செவ்வாய், 2 நவம்பர், 2021

சிறுகதை : அன்பில் விளைந்த நல் ரோஜா - துரை செல்வராஜூ

 அன்பில் விளைந்த நல் ரோஜா..

- துரை செல்வராஜூ -

***********


விடிந்தும் விடியாத இளங்காலைப் பொழுது..

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வெளி வாசல்..

வளைகுடா நாடுகளின் அனைத்து நகரங்களில் இருந்தும் வரிசையாக வந்து - இறங்கிக் கொண்டிருந்த  விமானங்களில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்துடன்  பயணிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர்..

பாலை வனத்தில் சிந்தியது போக மீதமிருந்தவை வியர்வையா.. கண்ணீரா!.. - என்று சொல்ல முடியாத நிலையில் அவைகளும் கைப் பெட்டிகளாக உடன் வந்து கொண்டிருந்தன...

" துரும்பா எளைச்சுப் போய்ட்டானே.. எம் புள்ள!.. " பரிதவிக்கும் அன்னையர்கள்..

" ஏம்பா!… தல முடிய ஒழுங்கா வெட்டினா என்ன?.. " - கண்ணாடியை உயர்த்திப் பிடித்தபடி உற்றுப் பார்த்து மகிழும் தந்தையர்கள்..

" வெண் சங்குக் கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட வைத்த என் அண்ணனே!... " - உள்ளம் உருகும் தங்கைகள்..

" செல்லம்.. அதோ பாருங்கடி அப்பா!.. " - என்று  - பூ முகத்தைத் திருப்பி வழியைக் காட்டினாலும் சூழலைக் கண்டு மிரண்டு தாயின் நெஞ்சில் மிதித்து ஏறி கழுத்தைக் கட்டிக் கொள்ளும் மழலைகள்..

உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக இருக்கும் அந்தச்  சூழலை விவரிக்க வார்த்தைகளே இல்லை..

" அன்பு.. என்னம்மா!.. இன்னும் அமுதாவைக் காணோம்?.. " - அருகிருந்த மகளை வினவினார் ராமநாதன்...

" இப்போ தாம்பா எமிரேட்ஸ் வந்து எறங்கியிருக்கு!.. " - என்றாள் அன்பு - அன்பரசி..

அன்பரசிக்கு ஆறு வருடம் மூத்தவள் அமுதா..  B.Sc Nursing.. ஒன்றரை வருடம் வளைகுடா நாட்டில் பணி புரிந்து விட்டு இன்றைக்குத் திரும்பி இருக்கின்றாள்...

வசதி மிக்க குடும்பம்..  ஆனாலும் ஆண் துணையில்லாத மாளிகை.. வயதாகி விட்ட தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.. சக்கர நாற்காலியில் இருந்த இருப்பாகி விட்ட அந்த அம்மையாருக்கு ஆதரவு என்று ஒரே ஒரு மகள்.. ஷபீஃகா அபு கலீல்..

கடல் கடந்த படிப்பினை உடைய ஷபீஃகா பல்கலைக் கழகம் ஒன்றில் உயர்நிலை அலுவலர்.. தாயின் உடல் நலனைக் கண்காணித்து நாளும் உயர் மருத்துவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் கொடுக்கும்  மருந்து மாத்திரைகளை வேளை தவறாமல் கொடுப்பதற்கும் மேற்கொண்டு கவனித்துக் கொள்வதற்காகவும் நல்லதொரு நர்ஸைத் தேடிய போது கைகளில் கிடைத்தவள் தான் அமுதா..

முதுமை எய்தியிருந்தவரது உடல் நலனைக் கவனித்துக் கொள்வதற்கு மட்டுமே அமுதா.. மற்ற பணிகளுக்கு வேறு வேறு பெண்கள்...

மாதாந்திரச் சம்பளம் கை நிறைய  கொடுத்து -  தன் தாயையும் அமுதாவின் கையில் ஒப்படைத்திருந்தார் மேடம் ஷபீஃகா... 

அதுவும் ஆயிற்று ஒன்றரை வருடம்..

ஒரு மாதத்துக்கு முன் அவரது தாயார் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுக் கொள்ள அமுதா அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று...

சம்பள பாக்கி என்று எதுவும் இல்லை.. ஆனாலும்  புறப்படும் வேளையில் ஒரு லட்ச ரூபாய்க்கான டிராப்டைக் கையில் கொடுத்து ஐந்து பவுன் சங்கிலியைக் கழுத்தில் அணிவித்து அமுதாவைக் கட்டித் தழுவி மேடம் ஷபீஃகா வாழ்த்திய போது அமுதாவின் கண்கள் ஆறாகப் பெருகி வழிந்தன..

***

" அப்பா.. அப்பா.. அதோ அக்கா!.. "

" எங்கேம்மா?... " - ராமநாதனின் விழிகள் ஆவலுடன் தேடின...

" அதோ ஸ்கை புளூ சுடிதாரில் வர்றாளே!.. "


" அக்கா!.. " - என்றபடி துள்ளி ஓடிய அன்பரசி - டிராலியுடன் வந்து கொண்டிருந்த அமுதாவைக் கட்டிக் கொண்டாள்...

அன்பு மகளின் உருவம் தெளிவாகத் தெரியவில்லை.. என்றாலும் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார் ராமநாதன்..

அப்பா!.. - குரல் தழுதழுக்க அருகில் வந்தாள் அமுதா..

தெரிகின்றாள்.... இப்போது நன்றாகத் தெரிகின்றாள் அமுதா..

" நல்லாயிருக்..."  - தொடர்ந்து பேச முடியாதபடிக்கு குரல் உடைந்து அழுகை பீறிட்டது அவருக்கு..

" நான் தான் வந்துட்டனே.. அப்பா!.. "

தோளில் சாய்ந்து கொண்ட மகளின் உச்சியை வருடி நெற்றியில் முத்தமிட்டார்...

இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு மழலை என்று கைகளில் கொடுக்கப்பட்ட மலர்க் கொத்து..

" என் மகள்.. என் மகள்!.. "
கண்களில் திரண்ட நீர் ராமநாதனின் கன்னங்களில் வழிந்தது..

***

கண்ணாடியில் வழிகின்ற நீரை ' விருக்..விருக்.. ' - என்று வைப்பர் துடைத்து விட - மழையினூடாக விரைந்து கொண்டிருந்தது அந்த வாகனம்..

சென்னையிலிருந்து புறப்படும் போது நன்றாகத் தான் இருந்தது வானம்... தாம்பரத்தைக் கடக்கும் போது திரண்டு வந்து மூட்டமிட்ட மேகங்கள் பெருங்களத்தூரை நெருங்குவதற்குள் பொழிந்து விட்டன.. 

மழை.. மழை.. பலத்த மழை..

அமுதாவின் தோளில் சாய்ந்திருந்த அன்பரசி அப்படியே தூங்கி விட்டாள்..

" ராத்திரி முழுக்க தூங்கலை.. உன்னைப் பத்தியே பேசிக்கிட்டு வந்தா!... "

அமுதா மௌனமாக இருந்தாள்...

ராமநாதன் தொடர்ந்தார்..

" தாயில்லாப் புள்ளயாப் போனாலும் ஒலகத்தைப் புரிஞ்சுகிட்டா... நீ அனுப்பி வைக்கிற டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு கடிகாரத்தைக் கட்டிக்கிட்டு அவ்வளவு
சந்தோசப்படுவா.. "

தாயில்லாப் பிள்ளை என்றதும் அமுதாவின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...

அப்போது அவளுக்கு பத்து வயது... ஏதோ விஷ ஜூரம் என்று அம்மாவை தர்மாஸ்பத்திரியில் சேர்த்தார்கள்..  அடுத்த சில மணி நேரத்தில் எல்லாம் பழங்கதை ஆகிப் போனது..

தாயில்லாமல் பிள்ளைகள் வளர்வது கடினம்... அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் சொல்லவே வேண்டாம்...

ஏதோ இரண்டு பக்கமும் ராசியாக இருந்ததால் தாத்தா பாட்டி வீட்டில் வளர்வது சுலபம் ஆயிற்று.. நல்லபடியாக பேத்திகளை வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற நினைப்புடன் பெரியவர்கள் போய்ச் சேர்ந்தார்கள்...

' படிக்க வைத்து ஆளாக்கி விட்ட அவர்களுக்கு - கை நிறையச் சம்பாதித்தும்  ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்றே!.. ' - என்ற வருத்தம் அமுதாவின் மனதைக் கருங்கல்லாக அழுத்தும்...

ஒருவாறு சுதாரித்துக் கொண்டாள் அமுதா..

" மேலே அவளுக்கு என்ன செய்யலாம்.. ன்னு இருக்கீங்க அப்பா?.. "

" என்னமோ டிசைனிங் படிக்கப் போறேன்னு சொன்னா.. அதெல்லாம் இருக்கட்டும்... முதல்ல உங்கல்யாணத்தை முடிச்சிட்டுத் தான் மத்தது எல்லாம்!.. கணேசன்கிட்டே சொல்லியிருக்கேன்... ரெண்டு நாள்ல ஜாதகத்தோட வருவான்.. " என்றபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்...

மழை இன்னும் விடவில்லை..

செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்..

விழித்துக் கொண்ட அன்பு - " அக்கா.. உன்னைப் பார்த்ததும் அக்கம் பக்கத்து அரட்டைக் கச்சேரிகள் எல்லாம் வருவாங்க.. பட்டும் படாம பேசி அனுப்பிடு!.. காரை வீட்டுக்காரங்க அவங்க மகளுக்கு விசா கேட்டு வருவாங்க.. அதெல்லாம் ரொம்ப கஷ்டம்... ன்னு சொல்லி அனுப்பிடு!.. " - என்றாள்..

" ஏம்மா?.."

" அவங்க எல்லாம் உன்னைப் பத்தி என்னென்னமோ... "

" அதெல்லாம் விடுடா செல்லம்!.. "

அக்காவை இடைமறித்த அன்பரசி -

" இருந்தாலும் நாக்குல நரம்பில்லாம.. " - என்றாள்..

" அன்பு!.. காய்க்கிற மரம் தான் கல்லடி படும்.. அவங்க தான் அறியாமப் பேசுறாங்க.. ன்னா நாமும் அப்படிப் பேச முடியுமா?.. அவங்களோட போராடிக்கிட்டு இருக்கிறதுக்கு இது நேரம் இல்லை.. நம்மச் சுத்தி இருக்கிறவங்களுக்காக ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டும் சின்னச் சின்ன கிப்டுகளும் வாங்கியிருக்கேன்.. நீயே உங்கையால எடுத்துக் கொடு!.. அவங்களுக்கே வெக்கமாயிடும்!.. "

" என்னக்கா நீ!.." - அன்பரசி அலுத்துக் கொண்டபோது,

' கிணு.. கிணுங்.. ' - என்றது அலைபேசி..

சட்டென எடுத்துப் பார்த்தவள் - "அக்கா இது என்ன அங்கே உள்ள  நம்பர்?.. " - என்றபடி அமுதாவிடம் நீட்டினாள்..

" மேடம் பேசறாங்க.. நான் தான் நம்பர் கொடுத்துட்டு வந்தேன்!.. " அலைபேசியைக் கையில் வாங்கிய அமுதா மகிழ்ச்சியானாள்..

" வணக்கம்..மா.. நல்லபடியா வந்து சேர்ந்து விட்டேன்.. ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்.. இங்கு காலையில் இருந்து மழையாக இருக்கிறது!.. "

-என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் கழித்து முடித்தாள்..

" என்னம்மா சேதி?.. " ராமநாதன் வினவினார்..

" நான் சொல்றேம்பா!..  அக்காவை மறுபடியும் அங்கே வரச் சொல்றாங்க!.." - என்றாள் அன்பரசி..

திடுக்கிட்டார் ராமநாதன்..

எங்க மேடத்தோட பிரண்டு... லண்டனுக்குப் போய் ஒரு மாசம் ஆச்சு..நேத்து ராத்திரி தான் திரும்பி இருக்காங்க... "

ஒரு விநாடி நிறுத்தினாள்...

" அவங்க அம்மாவையும் நான் தான் பார்த்துக்கணுமாம்.. கடவுள் துணையோட அவங்க இருக்கப் போறது இன்னும் ஏழெட்டு மாசம் தான்.. "

" வரச் சொல்லி கட்டாயப் படுத்துறாங்களா?.. "

" அதெல்லாம இல்லை... இருக்கிற கொஞ்ச நாள் அம்மா  நிம்மதியா இருக்கட்டும்!.. ன்னு அவங்க நெனைக்கிறாங்க..."

" நீ என்னம்மா சொன்னே?.. "

" நான்  எங்க மேம்' கிட்டே ஊருக்குப் போனதும் எனக்குக் கல்யாணம் ..ன்னு சொல்லி இருந்தேன்.. அதனால வரச் சொல்லிக்  கூப்புடுறதுக்கு அவங்களுக்கு யோசனை.. ஆனாலும் என்னை  எதிர்பார்க்கிறாங்க!.. "

" இன்னைக்கு இவங்க.. நாளைக்கு வேறொருத்தங்க.. இப்படியே போனா இதுக்கு முடிவு?.. "

" பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏதப்பா முடிவு!.. "

அமுதாவின் முகத்தில் மெல்லிய புன்னகை..

சாலை தெளிவாக இருந்தது..

வேகமாகச் சென்று கொண்டிருந்த காரின் கண்ணாடியில் மழைத் துளிகள் இல்லை.. 

ஆனாலும் ராமநாதனின் கன்னங்களில் நீர்த் துளிகள்..

எதனால் அவை என்று தெரிய வில்லை...

***

71 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறளுக்கேற்ற நல்ல கதை! இத்தகைய அன்பு உடையவர்களால் தான் கருணை மழை பொழிந்து இவ்வையகம் வாழ்கிறது!

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கதைக்கு அழகான ஓவியம் தீட்டிய அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இனிய நல்ல நாளுக்கான வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு துரை செல்வராஜுவின் கதை. ஆவலோடு படிக்க
    ஆரம்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. என்ன சொல்வது என்று தெரியவில்லை.
    இது போன்ற அன்பு உள்ளங்களுக்கு

    தனக்காக வாழத் தெரியாதோ.

    வந்து சேர்ந்து இன்னும் வீட்டுக்குக் கூடப் போகவில்லை.
    அதற்குள் அந்த மேடம் அழைத்தால் இவள் வாழ்வு என்னாவது.

    இது போலத்தான் அரபு நாடுகளில்
    கன்னிகள் தங்கள் வாழ்வைக் கழித்து விடுகிறார்களோ.:(

    பதிலளிநீக்கு
  7. ' படிக்க வைத்து ஆளாக்கி விட்ட அவர்களுக்கு - கை நிறையச் சம்பாதித்தும் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்றே!.. ' - என்ற வருத்தம் அமுதாவின் மனதைக் கருங்கல்லாக அழுத்தும்..."


    பாட்டி தாத்தாவுக்குச் செய்ய முடியாத பணியை நினைத்து
    செய்கிறாளா.
    இல்லை தங்கை படித்து முடித்ததும் தான்
    மணம் செய்யலாம் என்று நினைத்தாளா.

    தந்தைக்குக் கண்ணீர் விட மட்டுமே முடிகிறது.
    உருக வைக்கிறது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கை நிறையச் சம்பாதித்தும் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்றே!.. ' -// - தான் கூட இருந்து அப்பா தங்கைக்குப் பணிகள் செய்யமுடியவில்லையே என்று அமுதா நினைக்கிறாள் என்று தோன்றுகிறது. பணம் சம்பாதிக்கிறாள், அப்பாவிற்கு அனுப்ப முடிகிறது.

      நீக்கு
    2. @ வல்லியம்மா..

      // இது போன்ற அன்பு உள்ளங்களுக்கு தனக்காக வாழத் தெரியாதோ..//

      அன்பு நிறைந்த உள்ளங்கள் தமக்காக வாழ்வதே இல்லை..

      நீக்கு
    3. @ வல்லியம்மா

      // பாட்டி தாத்தாவுக்குச் செய்ய முடியாத பணியை நினைத்து
      செய்கிறாளா..//

      உள்ளம் முழுதும் தியாகத் திரு விளக்காகி விட்டது அம்மா..

      நீக்கு
    4. @ நெல்லைத் தமிழன்..

      // தான் கூட இருந்து அப்பா தங்கைக்குப் பணிகள் செய்ய முடியவில்லையே என்று அமுதா நினைக்கிறாள் .... //

      அவள் நினைப்பது தாத்தா பாட்டிக்கு செய்ய முடிய வில்லையே.. என்று தான்..

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதாக்கா

      // நல்வரவும், வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.. //

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  9. //விழித்துக் கொண்ட அமுதா// இந்த இடத்தில் விழித்துக் கொண்ட அன்பு என வந்திருக்கணுமோ?

    நல்ல கதை செவிலியர்கள் எப்போதுமே தன்னலம் பார்க்காதவர்கள். அத்தகைய ஒரு செவிலித்தாயை அறிமுகம் செய்த தம்பி துரைக்கு நன்றி. அமுதா மட்டுமில்லாமல் அன்பின் வாழ்வும் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா அக்கா..

      // விழித்துக் கொண்ட அமுதா// இந்த இடத்தில் விழித்துக் கொண்ட அன்பு என வந்திருக்கணுமோ?..//

      அக்கா சொல்வதே சரி.. நான் கவனிக்காமல் விட்டு விட்டேன்..
      இன்று ஸ்ரீராம் அவர்கள் இந்தப் பக்கம் வருவாரா..

      தெரியவில்லை.. அன்புடன் சரி செய்து விடவும்..

      நீக்கு
  10. வழக்கம் போல் புரணி பேசும் ஊர் மக்கள்! திருந்தாத ஜென்மங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறம் பேசுவதை நிறுத்தி விட்டால் தான் ஜென்மம் புனிதம் ஆகி விடுமே!..

      நன்றியக்கா..

      நீக்கு
  11. KGG sirஓவியம் சரியாகப் பொருந்துகிறது.
    கண்களில் அன்பு.

    நல்ல கதையைக் கொடுத்திருக்கும் துரை செல்வராஜுவுக்கு அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ஓவியப் பெண்ணின் நீல நிற ஆடை வெகு பொருத்தம். வாழ்த்துகள் கேஜிஜி சார்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.
    //பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏதப்பா முடிவு!.. "// அன்பான அமுதா!

    பதிலளிநீக்கு
  14. இதுவரை கருத்துரைகளைப் பதிவு செய்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி..

    அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
    சற்று பொறுத்து வருகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல முறையில் சொல்லப்பட்ட நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை... பஹ்ரைன் விமான நிலையத்தில் பார்த்த சில காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இந்திய/ஃபிலிபினோ உதவியாளர்களை வழியனுப்ப அரபிப் பெண்கள் வருவதும், இருவரும் கண்ணீர் விடுவதையும் பார்த்திருக்கிறேன். அதிலும் நர்ஸ் பணி செய்யும் பெண்கள், வயதானவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதால் அந்த நன்றி உணர்ச்சி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      // நர்ஸ் பணி செய்யும் பெண்கள், வயதானவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதால் அந்த நன்றி உணர்ச்சி இருக்கும்..//

      நானும் இதுபோல நிறைய பார்த்திருக்கின்றேன்..

      எங்கும் நலமே நிறையட்டும்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, அதில் உள்ள கஷ்டங்கள், அதிலும் குறிப்பாக கல்ஃப் தேசத்தில் உள்ள பணியாளர்களின் கஷ்டங்கள் இங்கு இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கேயே தங்கத்தை வெட்டி எடுத்துப் பணம் அனுப்புகிறார்கள் என்பது மட்டும்தான்.

    ஒருவருக்கு பணம் வருகிறது என்றால் ஒட்டிக்கொள்வதும், பொறாமையால் அதிலும் பெண் சம்பாதிக்கிறாள் என்றால் பலப் பல புரணிகளைப் பேசுவதும் சகஜம்தான்.

    ஆனாலும் தவறான இடங்களில் பணியாளராகச் சேர்ந்து எப்போடா தப்பிப்போம் என்று தவிக்கும் பல பெண்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். சேர்ந்து வாழ்க்கை நடத்தும், அதே சமயம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்கு அனுப்பி வைப்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகமெங்கும் ஒரே விதி

      நீக்கு
    2. @ நெல்லை..

      // ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, அதில் உள்ள கஷ்டங்கள், அதிலும் குறிப்பாக கல்ஃப் தேசத்தில் உள்ள பணியாளர்களின் கஷ்டங்கள் இங்கு இருப்பவர்களுக்குத் தெரியாது. //

      பின்புலன்களில் நல்லதும் கெட்டதுமாக ஆயிரம்.. ஆயிரம்.. அவ்வளவையும் சொல்ல முடிவதில்லை..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. பாசத்துக்கும் நேசத்துக்கும் முடிவு தேவை என்றே நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதானமான கதையின் நிதானமான முடிச்சு.. (எதிர்பார்த்த முடிவு.. செவிலிப் படிப்பு என்று முன் கூட்டியே..)
      பொதுவாக செவிலியர்களை மருத்துவர்களை விட கர்ம யோகிகளாகவே பார்த்திருக்கிறேன்..

      நீக்கு
    2. // பொதுவாக செவிலியர்களை மருத்துவர்களை விட கர்ம யோகி களாகவே பார்த்திருக்கிறேன்..//

      தங்களது வார்த்தைகளால் மனம் கலங்குகின்றது ...

      இவர்களது வாழ்வு சிறக்க வேண்டிக் கொள்வோம்.

      நீக்கு
  20. மனதைத் தொட்ட சிறுகதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    வழக்கம் போல் அருமையான கதையை தந்திருக்கிறீர்கள். அமுதா போன்றவர்களின் அன்பும் சேவையும், எல்லா உயிர்களுக்கும் தேவைதான். புறளி பேசுபவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்காக வேலை செய்த இடத்திலிருந்து வரும் போது பரிசுகளையும், இனிப்புகளையும் கொண்டு வந்த அமுதாவின் மனதை என்ன சொல்வது..? "இன்னா செய்தாரை" .. குறளுக்கு ஒர் உதாரணம்.

    விமானத்தில் புறப்பட்டு வந்து சேர்ந்த கதை, காரில் செல்லும் போதே முடிவடைகிறது. //பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏதப்பா முடிவு!.. "/இந்த வரிகள்தான் கதையின் முடிவைத் தொட்டு நம் மனதையும் நெகிழ வைத்துச் செல்கிறது. ஒரு சிறிதும் தொய்வில்லாமல் கதையை நகர்த்திய உங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    இந்தக் கதைக்கு பொருத்தமாக வெகு அழகான ஓவியம் வரைந்த சகோதரர் கெளதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கமலா ஹரிஹரன்..

      // வழக்கம் போல் அருமையான கதையை தந்திருக்கிறீர்கள்...//

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. மிக அருமையான கதை.

    //பாலை வனத்தில் சிந்தியது போக மீதமிருந்தவை வியர்வையா.. கண்ணீரா!.. - என்று சொல்ல முடியாத நிலையில் அவைகளும் கைப் பெட்டிகளாக உடன் வந்து கொண்டிருந்தன...//

    மனதை நெகிழ வைத்த வரிகள்.

    வரவேற்க வந்த உறவுகளின் உள்ள குமறல்கள் அனைத்தும் படித்து மனம் மிகவும் நெகிழ்ந்து போனது.

    சேவை மனபான்மையோடு செவிலியர் பணியை செய்ய ஆரம்பித்து விட்டால் தனக்கு என்று தனி வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடுவார்கள் போலும்.

    அதை உணர்த்தும் அருமையான கதை. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அருமையான கதை. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்..//

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. //அதோ ஸ்கை புளூ சுடிதாரில் வர்றாளே!.. //
    அன்பே உருவான தேவதை வானத்திலிருந்து இறங்கி வந்தது போல விமானத்திலிருந்து இறங்கி வருவதால் ஸ்கை புளூ உடையோ!

    அந்த தேவதையை மிக அழகாய் வரைந்து விட்டார் கெளதமன் சார்.

    பதிலளிநீக்கு
  24. கதை அருமை துரை அண்ணா. அமுதா என்ற பெயருக்கேற்ற மனம். செவிலியர்கள் என்றாலே அதுவும் மிகவும் கனிவான இதயம் உள்ளவர்கள் இப்படித்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. கதை மிகவும் நன்றாக இருக்கிறது துரை செல்வராஜு சார். எங்கள் ஊரில் இருந்து கல்ஃபிற்கு செல்லும் செவிலியர்கள் பலர் நினைவுக்கு வந்தார்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் ஊரில் இருந்து கல்ஃபிற்கு செல்லும் செவிலியர்கள் பலர் நினைவுக்கு வந்தார்கள்.//

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. சரியான ஏஜண்டுகள் வழிமுறைகளில் கல்ஃபிற்குச் சென்றால் நல்லது இல்லையே மிகவும் கஷ்டம். பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமான வேலைகள் கொடுமைகள் என்று ஆளாவதுண்டு. அமுதா நல்ல முறையில் சென்று வந்து மீண்டும் அழைக்கப்படுவதாகக் கதையில் வருவது நல்ல முடிவு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சரியான ஏஜண்டுகள் வழிமுறைகளில் கல்ஃபிற்குச் சென்றால் நல்லது ...//

      சரியான வார்த்தைகள்..
      நல்லதோ கெட்டதோ ஏஜெண்டுகளால் விபரீதத்தில் முடிந்தவைகளும் உள்ளன..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. அமுதாவின் சேவை அன்புள்ளம் எங்களையும் உருக்குகிறது. நல்லதொரு கதை. ஓவியமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!