திங்கள், 12 டிசம்பர், 2022

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார் :: வசுமதி மணியன் ரெஸிபி

 

தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு - 25 கிராம் 

பாசிப்பருப்பு - 25 கிராம் 

கடலைப்பருப்பு - 25 கிராம் 

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 4

சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 

கொத்தமல்லி - சிறிது 

உப்பு - தேவையான அளவு


தாளிக்க:

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 

கடுகு - 1/2 தேக்கரண்டி 

உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 

சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - சிறிது


செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது  நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.

கடாய் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி  சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.  பிறகு உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி  அடுப்பை அணைக்கவும்.

தாளிக்க அடுப்பில் கடாய வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி  சாம்பார் தயார்.


24 கருத்துகள்:

 1. சாம்பார் மட்டும் தனியே தராமல் இட்லி, சட்னி, மிளகாய் பொடியுடன் தந்து விட்டீர்கள். நன்று. ஒன்று தெரிந்து கொண்டேன். புளி இல்லாத சாம்பார் தான் இட்லிக்குப் பொருந்தும். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. நான் அடிக்கடி பண்ணும் சாம்பார். ஆனால் கடலைப்பருப்புச் சேர்ப்பதில்லை. பொதுவாகவே கடலைப்பருப்பு எனக்கு அலர்ஜி. சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் ரொம்பக் கெட்டியாக ஆயிடும் என்பதால் வறுத்து அரைத்தால் கூட ஒரு தேக்கரண்டிக்கு மேலே வைக்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. மழையின் தாக்கம் குறைந்து எல்லோரும் இயல்பு நிலைக்கு வந்திருப்பார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் எங்கள் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 5. துவரம் பருப்பின் தரம், காய் மசாலாக்களின் சேர்மானம், தண்ணீர் - குறிப்பாக காவேரித் தண்ணீர்- எல்லாவற்றுக்கும் மேலாக கைப் பக்குவம்...

  இவையே சாம்பாருக்கு சாட்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாம்பார் மைசூர் தயாரிப்பு. காவிரி நீர் கர்நாடகா. ஆனாலும் எனக்கு கர்நாடகா சாம்பார் பிடிப்பதில்லை

   நீக்கு
  2. கர்நாடகாவில், சாம்பார், ரசம் எல்லாவற்றிலும் வெல்லம் போட்டு இளிக்க(!) வைத்துவிடுகிறார்கள்!

   நீக்கு
 6. பாரம்பரிய தஞ்சாவூர் செய்முறையை ஆளாளுக்கு ஒரு மாதிரியாய்ச் சொல்லி -

  குழாயடிக் காரர்கள் கெடுத்து விட்டார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கென்னவோ, ஒரிஜினலா ஒருத்தர் சொன்னதுல திப்பிசம் சேர்த்து ஆளாள் ஏதோ தங்களுடையதுபோல யூடியூபில் புளுகுகிறார்கள் என நினைக்கிறேன்

   நீக்கு
 7. ஆஹா! மழைக்கும், குளிருக்கும் சுடச்சுட இட்லி,சாம்பாருக்கு ஈடு இணை ஏது?

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமா இருக்கு. செய்துபார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. பொடி செய்து போடும் சாம்பார் எமக்கு புதிது. நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!