ஆச்சு.. அவளுக்கும் கல்யாணம் முடிக்கிற வயசு தான்... தாயில்லாம வளர்ந்துட்டா!... நல்லவனா மாப்பிள்ளை கிடைக்கணுமே!... - என்று தவித்துக் கொண்டிருந்த போது தான் இவர்கள் இரண்டு பேரும் வேலைக்கு வந்தார்கள்...
கஞ்சி கொண்டு வந்த வேளையில் ஒருநாள் பொன்னரும்பும் ராமையனும் கண்களால் கலந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்...
ராமையனோட அப்பாரு காந்தி கட்சி... நல்லவரு.. பெரிய மனசு...
உங்க இஷ்டம்.. - விருட்.. என எழுந்து உள்ளே போனாள் சீத்தாலச்சுமி...
நமக்கு உறவுமுறை இல்லே... இருந்தாலும், விடிஞ்சதும் போய்ப் பேசுவோம்.. தைரியம் கொடுடி.. மகமாயி!...
வானத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறியிருந்தன..
விடியலில் விழித்தெழுந்த நல்லமுத்து எதிரில் ராமையனின் தந்தை வருவதைக் கண்டார்...
வாங்க ஐயா.. விடியல்..ல என்ன அவசரம்.. சேதி சொன்னா வந்திருப்பனே!..
நல்லமுத்து.. நாளன்னைக்கு நம்ம வீட்டு...ல விசேசம்.. ராமையனுக்கு எங்க அக்கா மகளைக் கட்டுறதுன்னு!... பந்தக்கால் நாட்டணும்.. நீ தான்.. முன்னால நின்னு எல்லாம் செய்யனும் .. உம் மகளை அழைச்சுக்கிட்டு வந்துடு!..
குடிசைக்குள் சீத்தாலச்சுமியின் விசும்பல்... நல்லமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது...
அன்றைக்கு சாயங்காலமாக நல்லமுத்து உரல் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்க அருகே பட்டைகளை அள்ளிக் கொண்டிருந்தாள் சீத்தாலச்சுமி..
ராமையனும் அழகேசனும் ஒன்றாக வந்தனர்..
ஆசாரியாரே.. அப்பா சொல்லியிருப்பாங்க.. இனிமே வேலைக்கு வர்றதுக்கு தோதுப்படாது.. குற்றங்குறை செஞ்சிருந்தா மன்னிச்சுக்கணும்!...
நல்லாயிருப்பீங்க.. தம்பீ.. நல்லாயிருப்பீங்க!..
மெல்ல நிமிர்ந்தான் ராமையன்...
மருத மரத்தின் மறைவில் சீத்தாலச்சுமி..
அவள் கண்களில் கண்ணீர்..
இப்பவாவது ஒரு வார்த்தை சொல்லேன்!.. - கண்ணீர்த் துளிகள் கெஞ்சின..
ராமையனுக்கு நெஞ்சில் உரம் இல்லாமல் போனது..
அடுத்த சில மாதங்களில் சீத்தாலச்சுமிக்கும் கல்யாணம் கூடிவந்தது..
நம்ம குடியானவன் வீட்டு கல்யாணம் என்று ஊரே கூடி வாழ்த்தியது..
வீட்டுக்கு வீடு சீர் வரிசை வைத்தார்கள்... கல்யாணம் முடிந்த கையோடு மாமனாரையும் அழைத்துக் கொண்டு போனான் மாப்பிள்ளை...
வெயிலும் மழையுமாய் காலம் வெகு வேகமாக ஓடிப்போனது..
தொண்டையைக் கனைத்துக் கொண்டார் அழகு..
அதுக்கு அப்பறம் சீத்தாலச்சுமி..ய பார்த்தியா நீ!..
மாயவரம் பஸ்டாண்டுல ஒரு தரம்.... ஆனா, அவ என்னை கவனிக்கலை...
எம் மனசு உடைஞ்சு போச்சி அழகு.. அந்த ஏழை மனசு என்ன நெனைச்சதோ?.. நேருக்கு நேர் பார்க்கிற தைரியம் வரலையே!..
ஒரு தரம் மட்டையில சோறு அள்ளி வைக்கிறப்ப - போதும்! ..ன்னு நான் கையை நீட்டினேன்.. அவசரத்துல அவ கையோட என் கை பட்டுக்கிச்சு... அதுக்கே மூனு நாள் தூங்காமக் கிடந்தேன்...
அதுக்கு அப்புறம் ஒருதரம் கோடாலி கால்..ல விழுந்தப்ப தாவணியக் கிழிச்சு கட்டி விட்டா... என் காலைத் தொட்டவளை நான் கை தூக்கி விடலையே...ந்னு மனசு நோகுது...
அன்னைக்கு இருந்த காலக்கட்டத்தில கன்னிப் பொண்ணுங்களப் பார்க்கிறதே பெரிய விஷயம்!... அதுவும் உங்க வசதிக்கும் அவங்க இருந்த நிலைமைக்கும்!..
என்ன பணமோ.. என்ன கௌரவமோ?.. கடைசியில என்னத்துக்கு ஆகும்?.. போற உசிரை புடிச்சு நிறுத்துமா?...
அழகு!.. எம்மேல அவ ஆசை வெச்சிருக்கா... ன்னு தெரிஞ்சும் அவ கூட ஒரு வார்த்தை கூட பேசாம வந்தேனே!... அவ மனசு எப்படி துடிச்சதோ?.. அந்தப் பாவம் சும்மா விடுங்...கிறே!...
நீ.. உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..
அப்பாருகிட்டே சொன்னா.. என்னைய இழுத்துப் போட்டு ஒதைக்கிறதும் இல்லாம -
ஆசாரியார் வீட்டுக்குப் போயி அங்கேயும் கலாட்டா செய்வாங்க..ன்னு நான் பயந்திட்டேன்...
எம் மாமன் வகையறாவோ - மகா முரடனுங்க!..
ஏழைய இந்த ஊரு அம்பலத்தில ஏத்தாது... நான் என்னடா செய்வேன்!...
எல்லாத்தையும் மறந்துட்டதா ஒரு பொழப்பு... அதுக்காக இவளுக்கு எந்த குறையும் வைச்சதில்லை...
சீத்தாலச்சுமி என்னை மன்னிச்சிருப்பாளா?... ன்னு தவிச்சிக் கிடந்தேன்... அன்னைக்கு அவ வந்தா.. பதினெட்டு வயசுல பார்த்த மாதிரியே வந்தா!...
என்னது.. சீத்தாலச்சுமி வந்தாளா?.. என்னா சொல்றே!..
அதெல்லாம் சொன்ன உனக்கு வெளங்காது அழகு!..
சீத்தாலச்சுமி ஏன் வந்தா?.. எதுக்கு வந்தா?.. என்னை மன்னிச்சிட்டதால அவ வந்தா!... என் நிலமை அவளுக்குப் புரியாமலா இருந்திருக்கும்?... அவளப் பார்த்ததும் என் கண்ணு கலங்கிப் போச்சு!...
அப்படியே ஆதரவா நெஞ்சோட அணைச்சுக்கிட்டா... கண்ணைத் தொடச்சி விட்டுட்டு - வாங்க போவோம் ..ன்னா!..
நீ முன்னால போ.. பின்னாலேயே வாரேன்..ன்னு கிளம்பிட்டேன்!..
ஏ.. ராமையா!.. இந்த இருட்டுக்குள்ள எங்கே கிளம்பிட்டே!..
இனி இருட்டு ஏது?.. அதான் மன்னிச்சிட்டாளே!... ராமையனை சீத்தாலச்சுமி மன்னிச்சிட்டாளே!..
தெருவில் ஏதோ ஒரு வாகனம் புழுதியைக் கிளப்பி விட்டுச் சென்றது..
சுளுக்கென.. வேலிப் படல் திறக்கின்ற சத்தம்...
குணுக்..குணுக்.. - என்றபடி நாய் ஓடி வந்து - வாலைக் குழைத்துக் கொண்டு குதித்தது..
அழகேசன் திரும்பிப் பார்க்க - அங்கே அவரது மகன்..
தூங்காம என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கீங்க!..
நம்ம மாடி வீட்டு ராமையன் வந்தான்.. பேசிக்கிட்டு இருந்தோம்.. ராமையா?..
திரும்பினார் அழகேசன்.. அங்கே ராமையனைக் காணவில்லை...
என்னது?.. ராமையா வந்திருந்தாரா?.. அப்பா!.. ஏதாவது கனா கண்டீங்களா?..
கனா கண்டேனா?.. அவன் தானே வந்திருந்தான்...
அவரு இன்னிக்கு சாயங்காலம் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில காலமாகிட்டார்... அந்திப்பட்ட நேரத்தில கொண்டு வரவேணாம்..ன்னு - இப்போ தான் வீட்டுக்கு எடுத்து வந்திருக்காங்க...
பொழுது விடிஞ்சதும் போய் விசாரிச்சுட்டு வாங்க!.. உங்க சின்ன வயசு கூட்டாளி... உடனே சொல்ல வேணாம்..ன்னு நினைச்சேன்.. நீங்க என்ன..ன்னா அவரு வந்து பேசிக்கிட்டு இருந்தார்...ங்கிறீங்க!..