நெகிழ்ச்சியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெகிழ்ச்சியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.4.16

பாஹேவின் மறைவும் நண்பர்களின் தோள் அணைப்பும்..



எவ்வளவு வயதானாலும், அம்மா அப்பா இருவரில் ஒருவரையோ இருவரையுமோ இழப்பது என்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.  அப்பா அம்மா இருவரில் முதலில் யார் மறைவோ, அந்த முதல் இழப்பு தரும் சோகம் இரண்டாவது இழப்பில்,  முதலின் அனுபவத்தில், அனுபவம் தரும் பக்குவத்தில் சமன்படுத்திக் கொள்ள உதவுகிறது -  ஓரளவு.

எனக்கு அம்மாவிடம்தான் ஒட்டுதல் அதிகம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  அம்மா மறைந்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தில் பாதி முடிந்ததாகத் தோன்றியது.  அப்பாவும் மறைந்ததும் ஏதோ துணை இல்லாமல் நிற்பது போலத் தோன்றியது.  ஆனாலும் இது தற்காலிகம்.  காலம் எந்தச் சோகத்தையும் ஆற்றும்.  

யாரிடமும் இல்லாத நெருக்கம் அல்லது உரிமை அம்மா அப்பாவிடம் மட்டுமே நமக்கு இருக்கும்.  உரிமையுடன் எதுவும் கேட்கலாம்.  பேசலாம்.  அவர்களைப் பற்றி நினைக்கும்போதும், பேசும்போதும் நாம் எந்த வயதிலும் குழந்தைகளாகவேதான் இருக்கிறோம், உணர்கிறோம்.  டெல்லிக்கு ராஜாவானாலும்...

இனி நம்மை குழந்தைகளாகப் பார்க்க யாரும் இல்லை என்கிற எண்ணம் வருகிறது.


85 வயது என்பது சிறிய வயது இல்லைதான்.  ஆனாலும் 'இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் இருந்திருக்கலாம்' என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.  பேராசை.  


இரண்டு வருடங்கள் கடந்ததும் அடுத்த எக்ஸ்டென்ஷன் ப்ரேயரை அப்போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம்.  'சொல்லுகிறேன்' காமாட்சி அம்மா இது குறித்து அழகாக பேசினார்கள்.  கொஞ்சம் தெளிவு வந்தது.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் அப்பா.



'தூறல்கள்' புத்தகத்தைப் படித்து, முன்னரே அப்பாதுரை, ராமலக்ஷ்மி, கீதா சாம்பசிவம் மேடம்,  தில்லையகத்து நண்பர்கள் என்று பகிர்ந்திருக்கிறார்கள்.  மேலும் எங்கள் ப்ளாக்கில் அவரது படைப்புகளைப் படித்து அவரை அறிந்து வைத்திருந்தவர்களும் உண்டு.  


எனக்கு அல்லது எங்கள் குறுகிய வட்டத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்திருக்க வேண்டிய சோகம், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் கதையை எங்கள் ப்ளாக்கில் வெளியிட்டதில், அவருக்கு நெருங்கியவர்கள் இன்னும் கிடைத்தார்கள்.  அவர் செல்லும் வழிக்கு தங்கள் அனுதாபங்களால் / பிரார்த்தனைகளால்  நல்வழி அமைத்துக் கொடுத்தார்கள்.  

 
அந்தக் கடினமான நேரத்தில் எனக்கு அலைபேசியில் ஆறுதல் சொன்ன சுப்பு தாத்தா, கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம், ரஞ்சனி நாராயணன் மேடம், சொல்லுகிறேன் காமாட்சி அம்மா, வல்லிம்மா, கில்லர்ஜி, மோகன்ஜி மற்றும் மெயிலில் ஆறுதல் சொன்ன நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, ஜி எம் பி ஸார், அப்பாதுரை, வைகோ ஸார்,  பின்னூட்டங்களில் ஆறுதல் சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் எனது / எங்களது நன்றிகள்.  யார் பெயரும் தவறுதலாக விட்டுப் போகவில்லை என்று நம்புகிறேன்.


கில்லர்ஜி மற்றும் சுப்பு தாத்தா முதல் முறை என்னுடன் பேசும்போதே இப்படியான சந்தர்ப்பத்தில் பேச வேண்டியிருக்கிறதே என்று வருத்தப் பட்டார்கள்.  இது போன்ற கணத்தில்தானே உங்கள் ஆறுதல் எங்களுக்கு மிகவும் பலமாக இருந்தது!


பாஹே பற்றி தனிப் பதிவே வெளியிட்டு அஞ்சலி செலுத்திய கில்லர்ஜிகீதா சாம்பசிவம் மேடம்,  தில்லையகத்து கீதா / துளசிஜிபரிவை சே. குமார்,  ஆகியோருக்கு நன்றிகள்.

இந்த அன்புக்கு என்ன தவம் செய்தேன் நான்..