இந்த வார 'கேட்டு வாங்கும் கதை' பகுதியில் எங்கள் பதிவுலகப் பயணத்தில் எங்களுக்கு முதல் முதல் நண்பர் ஆன அப்பாதுரையின் படைப்பு.
அவரின் தளம் சற்றே முதிர்ந்த வாசகருக்கானது! மூன்றாம் சுழி.
வெண்பா எழுதுவார். நசிகேத சரித்திரம் எழுதுவார். அமானுஷ்ய படைப்பொன்றை வெளியிடுவார். சகலகலாவல்லவர். தனி ஒரு தளத்தில் ஒரு சரித்திரக்கதை எழுதி ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டார் (என்று நினைக்கிறேன்) . சமீபகாலமாக பதிவுலகம் பக்கம் அதிகம் காண முடியவில்லை அவரை!
=========================================================================================
பல
வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழை நெருங்கிய புதிதில் எழுதிய கதை.
குங்குமத்திற்கு அனுப்பிக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல்
பிரசுரமானது. (சிகாகோவில் குங்குமம் வார இதழ் வாங்க டெவன் தெருவுக்கு எவன்
சார் போறது?) அப்போதைய குங்குமம் ஆசிரியர் (இப்போதைய இன்னும் பெரிய
பொறுப்புள்ள) குமரன் அவர்கள் பிரசுர விவரங்களுடன் எனக்கு பல இமெயில்கள் அனுப்பி என் முகவரி கேட்டிருந்தார். இமெயில்களை ஒரு
மாதம் போல் கவனிக்காமல் இருந்து திடீரென்று ஒரு நாள் பார்த்தால்...
பரவசம்! என் நிலமையை எடுத்துச் சொல்லி அசடு வழிந்து தொடர்பு
ஏற்படுத்திக்கொண்டேன்.
இந்தக்
கதையை இங்கே பகிர்ந்துகொள்வதில் ஒரு பொருத்தம். பிரசுரமான கதை அனுப்பச்
சொல்லி எனக்கு பல இமெயில்கள் அனுப்பியிருந்தார் ஸ்ரீராம். அவர் அனுப்பிய
எந்த இமெயிலையும் நான் கவனிக்கவில்லை. கடைசியில் நொந்து நூலாகி ஒரு இமெயில்
அனுப்பியிருந்தார் - அதைத் தற்செயலாகக் கவனித்தேன். அவசரமாக பதில் இமெயில் அனுப்பி அசடு வழிந்து நிலமையை எடுத்துச் சொல்லி மீண்டும் அசடு வழிந்து... தொடர்பைத் தக்க வைத்துக் கொண்டேன்.
"Áñ½¢ø ¿Ã¸õ" என்றிருந்ததை "மண்ணில் நரகம்" என மாற்றி கதையை இங்கே வழங்க முடிந்ததற்குக் காரணமாக இருந்த 'கண்டுபிடி' தமிழ் எழுத்துரு மாற்றிக்கு நன்றி. பொறுமையுடன் ஒரு வரி விடாமல் வாசிக்கப் போகும் அன்பர்களுக்கு நன்றி. பகிரக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி, எங்கள் பிளாக்.
கதையின் பிரசார வரியைத் தவிர மற்றதை அப்படியே குங்குமம் பத்திரிகையில் (ஆகஸ்டு 2009) வெளியிட்டிருந்தார்கள். இதோ கதை.
------------------------------ -------
=============================================================================
அப்பாதுரை
"மண்ணில் நரகம், திருமணம்" - யூரிபெட்ஸ், கி.மு 300
சீக்கிரமே
வந்துவிட்டான் பிலிப். நண்பர்களுக்காகக் காத்திருக்க மனமில்லாமல் ஒரு 32
அவுன்ஸ் கின்னஸ் பீர் தரவழைத்தான். நுரை பொங்க வந்த குளிர்ந்த பீரை ஒரு
கணம் கண்ணால் கொஞ்சிவிட்டு, உதடுகளை வலிக்காமல் கண்ணாடி முனையில் வைத்து
மிகுந்த எதிர்பார்ப்புடன் மெள்ள உறிஞ்சினான். குளிரமுதமாய் தொண்டையை
நனைத்து, வயிற்றில் இறங்கி மனதைச் சிலுப்பிய மதுவின் முதல் விழுங்கில்
லேசாய் உலகை மறந்தான். ஏமாற்றமில்லாத பீர். தன் திருமண வாழ்வும் அப்படி
அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்தான்.
போய்ல்ஸ்டன்,
பெர்க்லி தெருக்கள் கூடும் முனையில் இருக்கும் ஐரிஷ் மதுக்கூடம் ஒ'ஹாரா.
வெள்ளிக்கிழமை மாலையின் வழக்கமான கூட்டம். வியாபார சர்ச்சையிலிருந்து
குடும்பச் சிக்கல் வரை ஒ'ஹாரா மதுக்கூடத்தில் பார்க்கவோ கேட்கவோ முடியாதது,
எதுவும் இல்லை. அன்றைக்கு மட்டும் யாராவது பார்த்திருந்தாலோ
கேட்டிருந்தாலோ, பாதகமான திட்டம் ஒன்று உருவானது தெரிந்திருக்கும்.
உள்ளே
நுழைந்த மூவரும் பிலிப்பை நெருங்கினர். "டூட், எங்களுக்காகக்
காத்திருக்கக் கூடாதா?" என்றபடி பிலிப்பின் கையிலிருந்த பீர் கோப்பையைப்
பிடுங்கி, ஒரு வாய் விழுங்கி விட்டுத் திருப்பிக் கொடுத்தான் ரகு.
அவர்களைப்
பார்த்து அருகில் வந்து புன்னகையும் மார்பிளவும் காட்டிவிட்டு "என்ன
வேண்டும்?" என்ற பார் பெண்ணிடம், "கின்னஸ்" என்றான் ரகு.
"ஜானி வாகர் ப்ளூ" என்ற சுந்தரின் முகத்தில் சுரத்தில்லை.
"க்ளென்மொராஞ்சி,
நீட்" என்றான் ஆடம். தலையசைத்து அவர்களிடமிருந்து விலகிச் சென்ற பெண்ணின்
பின்னே பார்வையைச் செலுத்தியபடி, "சுந்தர், ஏண்டா முந்தா நாள் சாலட்
மாதிரி இருக்கே?" என்றான்.
"மூட்
சரியில்லடா. ரமாவோட சண்டை. தினம் பொழுது விடிஞ்சா ஏதாவது நச்சு...
இன்னிக்கு நேத்திக்கு நடக்கிற சண்டையில்லைடா, ஆறு வருஷமா இதே கதை தான்.
நிம்மதியே இல்லை. திருமண வாழ்க்கையை ரொம்ப மிகைப்படுத்தி வச்சிருக்கோம்"
என்றான் சுந்தர்.
அவர்கள்
கேட்ட மதுபானங்களைக் கொண்டு வந்து வைத்தவள், "பதினாறு டாலர், டியர்"
என்றாள். ஆடம் தன் அமெக்ஸ் கார்டை அவளிடம் கொடுத்தான். வாங்கிக் கொண்டு,
அவன் பெயரில் கணக்கெழுதச் சென்றாள்.
"டு சுந்தர்'ஸ் பிட்ச்" என்று தன் விஸ்கிக் கோப்பையை உயர்த்திய ஆடம், "பாடம்ஸ் அப்" என்றான்.
நால்வரும்
ஒரே மூச்சில் குடித்துவிட்டு காலி கோப்பையைக் கீழே வைத்தனர். "இன்னொரு
ரவுண்ட்" என்றனர், பார் பெண் கொண்டு வந்ததும், மறுபடி "பாடம்ஸ் அப்"
என்றான் ஆடம். ஒரே மூச்சில் கோப்பைகள் காலி. "ரிபீட்" என்றனர். மறுபடி
கொண்டு வந்தாள். மறுபடி "பாடம்ஸ் அப்", ஒரே முச்சில் காலிக் கோப்பை,
"ரிபீட்".
சடங்கு
போல் எல்லாம் முடிந்ததும் அமைதியாக இருந்தனர். மதுவின் போதை ரத்த
நாளத்தில் எழும்பி, முகமெல்லாம் பரவி, மூளையை அணைத்தது. வாய் தனக்குத்
தானே முத்தம் கொடுத்துக் கொண்டது. ரகுவும் ஆடமும் ஆளுக்கொரு சிகரெட்
பற்றவைத்துக் கொண்டனர். பரவிச் சென்ற சிகரெட் புகையைத் தொடர்ந்து
சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தி, அருகே தடுப்புச் சுவரோரம் காலியாக
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு "அங்கே போகலாம்" என்றான் ரகு. "அடுத்த
ரவுண்டை அங்கே கொண்டு வா" என்று பார் பெண்ணிடம் சொல்லி நகர்ந்தனர்.
லேசாகத் தடுமாறி நடந்து வந்து சொகுசு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்
கொண்டு உட்கார்ந்தனர். தடுப்புச் சுவருக்கு அப்பால் கேட்டுக் கொண்டிருந்த
பேச்சுக் குரல் ஓய்ந்து, அமைதியானது.
"விஸ்கி உள்ளே போன பிறகுதான் உலகமே தெளிவா தெரியுதுடா" என்றான் ஆடம்.
"நாள்
முழுக்க நாயா உழைச்சுட்டு வீட்டுக்கு வந்தா, வீட்டு வேலைகளில் நான்
பங்கெடுத்துக்கறதில்லைனு புலம்பறா" என்ற சுந்தர், பிலிப்பின் கையிலிருந்த
மார்ல்பரோ ஒன்றை உருவிப் பற்ற வைத்து, பொறுமையுடன்
மூச்சிழுத்தான். சூடான மூச்சாகக் கொஞ்ச நேரம் உள்ளடங்கிய சிகரெட் புகை,
மெள்ள வாய் வழி வெளியேறியதை ரசித்தான். "கேட்டா, நான் ரொம்ப
கட்டுப்படுத்துறவனா இருக்கேன்னு சொல்றா". நாக்கு நுனியில் புகையிலைச்
சுவையை அனுபவித்தபடி தொடர்ந்தான். "சரி, நான் வீட்டையும் குழந்தைகளையும்
பார்த்துக்கறேன், நீ போய் சம்பாதிச்சுட்டு வான்னு சொன்னா, 'படிச்சு பத்து
வருஷமாச்சு, இப்ப எனக்கு எவன் வேலை கொடுப்பான்'னு சாக்கு சொல்றா.
இந்தியாவுல இருந்த வரைக்கும் ஒரு பிரச்னை இல்லை. இங்கே வந்த பிறகு எல்லாம்
மாறிப் போச்சு. நிம்மதியே இல்லைடா"
சிகரெட்
முனையில் கூடியிருந்த சாம்பலைத் தட்டி, இன்னொரு முறை உள்ளிழுத்துவிட்டு
பிலிப்பிடம் கொடுத்தான். "குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க மாட்டேன்
என்று எப்பவும் கழுத்தறுக்கிறாளே என்று, போன சனி ஞாயிறில், ரமா, நான்
குழந்தைகளைப் பார்த்துக்குறேன், நீ பிலிப் மனைவியோட ஸ்கீ போய்வானு
சொன்னேன். உடனே 'உனக்கு குழந்தைகளைப் பார்த்துக்கத் தெரியாது..
நானில்லாட்டா அவங்க சாப்பிட மாட்டாங்க, இதைப் பண்ணு, அதைப் பண்ணு
அப்பிடி'னு ஒரே நச்சு. எனக்கு ஆத்திரம் வந்து, ஒண்ணு நீயே குழந்தைகளைப்
பாத்துக்க, இல்லை நான் பாத்துக்கறேன். ஆனா இப்படித்தான் குழந்தைகளைப்
பார்த்துக்கணும்னு எனக்கு அறிவுரை தராதேனு நான் சொன்னதும், 'நீ வேலைக்குப்
போய் சம்பாதிக்கத்தான் லாயக்கு, குடும்பப் பொறுப்பு கிடையாது, அப்படி
இப்படி'னு தேவையில்லாத சண்டையைத் துவக்கிட்டா. டிப்ரசிங். இதுக்கு ஏதாவது
ஒரு வழி பண்ணனும்டா" என்றான்.
"அரை
வேக்காடு" என்றான் பிலிப், புகைத்தபடி. "இந்திய, சீனக் குடும்பங்களில்
இதை நிறையவே பார்க்கிறேன். சொந்த நாட்டுல இருந்த வரைக்கும் பண்பாடு
பலாக்கொட்டைனு ஏதாவது ஒரு முக்காடு போட்டுக்கிட்டு, புருஷன் சொன்னது தான்
வேதம்னு இருக்கிறவங்க, அமெரிக்கா வந்ததும் இங்கே ஓரளவுக்குப் பரவலா
கடைப்பிடிக்கப்படுகிற ஆண்-பெண் சமத்துவக் கொள்கைகளை மேலெழுந்தவாரியாக
ஏத்துக்கிட்டு கஷ்டப்படுறாங்க. கணவனோட வாக்குவாதம் செய்வது தான்
தனித்துவம், சமையலறையில் உதவி பெறுவது தான் சமத்துவம்னு நினைக்கிற நிறைய
மனைவிகளைப் பார்க்கிறேன். தனித்துவமும் சமத்துவமும் சமையலறைக்கு அப்பாலும்
போகணும் என்கிறதை நீங்க மறந்துடறீங்க. அதனால் தான் இப்படி சண்டை.
குடும்பப் பராமரிப்பில் மட்டுமில்லாமல் இங்கே படிப்பு, வேலை, நட்பு என்று
வாழ்க்கையின் தினசரி நடைமுறையில், யு நோ, உணர்ச்சியிலிருந்து புணர்ச்சி
வரைக்கும், இன் எவ்ரிதிங், ஆண்-பெண் தனித்துவமும் சமத்துவமும்
கலந்திருக்கு. இட்ஸ் எ பெர்வேசிவ் பேகேஜ்... உதிரியா எடுத்துப் பார்த்தா
உருப்படாம போயிடும். உங்க பெண்களும் சரி ஆண்களும் சரி, அதைப்
புரிஞ்சுக்கலை..." என்றான்.
"வோ!. டைம் ஔட்" என்றான் ஆடம். "பிலிப், கல்சுரல் எக்ஸ்பெர்ட் கணக்கா பேசறியே, உங்க வீட்டுல மட்டும் என்ன வாழுதாம்?"
"அவன்
வீட்டுல ஆறு, என் வீட்டுல அரை டசன்.. அவ்வளவுதான் வித்தியாசம்" என்றான்
பிலிப். "ஜீனா என்னை ஏமாத்தறானு நினைக்கிறேன். எங்க கல்யாணம் நடந்த முதல்
மூணு மாசம் சந்தோஷமா இருந்தோம், அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
விலகிட்டோம். காதலிச்ச காலத்தில் இருந்த எதிர்பார்ப்பும் நெருக்கமும்
கலயாணமானதும் காணாம போயிட்டுது. எனக்குக் குடும்பம் வேண்டும். அவ என்னமோ
தனியா தொழில் நடத்தி மிலியனேரானதும் தான் குழந்தை குட்டி என்கிறா. இந்த
நாலு வருஷத்துல, இருந்த சேமிப்பையெல்லாம் அவளோட உருப்படாத திட்டங்களில்
போட்டு ஓட்டாண்டியானது தான் மிச்சம். இப்ப என்னடானா, நான் அவளுக்கு
சப்போர்டிவா இல்லைனு தினம் தகராறு. அவளுக்கு நான் எந்த விதத்திலே ஆதரவாக
இல்லை? என்னோட வேலையை மூணு முறை மாத்தியிருக்கேன் அவளுக்காக. இப்போ என்
வேலையில் ஒரு நிரந்திர வளர்ச்சியே இல்லாம போயிடுச்சு. அவ தொழில் வளரணுமேனு
நான் என்னுடைய ஆசைகளையெல்லாம் ஒதுக்கி வச்சேன். அவளோட பிசினசில் பாதி
நேரம் வேலை பார்த்தேன். எனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் அவளுக்கு
அறிமுகப்படுத்தினேன். இதுக்கு மேலே என்ன சப்போர்ட் வேணும்னு கேட்டா,
'கடமைக்காக செய்யறே, என்னை மதிச்சு என் வெற்றியை நினைச்சு செய்யலை'னு ஏதோ
சொல்றா... எனக்கு என்னமோ அவ வேறு யாரையோ சந்திக்கறானு தோணுது" என்றான்
பிலிப்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரகுவைப் பார்த்து ஆடம், "ரகுமைஸ்டர், உங்க வீட்டுல என்ன? விவாகரத்தா இல்லை சமாதானமா?" என்றான்.
"இங்கேயும்
காய்ந்த புல் தான். ரெண்டு வீட்டுலயும் பாத்து பாத்து வச்ச கல்யாணம்,
ரெண்டு பேருக்குமே வெறுப்பா இருக்குபா. பொருத்தமில்லாத திருமணம்னு சொல்றா
மீரா. பெண் பார்க்க வந்தப்பவே என்னைப் பிடிக்கலைனு சொல்ல வேண்டியது தானேனு
கேட்டா, 'எங்கப்பா அம்மா மனசு நோகாம நடக்கணும்னு தான் ஒத்துக்கிட்டேன்',
பண்பாடு புளுக்குனு என்னவோ சொல்றா. என் கிட்டே என்ன குறை சொல்லு,
தீர்க்கப் பார்ப்போம்னு கேட்டா, அதுக்கும் நேரிடையா பதிலில்லை. 'ஆபீஸ்,
வீடு, சாப்பாடு, டிவி, படுத்தவுடனே பிடிவாத செக்ஸ், பிறகு குறட்டை, சனி
ஞாயிறில் கால்ப், லான்டரி, மறுபடி ஆபீஸ்... இதை விட்டா என்ன
சாதிச்சிருக்கே நீ, இந்தத் திருமணத்துலே?'னு கேட்கிறா" என்ற ரகு, நீண்ட
பெருமூச்சு விட்டான்.
"சரி,
என்ன செய்யணும் சொல்லுனு கேட்டேன். நாம டீசன்டா மனம் விட்டுப்பேசறது கூட
இல்லைனு சொல்றா. என்ன பேசணும்னு கேட்டா, அதெல்லாம் திட்டம் போட்டா பேச
முடியும், தானா வரணும்னு சொல்றா. சினிமா போகலாம்னு கூப்பிட்டா அந்த
சினிமா எனக்குப் பிடிக்காதுங்கறா. சரி, உனக்குப் பிடித்த சினிமா சொல்லுனு
கேட்டா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், அனாவசிய செலவுனு சொல்றா. டென்னிஸ்
விளையாடறியானு கூப்பிட்டா இத்தனை வயசுக்கு மேலே அரைச்சட்டை போட்டுக்கிட்டு
அது வேறேயாங்கறா. சரி, என்ன தான் செய்யலாம் சொல்லுனா... ஏன், நாம ரெண்டு
பேரும் பேசக் கூடாதானு கேக்கறா. என்ன இழவு பேசுறது...? பேசினா தான் சண்டை
வருதே? என் மேலே மட்டுமில்லாம தன் மேலேயும் ரொம்ப வெறுப்பா இருக்கா.
தினம் ஏண்டா வீட்டுக்குப் போகிறோம்னு இருக்கு" என்றான்.
விஸ்கியை
விரும்பி அருந்திக் கொண்டிருந்த ஆடம் மற்ற மூவரும் தன்னையே கவனிப்பதைக்
கவனித்து, "இருங்கடா, விஸ்கியை அனுபவிக்கலாம். பெண்டாட்டி கஷ்டம்
இருக்கவே இருக்கு" என்றான்.
விஸ்கியை
நிதானமாக முடித்துவிட்டு, "நான் அவளை ஏமாத்தி கல்யாணம்
செய்துக்கிட்டேன்னு, தானும் குழம்பிக்கிட்டு என்னையும் ஆறு வருஷமா நிதம்
சாவடிக்கிறா அனபெல்" என்றான் ஆடம். "நான் அவளோட கெரியரைக்
கெடுத்துட்டேன்னு என் மேலே தீராத கோபம். என்னுடைய வேலையை ஓட்டி நான் ஊர்
ஊராய், நாடு நாடாய் சுற்றினப்போ அவ வேலையை விடாம இங்கேயே
இருந்திருக்கலாம். அவதான் என் கூட வந்தா. பி.எச்டி படிப்பு கெட்டுப்
போகுதேனு அப்ப நினைக்காமல், இப்போ ஆறு வருஷம் கழிச்சு புலம்பித் தள்ளுறா.
சில சமயம்... அவ என்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்காளோனு தோணுதுடா"
"என்னடா சொல்றே?" என்றனர் அதிர்ந்து.
"சரியா
தெரியலை. கொஞ்ச நாளா என்னோட டூத் பேஸ்ட்ல என்னமோ கலந்திருக்கானு
தோணுது... ஏதோ கெமிகல்.. ஆர்செனிக்? என்னோட உடம்பு கூட லேசா அரிக்குது..."
"ரொம்ப போட்டிருக்கான், அதான்" என்றான் பிலிப்.
"இல்லைடா,
உண்மையைச் சொல்றேன். இன்னிக்கு இல்லை நாளை நான் இறந்துட்டா, அனேகமாக அது
அனபெல் கைவேலையாத்தான் இருக்கும்" என்ற ஆடம், திடீரென்று குரலை உயர்த்தி
"பெண்டாட்டி கொடுமையை ஒழிக்கணும், இல்லை பெண்டாட்டியை ஒழிக்கணும்" என்றான்.
"கத்தாதேடா"
என்று சுந்தர் அவனை அமைதிப்படுத்த முனைந்தான். "தெரிஞ்சு தானே கல்யாணம்
செய்துகிட்டோம்? பிரச்னையைத் தீர்க்கப் பார்க்காம, பெண்டாட்டியை
ஒழிக்கறதுல என்னடா பலன்?" என்றான்.
"திருமண
வாழ்க்கை நமக்கு லாயக்கில்லைடா. நினைச்சுப் பாருங்கடா. அஞ்சு வருஷத்துக்கு
மேலா பழகறோம்...ஒருத்தராவது, ஒரு நாளாவது, சந்தோஷமா மனைவியைப் பத்திப்
பேசி இருக்கமா? இதே புலம்பல் தானேடா தினமும்? நிம்மதியில்லாம
ஹை-ஸ்ட்ரெஸ் வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கோம். நாப்பது வயசுக்குள்ள
மாரடைப்பு வந்து சாகப் போறோம். இதனால யாருக்கு லாபம், யோசிங்க? நம்ம
மனைவிகளுக்குத்தான்."
"அவங்களுக்கு என்னடா லாபம்?"
"நாம்
ஒவ்வொருத்தரும் இரண்டு மிலியன் டாலராவது டெர்ம் பாலிசி எடுத்திருக்கோம்.
கொஞ்சம் கொஞ்சமா நம்மளைக் கொல்லத்தான் நம்ம மனைவிகள் இந்த மாதிரி
நடந்துக்கிறாங்க... சந்தேகமே இல்லை, இட்ஸ் எ மேரிட் விமன் கன்ஸ்பிரசி...
கூட்டா சேர்ந்து திட்டம் போட்டு செய்யறாங்கடா. நாம அதை முறியடிக்கணும்"
"டேய்...நீ வேறேடா..தீவிரமா போறே.. பிடிக்கலைனா விலக வேண்டியது தானே.. அதை விட்டு.."
"விலகினா,
பிரச்னை தீந்துடுமா? நல்லா யோசிச்சுப் பாருங்க. இருக்கிறதுல பாதிக்கு
மேலே பிடுங்கிட்டு, அத்தோட நிக்காம இன்னும் பத்து பதினஞ்சு வருஷத்துக்கு
மாசா மாசம் பணம் அழணும். நோய் நொடினா கவனிக்கணும். எதுக்காக இந்த கொடுமை?
நான் சொல்றேன், லெட்ஸ் ரிவர்ஸ் இட். எத்தனை நாள் இந்த மாதிரி
புலம்பிக்கிட்டே இருக்கப் போறீங்க? கிடைச்சது ஒரு பிறவி. கொஞ்ச நாளாவது
நாம நிம்மதியா இருக்க வேண்டாமா?"
"என்ன செய்யலாங்கறே?" என்றான் சுந்தர்.
"அவங்க
திட்டத்தை அவங்க மேலேயே திருப்புவோம். நம்ம மனைவிகளைக் கொன்னுட்டோம்னா,
நமக்கு அவங்க கிட்டேயிருந்து விடுதலை மட்டுமில்லை... போனஸ் மாதிரி
அவங்களுடைய இன்சூரன்ஸ் பணமும் கிடைக்கும். எல்லாம் திட்டம் போட்டு
வச்சிருக்கேன், ஒரு பிரச்னையும் இல்லை."
"உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு..போடா டேய்.. இதெல்லாம் நடக்கிற கதையா?" என்றான் பிலிப்.
"நடக்குற கதையா இருந்தா? திட்டத்தைச் சொல்றேன் கேளுங்கடா, கேட்ட பிறகு முடிவு பண்ணுங்க"
சொன்னான்.
நான்கு
பெண்களும் மதியம் மூன்று மணியிலிருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
இதுவரை ஆளுக்கு மூன்று டயட் பீர் சாப்பிட்டிருப்பார்கள். அவர்களை மெள்ளத்
தாக்கிக் கொண்டிருந்த மதுவின் போதையில் லயித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
"என்னடி சொல்றீங்க? சம்மதமா?"
"அனபெல், இது உனக்குத் தீவிரமா படவில்லையா?" என்றாள் ரமா.
"என்னை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கிட்டவனை சும்மா விடப் போவதில்லை"
"படிப்பைப்
பத்திப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொண்ட கணவர்கள் இந்தியாவில்
தெருவுக்கு நாலு பேர் இருக்காங்க, இது அவ்வளவு பெரிய விஷயமா?" என்றாள்
மீரா.
"படிப்பை
விடு. நான் அவனுக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கேன்? அவன் சில்லறை
படிப்புக்கு கிடைச்ச வேலையில் ஊர் ஊரா, நாடு நாடா சுத்தினப்போ என்னுடைய
சொந்த முன்னேற்றத்தை ஒதுக்கிவிட்டு அவன் பின்னாடியே நாய் மாதிரி போனேன்.
இப்போ என் முறைனு சொன்னா, என்னவோ பிச்சைக் காசு போடற மாதிரி பேசறான்.
இதை விடு. என்னை ஒரு பொருட்டாவே நினைக்கவில்லை அவன், இந்த திருமணத்தாலே
என்ன லாபம்னே தெரியலை"
"என்
வீட்டுல மட்டும் என்ன? இதேதான். எங்கப்பாவும் அம்மாவும் பார்த்துப்
பார்த்து சேர்த்து வச்சாங்க. தன்னோட பென்ஷன் பணம் எல்லாம் போட்டு, என்னவோ
அமெரிக்க மாப்பிள்ளைகிட்டே ராணி மாதிரி இருக்கப் போறேனு சொல்லி, என்னை
கல்யாணம் செய்து கொடுத்தாங்க. கொஞ்சம் கூட பொருத்தமில்லை. இதுக்கு பதிலா
நான் கல்யாணமே செய்து கொள்ளாமலிருந்திருக்கலாம். தினம் சண்டை. ஐ ஹேட்
ஹிம். உன் திட்டம் சரிதானோனு தோணுது" என்றாள் மீரா.
"நான்
இல்லாமல் பிலிப் கஷ்டப்படுவதைப் பார்க்கணும். அவன் கண் முன்னாலே நான்
வெற்றிகரமா தொழிலில் முன்னேறி ஒரு மிலியனேரா வந்தபிறகு, அவன் முகத்தில்
காறித் துப்பணும்னு வெறி தான்... இருந்தாலும்.." என்றாள் ஜீனா.
"அதெல்லாம்
சின்ன வெற்றிகள். நினைச்சுப் பாருங்கடி. அவங்க இறந்துட்டா நாம எல்லாருமே
சுதந்திரப் பறவைகள். யாருடைய உதவியும் இல்லாம நாம நினைச்சபடி வாழ்க்கையை
அமைத்துக் கொள்ள முடியும். ஆளுக்கு ரெண்டு மிலியனாவது கிடைக்கும். இது
ஒண்ணும் அவங்க பணமில்லையே - இன்சூரன்ஸ் பணம் தானே? அவங்க இறந்த பிறகு
எப்படியும் நமக்குக் கிடைக்கத்தானே போகுது? ஒரு பத்து பதினைந்து வருஷம்
முன்பாவே இறந்தால் என்ன குறை? இது என்ன, நாம தினம் நினைக்காத நிகழ்ச்சியா?
விபத்துல போயிட மாட்டாங்களானு அடிக்கடி நினைக்கிறோம். இதுவும் ஒரு
விபத்துனு வச்சுக்க வேண்டியது தான்."
"சுந்தருடன் தினம் தகராறு. நிம்மதியில்லைதான். இருந்தாலும் அவனைக் கொலை செய்யற அளவுக்கு..." என்றாள் ரமா.
"புலம்பலை
நிறுத்துவோம். அஞ்சு வருஷத்துக்கு மேலாக பழகறோம். ஒருத்தராவது, ஒரு
நாளாவது, சந்தோஷமா புருஷனைப் பத்திப் பேசி இருக்கமா? இதே புலம்பல் தான்
தினமும். இப்படியே விட்டா, நமக்கு நெர்வஸ் ப்ரேக்டௌன் தான் வரும்.
அமொ¢க்கா வந்து, பைத்தியம் பிடிச்சு ஒரு ஓரமா உட்கார விருப்பமா மீரா?
இன்னும் இருக்கிற வாழ்க்கையை சண்டை போட்டுக் கழிக்கிணுமா? இருக்கிற கொஞ்ச
நாளையாவது நமக்காக உபயோகிக்க வேண்டாமா?"
"மாட்டிக்கிட்டா?" என்றாள் ஜீனா.
"ஒரு
சிக்கலும் கிடையாது. நான் சொல்றபடி நடந்தீங்கனா, ஆறு மாசத்துல நம்ம
கணவர்கள் ஆஸ்பத்தி¡¢யே கதினு கிடப்பாங்க. எட்டு பத்து மாசத்துல
ஒவ்வொருத்தனா போயிடுவாங்க. ஒரு மாசமா இந்த திட்டத்தை சின்ன சின்ன தோதனைகள் செஞ்சு எல்லா
விதத்திலேயும் ஆராய்ஞ்சு பார்த்துட்டேன். பிரச்னையே இல்லை. நான்
கெமிஸ்ட்ரி பி.எச்டி என்கிறதை மறந்துடாதீங்க. என்னோட படிப்பு எனக்கு
என்னிக்காவது உதவும்னு தெரியும். என்ன சொல்றீங்க?"
"எனக்குப் பிடிச்சிருக்கு. மாட்டிக்கிட்டாலும் பரவாயில்லை, திருமணமும் ஒரு விதத்தில் சிறை தானே?" என்றாள் மீரா.
"நான் தயார்"
"நானும்"
"நாளைக்கு
இங்கே சந்திக்கலாம். என்னிக்கு என்னென்ன செய்யணும்னு டைம் டேபிள்
போட்டுக்கொண்டு வருகிறேன். சரி, நான் போகணும்" என்று எழுந்து சோம்பல்
முறித்த அனபெல், சட்டென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் கலவரம்.
"என்னடி?"
"ஷ்! தடுப்புச் சுவருக்கு அந்தப்புறம், நம் கணவர்கள்..! பாரி லிருந்து இறங்கி இந்தப் பக்கமா வராங்க" என்றாள் மெல்லிய குரலில்.
அவர்கள்
உட்கார்ந்திருந்த அதே வரிசையில் தடுப்புச் சுவருக்கு அந்தப்புறம்
நாற்காலிகள் இழுபடும் ஒலி கேட்டு ஓய்ந்தது. சுவருக்கு அப்பாலிருந்து
பேச்சுக்குரல் தெளிவாகக் கேட்டது.
அப்பாதுரை சாரின் விறுவிறு நடையில் அட்டகாசமான கதை
பதிலளிநீக்கு//"விஸ்கி உள்ளே போன பிறகுதான் உலகமே தெளிவா தெரியுதுடா"//
பதிலளிநீக்குவிஸ்கி உள்ளே போன பிறகுதான் இந்தக்கதையும் எழுதப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன். அதனால்தான் படிக்கும்போது கதையில் நல்ல ஒரு கிக் உள்ளது.
எப்படியோ ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்சனைகளும் விரைவில் ஒவ்வொரு விதமாகத் தீரப்போகிறது. இந்தச்சிறையிலிருந்து அந்தச்சிறைக்குப் போக உள்ளனர்.
பச்சை மிளகாயை நறுக்கென்று கடித்தது போல உள்ள கதையை அளித்துள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.
சொல்ல மறந்துட்டேன்.
பதிலளிநீக்குதிரு. அப்பாதுரை சாரை, நேரில் நான் சந்தித்ததைவிட, இப்போ இந்தப்படங்களில் அழகோ அழகாக மிகவும் இளமையாக உள்ளார்கள். கருகருவென்ற அவரின் முடிகள் என்னை அப்படியே சொக்க வைத்துவிட்டன. :)
அதற்கான காரணம் தெரியாமல் என் முடிகளை நான் பிய்த்துக்கொண்டு உள்ளேன். :(
அப்பாதுரையின் "டச்"சோடு கூடிய கதை! முடிவும் அப்பாதுரையின் பாணி! கேட்கவா வேண்டும்! இந்தக் கதைக் குங்குமத்தில் பிரசுரம் ஆகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்! :)
பதிலளிநீக்குபடுசரளமான நடை! அனாவசியமாக வர்ணனைகளில் நேரத்தை விரயமாக்காமல் விடுவிடுவென்று கதை சொல்லியிருக்கிற பாங்கு பிரமாதம். செம கிக்! :-)
பதிலளிநீக்குநவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
பதிலளிநீக்குஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
பதிவுகளுக்கு முந்துங்கள்
எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
நன்றி
தமிழ்BM
www.tamilbm.com
//அஞ்சு வருஷத்துக்கு மேலாக பழகறோம். ஒருத்தராவது, ஒரு நாளாவது, சந்தோஷமா புருஷனைப் பத்திப் பேசி இருக்கமா? //
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ் ! ஆஹா கொலைகார கூட்டணியா இருக்கே !இந்த கதையை படிச்சதும் என் மனசில் தோணினது அமெரிக்க வாழ்க்கைக்கும் ஐரோப்பிய வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ..!!
ஏற்கனவே இவருடைய சில கதைகள் படிச்சிருக்கேன் எல்லாமே அருமை ..
கொஞ்சம் நடுங்கிட்டேதான் படிப்பேன் :) த்ரில்லர் ஸ்டோரிஸ் ..வாழ்த்துக்கள் அப்பாதுரை அவர்களுக்கும் எங்கள் ப்ளாகுக்கும் ..
பிலிப் ,சுந்தர் ஆடம் ரகு ,மிரா,ஜீனா அன்பெல் ரமா அனைவரையும் கண் முன் கொண்டுவது விட்டார் அப்பாதுரை !
பதிலளிநீக்குகதையைப் படித்துக் கொண்டிருக்கும்போது அவர்களது மனைவிமார் என்ன நினைக்கிறார்கள்; என்று கேட்டுப் பின்னூட்டம் இடவேண்டும் என இருந்தேன் என்ன ஆச்சரியம் அவர்களது மனைவியருக்கும் இதே பிரச்சனைதான் இண்டிக்கி இன்டி ராமாயணம்
பதிலளிநீக்குஎழுத்தின் நடையை மிகவும் ரசித்தேன் அருமை நண்பரே... அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆடம், அனபெல் இருவரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் கணவன், மனைவி இருமனமும் ஒருமனமாய் சிந்திக்கிறதே ! குடிகரான் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள் காலை முடிவு மாறினால் சரி.
பதிலளிநீக்குகதை அருமை.
அஹா இந்தக் கதையை நான் குங்குமத்திலேயே படித்திருக்கிறேன் . வாழ்த்துகள் அப்பாதுரை சார். ! பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்லாக். :)
பதிலளிநீக்குஇந்தக் கதையை குறும்படமாக கச்சிதமாய் எடுக்கலாம். டெம்டோ எகிறும். 'குடி குடியைக் கெடுக்கும் ' புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது' ஸ்டிக்கர்கள் மட்டும் நிரந்தரமாய் திரையில் வரும். அப்பாதுரை டச் உரையாடல்களில்... டூத் பிரஷ்ஷில் ஆர்சனிக்கா?! சாமி ... இன்னிமே பல்லு தேய்க்கமாட்டேன் சாமி !
பதிலளிநீக்குபோட்டுத் தள்ளுவதை எப்படி எழுதியிருப்பார் என்று இப்போது மனசு ஓடுகிறது...
அப்பாதுரை போட்டோக்கள் இளமைதுள்ளுகிறது. ஶ்ரீராம் தன்பதிவுகளுக்கு எப்படியெல்லாம் கிளுகிளுப்பு சேர்க்கிறார்?!!
பதிலளிநீக்குமுதலில் சாகப் போவது யாரு .கணவன்மார்களா ,மனைவிமார்களா :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு//விஸ்கி உள்ளே போன பிறகுதான் உலகமே தெளிவா தெரியுதுடா" என்றான் ஆடம். ⚙//
பதிலளிநீக்கு"அது என்னாது தெளிவாத் தெரியுது சொல்லித் தொலையேண்டா " சுப்பு தாத்தா சன்னமாத் தான் கேட்டார்.
"
"நீயே பாரு இத ...ஆனா முதல் வரிக்கு மேல பாக்காதே. உனக்கே புரியும். "
www.youtube.com/watch?v=33-EhS2zclI
// இமெயில்களை ஒரு மாதம் போல் கவனிக்காமல் இருந்து /
பதிலளிநீக்குகதையைவிட இதுதான் சஸ்பென்ஸாக இருக்குது!! ஒரு மாசமாகவா... இமயமலைக்குப் போயிருந்தீங்களா.... (அங்கயும் இப்பல்லாம் வைஃபை இருக்குமே... )
ஃபேஸ்புக்ல இருக்கீங்களா நீங்க அப்பாதுரைஜி?
ம்துவைப் பற்றி, மது அருந்துவதைப் பற்றி எழுதியவனுக்கு சகலமும் தெரியும் என்று தெரிவிப்பதே போன்று அமைந்த ஆரம்பம்.
பதிலளிநீக்குகதை நிக்ழ்விடம் மேற்கத்திய நாடு என்றாலும் கதை மாந்தர் நம்மூர் நடுத்தர வர்க்க மாந்தர்களே. அல்லது என்ன தான் மேற்கத்திய கலாச்சாரம் மேலோட பரவியிருந்தாலும் உள்ளுக்குள் உள் நம்மவர் மனசே ஜ்வாலை கக்கிக் கொழுந்து விட்டு எரிகிறது என்று சொல்ல வந்த கதையோ?.. இல்லேனா, எல்லாருக்கும் எதுலேயும் (இந்த எதுலேயும் அழுத்தி) சேஞ்ச் வேண்டும் என்ற உணர்வு துடிப்பின் வெளிப்பார்வையோ?..
அந்த கடைசி வரி அற்புதம்..கதையின் போக்கைக் காட்டிய புதுமை. இங்கே விஸ்கி என்றால் அங்கே டயட் பீர். அதுனாலே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் எதை உளறினாலும் போதை பாத்துக்கும் என்கிற உத்திரவாதம். பொழுது போனாலும், பொழுது விடிஞ்சாலும் விஸ்கிக்கும், பீருக்கும் தான் செலவு.
இல்லாத சொர்க்கத்தில் இல்லாத நிச்சயங்கள் நிறைய. அதுக்கு நரகம் என்றாலும் மண்ணில் திருமணம் மேல்.
அட! ஜெயராஜ்! அதுக்குத் தான் அப்பாதுரை அப்படி சிரிக்கிறாரோ?..
அகத்தின் இளமை முகத்தில் வைகோ சார்.. முடிக்கும் வழிகள் இருக்குதே இந்த நாளில்.. எதற்காக தலையைப் பிய்த்துக் கொள்ளணும்?
பதிலளிநீக்குபடித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மிக நன்றி. எதையும் நீக்காமல் அப்படியே வெளியிட்ட எபிக்கும்.
பதிலளிநீக்குஃபேஸ்புக்கில் இல்லைங்க ஹூஸைனம்மா.
பதிலளிநீக்கு(ஒரு மாசமென்ன.. நாலைந்து மாதம் இமெயில் பக்கம் போகாமல் இருந்ததுண்டு)
ஸ்ரீராம் கேட்டார்னு ஒரு போட்டோ அனுப்பிச்சா அதுல நூறு ஓட்டை உடைசல் கண்டுபிடிக்கிறாரு.. சிரிக்கறாப்புல ஒண்ணு அனுப்புங்க.. இதென்ன பேருக்கு சிரிக்கிறாப்புல.. நல்லா சிரிக்குறாப்புல அனுப்புங்க.. ஏன் கேக்குறீங்க!
பதிலளிநீக்குமகா விறு விறுப்பு. அப்புறம் என்ன ஆச்சுனு தெரியலையே.
பதிலளிநீக்குத்ரில்லிங்க் ஃபினிஷ். வாழ்த்துகள் துரை அண்ட் எங்கள் ப்ளாக்.
அருமை. முடிவில் ஆரம்பமாகிற அடுத்த கதை அட்டகாசம்:). கோமதிம்மா சொல்வது போல விடியலோடு எல்லாத் திட்டமும் காற்றோடு கரையலாம். அல்லது க்ரைம் கதையாய் தொடரலாம்..
பதிலளிநீக்குஅருமையான கதை ரொம்ப நாளுக்கு அப்புறமாக படித்த உணர்வு
பதிலளிநீக்கு//இல்லாத சொர்க்கத்தில் இல்லாத நிச்சயங்கள் நிறைய. அதுக்கு நரகம் என்றாலும் மண்ணில் திருமணம் மேல்.//
பதிலளிநீக்குஇது கண்ணிலே படலையாக்கும்?.. போட்டோக்கு போயிட்டீங்க! சரியான நழுவல். :))
கண்ணில் பட்டு மனதை அரித்த கருத்தாச்சே. வம்பாகும்னு விட்டுட்டேன். சூரி சார் படிச்சுட்டே இருக்கார்.
பதிலளிநீக்குயூரிபெடிசுக்கு ஒருபடி மேலேயா? இல்லாத சொர்க்கம் இருக்கும் நரகம். பலே.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகொலைகார கணவனுக்கேற்ற கொலைகார மனைவி! Made for each other! வழக்கமாக வாசிக்கும் கதையிலிருந்து மாறுபட்டது என்பதால் சுவாரசியமாயிருந்தது. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்! வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கும் நன்றி!
பதிலளிநீக்குஞா. கலையரசி said...
பதிலளிநீக்கு//Made for each other! //
மிகவும் ரஸித்தேன், மேடம். :)
//சூரி சார் படிச்சுட்டே இருக்கார்.''
பதிலளிநீக்குமோகன்ஜியும் பார்த்துக்கிட்டே இருக்கார். ஜீஎம்பீ சார் பார்த்தால் நல்லது.
//யூரிபெடிசுக்கு ஒருபடி மேலேயா? //
பதிலளிநீக்குஅது ஆரானும் யூரிபெடிஸ்?..
நீண்ட நாளைக்குப் பிறகு அப்பாதுரையின் கதை எங்கள் பிளாகில்!
பதிலளிநீக்குடிப்பிகல் அப்பாதுரை முத்திரை. நிறைய வரிகளை ஹை-லைட் செய்யணும். //திருமண வாழ்க்கையை மிகைப்படுத்தி வச்சிருக்கோம்//
கதையின் முடிவு என்னவாயிற்று என்பதை விடவும் வீட்டுக்கு வீடு வாசப்படி - அமெரிக்கா, இந்தியா எல்லாவிடத்திலும் திருமண வாழ்க்கை இப்படித்தான் என்பதுதான் சுவாரஸ்யம்!
பெரிய கதை...
பதிலளிநீக்குதிரு. அப்பாதுரை அவர்களின் எழுத்து அருமை... வாழ்த்துக்கள்.
அப்பாதுரை அவர்களின் கதைகள் சிலதை அவரது தளத்தில் வாசித்துள்ளோம். அருமையான கதைகள், எழுதும் நடை என்று .இவர் கதைகளை வாசிக்கும் போது சுஜாதா நினைவுக்கு வருவார். நடையில் அல்ல....ஹைப்போதலாமசில்...
பதிலளிநீக்குபடித்துக் கொண்டே வரும்போது மனைவிமார்களும் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது..அந்தப் படம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்....அவரும் அதை எழுதியிருப்பது ..ஆஹா பரவால்ல நாமளும் ஏதோ கொஞ்சம் ஊகிக்கிறோமேனு தோன்றியது..ஹிஹிஹி..சும்மா சைக்கிள் காப்ல இப்படிச் சொல்லிக்கொள்வதுதான்...
குங்குமத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள். வெளியாகியிருக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
அப்பாதுரை அவர்களுக்கும் வாழ்த்துகள். நல்லதொரு கதையை இங்கு பதிவிட்டதற்கு எங்கள்ப்ளாகிற்கும் நன்றி
அருமையான கதை அமெரிக்கபின்னணி! அப்பாதுரை சார் நடை வித்தியாசமா இருக்கும் ..இந்தகதையிலும் அப்படியே பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு