செவ்வாய், 21 மே, 2024

சிறுகதை : அனுபவம் புதுமை - பானுமதி வெங்கடேஸ்வரன்

 அனுபவம் புதுமை

- பானுமதி வெங்கடேஸ்வரன் -

பத்மா சந்தோஷத்தின் எல்லையில் மிதந்தாள். இதோடு அவள் எழுதிய நாலாவது கதை பிரசுரமாகி விட்டது. 

தன்னால் எழுத முடிகிறது என்பதே ஆச்சர்யமாக இருந்தாலும், அது அங்கீகரிக்கப்பட்டது மகிழ்ச்சியையும்,லேசான கர்வத்தையும் கூட தந்தது.

படிக்கும் காலத்தில் கதை புத்தகம் படிப்பதற்காக திட்டிய அம்மா,அப்பாவிற்கு சிறு கதைகளுக்கு சன்மானம் கிடைக்கும் என்பது ஓரளவு திருப்தி தந்தாலும், "இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போதுதான் பாங்கில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாய், ஒழுங்காக சீ.ஏ.ஐ.ஐ.பி. பாஸ் பண்ணும் வழியைப் பார்" என்றார் அப்பா. அவள் இதை நம்பி எங்கேயாவது வேலையை விட்டு விடப் போகிறாள் என்று பயம்.

சீ.ஏ.ஐ.ஐ.பி. ஒரு புறம் இருக்க, தன்னுடைய அடுத்த கதைக்கான களத்தை தேடத் துவங்கினாள். வீட்டு வேலை செய்யும் பெண்ணின் அனுபவங்களை கதையாக்க முடிவு செய்தாள். அதை வெறும் கற்பனையாக எழுதாமல், தானே ஒரு வீட்டில் ஒரு வாரமாவது வேலை செய்தால் வேலைக்காரியின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று தோன்றியது.

யோசனை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எப்படி செயல்படுத்துவது? நாம் வசிக்கும் இந்த ஏரியாவில் கண்டிப்பாக எந்த வீட்டிலும் வீட்டு வேலைக்கு சேர முடியாது. என்ன செய்யலாம் என்று அவள் யோசித்துக் கொண்டே இருந்தபொழுது அன்றைய லஞ்ச் பிரேக்கில் அவள் தோழி சசிகலா ஒரு வாய்ப்பு தந்தாள்.

 "எங்க மாமியார் வீட்ல வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு உடம்பு சரியில்லாததால் பத்து நாள் வர முடியாது என்று சொல்லி விட்டாளாம். அவங்களே எல்லா வேலையும் தனியா செஞ்சுக்க கஷ்டப்படறாங்க. பத்து நாளைக்கு மட்டும் வீட்டு வேலைக்கு யார் வருவாங்க?" எங்க கூட வந்து இருங்கன்னா, கேட்க மாட்றாங்க. பையனுக்கு எக்ஸாம். என்னாலும் அங்கே போக முடியாது."

மூச்சு விடாமல் சசி புலம்ப, பத்மாவிற்கு சட்டென்று பொறி தட்டியது. தானே சசியின் மாமியார் வீட்டிற்கு வேலைக்காரியாக செல்லலாம் என்று முடிவெடுத்தாள். 

"எனக்குத் தெரிஞ்ச பெண் ஒருத்தி இருக்கா, உங்க மாமியார் வீட்டு அட்ரெஸ் குடு, போய் பார்க்கச் சொல்றேன்.

அவள் கொடுத்த விலாசத்தில் மறுநாள் சென்று பார்த்து வேலைக்கு வருவதாகச் சொன்னாள். 
இப்போதெல்லாம் வீட்டு வேலைக்கு வருபவர்கள் பளிச்சென்று உடையணிந்து வருவதால் அழுக்கு புடவை, கலைந்த தலை என்றெல்லாம் மேக்கப் போட்டுக் கொள்ள தேவையில்லை. பாங்கில்   சீ.ஏ.ஐ.ஐ.பி. தேர்வுக்கு படிக்கப் போவதாக சொல்லி விடுமுறை எடுத்துக் கொண்டாள். 

முதல்நாள் அவர்கள் வீட்டில் பெருக்குவதற்கு தந்த துடைப்பம் மிகவும் தேய்ந்து போயிருந்தது.

"வேற துடைப்பம் இல்லையா?" என்று கேட்டதற்கு "ஏன் இதுக்கு என்ன? ஆடத் தெரியாத நாட்டியக்காரி முற்றம் கோணல்னாளாம்" என்று நொடித்தாள்.

நமக்கு என்ன? என்று எப்படியோ வீட்டைப் பெருக்கி, துடைத்தாள். முக்கால் மணி நேரம் ஓடி விட்டது. அவள் பாத்திரம் தேய்க்க வந்த பொழுது எஜமானி அம்மாள் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் அதிகமாகி விட்டது என்று நினைத்தாளோ என்னவோ.

பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது காபி என்று ஒன்று கலந்து கொடுத்தாள். அவ்வளவு மோசமான காபியை அதுவரை பத்மா குடித்ததில்லை. பாத்திரம் தேய்த்து முடித்தபொழுது இன்னும் இரண்டு பாத்திரங்களை ஒழித்து போட்டாள். பத்மா எதுவும் சொல்லாமல் அவளைப் பார்த்ததும்"இந்த ரெண்டுதானே தேய்ச்சுட்டு போயிடேன்" என்று நைச்சியமாக சிரித்தாள். 

சொன்னதை செய்துவிட்டு, கிளம்பியபொழுது, அப்பாடா! ஒரு நாள் முடிந்து விட்டது" என்று நினைத்துக் கொண்டாள். 

மூன்றாவது நாள் அந்த அம்மாவின் மகள் வந்திருந்தாள். அவள் கலந்து கொடுத்த காபி நன்றாக இருந்தது. "எந்த டிகாஷனில் காபி போட்ட?" தாயார் கேட்ட கேள்விக்கு "ஏன் ஃபில்டரில் இருந்த டிகாஷன்தான்" மகள் சொன்னதும், "பக்கத்தில் டம்ளரில் இருக்கும் டிகாஷனை யூஸ் பண்ணியிருக்கலாமே..?" என்று கேட்டதும், மகள்,"அது பழ.." என்று தொடங்கியவள் தொடராமல் பாதியில் நிறுத்திக் கொண்டதில், "பழசு.." என்று சொல்ல வந்திருக்கலாம் என்பது புரிந்தது. 

வீட்டு வேலை செய்பவர்களுக்கு பழைய டிகாஷனில் காபி தருவதற்காகவே தேவைக்கு அதிகமாக டிகாஷன் போடுவார்களோ? என்று தோன்றியது.

நாலு நாட்களிலேயே கை சொற சொறப்பாக ஆனது. 
ஐந்தாம் நாள், வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, வெளியே பேச்சுக் குரல் கேட்டதும் திடுக்கிட்டாள். ஏனென்றால் அது சசிகலாவின் குரல். அவள் கண்களில் படாமல் நழுவி விட வேண்டும் என்று வேலையை பாதியில் விட்டு விட்டு வாசல் பக்கம் நழுவினாள், ஆனால் அதற்குள் சசி இவளை பார்த்து விட்டாள். அவள் நம்ப முடியாத அதிர்ச்சியில் நின்ற நேரத்தை பயன்படுத்தி, பத்மா விறுவிறுவென்று கீழே இறங்கி, தன் ஸ்கூட்டியை கிளப்பினாள்.

பாதி தூரம் வந்ததும்தான் தன்னுடைய செல்போன் அந்த வீட்டிலேயே விட்டு விட்டது உரைத்தது. வீட்டிற்குச் சென்று, தன் அம்மாவின் செல்ஃபோனிலிருந்து அழைத்தாள்.
 
"என் மருமக வீட்டிற்கு பக்கத்தில்தான் உங்க வீடு இருக்காமே? உன்னை அங்க வந்து வாங்கிக்கங்க சொன்னா" 

பத்மாவுக்கு ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. 

செல்ஃபோனை அவள் கையில் கொடுத்த சசி,"என்ன பைத்தியக்காரத்தனம்? எதுக்கு எங்க மாமியார் வீட்டுக்கு வேலைக்காரியா போன?" 

"ஒரு வேலைக்காரியோட அனுபவங்களைப் பற்றி கதை எழுதணும்னு தோணித்து, அதனால்தான்.."

"ஒரு வீட்டில் வேலை செய்வது ஒரு வேலைக்காரியின் வாழ்வில் ஒரு பகுதிதான். வேலைக்காரியின் வாழ்வைப் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, அவளை கவனி, அவளோடு பேசு, மனதால் உணரணும், அதை விட்டுட்டு, வீட்டு வேலை செய்யப் போறேன்னு ...  எனக்கு நல்லா வாயில வருது.. எல்லாத்தையும் அனுபவித்துதான் எழுதணும்னா?..நல்ல வேளை..." என்று ஏதோ சொல்ல வந்தவள், அதை முடிக்காமல் முன் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.   

பத்மாவுக்கு தன் அசட்டுத்தனம் புரிந்தாலும், அதன் பிறகு அவள் தான் சாப்பிட்ட எச்சில் தட்டை அப்படியே தேய்க்கப் போடுவதில்லை, பாத்திரங்களில் அடி பிடிக்காமல் பார்த்துக் கொண்டாள். முக்கியமாக, தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு நல்ல காபியாக தந்தாள்.

= = = = = = = = =

35 கருத்துகள்:

 1. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்..

  குறள் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

  தளிர் விளைவாகித்
  தமிழ் நிலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. பானுக்கா, வித்தியாசமான கதைக் கருவில் சிறு கதை நல்லாருக்கு. சுருக்கமாக வழக்கம் போல்!.

  //எல்லாத்தையும் அனுபவித்துதான் எழுதணும்னா?//

  ஹாஹாஹாஹா....வாயில் என்ன வந்திருக்கும்னு தெரிகிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. /// முக்கியமாக, தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு நல்ல காபியாக தந்தாள்... ///

  நிறைவான சிறுகதை...

  மகிழ்ச்சி..
  நன்றி..

  பதிலளிநீக்கு
 6. அனுபவம் புதுமை என்பதோடு கதை எழுத இ ந் த பரீட்சார்த்ம் என்றாலும் இது அவ ளுக்கு ஒரு பாடத் தையும் சொல்லிக் கொடுத்திருக்கே கடைசியில் அ ந் த பாரா.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு
  -
  நல்ல காபியாக தந்தாள்...

  வீட்டில் வேலை செய்கின்ற பெண்ணை தங்களுள் ஒருத்தியாக நினைத்து நடத்துகின்ற குடும்பங்கள் ஏராளம்...

  இருப்பினும் இப்படியான நிகழ்வுகளும் வேறு விதமான கொடுமைகளும் இந்த மண்ணில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன..
  .

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. கதை நன்றாக இருக்கிறது. ஏதோ குடும்ப கஷ்டத்தில் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் சாப்பிடும் உணவை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தனி காப்பி, தனி உணவு என்று கொடுக்க கூடாது. நாம் சாப்பிட்ட தட்டுகளை அலசி தான் போட வேண்டும்.
  கதையில் நல்ல கருத்தை நிறைவில் சொன்னது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி. சாப்பிட்டத் தட்டை கழுவாமல் அப்படியே தேய்க்கப் போடுபவர்களை பார்த்தால் கோபமாக வரும். வீட்டில் பலகாரம் செய்த எண்ணெய் சட்டியைத் தேய்க்கப் போடும் பொழுது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் செய்த பலகாரத்தில் கொஞ்சம் தர வேண்டும் என்பார் என் பாட்டி.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரி

  நல்ல கதை. தங்கள் பாணியில், சுருக்கமாக, ஆனால், தெளிவான நிறைய நல்ல கருத்துக்களை தந்திருப்பது சிறப்பாக உள்ளது. நம் வீட்டில் வேலை செய்ய வருபவர்களை வீட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் போலவே நினைக்க வேண்டும் என்ற முடிவும் நன்றாக உள்ளது. நல்லதொரு கதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அனுபவமே அறிவை விரிவுபடுத்துகிறது .

  சிறிய கதையாயினும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 13. கதை யின் கரு நல்ல அம்சம். பெரும்பான்மையான வீடுகளில் நடக்கும் ஒன்று ஆனால் இறுதியில் கதாபாத்திரத்திற்கு அது என்னவிதமான அனுபவத்தைக் கொடுக்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

  எவ்வளவுான் கேட்டு உணர்ந் து எழுதினாலும் அனுபவித்ததை எழுதும் போது எழுதுவோர்க்கு கொஞ்ம் எளிதாகவும் இனிதாகவும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இரு ந் தாலும் கதையில் சொல்ல்படுவது போல் எல்லாம் அனுபவித்துதான் எழுதுவேன் என்று எழுத முடியாதுதான். இறுதியில் நல்ல மாற்றங் கள், அ ந் தக் கதாபாத்திரம் கேட்டு எழுதினால் உறுதியாக வருவது கடினம் தானே இல்லையா.

  க தை மிக நன்று வாழ்த்துகள் பாராட்டுகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 14. கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி துளசிதரன். கதாசிரியர்களுக்கு empathy இருந்தால் போதாதா?எல்லாவற்றையும் அனுபவித்துதான் எழுத வேண்டும் என்றால் சரித்திர கதைகளும், விஞ்ஞான கதைகளும் எழுத முடியுமா?

  பதிலளிநீக்கு
 15. கதையை அழகான படத்தோடு வெளியிட்ட எ.பி.க்கு நன்றி. காலையில் பயணத்தில் இருந்ததால் உடனே பதில் போட முடியவில்லை. ஜீ.வி. போன்ற அனுபவஸ்தர்கள் கருத்தும், ஆலோசனையும் கூறியிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தை வரைந்தவர் தன் பெயரை எழுதியிருக்கிறாரே பார்க்கவில்லையா!

   நீக்கு
  2. அழகான படம் என்றாலே வரைந்தது கே.ஜி.ஜி. சார்தான் என்பது பொருள் இல்லையா?

   நீக்கு
 16. நல்ல கதை முடிவு. அவர்களையும் மனிதர்களாக மதித்து நடத்துவதுதான் நமக்கும் நன்று.

  பதிலளிநீக்கு
 17. சில வீடுகளில் வாழ வந்த மருமகளுக்கே பழைய டிகாக்ஷன், பழைய பால், அல்லது புதுப்பாலில் ஜலம் விட்டுக் காஃபி கொடுக்கும்/கொடுத்த./கொடுக்கப் போகும் மாமியார்கள் உண்டு. எங்க வீட்டில் காஃபி கலக்கும்போதே எல்லோருக்கும் சேர்த்தே கலப்பேன். சர்க்கரை மட்டும் தனித்தனியாக.

  பதிலளிநீக்கு
 18. நான் பொதுவாகவே சாப்பிட்ட தட்டை எல்லாம் வேலை செய்பவரிடம் போடுவதில்லை, இதனால் வீட்டில் பிரளயங்களே வரும்/வந்தன/இனியும் வரலாம். ஆனால் போட மனசு வராது.. கையோடு அலம்பித்தேய்த்து வைச்சுடுவேன்.

  பதிலளிநீக்கு
 19. படம் நன்றாக இருக்கிறது திரு கேஜிஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் கீதா அக்காவுக்கு நல் வரவு!
   //படம் நன்றாக இருக்கிறது திரு கேஜிஜி.// கதை??

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!