செவ்வாய், 7 மார்ச், 2023

குறுந்தொடர் - இறைவன் இருக்கின்றான் 1/7 - ஜீவி

 இறைவன் இருக்கின்றான் 

ஜீவி 

1

---------------------------

ந்திரமோகனிடமிருந்து தான் அழைப்பு வந்திருந்தது. அலுவலகத்தின் முக்கியமான கலந்து பேசும் கூட்டத்தில் இருந்ததினால் அலைபேசியை எடுத்துப் பேசவில்லை. இப்பொழுது கூட்டம் முடிந்து விட்டது. இப்போதைக்கு அடுத்த வேலை, அடுத்த அரைமணி நேரம் கழித்துதான். நொறுக்கு தீனிக்காக நண்பர்கள் அலுவலக சிற்றுண்டி சாலைக்குச் சென்றிருந்த பொழுது, சந்திரமோகன் கூப்பிட்டது நினைவுக்கு வந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சந்திரமோகன் யார் என்று உங்களுக்கும் சொல்லி விடுகிறேன்.

சந்திரமோகன் ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறான். அதனால் இயல்பாகவே அவன் பேச்சில் ஒரு சாதுர்யத்தனம் கலந்திருக்கும். அவனுக்கு என்னிடம் ஏதாவது ஆகணும்னா, ராத்திரி பகல் பார்க்கமாட்டான். என் நண்பர் ஒருவரின் மகன். நண்பர் ரொம்பவும் நல்ல மாதிரி. அவர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவருடன் எனக்கிருந்த பழக்கத்திற்காகத் தான் எல்லாம். இப்போதைக்கு இது போதும். பாக்கியைப் போகப் போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

அலைபேசியில் அவனை அழைத்தேன்.

"வணக்கம், சார்.. வணக்கம்.." என்று குழைவுடன் சிரித்தான். "மன்னிக்கணும்.. வேலை நேரத்தில் தொந்திரவு கொடுத்து விட்டேனா.. மன்னிக்கணும்.." என்று பவ்யமாக குழைந்தான். இந்த பவ்யத்திற்கெல்லாம் எந்தப் பொருளுமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். உதடு வரைக்குமே தொடர்புகொண்ட பாசாங்கு. இருந்தாலும், "பரவாயில்லை, சந்திரன்.. எதுக்கு கூப்பிட்டே?.. " என்றேன்.

"முதல்லே நீங்க 'ப்ரீ'யா இருக்கீங்களா, அதைச் சொல்லுங்க.. உங்களுக்குத் தொந்திரவு கொடுக்கிறேனோன்னு மனசுக்கு சங்கடமா இருக்கு. இல்லே, அப்புறம் கூப்பிடட்டுமா?" என்று தயங்கினான்.

இந்தத் தயக்கம் சும்மாவானும். 'இல்லை, இல்லை. சொல்லு' என்று நான் சொல்லுவேன் என்று தெரிந்தே சொல்கிறான் என்று தெரிந்தே, "வழக்கம் போல, வேலை-அதுக்கென்ன அது அப்படித்தான் இருக்கும்.. எதுக்கு கூப்பிட்டே, சொல்லு.." என்று அவன் தொடர்ந்து பேச வழிபண்ணிக் கொடுத்தேன்.

"ஒண்ணுமில்லே.. ஒரு அழகு சாதன விளம்பரம். அந்தப் பத்திரிகைலே பின் அட்டைலே வரணும்"ன்னு ஒரு பத்திரிகை பேரைச் சொன்னான். "ஒரு வாரம் விட்டு அடுத்த வாரம்னு நாலு இஷ்யூக்கு ஆரம்பத்திலே வந்தாப் போதும். அப்புறம் அந்தக் கம்பெனிக்காரங்க விரும்பினா தொடர்ந்து கொடுக்கலாம்."


"அப்படியா?.. சொல்லு.. இதுலே நான் செய்யறத்துக்கு என்ன இருக்கு?"

"நிறைய இருக்கு. இல்லைனா சாரைத் தொந்திரவு செய்வேனா?"

"தொந்திரவு ஒண்ணுமில்லே, சந்திரன்! வித் பிளஷர்.. சொல்லு."

"அந்தப் பத்திரிகை உங்க அப்பா காலத்திலேந்து உங்கக் குடும்பத்தோடு சம்பந்தப் பட்டது, இல்லையா?.. அந்த இன்ப்ளூயன்ஸை உபயோகப்படுத்தி நீங்கத் தான் அவங்களோடு பேசி, எனக்கு உதவி செய்யணும்."

"என்ன உதவியோ?"

"என்ன.. கொஞ்சம் சலுகை தான். பின் அட்டைக்கு அவங்க டாரிப் ரேட் நாலு வாரத்திற்கு இவ்வளவு" என்று ஒரு ரேட்டைச் சொன்னான். அதுலே முக்காப்பங்குனா, நமக்கு கொஞ்சம் லாபம் வரும்.. அந்த அளவிலே முடிச்சுத் தந்தீங்கன்னா, பெரிய உதவியா இருக்கும். அவங்க உங்களுக்கு சொந்தமாச்சே, அதுக்கு பாதகம்னா வேணாம்னு கூட ஒரு நினைப்பு."

"அப்படீன்னு இல்லே; அவங்களுக்கும் எல்லாவிதத்திலேயும் சரிப்பட்டு வர்றதுன்னா சரிங்கப் போறாங்க; இல்லேன்னா, இல்லை. அவ்வளவு தானே?.. சரி, பேசிப்பாக்கறேன்.."

"ரொம்ப நன்றி, சார்.. நா அப்புறம் உங்களைக் கூப்பிடட்டுமா?.. தொந்திரவுக்கு மன்னிக்கணும்.. வீட்டிலே எல்லாரும் நலம் தானே?" என்று ஒரு செண்டிமெண்ட் டச்சோடு தயங்கினான்.

" எல்லாரும் நலமே. நானே அப்புறம் உன்னைக் கூப்பிடறேன்" என்று 'செல்'லைத் துண்டித்தேன்.

ண்மையில் சொல்லப்போனால் எனக்கே என்னவோ மாதிரி தான் இருந்தது. சந்திரமோகனுக்கும் சரி, முரளிக்கும் சரி, இரண்டு பக்கமும் வியாபார சம்பந்தப்பட்ட விஷயம் இது. வியாபாரத்தில் எந்த ஆசாபாசாங்களுக்கும் இடமில்லை தான். இரண்டு பேருக்கும் லாபம் ஒன்றே குறிக்கோள். யாருக்காகவும் யாரும் நஷ்டப்படப் போவதில்லை. இருந்தாலும் நம்மிடம் உதவி கேட்கிறானே, கேட்டுப்பார்ப்போமே என்கிற எண்ணம்.

முரளியையும் உங்களுக்குத் தெரியாதில்லையா?. சொல்கிறேன். முரளி என் பெரியப்பா பையன். ஒன்றுவிட்ட சகோதரன். என்னை விட நாலு வயது பெரியவன். என் பெரியப்பா அந்தக்கால பெரிய எழுத்தாளர். சுதந்திரப் போராட்ட வீரர் கூட. இன்னிக்கி வரைக்கும் கதரை விடலே. அவர் பெயர் சொன்னால் எழுத்தாளர் உலகமே ஒரு மரியாதையோடு திரும்பிப் பார்க்கும். இப்போ பேனாவைப் பிடிச்சிருக்கறவங்க எல்லாம் அவரை மறந்திட்டாலும், இவங்க சமாச்சாரத்திலே பலதுக்கு அவர் முன்னோடி. அவர் அந்தக் காலத்துக்கு ஏத்த மனுஷர்னா, முரளி இந்தக் காலத்து பிரதிநிதி.

சுந்தரேசன் சுந்தரேசன்னு ஒருத்தர். கொழுத்த பணக்காரர், மிளகாய் மண்டி வைத்திருந்தவர், சமூகத்தில் பெயருக்காகவும், அந்தஸ்த்திற்காகவும் பத்திரிகை பிஸினஸில் இறங்கினார். அவர் பார்வையில் பட்டவர் தான் என் பெரியப்பா. அந்த மிளகாய் மண்டிக்காரருக்கு இன்ன வேலைதான் என்று இல்லை. அவரது ஒருநாள் பொழுது ஓராயிரம் விஷயங்களோடு சம்பந்தப்பட்டு இருக்கும். நாளாவட்டத்தில் மிளகாய் மண்டியே சைடு பிஸினஸ் மாதிரி ஆகி, வேறெதிலெல்லாமோ மூழ்கி விட்டார். இந்த சமயத்தில் தான் அவரது பாஷையில் 'நச்சு பிடிச்ச வேலை'யான இந்த பத்திரிகை சமாச்சாரமும் அவருக்கு சலித்துப் போயிருக்க பெயருக்காக ஏதோ சிறு தொகை வாங்கிக்கொண்டு பெரியப்பாவையே அந்த பத்திரிகைகு முழு உரிமையாளராக்கி விட்டார்..

யார் யார்க்கு எந்த எந்த நேரத்திலே என்னன்ன வாய்க்கும்னு சொல்ல முடியாது. அப்படியான ஒண்ணுதான் இதுவும். நீச்சல்லே பெரும்விருப்பம் உள்ள ஒருத்தனுக்கு, நீச்சல் குளத்தையே சொந்தமாக்கின மாதிரி என் பெரியப்பாவுக்கு பத்திரிகை உலகம்ங்கற நீச்சல்குளம் கிடைத்தது.

அசகாய சூரரான அவர் எந்நேரமும் நீச்சல் குளமே கதியெனக் கிடக்க ஆரம்பித்தார். உண்பதும் உறங்குவதும் அங்கேயே.. பெரியப்பாவுக்கு பத்திரிகை முழு உரிமையானதும், லஷ்மி கடாட்சமும் சரஸ்வதி கடாட்சமும் சேர்ந்து என் பெரியப்பாவை திக்கு முக்காட வைத்து விட்டது. பெரியப்பாவின் உழைப்பை மறந்திட்டு அதிர்ஷ்டம்னு சொன்னா பாவம். ஒரே வருஷத்தில் நாற்பதாயிரம் இருந்த பத்திரிகை விற்பனையை நாலு லட்சமாக்கி விட்டார். அதே மாதிரி பத்திரிகையும் மாதாந்திரத்திலிருந்து வாராந்திரத்திற்கு வந்து விட்டது.

முரளிக்கும் சின்ன வயசிலிருந்தே கதை கட்டுரை என்று அப்படி ஒரு பிடிப்பு. எந்த சொந்த முன்னேற்றத்துக்கும் இப்படி மனசார ஈடுபடற ஒரு அர்ப்பணிப்பு வேண்டியிருக்கு, இல்லையா?.. இந்த பிடிப்பால் தான் அப்பாவைப் போலவே மகனும் இப்பொழுது பத்திரிகை உலகையே ஒரே லவட்டலில் முழுசாக முழுங்க முடிந்திருக்கிறது. இப்போது பெரியப்பா வீட்டோடு தான்; தள்ளாமை, வயசாகிவிட்டது என்கிற இதெல்லாம் மட்டும் காரணமில்லை, இந்தத் தலைமுறைக்கு சென்ற தலைமுறை யோசனை ஒன்றும் சரிப்பட்டு வராது என்று பத்திரிகை சம்பந்தப்பட்ட எது ஒண்ணுக்கும் அப்பாவை அவன் தொந்திரவு செய்வதில்லை.

இந்தப் போக்கு, எதையும் தானே தீர்மானம் பண்ணும் தனிக்காட்டு ராஜாவாக அவனை உருவாக்கியிருந்தது. என்னதான் முடிவு எடுப்பது என்பது அவன் கையில் இருந்தாலும், அது பற்றி அலுவலக ஆசிரிய இலாகா ஊழியர்களின் கருத்துக்களையும் திரட்டி அதன் அடிப்படையில் முடிவெடுப்பதே அவன் வழக்கம். ஆசிரிய இலாகாவினரிடையே தோழமையுடன் சுதந்திரமாக செயல்படும் ஒரு போக்கை வரவேற்பதிலும், அவர்கள் கருத்துக்களை திறந்த மனத்துடன் கேட்பதிலும் அவன் தயங்கம் காட்டியதே இல்லை.அதனால் அவன் ஊழியர்களுக்கும் வேலையில் ஒரு பிடிப்பு இருந்தது. இவனும் 'ஆ-ஊ' ன்னா, அலுவல ஊழியர்களுக்கு வாரி வழங்கத் தயங்க மாட்டான். அடிக்கடி ஊக்க ஊதியம் அது இது என்று தூள் கிளப்புவான்.

இப்படிப்பட்ட இந்த முரளியைத் தான், சந்திரமோகன் விஷயமாக தொடர்பு கொள்ள நினைத்து அலைபேசியை எடுத்தேன்.

(இன்னும் வரும்)

40 கருத்துகள்:

  1. அப்பாடா செவ்வாய்க்கிழமைகளைக் காப்பாற்ற ஜீவீ சார் வீ ஜீ என்ற புதிய அழகு  சாதனங்கள் விளம்பரத்துடன்  வந்து விட்டார். இன்னும் இரண்டு மாதத்திற்க்கு மேட்டர் கிடைத்து இட்டது. வாழ்த்துக்கள்.

    இன்றைய பகுதி அறிமுகம் ஆக இருப்பதால் கதையைப்பற்றி ஒன்றும் கூற  இயலவில்லை. கேரக்டர் அறிமுகம் பரவாயில்லை. 

    கதைக்கு படம்  போட கவுதமன் சாரை கேட்டுக்கொள்கிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றுக்கும் மாற்று வழி ஒன்று உண்டே!..

      நீக்கு
    2. //செவ்வாய்க்
      கிழமைகளைக் காப்பாற்ற .//

      இதுவரை தவித்துக் கொண்டா இருந்தன
      செவ்வாய்க்
      கிழமைகள் ?..

      நீக்கு
    3. தவிக்கும், தகிக்கும், உருக்கும், உருகும்... நவரசங்களையும் காட்டும்..

      நீக்கு
    4. ஜெஸி ஸார்! வாங்க.
      அடுத்த பகுதிக்கும் வந்திடுங்க. கதை எங்கேன்னு தேடாதீங்க. ஒவ்வொரு வரியிலும் அது ஒளிந்து கொண்டிருப்பதைக் கூர்மையாக கவனித்து விடுங்கள்.
      சரியா?

      நீக்கு
    5. இந்த வர்ணத் தீட்டலில் கற்பனைக் குவியலில் கேஜிஜி ஸாரின் கைவண்ணம் இல்லை என்றா நினைக்கிறீர்கள் ஜெஸி?

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் அருள் புரிவார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஜீவி சார் அவர்கள் எழுதிய கதை நன்றாக நகர்கிறது. கதையின் தலைப்பும் நல்லதொரு அம்சமாக உள்ளது. நல்ல அறிமுகங்களோடு இணைந்த இன்றைய கதையின் தொடரை தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுதுமே மனத்திருப்தியான பின்னூட்டமாக அமைந்து விடுகிறது உங்களது நிறைவான வார்த்தைகள். கதையின் தலைப்பு அதுவாக நினைவில் வந்து உட்கார்ந்து கொண்டது. அதுவே பெரிய கதை. தாங்கள் தொடர்ந்து கதையை வாசிப்பதில் மகிழ்ச்சி. கதையின் போக்கு போகப் போக உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும். நம் அனுபவங்கள் தானே கதைகளாகின்றன?
      அதனால் சொல்கிறேன். நன்றி, சகோதரி.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. கதையின் தலைப்பு நன்றாக இருக்கிறது.

    //சந்திரமோகனுக்கும் சரி, முரளிக்கும் சரி, இரண்டு பக்கமும் வியாபார சம்பந்தப்பட்ட விஷயம் இது. வியாபாரத்தில் எந்த ஆசாபாசாங்களுக்கும் இடமில்லை தான். இரண்டு பேருக்கும் லாபம் ஒன்றே குறிக்கோள். யாருக்காகவும் யாரும் நஷ்டப்படப் போவதில்லை. இருந்தாலும் நம்மிடம் உதவி கேட்கிறானே, கேட்டுப்பார்ப்போமே என்கிற எண்ணம்.//

    உதவி கேட்டு பார்ப்பது சரிதான்.
    அப்புறம் அவர்கள் பேசி முடிவு செய்து கொள்வார்கள்.
    அறிமுக படலம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு எபியில் எல்லோருக்குமே பிடிக்கும் தான். ரயில் வேகமெடுத்து விட்டால் பயனம் சுகமாக இருப்பது போல கதைப் போக்கில் ஆழ்ந்து விட்டால் மனதுக்கும் ஆறுதலாக இருக்கும்.
      இறைவனை ஆழ்ந்து
      மனம் ஒன்றி தரிசிக்கலாம். நன்றி, சகோதரி.

      நீக்கு
  6. வித்தியாசமான கதைக்களம். ஆரம்பமே அட்டஹாசம்.

    பத்திரிகை உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறோமா இல்லை அழகுசாதன உலகமா எனத் தோன்ற வைக்கிறது.

    நல்ல நடை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. வித்தியாசமான கதைக்களம்.
      2. ஆரம்பமே அட்டஹாசம்
      3. நல்ல நடை.

      மூன்றும் மூன்று முத்துமணிகள்.
      மனம் ஒன்றிய கதைப் படைப்புகளுக்கு
      சென்ற காலத்து இந்த நடையால் தான் முடியும். ஆகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் இந்த நடையில் தான் எழுதினார்கள். இந்த நடை கைவரப் பெறாததினால் தான்
      இந்தக் காலத்துக் கதைகள் மனம் சம்பந்தப்படாத வார்த்தைக் குவியலாகி விட்டன.
      இந்த சென்ற தலைமுறை எழுத்து நடையை மீட்டெடுக்க வேண்டியதை நம் கடமையாகக் கருதுகிறேன்.
      இதுவா அதுவா என்று கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் இல்லை என்பது இப்போதைக்கு.
      நன்றி,நெல்லை.

      நீக்கு
  7. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. // செவ்வாய்க்
    கிழமைகளைக் காப்பாற்ற..//

    அருமையான சொற்றொடர்...

    பதிலளிநீக்கு
  9. இறைவன்
    இருக்கின்றான்..

    ஏதென்று
    புகன்றாலும் இல்லையென்று
    உழன்றாலும்

    இருக்கின்றான்
    இறைவன்
    இருக்கின்றான்!..

    இதயத்தில்
    வாழுகின்ற
    உயிராக
    உதயத்தில்
    சூழுகின்ற
    ஒளியாக
    கல்லுக்குள்
    கண்மலரும்
    கனியனாக
    கடுவெளியில்
    நின்றிருக்கும்
    தனியனாக

    இருக்கின்றான்
    இறைவன்
    இருக்கின்றான்!..
    ***

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதயத்தில்
      வாழுகின்ற
      உயிராக
      உதயத்தில்
      சூழுகின்ற
      ஒளியாக
      கல்லுக்குள்
      கண்மலரும்
      கனியனாக
      கடுவெளியில்
      நின்றிருக்கும்
      தனியனாக//

      ஸூப்பர். இன்னும் அடுக்கலாம்.

      நீக்கு
  10. இன்னும் ஆறு செவ்வாய்க் கிழமைகள்
    யார் யாருக்கு என்னவெல்லாம் கற்றுத்
    தருவதற்காகக்
    காத்து இருக்கின்றவோ!..

    நலமே விளைக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸாருக்கே வெளிச்சம்!!

      நீக்கு
    2. செவ்வாய் என்றால் திருமுருகனின் நினைவுகள் தாம் என் மனத்தில் மண்டும்.
      அவனே மன இருட்டைக் களைந்து வெளிச்சத்தைப் பாய்ச்சும் மால்மருகன்!

      நீக்கு
  11. பதில்கள்
    1. உணர்ந்ததின் அடிப்படையின் சொல்லும் வார்த்தைகளுக்கு என்றுமே உயிர்த்துடிப்பு உண்டு.
      நன்றி டி.டி.

      நீக்கு
  12. கதையின் ஆரம்பப் பகுதியை வாசித்து
    தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி. வார இதழ்களில் வெளிவரும் கதைகளின் போக்கில் அமையவிருக்கும் இந்தக் கதை இனி எபியில் நான் எழுதப் போகிற கதைகளுக்கான ஒரு சோதனை முயற்சி. கதை பற்றிய உங்கள் வாசிப்பு ரசனை தான்
    எனக்கு முக்கியமாகப் போகிறது. அதனால் இந்தப் பகுதியை வாசித்து எதையும் ஒளிக்காமல் மனத்தில் தோன்றும் பின்னூட்டங்களை இட வேண்டுகிறேன்.
    அது எபியில் இனி நான் எழுதப் போகிற கதைகளைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்பதால் தான் இந்த வேண்டுகோள். பிறகு வந்து எனக்குத் தோன்றுகிற கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு
    மனம் கனிந்த நன்றி.
    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  13. (எனக்கு ஒன்னுந்தெரியாதுங்கோ..வ்!..)

    பதிலளிநீக்கு
  14. அறிமுகப்படலம் நன்று தொடந்து வருகிறேன் ஸார் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, தேவகோட்டையாரே!
      தொடர்ந்து தாங்கள் வாசிக்க இருப்பதற்கு
      நன்றி. எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்தில்
      இந்தக் கதை நிகழ்வுகளின் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்தவிதத்தில்
      இந்தக் கதை உங்கள் மனத்தில் நினைவுபடுத்தும் எண்ணங்களை எனக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
      தொடர்ந்து வந்து சொல்லுங்கள்.
      நன்றி.

      நீக்கு
  15. அறிமுகங்களுடன் இன்றைய கதையின் ஆரம்பம்.
    தொடர வருகிறோம் .

    'இயற்கை எழிலோடு இணைந்து நிற்கும்' படமும் வசனமும் வர்ணமும் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களையும் பதிய வேண்டுகிறேன், சகோதரி.

      நீக்கு
  16. ஆரம்பம் ஜோராகத் தொடங்கியிருக்கிறது. கதை எப்போக்கில் செல்லும் என்று அனுமானிக்க முடியவில்லை. அடுத்த பகுதி வாசிக்கும் போது தெரியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலைந்துக்குக் குறையாமல் பின்னூட்டமிருந்தால் அது சகோதரி தி.கீதாவாகத் தான் இருக்கும் என்பது எபி அனுபவ வழக்கம்.
      வரும் பகுதிகளில் அது தான் நடக்கப் போகிறது, சகோ.
      இன்னொன்று. அந்த 'செம்ம'வை மறந்து 'ஜோராக' என்ற வார்த்தையை நீங்கள் தேர்ந்தெடுத்தது இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. தொடர்ந்து வாசித்து தங்கள் மனத்தில் தோன்றுவதைப் மபதியுங்கள், சகோ.

      நீக்கு
  17. அஹா! பத்திரிகை உலகை களமாகக் கொண்ட கதையா? அந்த துறையில் நிறைய அனுபவம் உள்ளவர் எழுதும் பொழுது படிப்பது சுகம்! ஆரம்பமே அமர்க்களம். தொடரக் காத்திருக்கிறேன்.
    ஜீ.வி.யை வீ.ஜீ என்று மாற்றிய ஓவியரின் சாதுர்யம் ரசனைக்குரியது.

    பதிலளிநீக்கு
  18. ஆரம்பமே அமர்க்களம்! பத்திரிகை உலகை ஆண்ட இரு வேறு ஜாம்பவான்கள் நினைவுக்கு வந்தார்கள்.
    ஜீ.வி. என்பதை வீ.ஜீ. என்று மாற்றிய ஓவியரின் சாதுர்யம் ரசனைக்குரியது.

    பதிலளிநீக்கு
  19. வாங்க, பா.வெ.
    சட்டென்று உங்கள் நினைவுக்கு வந்த
    அந்த இரு வேறு ஜாம்பவான்கள் யாரென்று சொல்லக் கூடாதா?..
    அந்த விஜி கதை இன்னொரு கதை.
    அடுத்த பகுதியில் அவர் வருவார்.
    நல்லதொரு வாசகர், எழுதும் திறமை உள்ளவர் தொடர்ந்து வாசிக்க இருப்பது சந்தோஷம் தான்.
    செவ்வாய்க் கிழமை வந்தால் இந்தத் தொடர் உங்கள் ஞாபகத்திற்கு வரட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!