செவ்வாய், 1 மார்ச், 2022

சிறுகதை : கண்ணான கண்ணே - ஷ்யாமளா வெங்கட்ராமன்

 கண்ணான கண்ணே

ஷ்யாமளா  வெங்கட்ராமன் 

 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள அந்த Eye  clinic அமைதியான அழகான தோட்டத்தின் நடுவில் கம்பீரமாக அமைந்திருந்தது. 

அதனுள் படகு போன்ற வெள்ளை நிற அன்னம் போன்று அந்தக் கார் நுழைந்தது. டிரைவர் காரின் கதவைத் திறக்க அதிலிருந்து ராம் கோபால், அவர் மனைவி ஆஷா, மருமகள் சிந்தியா மூவரும் இறங்கினார்கள். அவர்கள் மூவர் முகமும் அழுது அழுது வீங்கியிருந்தது. 

அவர்கள் நேரே ரிசப்ஷன் இருக்குமிடம் சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ரிசப்ஷனிஸ்ட் அவர்களை வரவேற்று, அங்கே இருந்த சோபாவில் உட்கார வைத்தார்.  

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து வந்த டாக்டர் திருமதி ஐயர் அவர்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரு ஏசி ரூம்க்கு அழைத்துச் சென்றார். 

அங்கு கட்டிலில்ஒரு பெண் கண்களைக் கட்டியபடி மயக்க நிலையில் படுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. அதற்கு அருகே உள்ள நாற்காலிகளில் ஒரு வயதான தம்பதியும் ஒரு வாலிபனும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் திரும்பி உட்கார்ந்து இருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை. டாக்டர் அவர்கள் அருகே சென்று, 'உங்கள் பெண்ணுக்கு கண்கொடுத்த குடும்பத்தினர் உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னதால் அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்' என்று கூறினார்

உட்கார்ந்திருந்த சங்கரன், அவர் மனைவி வந்தனா, மாப்பிள்ளை சித்தார்த் மூவரும் ஒரே சமயத்தில் திரும்பிப் பார்த்தார்கள். உடனே வந்தனா, 'அக்கா' என்று கூப்பிட்டுக் கொண்டு, ராம்கோபாலின் மனைவி ஆஷாவை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். 

இதைப் பார்த்த டாக்டர்,  " என்ன சங்கரன் சார் இவர்களை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க சங்கரன், "மறக்கக் கூடிய நட்பா எங்களுடையது?" எனக் கூறினார். " சரி சரி எனக்கு இங்கு வேலை இல்லை பிரிந்தவர் கூடினால் பேச கேட்க வேண்டுமா??" எனக் கூறிக்கொண்டு அந்த ரூமை விட்டு டாக்டர் அகன்றார்.

 "என்ன ஆச்சு மஞ்சுவிற்கு?" என பதட்டத்துடன் ராம்கோபால் கேட்டார். " வாருங்கள் நாம் வெளியே சென்று பேசுவோம் மயக்கமாக உள்ள மஞ்சுவை நர்ஸ் பார்த்துக்கொள்வார்கள்" என்று சங்கர் கூற, அனைவரும் ரிசப்ஷன் ஹாலுக்கு சென்றார்கள்

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான் ராம்கோபாலும் சங்கரனும் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக்கொண்டு செல்வதை பார்த்ததும் பொறுமை இழந்த சித்தார்த் தன் மாமனாரைப் பார்த்து, " மாமா இவர்கள் யார்?" எனக் கேட்டான் உடனே சங்கரன், " அது ஒரு பெரிய கதை, சொல்கிறேன்"  என்று கூறிக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தார்.

" எனக்குக் கல்யாணம் ஆனதும் என் ஆபிசில் என்னை டில்லிக்கு மாற்றினார்கள். நான் உடனே டெல்லி சென்று வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம். என் மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு டெல்லி சென்றேன். டெல்லியில் தமிழர்கள் நிறைய இருக்கும் கரோல் பாகில் வாடகைக்கு வீடு தேடினேன். சரியாக அமையவில்லை. முப்பது வருடங்களுக்கு முன் டெல்லியில் நம்மூர் சாப்பாடு கிடைப்பது குதிரைக்  கொம்பாக இருந்தது. எனக்கு அந்த ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ராம் கோபால் இருந்த வீட்டின் மாடி போர்ஷன் காலியாக இருப்பதாக ஆபீஸில் இருப்பவர்கள் சொன்னார்கள்.  உடனே சென்று பார்த்தேன். அந்த வீடு என் பட்ஜெட்டிற்கு தக்கதாகும்.  மனிதர்களும் நல்ல மாதிரி. 

ஒரே ஒரு குழந்தைதான் இருந்தது. ராம்கோபால்  மனைவி ஆஷா என் மனைவிக்கு உற்ற தோழியாக இருப்பாள் என்று தீர்மானித்து அந்த வீட்டிற்கு வந்தேன். ஆனால் ஒரே ஒரு கஷ்டம் அவர்களுக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் பேசத் தெரியும். என் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தேன். ஆஷாவும் என் மனைவியும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். குழந்தை அஜய் என் மனைவி வந்தனாவிடம் ஒட்டிக்கொண்டு விட்டான். எங்கள் இரு குடும்பமும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எங்களுக்கு மஞ்சு பிறந்தாள். அஜய் மஞ்சுவை மிக ஆசையாக பார்த்துக் கொண்டான்.. இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் விளையாடுவார்கள். மஞ்சுவிற்கு ஐந்து வயதாகும்போது எனக்கு துபாயில் ஒரு நல்ல வேலை கிடைக்க நான் என் குடும்பத்துடன் துபாய் சென்று விட்டேன். ராம் கோபால் வேலையில் டிரான்ஸ்பர் ஆகி ராஜ்கோட் போய்விட்டார். பிறகு எங்களுக்குள் எந்த தொடர்பும் இன்று வரை இல்லை.  இன்றுதான் மறுபடியும் சந்தித்தோம்"  என்று ஒரு மூச்சில் கூறி முடித்தார்.

அதன்பின் சங்கரன், " ராம் கோபால்  எங்கே உன் மகன் அஜய்?" என்று கேட்க, ராம்கோபால்  குடும்பத்தினர் மூன்று பேரும் அழத் தொடங்கினார்கள். " ஏன் அழுகிறீர்கள்?" என்று பதற்றத்துடன் சங்கரன் கேட்டார். 

ராம் கோபால், "இனி அஜய் வரமாட்டான்" என்று கூறிவிட்டு "2 நாட்கள் முன்பு நடந்த ஒரு ரோடு ஆக்சிடெண்டில் தலையில் அடிபட்டு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டான். எனவேதான் அவன் கண்களை கண் வங்கிக்கு தானமாகக் கொடுத்தோம்.  அது சரி மஞ்சுவிற்கு ஏன் கண் மாற்று அறுவை சிகிச்சை?"  எனக்கேட்டார் உடனே சங்கரன் அது ஒரு விபத்து என்றார்

" 2020 ஜனவரியில் மஞ்சு சித்தார்த் திருமணம் நடந்தது. இருவரும் குளு மணாலி போனார்கள். போன இடத்தில் டிரக் கவிழ்ந்து ஆக்சிடெண்ட் ஆயிற்று அதில் மஞ்சுவின் இடது கண் பலத்த அடிபட்டது. எனவே கருவிழி ( கார்னியா) பலத்த சேதம் அடைந்தது. உடனே சிறந்த சிகிச்சை தரப்பட்டது. ஆனாலும் வலி குறையவில்லை. வலி தெரியாமல் இருக்க கண்ணிற்குள்   பாண்டேஜ் கான்டக்ட் லென்ஸ் போடப்பட்டது. அது நிரந்தர தீர்வு இல்லை என்றும், கண் மாற்ற வேண்டும், அதுதான் நிரந்தரத் தீர்வு என்று கூறிவிட்டார்கள் அதற்குள் covid-19 தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. எந்த ஆபரேஷனும் செய்ய அரசாங்கம் அனுமதி தரவில்லை. மேலும் இந்த நேரத்தில் கண் கிடைப்பதும் கஷ்டம். இப்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஆஸ்பத்திரியில் அனைத்து வேலைகளும் செயல்பட ஆரம்பித்தது. எனவேதான் இன்று அந்த ஆபரேஷன் நடந்தது. நாலரை மணி நேரம் ஆபரேஷன் நடந்தது எனவே மஞ்சு அசந்து தூங்குகிறாள். மஞ்சுவிற்கு யார் கண் கொடுத்தார்களோ என்று நினைத்தேன் ஆனால் அஜய் கண்ணென்று தெரிந்தால மஞ்சு அழ ஆரம்பித்து விடுவாள் " என்றார்

 அங்கு வந்த டாக்டர் மிஸஸ் ஐயர், " இதைப்பற்றி இன்னும் 15 நாட்களுக்கு மஞ்சுவிற்கு எதுவும் தெரிய வேண்டாம். அவள் அழுது கண்களுக்கு உபத்திரவம் கொடுத்தால், இதுவரை பட்ட சிரமம் வீணாகிவிடும்" என்று எச்சரித்தார். 

*****

ராம் கோபாலும், ஆஷாவும் தினமும் மஞ்சுவுடன் இருந்து கண்களுக்கு மருந்து போடுவது, சாப்பாடு ஊட்டுவது என அனைத்தையும் செய்தார்கள். மஞ்சு அஜய் பற்றி கேட்டதற்கு, 'அவன் யுஎஸ்ஸில் இருப்பதாக' கூறி சமாளித்தார்கள். 

மஞ்சு தன் கணவனிடம், " நான் அடிக்கடி சொல்வேனே சின்ன வயது நண்பன் அஜய் என்று - அது இவர்கள் மகன்தான். நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, ஒருவர் கண்களில் ஒருவர் உருவத்தை பார்ப்போம்;  அதுதான் எங்கள் கண்ணாடி என்று கூறுவோம் ஆனால் இப்பொழுது எனக்கு அஜய் பார்த்த ஒரு கண் இல்லாமல் போய்விட்டது. யாரோ ஒருவருடைய கண் இப்பொழுது என் முகத்தை அலங்கரிக்கிறது எனக் கூறி வருத்தப்பட்டாள்.  

இதைக் கேட்டுக்கொண்டே வந்த ராம்கோபாலும் வந்தனாவும், " நீ எந்த உன் கண்ணில் உன் உருவத்தை பார்தாயோயோ, அதே கண் தான் உன்னிடம் உள்ளது" என கூறி குலுங்க குலுங்க அழுதார்கள்.  மஞ்சுவிற்கு  அவர்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை. தன் அப்பாவிடம் கேட்க சங்கரன், அஜய் இறந்த விஷயத்தையும், அவனுடைய ஒரு கண் இவளுக்கு பொருத்தப்பட்டது பற்றியும் கூறினார். 

இதைக்கேட்ட மஞ்சு, " ஐயோ என் கண்ணான கண்ணே என்று பாடுவேனே - அந்தக் கண்ணா என் கண்" என்று கூறி, ஓவென்று அழத்தொடங்கினாள். 

சத்தம் கேட்டு அங்கே வந்த டாக்டர், "ராம்கோபால் மற்றும் அவர் மனைவி உன் மூலம் தன் மகனைப் பார்க்கிறார்கள். எனவே அந்தக் கண்ணை நீ பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அவன் உடல் இறந்தாலும் அவன் கண் உயிரோடு உள்ளது" என்று கூறினார். 

"என் கண்ணான கண்ணே என்று கூறும் அஜய் கண்ணை என் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன்" என்று கூறி விசும்பிக் கொண்டே உறுதியளித்தாள் மஞ்சு!!!!!!!!!!!!!

= = = = 

42 கருத்துகள்:

  1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. இன்று மஹா சிவராத்திரி..

    எங்கும் நலமே நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்..

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமச்சிவாய! சிவனுக்கே கண் அளித்த கண்ணப்பனார் நினைவை இன்றைய கதையின் வாயிலாக போற்றுவோம்!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிரம்பிய வாழ்வு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. கண் தானம் உலகிற் சிறந்தது.
    அருமையான கதைக்கு மிக நன்றி.

    அனைவருக்கும் சிவ ராத்திரி நன்னாள் வாழ்த்துகள். ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு
  6. என் சின்னத் தம்பியின் கண்களும் தானம் செய்யப்பட்டன.

    கண் வைத்தியர் யாருக்கு அவை சென்று அடைந்தது என்று
    சொல்ல மறுத்து விட்டார்.
    இரண்டு பேர் கண் பார்வை பெற்றனர்.

    பெரிய கண் மருத்துவமனைதான் அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே உடல் உறுப்புகளை தானம் செய்பவர் நெருங்கிய சொந்தக்காரராக இருந்தால் அன்றி மருத்துவமனையில் தெரியப்படுத்த மாட்டார்கள். கண் தானத்திற்கும் அதே தான். சொல்ல மாட்டார்கள்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கதை மிக அருமையாக இருக்கிறது. படித்து முடித்தவுடன் மனம் கனத்து போனது.

    நானும் என் கணவரும் கண்தானத்திற்கு எழுதி வைத்து இருந்தோம். மாயவரத்தில் இருக்கும் போது .

    என் கணவர் இறைவனடி சேர்ந்த போது நான் செயலற்று போனதால் அது நினைவுக்கு வராமல் போய் விட்டது கொடுமை. நினைத்தாலே வருத்தம் ஏற்படும். கண்தானம் படிவத்தை பார்க்கும் போது மனம் மிகவும் வருந்துகிறது. அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் பேர் கொடுத்து கொண்டோம். உறவுகளிடம் சொல்லி இருந்தால் நினைவு படுத்தி இருப்பார்கள். எங்கள் சின்ன மாமனார் கண்தான்ம் செய்தார்கள்.

    //நீ எந்த உன் கண்ணில் உன் உருவத்தை பார்தாயோயோ, அதே கண் தான் உன்னிடம் உள்ளது"//

    நன்றாக படம் தயார் செய்து இருக்கிறார் கெளதமன் சார்.
    அந்த பையன் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.



    பதிலளிநீக்கு
  9. @ கோமதிஅரசு..
    // நானும் என் கணவரும் கண்தானத்திற்கு எழுதி வைத்து இருந்தோம். மாயவரத்தில் இருக்கும் போது ... //

    மிகச் சிறந்தது கண் தானம்..
    மனதை நெகிழ்த்தி விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  10. உணர்வுப்பூர்வமான கதை அருமை.

    //என் கண்ணான கண்ணே//

    இந்தப்பாடல் புதியது கதையின் கால அவகாசத்துக்கு இது பொருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
  11. அட! இன்றைய தினத்துக்கு ஏற்ற கதையாக வெளியிட்டிருக்கிறீர்களே!! சிவராத்திரி - கண் தானம்- கண்ணப்பநாயனார் நினைவுக்கு வந்தார்.

    கதை நன்றாக இருக்கிறது. கதையின் போக்கை யூகிக்க முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கௌ அண்ணா படம் நன்றாக இருக்கிறது. கண்ணுக்குள் பையன் தெரிவது போலானதும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மஹாசிவராத்திரிக்குப் பொருத்தமான கதை. கௌதமன் அவர்களின் படமும் அருமையாக வந்துள்ளது. கண்ணுக்குள் தெரியும் உருவம். இதை வரைய அவர் எடுத்துக்கொண்ட சிரமம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. கண் தானம் பற்றிய கதை நல்ல கருத்துள்ள கதை. கௌதமன் சாரின் படமும் நன்றாகப் பொருத்தமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை படம் நடை எல்லாமே அழகு அழகு கருத்துள்ள கதை பாராட்டுவோம் யாவரையும் அன்புடன்

      நீக்கு
  15. நல்ல கருத்துள்ள கதை .படம் நன்று.

    பதிலளிநீக்கு
  16. இக்கதையை பாராட்டி எழுதிய அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  17. கண் தானம் குறித்த இந்த கதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!