புதன், 26 ஜனவரி, 2022

உங்களால மறக்கமுடியாத நபர் யார்? ஏன்?

 

 நெல்லைத்தமிழன் : 

1. வாழ்வின் குறிக்கோள் என்ன? அர்த்தம் என்ன? 

$ இப்படி கேள்வி கேட்டு என்னைப் பெரிய ஞானி ஆக்குவது உங்கள் குறிக்கோள் என்று தெரிகிறது. 

 # அறத்தின் வழி நின்று பொருள் ஈட்டி,  ஈகை முதலிய  நற்செயல்களால் பலன் சம்பாதித்து இறுதியில் இறைவனை அடைவது.

& நாமும் சந்தோஷமாக இருப்பது, மற்றவர்களுக்கும் நம்மால் முடிந்தவரை சந்தோஷத்தைக் கொடுப்பது - இதுதான் என்  குறிக்கோள். வாழ்வின் அர்த்தம் எல்லாம் தேடி பிடிக்கமுடியாது. அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்ற ஒன்று. 

2. உங்களால மறக்கமுடியாத நபர் யார்? ஏன்?

$ முதலில் மறக்க முயற்சித்தால்தான் கண்டுகொள்ள இயலும் 

# என்னால் முற்றிலும் மறக்க முடியாத நபர் நானே தான். காரணம் ஈகோ என்று சொல்லப்படும் அகம்.

& அப்படி ஒரு நபரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. நூற்றுக்கணக்கில் உள்ளனர். யாரிடமிருந்தெல்லாம் நான் விஷயங்கள் கற்றுக்கொண்டேனோ அவர்கள் எல்லோருமே மறக்கமுடியாத நபர்கள்தான்.  

3. மாறிவரும் காலங்களிலும் எப்போது தூங்கச் செல்வது, எழுவது உத்தமம்?  

$ தூக்கம் வரும்போது தூங்குவது; தூங்கி முடித்த பின் எழுவது இரண்டும் உத்தமம் 

# என்னதான் காலம் மாறினாலும்,  நம் உத்தியோகத்திற்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்ற ஒரு காரணம் தவிர, வேறு எந்த காரணத்தை முன்னிட்டும் காலம் தாழ்த்தி தூங்கச் செல்வதும், காலம் தாழ்த்தி எழுவதும்  நலம் தரும் செயல் அல்ல என்பது என் அபிப்பிராயம்.

& என்னுடைய பதினைந்தாவது வயதிலிருந்து, காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துவிடுவது என்பது, படித்த பள்ளியின் வகுப்புகள் ஆரம்பமாகும் நேரம் காரணமாகவும், அதற்குப்பின் வேலை பார்த்த தொழிலகத்தின் வேலை நேர காரணமாகவும் அமைந்துவிட்டது. ஓய்வு பெற்ற பிறகும் அதே பழக்கம் தொடர்கிறது. உறங்குவது முன்பு எல்லாம் இரவு பத்து மணிக்கு. இப்போது - நேரம் கிடைக்கும்போதெல்லாம் !! 

4. நம் சமூக அமைப்பு ஏன் பெண்களுக்கு மிக அதிகப் பளுவும் ஆண்களுக்கு நிறையச் சலுகைகளும் தரும்படியாக கட்டமைக்கப்பட்டிருக்கு?

$ அப்படியா? பின் ஏன்  ஆக்கல்,அழித்தல்,காத்தல் இவை அனைத்தையும் ஆண் கடவுளர் எடுத்துக் கொண்டார்கள் என்பது இப்போதல்லவா புரிகிறது! 

# படைப்பில் பெண் என்பவள் ஆணைவிட உடல் அளவில் இளைத்தவள் என்பதால் பெண்ணுக்கு ஆண்தான் பாதுகாப்பு - பெண்ணின் நல வாழ்வுக்கு ஆண் பொறுப்பு என்று ஆகிவிட்டது. இந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டுமானால் ஆணுக்கு நல்ல ஆரோக்கியமும் சம்பாதிக்கும் திறனும் இருக்க வேண்டும்.  எனவே வீடு தொடர்பான சகல பொறுப்புகளும் ஆண் செய்ய இயலாது போய்விடுவதால் அந்த முழுச் சுமையும் பெண்ணின் தலையில் விழுவது ஒரு காரணமாக இருக்கலாம்.

5. எந்தப் பாலிசியையும் விடாமல் பின்பற்றினால் வாழ்க்கை நமக்கு மட்டுமில்லாமல் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கஷ்டமாயிடுமா?

$ Take it easy policy கூடவா?

# வாழ்க்கை சரிவர நடக்க பாலிசி அவசியமே தவிர பாலிசிகளுக்காக வாழ்க்கையை செப்பனிட முடியாது.  விடாமல் பின்பற்றுவது என்று சொல்லும்போதே அதை விடவேண்டிய தேவை வருகிறது என்று ஆகிறது அல்லவா ?

( நெ த - கேட்டுக்கொண்டபடி, அவருடைய மீதி கேள்விகள், அதற்கான எங்கள் பதில்கள் அடுத்த வாரம் வெளியாகும். ) 

ஜெயக்குமார் சந்திரசேகர் : 

உத்தரபிரதேசத்தில் இருந்து அழைப்பு. வேதாளம் தேர்தல் வேலைகளுக்காக உத்தரபிரதேசம் சென்று விட்டது. போவதற்கு முன் "நான் கோண்டுவிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். இந்த வாரக் கேள்விகளை அவன் கேட்பான்" என்று சொல்லிவிட்டு போனது. 

& வேதாளம், உ பி தேர்தல் முடிவு குறித்து தன்னுடைய கருத்து கணிப்பை எனக்கு மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பிவைத்தால்தான் நான் நம்புவேன். இல்லையேல் வேதாளத்தின் தலை - - - - - ??!!!

ஸ்ரீரங்கத்து கோவிந்து என்கிற கோண்டு என்னிடம் வந்து "மாமா இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிஞ்சுக்கணும் என்ற அவசியமில்லை. ஆனால் தெரிஞ்சு கொண்டால் நல்லதுதானே?" என்று கமலகாசன் பாணியில் கேட்க , " சரி கேள்வி எப்படி?"  என்று கேட்டேன்.

& ஹி ஹி - இதை நான் நம்பமாட்டேன் - கமலஹாசன் பாணி என்றால், கேள்வி என்ன என்பது அவருக்கும் புரியாது; நமக்கும் புரியாது!!

"சயன்ஸ் கேள்விகள் தான்" என்றான்.

"ஐய்யோ சயின்ஸ் எனக்கு தெரியாதே. வேணும் என்றால் கோபால் (COBOL) பற்றி கேளேன்." என்றேன் நான். "சரி அப்போ எ பி ஆசிரியர்களிடம் கேட்டு சொல்லுங்களேன்" என்றான். "OK" 

& (// வேணும் என்றால் கோபால் (COBOL) பற்றி கேளேன்//.) சயின்ஸ் கேள்விகளுக்கு கோபால(னி)ன் வாரிசுகள் பதில் சொல்கிறோம். (எங்கள் அப்பா கோபாலன் )

இதோ கேள்விகள். 

1. மஞ்சள் மஞ்சள் நிறம். சுண்ணாம்பு வெள்ளை நிறம். இரண்டையும் கரைத்தால் சிவப்பு நிறம். ஏன்? எப்படி? 

# எல்லாவற்றையும் ஏன் எப்படி என்று கேட்க இயலாது. அது அப்படித்தான் என்பதே பதிலாக இருக்கும்.  வண்ணங்கள் ரசாயனங்களால் உண்டாகும் போது ரசாயனக் கலவைகள் பிரத்யேகமான வட்டங்களைத் தோற்றுவிக்கும். 

& மஞ்சளில் - டார்ட்டாரிக் அமிலம் உள்ளது. சுண்ணாம்பில் கால்ஷியம் ஹைடிராக்ஸைட் உள்ளது. இவை இரண்டும் சேரும்போது இரசாயன எதிர்வினையாக அவற்றிலிருந்து சிவப்பு நிறம் வெளியே தெரிகின்றது. 

2. வெற்றிலை பச்சை. பாக்கு பாக்கு நிறம். இரண்டையும் மென்றால் சிவப்பு நிறம். ஏன்? எப்படி?

 # முன் சொன்னதே பதில். 

& சில பெயர் மாற்றங்களுடன், இதற்கும் அதே பதில்தான். 

3. களிமண் மண் நிறம். மணல் மணல் நிறம். இரண்டையும் சேர்த்து செங்கல், சட்டி போன்றவற்றை சுட்டு எடுத்தால் சிவப்பு நிறம். ஏன்? எப்படி? 

# அதே கேள்வியின் வேறு அவதாரம். சுமார் அப்பா +  ஜீனியஸ் அம்மாவுக்கு மக்குப் பிள்ளை பிறக்கிறதே அது போல. 

& அதுதான் அக்கினியின் மகிமை. வேறு எந்தப் பொருளையும் அக்கினியில் இட்டால் அவை சம்பலாகிவிடும். ஆனால் - மண் மட்டும் அக்கினியால் நிறம் மாறுமே தவிர, அழியாது. 

("என்ன இது நான் கம்யூனிஸ்ட் ராஜ்யத்தில் இருப்பதால் இப்படி சிவப்புக் கேள்விகளாக கேட்கிறாயா? " என்றேன் நான்) 

"சரி பச்சை நிறத்தில் ஒரு கேள்வி" 

4. உணவு உற்பத்தியின் முதற்படி தாவரங்கள். தாவரங்கள் ஒளிச்சேர்க்கை (photo synthesis) மூலம் தங்களுக்கும் மற்றவர்க்கும் உணவு உற்பத்தி செய்கின்றன. இதற்கு பச்சையம் தேவை ஏன்? 

# பச்சையம் தான் தாவர உணவின் அஸ்திவாரம் என்பதால்தான்.

"சிவப்பு போனால் பச்சையா?" நான்.

" சரி பிடியுங்கள்  நிறமல்லாத கேள்வி."

5. மணலில் தயாரிக்கப்படும் கண்ணாடி ஏன் ஒளி புகும் தன்மையுள்ள நிறமற்றதாகி விடுகிறது? 

# மண்ணாங்கட்டிகளுக்கும் தெளிவு பிறக்க வழி உண்டு என்பதை நமக்கு உணர்த்தத் தான்.

பொதுவாக, ஒரு பொருளின் பகுதிகளைக் கூட்டுவதால் மட்டும் அதைப் பெற இயலாது (A thing is not the sum of its parts) என்பதை  நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

போதுமடா சாமி. இப்பவே கண்ணைக்கட்டுது என்கிறீர்களா?

அதுதான் முதலிலேயே சொல்லி விட்டாயிற்றே. பதில் சொல்லா விட்டாலும் பரவா  இல்லை. 

இந்தக் கேள்விகளை வாசகர்கள் பக்கமும் கொஞ்சம் எறிந்து பாருங்களேன். யாரேனும் நல்ல விடை கொடுக்கக்கூடும்.

& வாசகர்களே ! மேலே இருப்பவற்றைப் படித்த பிறகு இதுவரை நீங்கள் யாராவது தெளிவாக இருந்தீர்கள் என்றால், மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கு உங்கள் பதிலை சொல்லுங்கள். 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

உங்கள் குழந்தைகள் சிறுவர்களாக இருந்து பொழுது அவர்களை எதற்காகவாவது அடித்திருக்கிறீர்களா?

# ஓரிரு முறை அடித்ததுண்டு.  ரொம்பக் கடுமையாக  அடித்ததில்லை. அடித்ததற்கான காரணம் நினைவில் இல்லை.

& அடித்தது உண்டு. அப்புறம் மனைவி என்னிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த நாளிலிருந்து அடிப்பதை நிறுத்திவிட்டேன். 

இப்போது கூட சினிமாகாரர்களை மக்கள் முன்மாதிரியாக கொண்டிருக்கிறீர்களா?

# துரதிருஷ்ட வசமாக சினிமாக்காரர்கள் பழக்கி வைத்திருப்பது, மக்கள் யாரோ ஒருவரை கண்மூடித்தனமாக ஆராதிப்பதுதான்.  இப்போது சினிமாக் காரர்கள் அந்த ஆராதனைக்கு உள்ளாகவில்லை என்பது சரியாக இருக்கலாம்.

& எந்த சினிமாக்காரரையும் முன்மாதிரியாக எப்பொழுதுமே கொண்டதில்லை. யாரோ எழுதிய வசனத்தை, யாரோ எழுதி யாரோ இசையமைத்த பாடல்களுக்கு வாயசைப்பவரை எதற்காக கொண்டாடுவது? 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்கள் :

1) 



2) 

3) 


( மூன்றாவது படத்தில் ஒளிந்திருக்கும் எண் எது?) 

= = = = =

எல்லோருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள். 

= = = = =

101 கருத்துகள்:

  1. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து..

    குறள் நெறி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. பச்சையம் - பச்சை - பசுமை..

    தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு..

    தூரத்துப் பச்சை அடர் நிறத்தில் கறுப்பாக(நீலமாக)த் தான் தெரியும்..

    பச்சையம் செரிக்கப்படுவது இல்லை..

    கண்ணுக்குப் புலப்படும் கடலின் நிறம் பச்சையா நீலமா கறுப்பா?..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..

    ஜெய்ஹிந்த்.. ஜெய்ஹிந்த்..

    பதிலளிநீக்கு
  5. //எதற்காகவாவது அடித்திருக்கிறீர்களா?// - இது என் அறியாமையால் விளைந்தவை. 1. குழந்தை என்பது நாம் சொன்னதை அப்படியே செய்யும் என்று பொம்மை மாதிரி நினைத்த தன்மை. இரண்டு சட் என்று வரும் கோபம். 2. கொஞ்சம் வளர்ந்தபிறகு ( 3ம் வகுப்பு போன்றவையே வளர்ந்தது) பஸ் வந்துடும், 6:55க்கெல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு-ஹிஹி வீட்டுக்கு வெளியில் போகணும் என்பதில் எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகிடும். அவங்கதான் போகப்போறாங்க எனக்கு இதில் பங்கு இல்லை என்றாலும். அப்போவும் ரொம்ப கோபப்படுவேன்.

    அப்புறம் கோபப்பட்டு அடித்தபோதும், மனசு தவறைப் புரிந்து நான் காணொளியும் எடுத்திருக்கேன். நிறைய வீடியோ பொதுவாகவே எடுத்திருக்கேன். அதையெல்லாம் பார்க்கும்போது செய்த தவறுகளும், பசங்களுக்குள்ளேயே வேறுபாடு காண்பித்ததும் (பையன் சின்னவனே என்று... இன்னொன்று நான் நான் ஃபீமேல் ஷாவனிஷ்டாக இருந்தேன் ஹாஹா) பளிச்னு தெரியுது. என்ன பண்ணறது... கடந்தகாலத்தை ரப்பர் போட்டு அழிக்கமுடியுமா?

    பதிலளிநீக்கு
  6. //இந்தக் கேள்விகளை வாசகர்கள் பக்கமும்// - எனக்குத் தெரிந்ததெல்லாம், பெரும்பாலும் கெட்ட பசங்களால் நல்லவங்க கெட்டுப்போகிறார்களே தவிர, கெட்ட பசங்க நல்லவங்களா மாறுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நல்லவர்கள் மற்ற நல்லவர்களைக் கண்டால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் கெட்ட பசங்களில் பெரும்பான்மையினர், 'நீ மட்டும் என்ன நல்லவனாக இருப்பது' என்று வான்மத்துடன், நல்லவனை கெடுக்க முயற்சிக்கிறார்கள்.

      நீக்கு
  7. மூன்றாவது படத்தில் 7 தெரியுதுன்னு எழுதணுமா 77ன்னு எழுதணுமா?

    அதுசரி... நீங்கள் 77 கூல்டிரிங் சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படீன்னா என்னன்னு சட்னு புரியுதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது - கோ கோ --- கோலா அகற்றி ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் கொண்டுவர முயற்சி செய்த பானம்தானே?

      நீக்கு
    2. what a coincidence!! Just few hrs back I was reading about this 77 cool drink in Ananda Vikatan pokkisham book.

      நீக்கு
    3. Thank you Sri. Enjoyed all the theeni photos in your blog!! Very nice. Matches with my taste!!

      நீக்கு
  8. //காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துவிடுவது என்பது, // - சமீபகாலமாக இந்த நல்லபழக்கத்தை (9 மணிக்குத் தூங்கும் பழக்கத்தையும்) விட்டுவிட்டேன் என்பது வருத்தம்தான். பெங்களூர்ல காலைல எழுந்துக்க (4:30க்கு) கொஞ்சம் சோம்பேறித்தனமா இருக்கு..ஆனால் குளிர்ந்த நீர்தான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர்ந்த நீர் !! சாமியோவ் - பெங்களூரில் அது என்னால் இயலாத விடயம் !!

      நீக்கு
    2. கில்லர்ஜி காத்து அதிகமா அடிச்சுடுச்சு விடயத்துல

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன நிம்மதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. போன வாரம் கேட்ட பிரச்னைக்குரிய எண்ணுக்குப் பலன் சொல்லும் விஷயம் இந்த வாரம் சொல்ல மறந்துட்டீங்களா? அல்லது என்னைத் தவிர யாருக்குமே பிரச்னை இல்லை என்று வைத்துக் கொள்வதா? எனக்கு மெயில், வாட்சப் மூலம் பதில் கொடுத்திருந்தீர்கள். அதோடு அந்தப் பிரச்னை முடிஞ்சு போச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்சப்ல கீசா மேடத்துக்கு பதில் கொடுத்த் தனக்குப் புதுப். பிரச்சனை வருமான்னு ஜோசியம் பார்த்திருந்திருக்கணுமோ?

      நீக்கு
    2. மேற்கண்டவை எல்லாமே சரிதான்.

      நீக்கு
  11. மறுபடியும் பள்ளி வகுப்பை நினைவு கூர்ந்த கேள்விகள் திரு ஜேகே அவர்களால் கேட்கப் பட்டிருக்கின்றன. பாலிசி என நெல்லை எதைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அன்றாட வாழ்க்கையில் சகஜமாக நாம் பின்பற்றும் சில விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரத்தான் செய்யும்.செய்கிறது. மற்றபடி பெரிய லட்சியம் ஏதும் இல்லை. எனைப் பொறுத்தவரை அமைதியான வாழ்க்கை! அதுவே இறைவன் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகளை நான் அடிச்சிருக்கேன். படிப்பு விஷயத்தில் பெண் தான் அடிக்கடி அடி வாங்குவாள். மற்ற விஷமங்களில் பையருக்கு! முழுப்பொறுப்பும் என்னிடமே இருந்ததால் வீட்டுச் சுமைகளுக்கு நடுவில் அவங்க புரிஞ்சுக்காமல் படுத்தறாங்களேனு கோபம் வரும். பின்னால் பச்சாதாபமும் வரும்.

    பதிலளிநீக்கு
  13. என் அப்பா வீட்டில் பெண்/ஆண் பாகுபாடு அப்பா நிறையப் பார்ப்பார். எனக்குக் கட்டுப்பாடுகள், சாப்பாட்டில் விதிமுறைகள் நிறைய உண்டு. அதே அண்ணா/தம்பிக்குக்கிடையாது. நெல்லை சொல்லும்போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவில் வருவார். அவருக்கும் பெண் குழந்தைகள் எனில் சுமை/செலவு என்னும் எண்ணம் உண்டு என்பதோடு அதைச் சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்தார். அதுவானும் அந்தக்காலம் என்றால் நெல்லை இப்போதும் இந்தக் காலத்திலும் அப்படியே இருந்திருக்கார். ஆனால் இப்போ மாறி விட்டார் என்பதில் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் என்பதால் கொஞ்சம்கூட கட்டுப்படுத்தியதில்லை. இன்னொரு ஸ்டூடன்ட் (ஒற்றை மகள் வீடு ஐந்தாம் வகுப்பு) வீட்டில் ஸ்லீப் அவருக்கு அனுமதித்ததில்லை. இப்பவும் சிலவற்றிர்க்கு அனுமதி தருவதில்லை மனதளவில் வருத்தமாக இருந்தபோதும்.

      I always tell her, let us go back in time and i will do certain things which I didn't do. அவ சொல்லுவா... ஆஹா அப்படியே பண்ணிட்டாலும்... கற்பனைதான்.. You will be like that onlyம்பா ஹாஹா

      நீக்கு
    2. பதின்ம வயசு வரை பையனுக்கு கொஞ்சம் செல்லம் Spent little more time with him than her which was a mistake

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. நாங்க இரண்டு குழந்தைகளையுமே சரிசமமாகவே நடத்தினோம். இதைப் பார்த்தவர்கள் அனைவருமே சொல்லி இருக்காங்க. ஆனாலும் எங்க பெண் மனசில் அவளுக்கு நாங்க முக்கியத்துவம் கொடுக்கலைனு ஓர் எண்ணம் அப்போவும்/இப்போவும்/எப்போவும் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் என் மாமனார் மாமியாரே என்னை வித்தியாசம் பார்க்காமல் வளர்ப்பதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லுவாங்க.

      நீக்கு
    5. ஓ ! அப்படியா! நானும் என் மனைவியும் கூட எங்கள் பையனையும், பெண்ணையும் அப்படித்தான் வளர்த்தோம். அவர்களும் அதை உணர்ந்து வளர்ந்தார்கள்.

      நீக்கு
  14. சினிமா நடிகர்களை முன்மாதிரியாகக் கொண்டு தானே இக்கால இளைஞர்கள் வளர்கின்றனர். முன்னணி நடிகர்களின் படம் வெளிவந்த அன்று பார்த்தால் எங்கே பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றிய கருத்துகள்/விமரிசனங்கள்.ஆராதனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது! பல இளைஞர்களுக்கு value என்றால் என்ன என்று தெரியவில்லை.

      நீக்கு
  15. நானும் காலை நாலரைக்குள்ளாக எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவள் தான். ஆனால் சமீப காலங்களில் அதாவது இரண்டு, மூன்று வருஷங்களாக நாலரைக்கு முழிப்பு வந்தாலும் எழுந்திருப்பதில்லை. மெதுவாக ஐந்து/ஐந்தரைக்குத் தான் எழுந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. முதல் படம் எனக்குப் புரியவில்லை. அடுத்த படத்தில் நம்ம முன்னோரை எடுத்திருப்பவர் மிகவும் திறமை சாலி. கடைசிப்படத்தில் செல்லங்கள் அழகோ அழகு. எனக்கு 7 அல்லது 77 என்பதைத் தவிர்த்து வேறே எண்கள் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் கிட்டிப்புள் ..

      நீக்கு
    2. ஓ! முதல்லே அதுவாத்தான் இருக்கும்னு நினைச்சேன். பின்னர் என்னமோ பூமராங் நினைவு வந்தது. சரினு விட்டுட்டேன். இதன் கூர்மையான பாகம் நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டிய அனுபவம் உண்டு.

      நீக்கு
    3. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  17. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள். இனியாவது நாட்டில் மக்கள் மனம் மாறி ஒற்றுமையாக நம் நாடு முன்னேறப் பாடுபட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. அமேசான் காரன் காலணியில் (ஷூ)நமது தேசியக் கொடியை அச்சிட்டு நம்மிடமே விற்றுக் கொண்டிருக்கின்றான்..

    தினமலரில் படத்துடன் செய்தி வந்திருக்கின்றது..

    America, UK, France இங்கெல்லாம் அவர்களது தேசியக் கொடியை உள்ளாடையாக உபயோகித்துக் கொள்வதில் தடையில்லை..

    நாடும் கொடியும்
    நமக்கு அப்படியில்லையே..

    அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!..

    என்று முழங்கிய மகாகவியின் வாக்குப்படி, அது -

    தாயின் மணிக்கொடி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Our culture is different. அவங்க பேச்சிலும் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகள்

      நீக்கு
    2. மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
      எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
      விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
      எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

      நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
      இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது.
      கண்ணதாசன்.

      நீக்கு
  20. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    இந்த நாளும் எல்லா நாட்களும்
    ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும் பதில்களும் உற்சாகமாக இருந்தன.

    முதல் படம் பேஸ் பால் ஆடும் பையன்
    வயல் வெளியில் என்ன செய்கிறான்.

    இரண்டாவது கடலூரில் ஒரு அனுமார்
    மூன்றாவது படத்தில் யானைகள் அழகு.

    ஒரே ஒரு 7 தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  23. கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.
    அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. நானும் காலை நாலு, ஐந்துக்குள் எப்போதும் எழுந்து விடுவேன். இங்கு வந்த பின் குழந்தைகளின் இரவு ஷிப்ட் வேலைகளில் அந்த நல்ல பழக்கம் மாறி விட்டது.

    குழந்தைகளை அப்போதைய சற்று பொறுமையின்மையால், எப்போதாவது சில சமயங்களில் கண்டித்து அடித்து விட்டு அப்புறம் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன்.

    படங்கள் அருமை. 1.) கிட்டிப்புள் கிரிக்கெட்டை நினைவுபடுத்துகிறது.

    2.) நகரத்துக்கு வந்தால் சாப்பிட ஒன்றும் கிடைக்காது என நண்பர்கள் சொன்னதை கேட்காமல் வந்து விட்டோமே என வானரம் யோசிக்கிறது.

    3.) "இப்படியே படுத்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இன்னும் உடம்பு பெருத்து விடும். எழுந்து காலாற நடப்போம் வாவென" கஜேந்திர உபதேசம் நடக்கிறது.
    அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம். இனிய குடியரசு தின வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்!

    பதிலளிநீக்கு
  26. //தூக்கம் வரும்போது தூங்குவது; தூங்கி முடித்த பின் எழுவது இரண்டும் உத்தமம்// கரெக்ட்! என் பயலாஜிகல் க்ளாஸ் இரவு 11:30க்கு தூங்கச் சொல்லும். அப்போது அதன் பேச்சை கேட்காவிட்டால் 2:30க்குத்தான் தூக்கம் வரும். பெங்களூரில் காலை 6:30 - 6:40 வீட்டு வேலை செய்யும் பெண் வந்து விடுவாள் அதனால் காலை ஆறு மணிக்கு மேல் தூங்க முடியாது. Otherwise 5:30க்கு எழுந்து விடுவேன். பகலில் மூன்று மணிக்கு கண்ணை சுழற்றும்.

    பதிலளிநீக்கு
  27. பயலாஜிகல் க்ளாக் என்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  28. எனக்கும் 7 தான் தெரிகிறது. ஆனால் அது வெளிப்படையாக தெரிகிறது. இவர் ஒளிந்து கொண்டிருக்கும் எண்ணை அல்லவோ கேட்கிறார்??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே (ஆனால் கேட்டவரே இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார் - ரகசியம் - யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !!)

      நீக்கு
  29. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய குடியரசு தின வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

      நீக்கு
  30. அனைத்து கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    இரவு எத்தனை மனிக்கு படுத்தாலும் 4.30க்கு எழுந்து விடும் பழக்கம் . பகலில் தூங்க மாட்டேன். இப்போது உள்ள பிள்ளைகளுக்கு நினைத்த நேரத்தில் தூங்க முடிகிறது, நினைத்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள். காலையில் வேலைக்கு போகும் போது விரைவில் எழுவதும், ஆபீஸ் விடுமுறை என்றால் மெதுவாக எழுந்து கொள்வதையும் வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  31. நான் இரவு எத்தனை மணிக்கு படுத்தாலும் 4.30க்கு எழுந்து விடுவேன். பகலில் தூங்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  32. கிட்டிபுல் விளையாட்டில் கில்லி நான் என்கிறார்.

    குரங்கார் காத்து இருக்கிறார் கீழே இறங்கி பானி பூரி சாப்பிட
    எனக்கு மூன்றாவது படத்தில் எண் எதுவும் தெரியவில்லை, யானைகளை மட்டுமே உற்றுப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  33. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    கேள்வி பதில்கள் எங்களையும் மீட்டுப் பார்க்க வைக்கின்றன.

    1)கிட்டிப் புல் ஒரு கை பார்கிறேன்.

    2)ரொட்டி சூடாகவே இல்லை இந்த ரொட்டி வேண்டாம்.
    3) கரும்பு யூஸ் தானே வேண்டும் வேண்டி தருகிறேன் எழுந்து வா.

    பதிலளிநீக்கு
  34. கேள்விகளும் பதில்களும் ஆசிரியர்களின் அவரவர் கருத்துகளாக நன்றாக இருக்கிறது.

    சிறு வயது முதலே பழக்கம். பாட்டி என்னக் கோயில் வாசல், கொடிமரம் கீழ் பெருக்கித் தெளித்துக் கோலம் போட 4 மணிக்கு எழுப்பிவிடுவார். அது அப்படியே பழகிவிட்டது. இப்போதுவரை. உடம்பு முடியாமல் போனால் அசந்து தூங்கும் போது மட்டும் 5.30. அலலது 6 க்க்குள். மதியம் தூங்கும் பழக்கம் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதியம் தூங்கும் பழக்கம் இல்லை.// - அப்படி தூங்குவதற்கு நேரம் கொடுத்துடுவோமா என்ன? இன்னைக்கு வடகம் போடு, சாயந்திரம் அடை இருக்கட்டும்,என் அறையை கொஞ்சம் சரிப்படுத்திடு... என்று பெரிய லிஸ்ட் வச்சிருக்கமாட்டோமா என்ன?

      நீக்கு
    2. :)) கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. ஆ நெல்லை இதுக்குக் கமென்ட் போட்டேனே...இன்று மீண்டும் ரோபோ வந்தது அப்படிக் காணாமல் போய்விட்டதோ..

      //அப்படி தூங்குவதற்கு நேரம் கொடுத்துடுவோமா என்ன? இன்னைக்கு வடகம் போடு, சாயந்திரம் அடை இருக்கட்டும்,என் அறையை கொஞ்சம் சரிப்படுத்திடு..//

      ஹாஹாஹாஹாஹா அதே அதே....என்னை வம்புக்கிழுக்காம விடமாட்டார் இந்த அண்ணன்!!!
      கரீக்டா சொல்லிட்டீங்களே...மரச்சீனிக்கிழங்கு அப்பளம் போட ஓலைப் பாய் இல்லை அது இல்லைனாலும் என்ன இப்ப?ன்னு பெரிதாகப் போடாம பொரிக்க சௌகரியமாக இருக்கட்டும்னு சின்ன வடாம் சைஸ்ல போட்டு காய வைத்து..இன்னும் முடியலை. ரவா வடாமும்...

      கீதா

      நீக்கு
  35. & வாசகர்களே ! மேலே இருப்பவற்றைப் படித்த பிறகு இதுவரை நீங்கள் யாராவது தெளிவாக இருந்தீர்கள் என்றால், மேற்கண்ட ஐந்து கேள்விகளுக்கு உங்கள் பதிலை சொல்லுங்கள். //

    ஹாஹாஹாஹாஹா நிஜமாகவே!! தலை சுத்தியதில் கலர் சார்ட் ஓடியது!!

    பேஸ்ட் ஆன் கலர் சார்ட் தான் எனக்குத் தெரிந்தது. ஹிஹிஹி பெயின்டிங்க் செய்யும் போது பல கலர்கள் மிக்ஸ் செய்து பரிசோதனை செய்து...அப்புறம் கணினி வந்த பிறகு பெயின்ட் சாஃப்ட்வேரில் கலர் மிக்ஸிங்க்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. ஐயா
    நான் கேட்ட கேள்விகளுக்கு எ பி ஆசிரியர்கள் பதில் அளித்ததற்க்கு நன்றி. 
    பதில்கள் அவ்வளவாகத் திருப்தியாக அமையாததாலும் ஆர்வம் காரணமாகவும் கூகிள் ஆண்டவரை சரண் அடைந்தேன். அவர் தந்த சில பதில்கள் கீழே. 

    https://www.thehindu.com/sci-tech/Question-Corner-Turmeric/article15907608.ece

    Quicklime is chemically a strong alkali (base). Hence, exposure of turmeric powder or turmeric water to quick lime neutralizes any of the two phenolic protons and triggers the conversion of the original benzenoid structure with yellow appearance into a quinonoid structure with red colour. Red colour has higher wavelength than yellow. That is why turmeric water, when mixed with quicklime, turns red.

    https://www.vandersanden.com/en-uk/what-determines-colour-brick


    The colour of a brick, a question of temperature? Depending on the clay types used, there is an ideal maximum temperature that a brickmaker will always respect. Firing at too low a temperature does not produce the desired quality, while overfiring the brick can cause it to shrink too much. In addition,An oxidising kiln atmosphere also has an excess of oxygen. During firing, the minerals in the clay give colour to the brick as they absorb oxygen. Iron oxide is one of the most important minerals in clay for giving colour. It is what gives that typical red colour of a brick. A calcareous clay contains more lime and gives a yellow colour. The presence of manganese oxide, by contrast, gives a  brown colour to the brick

    What is the role of chlorophyll in photosynthesis?

    Chlorophyll is vital for photosynthesis, which allows plants to absorb energy from light. Light energy is converted into chemical energy. Using the energy of light, carbohydrates such as sugars are synthesised from carbon dioxide and water. Chlorophyll is found in virtually all photosynthetic organisms, including green plants, cyanobacteria, and algae. With photosynthesis, chlorophyll absorbs energy and then transforms water and carbon dioxide into oxygen and carbohydrates. Chlorophyll A contains a magnesium ion encased in a large ring structure known as a chlorine.

    https://science.howstuffworks.com/question404.htm


    When sand is super heated, the silicon dioxide particles also melt at 3090°F. The melted silicon dioxide filters away any and all impurities. While sand has impurities that render it visible, pure silicon dioxide forms a robust crystal which is clear glass.15-Apr-2021


    இந்த பின்னூட்டம் சில சமயம் ஆசிரியர்களை புண்படுத்தும் என்ற ஐயம் வந்ததால் நீக்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையே வேண்டாம் - அப்படி எல்லாம் நாங்க புண்பட்டு சோர்ந்துவிடமாட்டோம் !! தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  38. 1. வாழ்வின் குறிக்கோள் என்ன? அர்த்தம் என்ன? 

    கடவுள் தான் குறிக்கோள்களோடு பிறக்கிறார். தசாவதாரம் மற்றும் திருவிளையாடல். மற்றபடி மனிதர்கள் குறிக்கோள்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருடைய வாழ்க்கையையும்  கடவுள் தீர்மானிக்கிறார். இதைத்தான் ஜென்ம பலன் அல்லது விதி என்று கூறுகிறோம். சுருக்கமாக சொன்னால் வந்தோம் நாடகத்தை நடித்தோம் சென்றோம் என்பதே வாழ்க்கை. 

    2. உங்களால மறக்கமுடியாத நபர் யார்? ஏன்?

    மறக்கமுடியாத நபர் அன்னை. இவ்வுலகில் பிறக்க வைத்தவள் அவள். வாழ வைத்தவள் அவள். கடைசி வரையிலும் அன்பு எழுதுபவள் அவள். 

    படக்கருத்துகள். 

    1. கோட்டி புள் என்று நாங்கள் கூறுவோம். 1950 களில் கடலூரில் எங்கள் வீட்டு தோட்டத்தில் என் அம்மா வழி தாத்தாவுடன் விளையாடி இருக்கிறேன். 

    2. கடலூர்க் குரங்கு மேலே இருக்கும். திருவந்திபுரத்தில் ஆஞ்சிகள் உண்டு. (அது சரி ஒவ்வொரு வாரமும் ஆஞ்சி படத்தை வெளியிட்டு கருத்து கேட்கிறீர்களே  ஏதாவது வேண்டுதலோ?)

    ஆனைக் குளியல் பாகன் எங்கே? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. மூதாதையர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த அடிக்கடி அவர்கள் படம் போட்டுவிடுகிறோம்.

      நீக்கு
  39. ஒரே ஒரு முறை என் மகனை அடித்திருக்கிறேன். ஸ்கூல் ப்ரெஷரினால். திருவனந்தபுரத்தில் அவனுக்கு ஸ்கூல் ப்ரெஷர் இருந்தது. குறைப்பாடு உள்ள குழந்தை என்று அங்கிருந்த் மருத்துவ நண்பர் சொன்னதும் நான் அடைந்த குற்ற உணர்வு சொல்லி முடியாது. ஜஸ்ட் ஸ்கூல்நோட்ஸ் ஹோம்வொர்க், எழுதவில்லை நன்றாகப் படிக்கவில்லை ஆசிரியர் கொடுத்த அழுத்தத்தில் அடித்து விட்டோமே ஆஃப்டர் ஆல் சின்ன வகுப்பு...குழந்தை என்னை ஏக்கமாகப் பார்த்த பார்வை என்னை அப்படியே நொறுக்கிப் போட்டது. அதிலிருந்து அவனுக்கு என் முழு சப்போர்ட். ஸ்கூல் ப்ரெஷர், குடும்பத்தில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசிய ப்ரெஷர் எதற்குமே நான் மசிந்ததில்லை. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையா உலகில் எவ்வளவோ இருக்கிறது அவனுக்கு எது வருகிறதோ அதில் ஊக்கப்டுத்துவோம் அதைச் செய்ய வைப்போம் என்று பரவாயில்லை அவனால் முடிந்த அளவு படிக்கட்டும், என்று ஒவ்வொரு ஸ்கூலிலும் எவ்வளவோ பின்னடைவுகள் ஆசிரியர்களுக்கும் கூட இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களைப் பொருத்தவரை மதிப்பென் இல்லை என்றால் முட்டாள். படிப்பு வராது லாங்க் வே டு கோ என்று முத்திரை குத்தப்பட்டான்.

    ஆனால் நான்/நாங்கள் கலங்கியதில்லை. எங்களைப் ப்ரெஷர் படுத்திக் கொள்ளவில்லை. அவன் இப்படித்தான் வர வேண்டும் என்று. அவன் விரும்பியதற்கு ஊக்கப்படுத்தினோம். படிக்க வழி காட்டினோம். அவ்வளவே.

    அன்று அடித்தது நினைத்து இப்போதும் எனக்குக் கண்ணில் நீர் வந்துவிடும் இதை எழுதும் போது கூட. அவனிடம் பல முறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் என் பயம் அவனுக்கு அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடக் கூடாதே என்று ஏனென்றால் பார்டர் சைல்ட். அவனுக்கு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். ஒரு தோழியாக.

    ஒவ்வொரு முறையும் இப்படியான கருத்து சொல்லும் சந்தர்ப்பங்களில் இது ரிப்பீட் ஆனாலும் சொல்லத்தான் செய்கிறேன். காரணம் எந்தக் குழந்தையும் முட்டாள் அல்ல. நல்ல குழந்தைதான். மார்க் குறைந்தால், தவறு செய்தால் கோபப்படாமல், ஏன் என்று நாம் அறிய முனைய வேண்டுமே அல்லாமல், முட்டாள் என்றோ படிப்பு வராது என்றோ எதற்கும் லாயக்கற்றவன்/ள் என்றோ தயவு செய்து ப்ரான்ட் .செய்யக் கூடாது. அதே போல அளவுக்கதிகமான செல்லமும் கூடாது. கண் மூடித்தனமான செல்லமும் கூடவே கூடாது. சரியான வழியில் வழி நடத்த வேண்டும் என்பதற்காகத்தான். எவ்வளவோ வழிகள் இருக்கிறது.

    சமீபத்தில் கூட இங்கு ஒரு பார்டர் சைல்ட் பள்ளிப் படிப்பில் கஷ்டப்பட ஆனால் வீட்டார் அக்குழந்தையை சரியாகப் படிக்கவில்லை என்று தாறுமாறாக அடிக்க அக்குழந்தை வீட்டை விட்டுச் சென்றுவிட்டது. படித்த பெற்றோர். அதற்கு உலகமே தெரியாது. புரியவும் புரியாது....அவர்கள் கவலையே படவில்லை... அவன் எங்களோடு இருந்தால் பள்ளியில் எங்களுக்குத்தான் அவப்பெயர் என்று சொல்லும் இந்தப் பெற்றோரை என்ன சொல்ல? எனக்கு வாயில் ஏதேதோ வார்த்தைகள் வருகிறது.....என் மனதை வேதனை அடைய வைத்த நிகழ்வு.

    கீதா

    பதிலளிநீக்கு
  40. சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் பதில்களும். .. படங்கள் வழமைபோல சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!