செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : பிராயச்சித்தம் - துரை செல்வராஜூ



பிராயச்சித்தம்.

துரை செல்வராஜூ 

********************


நீதியெல்லாம் படிச்சவன் நீ... இப்படியொரு காரியத்தைப் பண்ணலாமா!..

தனக்கு எதிரில் கூனிக் குறுகி அமர்ந்திருந்த
தனது நண்பன் சுந்தரேசனைப் பார்த்துக் கேட்டார் - பாலகுரு...

நண்பன் என்றால் 20 - 25...

இல்லை!...

30 - 40..

இல்லையில்லை!..

பெரிய வயது..
இருவருமே எழுபத்து ஐந்தைக் கடந்து கொண்டிருக்கின்றார்கள்...

மரத்தடி பள்ளிக் கூடத்திலிருந்தே இணை பிரியாத நட்பு...

இவர் - பாலகுரு.. தமிழ் வாத்யாரின் மகன்...
அவர் சுந்தரேசன்... பண்ணையாரின் மகன்...

சுந்தரேசனின் அப்பா ஸ்வாமிநாத ஐயர்.. நிலக்கிழார்.. பெருந்தனக்காரர்...

அவர் பேரைக் கேட்டாலே
வெள்ளையன் விருட்... - என, எழுந்து நின்று சல்யூட் அடிப்பான்...

அந்தக் காலத்தில் அந்த அளவுக்குப் பிரசித்தம்...

கோயில் ஐவேலி.. குளம் ஐவேலி....ன்ற வாக்கு பொய் ஆகிடப்படாது....ன்னு சொல்லி,

நாலரை வேலிக்கு மேலே வந்ததை எல்லாம்
தன்னோட சகதர்மினி பேர்லயும்
பிள்ளைகள் பேர்லயும் எழுதி வாங்கினார்....

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்...
கல்யாணம் செய்து வைத்தார்...
பேரன் பேத்தியரைக் கண்ணாரக் கண்டார்..

காலம் வெகுவேகமாக ஓடிப்போனது...

சுந்தரேசன் சற்றே நிமிர்ந்து யோசித்தபோது
தன்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் அப்படியும் இப்படியுமாக
கிராமத்தை விட்டு நகர்ந்து எங்கெங்கோ சென்று விட்ட வேளையில் -
தான் மட்டும் வயலோடும் வரப்போடும் பிணைந்து கிடப்பதைக் கண்டார்...

அதற்காகக் குறையொன்றும் இல்லை...

இந்த ஊரும் வயற்காடும் களத்து மேடும்
பிள்ளையார் கோயிலும் சிவன் கோயிலும் -
இதற்குமேல் இதையெல்லாம் விட்டு விட்டு எங்கே போவது!?...

சந்தோஷமான இல்லறத்தில் ஆணொன்று... பெண்ணொன்று...

மகள் - கணவனோடு வடக்கே உஜ்ஜயினிக்கு அருகில் சென்று விட்டாள்.....

மகன் - டாக்டர்.. BSc., முடித்து விட்டு MBBS.,  மேலும் ஏதேதோ படித்து
விட்டு இன்றைக்கு பக்கத்திலுள்ள நகரத்தில் தான் இருக்கின்றான்...
என்னோடு வந்துடுங்க!... - மகனின் வற்புறுத்தல் ஓய்வதில்லை....

ஆனாலும், இவருக்கு நகர்வதற்கு மனமில்லை.. காரணம் காவிரிக் கரை...

அப்பா!.. இங்கேயும் காவிரி ஓடுதே!... - மகன் சொன்னான்...

காவிரி பிரச்னை இல்லை.. இந்தப் படித்துறை தான்...

உன் தாத்தாகிட்ட வேதோபதேசம் பெற்றது
இந்தப் படித்துறையில தான்...

கரை புரண்டு வர்ற காவிரிக்குள்ளே தாவிக் குதிச்சது
இந்தப் படித்துறையில தான்...

உங்கம்மாவுக்கு பாதக் கொலுசு மாட்டி விட்டதும்
இந்தப் படித்துறையில தான்...

உனக்கு எதிர் நீச்சல் கத்துக் கொடுத்ததெல்லாம் கூட
இந்தப் படித்துறையில தான்...

ஆகையினால - படித்துறைய விட்டுட்டு வர்றது....ங்கிறது முடியாது!...
தீர்க்கமாக சொல்லி விட்டார்..

ஆனாலும், அடிக்கடி மனைவியோடு சென்று
மகனையும் மருமகளையும் பேரனையும் பார்த்து வருவார்...

இருந்தாலும் இந்த ஆறு வருடங்களாக -
அதாவது பேரனுக்குத் திருமணமாகிய பின் -

ஏதோ வெறுமை... சொல்லத் தெரியாத சோகம்...
கிழவர்கள் துள்ளிக் குதிக்கும் இடமாயிற்று - மகனின் வீடு..

பேரனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை.. - என்று
ஏகப்பட்ட வைத்திய பரிசோதனைகள்..

நாட்களை எண்ணியாயிற்று..
நட்சத்திரங்களையும் எண்ணியாயிற்று..

என்னென்னவோ பூஜைகள்....  ஏதேதோ பரிகாரங்கள்...
எல்லாவற்றையும் செய்தாயிற்று... சாஸ்த்ரிகளே ஓய்ந்து போனார்...

தாத்தாவின் காலத்திலிருந்தே -
கோயில் குளம் என்று தெய்வ காரியங்கள் எதுவும் தடைபட்டதேயில்லை...

வருடந்தோறும் மகோத்சவ மண்டகப்படிகளில் கூட குறை வைப்பதில்லை...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ சொன்னார்கள் என்று
வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சென்றார் சுந்தரேசன்...
வெள்ளிக்கிழமை பகல்... உச்சிப் பொழுதில் பூஜை...

பயங்கர சத்தத்துடன் பூசாரியின் மீது ஆத்தாள் இறங்கினாள்...
டுன்டுன்ட... டுன்டு்ன்ட.. டுமன்டுன்ட.. டுன்டுன்..
டுன்டுன்ட... டுன்டு்ன்ட.. டுமன்டுன்ட.. டுன்டுன்!..

பூசாரியின் உடுக்கை ஓங்கி ஒலித்தது...
அர்ச்சனைத் தட்டுடன் முன்னே சென்று நின்றார்...

டேய்ய்ய்ய்ய்!.... - அர்ச்சனைத்தட்டு அந்தப் பக்கமாகப் போய் விழுந்தது...

மண்வெட்டி எடுத்த மகன்...
மனசறிஞ்சு செஞ்சதெல்லாம்!..
டுன்டுன்ட... டுன்டு்ன்ட.. டுமன்டுன்ட.. டுன்டுன்..

மாதா நீ பொறுத்திடம்மா!..
மனை வெளங்கச் செஞ்சிடம்மா!...

டுன்டுன்ட... டுன்டு்ன்ட.. டுமன்டுன்ட.. டுன்டுன்..
டுன்டுன்ட... டுன்டு்ன்ட.. டுமன்டுன்ட.. டுன்டுன்!..

என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே!..
ஙொப்பன் பாட்டன் காலத்தில இருந்து
அவங்க ஏத்தி வெச்ச தீபம்
எங்கோயில்ல நின்னு எரியுது..
அத வெச்சுத் தான் நீ இங்கே நிக்கிற!...
இல்லேன்னாஆஆ!...

போ...போயி என்ன பிராயச்சித்தம்
செய்வியோ.... செய்.... ப்போ!...

அங்கே பிடித்த ஓட்டம் வீட்டுக்கு வந்து தான் நின்றார் சுந்தரேசன்...
வியர்வை இன்னும் அடங்கவில்லை...
வாசல் திண்ணையில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்தார்...

நீண்ட சூலத்தோடு எதிர்வந்து நிற்கிறாள் காளி...

சுந்தரேசனை எட்டி உடைத்துக் கீழே தள்ளி
சூலத்தைத் தொண்டைக் குழியில் இறக்கும்போது -

ஒருவாய் தண்ணீருக்கு ஏங்குகின்றது - உயிர்ப் பறவை...

ஆஆ!... - என்ற அலறலுடன் விழித்துக் கொண்டார்...
தெருவில் யாரோ பேசிக் கொண்டு சென்றார்கள்...

நாளைக்குக் காலைலயே போய்டுவோம்..
எரநூறு கண்ணு சொல்லி வெச்சிருக்கேன்...

கண்ணு சொல்லி வெச்சிருக்கானா!?  என்ன அது கண்ணு??.. - யோசித்தார்..

பூவன்...ல நூறு.. ரஸ்தாளி அம்பது.. மொந்தன் அம்பது!..

செவியில் விழுந்ததும் திடுக்கிட்டார் - சுந்தரேசன்...
கண்ணு...ன்னா வாழக் கண்ணு இல்லையோ...
வாழக் கண்ணு...ன்னா சந்ததியாச்சே!...
தப்பு செஞ்சா சாமி... கண்ணைக் குத்துமாமே..
எப்போ.. குத்தும்.. எப்டிக் குத்தும்... ன்னு எளக்காரம் பேசினோமே!..
பிராமணனா இருந்தும் இந்தப் பாவத்தைச் செஞ்சோமே..
இந்தா... குத்திட்டாளே!... என் சந்ததியக் குத்திட்டாளே!...

ஆயீ.. மகமாயீ!.. ஆயிரங்கண் உடையவளேஏஏ!...
அல்பனைக் காப்பத்தடி ... அம்மாஆஆ!...

வாய் விட்டு அழுதார்...

ஏன்னா!.. என்னண்ணா.. பண்றது!?..

வீட்டுக்குள்ளிருந்து பதற்றத்துடன் ஓடிவந்தாள் பத்மலோசனி..
அவளைக் கூட கவனிக்காமல் படித்துறையை நோக்கி ஓடினார்..

ஓடிய வேகத்தில் காவிரிக்குள் பாய்ந்தார்...

முங்கினார்.. எழுந்தார்.. முங்கினார்.. எழுந்தார்...

படித்துறையில் அமர்ந்து கண்ணீர் வடித்தார்...



மீண்டும் முங்கினார்.. எழுந்தார்...
வேஷ்டியைப் பிழிந்தார்.. சடாரென உதறினார்...

இடுப்பில் கட்டிக் கொண்டு
நண்பன் பாலகுருவின் வீட்டுக்கு ஓடினார்...

நடந்ததையெல்லாம் சொல்லி அழுதார்...

அதைக் கேட்டு விட்டு பாலகுரு சொன்னது தான் -
சற்று முன்பாக நீங்கள் படித்த முதல் வரி!..

கண்களைத் துடைத்துக் கொண்ட சுந்தரேசன் தொடர்ந்தார்....
அம்பது வருசத்துக்கு முன்னால
பட்டாமணியர் அருணாசலம் சொன்னார்...

அந்தக் குளமும் வாய்க்காலும் தாலுகா சர்வே புஸ்தகத்தில இல்லை...
உன் தோப்பனார் பேர்ல உள்ள சிட்டா அடங்கல் எதிலயும் இல்லை...
ரீ சர்வே...யில ஆபீசர்ஸ் குறிச்சது நாலு குளம் மட்டும் தான்...
அந்த நாலும் ஏதொரு பங்கமும் இல்லாம ஊருக்குள்ள இருக்கு...

இந்தக் குளத்தைப் பத்தி யாருக்கும் அவ்வளவா தெரியாது..
அதனால ஜமாபந்தியில பிராது கொடுக்கவும் யாரும் இல்லை!..

நீ சொல்ற குளம் பொதுக் குளம் தான்...ங்கிறதுக்கு
எந்தவிதமான தஸ்தாவேஜூம் கிடையாது...
நீ போய் தாசில்தார்..கிட்டே எடுத்துச் சொன்னாலும்
என்னா... ஏது...ன்னு அவா வெவரம் கேட்கமாட்டா...

இதுல பிறத்தியார் யாருக்கும் சம்பந்தம் கிடையாது!..
இனிமே யாராலும் ஒன்னும் செய்ய முடியாது!..

எப்படியோ குளத்தைச் சுத்திலும் கள்ளி வேலியாகிடுத்து...
காலப்போக்கில கொஞ்சம் கொஞ்சமா தூர்ந்தும் போய்டுத்து...

போதாக்குறைக்கு நீயும் உம் பங்குக்கு மண்ண அள்ளிப் போட்டு
தென்னம்பிள்ளை நட்டு விட்டாய்.. பிரச்னை இல்லை போ!...

அந்தக் குளத்துல பிறத்தியார் யாருக்கும் சம்பந்தம் கிடையாது!... ன்னு
பட்டாமணியர் சொன்னாலும் -

ஆடு மாடு, கொக்கு குருவி.. - ன்னு
மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் சம்பந்தம் இருந்திருக்கே...

அங்கே தண்ணி குடிக்க வந்த எத்தனை ஜீவராசிகள் ஏமாந்து போனதோ?..
அதுங்களோட வயத்தெரிச்சல் நம்ம குடும்பத்தை சும்மா விடுமா!?...

படிச்சவன் தப்பு பண்ணினா ஐயோ..ன்னு போவான்னு பாரதியார் சொன்னாரே..

ஊர் குளத்தை மண்ணைப் போட்டு மூடினேனே...
அந்தப் பாவம் தான்...டா இப்போ முன்னால வந்து நிக்குது...

எங்க அப்பாவுக்கு நாங்க நாலுபேர்..
எனக்கு ரெண்டு பிள்ளைங்க...
என் மகனுக்கு ஒன்னே ஒன்னு!..
அந்த ஒன்னே ஒன்னும் -
இன்னைக்கு வாரிசுக்காக ஏங்கி நிக்கிது!..

சிவன் சொத்து குலநாசம்...ன்னு சொன்னாங்க!..
அது இது தான் போல இருக்கு...
மனம் தாளாமல் விம்மினார் சுந்தரேசன்

சரி.. சுந்தரேசு... மனசைப் போட்டு குழப்பிக்காதே...
பாவம் மன்னி.. பயந்திண்டு இருப்பாள்...
நீ வீட்டுக்குக் கெளம்பு...  விடியற பொழுது நல்லதா விடியும்...
நடக்குறது எல்லாம் நல்லதாவே நடக்கும்!..

எப்போ நீ செஞ்ச பாவத்துக்கு வருத்தப்பட்டாயோ
அப்பவே அதுக்கு விமோசனம் கெடைச்சிருக்கும்...

பாலகுருவின் ஆறுதலைக் கேட்டுக் கொண்ட
சுந்தரேசன் வீட்டுக்குக் கிளம்பினார்....

மறுநாள் விடியற்காலை....

என்ன.. ஐயர் இந்த மாதிரி பண்ணிட்டார்!.. - என்று ஜனங்கள் ஓடினார்கள்...

திடுக்கிட்ட பாலகுருவும் துண்டை எடுத்துத்
தோளில் போட்டுக்கொண்டு அவர்களோடு ஓடினார்....

அங்கே சுந்தரேச ஐயர் தனது தோப்பின் வடக்குப் பக்கத்தில்
வேர்க்க விறுவிறுக்க மண் வெட்டியால் வெட்டிக் கொண்டிருந்தார்...
அருகில் பதற்றத்துடன் பத்மலோசனி அம்மாள்...

ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்..
ஐயருக்கு ஏதோ கெரக தோசமாம்...
அதான் ஊருக்காக கொளம் வெட்டி கொடுக்குறாரு!...

இதற்கிடையில் - பாலகுரு குரல் கொடுத்தார்...

ஐயரு நமக்காகத் தானே கொளம் வெட்டுறாரு...
வாங்க... நாமளும் சேர்ந்து ஒத்தாசை பண்ணுவோம்!...

அவ்வளவுதான்..
ஐயருடன் ஊர்மக்களின் கரங்களும் இணைந்து கொண்டன...

அடுத்த சில வாரங்களில் -
காவிரின் தென் கரையில் கன்னி வாய்க்கால் திறக்கப்பட்டது...

என் மகன் வெட்டிய வாய்க்கால்...
என் மகன் வெட்டிய குளம்!..

- என்று, தழைத்தோடி வந்து குளத்தில் நிறைந்தாள் காவிரி...

மறு வருடம் - சொல்லி வைத்தாற்போல
சுந்தரேச ஐயர் கொள்ளு தாத்தா ஆனார்..

நாட்களும் வாரங்களும் ஓடி மறைய
பத்தாண்டுகள் ஆகி விட்டன....

பேரனைக் கண்டார்.. பேத்தியைக் கண்டார்...

அவர்களுடன் கொஞ்சி விளையாட விளையாட
பற்றும் பாசமும் அதிகமாகிக் கொண்டே இருந்தன..

ஆனாலும், காலதேவன் தனது கடமையைச் செய்தான்...

அடுத்தடுத்த மாதங்களில் -
சுந்தரேச ஐயரும் பத்மலோசனி அம்மாளும் சிவகதியடைந்தனர்...

அந்தத் தேகங்கள் இரண்டும்
இந்தக் குளக்கரையில் தான் கனலில் கனன்றன..
காவிரியால் நிறைந்த குளத்து நீரிலேயே கரைந்தன..

***

சரி.. இப்போது குளம் எப்படியிருக்கின்றது என்று கேட்கின்றீர்களா!...

அரசியல் பகடைகளால் ஆறு சுத்தமாக வறண்டு விட்டது...

ஆனாலும், அந்தக் குளத்தில் -
காவிரி சலசலத்துக் கொண்டிருக்கின்றாள்..

மகன் கட்டிய வீட்டில் தாய் இருப்பள் அன்றோ...

அதைப் போல -
மகன் வெட்டிய குளத்தில் இருக்கின்றாள் காவிரி...

அங்கின்றி வேறு எங்கிருப்பாள் அவள்!.

62 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    இன்று எனது கதையைத் தளத்தில் பதிப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கதை ஒன்றை அனுப்பி எங்களை கௌரவித்தமைக்கு எங்கள் நன்றியும் உங்களுக்கு... தொடர்ந்து அவ்வப்போது அனுப்ப வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்...

      இந்தக் கதையில்
      மறுபடி பிழை திருத்தம் செய்தபோது
      சுந்தரேச ஐயருக்காக ஒரு வரி சொல்லியிருந்தேன்...

      நல்லவேளையாக கடைசி விநாடியில் நீக்கி விட்டேன்...

      ஏனெனில்
      இன்றைக்கு பதற்றமான பொழுது...

      தங்கள் விமர்சனத்துக்கு மகிழ்ச்சி...

      நீக்கு
    3. இப்போ கொஞ்சகாலமாக ஒருத்தரையும் காணாதிருப்பது வழக்கமாகி விட்டது. கட்டுண்டோம்... பொறுத்திருப்போம்.. காலம் ஒருநாள் மாறும்...!!

      நீக்கு
    4. அதானே!...

      கட்டுண்டோம்...
      பொறுத்திருப்போம்!...

      நீக்கு
  3. என்ன இது!..
    இன்னும் ஒருத்தரையும் காணோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மறுபடி பிழை திருத்தம் செய்தபோது
      சுந்தரேச ஐயருக்காக ஒரு வரி சொல்லியிருந்தேன்...

      நல்லவேளையாக கடைசி விநாடியில் நீக்கி விட்டேன்...​//

      அது என்ன என்று என் காதில் மட்டும் சொல்லலாமே!!!

      (இங்கு தரவேண்டிய பதிலை மேலே தந்து விட்ட காரணத்தினால், அங்கு தரவேண்டிய பதிலை இங்கே தருகிறேன்!!!!!)

      நீக்கு
    2. // மனைவி மக்கள், பொன் பொருள்,பேரன் பேத்தி - என்று பந்த பாசங்களை வளர்த்துக் கொண்ட உயிர்க் குருவி எல்லாவற்றையும் உதறி விட்டுப் போவதற்குத் தயாராகவில்லை..//

      என்று எழுதியிருந்தேன்...

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்.... உலகில், அன்பு, பந்த பாசம் மேலிருந்து கீழ் நோக்கித்தான் இருக்கும். கீழிருந்து மேல் நோக்கி வரவே வராது. அது கோடியில் ஒரு இடத்தில் நிகழலாம்.

      நீக்கு
  4. காவிரி பெருக்கெடுத்திருக்கும் இந்நேரத்துக்குப் பொருத்தமான கதை துரை ஸார்...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    கதை மிக அருமையாக இருந்தது.பிராயச்சித்தம் செய்தால் எல்லாம் நல்லது நடந்தது.

    //ஆடு மாடு, கொக்கு குருவி.. - ன்னு
    மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் சம்பந்தம் இருந்திருக்கே...

    அங்கே தண்ணி குடிக்க வந்த எத்தனை ஜீவராசிகள் ஏமாந்து போனதோ?..//

    உண்மை உண்மை.

    செய்தியில் குட்டையை காணோம் என்று முறையிட்டார்கள் ஆடிப்பெருக்கு சமயத்தில் சாமி கும்பிடவந்த மக்கள் . அங்கு பெட்ரோல் பங்க் வர ஏற்பாடு நடக்குது என்று.

    அந்த உண்மை சம்பவத்திலும் மக்கள் குட்டையை மீட்டால் நல்லது.


    அற்புதமான கதையை எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கோமதி அக்கா.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி..

      தாங்கள் சொல்வதைப் போல
      பல ஊர்களில் குளங்களின் வரலாறு கோவிந்தா தான்...

      மக்களின் அலட்சியம்...
      மாற்றாரின் அராஜகம்...

      நீர்நிலைகள் காக்கப்பட வேண்டும்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார் - சென்னையில் லேக் வியூ ரோடு என்று பல இடங்களில் உண்டு. அங்கெல்லாம் லேக் இல்லை. வள்ளுவர் கோட்டம் நுங்கம்பாக்கம் ஏரியைத் தூர்த்துக் கட்டப்பட்டதுதான் (அதனால் நிறைய இடங்கள் தனியாருக்கும் போயிருக்கும்). மாம்பலத்தில் ஏரி எங்கே என்று தெரியவில்லை, ஆனால் லேக் வியூ ரோடு உண்டு. தி நகரிலும் ஏரிகள் ஸ்வாஹா. பெரும்பாலும் அரசியல்வாதிகள், ஆளுபவர்களின் அராஜகங்கள்தான்.

      நீக்கு


  6. //மகன் வெட்டிய குளத்தில் இருக்கின்றாள் காவிரி...

    அங்கின்றி வேறு எங்கிருப்பாள் அவள்!.//
    காவிரி எப்போதும் இருக்கட்டும்.

    காவிரிக்கரையோரம் எத்தனை எத்தனை கதைகளோ!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்து இனிமை..

      காவிரியின் கரை நெடுக
      கதைகள் தான்...

      நீக்கு
  7. என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே!..
    ஙொப்பன் பாட்டன் காலத்தில இருந்துஅவங்க ஏத்தி வெச்ச தீபம்
    எங்கோயில்ல நின்னு எரியுது..
    அத வெச்சுத் தான் நீ இங்கே நிக்கிற!...
    இல்லேன்னாஆஆ!...

    போ...போயி என்ன பிராயச்சித்தம்
    செய்வியோ.... செய்.... ப்போ!...//
    இந்த வரிகளை படித்தவுடன் சிலிர்த்து விட்டது.
    தாய் காத்தாள். காத்திடுவாள் ஆத்தா வீரமாகாளியம்மன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே...//

      இந்த வரிகளை எழுதும்போது
      ஆவேசம் வந்ததாகத் தான் உணர்ந்தேன்...

      நீக்கு
  8. அருமையான கதை
    நீர் நிலைகள் போற்றுதலுக்கு உரியவ
    போற்றுவோம் காப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நெகிழ்வான கதை - பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. இன்றைய நிலைக்கு பொருத்தமான கதை... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  11. முற்பகல், பிற்பகல், கர்ம வினை இதை எல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு இந்தக் கதையைப்
    படித்துக் காட்ட விரும்புகிறேன்.

    தண்ணீரைக் காய வைத்தார். இன்று தண்ணீரைக் கொண்டு வந்துவிட்டார்.

    மிக அருமையான கதை.
    மண்ணை வெட்டி எடுத்துப் போய்க் காவிரியை நிற்கக் கூட விடாமல்
    செய்த பாவப்பட்டவர்களுக்கு என்ன காத்திருக்கிறதோ.
    மிக மிக அபூர்வமாக அமையும் நல்ல கதை. சொல்வளம் அருமை.
    அன்பு துரை செல்வ ராஜுவுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //.. காவிரியை நிற்கக்கூட விடாமல் செய்த பாவம்...//

      அப்படிச் செய்தவர்கள் மனம் திருந்த வேண்டும்...

      இல்லையெனில்
      எதிர் கால சந்ததியின் சாபத்துக்கு ஆளாக நேரும் என்பது உறுதி...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. என் பதிவு ஒன்றுக்கு திரு ஜீவி அவர்கள் “வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று ஒரு கருத்து எழுதி இருந்தார் அது ஏனோ இப்போது நினைவில்

    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாக இருந்தது. கவுரவத்துக்குப் பங்கமில்லாமல், தான் ஆக்கிரமித்திருந்த குளத்தை, மீண்டும் ஊராருக்கே கொடுத்துவிட்டார். பாதி கதை படிக்கும்போதே இது அந்தப் படத்துக்கான கதையைப்போல இருக்கிறதே என்று யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. நல்லவேளை அந்தப் பெரியவர் (போட்டோவில் உள்ளவர்) இந்தக் கதையைப் படிக்கும் வாய்ப்பு குறைவு.

    படித்துறையில் உட்கார்ந்து ஆற்றைக் கும்பிட்டது 'குத்தமாய்யா'.. இப்படிச் செய்யாத குற்றங்களையெல்லாம் எங்கள் பிளாக்கில் கதாசிரியர்கள் என் மேல் ஏற்றுகின்றார்களே என்று வருத்தப்படுவார்... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இப்படியும் ஒரு நியாயமான கோணம் இதற்குள் இருக்கின்றதே..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. அருமையான கதை! ' முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ' என்ற முதுமொழிக்கேற்ப இப்போது எங்கேயும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. கதைக்கேற்ற படம் மிகவும் பொருத்தம், மிகவும் அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. பதில்கள்
    1. ///எப்போ நீ செய்த பாவத்துக்கு வருத்தப்பட்டாயோ... அப்பவே அதுக்கு விமோசனம் கிடைச்சுருச்சு///

      நிதர்சனமான உண்மை ஜி

      உடுக்கையடி ஸூப்பர்.

      கதை மனதை வருத்தினாலும் நிறைவே...

      நீக்கு
    2. அன்பின் ஜி அவர்களுக்கு நல்வரவு..

      நீக்கு
  17. அருமையான கதை. நல்ல மெசேஜ் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  18. என்ன அருமையான கதை கரு...

    இந்த நேரத்திற்கு ஏற்ற கதை தான்...மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  19. என்னதான் பணம், காசு இருந்தாலும் ஊர்ச்சொத்து, பொதுச் சொத்தின்ன் மேலேயும் கை வைத்தது எவ்வளவு அநியாயம்! ஆனாலும் அதை உணர்ந்து மனம் வருந்தித் திரும்பப் பின்னர் ஊராரிடமே ஒப்படைத்து விட்டார். கௌரவத்துக்கும் பங்கம் வரவில்லை. கதையின் ஆழமான கருத்து மனதைத் தொட்டது. முடிவு கொ.பே,பார்த்தார் என இருந்தாலும் மனிதன் மனதில் இன்னும் வாழ வேண்டும் என்னும் ஆசை மட்டும் போகவே போகாது என்பதும் நிதரிசனம்! எல்லோரும் நன்றாக வாழவேண்டும். நல்லதொரு கதையைத் தந்த துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதின் ஆசை மட்டும் விட்டுப் போவதேயில்லை...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. காவிரி இந்த வருஷம் பொங்கி வந்திருக்கிறாள். இதே போல் வருஷா வருஷம் காவிரி பொங்கி வர அரசியல்வாதிகள் மனம் மாற வேண்டும். ஆறு வறண்டு போகாமல் அந்த வீரமாகாளி தான் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களும் நீராதாரங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்...

      காவிரியை வாழ வைப்போம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. செய்த தப்பை உணரவைத்த விதமும், எண்ணி பிராயசித்தமாக, குளத்தை வெட்டி பொதுமக்களுக்கு அர்ப்பணித்ததும் எவ்வளவு மகத்தான காரியம்.கதை மாதிரியில்லை. கலியுகத்தில் இன்னும் பலகாரியங்களை மனிதர்கள் உணர வைக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை, வேண்டும்.மிகவும் உணர வைத்த படைப்பு. பாராட்டுகள். இம்மாதிரிப் படிக்கக் கிடைத்ததே. எங்கள் ஊரிலும் குப்பையைக் கொட்டியே ஒரு அழகிய குளத்தை காணாமற் செய்து விட்டார்கள். யார்மனதில் தோன்றி விடிவுகாலம் இம்மாதிரி வரப்போகிறதோ? அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா..
      உங்கள் ஊர் குளத்தில் குப்பையைக் கொட்டி அழித்த மாதிரி இன்னும் பல ஊர்களிலும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

      விடிவு காலம் வரவேண்டும்..

      தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. செய்த தப்பை உணர்ந்து, அதுவும் தன் சந்ததிகள் படும் கஸ்டங்களை உணர்ந்து திடிரென எடுத்த முடிவில் ஊர் மக்களுக்குத்தான் எவ்வளவு உபகாரம். காலங்காலமாக, காவிரி அன்னைக்கும், "என் மகனால் எனக்கென்று நிரந்தரமாய் கிடைத்த இடம்" என எவ்வளவு சந்தோஷம். ஒரு மனம் உணர்ந்து திருந்துதலுக்கு எத்தனை பயன்கள்..படிக்கும் போதே கதை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த மாதிரி நல்லவர்கள் நாட்டில் நிறைந்து விட்டால், காவிரி அன்னை மனம் மகிழ்ந்து என்றும் பூரிப்புடன் மண் மீது நித்தமும் தவழ்ந்து கொண்டே இருப்பாளே..நல்ல முடிவு. படத்துக்கேற்ற அருமையான கதை.

    நல்லதோரு கதையை தந்த சகோதரர் துரை செல்வ ராஜ் அவர்களுக்கும், அதை பகிர்ந்தளித்த தங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      >>> ஒரு மனம் உணர்ந்து திருந்துதலுக்கு எத்தனை பயன்கள்..<<<

      இன்றைய உலகத்துக்கு இது தான் வேண்டும்...
      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  23. பல்துறை வித்தகரின் கதையை உங்கள் தளத்தில் கண்டேன். மகிழ்ச்சி. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. உடுக்கை சத்த பாடல் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அசோகன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!