வியாழன், 30 மே, 2024

செல்லமே.. 1/2

 இரண்டு முறை (வளர்ப்பு) நாயிடம் கடி வாங்கியுள்ளேன்.

வீட்டில் வளர்க்கும் நாய்களே உரிமையாளர்களை கடித்து வருவது பற்றி திடீரென செய்திகள் அதிகம் வருகின்றன.  சென்னையில் அடித்த அதீத வெய்யில் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா  என்று   தெரியவில்லை.  அந்த வெய்யிலில் எனக்கே யாரையாவது கடிக்க வேண்டும் போலதான் இருந்தது!   இருங்கள் ஓடாதீர்கள்.  நான் சொன்னது கடிஜோக்!  ஊடகங்கள் ஏதாவது வேறு காரணத்துக்காக கூட இதை ஊதி பெரிதாக்கி இருக்கலாம்.  ப்ளூ க்ராஸ்காரர்கள் கவனத்துக்கு...

இதோ இப்போது 'தெருநாய்களை பிடிக்கிறோம், பெருகி விட்டது, குடும்பக்கட்டுப்பாடு செய்கிறோம்' என்றெல்லாம் நியூஸ் வர ஆரம்பித்திருக்கிறது!

இப்போது கடித்தது, குதறியது என்னும் அந்த செய்திகள் வருவது குறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!

நான் அல்லது நாங்கள் மூன்று செல்லங்கள் வளர்த்தோம்.  நானெல்லாம் தேசப்பற்று மிக்கவன்!!  எனவே எல்லாம் உள்ளூர் செல்லங்கள்தான்.  ஒன்று ராஜபாளையம் க்ராஸ் என்றார்கள்.  அதற்கு மோதி என்று பெயர்.  என் கல்லூரி காலத்திலிருந்து எங்கள் வீட்டில் வளர்ந்தது.  உண்மையில் அதை சுகுமார் வாங்கி இருந்தார்.  இரண்டு நாய்க்குட்டிகள்.  Twins!  ஒன்று அவர்கள் வீட்டு கிணற்றுக்குள் விழுந்து செத்துப்போய்விட, இது மிஞ்சியது.  

அந்த சமயத்தில் ஒருமுறை அவர் ஊருக்குப் போகும் சமயம் அவர் வரும்வரை  'கொஞ்சநாள் பார்த்துக் கொள்ளச் சொல்லி' என்னிடம் கொடுத்தார். அவ்வளவுதான்.  அதைத் திருப்பிக் கொடுக்க மனமில்லாமல் போனது. ஆனால் அப்புறம் பல வருடங்கள் நான் அல்லது நாங்கள் வளர்த்தாலும், சுகுமாரின் டி வி எஸ் 50 சத்தம் தூரத்தில் கேட்கும்போதே அத்தனை வண்டிச் சத்தங்களுக்கு நடுவே இது அலெர்ட் ஆகி சிலிர்த்து எழுந்து வாலாட்டியபடி கதவைப் பார்த்து நிற்கும்.  எங்களுக்கு அவர் வருகிறார் என்பது தெரிந்து விடும்.  அவரிடம் தாசானு தாசனாய் கடைசி வரை இருந்தது.  ஆச்சர்யமான விசுவாசம், அல்லது பாசம்.  ஆனால் என்னை இரண்டு முறை கடித்துள்ளது மோதி.

என் அம்மாவுக்கு காது கேட்காது.  வீட்டில் அம்மாவை தனியே விட்டு விட்டுச் செல்லும் நேரங்களில் யாராவது வந்து கதவு தட்டினாலோ, காலிங் பெல் அடித்தாலோ அம்மாவுக்கு காது கேட்காது.  அம்மா தன் ஹியரிங் எய்டை நம்பியதைவிட மோதியை அதிகம் நம்பினார்.

மோதி சட்டென எழுந்து இதுபக்கம் இருக்கும் தெரு ஜன்னலைப் பார்த்து காது விடைக்க வாலாட்டிக்கொண்டு, பின்  கழுத்தைத் திருப்பிக் கொண்டே வந்து வாசல் ஜன்னலைப் பார்த்தால், வாலாட்டிக் கொண்டே கதவுக்குப் பக்கத்தில் போய் எம்பி எம்பி தாழ்ப்பாளுக்காய் குதித்தால் சுகுமார்.  திரும்பி அம்மாவைப் பார்க்கும்.  

'வா..  வந்து கதவைத் திற'.  

ரொம்பத் துடிக்காமல் சட்டென எழுந்து வாசல் ஜன்னலில் கால் வைத்து எம்பி வாசல் கதவுக்காய் காத்து நின்று அம்மாவைப் பார்த்தால் நான், அல்லது அப்பா, அல்லது என் அண்ணன்.  

தங்கை ஹாஸ்டலில் படித்துக் கொண்டிருந்ததால் இந்த அனுபவம் அவளுக்கு கொஞ்சம் கம்மி.

என் மாமாவுக்கு நாய்கள் என்றால் ஆகாது.  ஒரு நாய்க்கு அவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்று கடுப்படிப்பார்.  காலை அப்பா ஆபீஸ் சென்றதும் வீட்டிலிருக்கும் ஒரு பிரம்பு சேரில் ஏறி சௌகர்யமாய் மடங்கி அமர்ந்து தூங்கும் மோதி.  மாமா வீட்டில் இருந்தால் நாற்காலியில் ஏறாது!  அவருக்குப் பிடிக்காது என்று தெரியும்.  ஊட்டியிலிருந்து அவர் வந்த முதல் முறை யாரென்று தெரியாமல் குரைத்தது. அதிகாலை வந்து விடுவார்.  நான் காலை ஐந்தேகால் அல்லது ஐந்தரைக்கு எழுந்து பால் வாங்கி வைப்பேன்.  அந்த நேரத்தில் அல்லது அதற்கு முன்னாலேயே ஊரிலிருந்து வருவார் மாமா.  சமயங்களில் சஸ்பென்சாக உள்ளே நுழைந்து உட்கார்ந்து விடுவார்.  

அப்படி வந்த முதல் முறை - அதாவது மோதியின் வருகைக்குப் பின்னரான முதல் முறை - யாரென்று தெரியாமல் மோதி எதிர்க்க, மாமாவும் - அவருக்கு மோதி புதிது என்பதால் - வம்பு எதற்கு என்று பிரம்பு நாற்காலியில் பையைக் கூட கீழே வைக்காமல் அமர்ந்திருந்தார்.  உள்ளே ரூமிலிருந்து வெளியே வந்த நான் மாமாவைப் பார்த்து குஷியாகி "மாமா..  வாங்க...  எப்போ வந்தீங்க...  இப்போதான் நானும் உள்ளே வந்தேன்" என்று பையை வாங்க, மோதி 'ஓ...  உறவுதானா?' என்று அமைதியாகி வாலை ஆட்டி நட்பைத் தெரிவித்தது.  

ஆனால் கடுப்பான மாமா "ச்சீ..  ஓரம் போ.. நாயே" என்றார்.  "அதன் பெயர் மோதி மாமா" என்றேன்.  "என்ன பெயர் வைத்தாலும் நாய் நாய்தானே?" என்றார்.  மோதி அவருக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று தெரிந்து கொண்டது போலும்.  ஓரமாய் சென்று அவரைப் பார்க்காமல் அமர்ந்து கொண்டது.  அப்புறம் அவர் ஏதாவது வேலையாய் மோதி இருக்கும் பக்கம் வந்தால் மெதுவாய் எழுந்து பதவிசாய் வேறு இடம் சென்று அமர்ந்து கொள்ளும்.

அடுத்தடுத்த முறைகளில் எனக்குத் தெரியாமல் மாமா வரமுடியாமல் போனது.  பின்னால் ரகசியமாக சஸ்பென்சாக அவர் உள்ளே நுழைந்தால் மோதி சட்டென வாலை உள்ளே மடக்கி எழுந்து உள்ளே ரூமுக்குள் இருக்கும் என்னருகே வந்து நின்று விடும்.  சிறு முனகலுடன் ஹால் பக்கம் பார்க்கும்.  முதல் முறை கேள்விக்குறியோடு வெளியே வந்து மாமாவைப் பார்த்ததும் சிரித்து விட்டேன்.  மாமாவை எதிர்க்கக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தது மோதி. 

கிச்சனில் நின்று, அடுப்பில் பால் வைத்திருந்தால், மோதி கிச்சன் வாசல் அருகே வந்து பவ்யமாய் சுவரோரம் மடங்கி உட்கார்ந்தால், மாமா சஸ்பென்ஸாய் உள்ளே வர முயற்சித்தித்திருக்கிறார் என்று தெரிந்து விடும்.  அவருக்கும் சேர்த்து காபி கலந்து கொண்டு போய்க் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்துவேன்.  மோதி எக்காரணம் கொண்டும் கிச்சனுக்குள் வராது.  வீடு முழுக்க வளைய வரும்.  ஆனால் கிச்சனுக்குள் வராது.  இந்த வீடு என்றில்லை, அதற்குப்பின் இரண்டு வீடு மாறினோம்.  புதிய வீடுகளிலும் சொல்லாமலேயே கிச்சன் என்பதை புரிந்து உள்ளே வராது.  தோசை, சப்பாத்தி என்றால் கொள்ளைப் பிரியம்.  சண்டை போட்டு கேட்டு வாங்கும்!

மதிய நேரங்களில் மாமா எங்காவது வெளியே போய்விட்டு வரும்போது மோதி கவனிக்காமல் நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தால் "ஏய் நாயே" என்று ஒரு குரல் கொடுப்பார்.  மெல்ல எழுந்து அலுப்புடன் கீழே சென்று ஓரமாக படுத்துக் கொள்ளும்.  பாவமாக இருக்கும்!  

"உங்க வீட்டுல மனுஷங்களுக்கு நாற்காலி போட மாட்டீங்க போல" என்பார் மாமா.

வாசல் வராண்டாவில் மாலை வேளைகளில் படுத்தபடி புத்தகம் படிப்பேன்.  திரும்பி உள்ளே நிமிர்ந்து பார்த்தால் மோதி நாற்காலியில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்.  "மோதி...  மோதி.." என்று குரல் கொடுப்பேன்.  தலையை நிமிர்த்தி தூக்கம் கலையாமல் அரைக்கண்ணால் என்னைப்பார்க்கும், நான் இருக்கும் இடத்தைப் பார்க்கும், கையிலிருக்கும் புத்தகத்தைப் பார்க்கும்.  எழுந்து, நாற்காலியிலிருந்து இறங்கி வந்து என் தலை மாட்டில் வாகாய் படுத்து தூக்கத்தை கன்டினியூ செய்யும்.  நான் அதன் வயிற்றில் தலை வைத்துப் படுத்து படிப்பதைத் தொடர்வேன்!....   தொடர்வேன்....!!!

=============================================================================================

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

- ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லாமல் தனியார் நிறுவனம் மூலம் ஒட்டுனர் உரிமம் - ஜுன் ஒன்று முதல் புதிய நடைமுறை.

- உத்திரபிரதேசத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில், சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்ய நிச்சயத்திருக்கிறார்கள். அதில் அக்காவின் திருமணம் சிறப்பாக முடிந்து விட்டது. தங்கையின் திருமண சடங்குகள் தொடங்கிய பொழுது, மணமக்கள் ஒருவரை ஒருவர் முதன்முறையாக சந்தித்துக் கொள்ளும் பொழுது, உணர்ச்சிவசப்பட்ட மணமகன் மணமகளை முத்தமிட, அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், பிள்ளை வீட்டுக்காரர்களை ஏச, இரண்டு வீட்டார்களுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் மணமகனின் தந்தை தாக்கப் பட்டிருக்கிறார்.  திருமணமும் நின்றுபோனது.   2024ல் இப்படி ஒரு சம்பவமா?

- ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் கூறியிருக்கிறார். - அதற்குள் பணவீக்கம்  எவ்வளவு உயரும்?

- 44 வயது பெண்ணுக்கு ஆழ் மூளையில் இருந்த கட்டியை புருவத்தில் துளையிட்டு அகற்றி சென்னை அப்போலோ மருத்துவர்கள் சாதனை. உலகிலேயே முதல் முறையாக இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது - பெருமை!

- ராய்ச்சூரின் மண்டல கேரா கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயா என்னும்  விவசாயி ஆன்லைன் மூலம் 1800 கிலோ மாம்பழங்களை விற்றிருக்கிறார். டிப்ளமா  படித்து விட்டு தனியார் துறையில் ஏழு வருடங்கள் பணியாற்றிய இவர் சொந்த ஊருக்குச் சென்று விவசாயியாக மாறினார். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை பயிரிட்டு வந்தவர் இந்த ஆண்டு பல்வேறு வகை மாம்பழங்களை பயிரிட்டு அவைகளை மாம்பழ வளர்ச்சி மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ள 'கர்ச்சிரி மாங்கோஸ்' என்னும் செயலி மூலம் மாம்பழங்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

- நம் நாட்டில் இந்த வருடம் கோடை விடுமுறையில் பயணிப்போர் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிகம் பயணிக்கப்பட்ட மலைவாச ஸ்தலங்கள்:
ஹிமாச்சல பிரதேசம்
காஷ்மீர்
கேரளா
வடகிழக்கு பகுதிகள்

அதிக பயணிகளை ஈர்த்த கடல்சார் பகுதிகள்:
கோவா
வர்க்கலா
புதுச்சேரி
அந்தமான்

- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஆட்களை வைத்து கடன் வசூல் செய்த ICICI வங்கி தலைவருக்கு சம்மன்.

- தேர்தல் காலகட்டத்தில் பிரசாரத்திற்காக அரசியல் தலைவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350 முதல் 400 கோடி வரை சம்பாதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

- பள்ளி மாணவர்கள் தங்களுக்கு நேரப்போகும் ஆபத்தை உணராமல் சோஷியல் மீடியாவில் மூழ்கியிருக்கிறார்கள். பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

=================================================================================================

கிராதகன்.....
==============================================================================================

திரு R கந்தசாமி பகிர்விலிருந்து...   யார் இந்த லதா என்று தெரியவில்லை.  அதை அவர் பதிவில் கேட்கவும் கேட்டிருந்தேன்.  பதில் வரவில்லை.  எனினும் அதை இங்கு பகிர்கிறேன்.

ஆண் எப்படி இருந்தாலும், எப்படி உடை அணிந்தாலும் பெண்ணிற்கு காம உணர்வு தூண்டப்படாது எனவும், அதே பெண் அணியும் உடை குறைந்தால் ஆணின் காம உணர்வுகள் தூண்டப்படும் என்றும் அது இயற்கையே என்றும், பெண் கவர்ச்சியாகவே படைக்கப்பட்டிருப்பதாக ஒருவரும், இன்னொருவர் இப்படிப்பட்ட ஆடைகளை பெண்கள் அணியவேண்டிய அவசியமென்ன எனவும் விவாதம் செய்கிறார்கள்.

சாண்டில்யன் படித்திருக்கிறீர்களா? அவர் தன் ஆண் கதாபாத்திரங்களை வர்ணிப்பதை படித்ததுண்டா? அப்படிப்பட்ட கதாநாயகனை பார்த்து பெண் தன்னை மறந்து லயித்து நின்றதை படித்திருக்கிறீர்களா? 

பெண் என்ன ஜடப்பொருளா? அவளுக்கு ஒரு உணர்வும் கிடையாதா? அழகை ரசிக்கும் தன்மையோ, அந்த அழகை தனதாக்கிக்கொள்ளும் உந்துதலும் வரவே வராதா? ஆமாம் என்று சொல்லும் மனிதர்கள் ஒன்று முட்டாள்கள், இல்லை பயந்தாங்கொள்ளிகள், எங்கு பெண்ணின் உணர்வுகளை மதித்தால் தன்னை மிதித்துவிடுவாள் என பயம் கொண்டவர்கள்.

இல்லை தான் யாரும் ரசிப்பது போல் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். 

எல்லோருக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. இல்லை என சில மனிதர்கள் ஆணோ, பெண்ணோ தனக்கில்லை என வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஒட்டு மொத்தமாக பெண்களுக்கு உணர்வுகள் ஆணின் உடலால், அதன் கவரச்சியால் கிளறப்படாது என அடித்து கூற இவர்கள் என்ன பெண்ணாக பிறந்து, பெண்ணாக வளர்ந்து, இன்று ஆணாக மாறினவர்களா? 

இங்கு பெண்ணிற்கு கிளர்ச்சி வந்தாலும், மனதில் அடக்கி வாழ்வை கடக்க கற்பிக்கப்பட்டிருக்கிறாள். பெரும்பான்மையான ஆண்களும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

நாங்கள் ஆண், எங்களுக்கு மட்டுமே உணர்வுகள் உண்டு, நீங்கள் பெண் நீங்கள் ஜடமாக இருத்தலே இயற்கை என தொண்டை தண்ணீர் வற்ற பேசும் ஆண்களே, அந்த ஜடங்கள் தான் உங்கள் காம உணர்ச்சியை தூண்டுகிறார்கள் என்பது முரணாக இல்லை? 

தாய்மை என வந்தால் மட்டும் அவளை உணர்வுப்பிழம்பாக காட்டுகிறீர்கள்? காமம் என வந்தால் அவள் ஜடம் என்றால்.......(இதை நான் முடிக்கவில்லை.......)

எங்களுக்கும் வரும், அகன்ற தோள்களும், தினவெடுத்த கால்களும், பரந்த நெற்றியும், கூர்மையான கண்களும், என அவரவரின் ரசனைக்கேற்ப ஒரு ஆணை பார்க்கும் வேளை எங்கள் உள்ளத்திலும், உடலிலும் ஒருரசாயன மாற்றம் நிகழும். நாங்கள் அதையும் மனதால் மட்டுமே ரசித்து நாகரீகமாக கடக்கிறோம்....அந்த ஒரு நிமிடத்தையும் மனதால் வாழ்ந்து கடக்கிறோம், கால் தெரிய உடை அணிந்து வந்த ஆணை, மேல் சட்டை அணியாமல் இருக்கும் ஆணை தூற்றாமல் கடக்கிறோம்.

ஓரக்கண்ணால் ரசித்து, தன்னால் அடைய முடியவில்லை என்னும் போது அவள் உடையை தூற்றி, பெண்ணினத்தை பங்கப் படுத்தும் ஆண்களுக்கு சப்பைக்கட்டாக அவளையே சாடி.....நீங்கள் எல்லாம் யார்? 

ஒரு பெண் எப்பபடிப்பட்ட உடை அணிந்திருந்தாலும் அவள் கண்ணை மட்டுமே பார்த்துப்பேசும் ஆண்கள் உள்ளனர். ஒரு பெண்ணால் கவரப்பட்டாலும் அதை அழகாக ரசித்து கடக்கும் ஆண்கள் உள்ளனர்.....அவர்கள் மனிதர்கள்.

உங்கள் ஆணவத்தை ஏற்கும், ஆமோதிக்கும் பெண்கள் உள்ளவரை உங்கள் பிழைப்பிற்கு பங்கம் வராது. வாழ்க!

- லதா

=====================================================================================

இடியின் தாளத்தில்
மழை இசையில்
நனைந்து
தலைதுவட்ட மறந்த
மரங்கள்
துளித் துளியாய்
மண்ணில்
சொட்டவிடுகின்றன
ரசனையின் துளிகளை... அக்டோ 1, 2013

============================================================================================

மறுபடியும் திரு கந்தசாமி R பதிவிலிருந்து சுவாரஸ்யமான ஒரு தொகுப்பு...

இலக்கியப் பிதாமகர், எழுத்து யோகி என்றெல்லாம் போற்றப்படும் லா.ச.ராமாமிர்தம் அவர்களின் ‘சிந்தா நதி’ புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
அதையொட்டி அப்போது 1990-ல் லா.ச.ரா-வின் பேட்டிக் கட்டுரை ஒன்று ஆனந்த விகடன் வார இதழில் வெளியானது.
அந்த பேட்டியை முழுவதுமாகத் தர விருப்பம்தான். ஆனால், என்னிடம் உள்ள பிரதியின் பழைமையால் ஏற்பட்ட தெளிவின்மை காரணமாக அது சாத்தியப்படவில்லை. எனினும், கூடுமானவரை அந்தக் கட்டுரையிலிருந்து பல பகுதிகளை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
தலைப்பு: “வாழ்க்கையே ஒரு பேத்தல்தானே?”
“நான் அவார்டு கிடைக்க வேண்டி வொர்க் பண்ணலை. இருந்தாலும் எந்தவித காம்ப்ரமைஸும் பண்ணாம நான் எழுதினதுக்கு அவார்டு கிடைச்சுதல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார் ‘சிந்தா நதி’ என்ற புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றிருக்கும் லா.ச.ரா. (லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்).
‘சிந்தா நதி’ – லா.ச.ரா-வின் சுய சரிதைப் புத்தகமான இதில் கற்பனை நயங்களுடன் ஏராளமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் அவர்.
மனைவி, நான்கு மகன்கள் மற்றும் ஒரே மகளுடன் சென்னையை அடுத்த அம்பத்தூரில் வசித்து வரும் லா.ச.ரா., “எனக்கு அவார்டு கிடைச்சவுடனே நான் எங்க அப்பா, அம்மாவைத்தான் நினைச்சுண்டேன். இந்த நிமிஷம் அவா என்னோட இருக்கணும்னு சொன்னா, அது துராசை. ரொம்ப தப்பு! எனக்கே வயசாயிடுத்து. ஆனா, இந்த அவார்டு அவாளுக்கு மட்டுமே சொந்தமானது” என்கிறார்.
லா.ச.ரா-வைப் பாதித்த படைப்பாளிகள் யார் யார்?
“டால்ஸ்டாய், ஹெமிங்வே, தாகூர்... இப்படி நிறைய பேரைச் சொல்லலாம். இன்னும் சொன்னா மகாபாரதமும், ராமாயணமும், பைபிளும் என்னை ரொம்ப அதிகமா ஈர்த்திருக்கு. எல்லாருக்கும் மேல என்னைப் பாதித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவரோட எளிமை, எளிதாகச் சொல்லிப் புரியவைத்தல்... அந்த நிலையைத்தான் நான் அடையணும்னு விரும்பறேன்.”
இன்றைய எழுத்தாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் லா.ச.ரா.?
“நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். சொல்லவும் கூடாது. Each writer is a destiny unto himself. நல்ல இலக்கியமா, நச்சு இலக்கியமா என்பதைக் காலம் தீர்மானிக்கும். நாம் யார் தீர்ப்பு வழங்க? ஒரு காலத்துல மட்டமான எழுத்தாளரா பேசப்பட்ட டி.எச்.லாரன்ஸ், இன்னிக்கு மிகப் பெரிய ஞானியா போற்றப்படுகிறார். காலம்தான் எல்லாத்தையும் தீர்மானிக்கும். ஒரு எழுத்தாளன்கிற முறையில நான் கமென்ட் பண்ணவே கூடாது!”
லா.ச.ரா. எழுத்துக்கள் புரியாத தன்மை (Obsecurity) கொண்டவை என்று பேசப்படுவது பற்றி...?
“லா.ச.ரா. புக்ஸ் படிச்சேன். அது புரியலை.’ – இப்படிச் சொல்லிக்கிறது தனி ஃபேஷனா போச்சு. என் எழுத்துக்கள் புரியாதுன்னு இவா புரிஞ்சுண்டுட்டாளாம். நான் உங்களை ஒண்ணு கேக்கறேன்... எழுத்தாளன் மட்டும் எழுதும்போது எல்லாத்தையும் புரிஞ்சுண்டு எழுதறானா என்ன? எழுதணும்னு ஆர்வமும் வேகமும் இருக்கு. இருக்கிறதைக் கொட்டிடறோம். எழுதறவனுக்கே நிறைய விஷயம் புரியறதில்லை. அதே மாதிரிதான் படிக்கிறவனுக்கும்.
இன்னிக்கும் புரியாதது நாளைக்குப் புரியலாம்; நாளைக்குப் புரியாதை நாளை மறுநாள் புரியலாம். என்றைக்காவது ஒரு நாள் கட்டாயம் புரிந்துபோகும். அட, அப்படியே புரியாவிட்டால்தான் என்ன? வாழ்க்கையே ஒரு பேத்தல்தானே?” என்று சொல்லித் தனக்குத் தானே ரசிக்கும் பாவனையில் பலமாகச் சிரிக்கிறார்.
இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?
“நிறையப் படிக்கணும். தமிழ்ல மட்டுமில்லாம, தெரிஞ்ச மொழி எல்லாத்திலேயும் நிறைய புக்ஸ் படிச்ச பிறகு எழுத ஆரம்பிக்கணும். இப்போ வாசகர் கடிதம் எழுதறவன்கூட எழுத்தாளன்னு சொல்லிக்கிறான். அவனுக்குக்கூடக் கடிதத்துக்கு இவ்வளவுன்னு பரிசெல்லாம் தரா. அதனால எழுத்தாளன் ஆகறது இப்போ ரொம்பச் சுலபம்!”
வெகு உற்சாகமாக, நிறைய சமயம் சரளமான ஆங்கிலத்திலும் பேசும் இந்த 73 வயது இளைஞர் சொல்கிறார்... “எழுதும் திறன் என்னிடம் இருக்கும் வரை நான் எழுதிக்கொண்டே இருப்பேன்!”
Saptharishi Lasara
நன்றி: ரவிபிரகாஷ்

===============================================================================

"நம்முடைய மகிழ்ச்சியானது எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும். இன்னொருவர் வந்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யக்கூடாது."

-சைந்தவி

================================================================================

பழைய படங்கள்...


பிரிவினை என்பது வலி மிகுந்தது...

லட்சியத்தில் சிரிப்பு அந்நிய பொருட்களின்மேல் வெறுப்பு!

====================================================================================

பொக்கிஷம்


92 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. ஆரம்பித்ததிலிருந்து படித்துக் கொண்டிருக்கும் போதே சில செய்திகள் என்னுடனே உடன் வந்து கொண்டேயிருந்தன .

  அவ்வாறு வந்ததில் கவிதையின் ரசனையும் கவர்ந்தது. இனி மரங்களின் ஈரம் சொட்டலில் "நீ முதலில் நன்றாக தலை துடைத்தாயா.?" என கேட்பேன்:)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஆரம்பித்ததிலிருந்து படித்துக் கொண்டிருக்கும் போதே சில செய்திகள் என்னுடனே உடன் வந்து கொண்டேயிருந்தன . //

   ஆஹா...  என்ன என்று தெரியவில்லையே...!

   //"நீ முதலில் நன்றாக தலை துடைத்தாயா.?" என கேட்பேன்:) //

   ஆஹா... அன்பு...  அதற்கு தலை துவட்டி விட அதன் அம்மா தென்றல் இருக்கிறதே!

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   வேறு ஒன்றுமில்லை.. இன்றைய கதம்பத்தில் நான் உங்கள் பக்கத்தை படித்து விட்டு மேலும் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தித் தொகுப்புகளை வாசித்துக் கொண்டு வந்த போது மேலும் நீங்கள் தந்த செய்திகள் பலதை காணவில்லை. சில நிமிடங்களில் பிறகு மீண்டும் கைப்பேசியை திறந்து படிக்கும் போது வந்த பல செய்திகளை பிறகுதான் இணைத்தீர்களோ என்று நினைத்தேன்.

   அதில் ஒன்றாக. தங்கள் கவிதையை கண்டேன். கவிதை அருமை. ரசனையானது.
   ஆம்.. மரங்களின் அன்னையாக தென்றல்.. . நல்ல உவமானம். இருப்பினும், நம் தாய் மனது தென்றல் வருவதற்கு சற்று நேரமானால், இப்படி கேட்கத் தோன்றும் என்பது என் எண்ணம். அதனால்தான் அப்படிச் சொன்னேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. //அதற்கு தலை துவட்டி விட அதன் அம்மா தென்றல் இருக்கிறதே!// கண்ணதாசன் நதியில் விளையாடி, கொடியில் தலை சீவும் தென்றல் எங்கிறார், நீங்களானால் தென்றலை தாயக்கி விட்டீர்களே?

   நீக்கு
 3. ஊட்கங்களை நான் எதற்குமே 99% நம்புவதில்லை. அதுவும் இப்ப ஏகப்பட்ட சானல்கள் இஷ்டத்துக்குப் பேசுகிறார்கள், எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நுழைந்து குதறுகிறார்கள் அவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில்... இதில் அவர்கள் இப்படியான செய்திகளை விட்டு வைப்பாங்களா என்ன!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகங்களை ஆட்டுவிப்பவர்கள் இருக்கிறார்களே...  சுயலாபம், வேறு நோக்கம் கொண்டவையாய்த்தானே அவை செயல்படுகின்றன...

   நீக்கு
  2. உண்மை. ஊடகங்களை ஆட்டுவிப்பவர்கள் ஒரு புறம், தாங்களே சானல் நடத்துறவங்க, சில சானல்கள் நிறுவனங்களாக நடத்தறவங்க வியூஸ் வருவதற்காகச் சம்பாத்தியத்துக்காகப் பேசுவது ஒரு புறம்.

   கீதா

   நீக்கு
 4. நாய் போர்ஷனை அப்படியே கருத்து எழுதாமல் தவிர்த்துவிடுகிறேன்.

  மற்ற பகுதிகளை மிகவும் ரசித்தேன். ஶ்ரீராமின் தார்ந்தெடுப்பு ரசனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை. நன்றி. தார்ந்தெடுப்பு? அப்படி என்றால்?

   நீக்கு
 5. ஆண், பெண், ஜடம்.... லதா... இந்தப் பகுதி இங்கு பொருத்தமா இல்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருத்தமா இருக்கணுமா என்ன?  படித்தேன், பகிர்ந்தேன்.  சில சமயங்களில் இவையும் பொருத்தமாக அமைவது தற்செயல்!

   நீக்கு
 6. நம் வீட்டிலும் தேசப்பற்றுதான்...காப்பாற்றப்பட்ட செல்லங்கள்தான். நம்மூர் தான். இப்ப இல்லை இதெல்லாம் முன்னர்.
  மகன் இப்போது அங்கு இரண்டு பூனைகள் ஒரு நாய் வைத்திருக்கிறான். அதிலும் நாய்க்கும், ஒரு பூனைக்கும் (மகள் தத்தெடுத்தது) ஒரு கால் கிடையாது. எல்லாமே rescued.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இங்கு டாட்டா நிறுவனம் செய்யும் செர்வீஸ், இன்ஃபோஸில் CUPA என்பதோடு இணைந்து செய்யும் சேவைகளில் குறிப்பாக டாடா நிறுவனத்தின் சேவை பல தெரு நாய்களுக்கு அவர்களே அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்று அறிந்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவகையில் நாம் அவைகளுக்கு செய்யும் துரோகம் என்றாலும் வேறு வழியில்லை!  நல்ல சேவைதான்.

   நீக்கு
  2. எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு ஸ்ரீராம். ஆனால் காரணம் நீங்க சொன்னதுதான்

   கீதா

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய முதல் பகுதி சுவாரஸ்யமாக இருக்கிறது. கடி ஜோக்கை ரசித்தேன். ஹா ஹா

  எனக்கும், என் இளையமகனுக்கும் செல்லங்கள் வளர்க்க ஆசைதான்.! ஆனால், இந்த கடிகளுக்கு பயந்துதான் ஆசையை துறந்து விட்டோம். "முதலில் வீட்டில் இருக்கும் எங்களைப் பேணி வளருங்கள். அப்புறம் விலங்குகள்.." என வீட்டின் சுற்றங்களின் கண்டிப்பு வேறே..

  உங்கள் மோதிதான் எத்தனை புத்திசாலி..! உங்கள் அம்மாவுக்கு உதவியாக இருந்து கொண்டு, தன்னைப் பிடிக்காதவர்களை கண்டு கொண்டு, என எத்தனை புத்திசாலித்தனம்.? கிச்சனின் பக்கம் கூட வராமல் எத்தனை புலனடக்கம்.? நினைக்க, நினைக்க அதன் குணங்கள் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அதன் குணாதிசயங்களை தொடருங்கள் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோதி உண்மையிலேயே புரிந்து கொண்டு பழகும்தான்.  அதனால்தான் அது கடித்தபோது எனக்கு அதனிடம் வன்மம் வரவில்லை.

   கடிகள் வழக்கமல்ல.   நாம்   ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம்.  ஆனால் அவைகளை வெளியே சூச்சூ அழைத்துச் செல்லுதல், தடுப்பூசி, நகை வெட்டுதல் போன்ற சிசுரூஷைகள் சிரமம்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   அதையும் என் நாத்தனாரின் மகள் கூறினாள். உங்களால், வீட்டு வேலைகளை உதவிக்கென யாரும் இல்லாது பார்த்துக் கொண்டு உங்களால் மேலும் அதைச் செய்யவே முடியாது என்று கூறினாள். அவர்கள் வீட்டில் நாய் செல்லத்தை வளர்த்தார்கள். ஆனால், அவர் கணவர்தான் அதன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

   இரண்டாவதாக அது இயற்கையாகவே பத்து, பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் அதன் வாழ்வு முடிந்து விடும் என்ற செய்தியை தெரிந்து கொண்டதிலிருந்து அதை வளர்க்கும் ஆசையே போய் விட்டது. கஸ்டபட்டு வளர்ப்பது பிரிவதற்கா ? கொடுமைதான்.!! இருந்தாலும், இதனால் நம் மனப்பக்குவங்களும் வளரும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. உண்மை.. அதைப் பிரியும் சோகம் மகா கனமானது.

   நீக்கு
 9. மோதி என்றதும் கீதா சாம்பசிவம் மேடம் நினைவுக்கு வந்தார்.

  Out of sight out of mind என்று நாம் ஆகிவிடுகிறோமோ? வை. கோபாலகிருஷ்ணன் சார், கோவை மருத்துவர கந்தசாமி ஐயா,, தமிழ் இளங்கோ, நம்ம ஜி எம் பி சார்... என பெரிய லிஸ்ட் தோன்றுகிறது... ஏன் நம்ம கரந்தை ஜெயகுமார் சார், எல்லாப் பதிவுகளிலும் தவறாமல் கருத்திடும் திண்டுக்கல் தனபாலன் எனப் பலர் நினைவில் வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் யூடியூபில் பிரபலமாவதற்காகச் சென்ற அதிரடி அதிராவையும், அச்சப்பம் ஏஞ்சலினையும் (அவங்க கேள்வி கேட்டாங்கன்னா பத்துப் பத்து செட்டா கேட்பாங்க) எழுதவில்லை

   நீக்கு
  2. ஆம்.  கீதா அக்கா வீட்டு செல்லத்தின் பெயரும் மோதித்தான்.  அதிரா ஒரு பூனை வளர்க்கிறார்.  அஞ்சு எல்லா உயிரின் மீதும் அன்பானவர்,  கோவை கந்தசாமி சாரும், இளங்கோ சாரும் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

   நீக்கு
  3. எனக்கும் கீதா சாம்பசிவம் அவர்கள் மோதி நினைவுக்கு வந்தது, அடுத்து கீதா ரெங்கனின் கண்மணியும் நினைவுக்கு வந்தது.

   நீக்கு
 10. சுகுமாரின் டி வி எஸ் 50 சத்தம் தூரத்தில் கேட்கும்போதே அத்தனை வண்டிச் சத்தங்களுக்கு நடுவே இது அலெர்ட் ஆகி சிலிர்த்து எழுந்து வாலாட்டியபடி கதவைப் பார்த்து நிற்கும். எங்களுக்கு அவர் வருகிறார் என்பது தெரிந்து விடும். //

  ஆமாம் அவற்றிற்கு அந்த நுண்ணறிவு அதிகம். எனக்குச் செவி கேட்பது அதுவும் பல சத்தங்களுக்கு நடுவில் சத்தம் கேட்பது என்பது ரொம்பக் கஷ்டம் ஆனா செல்லங்கள் இருந்தவரை, யார் வாசலில் வருகிறார்கள் என்பதை வைத்துக் கொடுக்கும் குரலின் வித்தியாசத்தை, உடல் மொழியை வைத்துக் கண்டு பிடித்துவிடலாம். எனக்கு அது மிகவும் உதவியாக இருந்தது, பாதுகாப்பாக இருந்தது.

  அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் தனியாக இருந்த சமயங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு கேட்பதில் குறை இருக்கிறது என்பது கூட அத்வானி அறியுமோ எனும் சந்தேகம் எனக்குண்டு.

   நீக்கு
  2. அவற்றிற்குப் பேகத்தான் முடியலை ஸ்ரீராம். ஆனா எல்லாமே தெரிஞ்சுக்குவாங்க. நம் இயலாமைகள் உட்பட.

   பயிற்சி கொடுத்தால் ரொம்ப நல்லா உதவுவாங்க. பயிற்சி கொடுக்கலைனா அவங்களுக்குத் தெரிந்தாலும் என்ன செய்யணும்னு தெரியாது. ஆனா பயிற்சி கொடுத்து சொல்லிட்டா "டாண்ணு" அவ்வளவுதான்...

   கீதா

   நீக்கு
 11. முந்தைய கருத்தை சொல்லிவிட்டு வந்தால் ஆஹா என் அனுபவம் அம்மாவுக்கும்!!!!!

  //என் அம்மாவுக்கு காது கேட்காது. வீட்டில் அம்மாவை தனியே விட்டு விட்டுச் செல்லும் நேரங்களில் யாராவது வந்து கதவு தட்டினாலோ, காலிங் பெல் அடித்தாலோ அம்மாவுக்கு காது கேட்காது. அம்மா தன் ஹியரிங் எய்டை நம்பியதைவிட மோதியை அதிகம் நம்பினார்.//

  கீதா

  பதிலளிநீக்கு
 12. சைந்தவி..... யாருக்குமே அவர்களின் வாழ்வு நல்லா இருக்கணும் என்ற அக்கறை இல்லை. எப்படி அந்தச் செய்தியை வைத்து ஒப்பேற்றிக் காசு சம்பாதிக்கலாம் என்பதுதான் குறி. அறம் என்பதே கிட்டத்தட்ட காணாமல் போன நிலைமைக்கு வந்துவிட்டது

  பதிலளிநீக்கு
 13. அதன் பின் சொன்ன அனைத்து அனுபவங்களும் இங்கும். அவற்றிற்கு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் சுபாவங்களும் அத்துப்படி! அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.

  சண்டைகள், விவாதங்கள் வந்தால் பஞ்சாயத்தும் நடக்கும். இப்போது நான் அப்பாவை எதற்கேனும் கோபித்துக் கொண்டு திட்டினால் வாசலில் இருக்கும் ப்ரௌனி வந்துவிடும் பஞ்சாயத்து செய்ய ஏன் கோபித்துக் கொள்கிறாய் என்று. அதற்குச் சத்தமாகப் பேசுவதற்கும், திட்டுவதற்கும் வித்தியாசம் தெரிகிறது. டோன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். ஒன்று ஆட்சேபிக்கும், இல்லை எதிர்த்து குரல் கொடுக்கும்!

   நீக்கு
  2. ஆமாம் அதேதான்....ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 14. சிந்தா ந்தி படித்ததில்லை. படிக்கும்படி இருக்குமா?

  பதிலளிநீக்கு
 15. மோதி எக்காரணம் கொண்டும் கிச்சனுக்குள் வராது. //

  ஆமாம் முதலிலேயே நம் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு ஒரு எல்லை வைத்துக் கொண்டுவிடும்.

  கடைசி வரை சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஓ ஓட்டுனர் உரிமத்திலும் தனியார் வந்தாச்சா!!!!

  2024 என்றில்லை வடக்கிலும் தெற்கிலும் சில கிராமங்களில் இதெல்லாம் சகஜம். கர்நாடகாவில் வடக்குப் பகுதியில் சிறு பெண்கள் கல்யாணம் என்பது சகஜம். இப்பவும். எனக்குத் தெரிந்த குடும்பத்திலேயே 12 வயதில் கல்யாணம் இப்ப குழந்தை 13 வயதில்!!! என்ன சொல்வீங்க. இப்ப அடுத்த பெண் வயதுக்கு வந்தாச்சுன்னு அதுக்குப் பார்த்துட்டுருக்காங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் என்றால் வீட்டைப் பார்த்துக்கொள்பவள், ஓசி வேலைக்காரி என்று நினைக்கும் சமூகத்தில்தான் இத்தகைய பழக்கம் இருக்கும். அல்லது வத வதவெனப் பெற்றுவிடுகுற ஏழைகளுக்கு இப்படிப்பட்ட சிந்தனை இருக்கலாம்.

   நீக்கு
  2. ஆமாம் அப்படியான மக்கள் தான். மக்கள் சிந்தனைகளில் முன்னேறலை. படிப்பறிவில் முன்னேறலை. பையனையும் படிக்க வைக்கலை அவன் ஏதோ ஒரு தொழில் சில கெட்ட பழக்கங்கள். பெண்களுக்கு ஒவ்வொருவருக்கா கல்யாணம்...அந்த ஆளு சாதாரண ஆளு குடி...எல்லாம். என்னத்த சொல்ல? இந்த வர்கம் சிந்தனைகளில் முன்னேறாதவரை ரொம்பக் கஷ்டம்.

   கீதா

   நீக்கு
  3. இந்தக் காலத்திலும் இப்படி இருப்பது ஆச்சரியமளிக்கிறது!

   நீக்கு
 17. நம்ம நாடு இன்னும் முன்னேறலைன்னு சொல்றோம் ஆனா மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சி எனலாம். (நியூஸ் ரூம் செய்திக்கு) என்ன ஒரு குறை என்றால் சாமானியனுக்குச் செலவு செய்ய இயலாது!!

  கடைசி செய்தி கண்டிப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும். அரசும் கூட சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம் என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடு முன்னேற்றம் என்பது, ஜனநாயக நாடுகளில் மக்களின் முன்னேற்றம் என்றுதான் எடுத்துக்கொள்ளணும். ஜனங்க முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.

   நீக்கு
  2. கண்டிப்ப நெல்லை....முழுவதும். டிட்டோ.

   ஆனா நான் சொல்ல நினைப்பது வேற...எழுதினா பெரிசா ஆகிடும்.

   கீதா

   நீக்கு
  3. ஏதோ பெரிய விஷயம் பேசறீங்க..  நான் ஜூட்!

   நீக்கு
 18. கீதாக்கா வீட்டிலும் முன்பு இருந்த செல்லத்தின் பெயர் மோதி இல்லையா

  செல்லங்கள் என்றால் எனக்கு நம் நட்புகள் பலரும் நினைவுக்கு வருவாங்க. அவங்க வீட்டிலும் செல்லங்கள் இருந்தன...இருக்கின்றன

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கருத்து போகாம இருந்தது...

   கீதா

   நீக்கு
  2. வெற்றிகரமாய் வெளியாகிவிட்டது!  வெ க்கு வெ!

   நீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 20. இரண்டு முறை (வளர்ப்பு) நாயிடம் கடி வாங்கியுள்ளேன்.

  அச்சோ! அப்போது ஊசி போட்டீர்களா?

  வீட்டில் வளர்க்கும் நாய்களே உரிமையாளர்களை கடித்து வருவது பற்றி திடீரென செய்திகள் அதிகம் வருகின்றன. //

  நேற்று ஒரு செய்தியில் நாய் கடித்தவுடன் அந்த இடத்தை உடனே குழாயை திறந்து விட்டு நீரால் நன்றாக சுத்தம் செய்த பின் மருத்துவரிடம் போய் ஊசி போட வேண்டும். முதல் உதவி முக்கியம் என்கிறார்கள்.

  நாய் வளர்ப்பவர்கள் தங்கள் குழந்தை போலவே அன்பாய் வளர்ப்பார்கள் அதுவும் மிகவும் அன்பாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அச்சோ! அப்போது ஊசி போட்டீர்களா? //

   பின்னே?  தொப்புளை சுற்றி 16....   நாய்க்கல்ல, எனக்கு!

   நீக்கு
 21. அப்போலோ மருத்துவர்கள் சாதனை. உலகிலேயே முதல் முறையாக இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது - பெருமை!//

  மருத்துவர்கள் சாதனை தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 22. தலைதுவட்ட மறந்த
  மரங்கள்
  துளித் துளியாய்
  மண்ணில்
  சொட்டவிடுகின்றன//

  ஆஹா... அன்பு... அதற்கு தலை துவட்டி விட அதன் அம்மா தென்றல் இருக்கிறதே!//
  கவிதையும், தென்றல் அம்மாவின் அன்பும் அருமை.


  தலையை சிலுப்பி

  பதிலளிநீக்கு
 23. நாய்கள் வீட்டில் வளர்த்தது உண்டு. ஒரு பாமெரேனியன்(பெயர் கிட்டு) 11 வருடங்கள் வீட்டில் வளர்த்தோம். ஒரே ஒரு பிரச்சினை. குடும்பத்துடன் வேறு ஊர்களுக்கு விசேஷங்களுக்கு செல்வது உண்டு. அவ்வாறான சமயங்களில் வீட்டில் விட்டுவிட்டு போகவும் முடியாமல் நண்பர்களிடம் விட்டு செல்ல வேண்டி ,இருந்தது. மிக்க சமயங்களிலும் திரும்பி வந்து கூட்டிக்கொண்டு போகும் போது நண்பர்கள் சில புகார்கள் சொல்வார்கள். செருப்பை கடித்து விட்டது. மிதியடியை துண்டு துண்டாக்கி விட்டது போன்றவை. 11 வருடம் சென்றபின் அது இறந்து விட்டது. அதன் பின்னர் வேறு செல்லம் வளர்க்கவில்லை.

  இந்த வார நியூஸ்ரூம் வாசித்தில்லாத செய்திகளை தந்தது. நன்றி.

  கவிதையின் கரு சிறப்பானாலும் சிறிதே மாற்றி எழுதலாம்.

  மழை பாட்டு
  இடித் தாளம்
  நனைந்து ரசித்தன
  மரங்கள்
  ரசித்தலின் தலையாட்டலில்
  மண்ணில் வீழ்ந்தன
  சில ரசனைத்துளிகள்.

  இங்கு (திருவனந்தபுரத்தில்) ரசிக்கமுடியாத 'பெய்யன பெய்யும் மழை'

  பொக்கிஷத்தில் mp ஜோக் அடுத்த வரம் பிரசுரித்திருக்கலாம். லஞ்சம் ஜோக்கும் உடம்பை காட்டும் ஜோக்கும் சிரிப்பை உண்டாக்குகின்றன.

  //"நம்முடைய மகிழ்ச்சியானது எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும். இன்னொருவர் வந்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யக்கூடாது."

  -சைந்தவி​//
  எப்படிங்க பாசை பக்கத்தில் வைத்துக்கொண்டு இந்த பொன்மொழியை எழுத துணிச்சல் வந்தது.
  Jayakumar​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் செல்லம் வளர்த்தீர்கள் என்பது வியப்பு.  ஆம், நம்மைத்தவிர வேறு யார் வீட்டிலாவது விட்டால் அதை ஆட்சேபிக்கும் விதமாக  வைக்கும்!

   மாற்றுக்கவிதை அருமை.  MP ஜோக் அடுத்த வாரம் பொருத்தமாய் இருத்திருக்கலாம்தான்! 

   பொன்மொழிக்கு பாஸ் என்ன சொல்லப்போகிறார்!

   நீக்கு
  2. //இந்த வார நியூஸ்ரூம் வாசித்தில்லாத செய்திகளை தந்தது. நன்றி.// நன்றி

   நீக்கு
 24. இருபாலாருக்குமே ஈர்ப்பு, பரஸ்பர ரசனை என்பதெல்லாம் உண்டு. ஆனால் எல்லாமே ரசனையோடு எல்லைக்குள் இருந்தால் சுகம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லையை யார் தீர்மானிப்பார்கள்? இனிப்பு அளவாச் சாப்பிடணும்பாங்க, ஆனால் அளவு என்றால் என்னன்னு சொல்லமாட்டாங்க

   நீக்கு
  2. அவங்கவங்கதான்!!! நம் உள் மனசு சொல்லும்...அதைக் கேட்கணும்! இனிப்புக்கும் தான். நம்ம ஆரோக்கியத்தை நாமதான் பாத்துக்கணும் மத்தவங்களா பாத்துக்க முடியும்!? ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  3. அளவைத் தாண்டிப் பார்த்தால் என்ன நினைப்பவர்கள் பெருகி விட்டார்கள்!

   நீக்கு
 25. கவிதையை மிகவும் ரசித்தேன், ஸ்ரீராம்.

  அப்படிச் சொட்டுச்சொட்டா விழும் போது அதன் அழகும், விழும் துளிகள் கீழே தேங்கியிருக்கும் நீரில் விழும் போது ஒரு வட்ட அதிர்வலையை எழுப்பும் போது நடுவில் ஒரு குழிழ் எழும்...அதுவும அழகு. அதன் ரிதம் காதுக்கு இனிமை. அதன் ரசனைத் துளிகளின் அலைகள் நமக்கும் பரவும்தான். அதனை உணர்ப்வர்கள் ரசிப்பதுண்டு சிலர் கடந்து செல்வதுண்டு. ஒவ்வொருவரின் ரசனை அது!

  கீழே தண்ணியில் விழுந்தா அது ஒரு ரிதம். மரத்தைச் சுற்றித் தேங்கியிருக்கும் இலைகளின் மீது விழுந்தால் அது வேறு ஒரு ரிதம். ஓட்டின் மீது விழுவது தனி ரிதம். இதை நான் ஒரு முறை மொபைலில் (இந்த ஆண்ட்ராய்ட் வந்த பிறகுதான்...முன்பு பயன்படுத்திய மொபைலில் ரெக்கார்ட் செய்ய முயற்சி செய்தேன்...) என்ன சரியா நான் செய்யலைன்னு தெரியலை ஆனா ரெக்கார்ட் சரியா ஆகலை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையை நுணுக்கமால் ரசித்ததற்கு நன்றி கீதா.

   நீக்கு
 26. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா கருட சேவை தரிசனம் செல்லமுடிந்து நல்லபடியாகத் தரிசனம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

   கீதா

   நீக்கு
 27. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
  தளிர் விளைவாகித்
  தமிழ் நிலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 28. நவநீத சேவை...

  கீழராஜ வீதியில் இருக்கின்றேன்...

  ஓம் நமோ நாராயணாய..

  பதிலளிநீக்கு
 29. லா சா ரா - பேட்டி ரொம்ப ரசித்து வாசித்தேன். ரொம்பப் பிடித்திருந்தது. பக்குவப்பட்ட மனதின் எண்ணங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 30. சைந்தவி - வரிகள் மகிழ்ச்சி என்பது நம் உள்ளத்தில் என்பதின் கொஞ்சம் மாற்றிய வெர்ஷன்.

  மீடியாக்கள் அவரை விடாது சும்மா துரத்தி துரத்தி வேண்டாததைக் குடையும். அதை அவர் உணர்ந்து அந்த விஷயங்களில் இருந்து விலகு இருக்க வேண்டும். அது அவருக்கு நல்லது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலகி சும்மா இருந்தாலும் பயில்வான்கள் விடுவதில்லை!

   நீக்கு
 31. கருப்பு வெள்ளை படங்களில் முதல் படம் உண்மை எதிலுமே பிரிவினை என்பது வேதனைதான்.

  இரண்டாவது இப்போது எங்க சொல்ல முடியும், ஸ்ரீராம்? இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​இப்போ எல்லாம் வெளிநாட்டு பொருட்கள்தான்.

   நீக்கு
 32. பொக்கிஷ ஜோக்குகளில் - முதல், கடைசி, உடம்பு, திருடன் சிரித்துவிட்டேன். கடைசியில், சாச்சுட்டரி வார்னிங்க் போல!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 33. எனக்கு நாய் வளர்த்த அனுபவங்கள் இல்லை.

  திருமணத்துக்கு முன்பு மணமகளுக்கு முத்தம் கொடுத்தது தவறுதான் இந்த சண்டையை பெண் வீட்டார் தவிர்த்து இருக்கலாம்.

  இருப்பினும் அவர்கள் பண்பாடு காண்பவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

  மகனின் தவறுக்கு அப்பாவி(யி)ன் மண்டை பிளப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி. ஆனாலும் இதற்குப் போய் திருமணத்தை நிறுத்தியது கொஞ்சம் ஓவர்!

   நீக்கு
 34. சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு என் அக்கா மகனுடன் காரில் வந்தோம். அவன் வளர்க்கும் நாயும் எங்களோடு வந்தது. நானும் என் சகோதரியும் பின் சீட்டில், சக்தி(நாய்) முன் சீட்டில். அதை மன்னிக்கவும், அவளை எங்களுக்கு முன்பாக முன் சீட்டில் ஏற்றி விட்டான். நான் சாப்பாட்டு ஐட்டம்கள் இருக்கும் பையை சீட்டுக்கு நடுவில் வைத்ததும், அது அந்தப் பையை முகர்ந்து பார்க்க வந்தது. நான் உடனே, "நோ, கோ பேக், ஸ்டே" என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பித்ததும், வள் என்று குலைத்து என்னை பயமுறுத்தியது. என்னுடைய இன்னொரு சகோதரியின் வீட்டில் இருந்த நாய், இப்படிப்பட்ட ஆணைகளுக்கு கட்டுப்படும். அதன் பிறகும் என்னைப் பார்த்து கொஞ்சம் குலைத்தது. நான் ஃபோன் பேசிய பொழுதும் குலைத்தது, ஃபோன் பேசுவது பிடிக்காதாம்.ஆறு மணி நேர பயணத்தில் பழகி விட்டது. அதற்கு கண் அழகு, நான் கண்ணழகி என்பேன்(தி.கீதாவை நினைத்துக்கொண்டு:)))

  பதிலளிநீக்கு
 35. பதிவு பலவிதத்திலும் சிறப்பு...

  காலையில் சென்று சற்று முன் தான் திரும்பினேன்...

  இப்போது தான் ஓய்வு..

  இன்று எடுத்த காட்சிகளை சனிக் கிழமைக்கு ஒழுங்கு செய்து வைக்க வேண்டும்..

  ஏகப்பட்ட படங்கள்..
  கைத்தல பேசி திணறுகின்றது..

  பதிவில் படங்களை ஏற்றி விட்டு பட்டியலிட்டு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்...

  நல்லது.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 36. //“எழுதும் திறன் என்னிடம் இருக்கும் வரை நான் எழுதிக்கொண்டே இருப்பேன்!”// ஜெயகாந்தன் எழுதுவதை குறைத்துக் கொண்ட சமயத்தில் ஒரு விழாவில் ஜெயகாந்தனை சந்தித்த லா.ச.ரா., "ஏன் எழுதுவதில்லை, எழுத வேண்டும். நான் தினமும் நாலு வரியாவது எழுதுவேன், சரஸ்வதி தேவியே தினமும் படிக்கிறாளாம்" என்றாராம்.
  பி.கு. க்ரஸ்டு இதுதான், வார்த்தைகள் மாரியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 37. நியூஸ் ரூம் செய்தி:

  'ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ...... புதிய நடைமுறை'

  எந்த மாநிலத்தில்?..

  பதிலளிநீக்கு
 38. ரவி பிரகாஷ் பற்றியும்
  குறிப்பு கொடுத்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 39. சைந்தவியின் குறிப்பு படித்தவுடனேயே மனம் நினைத்தது:

  'இன்னொருத்தர் மகிழ்ச்சியைக் குலைத்து
  மகிழ்ச்சியடைவோருக்கும் இது பொருந்துமா!' என்று சைந்தவியைக் கேட்க வேண்டுமென்று.

  சைந்தவி! ஒரு நாணயத்திற்கு இரண்டு
  பக்கமாக்கும்!

  பதிலளிநீக்கு
 40. நேற்றே படித்தூவிட்டேன் ஊட்டம் பாடுவதற்கும் வேறு வேலை.

  செல்லங்கள் அவற்றின் அன்பு சொல்லி மாளாது. நாங்களும் ஜேர்மன் சப்பேட் ,பாமரேரியன் இரண்டும் வளர்த்திருந்தோம்.அவற்றை பிரிந்து வர வேண்டிய தேவை வந்தது மிருக வைத்தியரான எமது நண்பர்களிடமே வளர்க்க குடுத்தோம் மிக்க அன்புடன்அவர்களும் நன்றாக வளர்த்தார்கள்.இருந்தும் எமக்கு அவற்றின் பிரிவு மன கஷ்டத்தை தந்தது அதன் பின் செல்வங்கள் வளர்ப்பதை விட்டுவிட்டோம்.

  கவிதை நன்று.
  ஜோக்ஸ் பதினாறு வயதில் மனைவி :(.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!