செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கணித எருமை!

     
என்னை எருமை என்று அழைத்த கணித ஆசிரியர் பற்றி சென்ற வாரம், முகநூலில் நிலைப்பாடு பதிந்திருந்தேன்.
      
         

நான் எருமைப் பட்டம் வாங்கியது பற்றி ஒரு விவரமான பதிவு இப்போ, இங்கே. 
     

அப்போ நான் படித்தது ஐந்தாம் கிளாஸ். தேசிய ஆரம்ப பாடசாலை, நாகப்பட்டினம். 
   
அந்த வருடத்தில் நாங்கள் சட்டயப்பர் கோவில் தெருவிலிருந்து பெருமாள் கோவில் சன்னதித் தெரு வீட்டிற்கு மாறப் போகின்றோம் என்றும் அதனால் அந்தப் பள்ளியிலிருந்து தேர்முட்டிப் பள்ளிக்கூடத்திற்கு மாறப் போகின்றேன் என்றும் தெரிந்துகொண்டேன். 
     
ஒருவகையில் சந்தோஷமாக இருந்தது. வாரம் ஒருநாள் வாய்ப்பாடு ஒப்பிக்கச் சொல்லும் தண்டபாணி வாத்தியாரிடமிருந்து தப்பித்துவிட்டேன் என்று சந்தோஷம். பள்ளிக்கூடம் மாறுவதால், வாய்ப்பாடு படிக்கவேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. 

ஆனால் பாருங்க - என்னுடைய அப்பா, "ஸ்கூல் மாறும் வரை இந்த ஸ்கூலுக்கே போய் வா, கால் பரீட்சை நேரத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகின்றேன்" என்றார். 

வேறு பள்ளிக்கூடத்தில் சேரப் போகின்றேன் என்பதால், இந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லப்பட்ட  புத்தகங்கள் / நோட்டுகள் எதையும் வாங்கவில்லை. அனாவசிய செலவு வேண்டாம் என்று சிக்கன நடவடிக்கை, வீட்டு மந்திரிசபை கூடி தீர்மானம் எடுத்து விட்டார்கள். 

தண்டபாணி வாத்தியாரின் வகுப்பில் வாய்ப்பாடு சொல்லச் சொல்லும் கொடிய நிகழ்ச்சி வாரம் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கும். முதல் பையன் ஒன்றாம் வாய்ப்பாடு. இரண்டாம் பையன் இரண்டாம் வாய்ப்பாடு ... (அதனால் வகுப்பில் ஆசிரியருக்கு அருகே, முதலிடம் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் ஒரு வியட்நாம் போரே நடக்கும்) முதல் மூன்று வாய்ப்பாடுகள் எல்லோரும் சுலபமாகச் சொல்லுவார்கள். மூன்றாம் வாய்ப்பாடு மற்றும் நான்காம் வாய்ப்பாடு கொஞ்சம் கஷ்டம்தான் - ஆனாலும், "மூவஞ்சு பதினஞ்சு" என்று சொல்லிவிட்டு, 'மூவாறு ...' என்று சொல்லுவதற்குள் மனதுக்குள் பதினாறு, பதினேழு, என்று சொல்லி, பதினெட்டு என்று சொல்லலாம். 

ஐந்தாம் வாய்ப்பாடும் பத்தாம் வாய்ப்பாடும் ரொம்ப ரொம்ப சுலபம். 

ஆறு முதல் ஒன்பதாம் வாய்ப்பாடு வரை ரொம்பக் கஷ்டம். 

சில வெள்ளிக்கிழமைகள் வகுப்புக்குக் கட் அடித்தேன். நடிப்புத் திறமையில் என்னை மிஞ்ச ஆள் கிடையாது (வயிற்று வலி), அண்ணன் அடித்ததால், பல் குத்தி (என்னுடைய பல்தான்) உதட்டில் காயம், (ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஸ்கூலுக்குக் கட்டு; அண்ணனுக்குத் திட்டு!) பக்கத்து வீட்டில் கல்யாணம் என்று சில வெள்ளிக்கிழமைகள் இனிதே கழிந்தன. 

ஒரு வெள்ளிக்கிழமை காரணம் எதுவும் கிடைக்கவில்லை. சரி முதல் மூன்று இடங்களுக்குள் போய் உட்காரலாம் என்று பார்த்தால், முதல் இரண்டு பெஞ்சுகள் ஃபுல். 

தண்டபாணி வாத்தியார் இன்றைக்கு வராமல் இருக்கவேண்டும் என்று தண்டபாணியை (முருகா, முருகா, முருகா) வேண்டிக்கொண்டேன். கடவுள்கள் யாரும் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை. 

தண்டம் ஒன்றை (பிரம்பு) கையில் ஏந்தி, தண்டபாணி சார் வந்துவிட்டார். முதல் பையன் ஒன்றாம் வாய்ப்பாடு. இரண்டு மூன்று நான்கு என பத்து வாய்ப்பாடுகள் சொல்லப்பட்டன. இந்த வாய்ப்பாடு வகுப்பில் இன்னும் ஒரு கொடுமை, வாய்ப்பாடை சொல்லும் பையன் ஒவ்வொரு வரியாக சொல்லுவான், கிளாஸ் மொத்தமும் கோரசாக அதை அதே இராகத்தில் திருப்பிச் சொல்வார்கள். 

பிறகு மாணவிகள் ஒன்று முதல் பத்து வரை வாய்ப்பாடு சொன்னார்கள். 

மீண்டும் அடுத்த பத்து மாணவர்கள். 
    
எனக்கு முன்னால் இருந்த ஆறு மாணவர்கள் ஒன்று முதல் ஆறு வரை கூறியாகிவிட்டது. 

எனக்கு ஏழாம் வாய்ப்பாடு. எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பாலச்சந்திரன், அதற்குள் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, அவனுடைய ஆரல் மணீஸ் வாய்ப்பாடுப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எட்டாம் வாய்ப்பாட்டை கடம் அடிக்கத் துவங்கியிருந்தான்.  (என்னிடம் புத்தகங்கள் எதுவும் கிடையாது என்பது தெரிந்ததே!) 

நான், நடுங்கும் முழங்கால்களோடு எழுந்து, சொன்னேன் .... 

நான்: "ஏழோன் ஏழு."

கிளாஸ்: "ஏழோன் ஏழு" 

நான்: "ஏழிரண்டு பதினாலு" 

கிளாஸ்: "ஏழிரண்டு பதினாலு" 

கிளாஸ் உரத்த குரலில் சொல்லும் பொழுதெல்லாம், நான் பாலச்சந்தரின் ஆரல் மணீஸ் வாய்ப்பாட்டு புத்தகத்தை ஓரக்கண்ணால் பார்த்து, அடுத்து சொல்லவேண்டிய எண் எது என்று பார்த்து சொல்லிவந்தேன். 

ஏழ் நான்கு இருபத்தெட்டு வரை எல்லாம் நல்லபடியாக நடந்தது. 

"ஏழஞ்சு ..."  என்று சொல்லிவிட்டு ஆரல் மணீஸ் பக்கம் பார்த்தால், அந்த கிராதகன், வாய்ப்பாட்டுப் புத்தகத்தை பட்டென்று மூடி வைத்துவிட்டான்! ஆனாலும், நொடிப்பொழுதில் என் கண்ணில் பட்ட .. X 5 = 40 என்பது என்னுடைய மண்டைக்குள் ஆணியடித்து அமர்ந்து, ஆலாபனை செய்ததால், ஒரு வினாடி தடுமாறிய நான்,  "நாற்பது" என்றேன்.

கிளாஸ்: " ("கொல்!!") (சிரிப்பு!) 

'சற்றுக் கண் அயரலாமா' என்று யோசித்துக் கொண்டிருந்த தண்டபாணி சாரின் கவனம் என் பக்கம் திரும்பியது. 

"டேய் எருமை! திரும்ப சொல்லு!"

நான்: "எருமை" 
    
த வா: மேலும் உக்கிரமாக ... "டேய் ஏழஞ்சு எவ்வளவு?" 

நான் : "நாற்பது." (ஆரல் மணீஸ் பொய் சொல்லாது என்று என் திடமான நம்பிக்கை) 

த வா : "டேய் - உங்கப்பா ஜெ மு சாமி கடையில  (தண்டபாணி சாருக்கு என் அப்பாவைத் தெரியும்) இப்படி எண்ணி பணத்தைக் கொடுத்தால் ஜெ மு சாமி தலையில துண்டைப் போட்டுகிட்டு போகவேண்டியதுதான். ஏறுடா பெஞ்சு மேலே!" நான் அப்பாவின் முதலாளியை அப்போ பார்த்ததில்லை.  இப்போ யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை ஜெ மு சாமி கடை முதலாளி தலையில் துண்டு போர்த்திக் கொண்டு அர்விந்த் கேஜ்ரிவால் போல இரு(ந்திரு)ப்பாரோ என்று தோன்றுகிறது. 
     
பெஞ்சு மேலே ஏறி நின்ற எனக்கு அன்று கையிலும் காலிலும் பலத்த பிரம்படி. 
            
மறுநாள், நான் ஏழாம் வாய்ப்பாட்டை ஏழுதடவை இம்போசிஷன் எழுதிச் செல்ல வேண்டியதாயிற்று! 
    
இந்த ஏழாம் வாய்ப்பாடு சம்பவம் நடந்த ஏழு வருடங்கள் கழித்து, தண்டபாணி சாரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலேயே கட்டியப்பர் சந்நிதியில் நாங்கள் குடி பெயர்ந்தோம். 
     
அதற்கு முதல் வருடம், ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் முதல் பேட்ச் படித்து, முதல் ரேங்க் வாங்கி, (ஆரல் மணீஸ் புகழ் பாலச்சந்திரன் அப்போ இரண்டாவது ரேங்க்) அதற்காக எனக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஆண்டு விழாவில் புத்தகம் & ஐஸ்க்ரீம் கப் பரிசு கொடுத்தார்கள். 
       
அந்தப் பரிசுகளை என்னால் தண்டபாணி சாரிடம், பெருமையாகக் காட்ட இயலவில்லை. ஏனென்றால், நான் பரிசு வாங்கிய அதே நாளில்தான் அவர் இறந்து போனார். 
                         

17 கருத்துகள்:

  1. ஏழு அல்ல ஏழரை...!

    ம்... பெருமையைக் காண அவர் கொடுத்து வைக்கவில்லை...

    நடிப்புத் திறமை உள்ளது என்று இன்று தான் தெரியும்...

    பதிலளிநீக்கு
  2. arumai! enakku ippadi oru Dhandapani Sir vaykkalai. ippoovum kanakkilee naan weak than! :))))))

    பதிலளிநீக்கு
  3. enga paiyarai vilaiyaattukku Erumai nu kupittal udane avar Erumai mathiriyee "mmmmeeeeeeeeeeeee" enRu kathi pathil solvar. eththanai tharam kuppitalum pechchil pathil varaathu!:))))) allathu yar erumainu kupidarome avangalaik katti anaiththuk konde, erumaiyoda appa, erumaiyoda ammanu solluvaar. thiruppi appadi kupida mudiyumgaringa? :)))))))

    பதிலளிநீக்கு
  4. ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் முதல் பேட்ச் படித்து, முதல் ரேங்க் வாங்கி
    வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியரிடம் மகிழ்ச்சியைப் பகிர முடியாமல் போனது வருத்தமே.

    ஐந்தாம் வகுப்பில் இருக்கும் போது இதே போல ஒவ்வொரு திங்களும் கோரஸாக அஸெம்ப்ளியில் இரண்டு முதல் பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்ல வேண்டும். யாராவது தப்பாகச் சொன்னால் வாயசைவைக் கவனித்தே பின்னலைப் பிடித்து வெளியே இழுத்து விடுவார்கள்:)!

    பதிலளிநீக்கு
  6. வாய்ப்பாடு வகுப்புகள் என்னுள்ளும் பல நியாபகங்களைக் கிளருகிறது சார்.. எங்களுக்கு எல்லா வாய்ப்பாடிலும் 11 முதல் 15 ம் சேர்த்து சொல்ல வேண்டும்.. 13ம் நம்பர் இப்ப வரைக்கும் பயம் தான் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  7. @Cheenu,
    ungalukku paravayillai. engalukku ellaam 16th vayppadu varai sollanumakkum. appo ellaam 16 ana oru rupee enbathal 16th vaayppaadu varai compulsory. :)))

    பதிலளிநீக்கு
  8. வாய்ப்பாடுகள் எல்லாருக்குமே திகில் தான் போல. நானும் மாட்டி முழித்திருக்கிறேன்....:)))

    பாவம்! அந்த ஆசிரியருக்கு பார்க்கும் கொடுப்பினை இல்லை..

    பதிலளிநீக்கு
  9. என் கணவரை என் மாமியார் சிறுவயதில் ”டேய் டெல்லி எருமை” என்று தான் அழைப்பார்களாம்.

    சாதாரணமாக கூப்பிட்டால் காதிலேயே விழாதாம். டெல்லி எருமை என்று கூப்பிட்டால் என்னவென்று கேட்பாராம்...:))))

    பதிலளிநீக்கு
  10. வாத்தியாருக்கு வேலையே வைக்கவில்லை எங்கள் மதுரைத் தாத்தா. மாகாணி வரை தினம் சொல்லணும். நான் என் தங்கை என் தம்பி எல்லோரும் கைகளைக் கட்டிகொண்டு சொல்லி முடித்த பிறகு தான் குடிக்கப் பாலே கிடைக்கும்>

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் நாகப்பட்டினத்தில் பெருமாள் மேல வீத்யிலா இருந்தீர்கள் ?

    நாங்களும் 77 முதல் 80 வரை நாகையில் தான் அதே வீதியில் தான் இருந்தோம். அப்பொழுது நான் எங்கள் நிறுவன கிளை அதிகாரியாக இருந்த காலம்.


    நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், இந்தப்பக்கம் சுந்தரராஜ பெருமாள் கோவில், தேசிகன் கோவில், முருகன் கோவில், சட்டயப்பர் கோவில்,எல்லாமே உங்கள் பதிவு படிக்கும்போது நினைவுக்கு வருகிறது.
    எனது மூத்த மகன் அந்த ஊரில் செயின்ட் அந்தோனி பள்ளியிலும் பெண் நேரு நர்சரியிலும் படித்தார்கள்.

    ஏழாம் வாய்ப்பாடு என்னை எந்த வாத்தியாரும் சொல் என சொன்னதில்லை. சுட்டு போட்டாலும் எனக்கு ழ ல ள வராது.
    இன்றைக்கும் இதே கதை தான். அதனாலே,
    செவென் ஒன்னு செவெனு.
    செவென் ரண்டு ட்வெல்லு.
    செவென் மூணு ட்வெண்டி ஒன்னு.
    அப்படின்னு சொல்வேனாம்.
    சுப்பு தாத்தா.
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
  12. அண்ணா...
    ஏழாம் வாய்ப்பாடு உங்களுக்கு எருமைப் பட்டம் வாங்கிக் கொடுத்ததா....

    பதிலளிநீக்கு
  13. வல்லிம்மா,
    தமிழ் கற்போம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வாசித்தது
    // https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-Learn-Tamil/145796775600115?hc_location=timeline
    Fractions in Pure Tamizh (Pinnangal பின்னங்கள்)

    பின்னங்கள் ( Fractions )

    1= ஒன்று ( onRu )
    3/4= முக்கால் ( mukkaal )
    1/2= அரை ( arai )
    1/4= கால் ( kaal )
    1/5= நாலுமா ( naalumaa )
    3/16= மூன்று வீசம் ( moonRu veesam )
    3/20= மூன்றுமா ( moonRumaa )
    1/8= அரைக்கால் ( araikkaal )
    1/10= இருமா ( irumaa )
    1/16= மாகாணி , வீசம் ( maakaaNi , veesam )
    1/20= ஒருமா ( orumaa )
    3/64= முக்கால் வீசம் ( mukkaal veesam )
    3/80= முக்காண் ( mukkaaN )
    1/32= அரைவீசம் ( araiveesam )
    1/40 = அரைமா ( araimaa )
    1/64= கால் வீசம் ( kaal veesam )
    1/80= காணி ( kaaNi )
    3/320= அரைக்காணி முந்திரி ( araikkaaNi munthiri )
    1/160= அரைக்காணி ( araikkaaNi )
    1/320= முந்திரி ( munthiri )
    1/102,400= கீழ் முந்திரி ( keezh munthiri )
    1/2,150,400= இம்மி ( immi )
    1/23,654,400= மும்மி ( mummi )
    1/165,580,800= அணு ( aNu )
    1/1,490,227,200= குணம் ( kuNam )
    1/7,451,136,000= பந்தம் ( pantham )
    1/44,706,816,000= பாகம் ( paagam )
    1/312,947,712,000= விந்தம் ( vintham )
    1/5,320,111,104,000= நாகவிந்தம் ( naagavintham )
    1/74,481,555,456,000= சிந்தை ( sinthai )
    1/1,489,631,109,120,000= கதிர்முனை ( kathirmunai )
    1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி ( kuralvaLaippidi )
    1/3,575,114,661,888,000,000= வெள்ளம் ( veLLam )
    1/357,511,466,188,800,000,000= நுண்மணி ( nuNNmaNl )
    1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் ( thaertthugaL )//


    //Sury Siva said
    ...செவென் ரண்டு ...//
    ஐயா, நீங்கள் படிக்கும்போதும் ஆரல் மணீஸ் வாய்ப்பாடு புத்தகம் இருந்ததா ? :-) :-)

    பதிலளிநீக்கு
  14. கருத்து உரைத்த வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. பாலராஜன் கீதா அசத்திவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. சூரி சிவா சார்.

    சட்டயப்பர் கோவில் மேல மடவிளாகம், (சௌந்தரராஜ)பெருமாள் (கோவில்) சந்நிதி, தேவையர் தெரு, கட்டியப்பர் சந்நிதி ஆகிய தெருக்களில் வாடகை வீடுகளில் குடியிருந்தோம்.

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியரிடம் பெருமையாகச் சொல்ல முடியாமல் போனதே.....

    இந்த டெல்லி எருமையின் புகழை முன்னரே பரப்பி விட்டார்கள் போல! அதனால் நான் எஸ்கேப்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!