சனி, 4 மார்ச், 2023

ட்ரோன் வழியாக உதவித்தொகை மற்றும் நான் படிச்ச கதை

 



=====================================================================================================



=====================================================================================================


==============================================================================================


=================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

 

எச்சரிக்கை.

இந்தக்  கதை ஒரு மொக்கை. விமரிசனம் ஒரு மொக்கை. பதிவும் ஒரு மொக்கை. சனிக்கிழமையன்று வெளி வரும்நான் படிச்ச கதைத் தொடர் தடையுறாமல்  இருக்க எடுத்துக் கொண்ட  ஒரு கதையும் அதைச் சார்ந்த பதிவும். விருப்பமில்லாதவர்கள் விலகலாம்.

 

 மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

கதையாசிரியர்: பானுமதி ராமகிருஷ்ணா

 

பி. பானுமதியை  (1925-2005) பி வாசகர்கள்கள் எல்லோரும் அறிவார்கள்நடிகை, கதை ஆசிரியர், இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர்பாடகி, இயக்குனர், ஸ்டூடியோ சொந்தக்காரர், நிர்வாகி, கைரேகை நிபுணர், ஜோதிடர், சிறுகதை எழுத்தாளர்  என்று பல துறைகளிலும் வெற்றி பெற்றவர். சகல கலாவல்லி. தமிழ், தெலுங்கு திரைப்படத்துறையில் 1943 முதல் 1986 வரை கிட்டத்தட்ட 43 வருடங்கள் கோலோச்சியவர். 

கதாநாயகனுக்கு உள்ள முக்கியத்துவம் போன்று சம முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் மாத்திரம் நடித்தவர். சிறிய குறும்புத்தனம் காட்டும் இவரது கண்கள் இவரது சிறப்பு. MGR அவர்களையே மிஸ்டர் ராமச்சந்திரன் என்று கூப்பிட்டு பேசியவர். 

வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் இவ்ருக்கு கவுரவ டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. மத்திய அரசு பத்ம பூஷன் பட்டம் வழங்கியது. தமிழ்நாடு இசைக்கல்லூரி முதல்வர் ஆகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் சிறுகதைகள் நிறைய எழுதியுள்ளார். ‘அத்தக்காரு கதகலுஎன்று தெலுங்கில் இவர் எழுதிய கதைகளை குமுதம்மாமியார் கதைகள்என்ற தொடராக வெளியிட்டது. அவ்வாறு இவரது கதைகள் எனக்கு பரிச்சயம் ஆனது. இக்கதைகள் எல்லாம் நகைச்சுவைக் கதைகள். அத்தகாரு கதைகளுக்காக தெலுங்கில் சாஹித்திய அகாடமி விருது பெற்றார். 

நான் படிச்ச கதை பகுதியில் கடந்த இரு வாரங்களாக உளவியல் கதைகளை அறிமுகப் படுத்தியதால் (மரப்பாச்சி, கிறுக்கல்) இந்த வாரம் ஒரு மாறுபட்ட நகைச்சுவை கதையை தேடினேன். அங்ஙனம் வலையில் இவரது கதையைத் தேடிய போது கிடைத்தது ஒரே ஒரு கதை. ‘ மிஸ்டர் துக்ளக்கின் மகள்’. தலைப்பு வித்தியாசமாகவும் இருந்தது. ஆனால் இக்கதையில் அத்தக்காரு கதைகளுக்கு ஈடான நகைச்சுவை இல்லை. கதை வெளியான வருடம் 1971. காலத்திற்கு ஏற்ப நகைச்சுவை தரமும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இனி கதையை வாசியுங்கள். கதை முழுதும் தரப்பட்டுள்ளது.

 

 மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

 பானுமதி ராமகிருஷ்ணா

 

கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதும், ஊரே கலகலத்தது.

அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு போன பொழுது கல்யாண வீடு எப்படி திமிலோகப்பட்டதோ, அப்படி!

வீராசாமி ராஜாவிற்கும் பெருந்தேவிக்கும் பிறந்த ஒரே ஒரு பெண்தான் கனகதுர்கா. ஒரே பெண் என்னும் காரணத்தால் செல்லமாகவும் செழிப்பாகவும் வளர்ந்தாள். அவள் மட்டுமல்ல, அவளது உடலும் கொழுகொழுவென வளர்ந்தது. பெண்ணுக்குப் பதினைந்து வயதாகியும், குனிந்து ஒரு செம்பு ஜலத்தைக்கூட எடுக்க அவள் தாயார் அனுமதித்தது இல்லை. அதனால் மதமத வென வளர்ந்து, வாசலுக்குள் நுழைய முடியாத அளவு தோற்றமளித்தாள் அவள்.

வீராசாமி ராஜா ஒரு விசித்திரப் பேர்வழி. எதையும் மெதுவாகப் பேசமாட்டார். அக்கம்பக்கத்துக்குக் கேட்கும்படிதான் பேசுவார். அவர் பேச்சிலிருந்தே அன்றைக்கு அவர்கள் வீட்டில் என்ன சமையல், என்னென்ன காய்கறிகள் வாங்கி இருக்கிறார்கள், என்ன நகை செய்யப் போகிறார்கள், யார் யாரைப் பார்க்கப் போகிறார்கள் என்னும் விவரமெல்லாம் தெரிந்து போகும். அதை நாலு பேருக்குத் தெரியப்-படுத்த அவர் கையாளும் முறை அது-தான். ரொம்பப் படாடோபக்காரர்.

ஒரு புராதன கார் அவரிடம் இருந்தது. அதைக் கிளப்புவதற்குள் அவர் படும்பாடு வேடிக்கையாக இருக்கும். காய்கறி வாங்க அருகில் இருக்கும் கடைக்குப் போவதென்றால் கூட, அந்த ஓட்டைக் காரை எடுக்க பிரம்மப்பிரயத்தனப் படுவார். வேலை ஆட்களைக் கொண்டு தள்ளச் சொல்லியே கறிகாய்க்கடை வரைக்கும் போய் வந்துவிடுவார். வேலையாட்கள் இல்லாவிடில், ரோட்டில் போவோர் வருவோரை யெல்லாம் கூடத் தள்ளச் சொல்லு வார். அதனால் நானும் என் கணவரும் அவருக்குதுக்ளக்என்று பெயர் வைத்துவிட் டோம்.

வேலைக்காரர்கள் தப்பித் தவறிக்கூட அவரைஐயாஎன்று கூப்பிடக்கூடாது. மகாகோபம் வந்துவிடும். ‘மகாராஜா மகாராஜாஎன்றுதான் கூப்பிட வேண்டும். மகாராஜா என்று கூப்பிட மறுத்த ஒரு வேலைக் காரனுக்கு வேலையிலிருந்தே கல்தா கொடுத்து விட்டதும் எங்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட துக்ளக்குக்கு கனமான சுமையாக வீட்டுக்குள் நடமாடும் கனகதுர்காவின் கல்யாணம் பெரிய பிரச்னையாகி விட்டது.

பெருந்தேவிக்குபணத்தை விட்டெறிந்தால் யாராவது நம் பெண்ணைக் கொத்திக்கொண்டு போக மாட்டார்களாஎன்னும் இறுமாப்பு இருந்தது வாஸ்தவம் தான். ஆனால், வந்த வரன்களெல்லாம் பணத்துக்கு அடிமையாகாமல், அழகு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போகப் போகத்தான் அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

உங்கள் பெண் இப்படி பெருத்துக்கொண்டே போனால், யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்? கொஞ்ச நாளைக்குலைட்ஆகாரம் கொடுங்கள்என்று உபதேசம் செய்த ஒரு பெண்மணியிடம், ”என் பெண்ணைப் பார்த்தால் உங்களுக் கெல்லாம் வயிற்றெரிச்சலா?” என்று கேட்டுவிட்டு, அந்தப் பெண்மணியின் எதிரேயே பூசணிக்காயை எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்டாளாம்! தன் பெண்ணின் அழகில் அத்தனை நம்பிக்கை பெருந்தேவிக்கு!

வந்த வரன்களெல்லாம் கை நழுவிப் போக, பெற்றோருக்குக் கவலை அதிகமாகிவிட்டது. வீராசாமி ராஜா வீட்டில் இரைந்து பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டு விட்டார்.

ஒரு நாள்

திடீரென்று வீராசாமியின் குரல் பழையபடி எங்கள் காதில் கணீரென ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர் வீடு. சுவர் ஓரத்தில் நானும் என் கணவரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தொடங்கி னோம். வேலைக்காரர்களிடம் தான் சப்தம் போட்டுக் கொண்டு இருந்தார்.

பெரிய ஜமீன்தார் வீட்டுச் சம்பந்தம். இருபதாயிரம் ரூபாய் வரதட்சணை; பத்தாயிரம் ரூபாய் சீர்; நீங்களெல்லாம் என் மானத்தை வாங்கிவிடாதீர்கள்!” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

ஓகோ! கனகத்திற்கு நல்ல வரன் அமைந்துவிட்டது போலிருக்கிறதுஎன்றார் என் கணவர்.

அவர்கள் வீட்டு வேலைக்காரி இந்தச் செய்தியைத் தூக்கிக் கொண்டு போய், கோயிலில் சுண்டல் விநியோகம் செய்வது போல் வீடு வீடாக விநியோகம் செய்துவிட்டாள். ஊரே அதிர்ந்து போய் நின்றது. நாங்களும்தான்.

வீடு வீடாகச் சென்று பெருந் தேவியைத் துக்கம் விசாரிப்பது போல, ”உன் பெண்ணுக்கு வரன் கிடைத்துவிட்டதாமே! யாரது மாப்பிள்ளை? என்ன செய்கிறார்?” என்று கேட்டுவிட்டு வெளியே வந்த பெண்கள், ”பாவம்எந்த துரதிர்ஷ்டசாலியோ தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு விட் டான்என்று பேசிக்கொண்டு போயினர்.

பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அவள் அப்பா காண்பித்த ரூபாய் நோட்டை மட்டும் பார்த்திருப்பான்என்றுவிட்அடித்தாள் ஒரு பெண்.

ஊரே இந்தத் திருமணத்தைப் பற்றி இப்படிப் பரபரப்பு காட்டி வந்தபொழுது, அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றுவேலைக்காரி நியூஸ் சர்வீஸ்மூலம் வெளி யானது,

பெண் பார்த்துவிட்டுப் போன மறுநாளிலிருந்து மாப்பிள்ளைக்கு ஜுரம் வந்துவிட்ட தாம். பெண் பார்த்ததுமே இப்படி கெடுதல் ஏற்படுவதை அபசகுன மாகக் கருதி, மாப்பிள்ளை வீட்டார் கல்யாணமே வேண்டாம் என்று வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்களாம்!

வீராசாமி ராஜாவுக்கும் பெருந்தேவிக்கும் பெரிய தலைக் குனிவாகப் போய் விட்டது, பாவம்! இருவரும் வீட்டை விட் டுக்கூட வெளியே வருவதில்லை. அதே கவலையில் ராஜா படுத்த படுக்கையாகி விட்டார். இப்பொழுதெல்லாம் அவர் குரலைக் கூடக் கேட்க முடிவதில்லை.

இது நடந்து கொஞ்ச நாட்கள் இருக்கும்ஒருநாள் நடுநிசி! வீராசாமி ராஜா வீட்டிலிருந்துதடதடாஎன ஓர் ஓசை! அதை யொட்டி யாரோ குசுகுசுவெனப் பேசும் ஒலி. மறுபடியும் தடதடா சப்தம். உடனே, வீதி நாய்கள் குரைத்தன. சற்று நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல்இப்படி யாகக் கேட்டது. லட்சியப்படுத் தாமல் தூங்கிவிட்டேன்.

தொடர்ந்து இதே பயங்கர சப்தமும் அழுகுரலும் மாறி மாறிக் கேட்டபொழுதுதான் என் கணவரை எழுப்பினேன்.

ஒரு சமயம் பேய் பிசாசாக இருக்கலாம்என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான்! எனக்கோ பயம் பிடித்துக்கொண்டு விட்டது. போதாக்குறைக்கு வெள்ளைப் புடவை வேறு கட்டிக்கொண்டு இருந்தேன்.

வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டு மாடியில் படுத்தால், பிசாசு பிடித்துக்கொள்ளும்என்று எப்போதோ ஒரு சிநேகிதி சொன்னது அப்போதுதானா என் நினைவுக்கு வர வேண்டும்? பயத்தில் துப்பட்டியை எடுத்துப் புடவை தெரியாமல் கழுத்து வரை போர்த்திக்கொண்டு விட்டேன்.

ஒரு வேளை பிசாசாக இருந்து, மரத்து மீது ஏறி, மாடியில் குதித்து விட்டால்..?

பயத்தால் உடலெல்லாம் நனைந்துவிட்டது. அவரோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

கீழே கடிகாரத்தில் சரியாக மணி பன்னிரண்டு அடித்தது. வழக்கமாக சப்தம் வரும் நேரம் இதுதான்!

தட தடாதடதடா

சப்தம் கேட்டதும் தலைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு விட்டேன்.

மீண்டும் தட தடா சப்தம் கேட்கிறது. தொடர்ந்து குசுகுசு வெனப் பேச்சு ஒலி; அழுகுரல்.நல்லவேளையாக, இந்தத் தடவை அவர் எழுந்துவிட்டார். நான் அவரைப் போர்வைக்குள் இருந்தவாறே கோபித்துக்கொண் டேன்.

இன்னமுமா நீ தூங்கவில்லை?” என்று கேட்டுவிட்டு அவர் மொட்டை மாடியின் விளம்புக்கு எழுந்து போவது, போர்வை துவாரத்தின் வழியாகத் தெரிந்தது. அவரைத் தடுத்து, ”போக வேண்டாம்என்று குரல் கொடுத்தேன். அவர் கேட்கவில்லை.

திடீரென ஒரு சிரிப்பொலி. பயந்து போய், போர்வையை விலக்கிப் பார்த்தேன். நல்ல வேளை! அவர்தான் என் அருகில் அமர்ந்தவாறே சிரித்துக்கொண்டு இருந்தார்.

அவர் பேசவில்லை. என் கையைப் பிடித்துத் தரதரவென மாடி ஓரத்துக்கு அழைத்துச் சென்றார்.

அதோ பார்த்தாயா?” என்று அடுத்த வீட்டு முன் வாசலைக் காட்டினார்.

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அங்கு பிசாசு இல்லை. என்றாலும் பூதம் மாதிரி தோற்றமளிக்கும் கனக துர்கா ஒரு ரோட் ரோலரைக் கட்டி இழுத்துக்கொண்டிருந்தாள். கொஞ்சம் இழுத்ததும், நின்று கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டாள் அவள். வீராசாமியோ அவளை மேலும் இழுக்கும்படி தொந்தரவு செய்தார். பெருந்தேவி கையில் ஒரு டிரே வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அதில் ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ், பால், பிஸ்கட், விசிறி எல்லாம் இருந்தன.


பெருந்தேவி கனகத்திடம் வந்து கண்களைத் துடைத்துவிட்டு, ”போதும், விடுங்கள்! குழந்தை இளைக்காமல் போனால் போகி றாள்! அவள் உடம்பு இளைத்தால் தான் கல்யாணம் ஆகும் என்றால், கல்யாணமே ஆகாமல் போகட் டும். கவலை இல்லை! அவள் படும் அவஸ்தையைப் பார்க்க முடியவில்லைஎன்றாள்.

உடம்பு இளைப்பதற்காகவா அவளை இந்தப் பாடு படுத்து கிறார்-கள்என்பது போல் என் கணவரைப் பார்த்தேன். அவர்உஷ்பேசாதே!’ என்பது போல ஜாடை காட்டினார்.

வீராசாமி கனகத்திடம் போதிய அளவு வேலை வாங்கி, இனி முடியாது என்னும் நிலை யில், தம் பெண் இடுப்பிலிருந்த பெல்ட்டைக் கழற்றிவிட்டார்.

ஓடிப் போய் கனகா, தன் தாயார் கொடுத்த ஒரு செம்புப் பாலையும், தொட்டியில் எருமை மாடு கழுநீர் குடிப்பது போலக் குடித்துத் தீர்த்தாள்.

நானும் என் கணவரும் இந்தப் பக்கம் வந்து விழுந்து விழுந்து சிரித்தோம்.

இது நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊரையே கலக்கிய அந்தப் பரபரப்பான செய்தி வந்தது. கனகதுர்கா யாருடனோ ஓடிவிட்டாளாம்!

அது வேறு யாரும் இல்லை, அவளுடைய அத்தான்தானாம். கிராமத்தில் விவசாயம் செய்து வந்த அவனுக்கு கனகதுர்காவைக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன வீராசாமி ராஜா வேறு வழியில்லாமல், திருப்பதியில் கல்யாணம் செய்துகொண்ட கனக-துர்காவையும், அவளைவிட இருமடங்கு கனமுள்ள யானை மாப்பிள்ளையையும் அழைத்து வந்து, வீட்டில் ஏக தடபுடலாக விருந்து கொடுத்தார்.

விருந்துக்குப் போன நான், கனகதுர்காவை, ”ஏண்டி, ருக்மிணி மாதிரி ஓடிப் போயிட்டியே!” என்று கேட்டேன்.

அப்படிப் போகலேன்னா அத்தானுக்கு என்னைக் கொடுக்க மாட்டாரே, எங்க அப்பா! அதுக் குத்தான் அத்தானுக்கு ரகசிய மாகக் கடிதம் போட்டேன். அவர் யாருக்கும் தெரியாமல் வந்து என்னைத் தூக்கி(!)க் கொண்டு போய்விட்டார். இருந் தாலும் அந்த ரோடு ரோலரை யார் இழுப்பாங்கஅம்மா தூக்கமில்லாமல்!” என்றாள்.

பின்னுரை.

கதையின் கடைசி முடிவை ஆரம்பித்திலேயே சொல்லி வாசகர்களை கதைக்கு இழுத்து செல்வது ஒரு யுக்தி. சுஜாதா அந்த யுக்தியை அடிக்கடி பயன் படுத்துவார். அதே போன்று இந்தக் கதையும் ஆரம்பிக்கிறது. ஆனாலும் முழு முடிவை முதலிலேயே சொல்லாமல் கொஞ்சம் ஊகத்திற்கும்  விட்டு விடுகிறார் ஆசிரியர்.

அவ்வாறு தொடங்கியவர் கதை மாந்தர்களின் குணாதிசயங்களை எடுத்துக் காட்டுகிறார். பின்னர் கதையைக் கொஞ்சம் வளர்க்க வேண்டி பெண் பார்த்தல் மற்றும் நிச்சயதார்த்தம் முறிந்து போதல் போன்றவற்றை இடையில் புகுத்துகிறார். தமிழ் சினிமாவில் வருவது போன்று திடீரன்று அத்தான் வந்து பிரித்விராஜ், சம்யுக்தாவைக் கொண்டு போனது போல் கொண்டு போய் கல்யாணம் செய்து கொண்டு …….. எல்லாம் சுபம்.

இதற்கு இடையில் ரோலர் இழுப்பது என்ற ஒரு அந்தக் கால காமெடியும் உண்டு.

ஆனாலும் கதையை படிக்கலாம், ரசிக்கலாம்.

கதையின் சுட்டி: இங்கே

பிற்சேர்க்கை.

தேடிய பொக்கிஷம் (மாமியார் கதைகள்) ஈகரை தளத்தில் PDF கோப்பாகமாமியாரும் புதையலும்என்ற நூலாக ஜெராக்ஸ் காபியாகக் கிடைத்தது. அதை என்னுடைய கூகிள் டிரைவில் இறக்கியிருக்கிறேன்.. வேண்டும் என்போர் கீழே காணும் சுட்டியை காபி பேஸ்ட் செய்து  கிளிக்கினால் போதும்

https://drive.google.com/file/d/1Qau00N36g6yWbAR50OrU4eDwphZ6Voz4/view?usp=sharing

 

 

28 கருத்துகள்:


  1. நடையில் ஓரளவு நகைச்சுவை வருகிறது ரசித்தேன்.

    //வெள்ளைப் புடவை வேறு கட்டிக் கொண்டு இருந்தேன்//

    சுமங்கலி பெண் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு இருப்பது பொருந்தவில்லை... ?

    கேள்விக்கு காரணம் இது எழுதிய காலம் பழையது.

    //மிஸ்டர் துக்ளக்கின் மகள்!
    கதையாசிரியர்: பானுமதி ராமகிருஷ்ண்//

    ஹா.. ஹா.. நொடியில் மாற்றி கேள்வி கேட்பவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை புடவை சினிமாத்தனம் என்று கண்டுபிடித்து சொன்ன நகைச்சுவைக்கு நன்றி. அது போலத்தான் ரோலரும். இந்த ரோலர் போன்ற நகைச்சுவை அந்தக்கால தெலுங்கு சினிமாக்களுக்கே உரியது. 
      Jayakumar

      நீக்கு
    2. ஹாஹாஹா கில்ல்ர்ஜி பாயின்ட்!!!

      கீதா

      நீக்கு
  2. பானுமதி ராமகிருஷ்ணா பன்முகம் கொண்டவர்.
    எபியில் செவ்வாய்க் கிழமை கதைகள் எழுதுவோருக்கு
    இந்தக் கதையை எழுதும் முறையில் எப்படி நடத்திச் சென்றிருக்கிறார் என்ற யுக்திகள் உதவலாம். ஜெஸி ஸாரும் அது பற்றி சில குறிப்புகளை தன் வாசிப்பு அனுபவத்தில் கொடுத்திருக்கிறார்.
    அவர் தந்திருக்கும் குறிப்புகள் கதைகள் எழுதுவோருக்கு உபயோகமானவை.

    பதிலளிநீக்கு
  3. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கதை என்று எழுதத் தெரியாதவர்கள் கதை என்று எழுதுகின்ற தளம் ஆயிற்றோ -

    எங்கள் பிளாக் என்னும் இத்தளம்!?...

    பதிலளிநீக்கு
  5. அந்தக்கால நகைச்சுவைக் கதை.... லாஜிக்லாம் பார்க்கக்கூடாது

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அது வாசகர்களை தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஒரு டெக்நிக். தொடாதே என்று எழுதி வைத்தால் தொட்டுப் பார்ப்பவர்கள்  நாம்.  

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. நல்ல செய்திகள்.

    கதை நன்றாக இருக்கிறது, மாயாவின் ஓவியம் பார்த்ததும் படித்த நினைவு வந்து விட்டது. அத்தகாரு கதையும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

    ஏயார் ப்ரஷரில் ஓடும் பைசிக்கிள் இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துகள்.

    பானுமதி ராமகிருஷ்ணா ஆளுமைமிக்கவர்.
    கதை சுவாரசியம்.
    ஓவியம் நன்று.

    பதிலளிநீக்கு
  10. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சூப்பர்.

    ட்ரோன் மூலம் உதவித் தொகை வழங்குவது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.

    சைக்கிள், காற்றழுத்தத்தில் இப்படிச் செயல்படுவது - நல்ல கண்டுபிடிப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. `அபாயம். வெய்யிலில் கம்பெரேஸ்ஸர் வெடிக்கும் அபாயம் உண்டு,

      நீக்கு
    2. நீங்கள் சொல்லும் பாயின்ட் புரிகிறது ஜெ கே அண்ணா. கரெக்ட்...பலூன் வெடிப்பது போல.........ஆனால் கம்ப்ரெச்ஸர் வெடிக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு செய்து tஆனே போடுவாங்க

      கீதா

      நீக்கு
  11. ஜெ கே அண்ணா கதை அப்படி ஒன்றும் மொக்கையாக இல்லை. இதைவிட மொக்கையான படங்களையே பார்க்கிறோம் அப்படி இருக்க....இது படத்தில் இடையில் வரும் காமெடி சீன் போல இருக்கு. பானுமதி ஒரு வேளை அந்தக்காலப் படம் எதுக்காச்சும் இப்படி ஒரு சீன் யோசிச்சிருப்பாங்களோ?

    குண்டா ஒரு பெண்மணி படத்தில் காமெடி சீனுக்கு நடிப்பாங்களே அவங்க பெயர் மறந்து போச்சு....அவங்க நினைவுக்கு வந்தாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்தக் கார் நகைச்சுவை கூட - கரகாட்டக்காரன் படத்தில் வரும் தள்ளித்தள்ளித்தானே ஓட்டுவாங்க....ஒரு வேளை பட இயக்குநர் இக்கதைய வாசிச்சிருப்பாரா இருக்கும்...

    சினிமாக்கான காமெடி ட்ராக்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை. அன்றைய பொருளாதாரம் அப்படி. 6000 ரூபாயில் ஒரு பழைய ஆஸ்டின் அல்லது வாக்சால் வாங்கி விடுவார்கள். ஓட்டுவது கம்மி. பாட்டரி அடிக்கடி சார்ஜ் தீர்ந்துவிடும்.  பின்னே கம்பி வைத்து சுற்றுவதற்கு பதில் தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டும். 

      தற்போதைய கார்கள் தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியாது. 

      நீக்கு
    2. அது புரிந்து கொள்ள முடிகிறது அண்னா...நான் சொன்னது நகைச்சுவைக் காட்சியை...கரகாட்டக்காரன் படத்தில் அப்படியான ஒரு காரை வைத்து (இந்தக் கதையிலும் வரும் கார் போலத்தான்) நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும் அதான்...

      கீதா

      நீக்கு
  13. கல்கி விந்தனுக்கு சொன்ன அறிவுரை ஞாபகம் இருக்கிறதா? 

    "கதை என்றால் நாலு பேர் பாராட்டி எழுத வேண்டும். அல்லது நாலு பேர் திட்டவாவது செய்ய வேண்டும். இரண்டும் இல்லை என்றால் எழுதாமல் இருக்கலாம்."

    அந்த நாலு பேர் சனிக்கிழமை பதிவுகள் எப்படி இருந்தாலும் வந்து  வாசிக்கிறார்கள் என்ற உண்மை தான்  "நான் படிச்ச கதை" பகுதியை தொடர வைக்கிறது.  


    வந்தவர்களுக்கும் பானுமதியைப் பாராட்டியவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


    எ பி வாசகர் பானுமதி  அவர்கள் இக்கதையை படித்துக் கூறும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கி விந்தனுக்கு சொன்ன அறிவுரை ஞாபகம் இருக்கிறதா?//

      "கதை என்றால் நாலு பேர் பாராட்டி எழுத வேண்டும். அல்லது நாலு பேர் திட்டவாவது செய்ய வேண்டும். இரண்டும் இல்லை என்றால் எழுதாமல் இருக்கலாம்."அந்த நாலு பேர் சனிக்கிழமை பதிவுகள் எப்படி இருந்தாலும் வந்து வாசிக்கிறார்கள்//

      யெஸ்ஸு...

      ஜெ கே அண்ணா, நான் இந்த வகையறாதான். அதாவது எதிலிருந்தும் நமக்கு ஏதேனும் ஒரு டிப் கிடைக்கும். ஓ இப்படியும் எழுதலாம், இப்படி இல்லாமல் கொஞ்சம் வேறு வகையில் எழுதியிருக்கலாமோ, ஓ அசாத்திய எழுத்து என்று சில ஊக்கம், இல்லை இப்படி எழுதக் கூடாது என்று பல வித பாடங்கள் கற்பனைகள் ஐடியாக்கள், அதிலிருந்து நமக்கு ஒரு கதை எழுதக் கூடக் கரு கிடைக்கும்.

      மேலே ஜீவி அண்ணா சொல்லியிருப்பது போல்...பானுமதி பன்முக வித்தகி....நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்துவிடலாம்.

      கீதா

      நீக்கு
    2. அருமையான அனுபவ வெளிப்பாடுகள் உங்களது, சகோ.

      என் இளமை காலத்தில் தேடித் தேடிப் படித்து என் எழுத்தாற்றலை மெருகேற்றிக் கொண்டது நினைவில் நின்றது.
      ஜெயகாந்தன், ஆர்வி, ரா.கி.ரங்கராஜன், பாலகுமாரன், எஸ்.ஏ.பி. போன்றோர்களிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.
      கற்றுக் கொண்டது என்றதும் சுஜாதா நினைவில் படிகிறார்.
      'கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும்' என்று இந்த கற்கும் கலையை எவ்வளவு
      நேர்த்தியாய் தன் வாழ்க்கைப் பாடமாய்
      கொண்டிருந்திருக்கிறார் அவர் என்று வியக்கத் தோன்றுகிறது. இன்னொருத்தர் எழுதியிருப்பதை வாசித்து வியக்கத் தோன்றினாலே, நாம் இந்த எழுத்துக் கல்வியை கற்க ஆரம்பித்து விட்டோம் என்ற உணர்வு நம்முள் விதையூன்ற ஆரம்பித்து விடும்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. உதவிபுரியும் நற்பண்புகள் உள்ளவர்களை உள்ள நிறைவுடன் வாழ்த்துவோம்.

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. திருமதி பானுமதி ராமகிருஷ்ணா அவர்களின் அனைத்து கலைத் திறமைகளையும் அனைவரும் அறிவோம். திரைப்படங்களில் நகைச்சுவையாக பேசி நடிப்பதிலும் வல்லமை பெற்றவர்.

    பொதுவாக பேய்கள்தான் வெள்ளைப்புடவையுடன் உலா வரும். வெள்ளைப்புடவை உடுத்தினாலும், அவர்களிடம் பேய்கள் விரும்பி வருமென்பது எனக்கு புதிய செய்தி. கதை நன்றாக இருந்தது.

    "எச்சரிக்கை" நடவடிக்கையின் உணர்த்தலையும் புரிந்து கொண்டேன். முன்னுரை, பின்னுரை ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. கதை பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியும் க்ளிக்கிக் கொண்டுவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. "மாமியார் கதைகள் " சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!