செவ்வாய், 5 அக்டோபர், 2021

சிறுகதை : சந்திப்பு - பானுமதி வெங்கடேஸ்வரன்

                                                                         சந்திப்பு

நாங்கள் அந்த புது வீட்டிற்கு குடி வந்து ஒரு மாதமாகி விட்டது. சொந்த வீடு. கனவு இல்லம் என்று சொல்லலாமா? தனி வீடு. எத்தனையோ நாட்கள் ஆசைபட்டபடி வாசலில் கார் நிறுத்தும்படி போர்டிகோ. அதைத் தவிர ஷெட், விஸ்தாரமான பெரிய ஹால், அதில் அப்பாவுக்காக ஊஞ்சல் போட்டிருந்தும் இடம் இருந்தது. மூன்று படுக்கை அறைகள், அம்மாவுக்காக தனியாக பூஜை அறை, என்று எல்லோர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து கட்டப்பட்டிருந்த வீடு. ஒரேயொரு மைனஸ் நகரத்திலிருந்து சற்று தள்ளி, என்றாலும் மனைவிக்கு அலுவலகம் முக்கால் மணி நேரப் பயணம்தான். எனக்குதான் கொஞ்சம் அதிக நேரம் பயணிக்க வேண்டும். இந்த லாக் டவுன் நேரத்தில் அந்த சிரமமும் இல்லை.

என்னுடைய பணி நேரம் மதியம் இரண்டு மணி முதல் இரவு பதினோரு மணி வரை என்று பெயர். ஆனால் சில சமயங்களில் வேலை முடிய இரண்டு மணி கூட ஆகி விடும். நான் வேலையை முடித்து விட்டு படுத்துக் கொள்ளப் போகும் பொழுது எதிர் பங்களாவில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரியும். 



மாடியில் ஒரு அறையில் என்னைப் போல் யாரோ ஒருவர் வேலை பார்க்கிறார் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் பகலில் யாராவது வசிப்பதற்கான சுவடே தெரியாது.

ஒரு நாள் எங்கோ வெளியே செல்வதற்காக புறப்பட்ட பொழுது, அந்த எதிர் வீடு கண்ணில் பட்டது. பூட்டிக் கிடக்கும் வீடு. என் மனைவியிடம்,”இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?” என்றதற்கு,”யாருக்குத் தெரியும்?” என்றாள்.

“வேலைக்காரியிடம் கேட்டுப் பார்பதுதானே?”

என்ன அவசியம்?”

“சும்மாத்தான், அங்க யாரும் இருப்பது போல் தெரியல, ஆனால் தினமும் ராத்திரியில் விளக்கு எரியறது. ஸம்திங்க் ஃபிஷி!”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை..” என்று என்னிடம் கூறி விட்டாலும் மறு நாள் வீட்டு வேலை செய்யும் பெண்மணியிடம் எதிர் வீட்டைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள் நித்யா.

"அவரு பாதி நாள் இருக்க மாட்டாரம்மா. ஏதோ படம் வரையரவரு போல, ராத்திரி முச்சூடும் வரஞ்சுகிட்டே இருப்பாருனு சொல்லுவாங்க. யாரோடையும் பேசி பார்த்ததில்ல..” பணிப்பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஓவியரா? ஜெ.., மாருதி, ம.செ., பத்மவாசன் போன்ற பெயர்கள் மனதிற்குள் வந்தன. என் ஓவிய அறிவு அவ்வளவுதான். இவர்களைப் போன்ற ஒருவரா? அல்லது வேறு லெவலா?

அடுத்த வாரத்தில் ஒரு நாள் இரவு நான் வேலை செய்து கொண்டிருந்த பொழுது கரண்ட் கட் ஆனது. ஆனால் எதிர் வீட்டில் மட்டும் தொடர்ந்து லைட் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வேளை இன்வெர்டெர் இருக்கலாம். இருந்தாலும், எனக்குள் அப்படி என்ன வரைகிறார்? சென்று பார்த்து விடலாம் என்று ஆவல் உந்தித் தள்ள எதிர் வீட்டை நோக்கி நடந்தேன்.

அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தேன். ஒரு சலனமும் இல்லை. மறுபடியும் அழைக்கலாம் என்று பொத்தானில் கை வைத்த பொழுது கதவு திறந்தது.

கதவைத் திறந்த மனிதர் சராசரி உயரத்தை விட அதிகம், ஒல்லியாக இருந்ததால் இன்னும் கொஞ்சம் அதிக உயரமாக தெரிந்தார். பின்னோக்கி வாரப்பட்ட, கருப்பும்,வெள்ளையும் கலந்த கிராப். அடர் நீல நிற ஜீன்சும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்தார்.

எளிமையான மனிதராக தெரிந்தார். சினேகமான புன்னகையொடு “எஸ்.” என்றார்.   

“ஐயாம் தியாகு, எதிர் வீட்டில் இருக்கிறேன். சமீபத்தில்தான் குடி வந்தோம்”

“ஓ அப்படியா?” என்றாரே தவிர, உள்ளே அழைக்கவில்லை. நான் கொஞ்சம் அபத்தமாக உணர்ந்தேன். எதிர் வீட்டில் இருக்கிறேன், உங்கள் வீட்டில் தினசரி இரவில் விளக்கு எரிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு ஓவியர் என்று நினைக்கிறேன்..”

“எஸ்..” என்று புன்னகைத்தவர் “ப்ளீஸ் கம் இன்” என்று கதவைத் திறந்து விட்டார்.

ஓரளவு பெரிய ஹால், ஸோபாக்கள் கொஞ்சம் புழுதி அடைந்திருந்தன. ஒரு ஒரத்தில் கான்வாஸ் பொருத்தப்பட்ட ஸ்டாண்டில் பாதி வரையப் பட்டிருந்த ஒவியம். அவர் கையில் ப்ரஷ் இருப்பதை அப்போதுதான் கவனித்தேன்.

“ஐ யாம் சாரி. படம் வரைந்து கொண்டிருக்கிறீர்களா? தொந்தரவு கொடுத்து விட்டேனா?”

“அப்படியெல்லாம் இல்லை, ஐ கேன் கண்டினியூ எனி டைம்.. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

சொன்னேன். அதன் பிறகு அவர் ரயில்வேயில் பணிபுரிந்தது, அதனால் நிறைய பயணப்பட்டது, என்பதை பற்றியெல்லாம் சொன்னார். நல்ல வேளை ஓவியம் பற்றி அதிகம் பேசவில்லை. நடுவில் ஒரு டீ வேறு கொடுத்தார். பயணம் செய்வதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு என்றும், நாளை சென்னையில் ஒரு விழா இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ளவே இங்கு வந்திருப்பதாகவும் கூறினார். அதை முடித்துக் கொண்டு ரிஷிகேஷ் செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.

“நீங்கள் ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் சென்றிருக்கிறீர்களா?”

“இல்லை.”

“ஓ! யூ ஹவ் டு விசிட்.. நான் எத்தனையோ மலைவாசஸ்தலங்களுக்குச் சென்றிருக்கிறேன்,ஆனால் இமயமலையின் செரெனிடி வேறு எங்கும் பார்த்ததில்லை”

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரோடு கழித்திருப்பேன், கை குலுக்கி விடை பெற்ற பொழுது அவர் கை ஜில்லென்று, மென்மையாக இருப்பதை உணர்ந்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட ஸ்வாரஸ்யமான மனிதராக இருந்தார். வீட்டிற்கு வந்து லாக் ஆஃப் செய்து விட்டு படுத்துக் கொண்டு விட்டேன். காலையில் எழுந்து பேப்பரை புரட்டிய பொழுது எங்கேஜ்மெண்ட்ஸ் பகுதியில் ஒரு அரை பக்க விளம்பரம் பார்த்தேன். ஒரு ஓவியருக்கான முதலாம் ஆண்டு நினைவு தின கொண்டாட்டம் என்ற அறிவிப்பில் நேற்று இரவு என்னோடு பேசிக் கொண்டிருந்த மனிதரின் புகைப்படம்.

-----------------------

   

பின் குறிப்பு:

பிராந்திய ஓளிபரப்பு தொடங்கும் முன் தொலைகாட்சியில் ஹிந்தி நிகழ்ச்சிகள்தான் வந்து கொண்டிருந்தன. அதில் வாரத்தில் ஒரு நாள் சத்தியஜித்ரேயின் படைப்புகள் ஒளிபரப்பாகும். அந்தக் கதைகளுள் ஒன்றின் கருவிற்கு கதை வடிவம் கொடுத்திருக்கிறேன். 

= = = = 


57 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.

    பானுக்கா உங்கள் கதை அசத்தல். நல்லா எழுதியிருக்கீங்க. விறுவிறு என்று வழக்கம் போல். நடுராத்திரி லைட்....பகலில் யாரும் இல்லை போல் நு வரும் போதே கொஞ்சம் யூகிக்க முடிந்தது அமானுஷ்ய முடிவு என்று. கடைசி வரி கை ஜில் மென்மை...

    அதுக்கப்புறம் பாரா இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது என்றாலும் ஒரு வருடம் முடிந்து நினைவு அஞ்சலி கொண்டாட்டம் என்பது மட்டும் என் யூகத்தில் இல்லை. நான் நினைத்தது கொஞ்சம் மாசம் முன்ன அதாவது இவர்கள் வரும் முன் என்று.

    ரொம்ப ரசித்து வாசித்தேன் பானுக்கா. செம ரைட் அப்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பயணம் செய்வதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு என்றும், நாளை சென்னையில் ஒரு விழா இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ளவே இங்கு வந்திருப்பதாகவும் கூறினார். அதை முடித்துக் கொண்டு ரிஷிகேஷ் செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.//

    ஹைலைட்!! அந்த நினைவு அஞ்சலிக்காக!!?? எனக்கு அமானுஷ்யம் வாசிக்கப் பிடிக்கும்..

    அந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.// Satyajithre studios என்று தேடிப் பாருங்கள். கிடைக்கலாம்.

      நீக்கு
  3. கௌ அண்ணா உங்கள் படம் ரொம்ப நல்லாருக்கு கதைக்குப் பொருத்தமாக

    ஆஹா அவர் ஒரு பெண்ணின் படம் தான் வரையறாரோ!!! ஹாஹா... ஆ இதுவே ஒருகதை சொல்கிறதே..எனக்கு ...அதுவும் அவர் ரிஷிகேஷ் நு வேற சொல்றதாக அக்கா எழுதியதால்..

    பானுக்கா எழுதியதும் இந்தப் படமும் சேர்ந்து ஒரு கதை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெளதமன் சாரின் ஓவியக்கலை திறமை வளர்ந்து கொண்டே போகிறது.

      நீக்கு
    2. ஆ! அவ்வ் !!! கலாய்ப்பதற்கு உங்களுக்கு ஓர் அளவே இல்லையா!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் மன, உடல் வளத்தோடு இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் பானுமாவின் கதை.
    எழுத்தாளர்களின் முத்திரை நன்றாகத் தெரிகிறது.
    ஊருக்கு வெளியில் வீடு.
    எதிர்த்தாற்போல் மிஸ்டரி வெளிச்சம்.
    இன்றுதான் பூத் நாத் படம் பார்த்தேனா.

    இந்தக் கதை தொப்பென்று வந்து விழுந்தது!!!!

    இத்தனை நாட்களாக இந்த ஆவி இங்கே இருந்திருக்கு
    ...யாருமே கண்டு பிடிக்கவில்லையே.

    மிக ஆச்சர்யமான கரு.அற்புதமான எழுத்தோட்டம்.
    திகிலாக இருக்கிறது.
    இவர் போய்க் கையை வேற குலுக்கி இருக்காரே.

    மனம் நிறை வாழ்த்துகள் பானுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் போய்க் கையை வேற குலுக்கி இருக்காரே.// அது மட்டுமா? டீ வேறு குடித்திருக்கிறார். ஹா ஹா! நன்றி வல்லி அக்கா.

      நீக்கு
    2. அதானே பானுக்கா காலையில் சொல்ல நினைத்து உங்களிடம் பேசும் போதும் சொல்ல நினைத்து விடுபட்டது...

      அமானுஷ்யம். இந்த மாதிரி அனுபவங்கள் உள்ளவர்களுக்கு அது என்று தெரியும் போது உடல் ஜில்லிட்டுப் போகுமோ!!

      என் மனமோ இந்த அமானுஷ்யத்தை உடனே மன சாஸ்திரத்தோடு முடிச்சுபோட்டுவிடும்!!!! ஹாஹாஹாஹாஹா...

      பார்ப்போம்

      கீதா

      நீக்கு
  6. வெல்டன் எபி! ஒரே மாதிரியான கதைகளைப் பார்த்து வந்த வாசிப்பு சலிப்பிற்கு மாற்றாக இந்தக் கதை இருந்தது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள். அவர் பின்குறிப்பு கொடுக்காதிருந்தால் அந்த கற்பனை மூலம் தெரிந்திருக்காது. அந்த நேர்மைக்கு பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  7. கதைக்கரு தெரிஞ்சாப்போல் இருக்கேனு நினைச்சேன். கதை படிக்கையிலேயே முடிவை யூகம் செய்யவும் முடிந்தது. இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன். அதே போல் முடிஞ்சிருக்கு. அதோடு கை குலுக்கும்போது ஏற்பட்ட "ஜில்" உணர்வும் புரிய வைத்தது. சரளமான நடையில் எழுதி இருப்பதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. ஹிஹிஹி, ரொம்ப நாள் கழிச்சுப் பேயார் வருகை. கௌதமன் சார் வரைந்திருக்கும் அந்த ஓவியரின் "ஆவி"ப் படம் அருமை. அவர் வரைவதாகக் காட்டி இருக்கும் பெண்ணின் படமும் அருமை. அந்தக் கண்கள்! ஓர் கதையே சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. எப்போவோ பார்த்த தொலைக்காட்சித் தொடரின் கரு இன்னமும் நினைவில் இருப்பதெனில் அந்தத் தொடர் எத்தனை சுவாரசியமாக வந்திருக்கணும். "கதா சாகர்" என்னும் பெயரிலேயே ஓர் தொடர் ஹிந்தியில் வந்து கொண்டிருந்த நினைவு இருக்கு. அப்போதெல்லாம் தினசரித் தொடர்கள் இருக்காது. வாரம் ஒரு நாள் குறிப்பிட்ட ஆசிரியரின் கதை தொடராக வரும். நல்ல நல்ல கதைகளைத் தொலைக்காட்சித் தொடர் வடிவில் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா. சத்யஜித்ரேயின் கதைகளில் அமோல் பலேகர் நடித்திருந்த இந்த கதையையும், ஸ்மிதா பாடீல் நடித்திருந்த இன்னொரு கதையையும் மறக்கவே முடியவில்லை.

      நீக்கு
    2. ஓ! அமோல் பலேகரா? அப்போப் பார்த்திருப்போம். ஆனால் எனக்கு நினைவில் இல்லை. தஹிகாத் என்றொரு திகில் தொடர் வாரா வாரம் செவ்வாயன்றோ என்னமோ வந்து கொண்டிருந்தது. மெட்ரோ சானலிலோ? விஜய் ஆனந்த் தயாரிப்பு, இயக்கம்னு நினைவு. சரியாக ஒன்பது மணிக்கு வரும். அருமையான தொடர்!

      நீக்கு
  11. அட!..
    வித்தியாசமான கோணம்.. அருமை!..

    ஒரு விநாடி திடுக்.. என்றிருந்தது..

    பதிலளிநீக்கு
  12. பாலைவனச் சோலை!..

    // ஒரே மாதிரியான கதைகளைப் பார்த்து வந்த வாசிப்பு சலிப்பிற்கு மாற்றாக இந்தக்கதை இருந்தது..//

    அன்பின் ஜீவி அண்ணா அவர்கள் சொல்வது மிகச் சரியே!..

    இதற்கு உள்ளிருந்து ஒரு கதை எனக்குக் கூட கிடைக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதற்கு உள்ளிருந்து ஒரு கதை எனக்குக் கூட கிடைக்கலாம்..// அது எங்கள் பாக்கியம்!.

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.அட! என்னோட கதையா? சீக்கிரம் வந்து விட்டதா? அல்லது நான் மறந்து விட்டேனோ? நன்றி!

    பதிலளிநீக்கு
  14. நம்மிடம் இதைப் போல அமானுஷ்யம் ஏகப்பட்டவை இருந்தாலும் ஒன்று கைவசம் தயாராக உள்ளது..

    பதிலளிநீக்கு
  15. மாறுதலான கோணம் இதுவும் தேவைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்தி யோசிப்பதில் உங்களை மிஞ்ச முடியுமா? என்னுடையது இரவல் சிந்தனை. மிக்க நன்றி.

      நீக்கு
  16. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
    Coleridge ன் கவிதை போல, அமானுஷ்யமும் பயத்தை கொடுக்காமல், யதார்த்தமாய் சொல்லிய விதம் அழகு. சுவாரஸ்யமான கதைக்கு நன்றி பானும்மா!

    பதிலளிநீக்கு
  17. அருமை.சொல்லிச் சென்ற விதமும்..முடிவும்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  18. படிக்கும் போதே இப்படித்தான் போகப்போகிறதோ என நினைத்தேன் சரளமாக இருந்தது. அருமை.

    பதிலளிநீக்கு
  19. சத்யஜித்ரேயின் கதைக்கருவிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வடிவம் மிக நேர்த்தியாக மிக அழகாக இருக்கிறது. பலருக்கும் கதைக்கான கரு கிடைத்துவிடும் அதை அழகுபடுத்திச் செதுக்கவதில்தான் திறமை இருக்கிறது. உங்கள் திறமை பளிச்சென்று தெரிகிறது சகோதரி.

    டீ கொடுத்திருக்கிறார் என்பது வரும் போது என் யூகம் தவறோ என்று தோன்றி, ஒருவேளை முதல் நாள் சந்தித்தவர் பாப்புலர் என்பதால் மறுநாள் பேப்பரில் மரணச் செய்தில் படத்துடன் வந்திருக்கிறாரோ என்று நினைத்தால் ஒரு வருடம் நிறைவுற்ற நினைவுஅஞ்சலி!! நல்ல ட்விஸ்ட்.

    கதையை ரசித்தேன். வாழ்த்துகள் பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. நன்றி துளசிதரன். ரேயின் கதையில் மறுநாள் அந்த கதாநாயகன் எதிர்வீட்டு வாட்ச்மேனிடம்,"நேற்று உங்கள் முதலாளியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்" என்றதும் அந்த வாட்ச்மேன்,"நேற்றா..? அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறதே" என்பான். நான் அதைக் கொஞ்சம் மாற்றினேன். டீ குடிப்பதெல்லாம் அதிலும் வரும்.

    பதிலளிநீக்கு
  21. கேஜிஜி, அந்தப் பழைய அப்பார்ட்மெண்ட் ஜன்னல், உள்ளே ஒளியுமிழும் ஹரிக்கேன் லைட் எல்லாம் தத்ரூபம் கவிதைன்னா கவித்துவம் வாய்ந்ததுன்னு சொல்லலாம். ஓவியம்ன்னா, ஓவியத்துவமா? தெரிலே. அற்புதம்ன்னு எடுத்துக்கங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல கதை. வித்தியாசமான சிந்தனை. கை ஜில்லென்று இருந்தது என்று படித்தபோது கொஞ்சம் யூகிக்க முடிந்தது.

    ஓவியமும் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  23. அருமையாக இருக்கிறது கதை.
    நான் நினைத்தேன், இப்படி இருக்கும் என்று அது போலவே இருந்தது முடிவு.

    //அந்தக் கதைகளுள் ஒன்றின் கருவிற்கு கதை வடிவம் கொடுத்திருக்கிறேன். //

    நல்ல திறமை. வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  24. கௌதமன் சார் ஓவியரை கண் முன் கொண்டு வந்து இருக்கிறார்.
    ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
  25. திகில் கதைக்கேற்ற மாதிரி நடை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!