செவ்வாய், 12 ஜூலை, 2022

சிறுகதை -மஹாபாஷ்யம் - மொழிமாற்றம் - ஜெயக்குமார் சந்திரசேகரன் 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மஹா பாஷ்யம்

பாகம் 1/2

 

மஹா வித்வானாகிய மகரிஷி பதஞ்சலி, வியாகரணத்திற்கு (தொல்காப்பியம் போன்ற ஒரு நூல்) ஒரு பாஷ்யம் (பேருரை) உண்டாக்கி தன்னுடைய ஆயிரம் சிஷ்யர்களுக்கும்  படிப்பித்துக் கொண்டிருந்தார்.

அவ்வாறு படிப்பிக்கும்போது ஒரு சிஷ்யன் அவருடைய அனுமதி பெறாமல் பாடசாலையில் இருந்து வெளியே சென்றான். அதைக் கண்ட மகரிஷிக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. அவருடைய கண்களில் இருந்து வந்த கோபாக்கினியில் அங்கிருந்த 999 சிஷ்யர்கள் யாவரும் வெந்து  மடிந்து சாம்பலாயினர்.

தான் பாடுபட்டு உண்டாக்கிய பாஷ்யம் படித்து உருப்போட சிஷ்யர்கள் யாரும் இல்லையே  என்று மகரிஷிக்கு மிக்க விசனம் உண்டாயிற்று. அப்போது வெளியில் சென்ற சிஷ்யன் விவரங்கள் அறிந்து மகரிஷியிடம் வந்துகுருவே, கவலை வேண்டாம் நான் இருக்கிறேன். மஹா பாஷ்யம் முழுதும் எனக்கு மனப்பாடம். நான் ஒரு சிஷ்ய பரம்பரை உண்டாக்கி அவர்களுக்கு அதை போதிப்பேன். ஜனங்களுக்கும் உபகாரம் ஆகும்.” என்றான். 

இதைக் கேட்ட மகரிஷிக்கு மீண்டும் கோபம் வந்தது. “நீ காரணம் என்னுடைய பிரிய சிஷ்யர்கள் எல்லோரையும் இழந்தேன். ஆதலால் நீயும் சாம்பலாகக் கடவது  என்று சபித்தார். அதன் பின்னரே அவர் கோபம் கொண்டு செய்த தவறுகளை உணர்ந்தார். கவலை உண்டாகியது. சுத்த ஆத்மாக்களுக்கு கோபம் சாந்தம் என்பவை சட்டென்று உண்டாகும் அல்லவா? 

மகரிஷி அவ்வாறு துக்கித்து இருக்கும்போது ஒரு கந்தர்வன் (கந்தர்வன், ராட்சசன், சாத்தான் போன்றவை சாதாரண மனிதர்களின் கண்களுக்குப் புலப்படும்  உருவம் கொண்டவர் இல்லை. அவர் வேண்டும் உருவம் எடுப்பர்.) அவ்விடம் வந்து வணங்கிபகவானே, விசனம் கொள்ள வேண்டாம். நான் அடுத்துள்ள அஸ்வத் மரத்தில் இருப்பவன். தாங்கள் சிஷ்யர்களுக்கு மகா பாஷ்யம் போதிக்கும் போது நானும் அதைக் கேட்டு முழுவதும் கிரகித்துள்ளேன். ஆகவே, தாங்கள் என்னையும் ஒரு சிஷ்யனாகக் கருதி ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.” என்றான். 

மகரிஷிக்குக் கோபம் வந்தது. “நீ என்னுடைய அனுமதி இல்லாமலும், என்னுடைய உபதேசம் பெறாமலும், என்னுடைய பாஷ்யத்தை ஒளிந்திருந்து கற்றதால் நீ ஒரு பிரம்ம ராட்சஷன் ஆகக் கடவதுஎன்று சபித்தார். கந்தர்வன் மிக்க விசனத்துடன் மஹரிஷியின் கால்களில் வீழ்ந்து சாப விமோசனம் வேண்டினான். மகரிஷி மனமிரங்கிநீ என்னுடைய பாஷ்யம் புரிந்து கிரகித்துக்கொள்ளும் திறமையுடைய ஒரு பிராமணனுக்கு உபதேசிக்க வேண்டும். பாஷ்யம் முழுவதும் உபதேசித்து தீர்ந்தவுடன் நீ சாப விமோசனம் பெறுவாய். பழைய நிலை அடைவாய்.” என்று விமோசனம் தந்தார். 

பிரம்ம ராட்சஷன்

பிரம்ம ராட்சஷன் ஆன கந்தர்வன் வழித்தடத்தின் அருகே உள்ள ஒரு ஆலமரத்தின் மேல்  இருந்தான். பாஷ்யம் கற்பிக்கத் தக்க ஆளைக் கண்டறிய வேண்டும் அல்லவா? ஆகவே அவன் அவ்வழி நடந்து போகும் பிராமணரை விளித்து பச்சேர்நிஷ்டாயாம் கிம் ரூபம்?”  (தமிழில் அர்த்தம் தெரிந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்) என்று கேட்பான். அதற்குச் சரியான பதில் சொல்லாதவரைப் பிடித்து சாப்பிட்டு விடுவான்இந்தக் கேள்விக்குபக்தம்என்றும், மற்றும் பல தவறான விடைகளும்தான் சொல்லப்பட்டனவே தவிர யாரும் சரியான விடை சொல்லவில்லை. 

அப்படி இருக்கும்போது ஒரு நாள் சகல சாத்திரங்களையும் அறிந்தவனும் வேத ஞானம் உள்ளவனும், வேதாந்தியும் ஆன ஒரு பிராமண சிரேஷ்யன் அது வழி வந்தார். அவர் சன்யாசம் கொள்ள விரும்பி உபதேசம் பெறுவதற்கு ஒரு தக்க குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்.

அந்த பிராமணரை ராட்சஷன் விளித்து பச்சேர்நிஷ்டாயாம் கிம் ரூபம்?” என்று தனது கேள்விக் கணையை விடுத்தான். அதற்கு அவர்பக்வம் என்று சரியான விடை பகர்ந்தார். இதைக்கேட்ட பிரம்ம  ராட்சஷன் இவர்தான் தகுதியானவர் என்று தீர்மானித்து அவருக்கு பாஷ்யம் உபதேசிக்கத் தொடங்கினார். ராட்சஷன் ஆலமரத்தின் மேலிலும் பிராமணன் கீழே தரையிலும் இருந்தனர். பசி, தாகம், உறக்கம் முதலியன உண்டாகாதிருக்க பிராமணருக்கு ராட்சஷன் ஒரு விசேஷ மருந்து  அருந்தக் கொடுத்தான். அதன் பின்னர் பாஷ்யம் உபதேசம் செய்யத் தொடங்கினான். 

பிரம்ம ராட்சசன் ஒரு ஆலிலை பறித்து சில வரிகள் எழுதி கீழே  போட அதை பிராமணர் எடுத்துப் படித்து உருப்போடுவார். இப்படி ஆறு மாதகாலம் சென்றது. மஹா பாஷ்யம் முழுவதும் பிராமணருக்கு பாடம் ஆகியது. உபதேசம் முடிவுற்றது. பிரம்ம ராட்சஷனும்  பழைய கந்தர்வன் ஆக மாறினான். பிராமணர் குருவாகிய கந்தர்வனை வணங்கி விடை கேட்டார். 

கந்தர்வனுக்கு, பிராமணருக்குக் கொடுத்த மருந்தின் ஞாபகம் வந்தது. பிராமணரை நோக்கிநான் உங்களுக்கு பசி, தாகம், உறக்கம் வராதிருக்க ஒரு மருந்து கொடுத்தேன் அல்லவா. உடம்பில் தண்ணீர் பட்டால் மருந்து  செயலிழக்கும். தண்ணீரில் நனைந்தால் உடன் உறக்கம் வரும். உறக்கம் ஆறு மாதம் நீண்டதாயிருக்கும். ஆகவே தண்ணீர் படாமல், நனையாமல் பார்த்துக் கொள்ள வேணும். இவ்வாறு கூறி கந்தர்வன் விடை சொல்லி மறைந்தான்.  

பிராமணர் மஹாபாஷ்யம் முழுவதும் மனப்பாடம் செய்திருந்தாலும், ஏதாவது மறந்தாலோ, அல்லது சந்தேகம் இருந்தாலோ தீர்க்க உதவும்  என்று கருதி பாஷ்யம் எழுதிய ஆலிலைகளை எல்லாம் சேகரித்து அடுக்கி கட்டி வைத்துக் கொண்டார். மேலும்எனக்கு சிஷ்யன் யாரும் உண்டாகவில்லை என்றாலும் மற்றவர்கள் யாராவது இவற்றால் பிரயோஜனம் அடைவர் அல்லவாஎன்றும் அனுமானித்தார் 

பின்னர் அவர் பல இடங்களில் சஞ்சரித்து ஒரு நதிக்கரையை  அடைந்தார். நதியைக்  கடக்க பாலமோ, தோணியோ, படகோ  ஒன்றும் இல்லை. ஆற்றில் தண்ணீர் குறைவானதால் வருவோர் போவார்  ஆற்றிலிறங்கிக் கடந்து சென்றனர். ஆறும் சிறிய ஆறு. நம்முடைய பிராமணர் ஆற்றை ஒரு ஓட்டத்தில் கடந்து விடலாம், அப்போது தண்ணீர் படாது என்று நினைத்தார். கொஞ்சம் தண்ணீர் எடுத்து முகம் கழுவினார். முகத்தில் தண்ணீர் பட்டவுடன் உறக்கம் வந்தது. ஆற்றின் கரையிலேயே படுத்து உறங்கி விட்டார்

 படங்கள் : இணையத்திலிருந்து - நன்றி : கூகுள்

>>>>>>>>>> தொடரும் பாகம் இரண்டு. <<<<<<<<<<<                                                                                                                                          

 

14 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. இந்தப் புராணக் கதை சங்கர விஜயத்தில் படிச்சது. இப்போக்கூடப் புத்தகம் பக்கத்தில் இருக்கு. தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //“பச்சேர்நிஷ்டாயாம் கிம் ரூபம்?”  (தமிழில் அர்த்தம் தெரிந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்) //
   உங்களிடம் உள்ள புத்தகத்தில் இதன் தமிழ் வடிவம் காணுமே. அதை வெளியிட்டால் நாங்களும் புரிந்து கொள்வோம். 
   Jayakumar

   நீக்கு
  2. இலக்கணம் விளக்கணும். ஆனால் பச் என்றால் சமை. இது பச் என்னும் தாதுவின் விகுதியைக் கேட்கும் கேள்வி. பச் என்னும் தாதுவின் விகுதி பக்வம். பக்குவம். மற்றச் சொற்களில் புஜ் தாதுவிற்கு புக்தம் என்று வரும். ரஜ் தாது எனில் ரக்தம் என்றும் வரும். ஆனால் பச் என்னும் தாதுவில் மட்டும் பக்வம் என்பதே சரியான விடை. இன்னும் விளக்கணும்னா நான் மறுபடி இலக்கணப் புத்தகங்களைத் தேடணும். நினைவில் வந்ததைச் சொல்லி இருக்கேன். சம்ஸ்கிருத அறிஞர்கள் வந்து சொல்லட்டும்.

   நீக்கு
 3. //ஆற்றின் கரையிலேயே படுத்து உறங்கி விட்டார்.//

  இனி எழுவதற்கு ஆறு மாதம் ஆகுமே...

  படங்கள் : இணையத்திலிருந்து

  பதிலளிநீக்கு
 4. கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. பக்வம் என்பது எப்படி விடையாகிறது என்று விளக்கிய கீதா மேடம் அவர்களுக்கு நன்றி.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. மொழி பெயர்ப்பது எளிதல்ல ஜெயக்குமார் சார். என்னால் கூட இதைச் செய்ய முடியாது. நன்றாகச் செய்கிறீர்கள். குறிப்பாகச் சலிப்படையாமல். பாராட்டுகள். வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. பதஞ்சலி முனிவர் பற்றி, யோகா கற்ற போது யோக சாஸ்திரம் சொன்னவர் என்று அறிந்ததுண்டு. அதே பதஞ்சலி முனிவர்தானா இவர்?
  யோக முறைகள் சொன்னவருக்குக் கோபமா என்ற ஆச்சரியம் வந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளே! ஒரே பதஞ்சலி முனிவர் தான். என்றாலும் யோக சாஸ்திரம் எழுதினவர் வேறே என்னும் கூற்று எப்போதும் போல் உண்டு. சிதம்பரத்தில் வ்யாகரண மண்டபத்தில் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுத்தவர். நடராஜரின் காலடியில் எப்போதும் நின்று கொண்டு ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்துக்கொண்டே இருப்பவர், மஹாபாஷ்யம் எழுதினவர், அந்த மஹாபாஷ்யத்தை வாயில் கௌவியவண்ணம் நடராஜரின் பாதசரமாகச் சுற்றிக்கொண்டு இருப்பவர் எல்லாமும் இவரே! இவரும் வ்யாக்ரபாதரும் சேர்ந்து தான் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தவர்கள்.

   நீக்கு
  2. இவர் ஆதிசேஷன் என்பதால் ஆயிரம் மாணாக்கர்களுக்கு மஹாபாஷ்யம் போதித்துக் கொண்டிருக்கையில் தனக்கும் மாணாக்கர்களுக்கும் இடையில் கனத்த திரை ஒன்றை விட்டுக்கொண்டு பாடம் சொல்லித் தருவார். குரு யார் என்பதை மாணாக்கர்கள் பார்த்தது இல்லை. ஒரே ஒரு மாணவன் ஆசிரியருக்கு என்ன தெரியவா போகிறது என்னும் எண்ணத்தோடு இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல விளைந்தது அனர்த்தம். இருந்த மற்ற மாணாக்கர்களில் ஒருவர் ஆசிரியருக்கு என்ன தெரியவா போகிறது எனத் திரையைத் தூக்கிப் பார்க்க, ஆதிசேஷன் அல்லவா? ஜ்வாலாமயமான திருஷ்டியோடு கூடிய விஷ ஸ்வாசம் பட்டு அனைவரும் பஸ்மம். எஞ்சி இருந்தது வெளியே போன ஒருவர் தான். அவரும் ஆசிரியருக்குத் தெரியாமல்/சொல்லாமல் போன காரணத்தால் ஏற்கெனவே பதஞ்சலி சாபமிட்டிருந்தபடி பிரம்மராக்ஷஸ் ஆகிவிடுவார். மற்றவை மேலே!

   நீக்கு
 7. கதை படித்தது இல்லை.
  பகிர்வுக்கு நன்றி.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!