திங்கள், 19 டிசம்பர், 2022

"திங்க"க்கிழமை :  மைதா கேக் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 மைதா கேக்!


தேவையான பொருள்கள்:

மைதா மாவு   -   1 1/2 கப் 
சர்க்கரை         -    1 1/2 அல்லது 2 கப் 
நெய்                -    1/2 கப் 
வெனிலா எசென்ஸ்  -  2 துளிகள் 

செய்முறை:

அடி கனமான ஒரு பாத்திரத்தை வாணலியை  அடுப்பில் வைத்து மைதா மாவை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். நிறம் மாற வேண்டாம், பச்சை வாசனை போகும் வரை வறுத்தால் போதும். அடுப்பு மிதமான தழலில் எரியட்டும். 
 
வறுத்த மாதாவை வேறு பாத்திரத்திற்கு மாற்றியவுடன் அதே அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு பாகு வைக்கவும். 

சர்க்கரை பாகு *ஒற்றை கம்பி பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, வறுத்து வைத்திருக்கும் மைதா மாவை அதில் சேர்த்து கை விடாமல் கிளறவும். ஒரு நிலையில் அந்த மாவு கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் அப்போது எசென்ஸ் சேர்த்து நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சாப்பிட மைதா கேக் தயார்! Enjoy madi! எசென்ஸ் சேர்ப்பது அவரவர் விருப்பம். 


இதில் வேண்டுமானால் நிறமிகள்(food colour) சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு கலர்களை சேர்த்து கேக்கின் அடிப்பாகம் ஒரு நிறத்திலும், மேல் பாகம் வெண்மையாகவும் இருக்கும்படியும் செய்யலாம். 

பால் பவுடர் சேர்த்து கிளறி மில்க் கேக்காகவும் செய்யலாம், கோகோ பவுடர் சேர்த்தால் அதுவே சாக்லேட் கேக் ஆகி விடும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பால் பவுடர், கோகோ பவுடர் முதலியவற்றை வறுக்கக் கூடாது. வறுத்த மைதா மாவோடு சேர்க்க வேண்டும்.

செய்வதற்கு எளியதுதான், ஆனால் கம்பி பதம் முக்கியம். அதற்கு முன்னால் கொட்டினால் திரண்டு வராது.

* ஒற்றைக் கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் பாகை ஈரமில்லாத ஆள்காட்டி விரலால் தொட்டு, அதை கட்டை விரலோடு சேர்த்து பிரிக்க, சிறிய கோடாக வரும். அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதில் காய்ந்து கொண்டிருக்கும் பாகை கொஞ்சம் விட்டால் கரையாமல், படரும்.  

புதிதாக இனிப்பு செய்பவர்கள் பாகு வைக்கும் பொழுது அது வெல்லப்பாகோ, சர்க்கரைப் பாகோ  தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்தால், பதத்திற்கு வர கொஞ்சம் நேரமெடுத்தாலும் பாகு முறிந்து போகாது. உதாரணமாக இந்த 
இனிப்பிற்கு நான் 2 கப் சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்தால் சர்க்கரை முழுகும் அளவிற்குத்தான் இருக்கும். 1 1/2 கிளாஸ் அல்லது 1 3/4 கிளாஸ் தண்ணீர் சேர்க்கலாம்.  


பி.கு.:

இதை செய்யும் பொழுது பகிரும் எண்ணம் இல்லாததால் ஸ்டெப் பை ஸ்டெப் புகைப்படங்கள் போட முடியவில்லை.  அன்று குடும்ப வாட்ஸாப்பில் பகிர்வதற்காக தட்டில் கொட்டியதும் புகைப்படம் எடுத்தேன். இன்று மிச்சமிருந்ததை கிண்ணத்தில் போட்டு கிளிக்கினேன். 

33 கருத்துகள்:

 1. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. White flour -
  இதை முற்றாக ஒதுக்கியாயிற்று..

  மைதாவை ஆதாரமாகக் கொண்ட எதையும் நாங்கள் வாங்குவதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மைதாவினால் உடலுக்கு எவ்வித பயனும் இல்லை..

   சலித்து சலித்து கடைசியில் ஒன்றுமில்லை..

   இதில் மீண்டும் சத்துக்களை ஏற்றுவதாகச் சொல்லப் படுகின்றது..

   செறிவூட்டப்பட்ட பாலைப் போல...

   Enriched with A & D என்றால் இயற்கையை விட அறிவாளிகளா?..

   நீக்கு
  2. நாங்க வாங்கறதில்லை, பதிலாக கோதுமை மாவு பயன்படுத்திக்கிறோம்.

   நீக்கு
 3. All purpose flour என்று அரபு நாடுகளில் இதற்குப் பெயர்..

  Fine refind flour என்ற மைதாவின் குறியீடு 0000.
  (நான்கு பூஜ்யங்கள்).

  பதிலளிநீக்கு
 4. செய்முறை குறிப்புகள் நன்றாக இருக்கின்றன..

  பதிலளிநீக்கு
 5. கடைசிப் படத்தில் To make life short என்று போட்டிருக்கணுமோ?

  பதிலளிநீக்கு
 6. பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி ஒன்றுமில்லாத மைதா மாவினால் செய்யப்பட்ட கேக்குகளை ஊட்டி விடும் கலாச்சாரத்திற்கு நம்மையும் மாற்றி விட்டார்கள்..

  நூற்றுக் கணக்கில் ஐயங்கார் பேக்கரிகள்.. உயிர் சத்து அற்ற பிராய்லர் முட்டையை உடைத்து ஊற்றி எந்த ஐயங்கார் முட்டை கேக்கைச் செய்கின்றார்?..

  முட்டை, மிருகக் கொழுப்பு தவிர்த்து கேக் செய்வது உளுந்து இல்லாமல் இட்லி செய்வதைப் போலத் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கீதா ரங்கன் முட்டை இல்லாத கேக்குகள் அருமையாக செய்வாரே. 

   நீக்கு
  2. துரை சார்... உங்கள் கருத்தில் பிழை இருக்கிறது.
   1. கொர்மா என்பது முஸ்லீம்களினால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட உணவு. ஆதான் அதனை நாம் வெஜிடேரியனாக்கி குருமா என்று சப்பாத்திக்குச் செய்து சாப்பிடுகிறோம். இதுபோல குஸ்கா, வெஜ் பிரியாணி என்று பெரிய லிஸ்ட் உண்டு. அவையெல்லாம் அசைவம், ஆனால் சைவம் மாத்திரம் சாப்பிடுபவர்களின் நாக்குகளுக்காக சைவப்படுத்தப்பட்டவை.
   2. முட்டை என்பது, அதிலிருந்து குஞ்சு வருகிறதோ இல்லையோ, அசைவம்தான். வீண் பந்தாவிற்காக நாம் சொல்லிக்கொள்ளலாம் அது சைவம் என்று.
   3. இவற்றையெல்லாம் உபயோகிக்காமல் கேக் செய்யமுடியும். என் பெண் நிறைய வகை கேக்குகள் செய்வாள். அதனால் முழுமையாக நம் சைவப் பொருட்களை வைத்து, ofcourse Maida உண்டு, கேக் போன்றவைகள் செய்யலாம்.
   4. நேர்மையான, ஐயங்கார் பேக்கரிகளில், முட்டை உபயோகிக்காத பல பொருட்கள் உண்டு. இங்கு நான் எப்போவாவது வாங்கும்போது எனக்குச் சொல்லித் தருவார்கள். அதுபோல தில்பசந்த், தில்குஷ், நாம் சொன்னால், முட்டை வெண்மையை மேலே தடவாமல் bake செய்து தருவார்கள்.

   நீக்கு
 7. என்னுடைய சமையல் குறிப்பை வெளியிட்ட எங்கள் பிளாகிற்கும், என் கருத்துக்களை படுத்தாமல் வெளியிட்ட கூகுள் அத்தைக்கும் நன்றி. 

  பதிலளிநீக்கு
 8. // நேர்மையான, ஐயங்கார் பேக்கரிகளில், முட்டை உபயோகிக்காத பல பொருட்கள் உண்டு..//

  எங்களுக்கு அருகில் அப்படி சைவ பேக்கரிகள் ஒன்றும் தென்படவில்லை

  பதிலளிநீக்கு
 9. // Maida doesn't have fibre content at all. So not good for health.//

  மிகவும் சரி..

  பதிலளிநீக்கு
 10. பானுக்கா, செய்முறை விளக்கம் சூப்பர்....ஜீரா பாகு பதம் சொல்லியிருப்பது எல்லாமே. நான் மில்க் பவுடர் சேர்த்து செய்யலாம்னு சொல்ல நினைத்து வரப்ப நீங்களே அதையும் சொல்லிட்டீங்க ...சூப்பர் ..

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அறுபதுகளிலே சித்திவீட்டில் இருக்கும்போது சித்தி நாத்தனார் இந்த மைதாக் கேக் அடிக்கடி பண்ணுவார். அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததால் வீட்டில் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு சிறப்பு இனிப்புப் பண்ணிக் கொடுத்துடுவார். அந்த வாரம் பூராவும் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் சாப்பிட ஏதுவா இருக்கும். அப்போத் தான் இந்த மைதா கேக் பற்றித் தெரியும். ஆனால் சர்க்கரைப்பாகில் ஜலமே ஊற்றாமல் நல்ல கெட்டிப்பாலாக ஊற்றுவார். மிளகு பதம் பாகுவிற்கு வைப்பார். முந்திரிப்பருப்பைப் பொடித்து வைத்திருப்பார். இந்தக் கேக்கைக் கிளறியதும் முந்திரிப்பருப்புப் பொடியை மேலே தூவி விடுவார். பால் கேக் மாதிரி ருசியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 12. நான் கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனத்தில் முதலில் செய்த இனிப்பில் இதுவும் உண்டு. போளியை என்னோட தலை ஆடிக்கு நானே பண்ணிக் கொண்டேன். அதுக்கப்புறமா ஆவணி அவிட்டத்துக்குக் கருவிலி போகையில் இந்த மைதா கேக் தான் பண்ணிக் கொண்டு போனேன். மாமியாருக்கெல்லாம் நான் தான் பண்ணினேன் என்பதில் நம்பிக்கையே வரலை. :(

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரி

  நலமா? உங்கள் செய்முறையில் படங்களுடன் மைதா கேக் நன்றாக வந்துள்ளது. இதே பக்குவத்தில் நானும் முன்புசெய்துள்ளேன். நீங்கள் சொல்வது போல் கேக்கின் அடிப்பாகம் ஒரு கலராகவும், மேல் பாகம் வெண்மை நிறத்துடனும் செய்துள்ளேன். தங்களின் அருமையான பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. செய்முறை நன்றாக வந்துள்ளது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!