செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

Dr H. அமலா பால் பல் வைத்தியர்


பல் சற்று குறுகுறுக்கிறது என்று சொன்னவுடன் ராகவன் 'நான் ஆபீசிலிருந்து வரும் வழியில் ஒரு போர்டு தினம் பார்க்கிறேன். அமலா பால் என்றொரு டாக்டர். சின்ன இடம் தான்.  ஆனால் பக்கத்தில் வண்டி நிறுத்த வசதியாக நிறைய இடம் இருப்பதனாலோ என்னவோ நிறைய பேர் குழந்தை குட்டிகளை அழைத்துக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.' என்றார்.



எங்கே என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக விசாரித்துக் கொண்டேன் ராஜு  என்கிற நான்.


மறு நாள் வெள்ளிகிழமை.  ராகவன் சொன்ன இடத்துக்கு சென்றால் கூட்டமே இல்லை.  வண்டியை அவர் சொன்னது போல பக்கத்தில் இருந்த காலி மனையில் நிறுத்திவிட்டு நாம் சற்று முன்னர் வந்து விட்டோம் போலிருக்கிறது என்றெண்ணி தெருவின் கடைசி வரை ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்க்கும் நேரம் 0930 - 1230 & 1630 - 2030 என்றும் இன்னும் என்னவோ எழுதியிருக்க கிட்டே போய் பார்த்த பின் தான் வெள்ளி விடுமுறை என்பதும் அதனால் தான் என்னையன்றி வேறு யாரும் வராததன் காரணமும் புரிந்தது. 

மாலை ராகவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் 'என்ன ராகவா இப்படி செய்து விட்டே.   டென்டிஸ்ட் வெள்ளிக் கிழமை லீவுனு சொல்லக் கூடாதா?' என்றேன்.   இதன் நடுவே கிராம்பு,  ஏலக்காய்,  ஜாதி பத்திரி என்று விதம் விதமாக  சாப்பிட்டு பல் கூச்சம் குறைந்து போயிருந்ததால் அமலா பால் நினைவே வரவில்லை.  இரண்டொரு வாரம் கழித்து மீண்டும் பல்வலியும் தொடர்ந்து அமலா பால் நினைவும் வர வாட்சைப் பார்த்து வேலை நேரம் வெள்ளிக்கிழமை அல்லாததை உறுதி செய்து கொண்ட பின்னர் கிளம்பினேன்.



நல்ல கூட்டம்.  எல்லோருமே ஒரு குழந்தையை அழைத்து வந்திருந்தவர்கள்  என்னைப் பார்த்ததும் ஏன்  எழுந்து நின்றனர் என்பது புரியாமல் ஒரு அரைப் புன்னகையுடன் கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். சற்று நேரம் கழித்து குறுந்தாடியுடன் இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய அவரைப் பார்த்ததும் எனக்கு மற்றவர்கள் காட்டிய மரியாதையின் காரணம் புரிந்தது.  பல் வலிக்கிறது என்று ஷேவ் செய்யாமல் விட்ட தாடிதான் மரியாதைக்குக் காரணம். கூடியிருந்தவர்கள் என்னை டாக்டர் என்று எண்ணச் செய்தது .

என் முறை வந்ததும் நான் உள்ளே செல்ல தாடிக்கார டாக்டர் என்னைத் தாண்டி வாயிற்படியை நோக்கிப் பார்வையை செலுத்த நானும் திரும்பிப் பார்த்தேன் [அமலா பால் ?] யாரும் இல்லை. டாக்டர் 'வாங்க. உட்காருங்க' என்று சொல்லி விட்டு மீண்டும் தயங்குவது போல  ' குழந்தை...' என்றிழுக்க, பல்வலி எனக்குத் தான் என்றேன்.  குழந்தைகளுக்குப் பல் வைத்தியம் என்றெழுத போர்டில் இடமில்லை என்பதால் பால்-பல் வைத்தியம் என்று எழுத வைத்தேன் என்று அவர் கூறியதும் தான் அவர் டாக்டர் ஹமீது அமலா,  குழந்தைகள் பல் வைத்தியர் என்பதும் புரிந்தது.


என்னை மாதிரி அமலா பாலைப் பார்க்க எத்தனை பேர் வந்தார்களோ தெரியாது ஆனால் பலர் போர்டு படிக்காமல் யாரோ சொல்லி வந்தவர்கள் என்பது அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்ததிலிருந்தே புரிந்தது.

பல் வலி என்ன ஆயிற்று என்கிறீர்களா ?

மேலும் படியுங்கள்.

டாக்டர் அமலா [பால்! என்ன ஒரு ஏமாற்றம்!] சிபாரிசின் பேரில் டாக்டர் வெண் பிங் சாங்கைப் போய் பார்த்தேன்.  இரண்டு தெரு தள்ளி சற்றே பெரிய இடத்தில் இருந்தது.  கூட்டம் அதிகமாயில்லை. இரண்டோருவர்தான் முனகிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

சாங்குக்கு ஐம்பது வயதிருக்கும்.  குலம், கோத்ரம், ஜன்ம லக்கினம் தவிர எல்லாவற்றையும் விசாரித்த பின்னர் டென்டிஸ்ட் நாற்காலியில் அமரச் சொல்லி வாயைத் திறக்கச் சொல்லிப் பல திசைகளிலிருந்தும் டார்ச் அடித்துப் பார்த்தார். பின்னர் சின்ன X ray  மெஷின் கொண்டு வந்து இடது கன்னத்தை ஒட்டி வைத்து சற்று நேரம் அசையாதிருங்கள் என்று ஒரே ஒரு ஷாட் எடுத்துக் கொண்டு 'நாளை வாருங்கள்.  பல்லை எடுக்கணுமா இல்லை மருந்து கொடுத்தே சரி பண்ணி விடலாமா என்று பார்ப்போம் என்றார்.


மறு நாள் சாங்கின் கிளினிக்குள் நுழைந்ததும் 'வாங்க சார்.  டாக்டர் அமலா உங்களையும் இங்கே தான் அனுப்பினாரா என்று ஒருவர் கேட்டுக்கொண்டே அவர் பக்கத்தில் இருந்த [ நாற்]காலியை சுட்ட அதில் உட்கார்ந்தேன்.

டாக்டர் சாங் யாரோ ஒரு பேஷண்டின் பல்லைப் பிடுங்குவதில் படு பிசி.  கணேஷ் - அவர்தான் என்னைப் போலவே அமலா சொல்லி இங்கு வந்தவர்...ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் 'ராமர் கோவில் கட்டுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க, உங்கள் கேள்வியே தப்பு.  ராமருக்குக் கோவில் கட்டுவது பற்றி என்று சொல்லியிருக்க வேண்டும். என்று நான் என் தமிழ்ப் புலமையைக் காட்டப் போய்   கடைசியில் 'அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது பற்றிய என்னுடைய அபிப்பிராயம் என்று அவர் கேட்க நான் அதிலென்ன தப்பு மசூதி கட்டுவதற்கு முன் அங்கே கோவில் இருந்தது உண்மை என்றால் கோவில் கட்டுவதில் தவறிருப்பதாக எனக்குத்தெரிய வில்லை என்று சொன்னேன்.

கணேஷ் என் பதிலில் திருப்தி அடைந்தவராக சற்று மெளனமாக இருந்தார்.  கொஞ்ச நேரம் கழித்து 'அப்படீன்னா சீனாக்காரர்கள் செய்வது விஞ்ஞான பூர்வமாக சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது' என்று தனக்குள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டும் நான் எதுவும் சொல்லவில்லை.  'சார் எல்லோரையும் போலத்தான் நீங்களும். பல் வலித்தால் கூட தாங்க முடியவில்லை என்றால் வைத்தியரை நாடி வருகிறோம் சற்றுப் பரவாயில்லை என்றால் பல் வைத்தியர் பற்றி சிந்திப்பதே இல்லை'. இவருக்கு என்ன ஆயிற்று என்று நான் யோசிக்க முயலும் முன் சங் என்னை அழைக்க உள்ளே சென்றமர்ந்தேன்.  

என்னுடைய Xray படத்தை எடுத்து கிளிப்பில் வைத்து லைட்டை ஆன் செய்தவர் 'உங்கள் பல்லில் சுற்றுப் புறம் சுத்தம் செய்து 15 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து போட்டால் பல்லை எடுக்க வேண்டி வராது என்றவர். 'ஆமாம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சரி என்று தானே சொன்னீர்கள்?  நானும் கேட்டுக் கொண்டு தானிருந்தேன் ' என்றார்.


'ஆம் அது பற்றி நீங்கள் ....' என்று நான் தொடருமுன் மறித்தவர்,

'இந்திய உப கண்டம் வடக்கு நோக்கி நகர்வதாக விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது' என்றார்.


மேலும் தொடர்ந்து,  'அப்போ பல்லாயிரக் கணக்கான வருடங்களாக சீனாவின் மீது இந்திய ஆக்கிரமிப்பு தொடர்கிறது இல்லையா ?' என்றும் கேட்டு விட்டு இ'ப்போது அவர்கள் [கவனிக்க "அவர்கள்"] செய்வது நியாயம் என்று சொல்வீர்களா ? ' என்றார்.  

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை !

13 கருத்துகள்:

  1. சென்னையிலே மழைனு தான் கேள்விப் பட்டேன். இதைப் படிச்சால் வெயிலாயிருக்கும் போலிருக்கே! ஹிஹிஹிஹிஹி!

    அமலா பால்-பல் மருத்துவரோட அனுபவங்கள் பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதம்! :))))

    பதிலளிநீக்கு
  2. கவனத்தை மாற்றுவதில் கில்லாடியாக இருக்கிறார் போல...!

    பதிலளிநீக்கு
  3. இந்திய உபகண்டம் மற்றும் சீனா
    இரண்டும் சொல்கின்றன

    "எங்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கும்"
    அதில் தலையிட நீங்கள் யார் என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லை ?

    இது உங்கள் நாட்டு பிரதமருக்கும் எங்கள் நாட்டு பிரதமருக்கும் இடையே உள்ள understanding

    உள்நாட்டு பிரச்சினைகளை சமாளிக்க திசை திருப்ப அவப்போது அவர் சிவகாசி வெடிகளை கொளுத்திப் போடுவார் பதிலுக்கு நாங்களும் சில சீன வெடிகளை வெடிப்போம்.

    நீங்களும் உங்கள் பிரச்சினைகளை மறந்து இதையே பேசிக் கொண்டிருப்பீர்கள். அதற்குள் வேறு புதிய பிரச்சினைகளை கிளப்பிவிட்டு நாங்கள் எங்கள் பையை ரொப்பிக்கொள்வோம்
    .
    உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  4. இந்திய உபகண்டம் மற்றும் சீனா
    இரண்டும் சொல்கின்றன

    "எங்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கும்"
    அதில் தலையிட நீங்கள் யார் என்று கேட்பது உங்கள் காதில் விழவில்லை ?

    இது உங்கள் நாட்டு பிரதமருக்கும் எங்கள் நாட்டு பிரதமருக்கும் இடையே உள்ள understanding

    உள்நாட்டு பிரச்சினைகளை சமாளிக்க திசை திருப்ப அவப்போது அவர் சிவகாசி வெடிகளை கொளுத்திப் போடுவார் பதிலுக்கு நாங்களும் சில சீன வெடிகளை வெடிப்போம்.

    நீங்களும் உங்கள் பிரச்சினைகளை மறந்து இதையே பேசிக் கொண்டிருப்பீர்கள். அதற்குள் வேறு புதிய பிரச்சினைகளை கிளப்பிவிட்டு நாங்கள் எங்கள் பையை ரொப்பிக்கொள்வோம்
    .
    உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  5. அமலாபால் நு சொன்னதும் யோசிக்காம சட்டுனு வெள்ளிக்கிழமை லீவ்னு கூட பார்க்காம போய் இறங்கி முதல் முறை பல்பு வாங்கிட்டு...

    இரண்டாவது முறை போனால் அங்க குழந்தைகளை ஏன் எல்லாரும் கூட்டிட்டு வராங்கன்னு உங்களைப்போலவே நானும் குழப்பமாக தான் இருந்தேன். இடையில் தாடி வைத்தால் அழகாக டாக்டர் மாதிரி இருந்ததாக நினைத்து எல்லாரும் காட்டிய மரியாதை..

    ஒரு இடத்துக்கு போனால் அரசியல் பேசாம சமர்த்தா இருந்துட்டு வரணும்னு தெரியாது? இப்டியா ராமர் கோயில் பத்தி பேசிட்டு டாக்டர் கிட்ட போய் இப்படி மாட்டிக்கிறது? அவர் வேற டாக்டர் கிட்ட அனுப்பிவிட... அங்க வாங்கின பல்பு...

    இதை படிச்சதுமே எனக்கு ஒன்னு நினைவுக்கு வந்ததுப்பா.

    எங்க வீட்டுக்காரருக்கு பல் ரூட் கனால் பார்க்க போய் டிஸ்பென்ஸரில உட்கார்ந்துக்கிட்டு முதன் முதலில் ஸ்ரீராம் சாருக்கு போன் செய்தது :)

    த.ம.1

    பதிலளிநீக்கு
  6. பல் டாக்டர் என்றால்
    பல் மட்டும் பிடுங்குபவர் இல்லையா....!

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் சரி பல்ல பிடுங்காட்டாலும் பில்ல பிடுங்கியிருப்பாரே... அத பத்தி வாயவே திறக்கக் காணோம் :-))))))

    பதிலளிநீக்கு
  8. அமலா பால் பல் என்றெல்லாம் சொல்லி என்னை
    அந்தக்காலத்து நினைவுகளில் .... அமிழ்த்தி விட்டீர்களே !!

    நானும் ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி,
    அந்த தஞ்சாவூர் பால் இல்லை பல் டாகடரிடம்
    (அவர் ஆர்மிலே இருந்த பல் டாகடர் ) கடவா
    பல்லை எடுக்க போயிருந்தேன்.

    லிக்னொகைன் போட்டு மரத்து போன
    பின்னே அவர் எக்ஸ் ரே பார்த்துக்கொண்டே ஒரு உளி எடுத்து அடித்த சத்தம் கேட்டு
    வாசல் லே இருந்தவர்கள் எல்லாரும் ஓடிய நினைவும் வருகிறது.

    ஒரு 45 நிமிஷம் வேர்க்க விருவிருக்க அவர் என் வாய்க்குள்ளே த்வம்சம் பண்ணிக் கொண்டிருந்தபோதிலும் நான் சமர்த்தா இருந்தேன் அப்படின்னா ,

    காரணம் அவங்க பக்கத்திலே இருந்த
    அமலா பால்.

    பதிலளிநீக்கு
  9. பால் பல் டாக்டரிடம் பட்ட அனுபவம் சுவைதான். கிழமை பார்க்கக் கூட வாட்ச் வேணுமா உங்களுக்கு¦ சரியாப் போச்சு. @சுப்பு அண்ணா,கடவாப்பல்லுக்கு டாக்டரிடம் மல்லுக்கட்டி அமலாபாலையும் ரசித்தீர்களா. மீனு மாமிக்குத் தெரியுமா.

    பதிலளிநீக்கு
  10. பல் டாக்டர் கிட்ட அரசியல் பேசக்கூடாதுன்னு புரியுது! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //. கிழமை பார்க்கக் கூட வாட்ச் வேணுமா உங்களுக்கு¦ //

    நாள், தேதி, கிழமை, நாள், நக்ஷத்ரம், இடம் இதெல்லாம் நாங்கலாம் இப்ப ஆன்ட்ராய்ட் போன்லதான் பாக்கறோம்

    பதிலளிநீக்கு
  12. அமலா பால்.... :))))

    என்ன ஒரு ஏமாற்றம் - உங்களுக்கு! :)))

    பதிலளிநீக்கு
  13. 'அந்த' அமலா பால் டாக்டராக இருந்திருந்தால் ஃபீஸாக சொத்தை எழுதித் தந்திருப்பீங்களோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!