செவ்வாய், 13 டிசம்பர், 2022

சிறுகதை : மறுபடியும் - துரை செல்வராஜூ

 மறுபடியும்

துரை செல்வராஜூ
*** *** *** ***
தெரு விளக்கு என்ற பெயரில் - மஞ்சள் நிற பல்ப் ஒன்று இருக்கின்ற ஆறுதலுடன் - மேலை வானில் இறங்கிய சூரியனை மழை கொண்ட மேகங்கள் மறைத்துக் கொண்டிருந்தன..

அந்த ஊரில் இருக்கும்  காரை வீடுகளுள் இதுவும் ஒன்று.. கொஞ்சம் பெரியது.. வசதியானது..

சில தினங்களுக்கு முன் எதிர்பாராத துக்க நிகழ்வு.. அதனால் வீட்டின் முன்புறம்  கீற்றுப் பந்தல்..
வருபவர்கள் அமர்வதற்காக விசுப் பலகைகள் கூடவே நாலைந்து நாற்காலிகள்.. எல்லாம் மத்தியானம் பெய்த மழையில் நனைந்து கிடக்கின்றன..

அகலமான திண்ணையில் விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் ஏழெட்டுப் பெண்கள்.. உறவு முறை சொந்தங்கள்... பற்பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்...

ஊருக்குப் புதிதாக வந்திருந்த மின்சாரம் அந்த வீட்டுக்குள் முட்டை பல்ப்களின் வழியாக தவழ்ந்து கொண்டிருந்தது..

" நாகு... நாகு!.. "

குழந்தைக்கு பால் கொடுத்தபடி அதன் விரல்களை அளைந்து கொண்டிருந்த நாகு - நாகவல்லி சட்டென நிமிர்ந்து,​ " அத்தை!?.. " - என்றாள்..

" வெளக்கு வச்ச நேரத்துல திண்ணையில இருக்காம வீட்டுக்குள்ள இருந்து பாலூட்டலாம் இல்லே!.. புள்ளயும் நிம்மதியா தூங்குவான்!.. "

" இவனா?.. உங்க பேரனா தூங்கறவன்!..  அவங்க மாதிரியே நடுராத்திரி வரைக்கும் சாமக்கூத்து​ அடிக்கிறவனாச்சே?.. "​   - மெல்லச் சிரித்தாள் நாகு..

" இவனுக்கு பொழுது போகலை..ன்னா எங்கிட்ட வந்து தொத்திக்குவான்!.. "

கூடுதல் செய்தியையும் சொன்னாள் நாகு..

தன்னைப் பற்றித் தான் பேசுகின்றார்கள் - என்பதைப் புரிந்து கொண்ட அந்த மழலை  தாயின் மார்பில் ' தப்.. தப்.. ' என்று தட்டியபடி தனது மகிழ்ச்சியைக் காட்டியது..

" இவன் அப்பனும் இப்படித்தான்!.. விதை ஒன்னு போட சுரை ஒன்னா மொளைக்கும்?.."

திண்ணையில் இருந்த மற்ற பெண்கள் சிரித்தார்கள்..

" ஏன்னா.. துக்கம் நடந்திருக்கிற வீடு.. இன்னும் தீட்டு கழிக்கலை.. காத்து கருப்பு சுத்துமேன்னு தான் சொன்னேன்.. அதுவும் இல்லாம குளுந்த காத்து வேற வீசுது.. ராத்திரிக்கு மழ வரும் போல இருக்கு!.. "

மாணிக்கம் அத்தையிடமிருந்து நீண்ட கொட்டாவி வந்தது..

" இந்தா.. வந்துட்டாளே!.​  ஏ.. மாணிக்கம்.. நீ காத்தைப்​ பார்த்திருக்கியா.. காட்டேறியப் பார்த்திருக்கியா?.. ஏண்டி இப்படி அடிச்சு விடுறீங்க.. ஒங்களோட முட்டாள் தனத்துக்கு இல்லாத காத்தையும் இல்லாத  கருப்பையும்  ஏண்டி இழுத்து விடுறீங்க!.. நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களா?.. "

அவங்க ஐயம்பேட்டை அத்தை..  எப்போதும் வித்தியாசமாகப் பேசுபவர்கள்.. மூட நம்பிக்கைகளை  விரட்டி அடித்தே ஆக வேண்டும் என்பதில் மும்முரமாக இருப்பவர்கள்..

" நானா சொல்றேன் அக்கா?.. அந்த காலத்துல பெரியவங்க சொல்லி வச்சதைத் தான் சொல்றேன்!.. "

மாணிக்கம் அத்தை அப்பாவியாகச் சொன்னார்கள்..

" நெய்யும் பருப்புமா தின்னுட்டு வேலை வெட்டி இல்லாம பேசுனதெல்லாம் பேச்சு ஆகிடுமா?.. "

" ஏன்!.. வள்ளுவர் சாமியே சொல்லி இருக்காரே.. "

"என்னது!.. வள்ளுவரு சாமியா?.. அவரு மனுசனடி.. மனுசன்!.. "

" அவரு மனுசன்.... ன்னு எனக்கு தெரியாமலா இருக்கு!.. அவர் தானே சொல்லி இருக்கார்.. "

" என்ன.. ன்னு?.. "

" ஒழுங்கா உத்தமனா ஊருக்கு உபகாரமா மானம் மரியாதையோட  பூலோகத்துல வாழ்ந்துட்டா போதும்.. அதுக்கப்புறம் ஆகாசத்துல இருக்குற தெய்வத்தோட தெய்வமா இருக்கலாம்.. ன்னு.. அவர் அப்படி ஊருக்கு உபகாரமா இருந்தவர் தானே!.. அப்போ அவரும் சாமி தான்.. தெய்வம் தான்!.. அவர் தான் சொல்லி இருக்கார் பேய் பிசாசைப் பத்தி!.."

மாணிக்கம் அத்தை அடித்து விளையாடி நிறுத்தினார்கள்.. அவங்க அந்தக் காலத்துல மரத்தடியில படிச்சவங்க!..

" அது வேற எவனாவது எழுதி நடுவால சொருகி வச்சதா இருக்கும்..  வள்ளுவரு அந்த மாதிரி எழுதலை.. அவரு எழுதுனது வேற.. அதுக்கு  எல்லாம் அர்த்தமும் வேற!.. "

" இவங்க தான் வள்ளுவருக்கு பக்கத்துல உக்காந்து அவரு எழுதுனதப்  பாத்துக்கிட்டு இருந்தாங்க போல!.. ' - என்று மனதில் நினைத்துக் கொண்டு,
அதற்குப் பதில் சொல்லும் நேரத்தில் -

சைக்கிளில் வந்து குதித்தான் சண்முகம்..

அந்தப் பேச்சை அத்தோடு விட்டு விட்டு -

" தாத்தா என்ன சொல்லி விட்டாங்க சம்முவம்!.. " - என்றார்கள் மாணிக்கம் அத்தை..

" இட்லி வெச்சிக் கொண்டாறதுக்கு நல்ல கூடையும் சட்னி சாம்பாருக்கு ரெண்டு வாளியும் வாங்கிட்டு வரச் சொன்னாங்க தாத்தா!.. "

" ஏண்டா.. ராமையன் கடையில இட்லிக் கூடைக்கு கூடவா பஞ்சமா போச்சு?.. சரி.. சரி.. கூடைக்குள்ள நல்லா எலையப் பரப்பி விட்டு இட்லிய வைக்கச் சொல்லு... ஆறேழு பொம்பளைங்க இருக்குறாங்க.. ன்னு தான் பேரு... இட்லி தோச ஓட்டல்.. ல இருந்து வருது!.. "

மாணிக்கம் அத்தை அலுத்துக் கொண்டார்கள்..

நாலு நாட்களுக்கு முன் பெரிய தாத்தா எண்பது வயதில் சிவலோக ப்ராப்தி அடைந்து விட்டார்.. அவரது அன்பினில் கட்டுப்பட்டிருக்கும் கூட்டுக் குடும்பம் இது.. 

இந்தக் கூட்டுக் குடும்பம் என்னும் ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகள் என்றால் பெரியவரும் அவரது தம்பியும் தான்..

பெரியவருக்கு ஒரு மகன்.. சின்னவருக்கு இரண்டு மகன்கள்.. சின்னவரது மருமகள்கள் இருவரில் மூத்தவர் மாணிக்கம்.. அவர்களது வழியில்  நடேச மூர்த்தி - நாகவல்லி  பேரன் பேத்திகள்... ஆக, ஐந்து தலைமுறையினர் அந்த காரை வீட்டுக்குள்.. கூடுதல் உறவாக ஐயம்பேட்டை அத்தை..

பெரியவர் காலமாகி விட்டார் என்றதும் சொந்தக்காரர்கள் எல்லாரும் வந்திருந்து நல்ல படியாக நடத்தியாயிற்று..

அதன் பிறகு, குடும்ப வழக்கப்படி​ ஐந்தாம் நாள் தான் அடுப்பு ஏற்றுவது  - என்பதால் நாளை வரைக்கும் கடைச் சாப்பாடு தான்..

ஓட்டலில் சாப்பாடு என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருந்த அற்புதமான காலம் அது..

துக்கம் நிகழ்ந்த வீடுகளில் தாயாதி உறவுகளும் சம்பந்திகளும் கூடி சமைத்துப் போடுவது வழக்கம்..  என்றாலும் அவர்களது  வகையறாவில் ஒரு தலைமுறைக்கு முன்னால் நடந்த அசம்பாவிதத்தால் ஐந்து நாள் வரை அடுப்பு ஏறுவதில்லை என்று  ஆகிப்போனது..

மாணிக்கம் அத்தை சொன்னது மாதிரி காற்று சிலு சிலு என்று வீசிக் கொண்டிருந்தது.. வடக்கே எங்கோ பெய்கின்றது மழை.. ​ நடு ஜாமத்துக்குள் இங்கே பெய்யலாம்..

நிலைமை இப்படியிருக்க ஐயம்பேட்டை அத்தைக்கு பேச்சை முடிக்காமல் விட்டதில் இஷ்டம் இல்லை..

' ஆறேழு பொம்பளைங்க இருக்கற வீட்ல ஓட்டல் சாப்பாடா!.. ' - என்று மாணிக்கம் அத்தை அலுத்துக் கொண்டதைப் பிடித்துக் கொண்டார்கள்..

" சமையல விட்டு வெளிய வர்றது தான் பொம்பளைங்களுக்கு உண்மையான முன்னேற்றம்!.. "

" நல்லாருக்கே நியாயம்!..​  வயலும் வரப்பும் ஆம்பளைங்க.. ன்னா அஞ்சறைப் பொட்டியும் அடுப்பங்கரையும் பொம்பளைங்க இல்லையா!.."

மூலையில் இருந்து இன்னொரு குரல்..

" அதனால தான் உங்களுக்கு எல்லாம் பரம்பரைச் சொத்துல இருந்து சல்லிக் காசு கூட கிடையாது.. ன்னு எழுதி வச்சிருக்கானுங்க!.. "

" அக்கா...  மானம் மரியாதை.. குடும்ப கவுரவம்.. இது தானே சொத்து.. வயலும் வரப்பும் காசும் பணமும் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்!.. "

மாணிக்கம் அத்தை விடாமல் தொடர்ந்தார்கள்..

" கஷ்டப்பட்டு உழைக்கிறதே வாய்க்கு ருசியா திங்கத்தானே.. கொழுந்தனுக்கு எது பிடிக்கும்?.. அத்தாச்சிக்கு என்ன பிடிக்கும்!.. இதெல்லாம் எனக்குத் தெரியும்.. ஓட்டல் காரனுக்கு எப்படித் தெரியும்.. எல்லாத்துலயும் கலப்படம்.. ன்னு ஆகிப் போன இந்தக் காலத்துல ஓட்டல நம்பிச் சாப்பிட முடியுமா?.. "

பேச்சுக்குப் பேச்சு விறுவிறுப்பாகிக் கொண்டிருந்த போது -

வீட்டிற்குள்ளிருந்து​ நாகவல்லியின் மகள் - எட்டு வயதுடையவள் - அழுது கொண்டே வந்தாள்..

" ஏலா!.. புள்ளய தனியாவா  தூங்கப் போட்டிருந்தீங்க?.. " - என்று மாணிக்கம் அத்தை கோபித்துக் கொள்ள நாகவல்லி பதறினாள்..

" நடு வீட்ல தான் பெரிய அக்கா, அத்தாச்சி,  சேர்மக்கனி, பூங்கொடி,  பேச்சிமுத்து எல்லாம் இருக்காங்களே!.. நீ வாடி என் செல்லம்!... " என்றவாறு கையை நீட்டினாள்..

அந்தச் சிறுமியோ தாயிடம் செல்லாமல் ஆத்தாவிடம் சென்று அவர்கள் மடியில் அமர்ந்து கொண்டாள்...

தூக்கம் இன்னும் முழுதாகக் கலைய வில்லை என்பது புரிந்தது..

மறுபடியும் கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள்...

வெட்டிப் பேச்சு முற்றாக நின்று போனது...

" ஏன் அழுவுறா.. வயித்தை எதும் வலிக்குதா?.."

சந்தேகத்திற்குப் பதிலாக -

" தாத்தா!.. " - என்றது குழந்தை..

" தாத்தாவா!... தாத்தா தான் சாமி கிட்ட போய்ட்டாங்களே!.. "

" இல்லே!.. " என்றபடி வாசற் புறத்தைக் கை காட்டியது குழந்தை..

அங்கே வீட்டின் வளர்ப்பாகிய மணியன் வாலை சுருட்டிக் கொண்டுபடுத்திருந்தான்..

திடுக்கிட்டார்கள் அனைவரும்..

" ஆள் இல்லாத வாசல்.. ல தாத்தாவா!.."

" ஆவியா வந்து நிக்கிறாரோ?.. "

" பச்சப்புள்ள பொய் சொல்லுமா!.. "

கிசுகிசுப்புகள் மெல்ல எழுந்தன..

" இதுக்குத் தான் பொரி கடலை எல்லாம் முக்கூட்டு முனையிலவைக்கணும்...ங்கறது.. என்ன குறையோ என்னமோ இப்ப ஆவியா வந்து நிக்கிறார்!.. "

" இங்கே பத்து நாளைக்கு பேயா அலைஞ்சி திரிஞ்சிட்டு தான்கெளம்புவாங்களாம்!.. "

சர.. சர.. என்று இறங்கிய இடியோசை வேறு பீதியைக் கிளப்பியது..

" அத்தாச்சி நீங்க தான் தைரியமான ஆளாச்சே!.. தாத்தா கிட்ட சொல்லுங்களேன்.. புள்ளைங்க பயப்படுறாங்க.. ன்னு.. "

பேசிக் கொண்டிருக்கும் போதே ஜவ்வாது வாசனை அங்கே பரவியது..

ஐயம்பேட்டை அத்தையைத் தவிர மற்றவர்கள் பயந்து விட்டார்கள்..

" யாராவது அரிவாளை எடுத்து வாசல்.. ல வீசுங்களேன்.. "

" வெளியில போன ஆம்பளைங்க சட்டு புட்டு.. ன்னு வீட்டுக்கு திரும்பாம.. என்னதான் வெட்டிப் பேச்சோ!.. "

அலுப்பும் பயமும் பதற்றமும் பரவின..

நாகவல்லி மகனை மார்புற அணைத்துக் கொண்டாள்.. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது..

" ங்ஙூங்..ஙூங்!.. " 

விருட்டென எழுந்த மணியன் யாரிடம்  கொஞ்சிக் குலவுகின்றான் என்பது தெரிந்ததும் பயத்தில் தொண்டைக் குழி வறண்டு போனது ...

அந்த நேரம் பார்த்து -  தெரு நாய் ஒன்றின் ஊளைச் சத்தம்..

" இந்தா... ச்சீ!.. "

" யாரச் சொல்றீங்க அப்பத்தா!.. "

வெளியே சென்றிருந்தவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்துடன் வந்து கொண்டிருந்தார்கள்..

சின்ன தாத்தா, மாமா, நாகுவின் புருசன் நடேச மூர்த்தி இன்னும் பலரும்.. 

கூடவே சைக்கிளில் இட்லிக் கூடை, சாம்பார் வாளி, இலைக்கட்டு...

ஐயம்பேட்டை அத்தை மட்டும் குண்டுக்கல் மாதிரி உட்கார்ந்திருக்க -  மற்றப் பெண்கள் அனைவரும் ஆளுக்கு ஆள் விவரிக்க ஆரம்பித்தனர்..

நாகுவிடமிருந்த குழந்தை நடேச மூர்த்தியைக் கண்டதும் கைகளை விரித்துக் கொண்டு தாவியது..

எல்லாவற்றையு​​ம் கேட்டுக் கொண்ட சின்ன தாத்தா -

" இப்படித்தான் ரெண்டு மூனு நாளைக்கு இருக்கும்.. எதுக்கும் பயப்பட வேண்டாம்!.. "

என்றார் ஆறுதலாக..

" பூத ப்ரேத பய நாசனாய நம: "

- என்று உச்சாடனம் செய்தார்..

" ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்​ பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்.."

சண்முக கவசம் சொல்லியபடி எல்லாருக்கும் விபூதி பூசி விட்டார்..

ஐயம்பேட்டை அத்தையிடம் ஏளனப் புன்னகை..

" உயிரும் ஓட்டமும் ரத்தமும் சதையும் எலும்பும் தோலும் இருந்த வரைக்கும் அவரு தாத்தா... உயிர் போயி சாம்பலானதுக்கு அப்புறம் ஆவி பிரேதம், பேய் பிசாசு!.. நல்லாருக்கு கொழுந்தனாரே..  ஒங்க நியாயம்!.. "

இதைக் கேட்டதும் சின்ன தாத்தாவிடம் சிரிப்பு..

" அத்தாச்சி!.. ஆனானப்பட்ட  ஞானிகளுக்கே விளங்காத சேதி நம்மள மாதிரி சூனியங்களுக்கா விளங்கும்?.. இந்த மாதிரி அறிகுறி நடந்தா இறந்தவங்க நம்ம குடும்பத்திலயே மறுபடியும்  பொறப்பாங்க.. ங்கறது பெரியவங்க சொல்லி வச்சது.."

" எவனாவது ரோட்ல சவ்வாது பூசிக்கிட்டு போயிருப்பான்.. அந்த வாசம் காத்தோட வந்திருக்கும்.. அதுக்காக இப்படி ஒரு மூட நம்பிக்கையா?.. அததும் விட்டாப்போதும்.. ன்னு பிச்சுக்கிட்டு ஓடுறப்போ  மறுபடியும் இங்கே வந்து பொறக்குறாங்களாக்கும்!.. இப்ப தான் சின்ன குடும்பம்.. சீரான வாழ்க்கை.. ன்னு  ஆகிப் போச்சே!.. இங்க இருக்கிற எளந்தாரிக எல்லாரும் மூனு நாலு புள்ள பெத்துட்டு இதுக்கு மேலயும்  ஒரு புள்ளயா.. ன்னு நடுங்கிக்கிட்டு இருக்காளுங்க!.."

" இருக்கலாம்.. ஆனா எல்லாத்துக்கும் மேல வரங் கொடுக்குற தெய்வம்.. ன்னு ஒனனு இருக்கே!.. "

" தெய்வம்.. ன்னு ஒன்னா!..  முப்பத்து முக்கோடிக்கும் மேல!.. நாஞ்சொல்லலை  இப்படி.. ஒங்களோட  சாத்திரந்தானே சொல்லுது!..  "

"  அத்தாச்சி!.. தெய்வம் ஒன்னு தான்.. முப்பத்து முக்கோடி.. ங்கறது பரிவாரம்!.. "

" எல்லாம் வல்ல தெய்வம்..ன்னு சொல்றீங்க.. அதுக்கு  எடுபிடி.. ஆள் அம்பு.. சேனை எதுக்கு?.. "

ஐயம்பேட்டை அத்தை விடுவதாக இல்லை..

" முதல் மந்திரின்னா பெரிய பதவி தான்.. பவர் தான்!.. அப்படியான அவருக்கு ஏன் இத்தனை கலெக்டரும் ஆபீசரும் கிளார்க்கும் பியூனும்!?.. "

சின்ன தாத்தாவின் கேள்வியைக் கேட்டதும்​ திண்ணையில் சிரிப்பொலி..

அனைவரும் ஆச்சர்யம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்..

" கொழுந்தனாரே!.. மறுபடியும் ஐயா வந்து சொன்னா கூட நீங்க எல்லாம்  திருந்த மாட்டீங்க !.. "

" ஐயா மறுபடியும் வர்றது.. ன்னா அது மறு ஜென்மம்!.. அப்போ நீங்க வள்ளுவர் சொல்றதை ஒத்துக்கிறீங்களா?.. "

சின்ன தாத்தாவின் கேள்வியில் ஐயம் பேட்டை அத்தையிடம் சற்றேதடுமாற்றம்..

" சரி.. சரி.. வர்றதும் போறதும் இருக்கட்டும்.. எல்லாரும் சாப்பிட வாங்க... எலை போட்டாச்சு.. "

மாணிக்கம் அத்தையின் குரல் அதிர்ந்தது..

பெரிய தாத்தாவுக்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த நந்தா விளக்கின் அருகில் இலை போட்டு அதில் இட்லி தோசை எடுத்து வைத்த நாகு - காசிச் செம்பில் தண்ணீரும் வைத்தாள்..

வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.. ஆண்கள் திண்ணைக்குச் சென்றுவிட பெண்கள் அனைவரும் வீட்டுக்குள்..

" மாணிக்கம்!.. புள்ளைங்க நடுராத்திரியில் எழுந்திரிச்சா நீ துணைக்கு நில்லு... புரியுதா!.. "

மாமா சொன்னதை அத்தை கேட்டுக் கொண்டார்கள்..

எலுமிச்சம் பழம் ஒன்றை அறுத்து அப்படியும் இப்படியும் வீசிய பிறகு வாசல் கதவை அடைத்து விட்டு வெளியே சென்றார் சின்ன தாத்தா..

" போனவருக்காக இட்லி தோச வைப்பாங்களாம்.. போனவரு வீட்டுக்கு உள்ளே வரப்படாது.. ன்னு காப்பும் கட்டுவாங்களாம்.. "

ஐயம்பேட்டை அத்தை அந்த நேரத்திலும் ஓயவில்லை..

மறுநாள்.. 

சூரியன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கீற்றுப் பந்தலின் கீழ் ஆண்கள் கூடியிருந்தனர்..

நடுவில் இளைஞன் ஒருவன் கையில் பேரேடு பேனாவுடன்..

" பத்தாம் நாள் காரியத்துக்கு யாருக்கெல்லாம் கார்டு போடணும்.. ன்னு சொல்லுங்க தாத்தா!.. "

இடையில் -  மாமா தயக்கத்துடன் சொன்னார்..

" காரைக்கால்.. ல கடை வச்சிருக்கிற நம்ம கருக்குவேல்  பாண்டினுக்கு சேதி சொல்லலை.. விடுபட்டுப் போச்சு.. தாத்தா.. தாத்தா.. ன்னு உயிராக் கிடப்பான்.. இந்த சேதி தெரிஞ்சதும் எப்படி எனக்கு சொல்லாம  விட்டீங்க.. ன்னு சண்டைக்கு வரப் போறான்!.."

" அதுதான் நாலைஞ்சு நாள் மழையில அந்தப் பக்கம் தந்திக்  கம்பம் எல்லாம் சாஞ்சு போச்சு.. எல்லாம் சரியாக இன்னும் நாலு நாள் ஆவும்.. ன்னு ரேடியோவுல சொன்னாங்க... தந்தி ஆபீஸ்.. லயும் சொன்னாங்களே.."

" அது ஒரு பக்கம் இருந்தாலும்​ ரெயில்வே லைன் கிளியர்..ன்னு நேத்திலேருந்து  நாகூர் பாசஞ்சர் ஓடுதாம்... அப்போ ரயில்.. ல தபால் கட்டு வரும் தானே!.. "

" தாராளமா.. அப்போ ரிப்ளே கடுதாசி  எக்ஸ்ட்ராவா எழுதிப் போடு..  பாண்டியன் வந்ததும் நேர்ல சமாதானமா பேசிக்கலாம்!.. "

சின்ன தாத்தா சொல்லி வைத்த வேளையில் தபால்காரர் வந்து நின்று மணியடித்தார்..

" பெரிய ஐயா பேருக்கு லட்டர் ஒன்னு வந்திருக்குது!.. "

 எல்லாருக்கும் ஆச்சர்யம்..

" அவர் போய்ச் சேர்ந்து தான் இன்னையோட அஞ்சு நாளாவுதே!.. "

அவர் நீட்டிய கடிதத்தை சின்னப் பையன் ஒருவன் வாங்கி வந்தான்..

அதன் நாலு மூலைகளிலும் மஞ்சள் தடவப்பட்டிருந்தது..

" என்னப்பா விசேசம்!.. யாரு எழுதி இருக்காங்க.. "

" கருக்குவேல் பாண்டியன்.. காரைக்கால்!.."

அனைவருக்கும் அதிர்ச்சி..

" படி.. படி!.. " கூட்டத்தில் பரபரப்பு..

" மகாஸ்ரீ ஸ்ரீ தாத்தா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அநேக நமஸ்காரம்.. வேணும் சுகம்.. இப்பவும் தங்களது ஆசீர்வாதத்தினாலும் நேர்ச்சையாலும் தங்களது பேத்தி வள்ளியம்மை தலை முழுகாமல் இருக்கிறாள்.. ஆறு வருசத்துக்குப் பிறகு இந்த பாக்கியம்​ கிடைத்திருக்கிறது.. முந்தா நாள் தர்மாஸ்பத்திரிக்குப் போய் காட்டினோம்.. சத்து மாத்திரை எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.. இங்கு மழை தண்ணியாக இருப்பதால் நேரில் வந்து தெண்டணிட்டு சொல்ல முடியவில்லை.. இதை மன்னித்து எங்களை ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டுக் கொண்டு,
இப்படிக்கு,
கருக்குவேல் பாண்டியன்
காரைக்கால்... "

அங்கிருந்தவர்களின் உடம்பு சிலிர்த்திருந்தது..

" கொழுந்தனார் சொன்ன மாதிரி பெரியவர் தான் மறுபடியும் பூலோக வாசத்துக்கு வந்து இருக்காரே.. அப்புறம் எதுக்கு வருத்தம்!.. இந்த ஜென்மத்தை ஈடேத்துறதுக்கு எல்லாம் செஞ்சிட்டு சந்தோசமா இருப்போம்!.. "

ஐயம்பேட்டை அத்தை  வழக்கத்துக்கு மாறாக நெற்றி நிறைய விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தார்கள்..

*** *** ***

35 கருத்துகள்:

 1. மிக இயல்பான கிராமத்து, கூட்டுக்குடும்பக் கதை

  சொன்னவிதம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்களுக்கு நல்வரவு..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நல்ல கருத்துகள், நல்லனவற்றையே கதைக்களனாக்கியிருக்கிறார. பாராட்டுகள்

  கூடம், கிளப்புக்கடை சாப்பாடு, இயல்பான குடும்ப உரையாடல்கள் என் மனதிற்கு நிறைவான கதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நல்ல கருத்துகள், நல்லனவற்றையே கதைக்களனாக்கியிருக்கிறார. பாராட்டுகள்..//

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நம் ஜீனிலேயே மூத்தோர்களின், குலத்தின் குணக் கலவைகள்தாமே பொதிந்து கிடக்கிறது.

  எந்தக் குணக்கலவை அதிகமாக இருக்கிறதோ அந்த மூத்தோர் வந்துபிறந்ததாக நம்புகிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நமது ஜீனிலேயே மூத்தோர்களின், குலத்தின் குணக் கலவைகள் தாமே பொதிந்து கிடக்கிறது.. //

   ஆம் நானும் படித்திருக்கின்றேன்..

   தங்கள் அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

   தங்களது தமிழக சுற்றுப் பயணம் எவ்வாறுள்ளது.? செல்லுமிடங்களில் மழை, வெள்ள இடர்பாடுகள் எவ்வாறுள்ளது? தங்களது ஞாயிறு கோவில்கள் பற்றிய பதிவை படிக்கிறேன். வெளியூர்களில் இருக்கும் போதும், தங்கள் பதிவுக்கும் சரி, பிற பதிவுகளுக்கும் சரி, தங்களது பின்னூட்டங்களை தவறாமல் தரும் தங்களது கடமை மிகுந்த பொறுப்புணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 4. இன்று எனது ஆக்கத்தினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 5. இன்று கதைக்களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 6. இன்று மறுபடியும் எனது ஆக்கம்..

  இதை நான் எதிர்பார்க்கவே இல்லை..

  மறுபடியும்
  மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 7. ஒரு வாரமாகவே சூழ்நிலை சரியில்லை.. மேகமூட்டம் தான்..

  இரண்டு நாட்களாக இங்கே மழை...

  கதையிலும் மழைச் சூழல் தான்...

  பதிலளிநீக்கு
 8. தாத்தாவை ஆவியாகக் கண்ட மணியனின் குஷி காணொளி அருமை...

  சித்திரச் செல்வர் திரு. கௌதம் அவர்களுக்கு நன்றி.. நன்றி...

  பதிலளிநீக்கு
 9. இந்தக் கதையை எழுதி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றன...

  பதிலளிநீக்கு
 10. காணவில்லை! காணவில்லை! 

  திருவாரூருக்கு சென்ற சேகரையும் அவரை பின் தொடர்ந்து சென்ற சு நா மீ ஆசிரியரையும் காணவில்லை. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேகர் திருவாரூர் செல்லவில்லை - செல்வதற்கு முன் தடுக்கப்பட்டார். ஏன்? நாளை தெரியும் !!

   நீக்கு
 11. வணக்கம் அனைவருக்கும்.

  இப்போதுள்ள மழை, குளிர் பாதிப்புக்களிலிருந்து அனைவரையும் இறைவன் நலமுடன் காக்க வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் படைத்த கதையை படித்ததும் அக்கதை மாந்தர்கள் போல் நானும் மெய்சிலிர்த்து போய் விட்டேன். கதையின் ஆரம்பத்திருந்தே இறுதி வரை உள்ளார்ந்த வரிகளுடன் அருமையாக, அவருக்கே உரித்த இயல்பான நடையில் எழுதப்பட்ட கதையை எங்கும் நிறுத்தாது படித்து முடித்தேன். இப்படியான ஒற்றுமை மிகுந்த குடும்ப கதைகளை சகோதரர் ஒருவரால்தான் தர முடியும். கதை மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  கதைக்கேற்ற ஒவியத்தையும், பொருத்தமான சின்ன காணொளியையும் பகிர்ந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. மிகவும் எதிர்பார்த்திருந்தேன் -

  இந்தக் கதையை எழுதிய போது..

  பதிலளிநீக்கு
 13. மிக அருமையான இயல்பான சரளமான பேச்சுக்கள்/உரையாடல்களுடன் கூடிய கதை. கதைனே சொல்ல முடியலை. நேரில் பார்க்கிறாப்போல் இருந்தது. கடைசியில் ஐயம்பேட்டை அத்தை மனசு மாறினவிதம்/அதைச் சொன்ன விதம் எல்லாமும் வெகு இயல்பாகப் பொருந்திப் போயிருக்கு. கண்ணெதிரே காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் வந்து கருத்து சொன்னதற்குப் பிறகு தான் நிம்மதியாக இருக்கின்றது..

   இது இன்றைக்கும் உள்ள சூழல் தான்.. கொஞ்சம் வித்தியாசம் ஆகின்றது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா

   நீக்கு
  2. மடிக்கணினி இஷ்டத்துக்கு ஓடிக் கொண்டிருந்ததால் அது ஒழுங்காய் இருக்கும்போது கொஞ்சம் அவசரமான வேலைகளைப் பார்த்துக்கொள்வேன். அது நிற்காமல் ஓடினால் எதுவும் செய்ய முடியாது. நேற்றுப் பூரா ஒரே ஓட்டம் தான். இன்று காலை கொஞ்சம் சமர்த்து. பின்னர் மருத்துவர் வந்து பார்த்து வைத்தியம் செய்துட்டுப் போயிருக்கார். இனி தொந்திரவு இருக்காது என நம்புகிறேன்.

   நீக்கு
  3. இனி தொந்திரவு இருக்காது என நம்புகிறேன்...

   நல்லதே நடக்கட்டும்..

   நீக்கு
 14. அருமையான கதை! நம்மால் சிலவற்றை உணர முடியும். தர்க்கம் செய்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. நல்ல சக்திகள் நம்மை காத்து நிற்பது கன் கூடாக சில நேரங்களில் காண்கின்றோம். நல்லதோர் கதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. // நல்ல சக்திகள் நம்மை காத்து நிற்பதை கண் கூடாக சில நேரங்களில் காண்கின்றோம்.. //

   உண்மை தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!