செவ்வாய், 1 நவம்பர், 2022

சிறுகதை - மகள் - துரை செல்வராஜூ

 மகள்

துரை செல்வராஜூ 

*** ***

சைக்கிளில் ஏறிச் செல்வது  சுகம் என்றால் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வது அதை விட சுகம்..

அன்று ஞாயிற்றுக் கிழமை..

வழக்கமான நெருக்கடி, பரபரப்பு, கூச்சல், குழப்பம் -  இல்லாமல் ஓரளவுக்கு காற்றோட்டமாக இருந்தது தெற்கு ராஜவீதி .. பதினைந்துக்கும் மேற்பட்ட வங்கிகள்,  பெரியதும் சிறியதுமாக பற்பல வணிக நிறுவனங்கள், உணவகங்கள், புகழ் பெற்ற சந்துகளில் ராஜஸ்தானத்து பல்பொருள் கிடங்குகள் எல்லாமே வாராந்திர விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தன..

ஆனாலும் வீதியின் ஓரங்களில் சில்லறை வணிகம்  நடந்து கொண்டு தான் இருந்தது..

கண கண.. என மணியோசையுடன்  கமல விநாயகருக்கு ஆரத்தி நடந்து கொண்டிருக்க கோயிலின் வாசலில் நவ நாகரிக ரோஜாப் பூக்களுடன் செவ்வந்தியும் மரிக்கொழுந்தும்..

திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி வட்டாரத்தின் ஆற்றோர விளைச்சலுடன் தள்ளு வண்டிகள்..

" பன்னீர் திராச்சை.. சப்போட்டா..  கமலா ஆரஞ்சே!.. " - அது ஒருபக்கம்.. எல்லாவற்றுக்கும் மத்தியில் எல்லை மீறியதாக டிகிரி காஃபியின் வாசம் கந்தசாமி கடையில் இருந்து..

அதற்கு மேல் உருள மறுத்தது சைக்கிள்.. கடை வாசலில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்      சுந்தரம்... வெகு நாளையப் பழக்கம்..

"வாங்க அண்ணா!.. "

கண்ணாடிப் பெட்டிக்குள் அழகழகாய் வெங்காய போண்டாக்கள்.. மினி ஜிலேபிகள்.. 

அடிக்கடி சாப்பிடுவதில்லை என்றாலும் கால் கிலோ ஜிலேபி  வாங்கிக் கொண்டு, ஒரு காஃபி என்றார்..

காஃபி கலக்கும் போதே அதன் நறுமணம் காற்றில் பரவியது.. சுந்தரத்தின் உள் நாக்கில் தித்தித்தது.. இதற்கிணை வேறு உண்டோ!.. சுதர்சன சபாவில் இன்னிசை கேட்டதைப் போல இருந்தது..

ஜிலேபி ஐம்பது.. காஃபி பத்து.. ஐம்பதும் பத்தும் அறுபது.. மனதிற்குள் கணக்கிட்டு மூன்று இருபது ரூபாய்களை நீட்டினார்..

அடுத்த சாலையில்  டவுன் பஸ்டாண்டு.. அங்கேயானால் இந்த அறுபதோடு இன்னொரு அறுபதும் ஆகியிருக்கும்.. 

" வர்றேன்!.. " - கையசைத்தபடி சைக்கிளை  நகர்த்தினார்...

இன்னும் சிறிது தூரம் தான்... கீழ ராஜவீதியின் முனைக்கு வந்ததும் சைக்கிளில் ஏறி வலது பக்கமாகத் திரும்பி அப்படியே டவுன்  பஸ்டாண்டு வழியாக கீழவாசலுக்குப் போய் விடலாம்

நேராகவும் போகலாம்.. ஆனால் அந்தத் தார்ச் சாலையில் நம்மவர்களின்  கைத் திறமை முழுவதும் வெளிப்பட்டிருக்கும்..

புன்னகையுடன் நடந்த சுந்தரத்தை வண்ண மயமான நிழல் விரிப்புகளுக்குக் கீழ் நடந்து கொண்டிருந்த ஜவுளி வணிகம் கவர்ந்து இழுத்தது..

சட்டைப் பையை சோதித்துக் கொண்டார்.. பணம் இருந்தது.. அளவு சரியாகக் கிடைத்தால் இரண்டு செட் எடுத்துக் கொள்ளலாம்...

விழிகளால் அளந்தார்... கறுப்பு, காவி, பச்சை, மஞ்சள் நிற வேட்டிகளும் துண்டுகளும் தான் அதிகமாகத் தென்பட்டன.. பிறந்த குழந்தைகளுக்கான உடைகளில் இருந்து பத்து வயது சிறுவர் சிறுமியர்களுக்கான உடைகள்.. 

நவீனத்தின் எச்சமாகிய லெக்கின்ஸ்களும் காட்சியாகிக் கிடந்தன..

" வாங்க சார்.. வாங்க சார்.. "

எந்த அழைப்பும்  ஈர்க்கவில்லை.. மெதுவாக நடந்தார்.. அந்த பிரம்மாண்டமான எலக்ட்ரிகல்ஸ் ஷோரூம்  விடுமுறையில் இருக்க அதன் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வண்டி  சுந்தரத்தைக் கவர்ந்தது..  முழுக்க முழுக்க பனியன்கள் உள்ளாடைகள், மேலாடைகள், குளியல் துண்டுகள்..

" வாங்க சார்.. பனியனா?.. துண்டா?.. "  - மென்மையாக வரவேற்றாள் அந்தப் பெண்..

அவள் கையில் -  Why we need Organic Cotton என்னும் புத்தகம் இருந்தது.. மடித்து வைத்தாள்..
சுந்தரத்துக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.. என்ன சொல்லி  எப்படிக் கேட்பது?..

ரோட்டோரம் பாக்கெட்.. ல போட்டு விற்பானுங்க... சைஸ் பார்த்து எடுத்துக் கொள்ளலாம்.. இன்னைக்கு அந்தப் பசங்களைக் காணோம்..

" பிரீப்ஸ் ஷார்ட்ஸ், நேரோ கட், ஃப்ரென்ட் ஸீரோ, நார்மல், ப்ளெய்ன் ஃபேப்ரிக், மைல்ட் டாட்டட், ஹாஃப் நிக்கர், ஃபுல் நிக்கர், மல்டி கலர், பாப் அப் டிசைன், ஸ்போர்ட்ஸ், சிங்கிள் எலாஸ்டிக், டபுள் எலாஸ்டிக் - எல்லாம் இருக்குங்க சார்!.. "

அடேங்கப்பா!... இத்தனை டிசைனா இருக்கு!.. - தனக்குள் நினைத்தபடி
விற்பனைக்கு என இருந்த உள்ளாடைகளைக் கவனித்தார் சுந்தரம்..

" வேற எதும் லேடீஸ் பர்சனல்ஸ்  வேணுங்களா சார்!.. மாடர்ன் வேர்ல்ட்  டிசைன் எல்லாம் இருக்குங்க!.. "  - என்றாள் நாசூக்காக...

" ஹாஃப் சைஸ் நிக்கர் நூறு cm.. ல ஒன்னு எடும்மா.. பார்ப்போம்!.. " - என்றார்..

" நீங்க பேண்ட் போடறவங்களா?.. " 

" இல்லம்மா.. எப்பவும் வேஷ்டி தான்!.. "

" அப்போ ஹாஃப்  வேணாம்.. இது ப்ளெய்ன் செமி சைஸ்.. மீடியம் லெங்க்த்.. இந்த மாடல் தான் உங்களுக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கும்.. இதுல மூணு கலர் - டார்க் ப்ளூ, மெரூன், ப்ரௌன்.. ப்யூர் ஒயிட் கூட இருக்கு.. இது  சாஃப்ட் எலாஸ்டிக்..  நல்லா இருக்கும்.. எலாஸ்டிக் ஹார்ட்  மெடீரியல் அது தனி!.. "

" நூல் சீக்கிரம் பிரியாம இருக்கணும்.. எலாஸ்டிக் லூஸ் ஆகாம இருக்கணும்.. அவ்வளவு தான் எனக்கு வேணும்!.. "

" இது டபுள் லாக் நிட்டிங் சார்.. வாஷிங் மிஷின்..ல கூட  போடலாம்!.. "

" ஏஒன் பிராண்ட் .. ன்னு எடுத்தா அது ரெண்டு தடவை போட்டதுமே தையல் விட்டுப் போகுது.. மோசமாகிடுது.. "

" சார்.. ஒரு உண்மையச் சொல்லவா!.. அதெல்லாம் செகண்ட்ஸ்.. "

" அப்படின்னா!... "

" புராடக்ட் ஃபெயிலியர்.. தயாரிப்பில் பிழை.. நாட் ஃபார் ஷோ ரூம் சேல்ஸ்.. ரிஜக்டட் ஐட்டம்ஸ் ஃப்ரம் க்வாலிட்டி கண்ட்ரோல் செக்‌ஷன்!..  அதை  பலபேர் மலிவா வாங்கிக்கிட்டு வந்து இஷ்டத்துக்கு லேபிள் ஒட்டி ஜனங்கள ஏமாத்துறாங்க..  தரைக் கடை துணி.. ன்னா மட்டம்.. ன்னு நெனைக்கிறது அதனால தான்.. இருந்தாலும் சௌடேஸ்வரிக்கு பயந்து பிழைப்பு நடத்துற நல்லவங்களும் இருக்கிறாங்க தானே!.. " 
 
" உன் பெயர் என்னம்மா!.. "

" பவானி!.. "

" நான் பேரக் கேட்டேன்..டா தங்கம்.. "

" ஊரும் அது தான்.. பேரும் அது தான் ஐயா!.. "

" இத்தனை வயசுக்கு இப்பதாம்மா ஹாஃப் நிக்கர்க்கு இப்படி விளக்கம் எல்லாம் கேக்கிறேன்!.. "

" ஐயா.. நான் பொய் சொல்லி விக்கிறது இல்லை.. லேடீஸ் பர்சனல்ஸ்..க்கும் இப்படி புராடக்ட்ஸ் க்வாலிட்டி இருக்குதுங்க.. எல்லாம் சிந்தடிக் ஃபைபர் ஆனதால எத்தனையோ பேருக்கு ஸ்கின் ரேஷஸ்.. அது.. இது.. ன்னு.. அதனால பார்த்து வாங்கணும்.. எங்கிட்ட காட்டன் சிந்தடிக் பாதிக்குப் பாதி..  எதுவும் உங்களோட விருப்பம்.. இருந்தாலும் இதை எல்லாம் சொல்ல வேண்டியது எங்க கடமை இல்லையா!.. " 

சட்டென நெகிழ்ந்தார் சுந்தரம்..

" கிடைக்கிற நேரத்துல எல்லாம் பைசா பண்றது எப்படி.. ன்னு அலையிற உலகத்துல..  தங்கம் மாதிரிப் பொண்ணு... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!.. "

" வெயில்..லயும் மழையில..யும் கிடந்து நாங்க சம்பாதிக்கிற காசு எங்களுக்கு ஒட்ட வேணாங்களா ஐயா!.. " 

சிரித்துக் கொண்டே அரக்கு நிறத்தில் மூன்று ஹாஃப் நிக்கர்களை எடுத்துக் கொண்டு ஒரு ஐநூறும் ஒரு நூறுமாகக் கொடுத்தார்..

" யூஸ் பண்ணிப் பாருங்க.. ஐயா சரியில்லை.. ன்னா, வருத்தப்படாம வாங்க.. மத்த ரெண்டையும் திருப்பிக் கொடுத்துட்டு வேற எடுத்துக்குங்க.. "

" பிரச்னை இல்லம்மா.. சைஸ் நூறு சரியா இருக்கும்.."

" அளவு சொல்லி எடுத்தா எடுத்தது தான்.. யாருக்கும் சாய்ஸ் இல்லை.. "

சிரித்தபடி நூறுடன் ஐம்பதைத் திருப்பிக் கொடுத்தாள் பவானி..

" ஏம்மா?... " - விலை குறைவாக இருப்பதாகத் தோன்றியது அவருக்கு..

" இது எல்லாமே எங்க சொசைட்டியோட புராடக்ட்ஸ்.. ஆர்கானிக் பருத்தி..ய இம்ப்ரெஸ் பண்றாங்க... இம்போர்டட் சிந்தடிக்.. ன்னா விலை கொஞ்சம் அதிகம்.. மார்ஜின் ரேட் இது..  எனக்கு இதிலேயே லாபம்
இருக்குங்க ஐயா!.. "

மிகவும் நெகிழ்ந்து விட்டார் சுந்தரம்..

" எங்க ஊர்.. பேச்சு வழக்குலயே   பேசறியே..ம்மா!..  அப்பா அம்மா.. ல்லாம் எங்கே?..  நீ மட்டும் தான் இங்கே கவனிக்கிறியா!.. "

" அவங்க  ஊருக்குப்போய் இருக்காங்க.. இன்னைக்கு வந்திடுவாங்க.. சோழன் நகர்.. ல வீடு எடுத்து தங்கி இருக்கோம்!.. "

" சாப்பாடு?.."

" கொண்டு வந்திருக்கேன் ஐயா.. பக்கத்து தெருவில நாங்க நாலு பேர் சேர்ந்து ஸ்டோர் ரூம் வச்சிருக்கோம்.. மத்தியானமா இதெல்லாம் அங்கே வச்சி பூட்டிட்டு வீட்டுக்குப் போய்டுவேன்.. நாளைக்கு மறுபடியும்!.. "

முகத்தைத் துடைத்துக் கொண்டாள் பவானி..

" பொறந்தது கொங்கு நாட்ல.. வளர்ந்தது படிச்சது எல்லாம் இங்கே சோழ நாட்ல.. நாச்சியார் காலேஜ்ல தான் பியெஸ்சி படிக்கிறேன்.. இன்னும் மேல படிச்சு பருத்தி சாகுபடிக்கு ஏதாவது நல்லது செய்யணும்.. ன்னு ஆசை.. "

- என்று சொல்லிக் கொண்டே, நல்ல அகலமான இடுப்புத் துண்டு ஒன்றை மடித்து பையில் வைத்துக் கொடுத்தாள்..

" இது உங்களுக்கு!.. "

அதிர்ந்தார் சுந்தரம்..

" ரோட்டோர ஏவாரி.. ன்னு இளக்காரமா போகாம பெத்த தகப்பன் மாதிரி பிரியமா பேசுனீங்க..  உங்க மகள் கொடுத்ததா வைச்சுக்குங்க அப்பா!.. "

சட்டெனத் திரும்பி சைக்கிளில் மாட்டியிருந்த பையிலிருந்த ஜிலேபி பொட்டலத்தை எடுத்தார்..

" இந்தாம்மா!.. "

" என்னங்க  அப்பா?.. " - என்றபடி கைகளை நீட்டி வாங்கிய பவானி பிரித்துப் பார்த்தாள்.. கண்கள் மலர்ந்தன..

" நல்ல மனசு உனக்கு.. சகல சௌபாக்கியத்தோட நீ நீடூழி வாழணும்.. மகமாயி..மகமாயி!.. " - சுந்தரம் வாழ்த்தினார்...

அந்தப் பக்கமிருந்து சட்டெனத் திரும்பி வந்தவள் சாலை என்றும் பாராமல் குனிந்து வணங்கிக் கும்பிட்டாள்..

" ஒரு நாளைக்கு அம்மாவை அழைச்சுக்கிட்டு வர்றேம்மா!.. "

" நானே வர்றேம்ப்பா.. அட்ரஸ் கொடுங்க.. பெரியவங்களைத் தேடி வந்து கும்பிடணும்!.."

***

48 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு..

    தமிழ் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரத்தால் செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைப்புகளை அனுப்பி எங்களை கௌரவப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எங்கள் நன்றி.

      நீக்கு
  4. அன்பு வழியும் கண்கள்.. அழகு வழியும் முகம்..

    கற்பனையை கண் முன் கொண்டு வந்திருக்கின்றீர்கள்..

    கௌதம் ஜி ..
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. தம்பி துரைக்கு அன்பான ஆசிகள். கதை வாசித்து இரும்பூது எய்தினேன். தங்கள் எழுத்துப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி அண்ணா..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ப்ரீப் ஷார்ட்ஸ், நிக்கர், நேரோ கட், பாப் அப் டிசைன், சிங்கில் எலாஸ்டிக் என்று வரிசையாக வாசித்துக் கொண்டே வருகையிலேயே. ஒரு விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டால் எவ்வளவு டீடைல்ஸ் .. எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்..என்ற வியப்பைத் தாண்டி இத்தனைக்கும் இடையே என்ன கதை வரப்போகிறது என்ற என்ற எதிர்பார்ப்பின் உச்சத்தில் தான் அந்த அன்பின் விகசிப்பு நிகழ்ந்தது. ரொம்ப ரொம்ப இயல்பான நெகிழ்ச்சி அது. இதெல்லாம் சொல்லி நடப்பதில்லை. வினாடி கூட தாமதிக்காத தன்னிச்சையான நிகழ்வு அது.. நமக்கு ஒருவர் ஒன்றைத் தரும் பொழுது அதற்கு ப்ரீதியாக நாம் அவருக்கு இன்னொறைத் தர வேண்டும் என்ற உயர்ந்த மன உணர்வை ரொம்ப இயல்பாக மலர் மலர்வதைப் போலச் சொல்லி விட்டீர்கள், தம்பி. வியக்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உயர்ந்த மன உணர்வை ரொம்ப இயல்பாக மலர் மலர்வதைப் போலச் சொல்லி விட்டீர்கள், தம்பி. //

      அன்பின் கருத்துரையில் மனம் நெகிழ்ச்சியாகின்றது..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. அந்த விற்பனைப் பெண்ணின் அன்பும், பணிவுமாகிய இருச் சக்கரங்களுடன் அந்த அமைதியான ரசிக்கும்படியாக சைக்கிள் பயணம் போல் கதையும் நகர்ந்து முடிவில் மனம் நிறைந்தது.

    /எல்லாவற்றுக்கும் மத்தியில் எல்லை மீறியதாக டிகிரி காஃபியின் வாசம் கந்தசாமி கடையில் இருந்து../

    ஆஹா... கடைத்தெருவில் நாங்களும் சேர்ந்து சுற்றி வருவது போன்ற உணர்வை தந்தது தங்கள் எழுத்து. இப்படி உணர்வு பூர்வமாக எழுத தங்களால்தான் முடியும்.

    விற்பனை விபரங்கள், துணிகளைப்பற்றிய விபரமான பேச்சின் தன்மை எல்லாமே அருமையாக உள்ளது. மிகவும் ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கு தகுந்தாற்போல அற்புதமாகவும், அழகாகவும் ஓவியத்தைப் படைத்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் அன்பான பாராட்டுக்கள். நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கடைத்தெருவில் நாங்களும் சேர்ந்து சுற்றி வருவது போன்ற உணர்வை தந்தது.. எல்லாமே அருமையாக உள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்... //

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. சிறிய சம்பவம் சொன்ன விதம் நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. நம்ம ஜெஸி ஸார் சனிக்கிழமை பதிவுப் பொருளுக்காக ஏன் எங்கெங்கோ தேடி வாசித்து இங்கு சேர்த்துக் கொண்டிருக்கிறார்? எபி செவ்வாய்க்கிழமைக்கு இந்த தளத்தில் இந்த மாதிரி எவ்வளவு உயர்வான கதைகள் காணக் கிடைக்கின்றன?
    அப்பப்போ எடுத்து வாசித்துப் பிடித்த கதைகளை ஒவ்வொன்றாக வரிசை படுத்தலாமே!..

    ஓ.. ஒன்றை மறந்தேன்.
    பறம்பு மலையின் வளப்பமும், பெருமையும் அங்கு வாழ்பவர்க்குத் தெரியாது என்று சொல்வார்கள்.

    உண்மை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி அல்ல. அவர் தான் படித்த நல்ல கதைகளை அங்கு வெளியிடுவது சரியாகத்தான் இருக்கிறது. செவ்வாயில் வெளியாகும் கதையை அங்கு எழுதுவது சரியாக வராது. செவ்வாய் கதை மிக நன்றாக இருந்தால் இங்கேயே சிலாகித்து நிறையவே எழுதலாமே

      நீக்கு
    2. இங்கு இரண்டு வரி பின்னூட்டம் போடுவது வேறு..அங்கு விமரிசன ரீதியாய் விவரித்து அலசுவது வேறு.

      ஜெஸி ஸார் தான் என்றில்லை..

      யார் வேண்டுமானாலும் இந்தக் காரியத்தைச் செய்யலாம்.

      என்ன, விமரிசனக் கலையும் எழுத்து ரசனையும் தெரிந்திருக்க வேண்டும்..அவ்வளவு தான்.

      நீக்கு
    3. // பறம்பு மலையின் வளமையும், பெருமையும் அங்கு வாழ்பவர்க்குத் தெரியாது என்று சொல்வார்கள்.//

      உன்மை தான்.. அண்ணா..

      நீக்கு
  12. நல்ல சிறுகதை. கதையைப் படிக்கும்போதே அன்பான வார்த்தைப் பரிமாறல்கள், பெண்ணின் குணம், நல்லனவற்றைப் பாராட்டும் குணம், கலாசாரப் பிரதிபலிப்பு எனப் பலவற்றையும் உணர நேரிட்டது.

    சௌடேஸ்வரி என்பதைப் படித்ததும் கதை நிகழ்வது கோவை, ஈரோடிலா என்ற சந்தேகம் வந்தது.. அடுத்தடுத்த வரிகளில் தெளிவானது.

    நிறைவான கதை. இத்தகைய குணம் கொண்ட சேல்ஸ்விமன்களை நான் சந்தித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஓவியம் நன்றாக இருக்கிறது. உழைப்பு தெரிகிறது. பாராட்டுகள் (அந்தப் பெண்ணிற்கா அல்லது மாறுதல்கள் செய்தவருக்கா என்று குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. @ நெல்லை அவர்களே
      /நிறைவான கதை. இத்தகைய குணம் கொண்ட சேல்ஸ் விமன்களை நான் சந்தித்திருக்கிறேன்.//

      நானும் சந்தித்திருக்கின்றேன்..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  14. நல்லதொரு சிறுகதை! கதைக்கள விஸ்தரிப்பு மிக அருமை! பல முறை நடந்து சென்ற தஞ்சையின் தெற்கு ராஜ வீதியில் மறுபடியும் மானசீகமாக நடந்தேன்!!
    கமல விநாயகர் கோவில் எங்கிருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெற்கு ராஜ வீதியில் இருந்து வடக்கு ராஜ வீதிக்குச் செல்லும் மானோஜியப்பா வீதியின் முனையில் இருக்கின்றது - கமல ரத்தின விநாயகர் கோயில்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. இலக்கண வரம்பிற்கு உட்பட்டதா இது!..

    தெரியாது..

    நேர்மையைக் குடையாய்க் கொண்டு வெயிலிலும் மழையிலும் இரை தேடும் எளிய மக்களின் இதய பூர்வமான அன்பைக் குறித்த கதை இது..

    இதற்கு நெஞ்சார்ந்த வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  16. கதை அருமை.

    கால் கிலோ ஜிலேபி வாங்கிக் கொண்டு, ஒரு காஃபி என்றார்..//

    அந்த ஜிலேபி அன்பு மகளுக்கு கொடுக்க வாங்க பட்டு இருக்கிறது.


    //சட்டெனத் திரும்பி சைக்கிளில் மாட்டியிருந்த பையிலிருந்த ஜிலேபி பொட்டலத்தை எடுத்தார்..//

    அன்பு மகள் கிடைத்து இருக்கிறாள்,இனிமையான உறவு தொடரட்டும்.


    //நானே வர்றேம்ப்பா.. அட்ரஸ் கொடுங்க.. பெரியவங்களைத் தேடி வந்து கும்பிடணும்!.."//

    பணிவும், செய்யும் தொழிலில் ஆர்வமும், நேர்மையும் பவானியை
    உயர்வடைய செய்யும்.

    //இன்னும் மேல படிச்சு பருத்தி சாகுபடிக்கு ஏதாவது நல்லது செய்யணும்.. ன்னு ஆசை.. "//

    பவானியின் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // பணிவும், செய்யும் தொழிலில் ஆர்வமும், நேர்மையும் பவானியை
      உயர்வடைய செய்யும்//

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  17. உயர்ந்த எண்ணங்கள். சற்றும் பொய் சொல்லாத மனசு. உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யும் நேர்த்தி! அதிலும் அதிக லாபத்தை எதிர்பாரா மனம். இதெல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கணும். தெருவோர வியாபாரியானாலும் பவானிக்கு இவை எல்லாம் இயல்பு. சற்றும் வேஷமில்லை. ஆகவே எல்லாமே பொருந்திப் போகிறது. எல்லாமே சொல்லி வைத்தாற்போல் தானாக நடக்கிறது. மனதைத் தொட்ட கதை. தஞ்சை வீதிகளில் வலம் வந்து இவற்றை எல்லாம் நேரில் பார்க்கும் உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எல்லாமே பொருந்திப் போகிறது. எல்லாமே சொல்லி வைத்தாற் போல் தானாக நடக்கிறது. மனதைத் தொட்ட கதை..//

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  18. மனதுக்கு மகிழ்ச்சி தரும் கதை மற்றும் உரைநடை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. அன்பு என்பது எப்படியெல்லாம் வருகிறது.நேர்மையாக இப்படியும் வருகிறது. அபூர்வமான அன்பு. படிக்க மிகவும் மகிழ்ச்சி.படமும் அழகு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      அன்பின்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  20. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  21. அழகிய நடையில் நல்ல கதை . நாங்களும் அவருடன் சைக்கிளில் ஊர் சுற்றி வந்த நிறைவு.
    விற்பனைப் பெண்ணின் நேர்மை சுந்தரத்தின் அன்புள்ளம் என மனித நேயமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!