திங்கள், 4 ஆகஸ்ட், 2014

திங்க கிழமை 140804:: நாக்கு நாலு முழம் : தோசையாயணம் பகுதி 1

             
எப்பவோ தோசை பற்றிச் சொல்லி, 'தொடர்கிறேன்' என்று சொல்லியிருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது!

தோசை சாப்பிடற அனுபவம் இருக்கே... ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவாங்க.  நான் எப்படி ரசித்துச் சாப்பிடுவேன் என்று சொன்னால் நீங்கள் எப்படி ரசித்துச் சாப்பிடுவீர்கள் என்று சொல்ல மாட்டீர்களா என்ன! 

     
மதுரை ஹோட்டல் ஒன்றில் - பிரேம் நிவாஸ் என்று நினைக்கிறேன். சரியாக பெயர் நினைவில்லை.பகவான்ஜி,  ரமணி ஸார் போன்றோர் இதைப் படித்தால் அவர்கள் ஒருவேளை எந்த ஹோட்டல் என்று சொல்லலாம் - வருடா வருடம் தோசைத் திருவிழா நடத்துகிறார்கள். எத்தனை வகையான தோசைகள்? அதில் ஸ்பெஷல் மெகா தோசை என ஒன்றின் படம்  போட்டிருப்பார்கள். (நான் படம்தான் பார்த்திருக்கிறேன்!   

ஒருமுறை கூட நேரில் சென்றதில்லை, பார்த்ததில்லை, சுவைத்ததில்லை) நான்கைந்து மேசைகள் வரிசையாகப் போட்டு அதில் அந்த ஒரு தோசையை அலங்கரித்து வைத்திருப்பார்கள்.  


   
வெறும் தோசை ருசி தருமா?  ஒரு தோசை சுவையாயிருப்பது எப்போது?  அதன் கூட அணிவகுக்கும் சாம்பார், சட்னிகள் சுவையைப் பொறுத்துதான். வெறும் தோசை கூட ருசிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதை வரிசையாக சொல்லிக் கொண்டு வரும்போதே சொல்கிறேன்.
           
  
சாதா தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, ஆனியன் ரவா தோசை, மசால் தோசை, பொடி தோசை, நெய் தோசை.. எத்தனை வகைகள் தோசையில்? 'ஸ்பெஷல் சாதா' என்று ஆர்டர் தரும்போது கொஞ்சம் சிரிப்பாய் இருக்கும்!
     

    
ரவா தோசை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்றால் ஓரங்கள் மொறுமொறு என்றும், நடுவை நெருங்க நெருங்க சாதாரணமாகவும் இருக்க வேண்டும். மிகச் சில சமயங்களில் நடுவிலும் மொறுமொறு என்று இருந்தால் ரசிக்க முடியும். மொத்தமும் மொத மொத என்று இருந்தால் ரசிக்க முடியாது.
     
இதற்கு கொத்துமல்லி சட்னி,  புதினா சட்னியுடன் தேங்காய் சட்னி மற்றும்  வெங்காய காரச் சட்னி.  அப்புறம் கட்டாயம் சாம்பார்.  
    
    

அதென்னவோ ஹோட்டல்களில் சாம்பார் தர என்று ஒரு கிண்ணம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்...  எப்படித்தான் போதும் என்று நினைக்கிறார்களோ.. இரண்டாம் முறை சாம்பார் கேட்க நீங்கள் சர்வரைத் தேட வேண்டும்.  அவர் நம் காட்சியில் அகப் பட்டதும், அல்லது கூப்பிடு தூரத்தில் வந்ததும், "ஹலோ... சாம்பார்" என்று குரல் கொடுப்போம்.  அவர் ஒரு பொருள் விளங்காப் பார்வை ஒன்றை நம் மீது வீசி விட்டு சாம்பார் எடுக்கச் செல்வார். அப்போதாவது வாளியில் சாம்பார் வருமா என்றால் ஊ...ஹூம்.... இன்னொரு மினிக் கிண்ணத்தில்தான்  சாம்பார் வரும்!  
 
    
முன்பெல்லாம் - முன்பெல்லாம் என்றால் மிகச் சமீபத்தில். ரொம்ப முன்பு என்றால் விலை விவரமே வேறு - ரவா தோசை 45 ரூபாய்,  இப்போது இன்னும் 15 ரூபாய் விலை ஏறியது மட்டும் கடுப்பு இல்லை, தட்டில் ரவா தோசையைப் பார்க்கும்போதே மனம் நிறைய வேண்டாம்?  இத்தனூண்டு ப்ளேட்டில் சிறியதாய் மடங்கி அமர்ந்திருக்கும் ரவா தோசையைக் கண்டால் உள்ளம் குமுறுகிறது.
  
இருவேறு இடங்களில் இருக்கும் 'சங்கீதா'க்களிலேயே ஆனியன் ரவா இருவேறு விலைகள்.  ஆனால் பாருங்கள் இரண்டு இடத்திலும் ரவா தோசையின் சைஸ் என்னமோ சிறிசுதான்! 
   
சரவணபவனுக்கும் மற்ற ஓட்டல்களுக்கும் வேண்டுமானால் சாம்பார் சுவையில் வித்தியாசம் கண்டு பிடிக்கலாம். ஆனால் மற்ற ஹோட்டல்களுக்குள் பெரும்பாலும் ஒரே சுவை. குறிப்பிடத்தக்க சில ஹோட்டல்கள் தவிர மற்ற ஹோட்டல்களில் சட்னிக்களின் சுவை திராபைதான்.  
       
தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு செல்லும் வழியில் ஒரு சாலையோர ஹோட்டல் இருக்கிறது. பெயர் நினைவில்லை.  மோட்டல் (தலை)விதிகளுக்கு மாறாக இங்கு விலையும் சுவையும் நன்றாய் இருக்கின்றன. இந்த இடத்தில் மிளகாய்பொடி நல்லெண்ணெய் மேஜையில் தயாராய் வைத்திருக்கிறார்கள். இதே போல சென்னை-ஹோசூர் சாலையில் கூட நல்ல (மோ)ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இரண்டு இடங்களிலும் சுற்றுப்புறமும் கௌரவமாக இருக்கும். 
      
ரவா தோசை தரமாகவும், பொன் நிறமாகவும் நாக்கு கேட்கும் சுவையில் சாம்பாரும் தந்தால் அது நல்ல ஹோட்டலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்! 
  
"ரவா தோசை முறுகலா" என்றும் "ரவா தோசை பதமா" என்றும் நேயர்கள் விருப்பம் தெரிவித்து ஆர்டர் தருவார்கள்.  ஆனால் பாருங்கள்,  பெரும்பாலான ஹோட்டல்களில் சர்வர்கள் கொண்டு வரும் ரவா தோசை பதமாகத்தான் இருக்கும். "முறுகலா" என்று கேட்ட பாவத்துக்கு கறுப்பாகக் கொண்டு வரும் ஹோட்டல்களும் உண்டு!
             
இப்போதைய வழக்கத்தில் பாராட்டக்கூடிய  ஒன்று சாம்பார் தனிக் கிண்ணத்தில் தருவது. முன்னர் அழகான பொன்னிற தோசையைக் கொண்டுவந்து வைத்து விட்டு, அதன் மொறுமொறு பகுதிகளைக் கொஞ்சம் எடுத்துச் சுவைக்குமுன் வாளியில் சாம்பார் கொண்டு வந்து அதன்மேல் ஊற்றி மொறுமொறுப்பைக் கலைத்து சொதசொத என்று ஆக்கி விடுவார்கள். இப்போது கிண்ணத்தில் வருவதால் நமக்கு மொறுமொறு சுவைக்க வாய்ப்பு கூடுகிறது!
      
தோசையின் மொறுமொறு பகுதியை தொட்டுக்கொள்ள ஏதுமின்றி தனியாகச் சுவைக்கவேண்டும். ஓரிரு விள்ளல்களை சாம்பாரிலோ சட்னியிலோ தொட்டுச் சாப்பிடலாம். ஆனால் அப்படித் தொட்டுக் கொள்ளும்போதும் அதன் மொறுமொறுப்புக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது!
     
தோசையின் நடுப்பகுதி இருக்கிறது பாருங்கள், அதற்குக் கட்டாயம் சாம்பார் வேண்டும். முதலில் கிண்ணத்தில் வைத்தே சாம்பாரைத் தொட்டுக்கொள்ள வேண்டும்.  மொறுமொறு பகுதிகள் தீர்ந்தபிறகு சாம்பாரை தோசையின்மேல் கவிழ்த்துக் கொள்ளவேண்டும்.  தோசை சாம்பாரில் ஊறி, அதை எடுத்து காரச் சட்னியுடனும், தே.சட்னியுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே.... ..ஆஹா.. இரு சட்னிகளும் கலந்து சாம்பார் இணைந்த தோசையுடன் கலந்து ஒரு சுவை இருக்கிறது பாருங்கள்.... படிக்கும்போதே சாம்பாரின் மணம் மனத்தில் வரவில்லை?  
       
அதை ஒரு வாரம் அனுபவியுங்கள்! 
    
அடுத்த வாரம் தொடர்வோம்! 
   

43 கருத்துகள்:

  1. ஆஹா! தோசையாயணம் மிக நன்றாக இருக்கிறதே!

    எனக்கு முறுகல்பிடிக்கும், நீங்கள் சொல்வது போல் கறுகல் பிடிக்காது.ஸ்ரீராம், உங்கள் தோசை பட்டியலில் செட் தோசை இல்லையே!
    கல்தோசை என்று எங்கள் ஊர் பக்கம் செய்வார்கள் நல்ல வெள்ளையாக குண்டாக ஆனால் தொட்டல் மெத்தன்று இருக்கும் ஊருகளுக்கு மிளகாய்பொடி தடவி கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

    கறுப்பு முழு உளுந்து தோசை(குருணைதோசை என்றும் சொல்வார்கள் திருநெல்வேலி ஸ்பெஷ்ல்) மிக நன்றாக இருக்கும் அதற்கு மிளகாய்வற்றல் வெங்காயம் வைத்து அரைத்த சட்னி, அல்லது தக்காளிமிளகாய், வெங்காய்ம் வைத்து அரைத்த சட்னி மிக நன்றாக இருக்கும்.

    காரட், பீட்ரூட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி பிங் தோசை சுட்டுக் கொடுப்பேன் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தோசையை திருப்பி போடாமல் மூடி சுட்டும் சாப்பிடலாம் என் அத்தைக்கு பிடிக்கும்.(வயதானவர்களுக்கு சாப்பிட எளிதாக இருக்கும்)

    நானும் என்பங்கிற்கு தோசையாயணம் சொல்லி விட்டேன்.


    பதிலளிநீக்கு

  2. கோமதி அரசு மேடம்... நன்றி உடன் வருகைக்கு.

    //செட் தோசை// இந்தப் புராணம் இன்னும் முடியவில்லை! இரண்டாவது பாகம் இருக்கே.. தொடரும் போட்டிருக்கே..

    ஹிஹிஹி... இன்னும் வரும்!

    பதிலளிநீக்கு
  3. ஆகா கணினியைத் திறந்ததுமே நம்ம ஃபேவரிட் தோசை. இங்கே வந்த வட மாநிலத்தவர் ஒருத்தருக்கு நேத்து தோசைவார்த்துக் கொடுத்தேன். இது வரை எத்தனை தோசைகள் வார்த்திருப்பேன்னு கணக்கே இல்லை. :) இரண்டுபக்கமும் இரண்டு தோசைக்கல்லைப் போட்டுக்கொண்டு தோசைவார்க்கும் அனுபவம் இப்போதும் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  4. இன்னும் நிறைய தோசைகள் பத்திச் சொல்லப் படவே இல்லை. கோதுமை உப்பு தோசை, வெல்ல தோசை, கேப்பை தோசை, வெந்தய தோசை, ஆனியன் ஊத்தப்பம் இதெல்லாம் மெதுவா வருமா? அடை தோசையிலே சேர்ந்ததா இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. எனக்கு தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னியும், வெங்காயத் துவையலும் தான் பிடிக்கும். சட்னி சாம்பார் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதிலும் ஓரங்களை முதலில் பிய்த்துச் சட்னியில் தோய்த்துச் சாப்பிட்டுவிட்டுக்கொஞ்சம்முறுகல்களைக் கடைசி வாய்க்குப் பத்திரப் படுத்திவிட்டுப் பின்னர் தோசையின் மத்திய பகுதிக்குப் போவேன். மத்தியப் பகுதியும் ரொம்பவே மெத்துனு இருக்கக் கூடாது. மாவு எல்லாம் மொத்தமும் அங்கே போய்ச் சேர்ந்துக்காமல் தோசையை வார்க்கணும். இஃகி, இஃகி, தோசை வார்க்கிறதில் ரொம்பவே இஷ்டமாக்கும்.

    பதிலளிநீக்கு
  6. தோசாயணம் இன்னும் தொடரும்.

    பதிலளிநீக்கு
  7. தாம்பரத்தில் பட்ஸ் ஓட்டல் இப்போ இல்லைங்கறாங்க. அங்கே ஆனியன் ஊத்தப்பம் நல்லா இருந்தது. சங்கீதா எந்த சங்கீதானு தெரியலை. ஆனால் அடையாறு சங்கீதா திராபை. :( மயிலாப்பூர் சங்கீதா கொஞ்சம் பரவாயில்லை ரகம். எழும்பூர் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள சங்கீதா தோசை சாப்பிடறாப்போல் இருக்கும். முன்னாடி மதுரையில் சிம்மக்கல் மாடர்ன் லாட்ஜில் தோசை நல்லா இருந்தது. அங்கே ஸ்பெஷல் வடையும் நல்லா இருக்கும். இப்போ இருக்கிறதெல்லாம் ஓட்டலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  8. கோமதி அரசு, கறுப்பு முழு உளுந்து தோசை உங்க செய்முறை சொல்லுங்க. அதுக்குக் குருணை தான் போடணுமா? பச்சரிசிக்குருணை தானா?

    பதிலளிநீக்கு
  9. கோவையில் அன்னபூர்ணா குடும்ப தோசையும் ,அன்னபூர்ணா சாம்பாரும் வெகு பிரசித்தம் ..

    அன்னபூர்ணா சாம்பார் எனக்கு பிடிக்காது என்று சொன்னால் விசித்திரமாக பார்ப்பார்கள்..!

    பதிலளிநீக்கு


  10. ராஜராஜேஸ்வரி, எனக்கு இங்கே சென்னை சரவணபவன் உணவைக் குறித்து எல்லோரும் புகழ்ந்து சொல்கையில் சிப்பு சிப்பாய் வரும். உங்களுக்குக் கோவை அன்னபூர்ணா! :)

    பதிலளிநீக்கு
  11. தொடர் பதிவா? மகிழ்ச்சி.

    //கோமதி அரசு, கறுப்பு முழு உளுந்து தோசை உங்க செய்முறை சொல்லுங்க. அதுக்குக் குருணை தான் போடணுமா? பச்சரிசிக்குருணை தானா?//


    கீதா ,முழு உளுந்து தோசை செய்முறை:- முன்பு எல்லாம் வீட்டில் நெல் இருக்கும். அதை அரிசி மில்லில் கொடுத்து சுத்தம் செய்யும் போது அவர்கள் முழு அரிசி, குருணை, நொய் என்று பிரித்து கொடுப்பார்கள், குருணையை இது போல தோசை , உப்புமா செய்வார்கள், நொய் (மிக சிறிய குருணை) காய்ச்சல் சமயத்தில் கஞ்சிக்கு ஆகும்.
    இப்போது கல், குருணை நீக்கிய அரிசி வாங்குவதால் இட்லி அரிசியே போடலாம். பச்சரிசி இரண்டு பங்கு, புழுங்கல் அரிசி இரண்டு பங்கு, கறுப்பு உளுந்து ஒரு பங்கு போடலாம். (நாலுக்கு ஒன்று என்ற கணக்கில் தான்.)
    புழுங்கல் அரிசியில் மட்டும் போட்டும் செய்யலாம்.
    அரிசியை ஊறவைத்துக் கொள்ளவேண்டும் . உளுந்தை ஊறவைக்க கூடாது, உளுந்துடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டுக் கொள்ளலாம். அரிசி அரைக்கும் போது உளுந்து வெந்தயத்தை கழுவி தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். பின் அரிசியை அரைத்து எடுத்துக்கொண்டு உளுந்தை போட வேண்டும். கொஞ்சம் சத்தம் போடும். பயப்பட கூடாது. ஊறாத உளுந்து என்பதால் சத்தம் போடும். சிறிது நேரத்தில் நன்றாக பொங்கி கொண்டு உளுந்து மாவு வரும். மெதுவாக (பஞ்சு போல்)வேண்டும் என்றால் புழுங்கல் அரிசி மட்டும் போதும்.
    முறுகலாக வேண்டும் என்றால் பாதி அளவு பச்சரிசி போடலாம் .

    பதிலளிநீக்கு
  12. அநியாயத்திற்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்கும்போதே சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. ஹோட்டல் பிரேம் நிவாஸ் அல்ல ,ஹோட்டல் சுப்ரீம் ,அங்கே ஆறாவது மாடியில் உள்ள rooftop தளத்தில் இருந்து ... கோபுரங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டே தோசையையும் ரசித்து சாப்பிடுவது ,தனி சுகம்தான் !

    பதிலளிநீக்கு
  14. ஒரு வழியா சுரதா திறந்தது. :) கோமதி அரசு, இந்த செய்முறை தெரியாது. ஸ்ரீரங்கம் வந்ததும் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

    பதிலளிநீக்கு

  15. ஆஹா...! சமையலுக்கு என்று தனி வலைப்பூவே வைத்திருக்கும் நான் ( பூவையின் எண்ணங்கள்)இரண்டாம் பதிவில் நீர்த் தோசை பற்றி எழுதி இருக்கிறேனே.படித்தீர்களா,?சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் தங்க தோசை பற்றிப் படித்தேன் .இங்கு பெங்களூரில் ஏதோ கடையில் கிடைத்துக் கொண்டிருந்ததாம் தோசையில் gold foil வைத்து வார்க்கிறார்களாம் விலை ரூ 1000/- என்று படித்ததாக நினைவு. கலியாணமாகுமுன் இங்கு ஓர் இடத்த்தில் வெண்ணை தோசை தருவார்கள். அதற்காகவே இரண்டு மூன்று கி.மீ. தூரம் நடந்ததும் உண்டு, என் அமெரிக்க நண்பனுக்கு என் மனைவி தோசைக்கு செய்யும் காந்தி சட்னி மிகவும் பிடிக்கும். நிறையவே எழுதிக் கொண்டு போகலாம் .

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் சார் ஒரு வழியா பார்ம்க்கு வன்ட்டீங்க போல.. :-)

    ச.பவன் தக்காளி சட்னி ஹாட்சிப்ஸ் சாம்பார் சங்கீதா தோசை முருகன் இட்லி கடை நான்கு வித சட்னி இருந்தால் தோசை திவ்யம் :-)

    ஆனா இப்போ டெய்லி ஆபீஸ் மற்றும் வீட்ல தோசையா சாப்பிடறதால தோசை மீது ஒரு தீரா வெறுப்பு :-)

    நமக்கு எப்பயுமே தென்காசி பரோட்டாவும் சாலனாவும் தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தென்காசி பரோட்டா சால்னாவோட ஒரு பதிவு ரெடி பண்ணிட்டு வந்து பேசிக்கிறேன்.. :-)

    பதிலளிநீக்கு
  17. சொல்ல மறந்துட்டேன்.. தென்காசில விநாயகான்னு ஒரு தோசைக்கு ஸ்பெஷல் கடை இருக்கு.,. யானப்பாலம் சிக்னல் பக்கம் இருக்கு.. யாருணாவது அந்தப் பக்கம் போனா சாப்டு பாருங்க சும்மா அப்டி இருக்கும் :-)

    ஆனா எனக்கு தோசையோட ஒரு ஆம்லேட் இருந்தா ரொம்ப புடிக்கும் :-)

    விநாயகா சுத்த சைவம் அதுனால எப்பவாது தான் அந்தப் பக்கம் போறது...

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் நீங்களும் மற்றவர்களும் எழுதுங்கள் . நான் ருசித்து மகிழ்கிறேன்,.

    பதிலளிநீக்கு
  19. தோசை மொறு மொறு! ஆஹா! இப்போதே நாக்கில் நீர் ஊறுகிறதே! சுவை தேட சொல்லும் சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. இணையத்தைத் திறந்தவுடன் கமகம என்று தோசை வாசனை. இப்போதுதான் புரிகிறது காரணம்! கோமதியும், கீதாவும் தொடர்ந்து கருத்துரை போட்டு தங்கள் தோசை செய்யும் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.
    இப்போது இட்லி செய்வதில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அடுத்து தோசை செய்வதில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் போலிருக்கிறதே!
    தென்காசி தோசையும் மணக்கிறது.
    தோசையாயணம் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு

  21. தோசை பதிவு அருமை.....எனது வீட்டில் நேற்று இரவு ஆனியன் ரவா தோசைதான். இந்த வட்டாரத்திலே நான் தான் ஆனியன் ரவா தோசை ஸ்பெசலிஸ்ட்.... ஆனா யாருக்கும் அந்த தோசை எப்படி சுடுவது என்ற ரகசியத்தை சொல்லி தரமாட்டேன் ஏன் என் மனைவிக்கு கூட சொல்லிதரவில்லை.. எனது முறை மிக எளிதானது அவசரத்திற்கு செய்வதற்கு இதுதான் மிக சிறந்த டிபன் இரண்டே நிமிடத்தில் தயார் செய்து விடலாம்

    பதிலளிநீக்கு

  22. கீதா மேடம்..

    கடையில் சாப்பிட்டால் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட முடியாததற்கு விலை மட்டும் காரணமில்லை, இல்லையா? அதுவே வீட்டில் சாப்பிடும்போது போதுமென்று சொல்ல மாட்டானா என்று தோசை வார்ப்பவர்களை ஏங்க வைக்கும் அளவு சாப்பிடுகிறோமே, ஏன்?

    தோசை புராணம் இன்னும் முடியவில்லை. தொடரும். எனவே அடுத்தடுத்து எல்லாம் வரும்!

    //கொஞ்சம்முறுகல்களைக் கடைசி வாய்க்குப் பத்திரப் படுத்திவிட்டு//

    ஐ.... நானும்!

    சென்னை-செங்கல்பட்டு சாலையில் உள்ள மோட்டலின் பெயர் பாலாஜி என்று என் பாஸ் நினைவு படுத்தினார். பட்ஸ் ஓட்டல் ஓகே. சங்கீதா கிண்டி, அடையாறு, மைலாப்பூர் எல்லாம் சேர்த்துதான் சொன்னேன். மதுரையில் கர்போகம் ஓட்டலில் சாம்பார் நன்றாக இருக்கும்.

    RR மேடம்..

    நான் வந்த ஒரு ஷார்ட் கோவை விசிட்டில் அங்கு சுவைகளை அனுபவிக்க முடியவில்லை. சதீஷ் சங்கவி சில ஹோட்டல்களை அறிமுகப் படுத்தி வருகிறார்.

    கோமதி அரசு மேடம்... முழு உளுந்து தோசை செய்முறையை என் பாஸ் கிட்டயும் சொல்லிருக்கேன். சென்னையில் கருப்பு உளுந்து கிடைப்பதில்லை என்கிறார்...

    கீதா மேடம்.. சரவணபவன் சாம்பார் அப்படி ஒன்றும் மோசமாயிருக்காது!

    பழனி.கந்தசாமி ஸார்... பாராட்டுக்கு நன்றி... இது அடுத்தடுத்த திங்கள்களிலும் தொடரும். அவசியம் வாங்க!

    ஆஹா... பகவான்ஜி... ஆமாமாமாமாம் ... ஹோட்டல் சுப்ரீம். நன்றி.

    கதா மேடம்...//ஒரு வழியா சுரதா திறந்தது// சுரதா?

    ஜி எம் பி ஸார்.. தங்க தோசை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ரொம்ப நாட்களுக்கு முன்னாள் எங்கள் ப்ளாக் பதிவிலும் பகிர்ந்த நினைவு இருக்கிறது. உங்கள் 'பூவையின் எண்ணங்கள்' பதிவின் தோசைச் சுட்டி தாருங்களேன். நீர்த் தோசை பற்றியும் காந்தி சட்னி பற்றியும் அறிய ஆவல்!

    சீனு..ஃபார்ம் இல்லாம தவிச்சிகிட்டிருந்தேனா என்ன? முருகன் இட்லி கடை பற்றி மட்டும் சொல்லாதீர்கள்... முக நூலில் குமுறி இருந்தேனே.. படித்தீர்கள்தானே? :))

    நான் கூட பரோட்டா ரசிகன் சீனு!

    வல்லிம்மா...தொடர்ந்து வாங்க... வந்து ரசிங்க...

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    வாங்க ரஞ்சனி மேடம்... இட்லி ஆராய்ச்சியா? அது என்ன?

    அவர்கள் உண்மைகள்... வீட்டில் ரவா தோசை செய்ய தனித் திறமை வேண்டும். மாவு கரைப்பதில் உள்ளது சூட்சுமம்! அது எல்லோருக்கும் வராது! உங்களுக்கு அது கை வந்திருப்பதில் பொறாமையும், சந்தோஷமும்!

    பதிலளிநீக்கு
  23. மதுரையில் டேபிள் தோசை என்று ஒரு கடையில் விற்றார்கள்.. மேஜை நீளத்துக்கு இருந்த்தது. ஒரு உந்துதலில் வாங்கி சாப்பிட முடியாமல் திணறியது நினைவுக்கு வருகிறது.

    முறுகலையும் மெதுவையும் கலந்து சாப்பிடுவதே எனக்குப் பிடிக்கும். தோசையில் சாம்பாரை உற்றி சாம்பார் ஊறுவதற்குள் தோசையை லபக்கும் சுகம் இருக்கிறதே.. தனி. ஆறு தோசை எட்டு தோசை என்று ஒரு சிட்டிங்கில் உள்ளே தள்ளிய காலம்.. ஹ்ஹ்ஹ்ம்.

    பதிலளிநீக்கு
  24. /அரிசியை அரைத்து எடுத்துக்கொண்டு உளுந்தை போட வேண்டும். கொஞ்சம் சத்தம் போடும். பயப்பட கூடாது

    படிக்கறப்பவே பயமா இருக்குங்களே. ரொம்ப சத்தம் போடுமோ உளுந்து? ;-)

    பதிலளிநீக்கு
  25. மிளகாய் பொடி என்று ஏன் கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை. இட்லி தோசையின் சுவையைக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது. மிளகாய்ப்பொடியின் காரம் எண்ணையின் ஒரு மாதிரி கசப்பு எல்லாம் சேர்ந்து சொர்க்கவாசலை அடைத்துவிடும்.

    சாம்பார் சட்னி எதுவுமில்லை மிளகாய்ப் பொடி மட்டும் தான் என்ற நிலையில் ரொம்ப சிரமப்படுவேன். மரியாதைக்காகவும் பசிக்காகவும் மட்டும் சாப்பிட்டு வைப்பேன். மற்றபடி மனதுக்குள் கோமதி அரசு சொன்ன உளுந்தாக இருப்பேன்.

    நுணல் கீதே நுணல்.. இனிமே எனக்கு தோசையும் கிடைக்கப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  26. மதுரைத் தமிழன் உடனடியாக முகவரியை அனுப்பி வைக்கவும்...

    பதிலளிநீக்கு
  27. தாம்பரம் பட்ஸ் ஓட்டல்.. ஆஹாஹாஆ..
    பஸ் காசை சேர்த்து சாப்பிட்டு குரோம்பேட்டைக்கு நடந்து திரும்பியிருக்கிறேன். தோசை பொங்கல் பூரிக் கிழங்கு என்று வகை வகையாக மனதை அள்ளுவார்கள். அதிலும் முறுகலாக மெது வடை போடுவார்கள் பாருங்கள்.. இட்லி வடை விட தோசை வடை காம்பினேஷன் பட்ஸ் ஓட்டலின் கவர்ச்சி.

    பட்ஸ் ஓட்டலை விடுங்கள், தாம்பரத்தையே காணோம்!

    பதிலளிநீக்கு
  28. தங்க தோசை - என்னுடைய சமீபத்திய ஃப்ரூட் சாலட்-100 பதிவில் பகிர்ந்திருந்தேன்.....

    எனக்கு முறுகலா ரவா தோசை சாப்பிடத் தான் பிடிக்கும். சாதா தோசை - எந்த ஸ்டஃப்ஃபிங்க் இல்லாமல் - தில்லியில் எல்லா தோசைகளும் - ஸ்டஃப்ஃபிங்! பனீர் தோசை, ட்ரைஃப்ரூட் தோசை என பல விதங்களில் கிடைக்கிறது.

    இன்னொரு விஷயம் - கேட்கும் போதே பிடிக்காத ஒரு விஷயம் - இங்கே ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் நடந்த போது ஐஸ்க்ரீம் தோசை என ஒன்று கொடுத்தார்கள் - சுடச் சுட தோசை செய்து நடுவே ஐஸ்க்ரீம் வைத்து, ஐஸ்க்ரீம் உருகி தோசை சொதசொதவென்று ஆகும் நிலையில் அனைத்து பஞ்சாபிகளும் ரசித்து சாப்பிட எனக்கோ பார்க்கும்போதே குமட்டிக் கொண்டு வந்தது! :)

    தோசையாயணம் தொடரட்டும்.... :)

    பதிலளிநீக்கு
  29. கீதா மேடம்.. சரவணபவன் சாம்பார் அப்படி ஒன்றும் மோசமாயிருக்காது!
    @ஸ்ரீராம், சரவண பவன் சாம்பாரை நீங்க தான் மெச்சிக்கணும். :)


    கதா மேடம்...//ஒரு வழியா சுரதா திறந்தது// சுரதா?

    ஆமாம், இங்கே உழுவதற்குக் கலப்பை எல்லாம் இல்லை. சும்மாவே திடீர் திடீர்னு தமிழில் மாறுது. அது வேறே வம்பு. :) சுரதா http://www.suratha.com/unicode.htm திறந்து கொண்டு அது வழியாத் தான் தமிழ் எழுதறேன். இதிலே சிரிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். :)


    பதிலளிநீக்கு
  30. யம்மாடியோவ்! தோசையைப் பற்றி செம ஆய்வுபா......ஆனா ரொம்ப சுவை....நாக்குல தண்ணீ உறி நாய் ஜொள்ளு விடற மாதிரி ஊறுது......அதுவும் அந்த ரவா தோசை.....ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸபாஅ....என்ன ஒரு வருண்ணைபா....கடைசியா சொன்னீங்க பாருங்க....இரு சட்னிகளும் கலந்து....சாம்பார் இணைந்து....ஆஹா நீங்களும் எங்களைப் போலயா.......என்ன சார் இப்படி போட்டு அலைய வைச்சுட்டீங்களே!

    பதிலளிநீக்கு

  31. @ ஸ்ரீ ராம்
    நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி நீர்த் தோசைப் பதிவின் சுட்டி இதோ
    kamalabalu294.blogspot.in/2013/04/2.html
    காந்தி சட்னி செய்வது மிக எளிது. வெங்காயம் காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து எடுப்பதுதான் காந்திசட்னி என்னும் பெயர்க் காரணம் தெரியவில்லை. என் சிறுவயதிலிருந்தே கேட்டு வருவது. ஹோட்டலில் ஒரு தோசைக்கு மேல் சாப்பிடாதவர் வீட்டில்.....என் நெருங்கிய உறவினர் தோசை வார்த்துப் போடும்போது இன்னும் வேண்டும் என்பதை not out என்று கூறித் தெரியப்படுத்துவார். அவரை அவுட் செய்வதே பாடாயிருக்கும்....!

    பதிலளிநீக்கு
  32. பதிவும் பின்னூட்டங்களும் ருசிக்க வைத்தன:). ரவா தோசை எனக்கும் முறுகலாகவே பிடிக்கும். முறுகல் தோசையைக் கொஞ்சமாவது வெறுமனே சாப்பிட வேண்டும். @கோமதிம்மா, கருப்பு தோசை அடிக்கடி செய்கிற ஒன்று. @)GMB sir, காந்தி சட்னி பெயரை இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். இது கருப்பு தோசைக்குக் கட்டாயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  33. அப்பாதுரை... மதுரையில் சாதாரண கடையிலேயே மெகா தோசை கிடைத்ததா? எப்போது?

    வெங்கட் நாகராஜ் - நீங்கள் சொல்லியிருக்கும் ஐஸ்க்ரீம் தோசை பற்றிப் படிக்கும்போது எனக்கும் 'உவ்வே' தான்!

    விளக்கத்துக்கு நன்றி கீதா மேடம்.

    துளசிதரன்ஜி ... சுவையில் மூழ்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்!

    லிங்க் கொடுத்ததற்கு நன்றி ஜி எம் பி ஸார்... படித்துப் பின்னூட்டமிட்டு விட்டேன். :)))

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  34. நிச்சயம் இருபது வருஷத்துக்கு முன்னாலே, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  35. தோசை பற்றிய
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  36. என் தோசை டேஸ்ட் பத்தி அப்பிடியே எழுதி இருக்கீங்க. டிட்டோ அதே அதே.

    ரொம்ப சூப்பர். எங்கே தோசை மாவு ஊத்தி சாப்பிட்டுட்டு வர்றேன்.

    ரத்னா கஃபேல பெரிய டபரால சாம்பார் தர்றாங்க. அன்னபூர்ணா சாம்பாரும் ஓகேதான்.

    மொறு மொறுன்னு சாப்பிடுறதுதான் தோசைக்கே ருசி. தோசை மேல ஊத்தாம கப்புல தொட்டுத் தொட்டுத்தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
  37. என் தோசை டேஸ்ட் பத்தி அப்பிடியே எழுதி இருக்கீங்க. டிட்டோ அதே அதே.

    ரொம்ப சூப்பர். எங்கே தோசை மாவு ஊத்தி சாப்பிட்டுட்டு வர்றேன்.

    ரத்னா கஃபேல பெரிய டபரால சாம்பார் தர்றாங்க. அன்னபூர்ணா சாம்பாரும் ஓகேதான்.

    மொறு மொறுன்னு சாப்பிடுறதுதான் தோசைக்கே ருசி. தோசை மேல ஊத்தாம கப்புல தொட்டுத் தொட்டுத்தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
  38. என் தோசை டேஸ்ட் பத்தி அப்பிடியே எழுதி இருக்கீங்க. டிட்டோ அதே அதே.

    ரொம்ப சூப்பர். எங்கே தோசை மாவு ஊத்தி சாப்பிட்டுட்டு வர்றேன்.

    ரத்னா கஃபேல பெரிய டபரால சாம்பார் தர்றாங்க. அன்னபூர்ணா சாம்பாரும் ஓகேதான்.

    மொறு மொறுன்னு சாப்பிடுறதுதான் தோசைக்கே ருசி. தோசை மேல ஊத்தாம கப்புல தொட்டுத் தொட்டுத்தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
  39. என் தோசை டேஸ்ட் பத்தி அப்பிடியே எழுதி இருக்கீங்க. டிட்டோ அதே அதே.

    ரொம்ப சூப்பர். எங்கே தோசை மாவு ஊத்தி சாப்பிட்டுட்டு வர்றேன்.

    ரத்னா கஃபேல பெரிய டபரால சாம்பார் தர்றாங்க. அன்னபூர்ணா சாம்பாரும் ஓகேதான்.

    மொறு மொறுன்னு சாப்பிடுறதுதான் தோசைக்கே ருசி. தோசை மேல ஊத்தாம கப்புல தொட்டுத் தொட்டுத்தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
  40. தோசை புராணம் இப்போ தான் படிக்கத் துவங்கினேன். பதிவும், பின்னூட்டங்களும் சுவாரசியம்.

    நான் எங்கே போனாலும் முதலில் ஆர்டர் தருவது மசால் தோசையை தான்....:) என்னவரின் கிண்டலுக்குப் பிறகு இப்போ தான் விட்டிருக்கிறேன்....:)

    கோவையின் அன்னபூர்ணா, கெளரிசங்கரின் சுவை இன்னும் நாவில். சிலநாட்களுக்கு முன்னர் கூட கோவைக்கு இதற்காகவே ஒருமுறை அழைத்து செல்ல சொல்லிக் கொண்டிருந்தேன்....:))

    தோசைக்கு எனக்கு பிடித்த காம்பினேஷன் தேங்காய் சட்னி தான்.

    பதிலளிநீக்கு
  41. 'காந்தி சட்னி' என்பது வழக்கத்தில் வந்த பெயர். இதன் சரியான பெயர் 'காந்தல் சட்னி' (மிளகாய் ஜாஸ்தி. நிறமும் சிவப்பு). பின்பு 'காந்த சட்னி' என்று மாறி, குழந்தைகள் 'காந்தி சட்னி' என்று சொல்ல ஆரம்பித்திருக்க வேண்டும்.

    சாப்பாட்டைப் பற்றி யார் எழுதினாலும், அதிலும் ரசித்து எழுதினால் ஜிவ்வென்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  42. அட அட அட....

    இதென்ன...

    பார்த்தால் பசி தீரும் என்பார்கள் ...........

    ஆனால் பசியைத் தூண்டிவிட்டுவிட்டது உங்கள் பதிவு.

    எச்சில் ஊறுகிறது.

    இது தொடர்பதிவு வேறா.


    இப்படிப் பார்க்க வைத்துப் பசியைத் தூண்டிவிட்டால் உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு நான் பொறுப்பில்லை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  43. இப்போக் கொஞ்ச நாட்களுக்கு தோசையை நிறுத்தி வைக்கலாம்னு இருக்கேன். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!