Tuesday, March 22, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: புது பைக் வேண்டும்


எங்களின் 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இந்த வாரம் நண்பர் ஆர் வி சரவணன் அவர்களின் படைப்பு வெளியாகிறது.  நன்றி நண்பர் சரவணன்.

நண்பர் ஆர் வி சரவணனின் தளம் குடந்தையூர்.  குடந்தைக்காரர் என்பதால் ஊர்ப் பாசத்தில் வலையின் பெயரில் தன ஊரின் பெயரையே வைத்து விட்டார்.

குறும்படங்கள் இயக்கி இருக்கிறார்.  வாசிப்பைச் சுவாசிப்பவர். எங்கள் ப்ளாக்கின் மௌன வாசகர்.    நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர் திரு கே. பாக்யராஜின் அறிமுகம் பெற்று அவரின் அறிமுகத்தைப் பெற்று விட்டவர்.


அவரிம் இந்த, தனது படைப்பைப் பற்றிக் கேட்டபோது அவர் சொன்னது :

=======================================================

நண்பர் ஸ்ரீராம் சார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் எங்கள் ப்ளாக் தளத்தில் கேட்டு வாங்கி போடும் சிறுகதை பகுதியில் நீங்கள் வெளியிட விரும்பி கேட்டிருந்த சிறுகதையை இத்துடன் அனுப்பியுள்ளேன். 


கதைக் கரு உருவான விதம்.எங்கள் உறவினர் பெண் ஒருவர் தன் கணவர் பைக் வாங்கி தர சொல்லி நச்சரிப்பதாக எங்களிடம் சொன்னார். நான் அவரிடம் இப்படி செய்து பாருங்களேன் என்று ஒரு யோசனை தெரிவித்தேன். அந்த யோசனை நன்றாக இருப்பதாக தோன்றவே அதை கற்பனையின் துணை கொண்டு ஒரு சிறுகதையாக்கினேன். இதை எனது குடந்தையூர் தளத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியிட்டேன். வலைத்தள நண்பர்கள் பலரும் பாராட்டினர்.

திரு. கே. பாக்யராஜ் அவர்களிடம் நான் எழுதிய பதிவுகள் சிலவற்றை அவர் படிக்க வேண்டும் என்பதற்காக ஆர்வமுடன் கொடுத்திருந்தேன். அதில் இடம் பெற்ற 2 சிறுகதைகளில் இதுவும் ஒன்று. அவர் இதை படித்து விட்டு என் செல் நம்பர் வாங்கி போன் செய்து என்னை பாராட்டியது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் என்று சொல்லலாம்.

புது பைக் வேண்டும் என்ற இந்த சிறுகதை தங்களின் தளத்தில் வெளியாவதில் மகிழ்ச்சி. தங்களின் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி .  பாக்யாவில் வெளியான பக்கத்தையும் ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளேன்.


அதில் பெயர் பாரதி சரவணன் என்றிருக்கும்.அது எனது கல்லூரி காலத்து புனைப்பெயர். அந்த பெயரிலேயே எனை அழைத்த பாக்யராஜ் அவர்கள் அந்த பெயரிலேயே சிறுகதையையும் வெளியிட்டார்.

==========================================================


சிறுகதை இங்கே


புது பைக் வேண்டும்
 ஆர் வி சரவணன் 

உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும். இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள் குமைந்தார்கள். என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள் யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.  வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.

அம்மா, "இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு செலவு பண்ணனும்  உன் அக்கா வீட்டுக்காரர்இருக்கார்   மூத்த மாப்பிள்ளை.அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்"


"இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு   அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க   அவங்களுக்கு கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே இருக்க முடியுமா னு சொல்றாங்க"


" கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே உமா
பின்ன எப்படி அவங்க கேட்கலாம் " இது அப்பா


" அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்   அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்"


"இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா "  இது அக்கா


"என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா"


"மாப்பிள்ளை என்ன சொல்றார்."  இது அப்பா


"என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்   நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு அசிங்கமா இருக்கு   ஒரு பைக் வாங்கி தர கூட உங்க வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்."


"முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே"


"வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்"


"அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு எடுத்து கொடுப்பே போலிருக்கு " இது தங்கை


"சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு தான் தெரியும் உனக்கென்ன"


வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம் செலுத்தி வாங்கி கொடுத்தார்.


உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம் பல்

"பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு மனசு வந்துதே உங்கப்பாவுக்கு "என்றார் மாமியார் பெருமூச்சுடன்


"கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க" என்று சொன்னார் மாமனார்.


உமாவின் கணவன் சந்தோசமாய் " வா உமா போயிட்டு வரலாம்" என்றான்.


"உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க"


"ஏன் அப்படி சொல்றே"


"எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே...."


"உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் "


என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும் அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.


ஆர்.வி.சரவணன்

38 comments:

'நெல்லைத் தமிழன் said...

நான் எப்போவும் திங்கக் கிழமை பதிவு பார்க்க வருவேன். சென்ற வாரத்தில் வெளியூர் பயணம். அதுனால இன்னும் போன திங்கக்கிழமை பதிவு பார்க்கலை. நேற்றும் இன்றும் பார்த்தால் இந்த வார திங்கக் கிழமை பதிவு காணோம்.. என்ன ஆச்சு? ஒரு தடவை விட்டால், தொடர்ந்து எழுதுவது சோம்பேறித்தனமாயிடும்.

கோமதி அரசு said...

நல்ல கதை

கோமதி அரசு said...

சரவணன் அவர்களின் குறும்படங்கள் பார்த்து இருக்கிறேன் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக்கதை மிகவும் அருமையாக உள்ளது.

//"உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம்"//

நல்ல சாட்டையடியாக உள்ளது.

//தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும் அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.//

முடிவு வரிகளில் ஓர் தனிச்சிறப்பு உள்ளது.

கதாசிரியருக்கு என் பாராட்டுகள். படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரு. கே. பாக்யராஜ் அவர்கள் நடித்த ‘சின்ன வீடு’ என்ற படத்தில் இதுபோல ஒரு காட்சி வருகிறது. மிகவும் நகைச்சுவையாகவும், யோசிக்க வைப்பதாகவும் இருக்கும்.

Ramani S said...

அருமையான கதை
எதிர்பாராத ஆயினும் மிகச் சிறப்பான முடிவு
நல்ல கதையை வாங்கிப் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

mageswari balachandran said...

நல்ல கதை,, வாழ்த்துக்கள்,

கடைசி முடிவை அங்கேயே சொல்லியிருக்கலாம், அப்படிச்சொல்லி இருந்தால் வாயாடி, அடங்காப்பிடாரி, சரியா வளர்க்கல, ம்ம்,,

கதைதானே,, வாழ்த்துக்கள்,,

KILLERGEE Devakottai said...

நச் என்று கடைசி வசனம் ஸூப்பர் சரவணன் சார் வாழ்த்துகள்

ஜீவி said...

உரையாடல் நேர்த்தி சரவணன் சார். அதுவும் கேள்வியில் வரும் வார்த்தைக்கு எதிரான வார்த்தை பதிலிலும் வருவது ரொம்பவும் அழகாக இருந்தது. இது தான் கே.பி. சாருக்கும் பிடித்திருக்கும். .

உதாரணமாக:

" கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே உமா பின்ன எப்படி அவங்க கேட்கலாம் " இது அப்பா
" அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம் அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்"
"இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா " இது அக்கா
"என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா"

(முதல் கேள்வியில் பேசவே இல்லையே என்பதற்கான பதிலில் ஆயிரம் பேசலாம் -- என்றும்
இரண்டாவது கேள்வியில் பொண்ணு கல்யாணத்துக்கு நிக்குதுமா என்பதற்கான பதிலில் கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா.. என்றும்.
செம வசன டச்! முடிவில் அது உக்கிரமாக வெடிக்கிறது. வாழ்த்துக்கள், சரவணன் சார்!

வல்லிசிம்ஹன் said...

இது போலப் பெண்வீட்டாரைக் கொடுமைக்குள்ளாக்கும் மாப்பிள்ளைகள் படிக்க வேண்டிய கதை. வை.கோ சார் சொன்னபடி சின்னவீடு படம் நினைவுக்கு வருகிறது. நல்லதொரு படைப்பு. நன்றி எங்கள் ப்ளாக்.

Bagawanjee KA said...

சரியான சாட்டை அடி ,இதை கொடுத்து இருக்காவிட்டால் கார் கேட்டிருப்பார் :)

geethasmbsvm6 said...

முடிவு அருமை. நச்சென்ற முடிவு. நேத்து "திங்க" நிறையத் தரம் வந்து பார்த்தேன். ஒண்ணும் கிடைக்கலை! :)

ரூபன் said...

வணக்கம்
ஐயா
கதை மிக அருமையாக உள்ளது இறுதியில் முடித்த விதம் சிறப்பு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பரிவை சே.குமார் said...

கதை அருமை சரவணன் அண்ணா...
வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

கடைசியில் கணவனிடம் பேசிய வசனத்தை முதலிலேயே பேசி அப்பாவை செலவிலிருந்து தப்பிக்க வைத்திருக்கலாம். அவர் வாங்கிக்கொடுத்த பைக் வேஸ்ட் தானே?
ஆனால் அப்படியெல்லாம் நடந்திருந்தால் இந்தக் கதையை எழுதியே இருக்கமாட்டார் கதாசிரியர். நாமும் படித்திருக்கவும் முடியாதே!
கதையின் நோக்கம் இப்படியெல்லாம் யோசிக்க வைப்பதுதான், இல்லையா? அதில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு சரவணன். நல்வாழ்த்துகள்!

மோகன்ஜி said...

ுரையாடல்கள் கச்சிதமாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள் சரவணன் சார்!

அப்பாதுரை said...

வேறு வித முடிவை எதிர்பார்த்தேன்.. இது நன்று.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முடிவு. பாராட்டுகள் சரவணன்.

காமாட்சி said...

வீட்டுக்காரரை திருப்தி படுத்தினால்தான் வாழ்க்கை.இது ஒருகாலம். இப்போதானால்,கையில் வேலை இருந்தால் பை சொல்லிவிடுவார்கள். அல்லது எப்போதோ லோன்போட்டு வண்டி வாசலில் நின்று கொண்டிருக்கும்.காலம் மாறிவிட்டது

Anandaraja Vijayaraghavan said...

அருமை சரவணன் சார்!

r.v.saravanan said...

எங்கள் பிளாக் வலைத்தளத்தில் எனது இந்த சிறுகதையை வெளியிட்டு ஊக்கம் தந்த ஸ்ரீராம் சார் அவர்களுக்கு நன்றி. கருத்துரையிட்டு பாராட்டிய வலைத்தள நணபர்களுக்கும் நன்றி

r.v.saravanan said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முடிவு அருமை. ஆலோசனையை சிறப்பான கதையாக்கியவிதம் பாராட்டுக்குரியது

r.v.saravanan said...

நன்றி கோமதி அரசு

r.v.saravanan said...

நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.

r.v.saravanan said...

நன்றி ரமணி சார்

r.v.saravanan said...

நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்

r.v.saravanan said...

நன்றி கில்லர்ஜி சார்

r.v.saravanan said...

உரையாடல்களை உன்னிப்பாக கவனித்து சொல்லியிருக்கிறீர்கள் ஜி.வி. சார். நன்றி மிக்க மகிழ்ச்சி

r.v.saravanan said...

நன்றி வள்ளி சிம்ஹன்

r.v.saravanan said...

நன்றி பகவான்ஜி

r.v.saravanan said...

நன்றி கீதா சாம்பசிவம்

r.v.saravanan said...

நன்றி ரூபன்
நன்றி பரிவை சே.குமார்
நன்றி ரஞ்சனி நாராயணன்
நன்றி மோகன்ஜி சார்
நன்றி அப்பாதுரை சார்
நன்றி வெங்கட் நாகராஜ் சார்
நன்றி காமாட்சி
நன்றி கோவை ஆவி
நன்றி முரளிதரன் சார்

G.M Balasubramaniam said...

வளவளவென்று நீட்டி முழக்காமல் கச்சிதமாய் முடித்து விட்டது நன்று

kannan kanna said...

2010 ஆம் ஆண்டு நீங்கள் வெளியிட்டதை இப்போது தான் பார்க்க நேர்ந்தது மன்னிக்கவும்.அருமையாக உள்ளது சரவணன் சார்

HVL said...

நறுக்கென்று சுருக்கமாய் முடிந்த கதை. வாழ்த்துகள் சரவணன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனது இனிய நண்பர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய இக்கதையை முன்பே படித்திருக்கிறேன்.
ஒரு நடுத்தர வர்க்க குடும்ப சூழலைக் கண் முன் கொண்டு வந்தார் சிறப்பாக, எனலாம்.
உமாவின் கடைசி வரி வார்த்தை ஒவ்வொன்றும் செமை அடி!

Thulasidharan V Thillaiakathu said...

இன்றுதான் நம்ம சரவணன் சாரின் கதையைப் படிக்க முடிந்தது. நாங்கள் வலைப்பக்கம் வர முடியாத அந்த நாட்களில் வந்திருக்கிறதா...இப்போதுதான் மிஸ் ஆன பதிவுகளைப் படித்து வரும் போது பார்த்தால் நம்ம சரவணன் சார்..சரவணன் அவர்களின் கதைகள் எல்லாமே நடுத்தரக் குடும்பங்களின் பிரச்சனைகள், மன உணர்வுகள் பிரதிபலிப்புகளாக இருக்கும். வாழ்த்துகள் மீண்டும்..

கதை அருமை. அதுவும் வசனங்கள் நச்! எப்போதுமே அப்படித்தான் இருக்கும்...இறுதி முடிவும் நச்...(கீதா: முடிவு நச் என்றாலும் நான் வேறு ஒரு முடிவை எதிர்பார்த்தேன். ஏனென்றால் நான் ஒரு கதை எழுதி வைத்திருந்தேன்/இருக்கிறேன். கதைக்கரு கிட்டத்தட்ட இது போலத்தான். எழுதி 2 வருடங்களுக்கும் மேலாகிறது. தளத்தில் வெளியிட வேண்டி...எங்கு சேமித்துவைத்தேன் அழிந்துவிட்டதா என்று தெரியாமல் எல்லா ட்ரைவ்களிலும் பென் ட்ரைவ் உட்பட தேடினேன்...கொண்டிருக்கின்றேன்...தலைப்பு வைக்காததால் தேடுவது சிரமமாக இருக்கிறது...கிடைத்தால் போடுகிறேன்..)

சரவணன் சார் வாழ்த்துகள்! எங்கள் நல்ல நண்பர். நாங்கள் எல்லோரும் ஒரு குழுவாயிற்றே...குறும்படக் குழு. அவர் மேலும் அவரது முயற்சிகளில் எல்லாம் வென்றிட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!