ஞாயிறு, 18 டிசம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் : நெல்லைத்தமிழன் : திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 1/2

 

(004) திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் பகுதி 1

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 43ம் திருப்பதி. இது ஒரு குடவரைக்கோவில்.  இந்தக் கோவிலில், சத்யமூர்த்தி, திருமெய்யர் என்று இரண்டு மூலவர் சன்னிதிகள் உள்ளனர்.. இந்தக் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலைவிடவும் மிகவும் பழைமையானது. இதன் காரணமாக இதற்கு ஆதி ரங்கம்என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.   

இங்கு சோமசந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்யமூர்த்தி என்னும் திருநாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளியிருக்கிறார். தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்றும் சத்யமாகத் துணையிருப்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்திருப்பதால், இவருக்கு சத்தியமூர்த்தி என்ற திருப்பெயர் வந்தது.

இக்குடவரைக் கோவிலின் இன்னொரு மூலவர், யோக சயன மூர்த்தியான திருமெய்யர். திருமெய்யத்தின் பள்ளிகொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் முனிவர்கள், அமரர்கள் சூழ, எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், திருமார்வில் மஹாலக்ஷ்மித் தாயாரும் எழுந்தருளியிருக்கிறார்கள். பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் ஆகிய இரு அரக்கர்கள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சி பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், திருமார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடப்போகிறதே என்றெண்ணி, அவரை எழுப்பாமல், ஆதிசேஷன் தன் வாய் மூலம் விஷத் தீயைக் கக்கினார். பயந்து நடுங்கிய இரு அரக்கர்களும் ஓடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாள், தான் அவரை எழுப்பாமல் அரக்கர்கள் மீது விஷம் கக்கியது  கண்டு தன்மீது கோபம் கொள்வாரோ என்று நினைத்த ஆதிசேஷனை, அஞ்சேல் என்று சொல்லும் விதமாக, தன் வலது கையால் ஆதுரமாக பெருமாள் கைவைத்திருக்கிறார். இந்த நிகழ்வு அத்தனையையும் பாறையில் செதுக்கியுள்ளனர். அத்தனையையும் திருமெய்யர் மூலவரை தரிசனம் செய்யும்போது காணலாம்.  இது இயற்கையாக அமைந்த குகை போன்ற பாறையில் செதுக்கப்பட்டது. சுமார் 9 மீட்டர் நீளமுள்ளது.

இத்திருத்தலத்தின் சத்திய புஷ்கரணி, திருமாலின் அஷ்டாக்ஷரம் போல எண்கோணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளம். இங்கு கிடைத்த லக்ஷ்மி நரசிம்மர் சிலை, சிறிது பின்னப்பட்டிருந்ததால், குளத்தின் அருகில் தனியாக ஒரு மேடையில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். பிரகாரத்தின் வெளியே, கோவில் திருக்குளத்தின் அருகில் ஒரு நரசிம்ஹர் சன்னிதி உள்ளது.

இந்தக் கோவில் கட்டிய காலம் 7ம் நூற்றாண்டு எனவும், இரண்டாம் ந்திவர்ம பல்லவனின் சமகாலத்தவரான முத்தரையரினால் கட்டப்பட்ட குடைவரைக்கோவில் என்றும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.


அடுத்த வாரம் மிகுதியைப் பார்ப்போமா?

= = = = = =

59 கருத்துகள்:

 1. கடைசி பாராவிற்கு முன் பாரா:

  இரண்டாம் நந்திவர்மன்

  'ந' விட்டுப் போயிருக்கிறது. சேர்த்து விடவும்.

  பதிலளிநீக்கு
 2. பாரத்திலேயே பெரிய பள்ளிகொண்ட பெருமாள் திருவுருவம் -- அரிய தகவல். தரிசித்துத் தொழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் நாட்டின் பல திருக்கோயில்களின் தகவல்கள் அறியப்பாடாமலேயே இருக்கின்றன. இதற்காகவே இறை நம்பிக்கை கொண்ட ஆட்சி மாற்றம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறை தரிசனத்திற்கு வேளை வரவேண்டும்.

   நாம் பெரும்பாலும், செல்வத்தைப் பின்தொடர்ந்து கோவில்களை விட்டு நகர்ந்துவிட்டோம். செல்வம் வசப்பட்டபின், கோவில்களை நினைத்து உருகுகிறோம்.

   நீக்கு
  2. சில நாட்கள் முன்பு எதேச்சையாக, திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கோவிலின் சிற்ப அழகுகளைப் பல பதிவுகளாக விரைவில் காணலாம்.

   சில நேரங்களில் நம் அவசரம் மற்றும் பேராசை காரணமாக, கோவில்களை முழுவதுமாகத் தரிசிப்பதில்லை. அதனால் மூலவரையும் அம்பாளையும் சேவிப்பதில்லை, கோயிலின் அழகையும் கண்ணுறுவதில்லை. உதாரணம், இந்தக் கோவிலும், தேனுபுரீஸ்வர்ர் கோவிலும்.

   நீக்கு
  3. 'நாம் பெரும்பாலும் உருகுகிறோம்.."

   பொத்தாம் போக்கில் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்தால் நன்றாக
   இருக்கும்.

   நீக்கு
 3. குடியாத்தம் பக்கத்தில் இருக்கும் பள்ளிகொண்டா அரங்கநாத ஸ்வாமியை தரிசித்திருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வழியாக உறவினர் காரில் சென்றேன். தரிசிக்கும் வேளை வரவில்லை.

   நீக்கு
 4. படங்கள் அழகாக உள்ளன. திருவெள்ளறை கோயில் மாமியார் மருமகள் குளமும் வித்தியாசமான அமைப்பில் இருக்கும். 

  திருமெய்யம் மூலவர் திருவனந்தபுரம் பத்மனாபனை விட பெரியது என்பதை தற்போது தான் அறிகிறேன். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவட்டாறு ஸ்வாமியும் திரு அனந்தபுரம் பத்மநாபரை விடப் பெரிய உருவம். கடு சர்க்கரையினால் ஆனது. ஆனால் திருமெய்யம் கருங்கல் சிற்பம்.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. அத்தி வரதர் தரிசன பாக்யம் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இந்தக் கோடிக்கு அந்தக் கோடி சயன கோலத்தில்...
  என்ன ஒரு தரிசனப் பேறு!
  இப்பொழுது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்தி வரதரை மூன்று முறை சேவித்தேன். மூன்றாவது முறை, மகளைக் கூட்டிக்கொண்டு சென்றேன். வாய்ப்பும், நம் முயற்சியுமே நமக்கு தரிசனத்தைப் பெற்றுத்தரும்.

   நீக்கு
 7. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமை மிகு கோயில்களில் இதுவும் ஒன்று..

  கோயிலைப் பற்றிய விவரங்கள் சிறப்பு..

  ஹரி நாராயண..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுக்கோட்டையில் நிறைய கோவில்கள் உள்ளன. அதில் ஒன்றை விரைவில் தரிசிக்க ஆசை. பார்ப்போம்.. வாய்ப்பு அமைகிறதா என்று.

   நீக்கு
 8. ராஜாஜி அவர்களின் சமகாலத்தவராகிய காமராஜரின் குருவான சத்யமூர்த்தி அவர்கள் திருமயத்தில் பிறந்ததால்
  சத்யமூர்த்தி எனப்பெயர் கொண்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு சத்யமூர்த்தி அவர்களுக்கு நினைவு மண்டபம் இருக்கிறது. பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் போய்விடுமே என, அந்தப் படத்தைப் பகிரவில்லை.

   நீக்கு
 9. படங்களும் விவரங்களும் மிகவும் சிறப்பு!

  பதிலளிநீக்கு
 10. காமராஜரின் குருவான சத்யமூர்த்தி அவர்கள் என்று எழுதினால் அரசியல் ஆகி விடுமோ...

  மக்கள் தலைவரை உருவாக்கித் தந்த தீரர் சத்தியமூர்த்தி வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது அரசியல்தான். சத்தியமூர்த்தி அவர்களின் தீர்க்கதரிசனமா அல்லது ராஜாஜிக்கான எதிர்ப்பா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் காமராஜர் மாதிரி ஒரு ஸ்டார், காலம் நமக்குத் தந்த கொடை. அந்தக் கொடையை வீணடித்தவர்கள் விருதுநகர், சிவகாசி நாடார் இன மக்கள் என்றே நான் நம்புகிறேன் (அவரைத் தோற்கடித்தவர்கள்)

   நீக்கு
  2. உண்மை.. உண்மை..
   காமராஜர் தோற்கடிக்கப்பட்ட நாளன்று எனது ஆத்தா துக்கத்துடன் சாப்பிடாமல் இருந்தார்கள்...

   நீக்கு
  3. அந்த வருத்தமான நிகழ்வு இன்று வரை சரி செய்யப்படாமலேயே இருக்கிறது!

   நீக்கு
  4. காமராஜர் காலத்தில்
   சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி மீன் வளத்துறையில்
   ( Fisheries Dept.) எனக்கு வேலை கிடைத்தது. நான் பணியில் சேரவில்லை.

   நீக்கு
 11. சிறப்பான படங்கள் தகவல்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 12. நெல்லை அத்தனை படங்களும் அட்டகாசம் போங்க!!!

  அந்தக் குளம் டாப் வ்யூ செம சிலைகள் படம் எல்லாமே அருமை. ரொம்ப ரசித்தேன் எல்லாப் படங்களையும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன். அழகிய பெயர் இருக்க, 'பெயரில்லாமல்' கருத்து பதிவது ஏனோ? ஹா ஹா

   நீக்கு
  2. ஏன் கீதாவுக்கு லாகின் செய்வது பிரச்சனையானது?

   நீக்கு
 13. திருமயம் - சரி சரி எதுக்கு வம்பு திருமெய்யம் போயிருக்கிறேன் முன்பு பல வருடங்களுக்கு முன். அழகான கோயில். அப்பல்லாம் கேமரா கிடையாது. இப்படி வெற்றிடமாக இருந்தாப்ல நினைவில்லை.

  சீரமைப்புப் பணி, அந்தப் பணி இந்தப்பணின்னு மரங்கள் அத்தனையும் வெட்டித் தள்ளிடறாங்க நெல்லை.

  அது கோயிலுக்குப் போறப்ப அதுவும் வெயில் காலத்துலபோனா வெப்பம் அடிக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க திருமயத்துக்குப் போங்க இல்லை திருமெய்யத்துக்குப் போங்க. இரண்டு இடங்களுமே ஒன்றுதான். ஆனால் தவறுதலாக திரு திரு என முழித்துக்கொண்டு 'மய்யத்'துக்குப் போயிடாதீங்க.

   நீக்கு
  2. மரங்களை வளர்ப்போம், காடுகள் செழிக்கணும் என்று வெற்றுக் கூச்சல்தான் எல்லோரும் போடுகிறார்கள். எங்கள் வளாகத்திலேயே மெதுமெதுவாக மரங்களை வெட்டிவிடுகிறார்கள். அப்போதுதானே நிறைய இடங்கள் கிடைக்கும் என்று. அப்புறம் எங்கோ ஒரு இடத்துக்கு எல்லோரும் சென்று மரம் நடு விழாவில் பங்கெடுத்துக்கிட்டு, சமூகத்துக்குத் தன்னாலான கடமையைச் செய்தோம் என்று மார்தட்டிக்கொள்வார்கள்.

   நீக்கு
 14. மகிழ்ச்சி, உடன் வந்த உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போன்றவர்கள், கும்பகோணம் அருகிலுள்ள கோயில்கள், சரித்திரச் சின்னங்கள் என்று பயணம் சென்றால், உடன் வந்து பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். உதாரணமா, பலர் பட்டீஸ்வரம் விஷ்ணு துர்கை, திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போன்ற துணைக்கோயில்களை முக்கியமாகத் தரிசனம் செய்துவிட்டு, அதற்குப் பின்புறம் இருக்கிற பிரம்மாண்டமான சிவன் கோயிலின் சிறப்புக்களைக் காண மறந்துவிடுவார்கள். நான் கண்டவற்றைப் புகைப்படங்கள் எடுத்தேன். ஞாயிறு உலாவில் விரைவில் பகிர எண்ணம். தங்களில் மேலதிகத் தகவல்களை அப்போது எதிர்பார்க்கிறேன் முனைவர் ஐயா. அப்போதுதான் அந்த இடங்களுக்குச் செல்பவர்கள், அவற்றைக் கண்ணுற முடியும்.

   நீக்கு
  2. ஜம்புலிங்கம் ஐயா விக்கிபீடியாவில் நிறைய எழுதிவிட்டார். உங்கள் தகவலுக்காக.

   நீக்கு
 15. மகிழ்ச்சி, உடன் வந்த உணர்வு, பயண நிறைவிற்குப் பின் என்னுடன் பேசியது இன்னும் மகிழ்வைத் தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போன்ற அறிஞர்களிடம், வரலாறு மற்றும் கோவில்களின் சிறப்புகளைத் தெரிந்தவர்களிடம் பேசுவதே ஒரு வரம் ஜம்புலிங்கம் ஐயா. நீங்கள் பௌத்தத்தைப் பற்றி சமீபத்தில் புத்தகம் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி. பல காலம், உங்களுடைய புத்தகங்கள் உங்கள் ஆராய்ச்சி அறிவைப் பறைசாற்றும்.

   நீக்கு
 16. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  இன்றைய கோவில் தரிசனத்தில், திருமெய்யம் கோவிலைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. ஒரே கோவிலில் இரண்டு மூலஸ்தான சன்னிதிகளுடன் மூலவர்கள் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான பெரிய குளம், தூண்களில் உள்ள சிற்பங்கள் என அனைத்தும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு கோவில்களைப்பற்றி நீங்கள் விவரித்துச் சொல்லும் போது உடன் பயணித்து இறைவனை கண்டு கழித்த உணர்வு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நேற்றிலிருந்து வேலைகள், இன்று காலை கொஞ்சம் வெளியே செல்லும் வேலைகள் என முடித்து இப்போதுதான் நான் பதிவுகளுக்கு வருகிறேன். ஆனால், என் நட்புகளின் புதிய பதிவெனும் அட்டவணையில் "வெள்ளி வீடியோ" என வந்திருந்தது. ஏதோ தவறுதலாக வந்திருந்த அந்தப் பதிவை பார்த்ததும் இன்று ஞாயறா, வெள்ளியா என்ற குழப்பம் வேறு வந்து விட்டது. இப்போது உங்கள் பதிவுக்கு சுற்றி வந்தேன். நன்றி.

  நீங்கள் நேற்று எஸ். வி. சேகர் நாடகத்திற்கு சென்று வந்தீர்களா ?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று நாங்கள் எட்டு பேர்கள் நாடகத்துக்குச் சென்று ரசித்தோம். போட்டோ எடுத்துக்கொண்டேன். 1970ல் நடித்த அதே ட்ரூப் என்பதால் பெண் பாத்திரத்தில் நடித்தவர் ஆமை வேகத்தில் நடந்தார்

   நீக்கு
  2. வருகைக்கு நன்றி. மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டீர்களா?

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   அப்படியா? எனக்கு இன்னமும் இங்கும் நாடகம் என்பதெல்லாம் முன்பு போல் உள்ளதாவெனவே ஆச்சரியமாக உள்ளது. சென்னை மைலாப்பூரிலிருந்த போது, இந்த மாதிரி பாட்டு கச்சேரிகள், பரத நாட்டியம் என ஒன்றிரண்டு தடவைகள் சென்றிருக்கிறேன். நாடகத்திற்கு நேரடியாக இதுவரை சென்றதில்லை ஆடியோ கேசட்களில்தான் எஸ். வி. சேகர் நாடகமெல்லாம் கேட்டு ரசித்திருக்கிறேன்.

   இன்றுதான் ஒரு மாதத்திற்கு பின் வெளியில் சென்றேன். ஆட்டோவில் ஏறி, இறங்கி காலை ஊன்றி ஒரளவு நடக்க முடிகிறதா என டெஸ்டிங் செய்து விட்டு வந்துள்ளேன். ஏனெனில் அடுத்த வாரம் குடும்பத்துடன் ஒரு பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது.அதற்கு இன்று ஒத்திகை. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. நாடகம் என்பதெல்லாம் கதை இல்லாமல் ஜோக்குத் தோரணங்களுடன் கூடியதாக இருக்கும், எஸ் வி சேகர் மற்றும் கிரேசி மோகன் நாடகங்கள். நல்ல கதையம்சத்துக்கு நாடகக் காவலர் நாடகங்களைத்தான் பார்க்கணும், பார்த்ததில்லை. இந்த நாடகத்தை ஆர்கனைஸ் பண்ணியது ஒரு சேரிட்டி அமைப்பு. அதனால் அங்கு இலவச கண் பரிசோதனை, ப்ரெஷர், ஷுகர் செக் செய்துகொண்டேன் (அவங்க வற்புறுத்தியதால்)

   ஆட்டோ கொஞ்சம் டேஞ்சர். டக் என்று மேடு பள்ளங்களில் இறங்கி ஏறினால் ஜெர்க் ஆகிவிடக்கூடும். பார்த்துக்கொள்ளுங்கள். பிரயாணத்துக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
  5. செய்தித்தாள்களில் பெங்களுருவில் எஸ் வி சேகர் இருக்கும் புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அரசியல் கலந்த அவர் ஜோக்ஸ் சுவாரஸ்யம்தான்.

   நீக்கு
  6. கமலா அக்கா..  உங்கள் கால் சரியாகிக் கொண்டு வருவது மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
  7. தாங்கள் கூறிய விபரங்களுக்கு நன்றி.

   ஆம்.. ஆட்டோவில் சென்றது மேடு பள்ளங்களில் தூக்கித் தூக்கி போட்டதில் நேற்று கொஞ்சம் வலி வந்ததென்னவோ உண்மைதான். எங்கள் மகன் காரில் செல்லத்தான் ஏற்பாடு செய்துள்ளார். நல்லபடியாக சென்று விட்டு திரும்ப வேண்டும். இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழர் சகோதரரே.

   நீக்கு
  8. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

   எஸ். வி. சேகர் நாடகங்கள் இப்போதும் இங்கு உண்டு என்ற தகவல் தந்தமைக்கு நன்றி. இங்கு வந்த புதிதில் வாங்கிய செய்தி தாள்களில் இந்தமாதிரி நாடகங்கள் இருப்பதை அறிந்துள்ளேன். இப்போது இங்கு வந்து பதினைந்து வருடங்களாகி விட்டதில் ் இன்னமும் நாடகங்கள் தொடர்வதை உங்கள் மூலம் அறிந்தேன். ஆம்.. அவரது நாடகங்கள் அரசியல் சார்ந்த நகைசுவைகளுடன் நன்றாக இருக்கும்

   என் கால் வலி சரியாகி கொண்டிருப்பதற்கு எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் தொடர்ந்து கொஞ்சம் அமர்ந்திருந்தாள், நடந்தால் வலி தெரிகிறதை உணரும் போது மீண்டும் பொறுக்க இயலாத வலி வந்து விடுமோ என பயமாகவும் உள்ளது. நல்லபடியாக பிரயாணம் சென்று வர இறைவனை பிரார்த்தித்து கொண்டேயுள்ளேன். தங்கள் அன்பான கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 17. அருமையான கோவில் ...போன வருடம் சென்று தரிசனம் செய்தோம் ... தகவல்களை அறிந்துக் கொண்டு சென்றதால் பொறுமையாக நின்று நிதானமாக தரிசனம் செய்தோம் ... நாங்கள் சென்ற பொழுது மழை பெய்து இருந்ததால் மிக குளிர்ச்சியாக நிறைவாக இருந்தது

  பதிலளிநீக்கு
 18. திருமயம் கோயிலுக்கும் மற்றக் கோயில்களுக்கு 2013 ஆம் ஆண்டில் போயிட்டு வந்தோம். அதைப் பற்றி எழுதின நினைவும் இருக்கு. படங்கள் எடுக்க முயன்றதும் குரங்கார் வந்து காமிராவைக் கொண்டானு கேட்டதும் நினைவில் இருக்கு. ஆனால் பதிவுகளைக் கண்டு பிடிக்க முடியலை.. தேடிப் பார்க்கணும். நெல்லையைப் போல் நாங்க மலை மீதெல்லாம் ஏறல்லை. இத்தனைக்கும் காலங்கார்த்தாலேயே போயிட்டோம். ஆனாலும் உடல் நலன் கருதி மலை ஏற்றத்தைத் தவிர்த்தோம்.

  பதிலளிநீக்கு
 19. வழக்கம் போல் படங்கள்./பதிவு எல்லாமே நிறையத் தகவல்களுடன் இருக்கிறது. நெல்லையைப் போல் ஆர அமரவெல்லாம் என்னால் பார்க்க முடிந்ததில்லை. காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டு தான் பார்க்க வேண்டி இருந்தது. புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் போகலையா நெல்லை?

  பதிலளிநீக்கு
 20. படங்கள் நிறைந்த தகவல்கள் விளக்கங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 21. ‘ஆதி ரங்கம்’ தரிசனம் மிக அருமை.
  பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது.
  கோட்டையின் மேல் ஏறி பார்த்து இருக்கிறோம். திருக்குளத்தின் அழகு அருமையான படம்.
  சிற்பங்களின் படம் கோயில் படங்கள் மற்றும் தல வரலாறு அருமை.
  மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.

  கால் வலி இனி இம்மாதிரி கோயில்களை சுற்றிப்பார்க்க விடுமா என்று தெரியவில்லை.

  நேற்று பேரனுடன் விளையாட்டு ரயில் வண்டியில் என்னால் காலை தூக்கி ஏற முடியவில்லை பிறர் உதவியுடன் ஏறியது மனதுக்கு வருத்தம் தருகிறது.
  சத்திய மூர்த்தி தேகபலத்தை தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 22. இந்த பதிவுக்கு போட்ட பின்னூட்டம் வரவில்லையே!
  காணாமல் போய் விட்டது.
  பதிவு மிக அருமை.
  நிறைய பயனுள்ள தகவல்கள். வலை தள அன்பர்கள் உடல் துன்பங்களையும் படித்தேன். அதற்கு மற்ற அன்பர்கள் அளித்த பயனுள்ள குறிப்புகளை படித்தேன்.
  நானும் இடுப்பு, முட்டி, கால்வலியில் அவதி படுகிறேன்.
  இறைவன் எல்லோருக்கும் உடல் நலத்தை அருள பிரார்த்தனை செய்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!