செவ்வாய், 1 ஜூலை, 2014

தாராசுரம்

        
(குறிப்பு : படங்களின் மீது க்ளிக் செய்தால் படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்!)
                                                          

தஞ்சையிலிருந்து திருவிசை நல்லூர் சென்றுவிட்டு தாராசுரம் வந்தோம். தாராசுரம் பற்றிய சில குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். யாரும் அறியாத தகவல்கள் இல்லைதான்.



இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோவில். சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லலாம்.  இந்த மன்னன் காலத்தில் கப்பம் கட்ட மறுத்த சேர, பாண்டியர்களை இரண்டாம் ராஜராஜ சோழனின் தளபதி நம்பிசென்று அடக்கிய வரலாறைப் படிக்கும்போது இவர் பற்றி சாண்டில்யன் ஏதாவது நாவல் எழுதி இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது!





//"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். 




இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை. 




முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. ஹொய்சாளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது.




இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மைய அரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது (விக்கியிலிருந்து அப்படியே)



இந்தக் காலகட்டத்தில்தான் இந்தக் கோவில் உட்பட்ட கலைச் செல்வங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களாலும் இந்தக் கோவில்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம். 





தஞ்சைப் பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் (10 ஆம் நூற்றாண்டு) இந்தக் கோவிலும் நிறைய ஒற்றுமைகளுடன் காணப்படுகின்றன.







1987 இல் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும், 2004 மற்ற இரு கோவில்களும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.





சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.



வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. 





இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.




கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது (விக்கி)








கோவில் தொல்லியல் துறையால் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.
கிளம்ப மனமேயில்லாமல் அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.

31 கருத்துகள்:

  1. படங்களைப் பார்க்கும்போதே இங்கே செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மனதுக்குள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பதிவு போட்ட உடனே இப்போதுதான் முதல் ஆளாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் வெங்கட்! :))))))))

    நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அழகான புகைப்படங்கள். தாராசுரம் திருக்கோயில் பற்றிய விரிவான தகவல்கள். அருமையான பகிர்வு. சிறப்பானதொரு பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. ராமலெக்ஷ்மி சென்ற அதே இடத்துக்கு நானும் சென்றேன்.. ( ஆழப்புழா படம். )

    பட் அவங்க அளவுக்கு நான் ப்ரொஃபஷனலா எடுக்கல.

    இப்ப நீங்க வேணுமட்டும் ஃபோட்டோ போட்டு விஷயமும் சொல்லீட்டீங்க ஸ்ரீராம். அப்ப நான் எடுத்த ஃபோட்டோக்களை எல்லாம் என்ன பண்றது.. ஹாஹா இது போல இதுல பாதி இருக்கும்.. :)

    சோ என் இடுகைல ஃபோட்டோஸ் மட்டும் போட்டு இந்த லிங்கில் ( எங்கள் ப்லாக் ) விவரம் பார்த்துக்கலாம்னு கொடுக்க போறேன். :) :) :)

    பதிலளிநீக்கு
  5. தாராசுரம் பற்றி படங்களுடன் அருமையான விளக்கம்....

    வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. //தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும்.... //

    அந்த மண்டபத்தினுள் சென்று சிற்பக்கலை பொக்கிஷங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சோழவம்சத்தின்
    (Family Tree) சரித்திரமே அங்கு சிற்பங்களாக காணக் கிடைக்கின்றனவே!

    ஆயிரம் சொல்லுங்கள்.. 'கல்கி' கல்கி தான்! இந்த மண்டபத்தினுள் நான் இருக்கையில் அவர் நினைவு நான் என் மனசில் மண்டி நின்றது..
    'பொன்னியின் செல்வனை' கையில் வைத்துக் கொண்டு இந்த மண்டபத்தினுள் நுழைந்து விட்டால் அதுவே ஒரு தனி அனுபவமாக நிச்சயம் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  7. இதுவரை போகாத அறியாத ஊர் பற்றிய
    தகவல்களை அற்புதமான படங்களுடன்
    சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்களுடன்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. தஞ்சையிலேயே இருந்தும் இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை.
    தங்கள் பதிவினைப் பார்த்ததும் அவசியம் செல்ல வேண்டும்என்ற உணர்வு மேலிடுகிறது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  10. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம்தானே. மிக அற்புதமான கோவில்.கடந்த ஜனவரியில் கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது இந்தக் கோவிலையும் பார்த்தோம்.
    கலைநயம் பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக நின்று பெரும் செர்த்ஹுக் கொண்டிருக்கிறது.
    படங்களும் குறிப்புகளோடு தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இன்னோரு தரம் போய் ஆற, அமர எல்லாத்தையும் பார்க்கணும். :)))) நல்லா வீட்டுப்பாடம் படிச்சிருக்கீங்க. சாண்டில்யன் இரண்டாம் குலோத்துங்கனை வைத்துத் தான் "கடல் புறா" எழுதினார்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை. கடல்புறா எப்போவோ படிச்சது. என்னதான் மன்னன் ஆட்சியை முதன்மையா வைச்சு எழுதினாலும், அவர் நாவல்களில் தளபதிகள், படைத்தலைவர்கள் தான் கதாநாயகர்கள், மன்னனை விடச் சிறந்த வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். :))) ஹிஹிஹிஹி, இதிலே கருணாகர பல்லவன்!

    பதிலளிநீக்கு
  12. ஒரு முறை சென்றுள்ளோம்...

    படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  13. படங்களுடன் விளக்கங்களும் மிக அருமை. 800 ஆண்டுக்கு முந்தையதாக இருந்தாலும் வியக்க வைக்கும் கட்டிட தொழில்நுட்பம்

    பதிலளிநீக்கு
  14. வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் தலம் பற்றி அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

  15. இந்த முறை ஆலய தரிசனம் பிள்ளைகள் அழைத்துப்போவதாகக் கூறி இருக்கிறார்கள் அவர்களுக்கு நேரம் சரிபட்டு வந்தால் தாராசுரம் போகவேண்டும் கும்பகோணத்திலிருந்து எவ்வளவு தூரம், சுற்றிப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று தெரிந்தால் பிரயாணத்தை திட்டமிடலாம். எனக்கு மெயில் அனுப்பமுடியுமா.?

    பதிலளிநீக்கு
  16. படங்களுடன் நிறைய தகவல்கள் நிறைந்த சிறப்பான பதிவு! ஒரு முறை சென்று பார்க்கத் தூண்டுகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. @தேனம்மை

    அங்கே போட்ட கமெண்ட்டுக்கு இங்கே பதிலா! :)))

    நன்றி சே. குமார்

    ஜீவி ஸார்,, அந்த மண்டபத்துக்குள் சென்றோம். பொதுவாக இந்த இடத்தையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் விட்டுக் கிளம்பவே மனம் வரவில்லை.

    நன்றி ரமணி ஸார்.

    நன்றி அருணா செல்வம்...

    நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஸார்..

    நன்றி கரந்தை ஜெயக்குமார்.. அவசியம் சென்று பார்க்கவேண்டிய இடங்கள் இவை. கட்டாயம் சென்று பாருங்கள்.

    நன்றி முரளிதரன்..

    நன்றி கீதா மேடம்.. படங்கள்தான் சொந்தம். விவரங்கள் இணையத்திலிருந்து!

    நன்றி DD.

    நன்றி மாடிப்படி மாது. பழையவைகளை விட இப்போது உள்ளவை சிறப்பு மிக்கவை, தொழில் நுட்பத்தில் மேம்பட்டிருக்கும் என்று நினைப்போம். அந்தக் காலத்தில் அவர்கள் செய்து வந்த ஆட்சி முறை, மக்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளுக்கு முன்னர் நம் விஞ்ஞான அறிவு குறைவுதான் என்று தோன்றுகிறது. சமீபத்தில் இந்த எண்ணத்தை வலுப்படுத்தியது சரபோஜி மகராஜா தஞ்சையில் செய்து வைத்திருந்த மழை நீர் சேகரிப்பு பற்றிய விவரங்கள் படித்தது.

    நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

    ஜி எம் பி ஸார்.. இந்தக் கோவில் மட்டுமல்ல, இன்னும் பல கோவில்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்கள். அவசியம் பாருங்கள்.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.


    பதிலளிநீக்கு
  18. நம்கலாச்சார சின்னங்களைஎல்லாம் இப்படித்தான் இழந்து விட்டிருக்கிறோம். அன்று சாளுக்கியர்கள், பின்னால் ஆங்கிலேயர்கள் ....

    பதிலளிநீக்கு
  19. Beautiful architecture in those days w/o any software & (advanced) technology.

    Solute to our ancient people.

    Excellent photo-shots.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. இப்போது கட்டிடம் கட்டுபவர்களை இங்கே எல்லாம் சென்றுபார்த்து படித்துவரச் சொல்ல வேண்டும். எத்தனை அழகு இந்தக் கோவில்கள். இவ்வளவு அழகான படங்களைப் பொறுமையாக வலையேற்றி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். மிக நன்றி. இனி எப்பவாவது இங்கே போக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் சார்... மிக்க நன்றி.. இந்த நன்றி எதுக்குன்னு விரைவில் சொல்றேன் :-)

    பதிலளிநீக்கு
  23. மிக அழகான, க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + மிகவும் விளக்கமான தகவல்கள்! ஒரு புதிய தகவல் உட்பட...

    //"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//
    காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். //

    காவிரிப் பிரச்சினையின் ஆரம்பம். சோழமன்னன் படையெடுக்கும் போது குடகு மலையும் சேர ராஜ்ஜியத்தின் கீழா இருந்தது?! அறிய வேண்டும்...

    தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்ற்

    பதிலளிநீக்கு
  24. அருமையான க்ளாரிட்டியுடன் புகைப்படங்கள் + விளக்கமான தகவல்களுடன். அதிலும் முக்கியமான புதிய ஒரு தகவல்
    //"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//
    காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர்.//

    சோழ மன்னன் படையெடுத்த காலத்தில், குடகு மலை சேர ராஜ்ஜியத்தின் கீழா? நூற்றாண்டை அறிந்தால் அறியலாம்....தெரிந்து கொள்ள வேண்டும்.....

    மிக்க நன்றி அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு!

    பதிலளிநீக்கு
  25. இந்தப் பதிவிற்கு பல முறை கமென்ட் இட்டு அனுப்பியும் கமென்ட் போகவே இல்லையே! என்ன என்று தெரிய வில்லை....

    பதிலளிநீக்கு

  26. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..

    நன்றி மாதவன்..

    நன்றி வல்லிம்மா... இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அவ்வப்போது முகநூலில் அப்லோட் செய்கிறேன்!

    சீனு... என்ன விஷயம்? சஸ்பென்ஸ் கொடுக்காமல் சொல்லுங்களேன்... நான் யூகித்திருப்பது சரியா என்று தெரிந்து கொள்வேன்!

    நன்றி துளசிதரன் ஸார்... பதிவுகள் இரண்டு நாட்கள் பழசானால் கமெண்ட் மாடரேஷன் ஆக்டிவேட் ஆகி விடும்! அதுதான்.

    பதிலளிநீக்கு
  27. கலைநயம்மிக்க கோயில்.

    நேரில்கண்டுகொள்ளக்கிடைக்கவில்லை. உங்கள்பகிர்வில் கண்டுகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  28. முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மாதேவி.



    பதிலளிநீக்கு
  29. படங்கள் எல்லாம் மிக அழகு! தகவல் பகிர்வுக்கும் நன்றி. சமீபத்திய பயணத்தின்போது பார்க்க விரும்பி நேரமின்மையால் செல்லவில்லை. தாராசுரம் பார்ப்பதற்காகவே போக வேண்டும்:).

    @தேனம்மை,
    எப்போதும் உங்களுக்குச் சொல்வதுதான். எடுத்த படங்களை மற்றவர் காணத் தொடர்ந்து பதிந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!