திங்கள், 31 அக்டோபர், 2022

"திங்க"க்கிழமை : இட்லி சீயாளி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 

இட்லியை பலவிதங்களில் உபயோகித்து சுவையான உணவுகளை செய்யலாம். சில்லி இட்லி, கார இட்லி, இட்லி பொடிமாஸ், இட்லி பொங்கல், மசாலா இட்லி , சிக்கன் இட்லி, மட்டன் இட்லி, இனிப்பு இட்லி என்று இட்லியின் புகழ் இன்றைக்கு கொடி கட்டி பறக்கிறது. சென்னை, பம்பாய், டெல்லி போன்ற புகழ் பெற்ற நகரங்களில் ஆக பல விதங்களில் தயாராகிறது. இட்லியையும் பல விதங்களில் தயாரிக்கலாம். சிறு தான்ய இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சோள இட்லி, பயறு இட்லி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் இனிப்பு கூட செய்யலாம். இப்போது நான் எழுதவிருப்பது முப்பது, நாப்பது வருடங்களுக்கு முன்ன்னாலேயே நான் கற்றது. வீட்டில்  இட்லி மிகுந்து போனால் அவ்வப்போது செய்வது வழக்கம். இதற்கு தனியாக எதூவும் தொட்டுக்கொள்ளத்தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

 


இட்லி சீயாளி:

தேவை:

கடுகு 1 ஸ்பூன்

வெங்காயம் பொடியாக அரிந்தது 2

தக்காளி பொடியாக அரிந்தது 2

கீறிய பச்சை மிளகாய் 2

கறிவேப்பிலை  1 கொத்து

பொடியாக அரிந்த மல்லி 2 மேசைக்கரண்டி

புளி எலுமிச்சம்பழ அளவு

இட்லி 8

மஞ்சள் தூள்

பெருங்காயப்பொடி அரை ஸ்பூன்

தேவையான உப்பு

எண்ணெய் 2 மேசைக்கரண்டி

நெய் 1 மேசைக்கரண்டி

அரை ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பொடிக்க:

கடலைப்பருப்பு 1 ஸ்பூன், தனியா 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், வற்றல் மிளகாய் 3


செய்முறை:

இட்லிகள் ஒவ்வொன்றையும் ஏழெட்டு துண்டுகள் செய்யவும்.

புளியை ஒரு கப் வென்னீரில் ஊற வைக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.

அவை சூடானதும் கடுகைப்போட்டு அது வெடித்த‌தும்  வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

பின் தக்காளி, மஞ்சள் தூள் போட்டு குழைய வதக்கவும்.

எண்ணெய் மேலே தெளிந்ததும் காயம் போட்டு வதக்கி புளியைக்கரைத்து ஊற்றவும்.

அது கெட்டியானதும் எண்ணெய் தெளிந்ததும் பொடியையும் தேவையான உப்பையும் சேர்த்து மெல்லிய தீயில் கிளறவும்.

இப்போது இட்லி துண்டுகளைப்போட்டுக் கிளறவும்.

மசாலாவில் இட்லி துண்டுகள் சேர்ந்து வந்ததும் மல்லியைத்தூவி, பிடித்திருந்தால் 1 ஸ்பூன் நெய் ஊற்றிக்கிளறி இறக்கவும்.

= = = = =

ஸ்ரீராம் ' பாஸ்' இன்று செய்த இட்லி சீயாளி படங்கள் கீழே : 


= = = = =

62 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் ஜீவி ஸார்..  வாங்க...

      நீக்கு
    2. என்னுடைய ' இட்லி சீயாளி' குறிப்பை இன்று வெளியிட்டதற்கு என் அன்பான நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரர் ஸ்ரீராம்!!
      தங்கள் ' பாஸ்' செய்த இட்லி சீயாளி படங்கள் அருமை! சுவை எப்படியென்று சொல்லவில்லையே?
      தங்கள் இல்லத்தரசியாருக்கு பிடித்திருந்ததா?

      நீக்கு
    3. ஸ்ரீராம் பிறகு அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து, கருத்து சொல்லும் வரை காத்திருப்போம்.

      நீக்கு
    4. எனக்கு என் மகனுக்கு என் பாஸுக்கு எல்லோருக்குமே பிடித்திருந்தது.  இன்னும் கொஞ்சம் காரம் தேவைப்பட்டது.  புளியும் போட்டு தக்காளியும் சேர்க்க வேண்டுமா என்று தோன்றியது.  அல்லது புளியின் அளவைக் குறைக்கலாம் என்று தோன்றியது.

      நீக்கு
    5. வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி! புளியும் தக்காளியும் இதே அளவில் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். நான் சென்ற வாரம் 10 இட்லிகளில் செய்தேன். இதே அளவே சரியாக இருந்தது. காரத்தின் தேவைக்கேற்ப மிளகாயை கூட்டியோ குறைத்தோ செய்யலாம்.

      நீக்கு
  2. சீயாளி என்பது சீர்காழி என்பதின் திரிபோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே...   பதிவாசிரியர்தான் சொல்லவேண்டும்!

      நீக்கு
    2. சுவியத்திலுருந்து மருவியிருக்கலாம்

      நீக்கு
    3. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

      நீக்கு
    4. பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜீவி!
      எனக்குக்கூட அவ்வப்போது ' சீர்காழி'யின் நினைவு வரும் இந்த பக்குவம் செய்ய ஆரம்பிக்கும்போது! இதன் பெயர்க்காரணம் எனக்கும் தெரியவில்லை! நான் தெரிவித்திருப்பது போல பல வருடங்களுக்கு முன், மிகச்சிறிய வயதில் கற்றுக்கொண்ட பக்குவம் இது! அப்படியே இது தொடர்கிறது!

      நீக்கு
  3. சின்னச் சின்ன வித்தியாசங்கள் தாம். கிட்டத்தட்ட போண்டா தயாரிப்பு போலவே இருந்தது.

    ஆரம்ப மாவின் இளமையில் இட்லி, லேசா புளித்து முதிர்ந்ததும் தோசை என்று திருப்பித் திருப்பி வலம் வரும் நாட்களில் எப்போதாவது எங்கள் வீட்டிலும் ஒரு மாறுதலுக்காக இந்தப் பக்குவத்தில் இட்லியை சித்து விளையாட்டு மாதிரி மாற்றி எங்களை மகிழ்விப்பதுண்டு. ஞாயிறுக் கிழமை மதியம்
    3.30-க்கு மேல் லேசான மதியத் தூக்கம் கலைந்து காப்பிக்கு முன் கொறிக்க ஏதாவது கிடைக்குமா என்று சமையலறையை வலம் வரும் பொழுது இந்த சீயாளி சமாசாரம் கிடைத்தால் அம்மாடி என்றிருக்கும் தான்.
    சகோ மனோ சாமிநாதனின் தயாரிப்பு விவரம் அபாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஜீவி சாரா இல்லை வேறு யாராவது அவர் பெயரில் எழுதுகிறார்களா? தி.பதிவு பக்கமே அவர் வரமாட்டாரே... என்ன ஆச்சு? டாக்டர் ரொம்பவே டயட்ல இருக்கணும்னு அட்வைஸ் பண்ணிப் படுத்தியெடுக்கிறாரா?

      நீக்கு
  4. புளி உப்புமா இதன் சகோதரன் போலிருக்கு.
    குட்டி குட்டி உருண்டையாய் அற்புத சுவையுடன் இருக்கும்.
    எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. காலங்கார்த்தாலே ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா? ஸ்ரீராம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))) ஓகே ஓகே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. சகோதரி. தங்கள் கருத்தைப் பார்த்ததும் "கொஞ்சம் சலங்கை படப்பாடல்" நினைவுக்கு வருகிறது. இன்று காலைதான் சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில் அந்தப்பாடலை கேட்டு ரசித்து வந்தேன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா! கமலா! இன்னைக்கு என்னோட சமையல் பதிவைப் போடப் போறதாக ஸ்ரீராம் தேதி சொல்லி இருந்தார். அதான் காலம்பரயே வந்தேன். இங்கே வந்தால் ஸ்ரீராம் என்னை ஏமாற்றி விட்டார்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. அதுதான் இருக்குமென்று நானும் காலையிலேயே கணித்தேன். சும்மா நகைச்சுவையாகத்தான் இப்படிக் கேட்டேன். தொடரும் வாரமும் தங்களுக்கு ஏமாற்றம் வராமலிருக்க வேண்டும். "என்னதிது.. இப்படியா பொதுப்படையாக சஸ்பென்ஸ்களை பேசுவது" என சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சண்டைக்கு வரப்போகிறார். ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. தீபாவளி ஸ்வீட் சென்ற வாரம் அவசரமாக வெளியிடப்பட்டதால் மற்றவை எல்லாம் ஒரு வாரம் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.

      நீக்கு
    5. //காலங்கார்த்தாலே ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா?// இந்தக் கேள்வியை நான் எழுப்பக்கூடாதுன்னா, கீசா மேடம் பதிவுல, குறைந்தபட்சம் 8 படங்களாவது போட்டிருக்கணும், அந்தச் செய்முறையில்...

      நீக்கு
  7. சீராளத்தைத் தான் சீயாளி என்கிறாரோ? அப்படித்தான் நினைக்கிறேன். இப்போல்லாம் ஓட்டல்களில் சில்லி இட்லி என்று பெரும்பாலும் இதையே கொடுத்துடறாங்க. நான் இட்லியெல்லாம் கணக்காய்ப் பண்ணுவதால் மிஞ்சாது. இதுக்குனு இட்லி வார்த்துப் பண்ணினால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி உப்புமா பிடிக்கும் என்பதற்காகவே இட்லி பண்ணி மாலையில் உப்புமா ஆக்குவதுபோல, இதுக்குன்னு இட்லி பண்ணுங்களேன். வித்தியாசமா சாப்பிட்டமாதிரி இருக்கும்.

      நீக்கு
    2. வாருங்கள் கீதா! இட்லி சீராளம் ரொம்பவும் சாதாரண தாளிப்புடன் இருக்கும். அதை இட்லியில் செய்யாமல் புழுங்கலரிசி, பருப்புகள், முக்கியமாக பாசிப்பருப்பை ஊறவைத்து அரைத்து இட்லியாக வார்த்து செய்வதும் நடைமுறையில் இருக்கிறது.
      திரு நெல்லைத்தமிழன் சொல்வது போல, மாவு சிறிது பழசாகி விட்டாலோ அல்லது எப்போதாவது வெளியிலிருந்து இட்லி வாங்கி அது சுமாராக இருந்தாலோ, அவற்றை இந்த மாதிரி செய்து சாப்பிடும்போது போட்டி போட்டுக்கொண்டு காலியாகி விடும்!

      நீக்கு
    3. https://sivamgss.blogspot.com/2022/03/blog-post_15.html seeralam receipe here

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கப்பதிவாக இடலியின் சிறப்புகளை சகோதரி மனோ சாமிநாதன் அவர்கள் சொன்ன விதம் நன்றாக உள்ளது. இட்லி நம் பாரம்பரிய உணவு. என்னைப் பொறுத்தவரை அதற்கு ஈடாக எத்தனை உணவுகள் போட்டியாக வந்தாலும், அதன் சிறப்பு குன்றாததுதான்.

    இன்று இட்லியை வைத்து செய்த சீயாளி இட்லி உணவின் சுவை நன்றாக உள்ளது. படமும் அழகாக உள்ளது. நான் பொதுவாக இட்லி உதிர்த்து மோர் மிளகாய் வத்தல் தாளித்து உப்புமாவாக பண்ணுவேன். அந்த உப்புமாவுக்கு நடுவில் மோர் மி. வத்தலை ருசிக்கும் போது அந்த இடலியின் சுவையும் சேர்ந்து இட்லிகள் ஒரு ஆளுக்கு இவ்வளவு என்ற கணக்கில்லாமல் காலியாகி விடும்.

    சகோதரி மனோ சாமிநாதன் அவர்கள் தயாரிப்பில் செய்திருக்கும் இந்த இட்லி ரெசிபியும் அவ்விதமே காலியாகி விடுமென நினைக்கிறேன். தவிர குழந்தைகளும் இந்தப் பக்குவத்தில் இதை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். பகிர்வு நன்றாக உள்ளது. இந்த அருமையான பக்குவத்துடன் இங்கு பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டு, என் அதீத விருப்பத்தால் செய்யும் சேவையில், என் பெண், தனக்கு சேவை பிடிக்காது என்று சொல்லி மோர் விட்டுக்கொண்டு சாப்பிடுவாள். எனக்கு கர்ர்ர்ர்ர்ர் என்றிருக்கும்.

      நல்லவேளை... மோர்மிளகாய் போட்டு மோர்க்கூழ் என எழுதலை நீங்க. ப மிளகாய் போடுவோம் அதற்குப் பதில் மோர் மிளகாய் வறுத்துப்போட்டுச் செய்துபார்க்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் கமலா ஹரிஹரன்!
      இட்லி உப்புமாவை நீங்கள் சொல்வது போல பல விதங்களில் செய்யலாம். ஆனால் இட்லிகளை இந்த பக்குவத்தில் செய்யும்போது போட்டி போட்டுக்கொண்டு காலியாகி விடும். ஒருத்தருக்கு இத்தனை இட்லி என்று கணக்கிட்டு செய்யும்போது பற்றாக்குறையில் முடிந்து விடும்! கொஞ்சம் தாராளமாகவே செய்ய வேண்டும்!
      பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி!!

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      நான் மோர்கூழிலும், மோர் மிளகாய் வத்தல் வறுத்துப்போட்டு செய்வேன். ஆனால், எங்கள் வீட்டில் இந்த மோர்க்கூழ் உணவு அதிகமாக யாருக்கும் பிடிக்காது என்பதினால், அரிசி மாவு உப்புமாதான் அடிக்கடிக் செய்வேன். அதிலும் மோர் சேர்த்து செய்தாலும், அல்லது புளிக்கரைசல் சேர்த்து செய்தாலும், அதற்கும் இந்த மோர். மி.வத்தல் வறுத்து போட்டு கிளறுவேன். வெறும் மி. வத்தலைப்போடுவதை விட இது அதிக ருசித் தரும் என்பது என் நம்பிக்கை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. மோர்க்கூழ், புளிச்ச மோர் விட்ட ரவா/அரிசி உப்புமாக்கள், புளி உப்புமா ஆகியவற்றில் மோர் மிளகாய் இல்லைனா அது உப்புமாவே இல்லை. இஃகி,இஃகி,இஃகி! புளிச்ச மோர் விட்டு ரவா உப்புமா அடிக்கடி பண்ணுவேன். சூடாகச் சாப்பிடும்போது ருசியே தனி.

      நீக்கு
  9. இதை சீராளம் என்றும் சொல்லலாமோ!.. நமது தஞ்சை மாவட்டத்தின் கைப் பக்குவம் என்பது மட்டும் புரிகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோதரர் துரை செல்வராஜ்!
      நீங்கள் சொல்வது போல ' உண்மையான இட்லியில்' இதன் சுவை அபாரமாக இருக்கும். ஆனாலும் சுமாரான இட்லிகளில் இதை செய்தாலும் அந்த சுவையில் இட்லிகள் உள்ளே போய் விடும்!

      நீக்கு
  10. சின்ன வயதில் சாப்பிட்டிருக்கின்றேன்...

    மற்றபடி இதன் சுவை உண்மையான இட்லிகளில் மட்டுமே சாத்தியம்..

    இட்லி எனில் மிருதுவானவை.. மென்மையாவை..

    இட்லி மாதிரியான வடிவமைப்புகளுக்கு நிச்சயமாக சாத்தியமில்லை..

    டூப்ளிகேட் இட்லிகள், டுபாக்கூர் இட்லிகள் ஒதுங்கிக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஷ்பு இட்லி மாதிரி வருவதற்கு, பழைய சோற்றையும் இட்லி மாவு அரைக்கும்போது சேர்க்கணும், ஜவ்வரிசியை ஊறவைத்து அதையும் சேர்த்து அரைத்தால் இட்லி பூப்போல இருக்கும் என்றெல்லாம் சொல்லி, கடைகளில் நிம்மதியாக இட்லியைக்கூடச் சாப்பிட விடமாட்டேன் என்கிறார்கள்.

      ஒருவேளை பிரியாணி மிஞ்சினால், அந்த சாத்த்தையும் சேர்த்து அரைத்து மசாலா இட்லி வந்துடுமோ?

      நீக்கு
  11. வித்தியாசமான பணியாரம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. வித்தியாசமான செய்முறை... இட்லியை என்ன என்ன மாதிரியெல்லாம் பண்ணலாம் என யோசிக்கவைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன்! உண்மையிலேயே இட்லிகளை வைத்துக்கொண்டு பல விதமான சுவையான பக்குவங்களை பண்ணலாம்
      இனிப்பு கூட பண்ணலாம்!

      நீக்கு
  13. ஶ்ரீராம், படங்களைப் பகிர்வதோடு ஒதுங்கிவிட்டாரே.. முன்னெல்லாம் நீல எழுத்துகளில் தன் கருத்தைப் பதிவோடு வெளியிடுவார்.. என்னாச்சு?

    சீயாளி இட்லி நல்லாருந்ததா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைத்தான் கேட்டிருக்கிறேன்!!

      நீக்கு
    2. இன்றைக்கு அலுவலகத்திற்கு செல்லும் முன்பு இ சீ செய்யப்பட்டு, அதை எடுத்துக்கொண்டு அலுவலகம் விரைந்துள்ளார் ஸ்ரீராம். அப்படி கிளம்புவதற்கு முன்பு, அவர் படம் எடுத்து எனக்கு அனுப்பி, படங்களை சிறு குறிப்புடன் பதிவில் சேர்த்துவிடச் சொன்னார். உடனடியாக சேத்துவிட்டேன். ஸ்ரீராம் விளக்கம் பிறகு எழுதுவார்!

      நீக்கு
    3. ஸ்ரீராம் அனுப்பி இருக்கும் படங்கள் பின்னால் வந்தவை போல. காலம்பர இல்லை.

      நீக்கு
    4. இன்று காலை ஆபீசுக்கு இட்லி உப்புமா தரப்போவதாக பாஸ் சொன்னார். உடனே இந்தப் பதிவின் சுட்டி அவருக்கு அனுப்பி இதைச் செய்யச் சொன்னேன். அவசரமாக அவர் செய்து கொடுக்க, வாங்கிக்கொண்டு ஆபீஸ் சென்று ஒன்பதரை மணி போல சுவைத்தேன். சூடாக சாப்பிட்டிருந்தால் அதன் சுவையே தனிதான்!

      நீக்கு
  14. இட்லி உப்புமா செய்வார்கள்... இது புதிது... நன்றி...

    பதிலளிநீக்கு
  15. // ஸ்ரீராம் ' பாஸ்' இன்று செய்த இட்லி சீயாளி படங்கள் கீழே : //

    ஓ .. இது வேறயா!..
    அருமை.. அருமை!..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்று சகோதரர் ஸ்ரீராம் வீட்டில் இட்லி சீயாளி செய்து இணைக்கப்பட்ட படங்களும். நன்றாக உள்ளன. காலையில் நான் வரும் போது இல்லை. இப்போதுதான் இணைந்துள்ளன போலும். பார்க்கவே ஆவலை தூண்டும் வண்ணம் அருமையாக உள்ளன. இட்லியின் பெருமைகள் பரவட்டும். இது எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. திருமணமாகும் வரை பிறந்த வீட்டில் தினமும் காலை இந்த இட்லிதான். தோசை, சப்பாத்தி, பூரி யெல்லாம் எப்போதோ பட்சணங்கள் மாதிரிதான் கிடைக்கும். (அதுவும் என் முதல் மகனை உண்டாகி இருக்கும் போது முதல் மூன்று மாதம் வாய்க்கு எதுவும் பிடிக்காமல் எதுவும் சாப்பிடாமலே இருந்தேன். பிறகு இந்த இட்லி மட்டுந்தான் வாய்க்கு கொஞ்சம் கொஞ்சமாக ருசியாக இருந்து மூன்று வேளையும் குழந்தை பிறக்கும் வரை அலுக்காமல் சாப்பிட்டேன். வேறு எதுவும் வாய்க்கு பிடிக்கவில்லை என்பதோடு, சாப்பிட்ட அடுத்த நொடி வாமிட் வந்து விடும். அது என்னவோ அந்த மாதிரி ஒரு அவஸ்தைப்பட்டேன்.மற்ற இரு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி ஒரு அவஸ்தைகள் வரவில்லை. ) அந்த அளவுக்கு இட்லி என் வாழ்க்கையோடு ஒன்றி விட்டது. இப்போதும் அதன் மேல் வெறுப்பு என ஏதும் வரவில்லை. இப்போதும் வீட்டில் இட்லி வார்த்தால், மூன்று பொழுதும் இட்லியோடு கழித்து விடுவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லியோடு கழிக்கலாம். தொட்டுக்க என்ன?

      நீக்கு
    2. தொட்டுக்க அன்று காலை என்ன செய்து இருக்கிறோனோ அதுதான். தே. சட்னி, வெ. சட்னி, கொ. சட்னி இல்லைன்னா சாம்பார், இல்லை. மி. பொடி. எல்லாம் காலி (அல்லது இல்லையெனில்) என்றால் வெறும் தயிர் சேர்த்து. எப்படியும் இட்லி எனக்கு அலுக்காது. வீட்டில் எல்லோருக்கும் இரண்டு பொழுதோடு ஒரே போர் என்பார்கள். அவர்களுக்கு இரவு தோசையாக மாறி விடும். ஆக அன்றொரு நாள் சாதத்திற்கு எங்களிடமிருந்து விடுதலை.

      நீக்கு
    3. நான் சூடான ரசத்தில், இரண்டு இட்லிகளை மிதக்கவிட்டுச் சாப்பிடுவேன். ரொம்ப நல்லா இருக்கும். (சாம்பார் இட்லிக்குப் பதில்). மி.பொடி தடவின இட்லியை மிஞ்ச இனி ஒன்று வரணும்.

      நேற்று காலை (சித்தூர்/ஆந்திரா) இட்லி, கெட்டிச் சட்னி மாத்திரம் தந்தார்கள். (கோவில் விஷயமாகச் சென்றிருந்தேன்). சிலருக்கு காரம் அதிகமாகத் தோன்றியது. உடனே ஜீனியைக் கலந்து அதைச் சரி செய்துவிட்டார்கள். கர்நாடக உணவைச் சாப்பிடவே எனக்குப் பிடிப்பதில்லை (செய்தவர்கள் கர்நாடக கேடரர்). எல்லாத்திலும் வெல்லம்/ஜீனி... சாம்பார் தேசத்தில் கால் வைத்தால், யார் வீட்டிலும் சாப்பிட விரும்புவதில்லை. ஒன்லி ஹோட்டல்கள்தாம், அதிலும் சென்னை தோசை/ரவா தோசையைப்போல சூப்பர் எதுவுமில்லை. (சென்னை-த.நாடு-சாம்பார் தேசம்)

      நீக்கு
    4. இட்லி, ரசத்தில் மிதக்குமா? ஆர்கிமிடிஸ் பதில் சொல்வாரா ??

      நீக்கு
    5. என் மாமனார் வீட்டில் எல்லோருக்குமே இட்லி என்றாலே ஏதோ காணாததைக் கண்டாப்போல் இருக்கும். காலை ஆகாரத்திற்கு இட்லி சாப்பிட்டாலும் மத்தியானம் சாதத்தோடு தொட்டுக்க இட்லி, மாலை டிஃபன் இட்லி, இரவு உணவிலும் இட்லி போக மறுநாளும் முதல் நாள் இட்லி இருந்தால் விட மாட்டார்கல். இதைத் தவிர்த்து அக்கம்பக்கம் இட்லி வார்த்தாலும் இங்கிருந்து அங்கே செய்திகள் பறக்கும். ஒண்ணு இவங்க சாப்பிடப் போவாங்க. அல்லது அவங்க கொடுத்து அனுப்புவாங்க. அப்போல்லாம் நான் இட்லி பக்கமே போக மாட்டேன். சாயங்காலம் பசிக்கு 3 அல்லது 4 சாப்பிடுவதோடு சரி. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் அலுத்துவிட்டது. நடுவில் ஒரு மாசம் இட்லிதோசை பக்கமே போகாமல் சப்பாத்தி, உப்புமா, பொங்கல், புளிப்பொங்கல் (நேத்திக்குக் கூடப் புளிப்பொங்கல் தான். தொட்டுக்கக் கத்திரிக்காயைச் சுட்டுத் தயிர்ப்பச்சடி) பூரி, கோதுமை தோசை என்று பண்ணுவேன். அடை கூட எப்போவானும் தான். பாசிப்பருப்பு தோசை/பயறு தோசை பண்ணுவேன்.

      நீக்கு
  17. எனக்கு இப்போப் பத்து வருஷங்களாகத் தான் இட்லி பிடிக்கிறது. நம்மவருக்கும் அப்படியே! எப்போவுமே தோசை தான். இப்போ இட்லி/தோசை இரண்டுமே அலுத்துவிட்டது! :(

    பதிலளிநீக்கு
  18. சீயாளி இட்லி செய்முறை நன்றாக இருக்கிறது.படங்கள் அருமை.
    ஸ்ரீராம் பாஸ் செய்த சீயாளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. பாராட்டுதலுக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    பதிலளிநீக்கு
  20. நன்றாக இருக்கிறது படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!