திங்கள், 6 மார்ச், 2023

"திங்க"க்கிழமை  :  ராகி இட்லி - ஜெயக்குமார் சந்திரசேகர் 

  

கேழ்வரகு இட்லி

JKC

 

அவசியம் வேண்டிய உபகரணங்கள்: கிரைண்டர், மிக்ஸி (மின் தடை இல்லாமல் இருக்க வேண்டும்.)

 வேண்டிய சமையல் பாத்திரம் : இட்லி பாத்திரம், இட்லி தட்டு.

 இட்லி செய்வதற்கு  வேண்டிய பொருட்கள் : கேழ்வரகு ஒரு கப். இட்லி அரிசி ஒரு கப். வெள்ளை உளுந்து அரை கப்புக்கும் சற்று கூடுதலாக. வெந்தயம் வேண்டி வந்தால், உப்பு. 


அதாவது இட்லிக்கு ஊறப்போடுவதில் அரிசியை பாதியாக குறைத்துவிட்டு கேழ்வரகை சேர்த்துக்கொள்வது. முந்தைய நாள் உளுந்து தனியே, அரிசி கேழ்வரகு தனியே என்று கிரைண்டரில் அரைத்து உப்பிட்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்து புளிக்க வைக்கவும். அடுத்த நாள் புளித்த மாவை கலக்கி வைத்துக் கொள்ளவும்.


புளித்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி ஆவியில் வே வைத்து எடுக்கவும்

இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் கார சட்னியும் தேங்காய் சட்னியும் செய்தோம்.

கார சட்னி, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது கடலை பருப்பு ஆகியற்றை சிறிது எண்ணையில் வதக்கி எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கப்பட்டது.




கேழ்வரகு கிலோ 40 ரூபாய் தான். அரிசி விலையைக் காட்டிலும் கம்மி.

கிரைண்டர் மிக்ஸி இல்லாமல் இட்லி செய்ய

இங்கு சூப்பர் மார்க்கட்டில் ராகி மாவு (பொடி), உளுந்து மாவு  (பொடி), இட்லி குருணை ஆகியவை கிடைக்கின்றன. ராகி மாவு ஒரு பங்கு, இட்லி குருணை ஒரு பங்கு, உளுந்து மாவு அரைப் பங்கு எடுத்து நீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக்கொள்ளவும். இட்லி குருணை தண்ணீர் குடிக்கும் என்பதால் கொஞ்சம் நீர்க்கவே இருக்கட்டும். ஒரு இரவு முழுதும் புளிக்க விடுங்கள்.

அடுத்த நாள் எடுத்து இட்லி செய்யலாம். இட்லி ரொம்ப கல் போல இருந்தால் கொஞ்சம் ENO salt மாவில் சேர்த்துக் கொள்ளலாம்

34 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமே வாழ இறைவன் துணை புரிவார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பகிர்வாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தயாரித்திருக்கும் ராகி இட்லி செய்முறை படங்களுடன் அருமையாக உள்ளது. அதற்கு தொட்டுக் கொள்ள இருவகை சட்னிகளும் நன்றாக உள்ளது. அரிசிகள் சுகருக்கு எதிர்ப்பு என்பதால் கேப்பை போன்ற தானியங்களை நாடலாம். ராகி நல்ல சத்துள்ள சிறுதானியம். இது போலவே செய்கிறேன். கடைகளில் உளுந்து மாவுபொடியும் ரெடிமேட்டாக கிடைக்கிறதா? பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு (திருவனந்தபுரத்தில்) பப்படம் (அப்பளம்) முறுக்கு, உளுந்து வடை ஆகியற்றை சிறு தொழிலாக செய்யும் மாமிகள் அதிகம். அவர்கள் கடையில் விற்கும் உளுந்துப் பொடியை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால் சில கடைகளில் கிடைக்கும் பொடி மைதா கலப்படம் செய்ததாக இருக்கும். 
      Jayakumar

      நீக்கு
    2. ஆமாம் அதே. அங்கிருந்தவரை நானும் கடைகளில் வாங்கிவிடுவேன். அப்போது கலப்படம் அவ்வளவாக இருந்ததில்லை.

      கீதா

      நீக்கு
  3. கேழ்வரகு இட்லி சாப்பிட்டதில்லை. ஜெயகுமார் சார் குறிப்பிட்டுள்ள சட்னியுடன் ருசியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    அரிசி இட்லியைவிட இது எப்படிச் சிறந்தது? உழைப்பவர்களுக்கல்லவா கேப்பை ஜீரணம் ஆகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நெல்லை, ஜீரணம் ஆகாது என்று யார் சொன்னாங்க? கேப்பையில் அதன் தோலும் இருக்கும் என்பதால் நார்ச்சத்து. ஜீரணம் ஆகும். அரிசி இட்லி மூன்று சாப்பிடுபவர்கள் கேப்பை இட்லி ஜீரணம் ஆகாதோ என்ற சந்தேகம் இருந்தால் இரண்டு சாப்பிடலாம்.

      கீதா

      நீக்கு
    2. மெதுவாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து என்பதால்.

      கீதா

      நீக்கு
    3. அஞ்சேல் நெல்லை. பதிவுகள் எழுதும் மூளை உழைப்பு இருந்தால் போதும்.
      ஹி..ஹி..

      நீக்கு
    4. உண்மைதான் ஜீவி அண்ணா. மூளை உழைப்பும் கலோரி கரைக்கும்!!

      கீதா

      நீக்கு
  4. படங்கள் அசத்தலாய் எடுத்து அனுப்புகிறார் JKC சார்.  கூடவே பெயர் பொறித்தும்  அசத்துகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆமாம் ஸ்ரீராம்! ரசித்துச் செய்கிறார். அதை நம்மோடு பகிர்ந்து கொண்டு...

      கீதா

      நீக்கு
    2. அந்த தட்டில் கூட தெரிகிற மாதிரி JKC என்று பொறித்திருக்கிறது, பாருங்கள், ஸ்ரீராம். நீங்கள் தான் அவர் புகைப்படத்தைக் கூட கேட்டு வாங்கிப் போடுவதில்லை.

      நீக்கு
    3. ஐயோ JKC என்று நான் புகைப்படத்தில் எழுதவில்லை. ஒருவேளை கில்லெர்ஜீ செய்திருப்பாரோ? 

      நீக்கு
    4. ஹையோ ஜெ கே அண்ணா, பாவம் கில்லர்ஜி! அவர் ஏற்கனவே பயந்து போயிருக்காரு!!!

      ஸ்ரீராம் யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்!!! அண்ணாவுக்கும் புரிந்திருக்கும்!!!

      கீதா

      நீக்கு
  5. ஜெகே அண்ணா, அசத்தறீங்க போங்க!!!!! நல்ல ரெசிப்பி...செய்முறையும் இரு சட்னிகளும் அசத்தல். கொஞ்சமே செய்து கொஞ்சமே சாப்பிட்டாலும் ரசித்துச் செய்து ரசித்துச் சாப்பிடுதல் என்பது ஒரு அனுபவம். சூப்பர் ஜெகே அண்ணா.

    எனக்கு சாப்பாட்டில் மணம் தெரிவது அபூர்வம். அளவும் கம்மிதான் ஆனால் மணம் ருசி தெரியாவிட்டாலும் ரசித்துச் சாப்பிடுவேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் மணம் ருசி தெரியாவிட்டாலும் // - கடவுளே... இவங்க செய்து, மத்தவங்க எப்படித்தான் சாப்பிடறாங்களோ...Seasoning etc. அப்புறம் வெனிலா போட்டு பண்ணும் ஸ்வீட்ஸ்லாம் செய்யத் தெரியுமான்னே சந்தேகமா இருக்கு

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லை....அதெல்லாம் தனி வரம்!!!! தனி தெக்கினிக்கி!!! ஆக்கும்! அதுவும் சமைக்கும் போது நான் சாப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் சுத்தமாகக் கிடையாது. பாட்டியின் பழக்கம்!!! அவங்க செஞ்சு சுவாமி முன் வைச்சு சமர்ப்பித்த பின் தான் எங்களை யாரையாவது பார்க்கச் சொல்வாங்க. நான் சாமி முன் வைக்காவிட்டாலும்...கடவுளே நன்றின்னு சொல்லிடுவேன்...!!! நம்ம வீட்டில் சோதனை எலிகள் தான் எல்லாருமே!!!!!

      கீதா

      நீக்கு
    3. நான் சாப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை. சில நேரம் உப்பு அதிகம் என்று தோன்றுவதை, மத்தவங்க சரியான உப்பு என்று சொல்வதும், காரம் ஓகே என்று நினைப்பதை, காரம் அதிகம் என்று சொல்வதும் நடக்கும். ஆனால் பெரும்பாலான பெண்கள், பழக்கத்தால், சாப்பிட்டுப் பார்க்காமலேயே சரியாக வந்திருக்கும். (அது சரி..உப்பு போட்டோமா? வறுக்க வேண்டியவற்றில் பெருங்காயத்தையும் சேர்த்தோமா என்றெல்லாம் மறதியினால் சந்தேகம் வராதா?)

      நீக்கு
  6. அண்ணா, நான் அரிசி கூடச் சேர்க்காமல் கேப்பை உளுந்து இட்லிதான் பெரும்பாலும். நானும் உளுந்து மட்டும் அரைத்துக் கொண்டு கேப்பை மாவைக் கலந்தும் செய்வதுண்டு.

    நான் மகனுக்கு உளுந்து பொடித்து மாவாக்கி அளந்து கலந்து இப்படி ரெடிமேட் உலர் மாவு செய்து அவனுக்கு அனுப்புவதுண்டு. கேப்பை, சிறுதானியம் இட்லி என்று.

    திருவனந்தபுரத்தில் உளுந்து மாவு நன்றாகக் கிடைக்கும். அங்கு அப்பளம் பப்படம் பிஸினஸ் உண்டே.

    இங்கு நான் வீட்டில் பொடித்து சலித்துக் கொள்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தி/கீதா சொல்றாப்போல் இட்லி அரிசி சேர்க்காமலும் கேழ்வரகு மாவுடன் உளுந்து அரைத்துச் சேர்த்து இட்லி, தோசை எனப் பண்ணுவேன்/பண்ணி இருக்கேன். அதே போல் வரகு, கம்பு, தினை , சாமை ஆகியவற்றிலும் இட்லி, தோசை பண்ணி இருக்கேன். இதிலே மக்காச் சோள ரவையில் இட்லி பண்ணினால் சுமாராகத் தான் வந்தது. அது என்னமோ சோள ரவை ஊறவே ஊறாமல் படுத்தியது.

      நீக்கு
  7. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஆரோக்கிய உணவு..

    மாவுகளை நம்ப வேண்டாம்..

    ஊறவைத்து அரைப்பதே சிறந்தது..

    கலப்பட அச்சம் கிடையாது..

    பதிலளிநீக்கு
  9. ராகி இட்லியும் அதற்கான சட்னிகளும் சூப்பர். சத்தான உணவு.

    பதிலளிநீக்கு
  10. அப்போ அதாவது அறுபதுகளில் ஒரு அரிசிப் பஞ்சம் வந்ததே நினைவிருக்கா? நான் அப்போப் பள்ளி மாணவி. பத்து வயதிருக்கலாம். ரேஷனில் கோதுமை, கேழ்வரகு தாராளமாக் கொடுப்பாங்க. அம்மா அதை வாங்கிச் சுத்தம் செய்து கேழ்வரகை மட்டும் முளைக்கட்டிக் காய வைத்து மாவாக்கி வைத்துக் கொண்டு இந்த மாதிரிப் பண்ணுவாங்க. அந்தச் சமயத்தில் அறிமுகம் ஆனது தான் தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி எல்லாம். கேழ்வரகில் ரொட்டி கூடப் பண்ணுவாங்க. கேழ்வரகு மாவோடு அரிசி மாவு+ அரைத்த உளுந்த மாவு சேர்த்து வெல்லம், தேங்காய் போட்டு வெல்ல தோசையும், தேங்காய் மட்டும் சேர்த்துக் காரப்பொடி அல்லது ப.மி. இஞ்சி சேர்த்து உப்புத் தோசையும் பண்ணுவார் அம்மா. பின்னாட்களில் இதையே கோதுமை மாவிலும் பண்ணிச் சாப்பிட்டிருக்கோம். வீட்டிலேயே ராகிமால்ட்டும் தயார் ஆகும். நான் கல்யாணம் ஆகிக் குழந்தை பெற்றதும் அது குடித்த ராகிக் கூழ், ராகிமால்ட் அம்மா பண்ணிக் கொடுத்தது தான். விதம் விதமாய்ப் பண்ணுவதில் எங்க அம்மாவுக்கு நிகர் இல்லைனே சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  11. கல்யாணம் ஆகி வந்ததும் இதை எல்லாம் சாப்பிட முடியலை. இங்கே யாருக்கும் பிடிக்காது. கொஞ்சம் கௌரவக் குறைச்சலாகவும்/மட்டமாகவும் நினைப்பாங்க. அதிலும் கருவேலியில் இருக்கும்போதெல்லாம் வயலில் இருந்து அரிசி, பருப்பு வகைகள், தோப்பில் இருந்து தேங்காய்(எண்ணெய் எடுக்கலாம் டின் டின்னாக) எதிர்த்தோட்டத்தில் இருந்து மாங்காய், புளி, பூக்கள், காய்கள் எனக் கிடைத்ததால் இவற்றை வாங்கிச் சாப்பிடும் அருமை அவங்களுக்கெல்லாம் புரியாது/புரியவும் இல்லை. வயல் வரப்பிலேயே கிழங்கு வகைகள், மஞ்சள், இஞ்சி, பூஷணி, பறங்கி எனப் போட்டுடுவாங்க. அது பாட்டுக்கு மானாவாரியாய்க் காய்த்துத் தள்ளும். இப்போ அந்த இடமெல்லாம் தண்ணீரே காணாமல், தண்ணீர்ப்பாசனமே இல்லாமல் பாம் ஆயிலுக்கான பாம் மரங்களை வளர்த்திருக்காங்க. நம்ம ஊர்ப் பனையும் இல்லை அது. அது ஒருவிதமான எண்ணெய் தயாரிக்கப் பயனாகும் எண்ணெய் வித்து. அதிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையும் இப்போ ஊரிலேயே வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  12. தனி வெங்காயச் சட்னியோடு இந்தக் கேழ்வரகு இட்லியைச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். சாம்பார், தே.சட்னியை விட இதான் சரியா இருக்கும் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஆமா தனி வெங்காயச் சட்னி இந்த இட்லிக்கு நல்ல காம்பினேஷன்.....எனக்கும் ரொம்பப் பிடிக்கும்..நம் வீட்டிலும்

      கீதா

      நீக்கு
  13. அருமையான படங்களுடன் கேழ்வரகு இட்லி செய்முறை அருமை.நானும் செய்வேன். சட்னியும் இந்த முறையில் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  14. ராகி இட்லி செய்முறை, படங்களோடு சிறப்பு. கொஞ்சம் ஹெவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை ராகி மாவில் புட்டு செய்து விட்டு அதை சாப்பிட வீட்டில் திணரினார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!