வியாழன், 31 மார்ச், 2016

ரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ]


"வீடு மாறினால் வரும் கஷ்டங்களில் ரேஷன் கார்ட் மாற்றும் வைபவமும் ஒன்று.  கேஸ் கனெக்ஷன் கூட எளிதாக முடிந்து விடும்.  இது கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை இல்லையா...

மாறிய ஏரியாவுக்கு ரேஷன் கார்ட் மாற்ற ஸ்ரீ பெரும்புதூர் சென்று வரவேண்டும் என்றார்கள்.  அங்கு சென்று DSO வைச் சந்தித்து கடை  அலாட் செய்து வாங்கிக் கொண்டு, உடனடியாக நேரே அந்தக் கடைக்குச் சென்றேன்.
 
அந்தக் கடை ஊழியர் என்னை மதிக்கவே இல்லை.  நிமிர்ந்து பார்க்கவே நேரம் எடுத்துக் கொண்டார்.  அப்புறமும் விவரம் கேட்க இன்னும் நேரம் எடுத்துக் கொண்டார்.  பின்னர் பேசியபோது ' இந்தக் கடையில் உங்கள் கார்டை இணைக்க முடியாது.. பக்கத்து ஏரியாவுக்குச் செல்லுங்கள்'  என்றார்.
 
"உங்கள் DSO இந்தக் கடையைத்தான் குறித்துக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்"

"இங்கு இருக்கும் நிலைமை அவருக்கு என்ன தெரியும்?"
 
"அவரையே கேளுங்களேன்.."
 
"நான் ஏன் கேட்கணும்?  வேணும்னா நீங்களே கேட்டுக்குங்க"
 
நான் கேட்கமாட்டேன் என்று எதிர்பார்த்திருப்பார்.  நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.  ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து கிளம்பும்போதே அவரின் அலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டுதான் வந்திருந்தேன்.  அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  என்னை என் பதவியுடன் (ஓய்வு பெற்ற) என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு, காலை அங்கு வந்து அவரைப் பார்த்ததையும் நினைவு படுத்தி விட்டு,
 
"நீங்கள் என்னவோ கடை எண்ணை குறித்தே கொடுத்தீர்கள்... இங்கு இருக்கும் ஊழியர் அவருக்கு என்ன தெரியும் என்று கேட்கிறாரே..  எனக்கு இந்தக் கடைதான் வீட்டுக்குப் பக்கம்.  அவர் சொல்லும் கடை தூரம்.  நான் என்ன செய்ய வேண்டும்?"  என்று பொடி வைத்தேன்!
 
"அவர்ட்ட ஃபோனைக் கொடுங்க"
 
கொடுத்தேன்.
 
சிறிது நேர மௌன, மற்றும் முகம் மாறும் உரையாடால்களுக்குப் பின்னர் அலைபேசியை என்னிடம் கொடுத்தவர், மௌனமாக நோட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்து என்னை 'அவர்களுடன் சேர்த்து'க் கொண்டார்!
 
அப்புறம் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.  பெரும்பாலும் எதுவும் எனக்கு இல்லை என்று சொல்லப் பட்டதில்லை.  சோப்பு வாங்கினால்தான் எண்ணெய் என்றெல்லாம் பேரம் பேசப்பட்டதில்லை.  நல்ல அரிசியாகத்தான் கிடைக்கும்.
 
ஒருநாள் அவர் மாறிச் சென்று விட்டார்.  வேறு ஒருவர் பொறுப்பு எடுத்துக் கொண்டாலும் மாற்றம் பெரிதாக் ஒன்றுமில்லை."
 
"அவ்வளவுதானா?"
 
"இன்னும் ஒரு சிறு திருப்பம் இருக்கிறது... அவசரப்படாமல் கேளு.."
 
"சொல்லுங்க.." 

"ஒருநாள் காலை நான் கடைக்குச் சென்றபோது ஏற்கெனவே மூன்று நான்கு பேர்கள் பொருள்கள் வாங்க வேண்டி நின்று கொண்டிருக்க,  புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்று சொன்னேனே, அந்த ஊழியர், "அதான் சொல்றேன் இல்ல...  இன்று விற்பனை கிடையாது.  செக்கிங் வந்திருக்காங்க...  நாளைக்கு வாங்க"  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
 
செக்கிங் வந்திருப்பவரை நான் ஏறிட்ட அதே சமயம் அவரும் என்னைப் பார்த்தார்.  இங்கிருந்து மாற்றலில் சென்ற ' அந்த' ப் பழைய ஊழியர்.  என்னைப் பார்த்ததுமே அவர் முகம் லேசாக மாற,  இப்போது இருப்பவரின் அருகில் சென்று அந்தப் பக்கம் பார்த்தபடி திரும்பி நின்று ஏதோ சொன்னார்.
 
உடனே இவர் என்னைப் பார்த்து, "ஸார்..  நீங்க வந்து வாங்கிட்டுப் போயிடுங்க.." என்றவர் சட்டென சுதாரித்து, நின்றிருந்த மற்றவர்களையும் பார்த்து நீங்களும் வாங்கிட்டுப் போயிடுங்க..  இனி யாரும் வந்தால் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லிவிட,
 
நாங்களும் அன்று ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டே வீடு வந்தோம்.

எப்படி?" என்று முடித்தார்.


எப்படி?

20 கருத்துகள்:

  1. அடக் கடவுளே .மஹாத்மியமே எழுதலாம் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஒரு குறிப்பிட்ட அளவு ஆண்டு வருமானம் இருக்கும் வரை தான்
    ரேஷன் பொருட்கள், அரிசி, சீமெண்ணெய் முதலியவை கொடுக்கப்படவேண்டும் .
    இதற்கான அட்டைகளின் கலர் வித்தியாசமாக இருக்கிறது.
    என்னுடைய வெள்ளை நிற அட்டை நான் ஐ.டி.க்காக மட்டுமே பயன் படுத்த வைத்திருக்கிறேன். இதில் சக்கரை மட்டும் தான் வாங்க இயலும்.
    அந்த சக்கரை தூசி மிகவும் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து வான்காவிடின் அந்த கார்டு லாப்சாகிவிடும்.

    அது இருக்கட்டும்.

    எல்.பி.ஜி.
    காஸ் வருட வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்கள்
    சப்சிடி கிடையாது என்று சொல்லி இருக்கிரார்கள்.
    இதே போல,ரேஷன் கார்டுகளையும் பான் கார்டுடன் இணைத்து வருட வருமானம் ஐந்து லட்சம் க்குமேல் போகும்போது , அல்லது ரேஷன் கார்டு வைத்திருப்பவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர்களுக்கு தர்மப்படி பார்த்தால்,
    இலவசங்களை பெற்றுத்தரும் பச்சைக் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு ஐ.டி. யாக மட்டும் பயன் படும் கார்டு தரவேண்டும்.
    அப்படி செய்தால் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு அரிசி, சீமெண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் அல்லது இலவசமாக சென்றிட இலகுவாகும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. "வீடு மாறினால் வரும் கஷ்டங்களில் ரேஷன் கார்ட் மாற்றும் வைபவமும் ஒன்று. கேஸ் கனெக்ஷன் கூட எளிதாக முடிந்து விடும். இது கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை இல்லையா..//

    நாங்களும் மாற்ற வேண்டும் படிக்கும் போது பயமாய் இருக்கே!

    பதிலளிநீக்கு
  4. சுவையான அனுபவங்கள். மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. அழுத பிள்ளைப் பால் குடிக்கும் என்பது சரிதானே :)

    பதிலளிநீக்கு
  6. முகம் கொடுத்துப் பேசாத அரசு ஊழியர்கள்.. ஒரு தபால் நிலையத்தில் கிடைத்த இது போன்ற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.

    பொருட்களின் தரமின்மையால் ரேஷனில் வாங்குவதை நிறுத்தி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. இப்போது எப்படியோ தெரியாது. ரேஷன் கார்டுகள் ஐடி ப்ரூஃபாக பயன்படுமே என்பதற்காக மாற்ற வேண்டியிருந்தது ஒரு காலத்தில். இப்போது அந்தத் தேவையும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். மாமாவின் அனுபவம் சுவாரசியம். சென்னையில் வசித்த 16 வருடங்களில் பலமுறை வீடு மாற்றிய காரணத்தால் இதுபோன்ற அவதிகளை ஏராளம் அனுபவித்திருக்கிறோம். இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்தகாலம் என்று நினைக்கிறேன் நாங்கள் அரக் கோணத்தில் இருந்தோம் அப்போதுதான் ரேஷன் முறை அமலுக்கு வந்தது என்று நினைக்கிறேன் அரிசி கோதுமை சோளம் எல்லாம் ரேஷனிலிருந்து என் அண்ணா வாங்கி வருவான் சோளத்தை கட்டாயம் சாப்பிட வேண்டிய நிலைமை உருவானது அதை அரைத்து உப்புமா செய்வார்கள் இப்போது என்னிடம் ரேஷன் கார்டு இல்லை. இருப்பது 1992-ல் வாங்கியது/ அதை இன்னும் மாற்றவில்லை.

    பதிலளிநீக்கு
  9. மாமாவின் அனுபவத்தில் அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. சுயபிராதாபம் தான். அரசு ஊழியர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டம் வகுத்துக் கொண்டிருப்பவர்கள். நியாயவானாக இருந்தால் நியாயப்படி; இல்லை ஏடாகூடமாக இருந்தால், அதற்கேற்றபடி தான். மாமா இன்னொரு தரம் அந்த அதிகாரியுடன் தொடர்ப்பு கொண்டால், "எனக்கு உங்கள் புகார் ஒன்று தானா?.. அட்ஜெஸ்ட் பண்ணிப் போங்க, சார்." என்று எரிந்து விழுவார்.

    பல ரேஷன் கார்டுகளில் விலாசம் சரியாக இருக்காது. அதனால் எந்த ப்ரூப்புக்கும் அது பயன்படாது.

    முக்கியமான ஆவணங்களில் முக்கியமான குறிப்புகளில் நிறைய தவறுகள் செய்கிறார்கள். அவற்றைத் திருத்த படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ஆண் போட்டோவைப் போட்டு , பாலினம் குறிப்பதில் பெண் என்று அச்சடித்திருப்பார்கள். இதை நிரூபிக்க Birth certificate சான்று கேட்பார்கள். ராதா என்று பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, சீதா என்று தமிழில் எழுதியிருப்பார்கள்.
    சீதா இல்லை ராதா தான், மாற்றிக் கொடுங்கள் என்றால் அதற்கும் தகுந்த சான்றுடன் மனு கொடு என்பார்கள். தாலுகா ஆபீஸில் கொடுக்கும் எல்லா மனுக்களுக்கும் ஒரு காலத்தில் court fees stamp ஒட்டித் தர வேண்டும். இப்போது எப்படியோ தெரியவில்லை.

    எதற்கும் நேரே போக வேண்டும் என்கிற நிர்பந்தம். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இன்னொரு அலுவலகம் செல்பவர் பலர். இந்த கணினி யுகத்திலும் இதற்கெல்லாம் மாற்று இல்லை என்பது தான் பெரும் சோகம்.

    ஒரே இலாகாவில் ஒரே பதவியில் சென்னையில் குடியிருப்பவர் அலுவலகம் செங்கல்பட்டில் இருக்கும். செங்கல்பட்டில் குடியிருப்பவர் அலுவலகம் சென்னையில் இருக்கும். இரண்டு பேருக்கும் mutual transfer வேண்டுமென்றால் லேசில் நடக்காது. இந்த இரண்டு பேரின் செளகரியம், அலுவலக வேலைகளுக்கு செளகரியம் என்று மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்போர் இல்லை. இவர்கள் இருவருமே குடியிருப்பை மாற்றிக் கொள்ள வேண்டியது தானே என்றால் வேலை பார்க்கும் மனைவி, குழந்தைகள், ஸ்கூல் அட்மிஷன் என்று....

    எதையும் சொல்வதற்கில்லை.. 'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா..' என்று ராஜாஜி என்னவோ பாட்டு எழுதிப் போய்விட்டார்.

    பதிலளிநீக்கு
  10. அனுபவம் பகிர்ந்த விதம் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  11. ரேஷன் கடை அனுபவம் நிறையவே இருக்கு. நிறையச் சொல்லலாம். :(

    பதிலளிநீக்கு
  12. ஜி+ இல் பார்த்தேன், உங்க பதிவுகளை. மற்றவர்களுடைய பதிவுகள் நாளை தான் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
  13. சில இடங்களில் கேட்டால் கிடைக்கிறது.இரண்டு மூன்று நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. சுப்புத் தாத்தா வாங்கி இருக்கும் ஜீனிக்கான வெள்ளை ரேஷன் கார்டுதான் எனக்கும். எங்களுக்கான இந்த நாலரை கிலோ ஜீனியை, வாங்குவதற்கு “எப்போது போடுவீர்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள , ஒவ்வொரு மாதமும் குறைந்தது மூன்று முறையாவது அலைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. வீடு மாறி வந்தாலும்
    கடையில ஆள் மாறி நின்றாலும்
    பொருள்கள் கைக்கு வந்தால் போதுமே!

    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  16. இல்லாதவர்களும், எளியவர்களும் என்ன செய்வார்கள் என்று சிந்திக்கக்கூட இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  17. இப்படியான அனுபவங்கள் ரொம்பவே. சென்னையில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும் போது மட்டுமில்லை, பல ஊர்கள், மாநிலத்திலிருந்து மாநிலம் என்று சொல்லி மாளாது.....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ரேசன் கடை அனுபவம் ரெண்டையும் இப்போதுதான் வாசித்தேன்...
    உண்மை... பேச வேண்டிய இடத்தில் பேசணும் அப்பத்தான் சரியாகும்....
    இப்ப மரியாதை இருக்கு பாருங்க...

    பதிலளிநீக்கு
  19. ரேஷன் கடை பற்றிய அனுபவங்களை நிறைய எழுதலாம். அவ்ளோ இருக்கு. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!