நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
புதன், 31 ஆகஸ்ட், 2016
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
கேட்டு வாங்கிப் போடும் கதை :: மூன்று நொடி முத்தம்
அவருடைய தளம் நாங்களும் எழுதுவோம்ல.
================================================================
அன்புள்ள எங்கள் ப்ளாக் குழுவினருக்கு,
இத்துடன் நான் எழுதிய மூன்று நொடி முத்தம் என்னும் சிறுகதையை எங்கள் ப்ளாக் தளத்தில் வெளியிட இணைத்துள்ளேன்.===================================================================
மூன்று நொடி முத்தம்
ஹரீஷ் கணபதி
நெஞ்சைப் பிடித்து யாரோ அழுத்துகிற மாதிரி இருந்தது. காது
அடைத்தது. சட்டென்று கழன்று அலங்கோலமாய்க் கிடந்த லுங்கியை சரியாய்க் கட்டக் கூடத்
தோன்றாமல் எழுந்து அமர்ந்தேன். மூச்சு வாங்கியது.உடம்பு முழுக்கத் தொப்பலாய்
வியர்வை.
கண்ணை இறுக்கி இருட்டுக்குப் பழக்க சில நொடிகள் ஆனது.
ரேடியம் ஸ்டிக்கர் எனும் இரவில் ஒளிரும் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடிகாரம்
இருட்டில் மங்கலாகத் தெரிந்தது. மணி இரண்டரை. கடுப்பாக இருந்தது. என்ன பிராண
அவஸ்தை.
ஒன்றரை மாதம் முன்பு வரை நன்றாகத் தான் இருந்தேன். எல்லாம்
இந்த எழவெடுத்த பழக்கம் துவங்கியதிலிருந்து தான். எதற்காக இதைச் செய்யத்
துவங்கினேன் என்று இப்போது வரை சத்தியமாக எனக்கே விளங்கவில்லை. ஏதோ ஒரு நொடியின்
உந்துதலில் அசட்டுத் தனமாக இந்த மாதிரி ஒரு முடிவெடுத்ததைக் கூட சுய பரிதாபத்தின்
வழி போனால் போகிறதென்று மன்னித்து விட்டு விடலாம். ஆனால் எடுத்த முடிவின் மேல்
ஒண்ணரை மாசமாக ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது
என்று தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
எழுந்து வாஷ் பேசின் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தேன்.
அப்போது தான் கவனித்தேன். பல்லை நற நறவெனக் கடித்துக் கொண்டிருந்ததை. எனக்கே
தெரியாமல் இப்போதெல்லாம் அடிக்கடி இப்படிப் பண்ண ஆரம்பித்து விடுகிறேன். கஷ்டப்பட்டு
அதை நிறுத்தி விட்டு கொஞ்சம் தண்ணியைக் குடித்து விட்டு வந்து படுத்தேன். மூச்சை
இழுத்து விட்டேன். நல்லவேளை மூச்சு தாராளமாக வந்தது. இந்தப் பழக்கம் ஆரம்பித்ததின்
இன்னொரு சில்லறைத் தொந்தரவு அவ்வப்போது மூச்சு விட சிரமமாக இருப்பது.
எப்போது எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. பெட்ஷீட்
விலகி படுத்திருந்த தரை சுட ஆரம்பித்ததும் தான் எழுந்தேன். எழும் போதே அந்த ஞாபகம்
வந்து இம்சித்தது. தினமும் இந்தக் காலை நேரம் தான் எனக்கு அக்கினி பரீட்சை.இந்த
சில நிமிடங்களில் மட்டும் செத்து செத்துப் பிழைப்பேன். இதனால் டீக்கடை மரகதமணியின்
எகத்தாளத்துக்கெல்லாம் ஆளானதை கொஞ்சம் நேரம் ஒதுக்கி நினைத்துப் பார்த்தால்
துக்கத்தில் கண்ணீர் பொத்துக் கொண்டு விடும் என்பதால் அதை நினைப்பது கூட இல்லை.வேறு
வழியில்லை. பழகிய பாவத்தால் இன்னமும் அந்த மரகதமணியிடம் தான் போய்க்
கொண்டிருக்கிறேன்.
இப்போதும் அங்கே தான் போகப் பல்லைத் துலக்கி விட்டுக்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன். வேண்டி விரும்பி அக்கினி பரீட்சையில் இறங்கிய
சீதையைப் போல்.என் முகத்தைப் பார்த்ததும் மரகதமணி மலர்ச்சியாக சிரித்தான். “
வாங்கண்ணே” என்றான். அவன் நிஜமாகவே மலர்ச்சியாகத் தான் சிரித்தான் என்பது
மண்டையில் உறைத்தாலும் மனசு ஒப்புக் கொள்ள மறுத்தது. 'என்னா நக்கலு பாத்தியா' என்று
குமுறியது. எதுவும் சொல்லாமல் போய் பெஞ்ச்சில் அமர்ந்தேன். டீ வந்தது. கூடவே
காற்றில் மிதந்து அந்த வாசனை. என் அக்கினிபரீட்சை. சபலம் கட்டுக்கடங்காமல் போய்
விடும் அபாயம் தென்படவே, சட்டென்று இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்தி அந்த மணத்தை
ஆழமாக நுகர்ந்தேன்.
கண்கள் தானாக இன்பத்தில் மூடின. உள்ளங்காலில் புறப்பட்ட
அந்தப் பூரிப்பின் குதூகலம் மெல்ல உடலெங்கும் பாய்ந்து மின்சார அலைகளைப்
பாய்ச்சியபடியே மூளையைச் சென்று தாக்கியது. சிலிர்த்துப் போனேன். சில நொடிகள்
கையில் வைத்திருந்த டீயை மறந்து அந்த தேவலோக மணத்தில் லயித்தவன் மெல்லக் கண்களைத்
திறந்து அந்த தெய்வீக அனுபவத்தை எனக்களித்த மகான் யாரென்று பார்த்தேன். தெருமுனை
தனி வீட்டில் இருக்கும் மெட்ரோ வாட்டர் அதிகாரி. சந்தோஷமாக இருந்தது. அவர் பெயர்
என்னவென்று தெரியாது. ஆனால் அவரும் என்னுடைய பிராண்ட் உபயோகிப்பாளர் தான் என்று
தெரியும்.அதனால் ஒரு வாத்சல்யம்.
டீ முடிந்திருந்தது. மோன நிலையை அடைந்திருந்த நான் புன்னகை
சிந்தியபடியே டீ க்ளாஸை மரகதமணியிடம் கொடுத்து விட்டு மனசே இல்லாமல் அந்த இடத்தை
விட்டு நகர்ந்தேன்.
எத்தனையோ முறை தர்ஷிணி சொல்லியும் கேட்டதில்லை இந்த
விஷயத்தில். அவள் சொல்லும் போதெல்லாம் மண்டையை மேலும் கீழுமாக ஆட்டி விட்டு
அறைக்கு வந்ததும் அவளிடமிருந்த நேரத்துக்கும் சேர்த்து நாலு சிகரெட்டுகளை இழுப்பது
தான் பழக்கமாக இருந்தது. அதை இழுத்து நெஞ்சுக்குள் நிறையும் புகை நமக்கு வழங்கும்
இன்பத்தை எடுத்துரைக்க தமிழில் வார்த்தையே கிடையாது. எந்த இலக்கியத்திலும்
சொல்லப்படாத இன்பத்தின் உச்சம் அது. ஒவ்வொரு முறை புகைக்கும்போது மனசு மறக்காமல்
உதிர்க்கும் சொல் ...”ப்பா... சொர்க்கம்டா”. உள்ளே இழுத்தது போக மிச்சம் மீதிப்
புகை தர்ஷிணிக்கு நான் செய்வது பச்சை துரோகம் பச்சை துரோகம் என்று கதறிக் கொண்டே
காற்றில் மறையும்.
நாங்கள் வழக்கமாக சந்திக்கும் மரங்களடர்ந்த நிழற்சாலையில்
மழை அடர்ந்த ஒரு நாளில் மகிழமல்லி மரத்தினடியில் நான் அரையும் குறையுமாய் மழையில்
நனைந்தபடியும் அவள் பாதுகாப்பாகக் குடையில் நின்றபடியும் அவள் காதல் ரத்தை
அறிவித்த அந்த நாள் அந்த சம்பவத்துக்காக என் வரலாற்றில் இடம் பெறவில்லை. அதை நான்
விரும்பவுமில்லை. ஆனால் அன்றைய தினம் தான் நான் இருபத்தைந்து சிகரெட்டுகள்
பிடித்து என் வாழ்நாள் சாதனையை முறியடித்தேன். காதல் தோல்வியைக் காட்டிலும் அது
தான் என் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகிறதென்பது எனக்குத் தெரிந்தே இருந்தது.
கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ஏன் பெருமையாகவும் கூட இருந்தது.
அலுவலகத்தில் பெருமாள் கூட என்னைக் கலாய்த்தான். லவ்
பெயிலியர் ஆனதை கொண்டாடுகிறேன் என்று.நிற்க. இப்படியெல்லாம் இருந்த நான் எந்த
விதமான விசேஷங்களும் இல்லாத நாளொன்றில் மரகதமணியின் கடை வாசலில் எந்த விதமான முன்
கதைகளோ காரணங்களோ எண்ண ஓட்டங்களோ அவதானிப்புகளோ இல்லாமல் சட்டென்று அதை விட்டு
விடுவது என்று தீர்மானித்தது தான் வாழ்க்கையின் ஆகப் பெரிய “சொ செ சூ ( சொந்த
செலவில் சூனியம்).
ஒண்ணா ரெண்டா என்று மரகதமணி புதுப் பாக்கட்டைப்
பிரித்தபடியே கேட்கவும் சட்டென்று “ எதுக்கு?” என்று தோன்றி, “ வேணாம் மணி” என்று
சொன்ன கணம் ஆயுசுக்கும் மறக்காது. வாழ்க்கையில் சில விஷயங்களை எவ்வளவு முயன்றாலும்
நியாயப் படுத்த முடியாதல்லவா? அது போல் தான் இது. வேண்டாமென்று முடிவெடுத்த அடுத்த
நொடியே மனதின் ஒரு பக்கம் முக்காலி போட்டுக் குத்த வைத்து உட்கார்ந்திருந்த புகைக்
காதலன் விகாரமாகச் சிரித்து, “ எத்தினி மணி நேரத்துக்கு?” என்று கூறினான். அவன்
எத்தனை நாள் என்று ஓரளவு டீசண்டாகக் கேட்டிருந்தால் கூட நான் இந்நேரம் விட்டதைத்
தொடர்ந்திருக்கக் கூடும். அந்த எத்தனை மணி நேரம் என்னும் அந்தக் கேள்வி தான் இன்று
வரை என்னை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் போதாதென்று ஆபீஸில் வேறு
இதனால் ஏகப்பட்ட பிரச்னை.அடிக்கடி எரிந்து விழுகிறேனாம். நிறைய மறக்கிறேனாம்.
வேலையில் கவனம் இல்லையாம். டொக்கு விழுந்து விட்டதாம். பெருமாள் சொல்கிறான்.
ஆபீசில் இந்த செய்தி வேறு தீயாய்ப் பரவி எங்கும் இதே பேச்சு. ஆனால் இத்தனையிலும்
ஒரு நன்மை. இத்தனை நாள் வேற்று கிரக ஜந்து போல் பார்த்தபடி கடந்து போன சிற்சில
பெண்கள் இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் புன்னகை போன்ற ஏதோ ஒன்றை சிந்தி
விட்டுப் போகிறார்கள். ஆனால் ஆபீசில் என் முன்னாள் சக புகைஞர்களெல்லாம் இதனால் என்
மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் என்று பெருமாள் தகவல்.
திடீரென்று இது மாதிரியெல்லாம் சட்டென்று நிறுத்தினால் பக்க
விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் மரணம் கூட சம்பவிக்கலாம் என்றும் ஓயாமல்
எச்சரித்தபடியே இருந்தான் பெருமாள். நான் ஆத்திரம் மீறிப் போய் பெருமாளைக் கொல்வது
தான் இந்த நிகழ்ச்சியின் முதல் பக்க விளைவாக இருக்கப் போகிறதென்று நினைத்தபடியே
அறையை அடைந்தேன். பூட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கும் சார்ஜில் போட்டு விட்டுப்
போயிருந்த போன் அடித்து ஓய்வதற்கும் சரியாக இருந்தது.
எடுத்துப் பார்த்தேன். அக்கா தான். காலண்டரைப் பார்த்தேன்.
நினைத்தது சரிதான். ஞாயிற்றுக் கிழமையானால் பெரும்பாலும் அக்கா அழைத்து விடுவாள்.
அங்கே செல்வதில் பெருவிருப்பம் ஒன்றும் இல்லையென்றாலும் அக்காவின் கைமணமான
கறிச்சோறு திங்கத் தான் போவது.பேச்சிலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வீட்டு
சுவையுடன் சாப்பாடு கிடைப்பது என்பது பூர்வ பல ஜென்மங்களின் புண்ணியம் இருந்தால்
மட்டுமே சாத்தியம். நான் செய்திருக்கிறேன் போல. புண்ணியத்தை தான்.
அக்காவுக்கு போன் போட்டேன். கறியெடுக்கும் முன் என்னிடம்
போன் செய்து உறுதி செய்து கொள்ளத் தான் அழைத்திருக்கிறாள். வருவதாகச் சொல்லி விட்டு
வைத்தேன். நான் வருகிறேனென்றால் அக்கா கொஞ்சம் குதூகலமாக்ச் சமைப்பாள். மாமா
எப்போதும் மாமா போலவே நடந்து கொள்வார். வாப்பா எப்படி இருக்க என்பதற்கு மேல்
என்னிடம் எதுவும் பேசியதில்லை. ஆனால் நானும் அக்காவும் ஊர் வம்பு முதல் உள்ளூர்
வம்பு வரை அளந்து கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு தொந்தரவு செய்யாத ரொம்ப நல்ல
மனிதர்.
மெதுவாய்ப் பதினோரு மணிக்குக் கிளம்பி அக்கா வீட்டை
அடைந்தேன். ”வாடா.. எப்படி போவுது உன் விரதமெல்லாம்?” என்று சிரித்தபடி வரவேற்றாள்
அக்கா. வழக்கம் போல் காவியாக் குட்டி என்னைக் கண்டதும் ரூமுக்குள் ஓடிப் போய் பீரோ
சந்தில் ஒளிந்து கொண்டாள். வழக்கம் போல் ஏமாற்றமாய்ப் பார்த்த நான், வாங்கி
வந்திருந்த சாக்லெட் பாரை அக்காவிடம் கொடுத்து “ குட்டி கிட்ட கொடுத்துரு.” என்று
கூறி நிறுத்தியவன், “அப்டியே முழுசா குடு” என்றேன்.
என்னை முறைத்த அக்கா, “ ஏற்கனவே வயித்துல ஒரே பூச்சி. நீ
வேற எப்பப் பாரு சாக்லேட்டா வாங்கிட்டு வந்து குடு” என்றவள், உள்ளே பார்த்துக்
கொண்டே சத்தமாக சொன்னாள் “ அவளுக்கெதுக்குடா சாக்லேட்? மாமா மட்டும் வேணாம், மாமா
வாங்கிட்டு வர சாக்லேட் மட்டும் வேணுமா?” என்றாள்.
“அக்கா” என்றேன். குறிப்புணர்ந்தவளாக, “ சரி சரி உன் மருமகள
ஒண்ணும் சொல்லல” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து மறைந்தாள். மாமாவைக்
காணவில்லை. கறி எடுத்து வர சென்றிருக்கக் கூடும்.
அம்மாவிடம் எதையோ கேட்க வந்த காவியாக் குட்டி என்னைப்
பார்த்ததும், ஹால் சுவற்றின் ஓரமாக ஒடுங்கிக் கொண்டு நகர்ந்து பின் சட்டென்று ஓடி
கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். காவியாக் குட்டிக்கு நல்ல குண்டுக் கன்னம்.
சிரித்தால் கன்னத்தில் குழி விழும். கொள்ளை அழகு. எல்லாக் குழந்தைகளையும் போலவே.
சின்ன வயசில், அதாவது காவியாக் குட்டியின் சின்ன வயசில்,
மீண்டும் அதாவது, சுமார் ஒண்ணரை வருடங்களுக்கு முன் வரை, அவளைத் தோளில் தூக்கிக்
கொண்டு சுற்றியிருக்கிறேன். நிறைய கொஞ்சியிருக்கிறேன். முத்தங்கள் கூட நிறையக் கொடுத்திருக்கிறேன்.அதெல்லாம் காவியாவுக்கு விபரம் தெரியாத வரை.
மணங்களைப்
பிரித்தறிந்து இது பிடிக்கும் இது பிடிக்காது என்றெல்லாம் சொல்லத் தெரியாத வரை.
ஆர்வக் கோளாறில் ஒன்றிரண்டு சிகரெட்டுகளை எக்ஸ்டிராவாக அடித்து விட்டு அக்கா வீட்டுக்குச்
சென்று காவியாவைத் தூக்கிக் கொஞ்ச முயன்ற போது அந்த மணம் பிடிக்காமல் சட்டென்று
மூக்கை சுருக்கியவள் முகத்தை திருப்பிக் கொண்டு என்னிடமிருந்து குதித்து இறங்கிப்
போன அந்த ஒரு நாளில் தான் ஆரம்பித்தது எனக்கும் அவளுக்குமான இடைவெளி.
அதற்குப் பின் என்னுடன் ஒட்டவே இல்லை. நானும் சில பல
முயற்சிகளுக்குப் பின் அதாவது சில நாட்கள் தம்மடிக்காமல் அக்கா வீட்டுக்குச்
செல்வது எனப் பொருள் கொள்ள வேண்டிய முயற்சிகளுக்குப் பின் அவளை அவள் போக்கில்
விட்டு விட்டேன். தர்ஷிணிக்காகவே விட்டுக் கொடுக்காத என் சொர்க்கத்தை இந்த
பொடிசுக்காக விட்டுக் கொடுப்பதா என்று என் ஒன்றுக்கும் உதவாத ஈகோ கால் மேல் கால்
போட்டபடி கேள்வி கேட்க, நான் தலையசைத்ததன் விளைவு.
அக்காவும் முயற்சித்துப் பார்த்து விட்டு விட்டாள். ஆனால்
நான் வாங்கித் தரும் சாக்லேட்டை மட்டும் தவறாமல் சாப்பிட்டு விடுவாள் காவியாக்
குட்டி. காவியாக் குட்டியைக் கொஞ்சி ரொம்ப நாள் ஆகி விட்டதன் ஏக்கம் எனக்கு
நன்றாகவே தெரிந்தது. அதற்காக வலுக்கட்டாயமாக அவளை இழுத்துப் பிடித்துக் கொஞ்சி அழ
வைத்து கண் மையெல்லாம் கலைந்து போக வைப்பதில் உடன்பாடில்லை.அவள் குண்டுக்
கன்னத்தில் மூன்று நொடி. மூன்றே நொடி ஆசை முத்தம் ஒன்று பதிக்க வேண்டும் என்று அவ்வளவு
ஆசையாக இருந்தது.
ஒரு நிமிடம் காவ்யாவை இழுத்துப் பிடித்து, “ காவ்யாக்
குட்டி மாமாகிட்ட இப்பல்லாம் அந்த ஸ்மெல் வரதே
இல்ல தெரியுமா” என்று சொல்லலாமா என்று கூட யோசித்தேன். மாமா வந்து விட்டார்.
சமையல் தயாராகும் வரை சும்மா அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டும் மாமாவின் ஒற்றை
வார்த்தைக் கேள்விகளுக்கு ரெண்டு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டும் இடையிடையே
காவியாக் குட்டியைக் கண்களால் துழாவிக் கொண்டும் பொழுது போனது.
நடு நடுவே காவியாக் குட்டி கிச்சனுக்குள் போவதும்
அம்மாவிடம் கிசுகிசுவெனப் பேசுவதும் வருவதுமாக இருந்தது வேடிக்கையாக இருந்தது..
ஊரிலில்லாத அதிசயமாக என்னைப் பார்த்து ரெண்டு மூன்று முறை க்ளுக் என சிரிக்க வேறு
செய்தாள். குளு குளுவென்றிருந்தது. அவளைத் தாவிப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையை ,
கிடைக்கும் சின்ன க்ளுக் சிரிப்பையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது எனும்
முன்னெச்சரிக்கை தடை செய்தது.
சாப்பாடு ஆனதும் மாமா எங்கோ வெளியே கிளம்பி விட்டார். நான் இறுக்கம்
தளர்ந்து அக்காவிடம் ப்ரீயாகப் பேச ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் போனதும் நான்
அடுக்கடுக்காக வெளியேற்றிய கொட்டாவிகளைப் பார்த்த அக்கா, “ போய் கொஞ்ச நேரம்
படேண்டா. அப்புறம் எழுந்து காபி குடிச்சிட்டு போவ” என்றாள். இந்த வார்த்தைக்காகத்
தான் காத்திருந்தது போல் கட்டிலில் போய் தொப்பென விழுந்தேன்.
இந்தப் பகலில் தூங்குவதில் எனக்கு மிகப் பெரிய சவுகரியம்
ஒன்று உண்டு. அதுவே தான் மிகப் பெரிய அசவுகரியமும். தூக்கமுமில்லாமல்
விழிப்புமில்லாமல் ஒரு மாதிரி அவஸ்தையாயிருக்கும். சுற்றி நடப்பவை எல்லாம் கனவு
போலவே இருக்கும். அரைத் தூக்கத்தில் வரும் அரைகுறைக் கனவில் நடப்பது எல்லாம் நிஜம்
போலவே இருக்கும். நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்று அடி மனசு சொல்லிக் கொண்டே
இருக்கும். ஆனால் அதற்குக் கொஞ்சம் மேலே இருக்கும் மனசு குறட்டை விட்டுத் தூங்கிக்
கொண்டிருக்கும்.
அன்றும் அப்படித் தான். கனவில் என்னைச் சுற்றிலும்
திடீரென்று ஒரே சாக்லெட் வாசனை.பக்கத்தில் காவியாக் குட்டி உட்கார்ந்து சாக்லெட்டை
அரைத்துக் கொண்டிருந்தாள். பற்கள் தெரியச் சிரித்தாள். பல்லெல்லாம் பிரவுன் நிறமாக
வழிந்தது. கைகளிலும் முகத்திலும் சாக்லேட்டை அப்பிக் கொண்டிருந்தாள். நான் இந்தப்
பக்கம் திரும்பிய ஒரு நொடியில் சட்டென்று என் கன்னத்தில் பச்சக் என்று ஒரு
முத்தத்தை பதித்து விட்டு சடுதியில் மறைந்தாள்.
கனவாய் இருந்தாலும் சிலிர்த்தது. கனவிலேயே மனசு கூவியது.
“ப்பா சொர்க்கம்டா”... சட்டென்று ஏதோ நெருடுகிறாற் போல இருக்க திடுக்கிட்டு கண்
விழித்தேன். இந்த தடவை நிஜமான விழிப்பு. கதவருகே மறைந்து நின்று கொண்டு கிகிகி
என்று சிரித்துக் கொண்டு நின்றாள். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்தது.
என்னைச் சுற்றிக் காற்றில் சாக்லேட் வாசனை கலந்திருந்தது.
மெல்லக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன்.
ஈரம்
படர்ந்திருந்தது.
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
"திங்க"க்கிழமை 160829 :: சேனைக்கிழங்கு கட்லெட் வடை
இதமான வானிலை. 5.1 ஸ்பீக்கரில் இனிமையான பாடல்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையினால் நாலுமுழ நாக்கு அடுத்த கட்டத்துக்கு நகர ஆசைப் பட்டது!
என்ன இருக்கிறது என்று பார்த்தபோது கண்ணில் பட்ட உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கை ஒதுக்கி, கைகள் தெரிவு செய்தது சேனையை!
இப்போது தொடங்கினால் சாப்பிடும் நேரம் சூடானது தயார் செய்து விடலாம். ஸோ,
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து துருவிக் கொண்டோம்.
தேவையான அளவு வெங்காயம் நறுக்கி வைத்துக் கொண்டோம்.
கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் நறுக்கிச் சேர்த்துக் கொண்டோம்.
வெங்காயம்,
பச்சை மிளகாய், கறிவேப்பிலைக்கு கொத்துமல்லியைப் போட்டு கொஞ்சம் வதக்கிக்
கொண்டு, அதனுடன் துருவி வைத்திருக்கும் சேனையைப் போட்டுப் புரட்டினோம்.
தேவையான அளவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்தோம்.
இறக்கி சோளமாவில் புரட்டி உருண்டையாகவோ, தட்டையாகவோ வடிவங்கள் செய்தோம்.
எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து விட்டோம்.
ஹிஹிஹி... உன்னைப்பிடி என்னைப்பிடி என்று போட்டி போட்டுச் சாப்பிட்டு விட்டோம்! பார்ப்பதற்கு கொஞ்சம் கொஞ்சம் வாழைப்பூ வடை போலவும் இருக்கு இல்லை? என்ன பெயர் வைப்பது என்று பார்த்து கட்லெட் போலச் செய்து மசால் வடை போல வருவதால் "கட்லெட் வடை" என்று வைத்து விட்டேன்!
பி . கு : இதில் மூன்று படங்கள் மட்டுமே இணையத்திலிருந்து நன்றியுடன்.. அது எந்த மூன்று படங்கள் என்று உங்களுக்கே தெரியும்!
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
சனி, 27 ஆகஸ்ட், 2016
இத்தனை வயதுக்கு மேல்...
2) மகள் படிப்புக்குப் பணம் கட்ட வழியில்லை. ஆனாலும் ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு. முன்பு தினசரி 20 பேர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தவர் இப்போது 70 பேர்களுக்குத் தருகிறார். இவரது தன்னலமற்ற சேவையைக் கண்ட ராமகிருஷ்ண மடம் இவரது மகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. முன்பே நம் பாஸிட்டிவ் பகுதியில் வந்துள்ள இவரது சேவை இன்னும் தொடர்வதோடு, எண்ணிக்கையையும் அதிகப் படுத்திக் கொண்டுள்ளார். ஈரோடு வி. வெங்கடராமன்.
3) மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல இந்த பூமி.... சென்னையில், 'பெட்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற விலங்குகளுக்கான வாடகை வாகன சேவையை செய்து வரும் ஜெய்ஸ்ரீ ரமேஷ்.
4) இத்தனை வயதுக்கு மேல் விஜி அய்யரும் வெங்கட் அய்யரும் மஸ்கட்டில் தங்களுடைய வசதியான வாழ்வைத் துறந்து, என்ன யோசித்து இந்தியா திரும்பினார்கள்?
5) வீடு தேடி வரும், விருதுநகர் மாவட்டம், மணவராயநேந்தல் கிராம நிர்வாக அலுவலர் பிரித்திவிராஜ். சக அலுவலர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. ஒன்றில்லை, ரெண்டில்லை... பன்முகங்களில் பாஸிட்டிவ் மனிதராக இருக்கிறார்.
6) அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு சில ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல்.. டாடா ஷெர்உட் அபார்ட்மென்ட்.
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
போகிமான் பரம்பரை
காலையில் பால் வாங்கிக் கொண்டு வரும் போது வீட்டுக்கு
சற்று தூரத்திலிருக்கும் கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை
இருக்கிறதா என்று பார்க்கும் போதே எங்கள் வீட்டு வாசலில் ஏதோ கூட்டம்
இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
மார்கழி மாத பஜனைக்குக்கூப்பிட வந்தவர்கள் போல!
'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
ஆணும்
பெண்ணுமாக விதவிதமான உடைகளைப் பார்த்ததும் 'வாலண்டின் டே' போல நம்
நாட்டுக்கு 'ஹாலோவீனு'ம் வந்து விட்டதோ என்றால் அதற்கும் நாட்கள் போக
வேண்டும்.
'அட, சனிக்கிழமை புரட்டாசி மாதத்துக்குக் கூட இன்னும் இரண்டு மாதம் போகணுமே'
என்றெல்லாம் எண்ணிக்கொண்டே வீடுவரை வந்து விட்ட பின்தான் கவனித்தேன்...
எல்லோர் கையிலும் ஒரு செல் ஃபோன்.
செல்ஃபோன் என்று சாதாரணமாகச் சொல்லக்கூடாது. எல்லாமே விதவிதமான ஸ்மார்ட்
ஃபோன். பல வண்ணஙகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சில வண்ணமயமான சட்டைகளிலும்
ஒளிந்திருந்தன.
உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
போகிமான் வேட்டைக்குக் கிளம்பிய கும்பல் நம் வீட்டுப் பிள்ளைகளையும்
கோபிமார் தம் சிநேகிதிகளை அழைக்க வந்த மாதிரி வந்திருந்ததுடன் ஒவ்வொருவரும்
போகிமானின் பாரம்பரியம் பற்றி வேறு விவாதம் செய்யும் அளவிற்குத் தெரிந்து
வைத்திருந்தனர். சுமார் 700 பேர்களாம்.
பாண்டவர்கள் ஐந்து பெயர்கள், நவக்கிரகஙகளின் 9 பெயர் எல்லாம் தெரியாத எங்கள்
வீட்டுப் பசங்கள் சுமார் 500/600 பெயர்களைக் கவனம் சிதறாமல் சொல்லிய
அழகைப் பார்க்கும் போது குறள்மான், நாலடிமான் இப்படியெல்லாம் ஸ்மார்ட்
விளையாட்டுப் புரோக்ராம்கள் எழுதுவதை விட்டு நம் கல்வியாளர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று ஜவடேகரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க
வேண்டும்.