செவ்வாய், 5 ஜூலை, 2022

சிறுகதை : இனிமேல் தான் கதை - துரை செல்வராஜூ

 இனிமேல் தான் கதை

துரை செல்வராஜூ 

*** *** *** *** *** *** ***
காலை மணி ஏழரை ..

குறுக்குத் தெருவில் இருந்து  வந்த வசந்த் ஸ்கூட்டியை நெடுஞ்சாலையில் செலுத்தாமல் ஓரமாகவே நிறுத்திக் கொண்டு இடமும் வலமுமாக சாலையை நோக்கினான் .. 

இந்தப் பக்கம் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கர வாகனங்கள், குட்டி யானைகள்.. 

அந்தப் பக்கத்திலிருந்து டைனோசர் மாதிரியான சுற்றுலா பேருந்துகள், காய்கள் பழங்களைச் சுமந்த லாரிகள் - நகருக்குள் நுழைந்து கொண்டிருந்தன..

எதிர்புறத்தில் பேருந்து நிறுத்தம்.. அதன் ஓரமாக சர்பத் ஸ்டால் ஒன்று.. பேருந்துக்காக காத்திருக்கும்  அந்த நேரத்திலும் சிலருக்கு தாகம்.. ஐஸ் சர்பத் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது..

இவற்றுக்கிடையே எதையும் லட்சியம் செய்யாமல் அந்தப் பசு.. சாலையின் ஓரமாகப் படுத்துக் கிடந்தது.. 

கிடைத்த இடைவெளியில் சாலையைக் கடந்த வசந்த் அந்தப் பசுவைப் பார்த்தான்...

பாவமாக இருந்தது.. அப்படி ஒன்றும் அதற்கு வயதானதாகத் தெரியவில்லை.. சில நாட்களாக அந்தப் பசு இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றது.. சமயத்தில் சாலையின் குறுக்காக வரும்.. ஒரு நொடியில் திரும்பி விடும்..  அதன் மனதில் என்னென்ன எண்ணங்களோ... யாருக்குத் தெரியும்?.. 

பசு வளர்ப்போர் யாரும் இங்கே இல்லை..  எனில் வேறு யாருடையது.. எங்கிருந்து வந்தது இந்தப் பசு?.. அதற்கென்று யார் என்ன கொடுத்திருக்கப் போகின்றார்கள்...

பசுவின் நிலை அவன் மனதை ரணமாக்கியது.. 

அலுவலகப் பணியில் மூழ்கிய வேளையில் அந்தப் பசு அவனது நினைவில் இருந்து அகன்று போனது..

பகல் 12:30.. சாப்பாட்டு நேரம்..

அலுவலக ஊழியர் கைத் தொலைபேசியில் சத்தம் போட்டுக் கொண்டு போனார்..

" எதுக்கும் பிரயோஜனம் இல்லேன்னா வீட்லேருந்து விரட்டிட வேண்டியது தான்.. எங்கேயாவது போகட்டும்!.. "

வசந்தனின் மனதிற்குள் ' சுரீர் ' - என வலி..

அப்படியும் இருக்குமோ?.. அதற்குமேல் அவனால் சாப்பிட முடியவில்லை.. 

மாலையில் வீட்டுக்குத் திரும்பிய போது கவனித்தான்.. அந்தப் பசு அங்கேயே படுத்திருந்தது.. சர்பத் கடை மூடிக் கிடந்தது.. 

இரவு ஏழு மணியைப் போல மீண்டும் சாலைக்கு வந்தான் வசந்த்.. அவனது கையில் ஒரு வாளி.. அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் சோறு வடித்த கஞ்சியும்..  அதனுடன் காலையில் மீதமான  இட்லிகளும் கரைக்கப்பட்டு இருந்தன..

" மாடு முட்டி விடுமோ.. " சந்தேகம் வந்தது..

ஆனாலும் , தைரியமாகச் சென்று அதன் அருகில் வாளியை வைத்தான்..

பசித்துக் கிடந்த பசு ஒரே மூச்சில் குடித்து விட்டுத் தலை நிமிர்ந்தது.. எதிரில் வந்த வாகனத்தின் விளக்கொளி பட்டு அதன் கண்கள் மினுமினுத்தன..

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை..

காலார சாலைக்கு வந்த வசந்த் பேருந்து நிறுத்தத்தில் காலியாய் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

தன்னந்தனியாய் ஈ விரட்டிக் கொண்டு இருந்தான் சர்பத் கடைக்காரன்..  
அவனிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தான் வசந்த்..

" யாரோடது இந்த மாடு?.. "

" யாருக்குத் தெரியும் !.. "

" பாவம்..  நாலு நாளாய் இங்கேயே கிடக்கிறது.. "

" .......... !.. "

" யாரும் தேடி வரலையா?.. "

" ஒருத்தனும் வரமாட்டானுங்க!.. "

" அடடா!.. "

" இருக்கிற வரைக்கும் கறந்துட்டு காம்பு மரத்துப் போனதும்
விரட்டிட்டானுங்க.. "


" நல்ல வேளை.. விரட்டி விட்டானே.. கசாப்புக் கடைக்குத் தள்ளி விடாம!.. "

" கசாப்புக் கடைக்குத் தள்ளியிருந்தாலும் கொறஞ்சது ஆறாயிரம் ஏழாயிரம்  கிடைச்சிருக்கும்.. இப்போ எதுக்கும் ஆகாம லாரியில அடிபடப்போகுது.. "

கடைக்காரனின் பேச்சிலும் கண்களிலும் ஏக்கம் தென்பட்டது..

'" ஆறாயிரம் ஏழாயிரமா!.. "

வசந்த் அதற்குமேல் அங்கிருக்கவில்லை.. வீட்டுக்கு நடந்தான்..

சற்று நேரத்தில் அவனது ஸ்கூட்டி கீழவாசல் கடைத் தெருவை நோக்கிப் பறந்தது..

11 மணியளவில் சர்பத் கடைக் காரனுக்கு பெரும் திகைப்பு... இதை அவன் எதிர்பார்க்க வில்லை - என்பது அப்படியே முகத்தில் தெரிந்தது..

அது வேறொன்றும் இல்லை..

கடைத்தெருவில் இருந்து திரும்பி வந்த வசந்த்  - பசுவின் கழுத்தில் சிவப்பு நிற கட்டுக் கயிற்றைக் கட்டினான்.. அதனுடன் தும்புக் கயிற்றைப் பிணைத்து விட்டு மாட்டின் முதுகில் தட்டினான்..

அது ஏதோ பல நாளாய்ப் பழகிய மாதிரி விருட்டென எழுந்து கொண்டது.. கயிற்றைப் பிடித்தபடி முன் நடந்தான் வசந்த்..  அவனத் தொடர்ந்தது பசு..

" அவ்ளோ தானா கதை!.. "

" இருங்க.. இருங்க.. இனிமே தான் கதையே இருக்கு!.. "

அன்றைக்கு சாயங்காலமே வீடு தேடி பிரச்னை வந்துவிட்டது..

வாசலில் நின்றிருந்த வசந்த் - " அந்த வீடுதான்.. " - என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்...

வெள்ளைப் பனியனும் நீல நிற லுங்கியுமாக இரண்டு பேர் தன்னை நோக்கி வருவதைக் கண்டான்..

அவர்களுக்குப் பின்னால் பத்தடி தூரத்தில் சர்பத் கடைக்காரன்..

" தம்பி.. ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு!.. " - என்றான் ஒருவன்..

மற்றவன் சொன்னான்..  " அன்னைக்கு மேச்சலுக்குப் போனது வழி மாறி இங்கே வந்துடுச்சு!.."

" மச்சான்... கண்டீங்களா.. மாடு நம்மளப் பார்த்ததும் உடம்பைச் சிலுத்துக்கிட்டதை!.. "

" ஆமாமா.. வளர்த்த பாசம் மறந்தா போவும்!.. "

" நல்லது தம்பி.. வாங்க.. வந்து கயிறு மாத்திக் கொடுங்க.. "  

- என்றபடி வசந்தின் கைகளைப் பிடித்தான் முதலில் பேசியவன்.. 

அருகில் வந்து கையைப் பிடித்த அவன் மீது இறைச்சியின்  வாடை..

ஜன்னலைத் திறந்து பார்த்த சுபா சட்டென மூடிக் கொண்டாள் ..

" என்ன யோசிக்கிறீங்க?.. "

" ஒன்னும் இல்லை.. "  - என்றான் வசந்த்.. 

" அப்போ வந்து கயிறு மாத்திக் கொடுங்க.. வேலை நெறய கெடக்கு.. நாங்க போகணும்!.. "

" அதுக்கு முன்னால ஒரு சின்ன வேலை இருக்கு.. "  - என்றான் வசந்த்..

" என்னது?.. எதும் காசு பணம் வேணுமா!.. "

" அதெல்லாம் இல்லை.. டவுன் போலீஸ் ஸ்டேஷன்.. ல - வழி தவறி வந்த மாடு.. ன்னு படத்தோட கம்ப்ளையிண்ட் ஒன்னு கொடுத்து இருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் கூட வந்தீங்கன்னா  ஆளுக்கு ஒரு கையெழுத்து போட்டுட்டு பேப்பரை வாபஸ் வாங்கிக்கிட்டு வந்துடலாம்.. போகலாமா!.. " -  என்றான் நிதானமாக...

இதைக் கேட்டதும் பேய் அறைந்தாற்போல் இருந்தது இருவருக்கும்..

ஒருவன் சட்டென கையில் இருந்த போனைக் காதில் வைத்தபடி -
" அப்படியா..  எந்த ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கு?.. " - என்று பதறினான்..

" கேட்டிங்களா மச்சான்... பையன் பைக்கில அடிபட்டுட்டானாம்.. நேரமே சரியில்லை.. நாங்க அப்புறமா வர்றோம்.. சார்!.. "

என்றபடி வேகமாக முன் நடக்க அவனைப் பின் தொடர்ந்தான் மற்றவன்..

அவர்களுக்கு முன்னால் தலை தெறிக்க நடந்து கொண்டிருந்தான் சர்பத் கடைக்காரன்..

தனக்குள் சிரித்துக் கொண்ட வசந்த் வாங்கி வந்திருந்த வைக்கோல் கட்டைப் பிரித்து பசுவின் முன்னால் உதறி விட்டபடி சொன்னான்..

" இனிமே உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை!.. "


***

60 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    நலமே நிறைக எங்கும்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரத்தால் செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கதைகளை வழங்கி தளத்தை மேலும் சிறப்பாகும் உங்களுக்கு எங்கள் நன்றிகளும்.

      நீக்கு
  4. பழனி பழரசக் கடை - எங்கோ பார்த்த மாதிரி இருக்கு...

    சித்திரம் அருமை..
    மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ஆனால், சர்பத் கடைக் காரனும் மாடு பிடிக்க வந்தவர்களும் வேறு ஆட்கள்..

    அவர்களுக்குப் பெயர் வைப்பதில்லை.. மர்ம நபர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா கதையில் வரும் எல்லா நபர்களுக்கும் பெயர் தேவை இல்லையே. ரொம்பத் தேவைப்பட்டால் மட்டும் வைத்தால் போதுமே.

      கீதா

      நீக்கு
    2. மாடு பிடிக்க வந்தவர்கள் கசாப்புக் கடைக்காரர்கள்.. தற்குறிப்பாகவே சொல்லியிருக்கின்றேன் அவர்கள் மீது இறைச்சி வாடை என்று.. அந்த சர்பத் கடைக்காரன் நம்பிக்கைத் துரோகி.. முதல் இல்லாமல் ஆதாயம் என்று கணக்கிட்டு காசுக்காக மாட்டைக் காட்டிக் கொடுத்தவன்.. இவர்களுக்கும் பசுவிற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.. அவர்களது தந்திரத்தை தனது புத்தியால் வென்றவன் வசந்த்..

      இது இக்கதையின் உள்ளே இலை மறைவாக உள்ளது..

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வித,தியாசமான கரு. பசுவை வயதான காலத்தில் விரட்டுபவர்களுக்கும் தாயைத் துரத்துபவர்களுக்கும் வித்தியாசம் இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி உபயோகமில்லை என்றானபின் சுயநலமிகளுக்கு மாடென்ன, மனிதரென்ன!

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹைஃபைவ்.....நான் காலைல சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு...Use and throw concept

      கீதா

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    4. @ ஸ்ரீராம்...

      // இனி உபயோகமில்லை என்றானபின் சுயநலமிகளுக்கு மாடென்ன, மனிதரென்ன?..//

      அருமை..

      நீக்கு
  8. பஹ்ரைனில் என்னுடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவனிடம் எப்படித்மான் உயிர்களை அடித்துச் சாப்பிடுகிறீர்களோ..மாடுலாம் சாப்பிடுவீங்களா என்று கேட்டதற்கு, அவன், மாடு சாப்பிடுவீங்களான்னு கேட்டது வருத்தபா இருக்கு.. மாட்டைலாம் பூஜை செய்வோம், சாப்பிட மாட்டோம் என்றான். காலம்தான் எவ்வளோ பாறுதல்களை அடைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நெருங்கியவராகவோ, உரிமை இருந்தாலோ அன்றி சில கேள்விகளை சட்டென கேட்டுவிட முடியாது.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சொல்வது சரி.

      நீக்கு
    3. என்னுடன் வேலை செய்த பங்க்ளா
      தேஷிகள் நான் ஹிந்து எனத் தெரிந்து கொண்டு என்னிடம் கேட்கும் கேள்விகள் - நீ ஏன் மாடு தின்பதில்லை?.. அதுவும் அவனும் ஒன்றாகி விடுமா?..

      நான் புலால் உண்பதில்லை!..

      முட்டை கூடவா?..

      ஆம்.. கேக், ஜெல்லி எதுவும் கிடையாது.. எல்லாவற்றையும் விட்டு விட்டேன்..

      அதைக் கூடவா!?..

      அது இங்கே கிடையாது.. ஊருக்குப் போனதும்!..

      நீ சந்நியாசியா?..

      இல்லை.. சாது!..

      கேலிச் சிரிப்பு..

      துறத்தல் என்பது அவர்களுக்கு சொல்லப்படவில்லை..

      கொடுக்கப்பட்ட வைகளை அனுபவிக்க வேண்டும் என்பது உலக நியதி என்பார்கள்

      நீக்கு
  9. மனதை நெகிழ வைத்த கதை துரை அண்ணா. ஹப்பா பசு காப்பாற்றப்பட்டது. சிறிய நிகழ்வு ஆனால் மனதில் சொல்லத் தெரியாத உணர்வு. அருமை.

    ஆமாம் அண்ணா பசுவின் கறவை நின்றுவிட்டால் அவ்வளவுதான்....இதே போன்ற கதி.

    இப்போது அப்படியான பசுக்களைக் காக்கும் அமைப்புகள் வந்திருக்கின்றன என்றாலும் எல்லா இடங்களிலும் இல்லைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
    2. @ கீதா

      // இப்போது அப்படியான பசுக்களைக் காக்கும் அமைப்புகள் வந்திருக்கின்றன..//

      உண்மை தான்.. ஆனாலும் பரவலாக வேண்டும்..

      நீக்கு
  10. கௌ அண்ணா கதைக்கான படம் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல கரு. நல்ல கதை. பசு காப்பாற்றப்பட்டது மன மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்கேற்றவாறு படம் வரைந்திருக்கும் திரு கௌதமனும் கலக்கி இருக்கார். என்றாலும் தொடர்ந்து பசுவால் வசந்துக்குப் பிரச்னை வருமோ? விரைவில் அநாதையான பசுக்களை வைத்துக் காக்கும் கோசாலை வசந்த் கண்களில் பட்டுப் பசுவை நிரந்தரமாக அங்கே சேர்க்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். நல்லது நினைத்த/நினைக்கும் வசந்தும் அமைதியாக வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. @ கீதாக்கா..

      // விரைவில் அநாதையான பசுக்களை வைத்துக் காக்கும் கோசாலை வசந்த் கண்களில் பட்டுப் பசுவை நிரந்தரமாக அங்கே சேர்க்க வேண்டும்..//

      நியாயம் தான்.. பசுவைப் பராமரிப்பதில் சிரமம் என்றால் இருக்கவே இருக்கின்றது கோசாலை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  13. ஆனால் வளர்த்த பசுவை இப்படி எல்லாம் துரத்தி விடுவார்கள் என்பதே இன்று தான் அறிந்தேன். :( அடிமாட்டுக்கு விற்பனை செய்ததாக எல்லாம் கேட்டிருக்கேன்/படிச்சிருக்கேன். இவங்க அந்த மட்டுக்கும் பரவாயில்லை. எங்கேயோ பிழைச்சுக்கட்டும்னு விரட்டிட்டுச் சும்மா இருக்காங்களே! கொஞ்சமானும் மனித/மிருக அபிமானம் இருக்குப் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் வளர்த்த பசுவை கசாப்புக் கடைக்கு அனுப்பமாட்டார்கள்.. யாருக்காவது சும்மாவே கொடுத்து விடுவார்கள்..

      அதற்குப் பின் அந்த வீட்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு போய்ச்சேரும்..

      இப்படியெல்லாம் நிறைய இருக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  14. 'கறக்கு மட்டும் கறந்து' விட்டு துரத்தி விடுவார்கள் மனதை நெரிடியது. நன்றாக கதை செல்கிறது கசாப்புக்கடைக்கு விற்பதற்கு வருபவர்களுக்கு நல்ல அடிகொடுத்து அனுப்புவது நல்ல முடிவு.

    கதைக்கு ஏற்ப அழகிய படம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை மனதை இளக்கி விட்டது. பாவம்.. வாயில்லா ஜீவனை, அதுவும் அவ்வளவு நாள் வளர்த்து தனக்கு பலன் தந்த அந்த பசுமாட்டை இப்படி தெரியாத இடத்தில் கொண்டு விட்டு விடுவார்கள் என இப்போதுதான் நானும் கேள்வி படுகிறேன்.

    "இனிமேல்தான் கதை" என்ற கதையின் தலைப்புக்குரிய வார்த்தையை பிரயோகித்து கதையின் நடுவில் ஆரம்பித்திருக்கும் இடத்தில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் அதி திறமையை நான் மனமாற பாராட்டுகிறேன்.

    கதையின் நாயகன் வசந்தின் இரக்க குணத்தையும் பாராட்ட வேண்டும். அந்த வாயில்லா ஜீவனுக்கு வந்த துன்பத்தை தன் சாமர்த்தியத்தால் முறியடித்த நல்ல மனம் கொண்ட இவர்களை போன்றோர்களால்தான் உலகில் சில நல்ல விஷயங்களும் தாமாக நடந்து கொண்டு உள்ளது.
    நல்ல கதை. அதை அற்புதமாக வடிவமைத்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

    கதைக்குப் பொருத்தமாக படம் வரைந்திருக்கும் கௌதமன் சகோதரருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கமலா ஹரிஹரன்

      // இனிமேல்தான் கதை" என்ற கதையின் தலைப்புக்குரிய வார்த்தையை பிரயோகித்து கதையின் நடுவில் ஆரம்பித்திருக்கும் இடத்தில்.. //

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. // கதைக்குப் பொருத்தமாக படம் வரைந்திருக்கும் கௌதமன் சகோதரருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்...//

      மிகச் சிறப்பான சித்திரம்..

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
  17. அருமையான கதை.
    வசந்தின் இளகிய மனம் பசு மாட்டை பாதுகாக்க நினைக்கிறது.
    வசந்தின் மனைவியா சுபா? அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் மாட்டை பாதுகாக்க முடியும். நல்ல மனம் அமைய பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசந்தின் மனைவி தான் சுபா.. இருவரும் இயன்றவரை பார்த்துக் கொள்வார்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. கதைக்கு பொருத்த மாக படம் அருமையாக வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை. மனம் மகிழ்ந்துபோனது

    பதிலளிநீக்கு
  20. பாவம் பசு படம் அருமை கதையும் அருமை அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!