திங்கள், 9 ஜனவரி, 2023

"திங்க"க்கிழமை  :  பீட்ரூட் கறி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 பீட்ரூட் கறி. எங்க காடரர் வாரம் மூன்று நாட்கள் பீட்ரூட்டை எப்படியானும் உணவில் சேர்த்துடுவார். ஒரு நாளைக்கு பீட்ரூட் கறி, ஒரு நாளைக்கு பீட்ரூட் வெங்காயக் கூட்டு, (சாப்பாட்டோடு எப்படி இருக்குமோ?) ஒரு நாள் பீட்ரூட் ரசம். சப்பாத்தி என்றால் பீட்ரூட் குருமா. ஆக அவருக்கு எப்படியேனும் பீட்ரூட்டைக் கொண்டு வந்துடணும்னு ஒரே ஆவல்! என்னவோ போங்க!

சும்மாவே பீட்ரூட் பிடிக்காது. இதிலே நம்ம ர்ங்க்ஸுக்குத் தைராய்ட் இருப்பதால் மு.கோ.கா.ஃப்., நூல்கோல், பீட்ரூட்டெல்லாம் சாப்பிடக் கூடாதுனு சொல்லி இருக்காங்க. ஆகவே நாங்க பீட்ரூட் சமைச்சால் அன்னிக்குக் காய் நாங்களே வாங்கிப் பண்ணிப்போம். இந்தச் செய்முறை பல/பல ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைங்கல்லாம் இருக்கையில் பண்ணிக் கொண்டிருந்தது இப்போத் திடீர்னு நினைப்பு வந்தது. அதான் "திங்க"ற கிழமைக்கு அனுப்பி வைச்சேன். 


பீட்ரூட்டெல்லாம் சாலட் போன்றவற்றில் சேர்த்தோ அல்லது துருவி அல்வா மாதிரி செய்தோ சாப்பிடுவார்கள். ஒரு சிலர் பீட்ரூட்டில் கறி, கூட்டு எல்லாம் பண்ணுகின்றனர். அல்வா, பாயசம், ப்ரெடில் தடவும் ஜாம் போன்றவையும் செய்யலாம். பெரும்பாலும் ஓட்டல்காரர்களும், காடரிங் காரர்களும் வாரம் ஒரு நாளாவது பீட்ரூட் சேர்ப்பார்கள். விலை மலிவு என்பதால் இருக்கலாம். ஆனால் இது மிகுந்த சத்துள்ளது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. பொதுவாக இதை அதிகம் யாரும் விரும்புவதில்லை என்றாலும் இம்முறையில் செய்து பாருங்களேன், அனைவரும் விரும்புவார்கள்.

நான்கு நபர்களுக்குத் தேவையான பொருட்கள்: பீட்ரூட் கால் கிலோ, 3,அல்லது 4 வரும். நாம் இதில் வெங்காயம், தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்க்கப் போவதால் நான்கு பீட்ரூட் இருந்தால் நான்கு நபர்களுக்குப் போதுமானது. உப்பு தேவைக்கு
பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமான அளவில் 2
பச்சை மிளகாய் 2 அல்லது 3 . காரம் வேண்டும் என்பவர்கள் கூடப் போட்டுக்கலாம். பீட்ரூட்டின் இனிப்பில் அது அவ்வளவாகத் தெரியாது. இஞ்சி ஒரு சின்னத் துண்டு
தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், ஜீரகம் 2 டீ ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், கருகப்பிலை, கொத்துமல்லி தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன். (வெங்காயம் வதங்கணும்.)

ஒரு சின்னக் குக்கரில் பீட்ரூட்டைத் தோலோடு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பீட்ரூட்டின் தோலை உருளைக்கிழங்கு உரிப்பது போல் உரிக்கலாம். உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போத் தாளிக்கும் பொருட்களைத் தயார் செய்து கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.


 

கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புப் போட்டு மி.வத்தல் தேவையானால் போட்டுக்கொண்டு கருகப்பிலை போட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய பீட்ரூட் துண்டங்களைப் போட்டுக் கொண்டு தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறி விட்டு அரைத்த விழுதையும் சேர்க்கவும். விழுதிலே இருக்கும் தண்ணீரே போதும். என்றாலும் தேவையானால் ஒரு கரண்டி நீரைத் தெளிக்கவும். மூடி வைத்து நன்கு கலந்து விட்டுக் கிளறவும். கீழே இறக்கும் போது கொத்துமல்லி தூவவும். இதே போல் காலிஃப்ளவர், நூல்கோல், காரட், டர்னிப் போன்றவற்றிலும் செய்யலாம்.


= = = = = =
2022 ஆம் ஆண்டு மொத்தம் 16 சமையல் நிபுணர்கள் ஐம்பத்து இரண்டு வகை சமையல் பக்குவங்களை பகிர்ந்தனர். 

புள்ளி விவரங்கள்

திங்கட்கிழமைப் பதிவுகள்

வரிசை எண்

வழங்கிய கிச்சன் கில்லாடி

பதிவுகள் எண்ணிக்கை

1

கீதா சாம்பசிவம்

17

2

பானுமதி வெங்கடேஸ்வரன்

7

3

கமலா ஹரிஹரன்

4

4

துரை செல்வராஜு

3

5

சியாமளா வெங்கட்ராமன்

3

6

அப்பாதுரை

3

7

நெல்லைத்தமிழன்

3

8

நிவி அரவிந்த்

2

9

மனோ சுவாமிநாதன்

2

10

வசுமதி மணியன்

2

11

ரேவதி நரசிம்மன்

1

12

காமாட்சி மகாலிங்கம்

1

13

அபயா அருணா

1

14

கீதா ரெங்கன்

1

15

ஸ்ரீராம்

1

16

ஜெயக்குமார் சந்திரசேகரன்

1

2022 ஆம் ஆண்டின் 'எ பி கிச்சன் கில்லாடி' பட்டம் பெறுபவர் : இன்றைய பதிவையும் எழுதியுள்ள திருமதி கீதா சாம்பசிவம். 

 வாழ்த்துவோம் !! 

= = = = = = =

19 கருத்துகள்:

  1. செய்முறை விளக்கம் சூப்பர்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

    இன்றைய திங்களில் தங்களின் பீட்ரூட் பொரியல் நன்றாக வந்துள்ளது. படங்களும் செய்முறை விளக்கங்களும் நன்றாக உள்ளது. இதைப்போலத்தான் நானும் குக்கரில் தோலுடன் வேக வைத்துச் செய்வேன். முதலிலேயே கெட்டியான இதன் தோலை அகற்றுவது சற்று கடினமான பணி. இது சுலபம் என்பதால் நானும் இந்த முறையில்தான் வேக வைப்பேன்.

    இப்போது நாங்களும் இனிப்பு சக்தியுள்ள இந்த பீட்ரூட்டை அவ்வளவாக வாங்குவதில்லை. முன்பு சமையலில் இதை அடிக்கடி வாங்கி வந்து இந்த மாதிரி பொரியல், கூட்டு, அல்வா என செய்து சாப்பிட்டோம் அருமையான இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    தாங்கள் எ.பியில் சென்ற வருடத்திய கிச்சன் கில்லாடி பட்டம் பெற்றமைக்கு தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    மேலும் பட்டியலோடு தகவல்களை தந்திருக்கும் எ. பிக்கும், அதன் ஆசிரிய பெருமக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கால் கிலோவிற்கு 3-4 வரும் என்று சொல்லும்போதே ஜாமூன் சைஸ் பீட்ரூட் என நினைத்தேன்.

    இந்த முறையில் செய்யும் பீட்ரூட் கறி சாப்பிட்டுள்ளேன். வீட்டில் வெங் சேர்த்துக் பண்ண மாட்டார்கள்.

    படங்களுடன் செய்முறை நன்றாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  5. இந்தமுறை திருவரங்கத்தில் ஒருவர் வீட்டில் திருவாதிரைக்களி சாப்பிட்டேன். சூப்பராக இருந்தது. கீசா மேடம் வீட்டில், லேட்டா வந்திருக்கீங்க, திருவாதிரைக்களி காலியாயிடுத்துன்னு சொல்லிட்டாங்க. எப்படி இருந்திருக்கும் என்பது தெரியலை.

    பதிலளிநீக்கு
  6. இந்த நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. எபி வழங்கும் கிச்சன் கில்லாடி 2022 பட்டம் பெற்ற கீதா அக்கா அவர்களுக்கு
    வணக்கமும் வாழ்த்துகளும்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. கிச்சன் கில்லாடி பட்டம் பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள் கீதா சாம்பசிவம்!

    பதிலளிநீக்கு
  9. குறிப்பு அருமை! இது வழக்கமாய் செய்வது தான்! நான் இதோடு வேக வைத்த முழுப்பயறு அல்லது பாசிப்பயறு சேர்ப்பேன். முழுதாக வேக வைக்காமல் துருவியும் பொரியல் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்லாருக்கு பீட் ரூட் கறி, கிச்சன் கில்லாடி கீதாக்கா!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    இதே செய்முறைதான் நம் வீட்டிலும். தோல் உரிப்பதும் எளிது. இப்படித் தோல் உரிக்கும் போது காய் அதிகம் வீணாகாது. வெங்காயம் போட்டும் போடாமலும் செய்வதுண்டு நம் வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பலவிதமாகப் பொரியல் செய்வதுண்டு பீட் ரூட்டில். கேரட் சேர்த்து அல்லது பயறு வகை ஏதேனும் சேர்த்தும், குடை மிளகாய் சேர்த்தும்...

    கால்கிலோவிற்கு பெரிது என்றால் ஒன்றுதான் நிற்கும் பெரும்பாலும் இல்லையா? சின்னது என்றால் ரெண்டு....அப்ப நீங்க சொல்லியிருப்பது ரொம்பச் சின்னது போல...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. என்ன ஒற்றுமை இன்று எங்கள் வீட்டில் பீற்றூட் கறி.

    கிச்சன் கில்லாடி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பீற்றூட் பொரியல் நன்று.

    பதிலளிநீக்கு
  13. பானுமதி.வெங்கடேஸ்வரன்9 ஜனவரி, 2023 அன்று PM 5:13

    அட! நான் சென்ற வருடத்தில் ஏழு சமையல் குறிப்புகள் அனுப்பியிருகிறேனா?
    பீட்ரூட் பொரியல் வெங்காயம் சேர்த்து செய்வதாக இருந்தால் துருவிக் கொள்வேன்(அது என் பேத்திக்கு மிகவும் பிடிக்கும்) இல்லாவிட்டால் இப்படி நறுக்கிக் கொள்வேன்.
    ஈசியாக தோலை சீவித் தள்ளாமல் குக்கரில் வைத்து, தோலை உரித்து கஷ்டப்படுவானேன்?

    பதிலளிநீக்கு
  14. பீட்ரூட் பொரியல் நன்றாக இருக்கிறது, செய்முறை படங்களுடன்.
    நானும் இப்படி சின்னதாக பீட்ரூட் பார்த்து வாங்கி வருவேன். பெரிதாக வாங்கினால் பாதியை வெட்டி பத்திரபடுத்த வேண்டும்.

    குழந்தைகள் இருக்கும் போது பீட்ரூட் தோசை, பீட்ரூட் அல்வா, பீட்ரூட் ஜாம் எல்லாம் செய்வேன்.

    மருமகள் பீட்ரூட் பூரி செய்வாள்.

    பீட்ரூட் சாதம் செய்கிறேன் இப்போது. தனியாக காய் செய்து சாப்பிட சோம்பலாக இருந்தால் பீட்ரூட்டை துருவி வெங்காயம், மிளகாய் வற்றல் தாளித்து தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி சாதம் கலந்து விடுவேன். இப்படி முட்டைகோஸ் சாதம், காரட் சாதம் என்று செய்து கொள்வேன்.

    ஓட்டலில் செய்யும் பீட்ரூட் பொரியல் மிக காரமாய் இருக்கும், நன்றாக வேகவைக்கவும் மாட்டார்கள்.

    //2022 ஆம் ஆண்டின் 'எ பி கிச்சன் கில்லாடி' பட்டம் பெறுபவர் : இன்றைய பதிவையும் எழுதியுள்ள திருமதி கீதா சாம்பசிவம். //

    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் மிக்க நன்றி. எ.பியின் பாராட்டுகளுக்கு மிகவும் மிக மிகவும் நன்றி. தனித்தனியாகப் பதில் சொல்ல முடியலை. இன்னமும் பூரண குணம் அடையவில்லை. ஆகவே யாருடைய பதிவுகளுக்கும் வரமுடியலை. மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  16. பதினேழு பதிவுகள் என்பதாலோ என்னமோ பதினேழே நபர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!