திங்கள், 26 டிசம்பர், 2022

"திங்க"க்கிழமை :  முத்துக்குழம்பு, சவரன் துவையல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

பொதுவாவே நம்மவருக்கு ஒரு (standard) திட்டமிட்ட சமையல்னா பிடிக்கிறதில்லை. மாத்திட்டே இருப்பார். நானுமே தினம் ஒன்று எனப் பண்ணும் ரகம் தான். இப்போப் புதுசா ஒரு "பழக்கம்" வந்திருக்கு நம்ம ரங்க்ஸுக்கு. அதான் சமையல் யூ ட்யூப் எல்லாம் பார்க்கிறது.

அதைப் பார்த்துத் தவலை அடை செய்யச் சொன்னார் ஒரு முறை. அது செய்து படம் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன். இன்னும் போடலை. அப்புறமா ஒரு நாள் சட்னி வகைகள் பார்த்துட்டு இருந்தப்போ, "மதுரைத் தண்ணிச் சட்னி" பண்ணச் சொன்னார். அன்னிக்கு ராத்திரிக்கு இட்லி பண்ணறதா இருந்தேன். மதுரைத் தண்ணிச் சட்னி ஒண்ணும் இல்லை. கிட்டத்தட்டக் கடப்பா மாதிரி. ஆனால் இதில் கடலைமாவு கரைச்சு விடாமல் உ.கி வேகவைத்துச் சேர்க்காமல் பண்ணணும். அதை அப்புறமாப் பார்ப்போம். இப்போ இரண்டு நாட்களாக ஒரு மாமியின் யூ ட்யூபைப் பார்த்துட்டு அதிலே பண்ணி இருக்கும் குழம்பைப் பண்ணச் சொன்னார். குழம்பின் பெயர் "முத்துக்குழம்பு!" அதற்குத்தொட்டுக்கச் "சவரன் துவையல்!" இஃகி,இஃகி,இஃகி.


சின்ன வயசில் மதுரை மேலாவணி மூலவீதியில் இருக்கும்போது அங்கே கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு மாமி சீதாமாமினு இருந்தாங்க. அவங்க சொந்தக்காரங்க ஒரு மாமி சேமா மாமினு அடிக்கடி இங்கே வருவாங்க. ஒரு முறை அவங்க சமைச்சப்போ எங்க அப்பாவோ, அம்மாவோ என்ன சமையல்னு கேட்கவும் அவங்க "முத்துக்குழம்பு, சவரன் துவையல்" என்றார்கள். கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. ஆனால் பார்த்ததும் தான் புரிந்தது. மணத்தக்காளிக் குழம்பும், பருப்புத் துவையலும் என. அன்னிக்கப்புறமா அதை மறந்தே விட்டேன். சுத்தமா அந்த நினைப்பெல்லாம் இல்லவே இல்லை. இப்போ இந்த மாமியின் சமையல் குறிப்பைப் பார்த்ததும் அது நினைவில் வந்தது. இரண்டு நாட்களாக எங்கேயோ கேட்டிருக்கோமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் சவரன் துவையல்னு நம்மவர் சொன்னதுமே துவரம்பருப்புத் துவையல்னு உடனே டக்குனு சொல்லிட்டேன். இன்னிக்குத் தான் பண்ணும்போது நினைவு வந்தது இது சேமா மாமி பல வருடங்கள் முன்னர் பண்ணியது என்பது. இனி செய்முறையைப் பார்ப்போமா? ரொம்பவே எளிது. கிட்டத்தட்ட மிளகு குழம்பு மாதிரித்தான். ஆனால் அது இல்லை.

முத்துக்குழம்பு செய்யத் தேவையான பொருட்கள். ஒரு நெல்லிக்காய் அளவுக்குப் புளி ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உப்பு தேவையான அளவுக்கு. மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மணத்தக்காளி வற்றல் ஒரு குழிக்கரண்டி. வறுக்க நல்லெண்ணெய் அல்லது நெய் தாராளமாக.

வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல் 4 அல்லது 5 காரத்துக்கு ஏற்றபடி, ஒரு தேக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஒரு துண்டு, கருகப்பிலை ஒரு கைப்பிடி. இவை எல்லாவற்றையும் நல்லெண்ணெயில் வறுத்து ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கல்சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு/நெய் ஊற்றிக் கொண்டு மணத்தக்காளி வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும். அது நன்கு வறுபட்டதும் அதிலேயே அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். அரைத்த விழுது நன்கு வறுபட்டதும் புளி ஜலத்தை ஊற்றி விட்டு நன்கு கிளறவும் கட்டிகள் இருக்கக் கூடாது. புளிஜலம் அரைத்த விழுது, மணத்தக்காளி வற்றல் எல்லாம் சேர்ந்து கொதிக்கையில் மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்துச் சேர்ந்து வரும்போது பக்கத்தில் ஒரு இரும்புக்கரண்டி அல்லது வாணலியைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டுப் பெருங்காய்த் தூள் சேர்த்து ஒரே ஒரு மிளகாய் வற்றல் போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் தாளிதத்தைக் குழம்பில் கொட்டவும். அடுப்பை அணைத்து விடலாம். மணத்தக்காளி வற்றல் கறுப்பு முத்தைப் போல் தெரியும் என்பதால் முத்துக்குழம்பு.

சவரன் துவையல். ஒரு குழிக்கரண்டி துவரம்பருப்பை வெறும் வாணலி அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு சிவக்க வறுக்கவும். சிவப்பாக வறுத்தால் தான் துவையல் ருசியே நன்றாக இருக்கும். இதைக் குழம்புக்கு வறுக்கும்போதே வறுத்து வைக்கலாம். ஏனெனில் துவரம்பருப்பு ஊற வேண்டும். வறுத்த துவரம்பருப்பில் வெந்நீர் விட்டு ஊற வைக்கவும். அதோடு ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவுக்குப் புளியையும் ஊற வைக்கவும். சமையல் முடியும் தருவாயில் 2 மிளகாய் வற்றல்,பெருங்காயம் வறுத்துக் கொண்டு ஊற வைத்த துவரம்பருப்போடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு அரைக்கவும். ரொம்பவும் நைசாகவும் இல்லாமல் ரொம்பவும் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மாற்றி நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். சாப்பிடும்போது தாளிதத்தைக் கலந்தால் தான் நன்றாக இருக்கும். இந்தக் குழம்பு சாதத்துக்குச் சவரன் துவையல் நன்றாக இருந்தது. மோர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். வறுத்த துவரம்பருப்பு அந்தக் காலச் சவரன்கள் போல (காசுமாலையில் சின்னச் சின்னதாகச் சேர்ப்பார்கள்) இருப்பதால் சவரன் துவையல்.


படம் இணையத்திலிருந்து. கூகிளாருக்கு நன்றி.

22 கருத்துகள்:

 1. குழம்புக்கு சின்ன வெங்காயம், பூண்டு வேண்டாமா? துவையலுக்கு தேங்காய் துருவல் பூண்டு வேண்டாமா? சாதாரணமாக சாதத்தில் போட்டு சாப்பிடும் துவையலுக்கு தாளிக்க மாட்டார்கள்.


  மேற்கூறியது மனைவியின் பக்குவம்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போணியே ஆகலை போலிருக்கே! சாதாரணமாக நாங்க பூண்டு, வெங்காயம் எல்லா நாட்களிலும் பண்ண மாட்டோம். அதுவும் பத்தியச் சமையல் பிரசவம் ஆனவங்களுக்கு என்றால் மட்டுமே பூண்டு, வெங்காயம் சேர்ப்போம். இல்லைனா மிளகு குழம்பு, பருப்புத்துவையலில் எல்லாம் பூண்டு , வெங்காயம் சேர்ப்பதில்லை. சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் துவையல் வகைகளுக்குக் கடுகு, உபருப்புத் தாளிப்பு முக்கியம். சேர்த்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைப்போம். பத்தியத்துக்கான பருப்புத் துவையல் எனில் அதில் தேங்காய் சேர்ப்பதில்லை.

   நீக்கு
 2. நல்லவேளை... யூடியூப் வந்ததோ... நாங்கள்லாம் பொழச்சோமோ... இல்லைனா அதே ரசம், அதே காய்னு நம்மளை ரோபோ ன்னு நினைச்சுருவாங்க.... இது யாரோட மைன்ட் வாய்ஸா இருக்கும்?

  பதிலளிநீக்கு
 3. படம் அழகாக இருக்கே... யூ டியூபைப் பார்த்து இவ்வளவு அழகாகச் செய்திருக்காங்களேன்னு ஆச்சர்யப்பட்டுவிட்டேன்..... கடைசி வரி படிக்கும்வரை

  பதிலளிநீக்கு
 4. மணத்தக்காளி வத்தல் குழம்பு, பருப்புத் துவையல்..... ஆளை ஏமாற்ற என்னவெல்லாம் பேர் வைக்க வேண்டியிருக்கு...

  பதிலளிநீக்கு
 5. பெயர் புதுமையாக இருக்கிறது இதுவரை கேள்விப்பட்டதில்லை...

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலமே வாழ்க!..

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு


 8. @ நெல்லை..

  மணத்தக்காளி வத்தல் குழம்பு, பருப்புத் துவையல்..

  ஆளை ஏமாற்றுவதற்கு என்னவெல்லாம் பேர் வைக்க வேண்டியிருக்கு!...

  அது தானே..

  பதிலளிநீக்கு
 9. முத்துக்குழம்பு, சவரன் துவையல் நன்றாக இருக்கிறது.
  நாம் செய்யும் சமையலுக்கு ஒரு புது பேர் கொடுத்துகொண்டால் நன்றாக இருக்கும் போல.

  நீங்கள் சமையல் குறிப்பை சொன்னது அருமை.

  நீங்களும் ஒரு சமையல் யூ ட்யூப் ஆரம்பித்து விடலாம். உங்களுக்கு தெரியாத சமையல் உண்டா?
  உங்கள் சமையல் மின் புத்தகம் வெளி வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பாரம்பரியச் சமையல் பாகம் ஒன்று/இரண்டு வந்திருக்கு. மூன்றாவது எடிட்டிங்கில். நேரம் இருக்கையில் எடிட் செய்கிறேன்.

   நீக்கு
 10. இதே செய்முறைதான்..சுண்டைக்காய் என்றாலும், மணத்தக்காளி வற்றல் என்றாலும் .இப்படி செய்வதை முத்துக்குழம்பு nnu சொன்னாலும் வற்றல் குழம்பு என்று சொல்வது வழக்கம்...சவரன் துவையலும் இதே ..பருப்புதுவையல் நும் சொல்லி இதோடு சரி சமமாக அல்லது கொஞ்சம் கூடுதல் தேங்காய் வைதும் செய்வதுண்டு...காரமும் இல்லாமல்...இதே kombo தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா சாம்பசிவம் மேடம் கொடுத்த தைரியத்தில், "வெண்பனி இனிப்பு" எழுதி அனுப்பலாம்னு நினைத்தேன். ஆனால் உங்களை மாதிரி ஆட்கள், எங்கள் ஆசையை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, 'அட இது என்ன... எல்லாரும் இதனை தேங்காய் பர்பி என்றல்லவா சொல்லுவார்கள்' என்று எழுதிவிடுவீங்களோன்னு பயம். அதனால்தான் இன்னும் எழுதி அனுப்பாமல் இருக்கிறேன்.

   நீக்கு
  2. ஹாஹாஹா.....மஞ்சுவைத் தழுவிய கார் மேகம்னு இனிப்பு செஞ்சு அனுப்புங்க ..அப்புறம் பனி மூடிய மென் பாறை, மினுமினுக்கும் மேனி அழகினு..செஞ்ஞ்சு அனுப்புங்க....சரி இது எல்லாம் என்ன ஸ்வீட் நு சொல்லுங்க பார்ப்போம் நெல்லை இப்படி....நாநகளும் கலாய்க்க....எத்தாப்.ல...அனுப்புங்க...ஹிஹிஹி

   நீக்கு
  3. மினுமினுக்கும் கருப்பழகி, பொன்னிறமேனியன்..இப்படியும்...

   கீதா

   நீக்கு
 11. முத்துக் குழம்பு, சவரன் துவையல்... இந்தப் பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. படிக்கத் தொடங்கியதும் புரிந்து விட்டது. வெந்நீருக்கே அழல் அமுதம் என்று பெயர் கொடுத்தவர்களாச்சே நாம்:))

  பதிலளிநீக்கு
 12. என் மாமியார், ' முத்தப் பல்லக்கு, சிமிட்டி சப்பரம் வேண்டுதல் ' பற்றி ஒரு கதை சொல்லுவாராம். முத்துக் குழம்பு, சவரன் துவையலும் கிட்டத்தட்ட அதே கதைதான்!!

  பதிலளிநீக்கு
 13. பெயர்கள் புதியது .

  நமக்கு மணத்தக்காளி வற்றல் கிடைப்பதில்லை சுண்டங்காயில் செய்வோம். துவையலில் தேங்காய் சேர்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. என்னது மணத்தக்காளி வற்றல் கிடைக்கவில்லையா சொல்லி இருந்தால் நீயூஜெர்ஸியில் இருந்து வாங்கி அனுப்பி இருப்பேனே

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!