செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கடந்த வார கல்கியில் ரசித்த சிறு கதை

              

ஒரு சிறுகதை எப்படி இருக்கவேண்டும்?  

   

வரைமுறை எல்லாம் கிடையாது என்பது என் கருத்து. படிக்கத் தொடங்குமுன் தொடக்கத்திலேயே படிக்கத் தூண்டி கவர வேண்டும்.  


             
பிப்ரவரி 9ம் தேதியிட்ட கல்கியைப் புரட்டத் தொடங்கி பக்கங்களைத் தாண்டும்போது 'தோத்தோ என்கிற மணி' என்ற சிறுகதையைத் தாண்டினேன்.  எழுதியவர் 'சபிதா' என்று இருந்தது.  எங்கள் வீட்டில் ஒரு சபிதா உண்டு.  அவரும் அபாரத் திறமைகள் படைத்தவர்தான். ரொம்ப ரசிக்கும்படி எழுதவும் கூடியவர். ஆனால் அவர் இந்தச் சிறுகதையை எழுதியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்தது.  


              
நான் ஒரு நாய் நேசன். (ஏற்கெனவே சொல்லியாச்சே...) அதனாலோ என்னவோ நாய் பற்றிய கதை என்பதே என்னை முதலில் கவர்ந்தாலும் படிக்கத் தொடங்கியதும் தொடர வைக்க வேண்டுமே.... வைத்தது. மிகவும் ரசித்த கதைகளில் ஒன்றாகிப் போனது.   
              
ஒருவருக்குப் பிடித்த கதை அடுத்தவருக்குப் பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிடித்தவருக்கு அந்தக் கதை அவருக்குப் பிடித்துப் போக அந்தக் கதை அவரது மனதின் நெருக்கமான ஒரு பகுதியைத் தொட்டிருக்கக் கூடும். (இதை டிஸ்கியாகவும் கொள்ளலாம்)  
      
நான் ஏற்கெனவே நாலுகால் ஜீவன் பற்றி சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்த வகையிலும் இந்தக் கதை எனக்குப் பிடித்துப் போனது.  உங்களுக்காக  நான் படித்த அந்தக் கதையின் முன்பாகத்தைச் சுருக்கித் தந்து விட்டு முடிவை சற்று விளக்கமாகத் தருகிறேன்.  
       
ராமலக்ஷ்மி.... உங்களுக்குக் கல்கி வீடு தேடி வருமென்றால் முழுக்கதையையும் புத்தகத்திலேயே படியுங்கள். உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும். இனி கதை...   
     
கதாநாயகியின் எதிர் வீட்டுக்கு வந்து சோறு சாப்பிட்டுச் செல்லும் தெரு நாயைக் கண்டால் இவளுக்கு அசூயை. அது அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டினுள் பார்த்து, அதுவும் 'கேட்'டின்மீது மீது கால் வைத்து ஏறி, குலைத்து விட்டுச் செல்கிறது.  இவள் முதலில் பயந்தாலும் பின்னர் அது தன் குழந்தை மான்யாவுக்கு விளையாட்டு காட்டுகிறது, அது குலைக்கக் குலைக்க,  தன் குழந்தை சிரிக்கிறது, அதற்காகவே அது - மணி - அப்படிச் செய்கிறது - செய்கிறான் என்று தெரிந்து மெல்ல மெல்ல மணி மேல் இவளுக்குப் பாசம் வருகிறது.  
      
ஆனாலும் மணி, இவள் கதவையே திறந்து வைத்தாலும் எல்லை மீறுவதில்லை, உள்ளே வருவதில்லை. இவளின் குழந்தையுடனான சாயங்கால நடைப் பயிற்சியில் ஒருநாள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருட்டி விட, இவள் திரும்பி வர பயப்படும்போது மணி துணைக்கு வருகிறது. அப்புறம் தினசரி நடைப் பயிற்சியில் மணி கூட வருவது வழக்கமாகி விடுகிறது. இவளின் கணவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வரும்போது மணியையும் உடன் அழைத்துப் போகிறார்கள்.   
    
மணி அங்கு நன்றாகப் பழகி விடுகிறது. அதற்காகத் தனி மர வீடு. அதன் காஸ்ட்லி உணவை மட்டும் அது ஏற்றுக் கொள்வதில்லை. பழைய சாதம்தான்.  குழந்தையுடன் நன்றாகப் பழகுகிறது.  கணவன் ஆபீசிலிருந்து திரும்பும் நேரம் - அது எந்த மாறுபட்ட நேரமாயினும் - வெளியே நின்று வரவேற்கிறது!  அவர் மனதையும் கொள்ளை கொள்கிறது.  அதை வெளியில் அழைத்துச் செல்லலாம் என்று காரில் ஏறக் கூப்பிட்டால் அது 'ஹாவ்' என்ற வித்தியாசமான குரலுடன் மறுப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.  அது குலைப்பதற்கும் குழந்தையிடம் விளையாடும்போது ஏற்படுத்தும் வித்தியாசமான ஒலியையும் அவர்களால் வித்தியாசப் படுத்திப் பார்க்க  முடிகிறது.  
                     
இந்நிலையில் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. டாக்டர் இதற்குக் காரணம் செல்லப் பிராணி வளர்ப்பதுதான் என்கிறார். இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சில நாட்கள் கழித்து மறுபடி குழந்தைக்கு உடல் நலமில்லாமல் போகிறது. டாக்டர் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்; எச்சரிக்கிறார். இவர்கள் தடுமாறுகிறார்கள். கடினமான அந்த முடிவை எடுக்க மனத்தைக் கல்லாக்கிக் கொள்கிறார்கள்.  நாய்கள் காப்பகத்தில் விடலாமா என்று யோசிக்கிறார்கள். தெருவில் 'சுதந்திரமாக' விட்டு விடலாம் அதுதான் அதற்கு நல்லது என்றும் யோசிக்கிறார்கள் அதுதான் சரி என்று படுகிறது (இங்குதான் என்னுடைய 'நாய் மனம்' பதிவு  எனக்கு நினைவு வந்தது) இனி கதை அதன் வரிகளில்....   
                  
"ஆமா... மணி பழைய மாதிரியே சுதந்திரமா இருக்கும்" என்று நாங்கள் இருவரும் மணியை வெளியேற்றப் போகும் குற்றத்துக்கு நியாயம் கற்பித்துக் கொண்டோம். இரவுகளில் வழக்கமாகச் சிறு பூச்சிக்கும், இலை அசைவுக்கும், வாகன ஒலிக்கும் குரைக்கும் மணி, அன்றிரவு மணியின் இருப்பு நிசப்தமாக இருந்தது.  தொலைவில் ஒலித்த வேறேதோ நாயின் ஊளைச் சத்தத்துக்கும் கூட அது பதிலளிக்கவேயில்லை. அந்தப் பேரமைதி எனக்குப் பெரும் இரைச்சலாகத் தோன்றி மனதைப் பிசைந்தது.  ஓரிரு நாளில் அல்லது வாரங்களில் நன் மணியை மறந்து போவேன். மான்யா 'தோ தோ தோ தோ' என அரற்றுவாள். அவளுக்கு ஒரு நாய் பொம்மையினை வாங்கிக் கொடுத்து, எனது அரக்கத் தனத்துக்கு மேல்பூச்சுப் பூசுவேன். எல்லாம் சரியாகும்.
               
காலையில் "மணி..." என்ற குரலுக்கு அது தன் தலையை சாவதானமாகத் தூக்கிப் பார்த்தது.  அதன் கண்கள் வழக்கத்தைப் போல அல்லாமல், கீழ்நோக்கி சற்றுத் தளர்ந்திருந்ததைப் போல இருந்தது.  இரவில் வைத்த உணவு தீண்டப் படாமல் ஈ மொய்த்து, காய்ந்து கிடந்தது.  நான் மணிக்கு எத்தனை பெரிய துரோகத்தை இழைக்கப் போகிறேன்? அறிவில் குறைந்த ஒரு உயிர் என்பதால்தானே "காப்பாற்றுகிறேன்" என்று அழைத்து வந்து இன்று இத்தனை எளிதாகக் கைவிடப் போகிறேன்?  வேறு வழியில்லை. இதை நான் செய்துதான் ஆகவேண்டும்.  
              
 "என்னை மன்னித்து விடு மணி"
      
"முரளி, மணியை எப்படி எடுத்துட்டுப் போறது? அது காருக்குள் ஏறாதே?"
         
"செயின்ல கட்டித்தான் இழுக்கணும்"  
         
"நான் வரலை. குழந்தை தூங்கி எழுந்துக்கறதுக்கு முன்னாடி நீயே விட்டுட்டு வந்துடு."  
                  

நான் சங்கிலியை எடுத்து மணியை நோக்கிப் போனேன். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் போனது. மணியின் செய்கையைக் கண்டு நாங்கள் உறைந்து போனோம். அது இந்த மனிதர்களின் நன்றி கெட்டத் தனத்தை அறிந்து கொண்டு விட்டது. கேட்டைத் திறந்து விட்டு, காரின் பின் கதவுகளையும் திறந்த முரளி, "மணி" என்று அழைத்ததும் அது முன் நோக்கி நகரத் தொடங்கியது.  நாங்கள் இருவரும் விக்கித்துப் போனோம். மணி தன் தலையைத் தொங்கவிட்ட படி ஒரு தூக்கு மேடைக்குச் செல்லும் குற்றமற்ற கைதியைப் போல தாங்கவியலா மௌனத்தைச் சுமந்து கொண்டு சென்றது. அதன் வால் செய்து வைத்ததைப் போல, துளியும் அசைவின்றி இருந்தது. வேண்டாத விருந்தாளி அவமானங்களைச் சுமந்துகொண்டு திரும்பிச் செல்வதைப் போல, எந்த எதிர்ப்பும் இன்றி காரின் பின்சீட்டில் ஏறிக்கொண்டது எங்களது மணி.

   

****
           
உங்களுக்கு எப்படியோ... என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. சபாஷ் சபிதா...
                     

33 கருத்துகள்:

  1. சபீதாவுக்கு நானும் ஒரு
    சபாஷ்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு சோகம். முன்பெல்லாம் இந்த மாதிரி அலர்ஜியெல்லாம் கிடையாது. எப்படியோ வஞ்சிக்கப் படுவது என்னவோ நாலு கால் பிராணிகள் தான். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  3. சபாஷ் சபிதா...

    மனம் கனக்க வேறேதும் சொல்லத்தோன்றவில்லை..!

    பதிலளிநீக்கு
  4. மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்! வா என்றால் வரவேண்டும் போ என்றால் போகவேண்டும். புரியாத ஜீவனா அது? என்னுடைய அப்பு கதையும் இதுபோன்றதொரு நிகழ்வின் அடிப்படைதான். மனம் நெகிழவைத்த கதையை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. :( அழுதுட்டேன்! எங்க மோதி நினைவுக்கு வந்தான். அவனை நாங்க யாரும் வேண்டாம்னு சொல்லவே இல்லை. இருந்தாலும்........:((((((( இப்போ நினைச்சாக் கூட மனம் பதறுகிறது.

    பதிலளிநீக்கு

  6. நாய் வளர்த்தவர்கள் அனைவரிடமும் ஒரு கதை உண்டு. நான் எங்கள் செல்லியைப் பற்றி எழுதி இருக்கிறேன் எங்கள் நாய் அல்லாத ஒரு நாயை நடை பயில பூங்கா செல்லும் போது பார்க்கிறேன். அந்த நாய் நடை பயிலும் ஒருவரை (அவரை மட்டும் ( பின் தொடரும்.அவர் நடை முடித்துப்போனபின் அவரை தொடராது. இன்னொரு நாய். நாங்கள் பயிற்சியில் இருந்த போது எங்களுடன் பயிற்சிக் கூடத்துக்குவரும் நாங்கள் மணி அடித்து உணவுக்கூடம் செல்லும் போது அதுவும் வரும் ஒருமுறை காந்தி இறந்த தினம் மௌன அஞ்சலி செய்ய காலை 11 மணிக்கு மணி அடித்தார்கள் நாய் ( மோத்தி என்று பெயர் வைத்திருந்தோம் )உணவுக்கூடம் நோக்கி ஓடியது. யாரும் வராததுகண்டு ஏமாந்து தலை தொங்கப் போட்டுக் கொண்டு வந்து மீண்டும் படுத்துக் கொண்டது. யாரோபாவிகள் அதற்கு விஷம் வைத்துக் கொன்றார்கள்.!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் மனதை பாதித்த கதை ..:( இன்னமும் அழுதுகொண்டே இருக்கேன் ..
    வாயில்லா பிராணிகள் என்றாலும் மனிதர் மனதில் நினைப்பது அவற்றுக்கும் விளங்கும் .
    சபிதா ...உங்களுக்கு பாராட்டுக்கள் .நன்றி ஸ்ரீராம் ..

    Angelin.

    பதிலளிநீக்கு
  8. உருக்கம். இந்த இதழ் இன்னும் எனக்கு வரவில்லை. வந்ததும் வாசிக்கிறேன். நீங்கள் குறிப்பிடாவிட்டாலும் உங்கள் நாய்மனம் கதை எனக்கு நினைவுக்கு வந்திருக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு மனமும் உணர்வுகளும் மனிதர்களை விட பலபடி மேலாக..

    பதிலளிநீக்கு
  9. செடிகளே நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது நாய் அறியாதா என்ன ?
    நீங்கள் வாலை சுருட்டிய ..தப்பு தப்பு...கதையை சுருக்கிய விதம் அருமை !

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா.

    மனம் கனத்தது.. உருக்கமான வரிகள் எங்களுக்கும் வலியை தந்தது... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை//

    எனக்கும் தான்.

    பக்கத்துவீட்டில் நாய் வளர்த்தார்கள் அதற்கு நோய் வந்தவுடன் அதை நாய் பிடிப்பவர்களிடம் ஒபடைத்து விட்டார்கள்.
    அது வெகு நாள் மனதை கஷ்டபடுத்திக் கொண்டே இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை//

    எனக்கும் தான்.

    பக்கத்துவீட்டில் நாய் வளர்த்தார்கள் அதற்கு நோய் வந்தவுடன் அதை நாய் பிடிப்பவர்களிடம் ஒபடைத்து விட்டார்கள்.
    அது வெகு நாள் மனதை கஷ்டபடுத்திக் கொண்டே இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டிலும் ஒரு ஜூனோ ஒரு வருட காலம் இருந்து இறந்துபோனது. அதை பற்றிய தொடர்பதிவும் எழுதி இருந்தேன்.
    முழுக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது எங்கள் வீட்டிலும் ஒரு ஜூனோ ஒரு வருட காலம் இருந்து இறந்துபோனது. அதை பற்றிய தொடர்பதிவும் எழுதி இருந்தேன்.
    முழுக் கதையை கட்டாயம் படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை அல்ல வாழ்வியல்.. எங்களுக்கு இப்போது எங்கள் வீட்டில் வளர்ந்துவரும் பூனை செய்யும் அட்டகாசங்கள் பொறுக்க முடியாமல் எங்காவது கொண்டு விடலாம் என மகன் கேட்கும் போதெல்லாம் நம் மகிழ்விற்காக அதனை வளர்த்துவிட்டு அதைத் துரத்துவது என்பது கேவலமான துரோகம் என்பதாய் தள்ளிப் போட்டிருக்கிறோம். அந்த நினைவும் வந்து சென்றது...

    பதிலளிநீக்கு
  16. பொதுவாக எல்லா பிராணிகளும் இயற்கை சூழ்நிலையில் ஹாயாக வளர வேண்டும். என்ன தான் வீட்டுச் செல்லப்பிராணி என்று நாம் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினாலும் அதன் இயல்பான வளர்ச்சிக்கு நமது ஆக்கிரமிப்பு இடையூறாகத் தான் முடியும். சங்கிலி பூட்டி நம் இஷ்டத்திற்கு அதை ஆட்டி வைப்பது நேசிப்பாகாது. சங்கிலியில் (விலங்கில்) பொன்விலங்கு என்று ஏதும் உண்டோ?..

    வாயில்லா ஜீவன். உணவு விஷயம், வளர்ப்புச் சூழல் என்று அதன் விருப்பம் பூராவும் நம் விருப்பம் போலவே அமைகிறது.
    நம் விருப்பமே அவற்றின் அன்றாட பழக்கமும் ஆகிறது. என் தோத்தோவுக்கு இது தான் பிடிக்கும் என்று நம் விருப்பங்களையே சுமை சுமையாய் அவற்றின் முதுகில் ஏற்றுகிற அசட்டுத்தனத்திற்கு அளவேயில்லை.

    நம் பிள்ளைகளின் மீது அன்பு என்கிற போர்வையில் என்னவெல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அதெல்லாம் இந்த மாதிரியான விலங்குகளின் மேலும்.
    இதெல்லாம் தான் இந்த மாதிரியான ஜீவங்களின் இயல்பான வளர்ச்சிப் போக்கை பாதிப்பதாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. என் சிபாரிசு:

    ஜெயகாந்தன் எழுதிய 'நிக்கி'
    என்கிற சிறுகதை.

    நிக்கி என்பது ஒரு நாயின் பெயர்.
    இந்தக் கதையின் நாயகியின் பெயர். ஏன் ஒரு நாய் ஒரு கதைக்கு நாயகியாக இருக்கக்கூடாதா, என்ன?..

    ஒரு குப்பத்தில் ஜனித்து, சாக்கடையில் புரண்டு, தெருக்களில் திரிந்து, ஒரு சுற்று வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டு மீண்டும் குப்பத்திற்கே வந்து சேரும் நிக்கியின் கதை உருக்கமானது. படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு

  18. நன்றி சூரி ஸார்!

    ஆமாம் வல்லிம்மா... பூனை ரோமமாவது அலர்ஜி என்று சொல்லலாம். நாய்க்கு அப்படிப் பொதுவாகச் சொல்ல மாட்டார்கள்.

    நன்றி DD

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    நன்றி கீதமஞ்சரி. நம்மை அண்டியிருக்கும் ஜீவன்களை நாம் படுத்தும் பாடு! உங்கள் 'அப்பு' கதைக்கு லிங்க் கொடுங்களேன்.

    நன்றி கீதா மேடம்... மோதி நினைவுகள் பதிவாகவே போட்டு விட்டீர்கள்.

    நன்றி ஜி எம் பி ஸார்.. உங்கள் செல்லி பதிவுக்கு லிங்க் கொடுக்க முடியுமா?

    நன்றி ஏஞ்சலின்.

    நன்றி ராமலக்ஷ்மி. வாயில்லா அந்த ஜீவன்கள் உணர்வுகளாலேயே மனிதன் மனத்தில் நினைப்பதை அறிவது மிகவும் அற்புதமான விஷயம். என் அனுபவத்தில் புதிய நாய்கள் கூடஎன்னை மிரட்டியதில்லை!

    நன்றி பகவான் ஜி...! :))))

    நன்றி ரூபன்.

    நன்றி கோமதி அரசு மேடம். நோய் வந்த அந்த ஜீவனுக்கு வைத்தியம் பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அல்லது தெருவிலாவது விடவேண்டும். பாவம் அந்த ஜீவன்.

    நன்றி முரளிதரன்.

    நன்றி ஹேமா (HVL)

    நன்றி எழில்.

    நன்றி ஜீவி ஸார். ஜேகேயின் அந்தக் கதை நான் படித்ததில்லையே... பொதுஆக நாய் போன்ற ஜீவன்கள் மனிதர்களை அண்டியே வாழ்கின்றன. எனவே அந்தச் சூழ்நிலைக்கு தங்களைப் பழக்கிக் கொண்டு விடுகின்றன.

    பதிலளிநீக்கு
  19. //ஜே.கே.யின் அந்தக் கதை நான் படித்ததில்லையே.. //

    இணையத்தில் தேடிப் பாருங்கள். கிடைக்கும்.

    உங்களுக்காக தேடவும் செய்தேன்..

    library.senthamil.org/130.htm
    -ல் காணக்கிடைக்கிறது.

    படித்து விட்டு மறக்காமல் மனசில் படிந்ததைச் சொல்லவும். நாய்களின் மீது அன்புள்ளவராதலால்
    அந்த 'நிக்கி' கதை பற்றி உங்கள் பாணியில் ஒரு பதிவு போட்டாலும் சரியே. 'கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது' லிஸ்டில் இன்னொன்றும் சேரும்.

    பதிலளிநீக்கு
  20. @ஜீவி சார், நிக்கி படிச்சேன், ஏற்கெனவே படிச்ச நினைவும் வந்தது. நிக்கி அலைகிற அலைச்சல், கடைசியில் அது தன் எஜமானியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதுனு ஒவ்வொண்ணா நினைச்சா வருத்தமா இருக்கு. என்னதான் சுதந்திரம் அதுஇதுனு சொன்னாலும் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டால் நிக்கியின் மகிமையே தனி தானே!

    பதிலளிநீக்கு
  21. ஜெயகாந்தன் அவருக்கே உரிய பார்வையில் எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

  22. பெண் நாய் என்று ஒதுக்கப்படும் நிக்கி தனக்கான ஒரு எஜமானனை யாசிப்பது அருமை. அது மற்ற நாய்களுடன் போட்டியிட்டு உணவு தேடுமளவு பலம் அதன் உடலில் வரும் நேரத்துக்காவது ஒரு எஜமானனை ஏற்பாடு செய்யும் இயற்கை! ஜேகேயின் சிறுகதைத் தொகுப்பு மூன்று பாகம் என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கிறது. அதில் தேடிப்பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  23. மனதைத் தொட்ட கதை...... எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    கதை எழுதியவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. நிக்கி கதை படித்து தங்கள் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், ஸ்ரீராம் அவர்களுக்கும்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. enga pakathu vetlaum oru naai iruku. avaru name koda mani thaan. ippa avaru englauku family freind:)

    பதிலளிநீக்கு
  26. இது கதை இல்லை, நிஜம் ! எங்கள் வீட்டில் நடந்தது. எங்கள் மிக்கியை வீட்டில் வைத்துக்கொள்ள பயங்கர எதிர்ப்பு, காரணம் மனிதர்களின் ஒரு உயிரை காப்பாற்ற பொறுப்பெடுத்துகொள்ளும் மனசில்லாதது தான்.கொண்டுவிட தீர்மானித்தனர். நானும், தம்பிகளும் எதிர்த்தோம், எங்கள் எதிர்ப்பை மீறி மிக்கி வெளியேற்றப்பட்டான். எங்கள் ஆகாத்தியம் அதிகமாகவே அவனை வேறு வழியில்லாமல் திருப்பி கொண்டுவர முடிவு செய்தார்கள். என்ன ஆச்சர்யம்!!! நான் போய் மீண்டும் கூப்பிட்ட போது அவன் வரமறுத்துவிட்டான். அந்த டீகடை வாசலிலேயே, பிச்சை உணவு உண்டு வாழ்வானேயன்றி என் போன்ற நன்றி கெட்டவர்கள் கையால் உண்பதில்லை என்று முடிவு செய்துவிட்டான் போலும் அந்த நன்றியுள்ள ஜீவன். என் மிக்கி மானஸ்தன்.

    பதிலளிநீக்கு
  27. @தானைத்தலைவி... வருக...வருக.. முகநூலில் உங்கள் பெயர் பார்த்திருக்கிறேன்!

    உங்கள் பின்னூட்டம் கல்கி கதைக்கு மட்டுமா, அல்லது நாய் மனம் கதையையும் படித்தா, என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  28. Thank you so much for the comments,overwhelmed actually.i,m sabitha.

    பதிலளிநீக்கு
  29. வாங்க சபிதா. உங்கள் வரவு ஒரு இனிய ஆச்சர்யம். விகடனில் வந்திருக்கும் உங்கள் பெண்கள் தினக் கவிதையைக் கூடப் பகிர எண்ணியிருந்தேன். அதை எழுதியதும் நீங்கள்தானே?

    இந்தப் பதிவை எப்படிப் பிடித்தீர்கள் என்று அறிந்து கொள்ளவும் ஆவல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!