திங்கள், 11 ஆகஸ்ட், 2014

திங்க கிழமை நாக்கு நாலு முழம் : தோசை புராணம் பகுதி 2

                
ஆனியன் ரவா தோசையில் கூட மொறுமொறு பகுதி உண்டு. அதுவும் இதே போல தனியாகச் சுவைக்க வேண்டிய பகுதிதான்! ஆனால் அதில் வெங்காயத்தை எப்படிப் போடுகிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும். கடனே என்று 'கட்' செய்து போட்டிருந்தால் அந்த ஹோட்டலுக்கு அடுத்தமுறை போகாதீர்கள்!  நிறையபேர் வெங்காயத்தைக் 'கட்' செய்யும்போது அதன் காம்பு, வால் பகுதியை தனியாகக் 'கட்' செய்து ஒதுக்காமல் அதையும் சேர்த்துப் போட்டால் அது வாயில் சிக்கும்போது வெறுப்பாக இருக்கும்! ரவா தோசைகளில் ஆங்காங்கே முந்திரி பருப்பும் கிடைக்கும்.  அது போனஸ்!!!
  
  

தோசையின் பெரியப்பா பிள்ளை ஊத்தப்பம் இருக்கிறது பாருங்கள்,  அதிலும் இப்படித்தான். ஆனியன் ஊத்தப்பம், (இதிலும் முன்பு போல வெங்காயத்தைப் பொடியாக அரிந்து தூவிக் கொடுக்கும் ஹோட்டல்கள் அரிதிலும் அரிது!) பிளெய்ன் ஊத்தப்பம்..  சில ஹோட்டல்களில் ஊத்தப்பம் ஊற்றத் தெரியாமல் நடுவில் மாவாகக் கொண்டு வந்து வைப்பவர்களும் உண்டு. கருகவும் கருகாமல், நடுவில் அரை மாவாகவும் இல்லாமல் சரியான பதத்தில் கொண்டு வரும் ஹோட்டல்களே ஹோட்டல்கள்!

ஆனால் இப்போதெல்லாம் ஆனியன் ஊத்தப்பம் என்று கேட்டால் ஊத்தப்பத்தின் மீது சில வெங்காயத் துண்டங்கள் போட்டு, ஆனால் அதன்மீது எதற்கு 
மிளகாய்ப்பொடி தூவித் தருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் கேட்டேனா? இப்போல்லாம் ஆர்டர் தரும்போது 'ஆனியன் ஊத்தப்பம்... மேலே பொடி தூவாமல்' என்று சேர்த்தே சொல்கிறேன்!  இப்போது பொடி தோசை போல பொடி ஊத்தப்பமும் போடுகிறார்கள் கடைகளில்.  ஆமாம், ஒரு சந்தேகம் ரொம்ப நாட்களா.... அது ஊத்தப்பமா, ஊத்தாப்பமா? 
         

இந்த இடத்தில் இந்த விஷயத்தையும் சொல்லித்தான் ஆகணும். அதாவது என்னன்னா ஊத்தப்பம் சைஸ் முன்னால் எல்லாம் எப்படி இருக்கும்? இப்போ அதன் அளவையும் குறைத்து வளையல் போல ஆக்கி விட்டார்கள். என்ன அநியாயம்ங்க...
             


திருமணத்துக்குமுன் தனியாக இருந்தபோது உடுப்பி ஹோட்டலில் அவ்வப்போது சாப்பிடுவேன். அந்நேரங்களில் ஒரு பரோட்டாவும், ஒரு ஆனியன் ஊத்தப்பமும்தான் சாப்பிடுவேன். வயிறும் நிறைந்து விடும்.  குறைந்த காசிலும் முடித்து விடலாம்!    

                                                                                                                      

அவ்வப்போது செட் தோசையும் சாப்பிடுவது உண்டு. அதென்ன செட் தோசை? ஊத்தப்பமும் இல்லாமல், தோசையும் இல்லாமல் ஒரு சைசில், இரண்டு தோசைகள் தருவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தரப்படுவது வடகறி! இந்த சைட் டிஷ் எனக்கு அப்போதுதான் முதல்முறை அறிமுகம். மசாலா வாசனையுடன் இருக்கும். அது வாய்க்குப் பிடிக்கும், சாப்பிடலாம் என்று தோன்றும்போது அதையும் சாப்பிட்டிருக்கிறேன்.

சமீப காலங்களில் ஹோட்டல்களில் செட் தோசை தருகிறார்களா என்று சோதித்துப் பார்த்ததில்லை.
              

அப்புறம் இட்லியும் சாப்பிட்டு, தோசையும் ஆர்டர் செய்து சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுக்குமே சைட் டிஷ் சாம்பார் சட்னிதான் பாருங்கள். அதனால் சொல்கிறேன்! அதே போல சப்பாத்தியும் பரோட்டாவும். முன்பெல்லாம் இரண்டுக்கும் வெவ்வேறு வகைக் குருமாக்கள் இருந்தன. இப்போ எல்லாம் ஒரே வகைக் குருமாதான்! எத்தனை ஹோட்டல்களில் இப்போதெல்லாம் சப்பாத்திக்கு வெங்காய ரைத்தா வைக்கிறார்கள்? விடுங்க... இது தோசைப் பதிவு.. இதில் சப்பாத்தி பற்றி வேண்டாம்...
                                                             

                                                            


                                                       

ஆனால் எனக்கென்னமோ இந்த மசாலா தோசை பிடிப்பதே இல்லை. நிறைய பேருக்கு அதுதான் இஷ்டம். சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும் வெங்காய உருளைக்கிழங்குப் பொரியலை தோசைக்கு நடுவே வைத்துச் சாப்பிடுவது எனக்குப் பிடிப்பதில்லை!!
                 
சாதா தோசை வீட்டிலேயே செய்யலாம். ரவா தோசையும் வீட்டிலேயே செய்யலாம்தான். ஆனால் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!  மாவு கரைப்பதில் இருக்கிறது டெக்னிக். ரவா, மைதா, அரிசிமாவு காம்பினேஷன் அளவுகளில் இருக்கிறது கரைக்கும் வித்தை. இந்த இடத்தி(லும்)ல் கீதா மேடம் கிட்டேயிருந்து ஏகப்பட்ட டிப்ஸ் எதிர்பார்க்கிறேன்! ஆனால் அந்த சாம்பார்.....  அந்த சாம்பாரின் ருசி வீட்டில் தயார் செய்யும்போது கொண்டு வருவது கஷ்டம்தான். பரங்கிக் கீற்று போடவேண்டும் என்பார்கள். சீரகம் தாளிக்க வேண்டும் என்பார்கள். (இந்த இடத்திலும்தான்) ஆனால் அந்தச் சுவை வருவதில்லை. 

சரவணபவன் சாம்பார் செய்முறை என்று ரெஸிப்பி ஒன்று எடுத்துச் சேமித்து வைத்திருக்கிறேன். அதை அடுத்த வாரம் தனியாகப் பதிய உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!
       
     
மேலும் பெரும்பாலான வீடுகளில் செய்யும்போது சாம்பார், சட்னி(கள்) என்று வக்கணையாகச் செய்வதில்லை. பெரும்பாலும் பழங்குழம்பும், மி.பொடியும்தான்! பழங்குழம்பு என்றால் அன்றைய சாதத்துக்குச் செய்திருக்கும் சாம்பார் அல்லது குழம்பு வகை! தோசைக்கென்று தனியாக சாம்பார் செய்ய பெரும்பாலும் யாரும் மெனக்கெடுவது இல்லை.
                   
எங்கள் வீட்டு ஸ்பெஷல் வெந்தய தோசை.  இந்த அளவு வெந்தயம் போட்டு செய்தால் வேறு எங்கும் தோசை கல்லிலிருந்தே எடுபடவில்லை என்கிறார்கள் என் உறவுகள். எங்கள் வீட்டில் முதலிரண்டு தோசைகள் சுருண்டு 'மொத்தை'யானாலும் அடுத்தடுத்த தோசைகள் பொன் நிறமாக அற்புதமாக வரும்.  (கீழே இதற்குக் கிடைத்திருக்கும் படம் பொருத்தமான படம் இல்லை! வீட்டில் செய்யும்போது படம் எடுத்துப் போட்டிருந்தால்தான் உண்டு.) இதைச் சாப்பிடும்போது எனக்கு அந்தச் 'சீவல் தோசை'யின் நினைவு வரும். மற்ற தோசைகளுடன் ஒப்பிடும்போது வெந்தய தோசை மூன்று சாப்பிட்டால்தான் ஒரு சாதா தோசை சப்பிட்டதற்குச் சமம்! இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்றுமே தேவை இல்லை. இலேசான கசப்புடன் நல்ல சுவையான தோசை.  

                                                                   

எங்கள் வீட்டில் இதற்கு வைத்திருக்கும் பெயர் 'சில்க் தோசை'! (சிலுக்கு இல்லீங்க!)  
         
    
இதில் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு வேறு படித்தேன். வெந்தயம் சாப்பிட்டால் ஆண்மையுணர்வு அதிகரிக்குமாம்!  ஆத்தீ...!

அடுத்து கோதுமை மாவு தோசை. கோதுமை மாவு கரைத்து உப்பு மட்டும் போட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து பெருங்காயம் தூவி தோசை வார்க்கலாம். இதிலேயே காரப்பொடி சேர்த்து கார தோசை வார்க்கலாம். வெல்ம் கரைத்துச் சேர்த்து இனிப்பு தோசையும் வார்க்கலாம்.  ஒவ்வொன்றும் தனித்தனிச் சுவை என்றாலும் இந்த தோசைகள் இரண்டாம்பட்சம்தான்! இதில் மைதா, அரிசி மாவு கலந்தால் மெலிதாக வருமோ என்னவோ, எங்கள் வீட்டில் வெறும் கோதுமை மாவு மட்டுமே வைத்துச் செய்வதால் தடித் தோசையாகவே வரும்!! சிரிக்காதீர்கள், நான் கார தோசைக்கு சர்க்கரை தொட்டுக் கொள்வேன்!

10/8 'தமிழ் இந்து' தினசரியில் கொத்துமல்லி தோசை என்று ஒன்று பார்த்தேன். இதே கோதுமை மைதா காம்பினேஷனில் கூட இரண்டு தக்காளி, இரண்டு பெரிய வெங்காயம் ஒரு கட்டுக் கொத்துமல்லி அரைத்துச் சேர்த்து தோசையாக வார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்திருக்கிறோமே தவிர, இப்படி அரைத்துச் சேர்த்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்!


என் அம்மா ஒரே ஒருமுறை முடக்கத்தான் தோசை செய்து கொடுத்தார்கள். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லக் கொடுத்தார்கள். அப்புறம் கேட்டு வாங்கி இன்னும் சாப்பிட்ட நினைவு இருக்கிறது! ஆனால் அடுத்த இரண்டாம் முறை அதைச் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மருத்துவகுணம் கொண்ட முடக்கத்தான் கீரையை தோசை மாவில் சேர்த்து அரைத்து விட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். 

                                                                     
                
கூகிளில் கிடைத்த இந்தப் படத்தில் தோசை குண்டாக இருக்கிறது! ஆனால் எங்கள் வீட்டில் மெலிதாக இருக்கும்!

அப்புறம் வீட்டில் தோசை வார்க்கும்போது நாங்கள் செய்யும் வகைகள். எல்லோர் வீட்டிலும் செய்து பார்ப்பதுதான்! தேங்காய்த் துருவல் போட்டு இறக்குமுன் சர்க்கரை தூவி, மடித்து எடுத்துப் பரிமாறுவோம். பொடி தோசை. தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் மிளகாய்ப் பொடியை தோசை வார்த்தவுடன் அதன்மேல் தூவி நல்லெண்ணெய் மேலே விசிறி, மடித்து எடுப்போம். கேரட், குடைமிளகாய், வெங்காயம், கரி.கொத்துமல்லி பொடியாய்  அரிந்து தோசையில் போட்டு நிரவி, கொஞ்ச நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு எடுப்போம். சில சமயம் திருப்பிப் போடாமல் தட்டு வைத்து மூடி அப்படியேவும் எடுத்து விடுவோம். வெங்காயம் சாப்பிடாத பெரியவர்களுக்காக குடைமிளகாய்த் துருவல், கேரட் துருவல், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய் தூவி இறக்குவோம்.  
       

மாவிலேயே நறுக்கிய வெங்காயத்தையோ, காய்களையோ போட்டு தோசை வார்ப்பது ஒருமுறை. எனக்கு அதைவிட, தோசையை வார்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இதர காய்களைத் தூவி வார்ப்பதே பிடிக்கும்.   
       
நான் தோசைக்கு ரசம் தொட்டுக் கொண்டு கூட சாப்பிடுவேன். அது ஒரு ருசி. சமயங்களில் தயிர் தொட்டுக் கொண்டும்! எங்கள் வீட்டில் என்னைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது! என் அப்பா கடைசி தோசைக்கு 'ஜிட்டு' என்று கேட்டு, நெய்யும் சர்க்கரையும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார். எனக்கென்னவோ இது சப்பாத்திக்குத்தான் சரி வரும் என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி!
     
ஒரு கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் சிறு சிறு வட்டங்களாக வார்த்து, மினி இட்லி கணக்காக, மினி தோசைகள் வார்ப்போம். ஒரு வாய்க்கு ஒரு தோசை! அது ஒரு சுவாரஸ்யம். அது போலவே பல வடிவங்களில் - முக்கோணமாக, சதுரமாக, செவ்வகமாக - சிறிய அளவிலும், பெரிய அளவிலும் வார்ப்பது குழந்தைகளை(யும்)க் கவரும்.
      
   
தோசையை வார்த்து விட்டு, கரண்டியை வைத்து மேலாக உள்ள மாவை வழித்து எடுத்து நெய் ஊற்றி மொறு மொறுவென 'சீவல் தோசை' போடுவோம். பேப்பர் ரோஸ்ட் என்றும் சொல்லலாம். மெல்லிய இழையாக இருக்கும் தோசையை அப்படியே சிறு சுருட்டலாகச் சுருட்டி எடுத்துத் தட்டில் போட்டால் ஒரே வாய். தோசை காலி. 
               

செம சுவை தெரியுமா அது!  

                                                       

வீட்டில் அவ்வப்போது செய்தாலும் கடையில் சாப்பிட்டது என்று பார்த்தால் இதைக் கடைசியாக நான் மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கத்தில் மதுரை கோபு ஐயங்கார் கடையில் சாப்பிட்டதுதான். நெய் வாசனையுடன் இரண்டு வாயில் தோசை காலியாகி விடும். அப்பவே அது 35 ரூபாய்!

                                                                  

தோசைக்குத் தொட்டுக்கொள்ள நிறையப் பேர்களுக்குப் பிடிக்காத / பிடித்த ஒரு சைட் டிஷும் உண்டு.  பூண்டுப்பொடி.  பூண்டை உரித்து, பட்டை மிளகாய்ச் சேர்த்து, தேவையானால் துளி புளி சேர்த்து, உப்புப் போட்டு பச்சையாகவே அரைத்து வைத்துக் கொள்வது.  இது மோர் சாதத்துக்கு ரொம்ப ஆப்ட் என்றாலும் அவ்வப்போது தோசைக்கும் தொட்டுக் கொள்வது உண்டு. மிளகாய்ப் பொடி போல இதற்கும் நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்துக் கொள்வோம்! ஆனால் நிறைய பேர்களுக்கு இதன் வாசனையும், சுவையும் 'உவ்வே'..!

'தோசை - பகுதி இரண்டு'ம் சற்றே நீண்டு விட்டதால், தவிர்க்க முடியாமல் இதன் தொடர்ச்சி அடுத்த 'திங்க'க் கிழமை வெளிவரும்!
                       

47 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  தாங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது அத்தோடு வெத்தயத்தின் மருத்துவக் குணம் பற்றியும் சொல்லியுள்ளீர்கள் பார்த்தவுடன் சாப்பிடச் சொல்லுகிறது பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. முதலிரண்டு தோசைகள் சுருண்டு 'மொத்தை'யானாலும் அடுத்தடுத்த தோசைகள் பொன் நிறமாக அற்புதமாக வரும். //

  சப்பாத்தி சுட்ட கல்லில் தோசை வார்த்தால் முதலிரண்டு தோசைகள் கல்லிலிருந்து வரமாட்டேன் என்று ஒன்றிக்கொள்ளும்..

  ஆகவே சப்பாத்திக்கு வேறு தோசைக்கல் உபயோகிப்போம்..

  பதிலளிநீக்கு
 4. அது வேறு ராஜராஜேஸ்வரி அம்மா.. அதுவும் சரிதான். ஆனால் இது வெந்தயம் அளவு கடந்து போடுவதால் வரும் பிரச்னை. :)))

  பதிலளிநீக்கு
 5. முதல் வருகை + முதல் பின்னூட்டத்துக்கு நன்றி ரூபன். த. ம வாக்குக் கருவிப் பட்டையே காணோமே (அது எங்களுக்கு வருவதில்லையே) .. எப்படி வாக்களித்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை ரூபன்.

  பதிலளிநீக்கு
 6. எல்லா தோசையையும் என்லார்ஜ் செய்து தின்று மகிழ்ந்தேன் ,பில்லைப் பார்த்ததும் செரிமானம் ஆகவில்லை !

  பதிலளிநீக்கு
 7. ஆனியன் ரவா தோசைல வெங்காயம் மிகவும் பொடியாக சீவல் போன்று போட்டால் அதுவும் லைட்டாக க்ரிஸ்பாகி டேஸ்ட் சூப்பரா இருக்கும்...சரவணபவன் நல்லா இருக்கும்...ஆனா விலை? தோசையின் சைசும் இப்போ சின்னதாகிவிட்டது (வெங்காயம் விலை காரணம்?)...சாப்பிடும் போது உள்ள இன்பம் பில் வரும்போது போயி அந்த தோசை டைஜஸ்ட் ஆக நேரம் எடுக்கும்.....

  செட் தோசை கோயம்புத்தூரில் கிடைக்கின்றது....சென்னையில் குறைந்துவிட்டது.....ஆனால் இதையே பங்களூரில் பட்டர் தோசைன்னு போடறாங்க...நீர் தோசை......மைசூர் மசாலா தோசை.....கல் தோசை நு சங்கீதால வடைகறியுடன் கிடைக்கும்.....விலை...அங்கயும் அப்படித்தான்...ஆனால் கல் தோசை விசேஷமா தெரியல...

  சரவணபவன் கார தோசை .....நல்லாருக்கு...

  எர்ரா காரம் தோசை/எர்ரா காரம் மசாலா தோசைனு இங்க கிடைக்கிறது இல்ல....ஆனா ஆந்திராவுல செம ஃபேமஸ்......தோசை நல்லா மெல்லிசா ஊத்திட்டு....ஒரு பக்கம் பூண்டு சட்னி, இன்னுரு பாதில ஆந்திரா பப்புலு பொடி போட்டு மடிச்சு....கொடுப்பாங்க...நல்லாருக்கும்....ஆனா காரமா இருக்கும்....இத்லேயே உருளை மசாலாவும் வைச்சு எர்ரா காரம் மசாலா தோசைனு....

  களிக்கஞ்சி தோசை/ தேங்கா தோசை....இது கேரளா, திருவனந்தபுரம், பாலக்காடு, திருனெல்வேலி சைடுல ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் செய்யறதுண்டு...வீட்டுலதான்....இதுவும் நல்லாருக்கும்...தொட்டுக்க காரமா தேங்கா சட்னி....

  முடக்கத்தான் தோசை வீட்டுல செய்யறதுண்டு...வெந்தய தோசை.....வித் பூண்டு சட்னி நல்லாருக்கும்....

  ஸோ இப்படியாக....தோசை புராணம் சூப்பர் சார்....அடுத்து வரும் தோசகள் என்னென்னவோ...வெயிட்டிங்க்.....  பதிலளிநீக்கு
 8. அடேயப்பா.. சும்மா அனுபவித்து எழுதி இருக்கீங்க சார்.. தோசைய எப்டி கொடுத்தாலும் சாப்பிட தெரியும் ஆனா இத்தன வழிகல்ல சுடலாம்னு இப்ப தான் தெரியுது..

  கருப்பு கலர் பேண்ட்டுக்கு எப்படி எல்லா சட்டையும் பொருந்திப் போகுமோ அதே மாதிரி தான் தோசையும் எல்லா சைட் டிஷ் கூடவும் ஒட்டிக்கும்.. சாம்பார் சட்னி இல்லாம நீங்க சொன்ன மாதிரி ரசம் ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்..

  மட்டன் சிக்கன் மீன் மூணு குழம்புமே ரொம்ப நல்லா இருக்கும்... மீன் வறுவல் செய்யும் போது கடைசி எண்ணைல சின்ன வெங்காயம் வதக்கி ஒரு டிஷ் அம்மா செய்வாங்க.. அது தோசைக்கும் செம சூப்பர்..

  எனக்கு மசாலா தோஷ புடிக்கும்.. ச.பவன்ல எல்லா தோசயுமே சில்க் தோஷ தான். அதான் வயிறு நிறையனும்னா அதுல இருக்க மசாலா உள்ள போனாதான் ஆச்சு..

  அப்புறம் இன்னொரு கடைல தேசிய கொடி ஊத்தாப்பம் உண்டு.. மல்லி, வெங்காயம் தக்காளி மூணு கலர் ல போட்டு கொடுக்கதால அப்டி ஒரு பேரு :-)

  பதிலளிநீக்கு
 9. கோதுமைமாவை அரிசுமாவு கலக்காமல் நல்ல முறுகலாக செய்யலாம். கோதுமை மாவை நல்ல நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும் கட்டி தட்டாமல் இருக்க மிக்ஸியில் போட்டு எளிதாக கரைத்துக் கொள்ளலாம். தொட்டுக் கொள்ள மிளகாய் தக்காளி சட்னி, மிளகாய் பொடி.

  இனிப்பு தோசைக்கு சிறிது அரிசி மாவு, சிறிது மைதாமாவு, தேங்காய் துறுவல், ஏலக்காய் போட்டு செய்யலாம். என் குழந்தைகளுக்கு பிடித்த தோசை முன்பு.

  முடக்கத்தான் தோசைக்கு அரிசியும் சிறிது உளுந்தும் கீரையுடன் சேர்த்து உடனே தோசையாக செய்து சாப்பிடலாம். (மெதுவாய் இருக்கும்)
  உளுந்து இல்லாமல் அரிசியும் முடக்கத்தான் கீரையும் மட்டும் சேர்த்து அரைத்து உடனே சாப்பிட வேண்டும்.(கொஞ்சம் முறு முறு என்று இருக்கும்)


  நீங்கள் சொன்ன காய்ந்த மிளகாய் சட்னி போல் பச்சை மிளகாய் சட்னியும் நன்றாக இருக்கும் என் அப்பாவுக்கு பிடித்த சட்னி.

  வெந்தய தோசைக்கு பச்சைமிளகாய் சின்னவெங்காயம், உப்பு வைத்து பச்சையாக அரைத்த சட்னி நன்றாக இருக்கும் தண்ணீர் விடாமல் அரைத்தால் கெட்டு போகாமல் இருக்கும் எத்தனை நாள் என்றாலும்.
  அதற்கு நல்லெண்ண்ணெய் சேர்த்து குழைத்து சாப்பிடலாம். சிலர் இதற்கு பூண்டு வைத்தும் அரைப்பார்கள்.

  எனக்கும் தோசைக்கு ரசம் ஊற்றிக் கொண்டு சாப்பிட பிடிக்கும். உங்கள் அப்பா போல் என் அம்மாவுக்கு சீனி வேண்டும் தோசைக்கு.

  வெங்காயம் மேலே பரவலாக தூவி மூடி சுடும் தோசை என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.

  தோசை வைத்தியமும் உண்டு என் மாமியார் அவர்கள் சொன்னது :-. வயிறு சில நேரம் இரையும் அப்போது தோசையை கனமாக மூடி சுட்டு அதை குழிவான தட்டில் போட்டு அதன் மேல் நிறைய ஆறினவெந்நீரை விட்டு தோசையை சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தால் வயிற்று இரைச்சல் சரியாகி விடும்.

  தோசை புராணம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. பில் ஓரிடம் - தோசை ஓரிடம் பகவான்ஜி... அதனால் மறுபடி வந்து என்லார்ஜ் செய்து சாப்பிடுங்க தைரியமாய்! :)))

  பதிலளிநீக்கு
 11. ஆஹா... நீங்களும் சில வகைகள் சொல்லியிருக்கீங்க துளசிதரன்ஜி.. எர்ர தோசை என்பதே (சிவப்பு தோசை) காரத்தைத்தான் குறிக்கும் போல! நாங்களும் தோசையில் பூண்டுப் போடி வெங்காயச் சட்னி பரத்தி, புரட்டிச் சாப்பிட்டிருக்கிறோம். நீங்கள் சொல்லியிருக்கும் வகைகளும் கவர்கின்றன.

  பதிலளிநீக்கு
 12. சீனு.. நன்றி. கறுப்புப் பேண்ட் உதாரணம் சூப்பர் சீனு. நீங்கள் சொல்வது சரிதான். சட்னி நிறங்களை வைத்து அதற்கு தேசியக்கொடி ஊத்தப்பம் என்று பெயரா? அட!

  பதிலளிநீக்கு
 13. நன்றி கோமதி அரசு மேடம். தேங்காய் இனிப்பு தோசையில் தேங்காய்த் துருவல் நாங்களும் போடுவோம். எழுத மறந்து விட்டேன்! மிக்சியில் பொதுக் கரைத்துக் கொள்ளலாம் என்பது நல்ல டிப்ஸ். நம் வீட்டில் அவ்வளவு பொறுமை இருக்காது! :))

  வெந்தய தோசைக்கு நீங்கள் எவ்வளவு வெந்தயம் வைப்பீர்கள்?

  முடக்கத்தான் எப்போதாவது கண்ணில் படுகிறது. தோசை செய்யத்தான் தோன்ற மாட்டேன் என்கிறது.

  தோசை வைத்தியம் புதிய தகவல்.

  பதிலளிநீக்கு
 14. //அதன் காம்பு, வால் பகுதியை தனியாகக் 'கட்' செய்து ஒதுக்காமல் அதையும் சேர்த்துப் போட்டால் அது வாயில் சிக்கும்போது வெறுப்பாக இருக்கும்! //

  இஃகி இஃகி இஃகி எனக்கும் தான்.


  அப்புறமா வெந்தய தோசைக்கு நானும் வெந்தயம் நிறையத் தான் போட்டு அரைப்பேன். ஆனால் முதல் தோசையிலிருந்து கடைசி தோசை வரை சுருளாது. என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் செய்முறை பார்க்கலாம். மற்றபடி சரவணபவனில் கொடுக்கிறதெல்லாம் தோசையே இல்லை. நான் தோசையோ, இட்லியோ வார்த்தால் அதுக்குனு தனியாக ஓட்டல் சாம்பார்னு வைப்பேன். அதோட செய்முறையும் என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் பார்க்கலாம். எங்க வீட்டில் காலம்பர குழம்பு/சாம்பார் எல்லாம் கொடுத்தால் உள்ளே யாருக்கும் இறங்காது. விசேஷ நாட்களில் வெங்காயம், மசாலா சேர்க்க முடியாத நாட்களில் கூட சட்னி தனியாகக் காரமாகப் பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய், பொட்டுக்கடலை ஒரு டீ ஸ்பூன் வைத்துக் கொஞ்சமாய்ப் புளி சேர்த்து அரைப்பேன்.

  பதிலளிநீக்கு
 15. ரவா தோசைக்கு ரொம்ப ஊறவும் கூடாது. ஊறவைக்காமலும் இருக்கக் கூடாது. ரவை இரண்டு பங்கு என்றால், மைதாவும் அரிசிமாவும் சேர்த்து ஒரு பங்கு நான் போடுவது. ரவை அதிகமாய் இருந்தால் தான் தோசை முறுகலாக வருவதாக எனக்குத் தோன்றும். தோசை வார்ப்பதற்கு அரை மணி முன்னால் ஊற வைப்பேன். நல்லா நீர்க்கக் கரைச்சு வைச்சுப்பேன். அப்போத் தான் மெலிதாக வரும். இப்போக் கொஞ்ச நாட்களாக எம்டிஆர் ரவா தோசை மிக்ஸில் கொடுக்கும் ரவையில் கொஞ்சம் போல் அரிசி மாவும், மைதா மாவும் போட்டு வார்த்தால் மிக மிக மெலிதாக வருது. முயன்று பார்க்கலாம். எதுவும் சேர்க்கலைன்னால் சரியா வரலை. :)

  பதிலளிநீக்கு
 16. எனக்கு அடைக்குத் தான் ரசம் விட்டுக்கப் பிடிக்கும். அதுவும் எலுமிச்சை ரசம். அடை பண்ணப் போறோம்னு முடிவெடுத்தா அன்னிக்கு முன்னேற்பாடா அவருக்கு வத்தக் குழம்பும், எனக்காக எலுமிச்சை ரசமும் வைச்சுடுவேன். :)))) அடையிலும் நிறைய வெரைட்டி உண்டு. தக்காளி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பது குறித்தும் என்னோட சாப்பிடலாம் வாங்க பகுதியில் பார்க்கலாம். மறந்துட்டீங்க போல! :))))

  பதிலளிநீக்கு
 17. கோதுமை வெல்ல தோசை, கார தோசைக்கு நாங்க கோதுமை மாவு போட்டுப் பண்ணுவது என்பது எப்போதாவது தான். அநேகமா ஊற வைச்சு அரைச்சே பண்ணி வழக்கம். கார தோசைக்கு அரிசியும் துவரம்பருப்பும் மிள்காய் வற்றல், பெருங்காயம் உப்பு, தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்வோம். வெல்ல தோசைக்கு அரிசி, கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து அரைப்போம். கோதுமை ரவையை ஊற வைத்து அதனோடு சேர்த்து அரைப்போம். என்னோட பெரியம்மா கோதுமையையே ஊற வைத்துப்பால் எடுத்து அதில் அரிசிமாவு உப்புக்காரம் சேர்த்து அரைத்ததும், வெல்லம் சேர்த்து அரைத்ததும் தனித் தனியாகக் கலந்து வார்ப்பார். என் அம்மாவும் அப்படித் தான் பண்ணிக் கொண்டிருந்தார்.

  பதிலளிநீக்கு
 18. கோமதி அரசு சொன்ன கறுப்பு உளுந்து தோசையை ஸ்ரீரங்கம் வந்ததும் செய்து பார்க்கணும். தோசை வைத்தியமும் ஒரு நாள் முயன்று பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
 19. அனல் மெத்தையில் தூக்கிப் போடுகையில், சூடு தாங்காமல் நான் கத்திக் கதறும்போது மூடியை போட்டு மூடிவிட்டு திருப்பியும் கவுத்தியும் என்னை வாட்டியதில் நெஞ்சில் துளை விழுந்து நான் அடங்கிக் கிடக்க மேலே சாம்பாரோ, சட்டினியோ, துவையலோ எவன் விழுந்தால் என்ன...?

  ஹீ ஹீ.. சும்மா...இது இணையத்தில் படித்த ஒரு கவிதை. மற்றபடி தோசைன்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். அது இருக்கட்டும் தொசையாயணம் எப்போ தோசை புராணமாக மாறியது....?

  பதிலளிநீக்கு
 20. தோசையை பத்தி சும்மா புட்டு வைச்சிட்டேள்! சூப்பரான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 21. சாப்பிடத் தூண்டுகிறது
  தங்கள் பதிவு
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 22. உங்கள் தோசைப் புராணம் அசத்தல்.
  இத்தனை தோசை வகைகளா ? நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாத் தான் இருக்கு. கீதா மேடம் செய்யும் சாம்பார் போய் பார்க்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் தோசை ருசியை விடவும் உங்கள் தோசை புராணம் ரசனி அதிகம் என்பது என் கணிப்பு.

  பதிலளிநீக்கு
 23. தோசை பற்றி சிலாகித்துச் சொல்லியிருப்பதுடன் மருத்துவக் குறிப்பும் இடையில்...

  ஆஹா அருமை அண்ணா...

  இளந்தோசையும் மல்லிச் சட்னியும் சாப்பிட்ட மாதிரி இருக்கு....

  பதிலளிநீக்கு
 24. இத்தனை தோசைகளுக்கு இடுக்கில் ஒரு சின்ன ஆராய்ச்சி.

  ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டால் 'திண்'ணென்று வயிறு நிரம்பி விட்டது போல் அதற்கு மேல் இன்னொறு தோசை கூட சாப்பிடத் தோன்றாது. அதுவே நம் வீடாயிருந்தால் வார்த்துப் போடப் போட கணக்கே தெரியாது. உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.

  இது எதனால்?.. ஹோட்டல் பில்லை சுத்தமாக மறந்து விட்டு உண்மையான காரணத்தைச் சொல்லவும். அதுவே இந்த தோ.புராணத்தின் முத்தாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 25. இப்போ இங்க டிஃபன் டைம். இத்தனை தோசையையும் பார்த்ததே சாப்பிட்ட மாதிரி இருக்கு.ஸ்ரீராம் தோசையைப் பற்றி இவ்வளவு விவரமான ஆராய்ச்சியும்,சட்டினிகள் பற்றிய குறிப்புகளும்,கீதா,கோமதி தோசை யோசனைகளும் பிரமாதம் என் வோட் வெந்தய தோசைக்கே. அல்சர் வந்தவர்களுக்கு அவ்வளவு நல்லதாம். உளுந்து கஸ்ட்ரிக் என்பதால்.

  பதிலளிநீக்கு
 26. ஊருக்குக் கிளம்பும் மும்முரம். நிறைய பதிவுகளுக்கும் போக முடியவில்லை. கணினி பக்கம் வந்து உட்கார்ந்தால் பேரன்களுக்கு அலுப்பு. பாட்டி நீ ரொம்ப நேரம் வேஸ்ட் செய்யறே என்று. இருக்கும் நாட்களைச் சுமுகமாகக் கழித்துவிட்டு வார இறுதி பயணம்.

  பதிலளிநீக்கு
 27. ஜீவி ஜி, தோசை மாவில் சோடா மாவு போடுவதால் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 28. இருக்கலாம், வல்லிம்மா. அதைத் தாண்டி வேறு காரணம் ஏதாவது?..

  // செம சுவை தெரியுமா அது!//

  ஸ்ரீராம் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.. வீட்டு தோசைகளில் இல்லாத ஏதோ ஒன்று தான் சுவை கூட்டியிருக்க வேண்டும். என்ன அது?--
  சோடா மாவா?..

  பதிலளிநீக்கு
 29. எல்லாம் சைவமாகவே இருக்குதே? ஹௌ அபவுட்டு முட்டை தோசை?

  பதிலளிநீக்கு
 30. கீதா மேடம்..

  நான் சரவணபவன் தோசையை உயர்த்தவில்லை. பெரும்பாலும் வீட்டில் செய்யும் தோசையையே ஒஸ்தியாகச் சொல்கிறேன்! சீவல் தோசை, ரவா தோசை போன்றவற்றுக்கு மட்டும் கடைதான் பெஸ்ட்! ஆனால் என் பாஸ் இப்பல்லாம் சாதா தோசையே சீவல் தோசை போலச் செய்வதால் அதுவும் இல்லை!

  ரவா தோசைக்கு நாங்களும் இப்படித்தான் கரைக்கிறோம். ஒருசமயம் வருவதுபோல் ஒருசமயம் வருவதில்லை!

  நானும் அடைக்கும் ரசம் தொட்டுக் கொள்வதுண்டு!

  மாடிப்படி மாது...
  தோசையாயணம் என்ற தலைப்பைவிட தோசை புராணம் என்று மாற்றியவுடன் ரீடர்ஸ் கவுண்ட் ஏறியுள்ளது! என்ன காரணமோ!

  நன்றி 'தளிர்'சுரேஷ்!

  நன்றி கரந்தை ஜெயக்குமார்..

  நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..

  நன்றி சே. குமார்..

  ஜீவி ஸார்...

  தோசைப் பதிவின் முதல் வாரத்தில் பின்னூட்டத்தில் இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன்! ஆனால் ஹோட்டலில் போடும் தோசையில் சோடா உப்பு போடுவது மட்டுமில்லாமல் சைட் டிஷ்களாலும் இருக்கலாம்! ஆனால் ஹோட்டல் பில்லும் ஒரு முக்கிய காரணமே. நான் ஹோட்டலில் கூட மூன்று ஆனியன் ரவா சாப்பிட ரெடி! :)))))

  வல்லிம்மா...

  நன்றி. வாரக் கடைசியில் கிளம்பி எந்த ஊர்? ரசித்ததற்கு நன்றி.

  ஜீவி ஸார்...

  'செம சுவை அது' என்று நான் சொல்லியிருப்பது குறிப்பாக அந்த 'சீவல் தோசை'யை! அதுவும் மதுரையின் கோபு ஐயங்க்கார்க் கடையில்!


  அப்பாதுரை..

  இந்தப் பதிவைப் படித்த என் நண்பர்கள் சிலரும் 'ஒரே சைவமாவே இருக்கே..' என்று கேட்டார்கள். தோசைக்கு மீன் குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதைப் பற்றியும் ஒரு நண்பர் சொன்னார்! சீனு கூட இதே போல சில குறிப்புகள் கொடுத்துள்ளாரே!

  பதிலளிநீக்கு
 31. நிதானமாக ருசித்தேன்:). ரசனை என்றால் இப்படி இருக்க வேண்டும். அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறேன்.

  கோமதிம்மா, கோதுமை தோசைக்குக் கொஞ்சமாய் அரிசி மாவு சேர்ப்பதுண்டு.

  கீதாம்மா, ரவா தோசைக்கான டிப்ஸ் நன்று.

  பதிலளிநீக்கு
 32. ராமலக்ஷ்மி, ஸ்ரீராம் //எங்கள் வீட்டில் வெறும் கோதுமை மாவு மட்டுமே வைத்துச் செய்வதால் தடித் தோசையாகவே வரும்!!// இப்படி எழுதி இருந்ததால் அரிசிமாவு கலக்காமலும் மெலிதாக செய்யலாம் என்று சொன்னேன்.நான் அரிசிமாவு கலந்தும் கலக்காமலும் செய்வேன்.


  பதிலளிநீக்கு
 33. Wow.... Sriraam, oru doctor pattam vaangum alavu aaraaichi seithu naakkil neer oor vaikkum vaarthaigal pottu eluthi irukkireergal. Muthal pathivu Super endraal, irandaam pathivu supero super. Seekkiram third pathivu pottu vidunga boss...... appuram konjam nalla dosai kidaikkum idangalaiyum sollungalen !

  பதிலளிநீக்கு

 34. தோசைகள் பலவிதம் ,ஒவ்வொன்றும் ஒரு ருசி. அனுபவித்து எழுதிய பதிவு....!

  பதிலளிநீக்கு
 35. இப்போ ரவா தோசைக்கு கரைச்சு வச்சிட்டு ஓடி வந்தேன் !!அன்னிக்கு டாஷ்போர்டில் பார்த்து முழுசும் படிக்க நேரமிலாம போனது .நிறுத்தி நிதானமா ரசிச்சு படிச்சேன் !! அதுவும் முதல் படத்தில் முறுகல் வெங்காயம் போட்ட தோசை சூப்பருங்கோ !!! தோசைக்கு நல்லெண்ணெய் சூடாக்கி அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து பூண்டு தட்டி போட்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் அவசர கார சட்னி செய்வாங்க அம்மா ! அது செம ருசிங்க .
  குட்டி தட்டு கடை தோசை ,அப்புறம் கல்தோசை அழகர் கோவில் தோசை யம் யம் !!
  தோசைக்கு கார குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ..இங்கே சம்மரில் நல்லா வரும் குளிர் காலத்தில் சுமாரா வரும்
  தோசை வெஜ் குருமா /தோசை வெங்காய கோசுமல்லி /தோசை வித் மாங்கா தொக்கு !!!!!
  சொல்லிட்டே போகலாம் ...
  btw எனக்கும் அந்த மசாலா தோசை பிடிக்காது ஆனா என் பொண்ணுக்கு ரொம்ப ஆசை .
  சரவணபவன்ல செய்ற மாறியே ghee ரோஸ்ட் கோன் போல செய்து தரசொன்னா :)
  வெயிட்டிங் for யூவர் நெக்ஸ்ட் போஸ்ட் அபவுட் தோசா :))

  பதிலளிநீக்கு
 36. அப்புறம் இன்னிக்கு தோசை புராணம் படிச்சிட்டு போய் ரவா தோசை செய்ததாலோ என்னவோ தெரில :) இன்னிக்கு அமோகமா மொரு மொறுன்னு வந்தது .தாங்க்ஸ் கீதாம்மா நான் கொத்தமல்லி தொக்குடன் சாப்பிட்டேன் :)
  ரவா தோசையை சுட சுட உடனே சாப்பிடனும் ..அதாகப்பட்டது ... குடும்ப தலைவர் கிச்சனில் ஸ்டூல் போட்டு தலைவி ரவா தோசா சுட சுட உடனே சாப்பிட்டு பிறகு வீட்டம்மாவை உக்காற வச்சி தோசை வார்த்து தரனும் :)

  அப்புறம் தோசைக்கு அசைவம் சாப்பிடறவங்க சால்னா சாப்பிடலாம் .பல வருடமுன் தர்மபுரி யில் இருந்தப்போ குரும்பட்டி என்று ஒரு கிராமத்தில் இந்த சால்னா famous ..சின்ன பிள்ளையில் சாப்பிட்டிருக்கேன்

  முன்பு சிறு பிள்ளையா இருக்கும்போது ஆறுமணி சினிமா பார்த்துவிட்டு அப்பா வசந்த பவனோ
  இல்லை ஆனந்த பவனோ கூட்டிட்டு போயி தோசை வாங்கி தருவார் அதெல்லாம் அழியா நினைவுகள்
  அந்த ருசி இப்போ எங்குமில்லை :( ஒரே ஒருதோசையை சாப்பிடுவதில் என்னா ஆனந்தம் !!

  தோசை சாப்பிட்டதும் திம்மென்று இருக்க காரணம் ..சிலர் விளக்கெண்ணை முத்துக்களை அரைக்கும்போது செற்கிராங்க அதாகவும் இருக்கலாம் .

  பதிலளிநீக்கு
 37. வெங்காய ஊத்தாப்பம் சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி வசந்தபவனில் சாப்பிட்டோம். பெரிதாகத் தான் இருந்தது.

  என் அம்மா எப்பவுமே தோசை மூடி போட்டு தான் வார்ப்பார். கரைத்த மாவு தோசை எங்கள் வீட்டில் இரண்டாம்பட்சம் தான். அரைத்த தோசை மாவின் அடி மாவிலேயே கோதுமை மாவு, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வார்ப்பேன்.

  சூடான இட்லிக்கு தான் பூண்டு சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட பிடிக்கும்.

  பலநேரங்களில் வேண்டிய தோசைகளை வார்த்து எடுத்து வந்து சாப்பிடுவதற்குள் மொறுமொறுப்பெல்லாம் போய் விடும். சுடச்சுட ஒருவர் வார்த்து கொடுத்தால் சுவையாக இருக்கும். இம்முறை கூட என்னவரிடம் இரண்டு தோசை எனக்கு வார்த்து போடுங்களேன் என்று கேட்டு சாப்பிட்டேன்....:))

  பதிலளிநீக்கு
 38. சொல்ல மறந்துட்டேன். தோசைக்கு பலநேரங்களில் என்னுடைய காம்பினேஷன் - தயிரில், தோசை மிளகாய் பொடியும், சர்க்கரையும் கலந்த கலவை. அதற்கு ஈடு இணையில்லை என்பேன். கிடுகிடுவென உள்ளே போகும்.....:))

  யாரேனும் இப்படி ஒரு காம்பினேஷனோடு சாப்பிடுகிறார்களா???

  பதிலளிநீக்கு
 39. நன்றி சுரேஷ் குமார்.

  நன்றி ஜி எம் பி ஸார்...

  ஏஞ்சலின்.. நன்றி. நீங்கள் சொல்லி இருக்கும் பூண்டு தட்டிப்போட்ட மிளகாய்ப் பொடி என் நண்பர்கள் கொண்டு வந்து நானும் சுவைத்திருக்கிறேன்! கல்தோசை சரி, அதென்ன அழகர்கோவில் தோசை?
  உங்கள் மகளுக்கு நீங்கள் செய்து கொடுத்தது போல என் மகனுக்கு நான் ஒரு மசாலா தோசை செய்து கொடுத்தேன். (பாஸ் வெளியில் சென்றிருந்தார்கள்). கடையில் சாப்பிடுவதைவிட நன்றாய் இருப்பதாய் செர்டிபிகேட் தந்தான்!

  தோசைக்கு அசைவம் தொட்டுக்கொள்பவர்கள் இதில் தங்கள் சுவையைப் பகிர்ந்திருக்கிரார்களே...

  நன்றி ஆதி வெங்கட்... //தயிரில், தோசை மிளகாய் பொடியும், சர்க்கரையும் கலந்த கலவை// ஊ..ஹூம். முயற்சித்துப் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 40. ஸ்ரீராம், அழகர் கோவில் தோசைக்குச் சேர்க்கும் பொருட்களே தனி. இப்போ அழகர் கோயிலில் பிரசாத ஸ்டாலில் கொடுக்கிறது ஒரிஜினல் இல்லை. நாம் திருமஞ்சனம் செய்வித்தாலோ தளிகை பண்ணினாலோ தோசை வேணும்னு சொன்னா மடைப்பள்ளியிலிருந்து பண்ணி வரும். அந்தச் சுவையே தனி. சின்ன வயசில் அப்பா அழகர் கோயில் போறச்சே எல்லாம் வாங்கிண்டு வருவார். நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் அழகர் கோயிலுக்கு முத்ல் முதல் போனது கல்யாணம் ஆனதும் ரங்க்ஸோடத் தான்! :))) அப்பா அனுமதித்ததில்லை. :(

  பதிலளிநீக்கு
 41. அழகர் கோவில் தோசை நான் சுவைத்ததில்லை, இப்போதுதான் கேள்வியே படுகிறேன்... ம்ஹ்ம்.... என்ன மதுரைக் காரன் நான்!

  பதிலளிநீக்கு
 42. போட்டாச்சு படங்களோடு. :)) அழகர் கோயிலுக்கு இப்போப்போனீங்களே அப்போக் கூடவா தெரியலை! :( பிரசாத ஸ்டாலில் பிடுங்கி எடுப்பாங்களே, தோசை வாங்கிக்கோ னு/

  பதிலளிநீக்கு
 43. திருவரங்கத்தில் கூட பெருமாளின் பிரசாதமாக ”தோமாலை தோசை” தருவார்கள். பிரசாத கடைகளிலும் கிடைக்கும். கனமாக இருக்கும். இதற்கும் நிறைய ரசிகர்கள் உண்டு இங்கே....:)) எனக்கு ம்ஹூம்ம்ம்ம்...:)

  பதிலளிநீக்கு
 44. அழகர்கோயில் தோசை கிட்டத்தட்ட நம்ம கோமதி அரசு சொன்ன கறுப்பு உளுந்து தோசை தான். ஆனால் கோயிலில் நிவேதனத்துக்கு என்பதால் புழுங்கலரிசி சேர்ப்பதில்லை. அதோடு சுக்கும், மிளகும் சேர்த்திருப்பார்கள். தோசை கனமாக முறுகலாக இருக்கும். தொட்டுக்கக் கோயில் மடைப்பள்ளியிலேயே பண்ணின புளிக்காய்ச்சல் கிடைச்சால் விசேஷம்! :)))

  என் அப்பா, அம்மா சொன்னபடி அங்கே வரும் கிராமவாசிகள் காணிக்கையாகச் செலுத்தும் தானியங்களை எல்லாம் ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்கனு சொல்லிக் கேட்டிருக்கேன். இன்றைய நாட்களில் பச்சரிசியும் கறுப்பு உளுந்தும் தான்னு கேள்வி. இதையே வீட்டில் செய்வதானால் பாதிக்குப் பாதி புழுங்கலரிசி போட்டுப் பெருங்காயமும் சேர்ப்பார்கள். கோயிலில் பெருங்காயம் சேர்க்கக் கூடாது என்பதால் போட மாட்டார்கள். காரத்துக்கு மி.வத்தலும் போட மாட்டார்கள். மிளகு, சுக்கு தான். :))))

  பதிலளிநீக்கு
 45. தயிர் ரசம் எல்லாமே தோசைக்கு சாப்பிடுவதுண்டு. மோர்க்குழம்பும் உசிலியும் ட்ரை பண்ணிப்பாருங்க சூப்பரா இருக்கும்.

  மொச்சைக்கொட்டைக் கத்திரிக்காய் குழம்பும்கூட. ஆனா இதுக்கு ஊத்தப்பம்தான் பெஸ்ட்.

  எங்க குடும்பமே ஒரு தோசை விரும்பி.. தினம் இரவு உணவு தோசைதான். மாசத்துல 27 நாளுக்காச்சும்.. :) படிச்சிட்டு ஒரே ஜொள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!