செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

சிறுகதை : திரவியம் - துரை செல்வராஜூ

 திரவியம்..

துரை செல்வராஜூ

*** *** *** 
" மாமா... ஆயிரந்தான் சொல்லுங்க... நம்ம ஊரு மாதிரி வரவே வராது... "

சாலையில் ஜட்கா வண்டிகளும் கை ரிக்‌ஷாக்களும் 'கடகட ' - என்று ஓடிக் கொண்டிருந்தன.. ஊடாக தலைச் சுமையுடன் அங்குமிங்குமாக பலதரப்பட்ட மக்கள்... 

அந்தச் சாலையின் ஒரு ஓரமாக ' டங்கு டக்கு... டங்கு டக்கு...  ' - என்று டோலக் சத்தத்துக்கு ஏற்றார் போல சிறுவன் ஒருவனின் கழைக்கூத்து வேறு...

உறவு முறைத் திருமணத்துக்கு என்று தஞ்சாவூரில் இருந்து சென்னப் பட்டினத்திற்கு வந்திருக்கிறார்கள் மாமனும் மாப்பிள்ளையும்..

மாமன் மாரிமுத்து .. மாப்பிள்ளை சிவநேசன்...

இன்றைய அவியல் போல் இல்லாமல் - எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருவான்மியூர், தண்டையார்பேட்டை  - இன்னும் பலவான ஊர்களும் தனித் தனியாக இருந்த காலம் அது..

மாமனுக்கு ரொம்ப நாளாக ஆசை - வடபழனி முருகனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று!..  

நேற்று கல்யாணம் நல்ல விதமாக முடிந்து விட்டது.. இன்று சாயங்காலமாக போட் மெயிலில் புறப்பட வேண்டியது தான்..

இடைப்பட்ட நேரத்தில் ஆலய தரிசனத்திற்காக இதோ வட பழனி கோயில் அருகினில்..

' கமகம.. ' - என்று வெங்காய சாம்பார் வாசம் உணவகத்தின் உள்ளிருந்து வர - வாசலில்  சில நாய்கள் அடித்துப் புரண்டு கொண்டிருந்தன..

பக்கத்திலேயே சாலையின் ஓரத்தில் கூடைக்குள் பானையை வைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து எதையோ எடுத்து ஏவாரம் செய்து கொண்டிருந்தார்கள் சிலர்.. அந்த இடம் புளித்த வாடையுடன் இருந்தது..

" அது தெரிஞ்ச விசயந்தானே மாப்ளே.. இந்த மெட்ராஸ் எல்லாம் எரநூறு வருசத்துக்கு முன்னால ஏது?... பிரிட்டீஷ் காரனும் பிரஞ்சுக் காரனும் ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிட்டானுங்க..  பிரஞ்சுக்காரன் பாண்டிச்சேரியில கடையப் போட்டான்... பரங்கியனுங்க இங்கே கடையப் போட்டானுங்க... இது எல்லாம் அவிங்களோட ஏவாரத்துக்குத் தானே... சூது வாது.. ன்னு எல்லாத்தையும் முன்னெடுத்து செஞ்சவன் பேரு ராவர்ட்டு கிளைவு!.. "

விவரித்தார் மாரிமுத்து..

" இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. மாமா!.. "

சிவநேசனுக்கு மாமனின் அறிவைக் கண்டு வியப்பு..

" நானும் திண்ணப் பள்ளிக் கூடத்துல சுப்பு ஐயர் கிட்ட படிச்சிருக்கேனே!.. "

மீசையைப் பெருமையுடன் முறுக்கிக் கொண்டார்...

" என்னமோ ஏவாரம்.. ஏவாரம்..ங்கிறீங்க மாமா!.. அப்படி அவன் என்னத்தைக் கொண்டு வந்து வித்தான்!?... "

" மத்ததெல்லாம் கிடக்கட்டும்.. சாராயத்தைக் கொண்டு வந்து வித்தவன் அவந்தானே.. ஜனங்களக் கெடுத்ததே அவனுங்க தானே!..

" அவனுங்க வித்ததை விட கொள்ளை அடிச்சிக்கிட்டுப் போனது தான் ஏராளம்!.. சரி.. அத விடுங்க மாப்ளே... கோயில் வாசலுக்கு வந்துட்டோம்... அர்ச்சனைத் தட்டும் மாலையும் வாங்குங்க... இந்தாங்க பணம்!.. " - என்றார் மாரிமுத்து..

" பணத்தை வைங்க மாமா!.. " - என்றபடி முன் நடந்த சிவநேசன் தேங்காய் பழங்களுடன் மாலையை வாங்கிக் கொண்டு வந்தான்...

கோயிலுக்குள் கூட்டம் அதிகமில்லை.. நின்று நிதானமாக வடபழனி ஆண்டவனைத் தரிசனம் செய்தார்கள் மாமனும் மருமகனும்..

" அப்பனே... முருகா... எல்லாரையும் நல்ல படியா வைக்கணும்.. சாமீ!... "

மனதார வேண்டிக் கொண்டு பிரகாரம் சுற்றி வந்தனர்..

" பல வருசத்து ஆசை மாப்ளே.. இப்ப தான் நேரம் கூடி வந்திருக்கு... " - என்றவர் சட்டென கையை நீட்டி,

" அதோ நிக்கிறவன் சம்முவத்தண்ணன் மகன் தானே!.. " - என்று ஆச்சரியமானார்..

" டே... காசி!.. "

நாலெட்டில் விரைந்து அந்த இளைஞனின் தோளைப் பிடித்து அழுத்தினார்...

" இல்லே... நான் இல்லே!.. " - என்று தடுமாறினான் அவன்..

சற்றே அழுக்கான வேட்டி சட்டையுடன் அந்த இளைஞன்.. அவனது விழிகள் அங்குமிங்குமாக அலைந்து மருண்டன..

" என்ன... இல்லே!...  காசிநாதன் தானே நீ?.. "

" நீங்க யாரையோ நெனைச்சிக்கிட்டு!.. "

" எங்கே அந்த முருகனப் பார்த்து சொல்லு!.. "

குப்பென அவன் முகம் வியர்த்தது.. கண்களில் நீர் வழிந்தது...

" உனக்கு ஏன்டா.. இந்தத் தலையெழுத்து?.. வீடு வாச.. வாய்க்கா வரப்பு.. ன்னு பத்து பேருக்கு சோறு போட்டுக் கிட்டு இருக்குறப்ப உனக்கு என்னடா இது விதி?.. "

" தப்பு பண்ணிட்டேன் சித்தப்பா... தப்பு பண்ணிட்டேன்!... "

காசி எனப்பட்ட காசிநாதன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதான்..

அவனை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டார் மாரிமுத்து...

" காசி... ஒன்னை எங்கண்ணுல காட்டுறதுக்குத் தான் இந்த முருகன் இங்கே அழைச்சிருக்கான் போல!... "

" என்ன விட்டுடுங்க மாமா!... "
- மறுபடியும் அழுதான் காசி...

" மச்சான்.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி... பழசு எல்லாம் விடுங்க... இன்னிக்கு புதுசா பொறந்ததா நெனச்சுக்குங்க!... "

" சிவநேசா... நான் அதுக்கெல்லாம் லாயக்கானவன் இல்லடா... "

" காசி.. சும்மா இரு... திரும்பத் திரும்ப அதையே  சொல்லிக்கிட்டு!.. "  - அதட்டினார் மாரிமுத்து..

" இத்தோட பீடை எல்லாம் ஒழிஞ்சது.. எம் புள்ள நல்லா இருக்கணும் முருகா!.. " 

- என்றபடி தாளில் மடித்து வைத்திருந்த திருநீற்றை எடுத்து  காசிநாதனின் நெற்றியில் பூசி விட்டார்...

" மாப்ளே.. அர்ச்சனைத் தட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு வாங்க .. அந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிடுவோம்!.. "

மாரிமுத்து முன் நடக்க அவரது நினைவு பின்னோக்கிச் சென்றது...

' சண்முகம் சீன் செட்டிங்ஸ் & சவுண்ட் சர்வீஸ்.. '  பதினெட்டு அடி நீளத்துக்கு நீலப்பட்டுத் துணியில் ஜரிகை வைத்துத் தைக்கப்பட்ட எழுத்துக்கள்..

தொம்பைகளும் தோரணங்களும் நாடக அரங்கின் முகப்பில் மினுமினுக்கும்..

" கண கண.. கண கண!.. " - என, ஹார்மோனியம், தபேலா, மிருதங்கம், டோலக், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து முழங்க நாடக மேடையின் திரைகள் இப்படியும் அப்படியுமாக நகரும் போது,

பச்சை, மஞ்சள், சிவப்பு... ன்னு ஆயிரத்தெட்டு சீரியல்  லைட்டுங்க சிலுசிலுக்கும்...

' அனைவருக்கும் நல்வரவு.. சண்முகம் சவுண்ட் சர்வீஸ்.. ' - என்று டூரிங் டாக்கீஸ் மாதிரி ஸ்லைடுகளைப் போட்டதும் ஜனங்களோட ஆரவாரம் காவேரியைத் தாண்டி கண்டியூருக்குக் கேட்கும்...

" வந்தேனே... யே.. வந்தேனே!... " - ன்னு எட்டுக் கட்டையோட ராஜபார்ட் வர்றப்ப சிவப்பு ஸ்பாட் லைட்... ஒரு பூச்செண்டுடன் மகாராணி வர்றப்ப மஞ்ச ஸ்பாட் லைட்... ன்னு, மாரியம்மன் கோயில் திருவிழா  நாடகம் அட்டகாசமா ஆரம்பமாயிடும்..

தஞ்சாவூர், புதுக்கோட்டை,  பொன்னமராவதி.. ன்னு போய் நல்லா கூத்து கட்டுறவங்களைக் கொண்டாந்து திருவிழாவ பெருவிழாவா ஆக்கிடுவான் காசிநாதன்...

ஏழாந்திருவிழா அன்னைக்கு மாயவரத்து பொம்மலாட்டம் நடக்கும்.. பொம்மைகள் இப்படியும் அப்படியுமா ஆடுறதைப் பார்த்துட்டு ஜனங்க தூக்கம் மறந்து கிடப்பாங்க...

சேலம் காரைக்குடி...ன்னு  போயி அங்கே நடக்குற சினிமா சூட்டிங் பார்த்துட்டு வந்து அதே மாதிரி ராஜா ராணி டிரஸ், அலங்கார சீன் செட்டிங், ஸ்கிரீன் எல்லாம் வேணும்... - ன்னு ஒத்தக் கால்ல  நிப்பான்... இவன் கேக்கிற மாதிரி ரெடி பண்ணிக் கொடுக்குறதுக்குள்ள மேல ராஜவீதி விட்டல் ராவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிடும்...

விட்டல் ராவ் டெய்லரா இருந்தாலும் ஓரளவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்... பெரும்பாலும் கூத்து கட்டும் இசைக் குழுக்களில் புல்லாங்குழல்கள் இருப்பதில்லை..

இதனால் கிருஷ்ண லீலா, திரௌபதி வஸ்த்ராபகரணம் என்றெல்லாம் நாடகம் போடுறப்போ தஞ்சாவூர்..ல இருந்து இவரைத் தள்ளிக்கிட்டு வந்திடுவான்.. கிருஷ்ணனுக்குக் குழல் வாசிக்கணுமே!...

நாடகம் முடிஞ்சதும் மாலை மரியாதை.. தட்டில் தேங்காய் பழத்துடன் நூற்றியொரு ரூபாய் வைத்துக் கொடுப்பான்... நூறு ரூபாய் பெரிய காசு... விட்டல் ராவுக்கு கண்ணு கலங்கிடும்...

திருவிழாவுக்குக் காப்பு கட்டி பந்தக் கால் நாட்டுனதும் கோயிலுக்கு கிழக்கால நாடகக் கொட்டாய்க்கும் முகூர்த்தம் பண்ணிடுவாங்க.. அதுல இருந்து பதினோரு நாளைக்கு காசிநாதனைக் கையில பிடிக்க முடியாது...

" ஐநூறு தர்றோம்.. ஆயிரந் தர்றோம்!.. "  ..ன்னு யார் வந்தாலும் உள்ளூர் திருவிழா முடியிற வரைக்கும் அசைஞ்சு கொடுக்க மாட்டான்...

கல்யாணங் காட்சியில மணவறை ஜோடிக்கிறதுலயும்  லவுட் ஸ்பீக்கர் கட்டி - ஜிவாஜி பாட்டு எம்ஜியார் பாட்டு செய்சங்கர் பாட்டு, தங்கவேல் காமெடி, திருவிளையாடல் ஒலிச்சித்திரம்.. ன்னு ரெகார்டு போட்டு பட்டைய கிளப்புறதுலயும் இவனை அடிச்சுக்க முடியாது..

எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கிறப்போ கூத்து கட்ட வந்த குரூப்  சொன்னாங்க.. ன்னு வீட்டுல தகராறு பண்ணி அம்மாவோட ஆறு பவுன் காசு மாலை அது இது.. ன்னு கையில எடுத்துக்கிட்டு அவங்க பின்னால மெட்ராசுக்குப் போனவன் தான்...

ரெண்டு வருசத்துக்கு அப்புறமா இப்பதான் ஊர்க்காரங்க கண்ணுல மாட்டியிருக்கான்..

திடீரென்று அழுதான் காசிநாதன்..

' ஆயி அப்பனை விட்டுட்டு வந்து கஷ்டப் பட்டதை நினைச்சுக்கிட்டு அழுகிறான்!.. ' - என்று புரிந்து கொண்ட மாரிமுத்து ஆதரவாக முதுகைத் தடவிக் கொடுத்தார்...

" மானம் மரியாதை எல்லாம் போச்சே... சித்தப்பா!... வீட்டுக்குள்ள நுழையுறப்போ வெளக்கமாத்தால அடிக்க மாட்டாங்களா?.. "

" யார்ரா இவன்!... தண்ணியடிச்சு தண்ணி விலகுமா காசி?... ஊரு ஒலகத்துல யாரு தான் தடுமாறிப் போகலே?.. "

" என்னை இப்படியே விட்டுடுங்க சித்தப்பா!.. " - விசும்பினான்..

" உம்மேல ஒரு குத்தமும் இல்லே.. காலம் போட்ட கணக்கு.. அதுதான் நடந்து இருக்கு.. இப்போ கண்ணு கலங்கி ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாத்தையும் மறந்துடு!.. "

" எங்க அம்மா கழுத்துல கிடந்த திரவியத்தைப் புடுங்கிக்கிட்டு வந்தேன்.. உருப்படாத காரியம் பண்ணி ஒரே நாள்..ல அழிச்சிட்டேன்... அந்தத் திரவியத்தை மறுபடியும் சம்பாரிச்சு எடுக்கணுமே சித்தப்பா!.. "

" சம்பாதி.. நிறைய சம்பாதி.. அது தானே ஆம்பளைக்கு அழகு... ஆனா, அது இந்தப் பட்டணத்துல வச்சி  வேணாம்!.. காசு மாலை.. காசு மாலை.. ன்னு  நீ சொல்றியே அந்தக் காசு மாலையா உனக்கு திரவியம்?.. "

சாட்டையடி போல் கேள்வி..

சட்டெனத் திரும்பி சித்தப்பாவின் முகத்தை நோக்கினான்...

" உன்னைப் பெத்தவங்க  உனக்கு  திரவியம்... உன்னைப் பெத்தவங்களுக்கு நீ தானே திரவியம்... செம்பொன் நழுவி சேத்துல விழுந்தா.. அதுக்குப் பேர் வேற.. ன்னு ஆயிடுமா?.. நீ  பக்கத்தில இருந்தாலே போதும்.. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் ஆயுசு நூறு கூடிடாதா?.. பொழைக்க பூமி இல்லையா.. பொங்கித் திங்க வாசல் இல்லையா!.. இன்னைக்கு மறு ஜென்மம்.. ன்னு நெனைச்சுக்கிட்டு வேட்டிய மடிச்சுக் கட்டு.. இன்னும் ரெண்டு மாசத்துல ஊர்த் திருவிழா.. பந்தக் காலை எடுத்து நட்டு ஸ்பீக்கர் செட்டை தூக்கிக் கட்டு!.. "

புன்னகைத்த சித்தப்பா காசிநாதனின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த உணவகத்தினுள் நுழைந்தார்...
**
முன்னிரவுப் பொழுது..
ஜன்னலோரத்தில் காசிநாதன் அமர்ந்திருக்க எழும்பூர் ஸ்டேஷனில் இருந்து புதிய உற்சாகத்துடன் கிளம்பியது - தஞ்சாவூர் வழியாக ராமேஸ்வரத்திற்குச் செல்லும் மெயில்...
ஃஃஃ

34 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. //" உன்னைப் பெத்தவங்க உனக்கு திரவியம்... உன்னைப் பெத்தவங்களுக்கு நீ தானே திரவியம்... //

    அருமை.

    //ஜன்னலோரத்தில் காசிநாதன் அமர்ந்திருக்க எழும்பூர் ஸ்டேஷனில் இருந்து புதிய உற்சாகத்துடன் கிளம்பியது - தஞ்சாவூர் வழியாக ராமேஸ்வரத்திற்குச் செல்லும் மெயில்...//

    பெரியவர்கள் (சித்தப்பா) அறிவுரை படி ஊருக்கும் புறப்படும்

    காசிநாதன் வாழ்க்கையில் எல்லா திரவியங்களும் வந்து சேரும்.

    வாழ்க்கை பயணம் இனிதாகும்.
    அருமையான கதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாஸிட்டிவ்வான மெசேஜ். வழக்கம்போல தெளிவான நடை. நன்றி

    பதிலளிநீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    இன்று எனது படைப்பினை
    ப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    தளத்தில் கருத்துரைகளை நிர்வகித்து வெளியிடும் அன்பின் சித்திரச் செல்வர் திரு.கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ அண்ணா... வாங்க...

      நீக்கு
    2. மேற்கண்ட கருத்து என்னுடையதல்ல..

      முகமில்லாத / பெயரில்லாத - ஏதோ ஒன்றின் வேலை இது..

      அனைத்து நன்பர்களும் தமது கருத்துகளிலும் தளத்தினிலும் கவனமாக இருக்கவும்..

      நன்றி.. வணக்கம்..

      நீக்கு
    3. அது துரை செல்வராஜூ அண்ணாவின் கருத்து அல்ல என்று தெரிந்தேதான் வெளியிட்டேன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. போன காலங்களை நினைவுபடுத்தும் சம்பவங்கள்.

    இருந்தும் முருக தரிசனம் இல்லாமல் இருவரும் (அர்ச்சனை) சென்றதுபோல இருந்தது, அர்ச்சனைத் தட்டைத் திருப்பிக்கொடு என்ற வரி. முன்பு மூங்கில் தட்டோடு விற்கும் வழக்கமும், அர்ச்சனை முடிந்ததும், தட்டை வியாபாரயிடம் திருப்பித் தரும் வழக்கமும் இருந்ததை நினைத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. நல்லதொரு கதை
    //செம்பொன் நழுவி சேத்துல விழுந்தா.. அதுக்குப் பேர் வேற.. ன்னு ஆயிடுமா ?//

    அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி. ஜி.

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
    இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். அதற்காக இறைவனுக்கு நன்றிகளை தெரிவிப்போம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  10. இன்று முதல், 'பெயரிலா' என்று பதியப்படும் கருத்துகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. gmail account இருப்பவர்கள் மட்டுமே கருத்துரை இட இயலும். கருத்துரை இடுவதில் சிரமம் இருந்தால், ஆசிரியர்களின் வாட்ஸ் அப் / மின்னஞ்சலுக்கு கருத்துகள் அனுப்புங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா, எனக்கும் கூகுள் அக்கவுன்ட் இருக்கிறதே ஆனால் என் கூகுள் அக்கவுன்ட் வழியா உள்நுழைய முடியலையே...ப்ளாகர் அக்கவுன்ட் வழியாகத்தான் நுழைய முடிகிறது.

      கில்லர்ஜி தளம், கோமதிக்கா தளத்திலும் இப்படித்தான்.

      கீதா

      நீக்கு
  11. கதை மிக நன்று, துரை அண்ணா. பெற்றவர்கள் திரவியம் என்று சொன்ன விதம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  12. நல்ல கதை .
    காசிநாதன் இழந்தவாழ்க்கை .மீண்டும் விடியலைநோக்கி பயணிக்கிறது இனிதாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  13. சிக்காது, சிணுங்காது.. கதை நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  14. தம்பி துரைக்கு வாழ்த்துக்கள். சில நாட்கள் கழித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      ஜீவி அண்ணா அவர்களுக்கு நன்றி..

      மீண்டும் வருக..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!