife of
    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  16. கையில் இருக்கும் பலாப்பழத்தை விடக் கிடைக்காத களாக்காயை நினைந்து ஏங்கும் மனம். :))))

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை.

    சினிமாத்தனமான ஒரு முடிவு இல்லாமல் யதார்த்தமாக முடித்தது நன்று.

    பதிலளிநீக்கு
  18. பெண்கள் யதார்த்தவாதியோ! ஆனால் ஆண்களைத் தானே மலருக்கு மலர் தாவுவாங்கனு சொல்றாங்க. ம்ம்ம்ம்ம்? புரியலை! குழப்பம்! :)

    பதிலளிநீக்கு
  19. மிகவும் ப்ராக்டிகலான கதையும் முடிவும் ...என்னை பொறுத்தவரை பழையவிஷயங்களை அதிலும் நல்லவற்றை மட்டுமே வாழ்க்கையில் திரும்பி பார்ப்பது நல்லது அதுகூட சந்தோசம் தருவனவற்றை மட்டும் மீண்டும் அசைபோட்டு ரசிக்கலாம் ..வெவ்வேறு திசையில் சென்றபின்பு எதேச்சையா அந்த பழைய வழியில் மலர்கள் இருந்திருக்குமா இல்லை பழ மரம் இருக்குமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது :).

    பதிலளிநீக்கு
  20. ஆவ்வ்வ் எனக்கு இவ் லிங்கை ஒரு அதே உளவாளி:) அனுப்பினா நேற்று, இன்று படிக்கலாமே என திறந்தால், கண்ணை நீக்க முடியவில்லை, ஒரே மூச்சில் முழுவதையும் படிச்சு முடிச்சேன்ன், அழகிய ஒரு சோகக் கதை... சொந்தக் கதையா.. கற்பனைக் கதையா எண்டெல்லாம் கேய்க்க மாட்டோம்ம்.... :), அழகான சூப்பர் கற்பனை... கதை ஆனாலும் படிச்சு முடிய மனதுக்கு கஸ்டமாவே இருக்குது...:(.

    கிட்டத்தட்ட இதேபோல ஒரு கவிதை.. யார் எழுதினார்கள் என தெரியவில்லை.. நேரம் கிடைத்தால் நிட்சயம் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்..

    http://gokisha.blogspot.com/2010/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  21. 96 இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் இப்படி தான் இருக்குமோ என எண்ண வைத்தது. அவனின் (பெயர் இல்லாததால் ) தவிப்பு அருமையான description. அவனுக்கு திருமணம் ஆகி விட்டது என்று நம்ப வைத்து விட்டான் போல

    பதிலளிநீக்கு
  22. 96 கதைக்கருதான் கிட்டத்தட்ட. மறுபடி படிக்க வந்தேன். நல்லவேளையா 96 படம் பார்க்கலை. எனக்கென்னமோ அது பிடிக்கலை. கல்யாணம் ஆகி சந்தோஷமாக் கணவன் கூடக்குடும்பம் நடத்தும் பெண்ணைப் பழைய மாணவர்கள் சந்திப்புனு அழைத்து, பழைய நினைவுகளைத் தூண்டி விட்டு! ம்ம்ம்ம்ம்! இதை நான் சொன்னால் படத்தைப் பார்த்து உருகிட்டு இருக்கிறவங்க ஒத்துக்க மாட்டாங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!