திங்கள், 19 மே, 2014

திங்க கிழமை 140519 :: கோதுமைச் சாதம்.

  
கோதுமை, எனக்குத் தெரிந்து இரண்டு வகைப்படும். 
   

   
ஒன்று சம்பா கோதுமை. 
         
மற்றது சாதாரண (பஞ்சாப்) கோதுமை. 
         
சம்பா கோதுமை என்று கேட்டு, (கிடைத்தால்) கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். (பெங்களூரில் கிடைப்பதில்லை.) 
         
சம்பா கோதுமையை மிக்சியில் போட்டு விப்பரில் ஒன்று அரையாக உடைத்துக் கொள்ளவேண்டும்.  மாவாக செய்துவிடாதீர்கள். பத்து செகண்டுகளுக்குள் ஒன்று அரையாக உடைத்துக் கொண்டால் போதும். 
         
பிறகு அரிசிச் சாதம் தயார் செய்வது போலவே கோதுமைச் சாதத்தை சமைக்க வேண்டியதுதான். திட்டமாக நீர்விட்டு, (கஞ்சி வடிக்கின்ற நிலை வேண்டாம்) நீர் சுண்டி, கோதுமை நன்றாக வெந்ததும் இறக்கி வைத்துவிட வேண்டும். 
    
கோதுமைச் சாதம் நல்ல சத்துணவு. நோய்வாய்ப்பட்டு உடல் தேற வேண்டியவர்களுக்கும், நீரழிவு நோயாளிகளுக்கும், இரத்த அழுத்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் கோதுமைச் சாதம் மிகச் சிறந்த உணவாகும். 
   

10 கருத்துகள்:

  1. சம்பா கோதுமை முழுசாக் கிடைக்காட்டியும் தலியா என்னப்படும் ரவையாகக் கிடைக்கும். ஆகவே மிக்சியில் போட்டு உடைக்கும் வேலையே வேண்டாம். இந்த கோதுமை ரவையை அல்வா, கேசரி(வட மாநிலங்களில் க்ஷீரா என்பார்கள். சத்யநாராயண பூஜைக்கு இதான் முக்கிய நிவேதனம்)உப்புமா, அப்புறம் காய்கள் எல்லாம் போட்டுத் தேவையானால் மசாலா போட்டு சாதம் மாதிரிச் செய்யலாம்.

    தோசை வார்க்கலாம். அடை பண்ணலாம். அடைக்கு அரைக்கையில் இதை ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதும். பருப்புக்களை ஊற வைத்து உப்புக்காரம் சேர்த்து அரைத்த பின்னர் இதைப் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்தால் போதும். உளுந்து அரைத்துப் போட்டு இட்லி மாதிரியும் செய்யறாங்க. நான் முயன்றதில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஊட்டியில் சம்பாகோதுமையும், கோதுமை ரவையும் நிறையக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. சாப்பாட்டு கோதுமை என்று உடைத்த கோதுமை கிடைக்கிறது..!

    பதிலளிநீக்கு
  4. எல்லாருக்கே (இனி) சிறந்த உணவு தான்... (!) நன்றி...

    பதிலளிநீக்கு
  5. நானும் தலியா தான் வாங்குகிறேன். உப்புமாவும் செய்வேன். இரவில் இதையே நிறைய தண்ணீர் வைத்து கஞ்சியாகச் செய்துவிடுவேன்.

    அடை செய்ததில்லை. @கீதா, குறிப்பிற்கு நன்றி! செய்து பார்க்கிறேன்.
    எங்க வீட்டு ரங்கஸ் தினமும் இதைத்தான் சாதமாக சாப்பிடுவார். தயிர் சாதம் ரொம்பவும் ருசியாக இருக்கும்.சாதத்திற்கு என்றால் கொஞ்சம் குறைவாக நீர் வைக்க வேண்டும். நான் இந்த சாதத்தை குக்கரிலேயே செய்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  6. வட இந்தியாவில் தலியா கிடைப்பதுண்டு. தலியாவில் உப்புமா செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  7. கோதுமை ரவை எப்பவுமே நம்ம ஊரில கிடைக்குமே. அதுவும் சம்பா ரவை நிறைய உப்புமா பண்ணினால் நன்றாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். கீதா கிட்ட ஒரே ஒரு தட்டு தட்டினால் எவ்வளவு விஷயம் கிடைக்கிறது பாருங்கள். நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  8. Bulgur wheat என்று இங்கே கிடைக்கிறது. இது புழுங்கலரிசி போல புழுங்கல் கோதுமை:-)

    உடைத்த கோதுமைதான். இதையே சாதமாகச் செஞ்சுருவேன்.

    கீதா சொல்வது போல் ஒருநாளைக்கு அடைக்கு அரைச்சுப் பார்க்கணும்.

    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  9. சத்தான உணவு பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. கோதுமை ரவை உப்புமா என்றால் பிடிக்க மாட்டேன் என்கிறது என் கணவருக்கு கீதா அவர்கள் சொன்னது போல் அடை செய்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!