புதன், 6 ஆகஸ்ட், 2014

பொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்!



ஆகஸ்ட் 11 இதழ் கல்கியிலிருந்து மீண்டும் 'பொன்னியின் செல்வன்' வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள். ஏக விளம்பரம் இந்தமுறை.  எல்லாப் பத்திரிகைகளிலும் "2400 ரூபாய் சந்தா கட்டினால் நான்கு வருடங்களுக்கு கல்கி உங்கள் வீடுதேடி வரும். வந்தியத் தேவன் மூன்று வருடங்களுக்கு உங்கள் வீடு தேடி வருவார்" என்றெல்லாம் விளம்பரங்கள் தூள் பறந்தன. 

நான் ஏற்கெனவே கல்கி வாங்கிக் கொண்டிருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் ஆகஸ்ட் 3 இதழிலிருந்து வழக்கம்போல அச்சுக் காகிதம் விலை உயர்வைக்  காரணம் காட்டி, கல்கி விலையை 3 ரூபாய் ஏற்றி விட்டார்கள். வாழ்க வந்தியத் தேவன். 

கல்கியில் 'கல்கி சிறுகதைப் போட்டி' யில் வெற்றி பெற்ற சிறுகதைகளை ஆர்வமுடன் படித்துப் பயின்று வருகிறேன். ஒருமுறை நானும் ஜெயிப்பேன்! நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் கதை அனுப்பினால்தானே அவர்களும் பரிசீலிப்பார்கள்?  அடுத்த முறையாவது அனுப்ப முயற்சிக்க வேண்டும்!  ஹிஹிஹி...

                                                           
இந்த இதழில் பொன்னியின் செல்வன் தொடங்கி இருக்கிறது என்றதும் (மீண்டும்) படிக்கத் தொடங்கினேன். கதைக்கான வேதா ஓவியங்களை இரா முருகன் உட்பட எல்லோருமே பாராட்டுகிறார்கள்.   இது சம்பந்தமாக சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஓவியர் வேதா அவர்கள் பேட்டியும் படித்தேன்.

திருமதி பக்கங்களிலிருந்து  
கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே!  மன்னிக்கவும் கோமதி மேடம்!   நன்றிகள்!



பொன்னியின் செல்வன் இப்படித் தொடங்குகிறது. "ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்.  வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு * ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக..."


தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு என்பதற்கு அருகில் நட்சத்திரக் குறியிட்டு கீழே அடிக்குறிப்பாக " *1950ல் எழுதியது " என்ற குறிப்பும் காணப் படுகிறது.

முன்னர் எல்லாம் படித்தபோது வராத சந்தேகம் இப்போது வந்தது. ஏனென்றால் இது பற்றிய விழிப்புணர்வு இப்போது சமீப காலங்களில் வந்திருப்பதால்!


என்ன சந்தேகம் என்கிறீர்களா.... நான் மேலே குறிப்பிட்டிருப்பது பொன்னியின் செல்வனின் மிக ஆரம்ப வரிகளை. 


நாம் இங்கு கற்பனை ஓடம் ஏறி யுகங்களைக் கடக்காமல் ஜஸ்ட் ஒரு ஐந்து பாராக்களைத் தாண்டிச் செல்வோம்!  வீரநாராயண ஏரியின் தென்கோடிக்கு வரும் வந்தியத்தேவன் ஏரியைப் பார்க்கிறான்.  அந்த (வீராணம்) ஏறி பற்றிய வர்ணனை இந்தப் பாராவில் வருகிறது. 

                                                               
"இப்படி எல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே  வடகாவேரியிலிருந்து பிரிந்துவந்த வடவாறு. ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது.  வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வைத்திருந்தார்கள்....."
இங்கேதான்.... இங்கேதான் படித்துக் கொண்டே வரும்போதே அந்தக் கேள்வி மனதுக்குள் தோன்றியது. கருவேல மரங்களின் கருங்காலித் தனம் பற்றி சமீபத்தில்தானே படித்து வருகிறோம்... யூகலிப்டஸ் மரங்கள் போல இவையும் இந்தியாவுக்கு வேறு நோக்கில் கொண்டு வரப்பட்டு தீங்கிழைத்துக் கொண்டிருக்கும் மரங்கள் என்று படித்தோமே... சோழர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதா? என்று சந்தேகம் தோன்றியது.

இணையத்தின் உதவியை நாடினேன். கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்தன. எனவே ஆராய்ச்சி முடிவின் படி சோழர்கள் காலத்தில் கருவேல மரங்கள் இருந்திருக்காது என்று தோன்றுகிறது!

முதலில் இது.

...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.

இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையு
ம் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது..........
 
அடுத்தது இது.

கருவேல மரம் வந்த கதை.


வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள். இதன் தாவரவியல் பெயர் "ப்ரோசோபி
ஸ் சூலிப்ளோரா'. (Prosopis juliflora)  இது வேளாண் நிலங்கள், வாழ்வாதாரங்களை நாசப்படுத்தும் தாவரம். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டது.
இது வேறு கருவேல மரம்,  கதையில் வருவது வேறு கருவேல மரமோ!

29 கருத்துகள்:

  1. நண்பரே,
    கருவேல மரங்கள் முன்னரே இருந்ததாக படித்த நினைவு இருக்கிறது
    நான் பணியாற்றும் இடம் கரந்தை.
    கரந்தை என்பது கருந்திட்டைக்குடி என்பதன் சுருக்கம் என்றும் சொல்வார்கள். கருந்திட்டைக்குடி என்பதற்கு கருவேல மரங்களால் சூழப்பட்ட பகுதி என்று படித்திருக்கிறேன்.
    அதனால் கருவேல மரங்கள் முன்னரே தமிழகத்தில் உண்டு என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் குறிப்பிடுவது சீமை கருவேல மரம் என்று சொல்லப் படும் மரம். கதையில் வருவது சுதேசி கருவேல மரம். இரண்டும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தாவரவியல் படித்தவர்கள் சொன்றால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. கல்கி சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    முதலில் கதையை அனுப்புங்கள்.

    நான் கல்கிபுத்தகத்திலிருந்து வேதா ஓவியத்தை எடுத்தேன்.

    நன்றி என் தளத்தை இங்கு குறிப்பிட்டதற்கு.

    எல்லா பத்திரிக்கைகளும் விலை ஏறி உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. வந்தியத் தேவனுக்கு வரவேற்பு அதிகம்தான் போலிருக்கே !

    பதிலளிநீக்கு
  5. விலை உயர்வினால புத்தக விற்பனை இறங்கிடாம சமாளிக்கத்தானே ஓய் வந்தியத்தேவனே வந்திருக்காரு...? நல்ல டவுட்தான் உங்களுடையது. பதில்தான் தெரியல... வேற யாராவது கில்லிங்க சொல்றாங்களான்னு பாக்க ஆவலோட வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  6. உங்களது கருவேலமர சந்தேகம், அந்தக் காலத்து வாசகர்களுக்கும் இந்தக் காலத்து வாசகர்களுக்குமான இடைவெளியை அழகாகச் சொன்னது.

    இந்த இதழ் அட்டைப்படம் கூட வேதாவா?.. வினு- மாதிரி இருக்கிறதே! அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது மணியம் வரைந்த இதே படத்தையும் காட்டுகிறேன்.

    வந்தியத்தேவன், குந்தவை, குறிப்பாக நந்தினி, பெரிய-சின்ன பழுவேட்டையர், ஆதித்த கரிகாலன்,
    ஆழ்வார்க்கடியான், பூங்குழலி,
    வானதி, மணிமேகலை, ஏன் ரவிதாசன் கூட ஓவியங்கள் மூலமாக 'இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்'
    என்கிற மாதிரி நம் மனசில் இடம் பிடித்தவர்கள். நம் இதயத் தடாகத்தில் கல்கி அவர்களால் நடமாடவிடப்பட்டவர்கள்.

    ஒரே கதைப் பாத்திரங்களுக்கு இப்படி ஓவியர்களை மாற்றிக் கொண்டே வந்தால், பரிணாம வளர்ச்சி மாதிரி
    இவர்கள் தோற்றம் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் மாறிப்போகுமோ என்று அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

    ஆனால் இதெல்லாம் அவர்கள் இஷ்டம் என்பதும் புரிகிறது.

    நீங்கள் எடுத்தாண்ட சப்ஜெக்டிலிருந்து விலகிப் போனமைக்கு வருந்துகிறேன். அது பற்றி ஏதாவது தெரியவந்தால் பின்னால் பின்னூட்டம் இடுகிறேன். இப்போதைக்கு இது.

    பதிலளிநீக்கு
  7. அட! கூர்ந்து பார்த்ததில் இப்பொழுது தான் தெரிந்தது அக். 1950-ம் வருடத்திய நாலணா கல்கி பத்திரிகை அல்லவோ அது?..

    அப்போ அந்த அட்டைப்பட ஓவியத்திற்கு சொந்தக்காரர் மணியம். உங்கள் குடும்ப புத்தக சேர்க்கை ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்கள்.

    இந்த மாதிரி---

    பழைய 'குமுதம்' இதழை வைத்திருப்போருக்கு 'குமுதம்'பரிசு வழங்கிய ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஆய்வு.

    அதானே:). முதலில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. இது வேறு கருவேல மரம், கதையில் வருவது வேறு கருவேல மரமோ!//

    ஆம் .. வேறு கருவேலமரம்தான் .. கருவேலம் பட்டை பல்பொடி ,
    பல் குச்சி , ஆடுகளுக்கு தழை உணவு , நிலங்களுக்கு தழை உரம் என்று ஆபத்தில்லாத ஏரிக்கரைகளில் வளர்ந்த நல்ல மரம் அது ..
    முட்கள் சிறியதாக இருக்கும் ..

    மற்றொன்று ஆபத்தான விஷமுள் செடி .. கால் நடைகள் உண்ணாத இலை.. பறவைகள் கூடு கட்டாது ..
    பெரியதாக இருக்கும் விஷமுள் குத்தினால் ஆபத்து ..!

    இரண்டுக்கும் வேறுபாடு உண்டு ..
    கண்டுபிடித்து அயல்நாட்டிலிருந்து வந்து காற்றையும் நீரையும் மண்ணையும் விஷமாக்க்கும் மரத்தை மட்டுமே அழித்தல் நலம் பயக்கும் ..!

    பதிலளிநீக்கு
  10. இதுக்குத் தான் இராஜராஜேஸ்வரி மேடம் வரணுங்கறது!

    claps!!!!

    பதிலளிநீக்கு
  11. பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு.

    முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என இம்மரம் குறித்து எழுதியதில் விலாவாரியா அலசி இருக்கோம்!

    live tree fence ஆக அக்காலத்திலேயே பயன்ப்பட்ட மரம் என்பதால் வேலி ஆகப்பயன்ப்படும் மரம் "வேல மரம்" என அழைக்கப்பட்டது , அதில் பட்டைகள் கறுப்பாக இலைகள் அடர் பச்சையாக இருப்பதை கருவேல மரம் என்றார்கள். Babul என இந்தியில் சொல்வார்கள், இதான் பல் விளக்கப்பயன்ப்பட்ட மரம் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என பழமொழியில் வரும் மரம் :-))

    புரோசோபிஸ் ஜூலிபுளோரா என்பது தான் இறக்குமதி செய்யப்பட்டது , ரெண்டும் வேற வேற ஸ்பீசீஸ் (acacia sps)ஆனால் புரோசோபிஸ் மரங்களும் முள்ளுடன் வேலியாகப்பயன்ப்பட்டதாலும், தோற்றத்தில் ஒத்து இருந்ததாலும் அதனையும் வேலி மரம் என்ற பொருளீல் சீமைக்கருவேல மரம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    புரோசோபிஸ் ஜூலிப்புளோரா தான் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று , இந்தியாவில் காடுகளீன் பரப்பு குறைவாக இருக்கு என அதிகரிக்க மத்திய அரசின் வன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இம்மர விதைகளை விமானம் மூலம் நாடெங்கும் தூவியதாக சொல்வார்கள்.

    புரோசோபிஸ் வகையிலேயே இந்திய மரங்களும் உண்டு , அவை சாதுவானவை ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன , இவற்றில் "இனிப்பு" வகைக்கூட இருக்கு, அதே போல முள் இல்லாத வகையும் இருக்கு, நம்ம ஊரு மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து பரவுவதில்லை என்பதால் இப்பொழுது அருகிவிட்டதாக சொல்கிறார்கள்.

    இதே போல பார்த்தீனியம் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தப்போது ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட "அன்னிய களைச்செடி" தான். நம்ம நாட்டுல "குவாரண்டைன்" சரியாக செய்வதும் இல்லை கண்காணிப்பதும் இல்லை. கட்டிங் வாங்கிட்டு எல்லாம் சரியா இருக்குனு "கிளியரன்ஸ்" கொடுத்துடுவாங்க , கூடிய சீக்கிரம் எபோலா வைரஸ் இறக்குமதி செய்தாலும் செய்வாங்க அவ்வ்!

    பதிலளிநீக்கு
  12. பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு.

    முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என இம்மரம் குறித்து எழுதியதில் விலாவாரியா அலசி இருக்கோம்!

    live tree fence ஆக அக்காலத்திலேயே பயன்ப்பட்ட மரம் என்பதால் வேலி ஆகப்பயன்ப்படும் மரம் "வேல மரம்" என அழைக்கப்பட்டது , அதில் பட்டைகள் கறுப்பாக இலைகள் அடர் பச்சையாக இருப்பதை கருவேல மரம் என்றார்கள். Babul என இந்தியில் சொல்வார்கள், இதான் பல் விளக்கப்பயன்ப்பட்ட மரம் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என பழமொழியில் வரும் மரம் :-))

    புரோசோபிஸ் ஜூலிபுளோரா என்பது தான் இறக்குமதி செய்யப்பட்டது , ரெண்டும் வேற வேற ஸ்பீசீஸ் (acacia sps)ஆனால் புரோசோபிஸ் மரங்களும் முள்ளுடன் வேலியாகப்பயன்ப்பட்டதாலும், தோற்றத்தில் ஒத்து இருந்ததாலும் அதனையும் வேலி மரம் என்ற பொருளீல் சீமைக்கருவேல மரம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    புரோசோபிஸ் ஜூலிப்புளோரா தான் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று , இந்தியாவில் காடுகளீன் பரப்பு குறைவாக இருக்கு என அதிகரிக்க மத்திய அரசின் வன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இம்மர விதைகளை விமானம் மூலம் நாடெங்கும் தூவியதாக சொல்வார்கள்.

    புரோசோபிஸ் வகையிலேயே இந்திய மரங்களும் உண்டு , அவை சாதுவானவை ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன , இவற்றில் "இனிப்பு" வகைக்கூட இருக்கு, அதே போல முள் இல்லாத வகையும் இருக்கு, நம்ம ஊரு மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து பரவுவதில்லை என்பதால் இப்பொழுது அருகிவிட்டதாக சொல்கிறார்கள்.

    இதே போல பார்த்தீனியம் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தப்போது ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட "அன்னிய களைச்செடி" தான். நம்ம நாட்டுல "குவாரண்டைன்" சரியாக செய்வதும் இல்லை கண்காணிப்பதும் இல்லை. கட்டிங் வாங்கிட்டு எல்லாம் சரியா இருக்குனு "கிளியரன்ஸ்" கொடுத்துடுவாங்க , கூடிய சீக்கிரம் எபோலா வைரஸ் இறக்குமதி செய்தாலும் செய்வாங்க அவ்வ்!

    பதிலளிநீக்கு
  13. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. டவுட் தனபாலு கெளம்பிட்டாரையா... கெளம்பிட்டாரு

    பதிலளிநீக்கு
  15. அமரர் கல்கி உரைத்த கருவேலமரமும் உங்கள் பதிவிட்ட படத்தில் உள்ள மரமும் வெவ்வேறானவை என்பதே எனது கருத்தியல். ஏனென்றால் இன்றும் அம்மரங்கள் ஏரிக்கரை காட்டாறு கரைகளில் அதே பயன்பாட்டிற்க்காக நடவு செய்யபடுகிறது பொது பணி துறையால். அவ்வகை மரங்கள் நாட்டுடைமை யாதலின் பொதுமக்கள் பயன்படுத்த தடை செய்யபட்டுள்ளதால் மற்ற இடங்களில் காண்பதறிது.

    பதிலளிநீக்கு
  16. வவ்வால் பாஸ், அசத்தல்.. தெளிவான விளக்கம்!!

    ராஜேஸ்வரி மேடம்.. விளக்கத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. Here is what you want to know

    கருவேலமரம் அல்லது கருவமரம்-- http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D


    சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. எனக்குப் பதிவு அப்லோடே ஆகலை. முகநூலில் பார்த்துட்டு வந்தேன். இங்கே எல்லோரும் கருத்துச் சொல்லி இருக்காங்க. ஒரிஜினல் கருவேலமரம் வேறே/ வேலிக்கருவேல மரம் வேறே. அதை இன்னும் விளக்கமா ராஜராஜேஸ்வரியும், வவ்வாலும் எழுதிட்டாங்க. இஃகி இஃகி இஃகி ஆவலோடு ஓடி வந்த என்னை ஏமாற்றலாமா எங்கள் ப்ளாக்?

    பதிலளிநீக்கு
  20. ஆ.வி பாஸ்,

    //வவ்வால் பாஸ், அசத்தல்.. தெளிவான விளக்கம்!! //

    நன்றி!

    அப்புறம் கோயம்புத்தூர்ல தான் "institute of forest genetics and tree breeding" என இந்திய வனமரங்கள் பற்றிய ஆய்வு மையம்ம் இருக்கு,(மேட்டுப்பாளையத்துல வனவியல் கல்லூரி இருக்கு) அவங்க ரொம்ப நாளுக்கு முன்னர் முள் இல்லாத இந்திய புரோசோபிஸ் வகை மரத்தினை கொண்டு வந்து கொடுத்தால் பத்தாயிரம் பரிசுனு விளம்பரம்லாம் கொடுத்தாங்க ,சொக்கா பத்தாயிரம் நமக்கு தான்னு அல்ப ஆசையில என்க ஊருல காடெல்லாம் தேடிப்பார்த்து , கடைசில அந்த வகை மரத்தை நம்மாளுங்க விறகா கொளுத்தியும் , ஆடு மாடுங்க மேஞ்சும் அழிச்சுட்டாங்க ,இப்போ எங்கோ மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டில மனுசங்க கண்ணுக்கு அகப்படாம இருக்குனு தெரிஞ்சது அவ்வ்!

    அவ்ளோ ஈசியா கிடைக்கிறாப்போல இருந்தா பேப்பர்லவா விளம்பரம் கொடுப்பான்கனு கூட எனக்கு ஓசிக்க தெரியலை அவ்!

    அந்தக்காலத்தில இது மாரி புதையல் வேட்டைலாம் போறதுண்டு அவ்வ்!

    முள் இல்லாத புரோசோபிஸ் வகை மரத்தை கண்டுப்பிடிச்சு , இப்போ இருக்கு ம் மரத்துக்கு மாற்றாக பரப்பணும் என திட்டமாம்,ஆனால் இன்னும் செய்தா மாரி தெரியலை: -))

    பதிலளிநீக்கு
  21. பொன்னியின் செல்வனை ஆழ்ந்து படித்து எழுப்பிய சந்தேகம் அருமை! நிலத்தடி நீரை குடிப்பது சீமைக் கருவேலமரங்கள் அல்லது சீத்தாமுள் மரங்கள் எனப்படும் வேலிக்காத்தான் மரங்கள்! பொன்னியின் செல்வனில் வருவது நாட்டு கருவேலம் மரம்! இது சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. இதன் முட்கள் நீளமாக இருக்கும். ஓலைக் காத்தாடி செய்து விளையாடுவது உண்டு. வவ்வால் அவர்களின் விளக்கம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. வேலிகாத்தான் மரம் -என்று இன்று அழைக்கப்படுவதை நீங்கள் 'கருவேலமரம்' என்று தவறாக்க் கருதிவிட்டீர்கள். எனவே அன்புகூர்ந்து உயிருள்ள கருவேல மரத்தை எங்காவது பார்த்து அடையாளம் தெரிந்துகொண்டு விடுங்கள். (2) வேலிகாத்தான் மரம் என்னும் முட்செடியானது, 1960 களில் அமெரிக்காவிலிருந்து (PL480 திட்டத்தின்படி) வந்த கோதுமையின் ஊடாக அவர்களின் திட்டமிட்ட சதியின் காரணமாக இந்தியாவை வந்தடைந்த விதைகளிலிருந்து முளைத்த தாவரம். ஏழைகளின் விறகாகப் பயன்படுவதே இதை இன்னும் அழிக்க முடியாமல் இருப்பதன் காரணம். இன்று இந்தியா முழுவதும் பயிர்குள்ளும் தோட்டங்களுக்கும் வேலிகளாக இதைக்காணலாம்.

    பதிலளிநீக்கு
  23. பொன்னியின் செல்வன் "குறையே இல்லாத" புத்தகம் இல்லை! கல்கி, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை. "factual errors" "inconsistency" எல்லாம் பொன்னியின் செல்வனில் இருக்கத்தான் செய்கிறது. அப்படி இல்லை என்று நாம் நினைத்தால், நியாயப்படுத்தினால் அது நம் தவறுதான்.

    சாதாரண மனிதனை கடவுளாகவும், சாதாரண கதையை வேதமாகவும் மாற்றும் மனநிலை கொண்டவர்கள் நம் இந்தியர்கள். கல்கி, தன் கற்பனையில் சில தவறுகளே செய்து இருந்தாலும் (அதை அவரே ஒத்துக்கொண்டு இருந்தாலும்) அதையும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று விவாதிச்சி வெற்றி வாகையும் சூடலாம். பொன்னியின் செல்வன் ஒரு சிறந்த படைப்பு. ஆனால் அது "ஃப்ளாலெஸ் க்ரியேசன்" என்ற வாதம் அர்த்தமற்றது.

    பதிலளிநீக்கு
  24. கவிஞர் அறிவுமதியுடன் அவருடைய துணைவியாரின் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்திலிருந்த மேட்டின் மீதேறி நின்றால் எதிரில் கடல்போலத் தோன்றும் வீரநாராயண ஏரி. நாங்கள் நின்ற அந்த மேட்டின் முனையிலிருந்து குறிப்பிட்ட இடத்துக்கு என்னைக் கூட்டிவந்து நிறுத்தி "இந்த இடம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம். நீங்கள் நிற்கும் இந்த இடத்திலிருந்துதான் வந்தியத்தேவனின் பயணம் தொடங்கும் என்று கல்கி எழுதியிருக்கிறார். "வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வடகாவேரியிலிருந்து பிரிந்துவந்த வடவாறு. ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வைத்திருந்தார்கள்....." என்ற புகழ்பெற்ற வரிகளுக்கான இடம் இதுதான். அந்தக் காலத்தில் இங்குதான் கல்கியும் மணியமும் மற்றவர்களும் வந்து பல்வேறு ஆய்வுகள் செய்து நீண்டநேரம் இங்கேயே இருந்து ஏகப்பட்ட குறிப்புகள் எடுத்துக்கொண்டு போனார்கள் என்ற தகவல் சொல்லுவார்கள்" என்று சொன்னார்.அந்த நேரத்தில் உடல் சிலிர்த்தது. இன்னும் பல்வேறு சிறு சிறு குறிப்புக்களுடன் அந்த ஏரியாவை வலம் வந்தோம்.
    புராண இதிகாச சரித்திரப்புனைவுகளைப் படிக்கும்போது நாம் தற்கால நவீன உலகின் சான்றுகளுடன் அவற்றைப் பொருத்திப் பார்த்து இம்மாதிரியான கேள்விகள் எழுப்புவதும், நமக்குள் இம்மாதிரியான குறும்புக் கேள்விகள் எழும்புவதும் நம்முடைய மூளையின் குறுகுறுப்பைக் காட்ட உதவும்.
    சரித்திரக்கதைகளைப் படிக்கும்போது நாம் வேறொரு மனநிலையில் படித்தால்தான் அவற்றை ரசிக்கமுடியும் என்றே கருதுகிறேன்.ஆனாலும் நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு அது வேறு கருவமரம் என்ற பதிலை நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக திரு வவ்வாலின் விளக்கங்கள் வழக்கம்போல் சிறப்பானது.
    திரு வருண் சொல்லியிருக்கும் பதிலை வேறு வார்த்தைகளில் நான் சொல்ல நினைத்திருந்தேன். அவர் சொல்லிவிட்டதனால் சேந்தமங்கலம் குறித்த நினைவுகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

  25. நன்றி கரந்தை ஜெயக்குமார்..

    டாக்டர் சுரேஷ்... உங்கள் பின்னூட்டம் பார்த்ததில் மகிழ்ச்சி. நலம்தானே?

    நன்றி கோமதி அரசு மேடம்..

    நன்றி கணேஷ்... 'கில்லிங்க' என்றால் என்ன? ராஜேஸ்வரி ம்ர்டமும் அதைவிட வவ்வால் அவர்களும் அற்புதமாக பதில் சொல்லி விட்டார்கள்.

    நன்றி ஜீவி ஸார்... வேதாவின் வந்தியத்தேவன் மணியம் வந்தியத்தேவன் வித்தியாசம் தெரிகிறதா? அப்புறம்... உங்களுக்கு தோசை பிடிக்காதா? :)))))

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்...

    நன்றி வவ்வால் ஸார்... தெளிவான பதில்கள். மிக்க நன்றி.

    நன்றி யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்

    நன்றி மாதவன்.

    முதல் வருகைக்கும் நன்றி சிவ அரசு.

    பதிவைப் பற்றிப் பேசாமல் பாராட்டு மட்டும் வழங்கிய ஆவி... நன்றி! :))))))))))

    சுட்டி கொடுத்து விளக்கியதற்கு நன்றி சக்தி வேல். முதல் வருகைக்கும் நன்றி.

    நன்றி கீதா மேடம்.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி செல்லப்பா ஸார்..

    நன்றி வருண்.

    நன்றி அமுதவன் ஸார்.. //நமக்குள் இம்மாதிரியான குறும்புக் கேள்விகள் எழும்புவதும் நம்முடைய மூளையின் குறுகுறுப்பைக் காட்ட உதவும்.// கோபித்துக் கொள்ள வேண்டாம் ஸார்! :)))

    பதிலளிநீக்கு
  26. பொன்னியின் செல்வன் நெடுங்கதையில் என்ன பிழைகள் உள்ளன என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  27. பொன்னியின் செல்வன் நெடுங்கதையில் என்ன பிழைகள் உள்ளன என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  28. பொன்னியின் செல்வனிலிருந்து 'கருவேல மர' ஆராய்ச்சி செய்யப் போய்விட்டீர்களா? நீங்கள் பொ.செ. நாடகம் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.

    பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். வரும் வருடமாவது கல்கி சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்புங்கள்! பரிசு பெற இப்போதே வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  29. ஒரே தன்மை உடையன. வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள்.
    பரவலாக சொல்லப்படும் வேலிகாத்தான் மரங்கள் வேறு கருவேல மரங்கள் வேறு. கருவேல மரத்தின் முட்கள் வேலிகாத்தானை விட நீளமாக காணப்படும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!