செவ்வாய், 7 மே, 2024

சிறுகதை : காசு காசு - துரை செல்வராஜூ

 காசு காசு

துரை செல்வராஜூ

*** *** ***
மன்னர்களின் பொற்கால ஆட்சியில் சிறப்பு பெற்றிருந்த பாரம்பரிய நகரம்... 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலான பெரும் சிறப்பினை உடையது..

காலைப் பொழுது.. 

அருகில் பல வகையான உணவகங்கள் இருந்தாலும் இது பெயர் பெற்று விளங்குகின்றது  - நகரைப் போலவே..

பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்தது அந்த உணவகம்..  உண்மையில் இது நூறாண்டுகளுக்கு முந்தைய ராஜ மாளிகை .. 
சுற்றுலா பயணிகளுக்கு என்று உணவகமாகி - விட்டது 

பள்ளி நாட்களில் இந்த ஊருக்கு அரண்மனை பார்க்க வரும் போதெல்லாம் ரகு நினைத்துக் கொள்வான்.. 

' பெரியவனாகி வேலைக்குப் போனதும் இந்த ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவேன்.. '

கனவு நிறைவேறி ரகுவும் எத்தனையோ முறை இந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டான்..

அதே உணவகம் தான் இன்று காலங்களால் மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கின்றது..

மிதமான குளிருடன் இருந்தது அந்த அறை.. உட்புறத்தில் விஸ்தாரமான கூடம்.. 

பத்தடி உயரத்திற்கு வழவழப்பான தேக்குத் தூண்களின் உச்சியில் கவிழ்ந்த நிலையில் கமலப் பூக்கள்.. தூண்களின் மீது உத்தரங்கள்.. உள் வீடு.. சுற்றி வர மேல் மாடம்..  பழைய காலத்து முற்றம் தான் நவீனமாகி இருக்கின்றது..  

உயர்தரமான மின் விசிறிகள் ஓசையின்றிச் சுழல - பணியாளர்கள் சீருடையில் சற்றே சத்தத்துடன் சுழன்று கொண்டிருந்தனர்..

இட்லி தோசைகள் சாம்பார் மற்றும் நாலு வகை சட்னியுடன்.. இடியாப்பம்  தேங்காய்ப் பால்  நாட்டுச் சர்க்கரையுடன்..   ஆகையால், வெளியூர் கூட்டத்திற்கு சொல்ல வேண்டியதில்லை.. 

அதெப்படி வெளியூர் கூட்டம் என்று தெரியும்?.. - என்றால் உள்ளூர்வாசிகள் இடியாப்பம் தேங்காய்ப் பாலைப் பார்த்து இத்தனை வியப்பும் மகிழ்ச்சியும் அடைய மாட்டார்கள்.. அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.. சர்வ சாதாரணம்..

அது தான் பொதுவான உணவுக் கூடம்..  அங்கே இடமில்லை என்பதால் 
இங்கே குளிர் அறைக்குள் அமர்த்தியிருக்கின்றனர்.. சாப்பிட்டு முடித்ததும் தான் தெரியும் - பட்டியல் தொகை எவ்வளவு தாளிக்கப் போகின்றார்கள் என்று..

ஆனாலும் அதுபற்றி கவலை ஏதுமில்லை.. இட்லி சாம்பார் சுருள் நெய்த்தோசை பனீர் மசாலா, சப்பாத்தி கடப்பா என்று வெளுத்துக் கட்டியவர்களின் கையில் காஃபி.. அதன் நறுமணம் இந்த மேசையைக் கடந்து சென்றது..

இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் சாப்பிட்ட வயிற்றுக்கு காபி எதற்கு என்று எழுந்த ரகு கை கழுவி வந்தான்.. 

மேசையில் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் சேவைக் கட்டணத்துடன் சீட்டு தயாராக இருந்தது.. நாலு இடியாப்பம் இரண்டு இட்லிகளுக்கு இது அதிகம் என்று தோன்றினாலும் தேங்காய்ப் பாலும் இயற்கை சர்க்கரையும் அடடா.. நியாயமாகவே தோன்றியது..

அதனோடு கூடவே -  இந்த உணவகத்துக்கு வந்ததற்கும் குளிர் வசதிக்குள் உட்கார்ந்து தின்றதற்கும்  தண்ணீர் குடித்ததற்கும் -  என்று தீட்டியிருந்தார்கள்...

எளிய குடும்பத்தில் மாடு கன்றுகளுடன்  பிறந்து இன்று ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன் அடுக்கு மாடித் தொகுப்பில் குடியிருக்கும் ரகுவிற்கு இதொன்றும் பெரிதாகத் தோன்றவில்லை..

இந்தக் காலத்திலும் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த ஒருவர் புன்னகையுடன் பணத்தை வாங்கிக் கொண்டார்.. 

முன் மேஜையில் சந்தனப் பிள்ளையார்.. அருகில் பாரம்பரியமான தாம்பூல மடிப்புகள்..

பக்கத்தில் கண்ணாடிப் பேழைக்குள் தங்க மயமான  திருமகள் சித்திரம்.. அருகிலேயே  ததும்பும் இளமையுடன் தலையாட்டிச் சிரிக்கின்ற சிங்காரம்..

ஒன்னரையடியில் ஒருசிறு வீணை என்றும் மினுமினுக்கும் முத்துச் சிவிகை என்றும் பதுமைகள் விற்பனைக்கு இருந்தன..

மெல்ல நகர்ந்து வெளியே வந்த ரகுவின் முகத்தில் அனல் காற்று மோதிற்று..

" ஐயா!.. "

கையில் குழந்தையுடன் இளம் பெண் ஒருத்தி.. கண்களில் பரிதவிப்பு.. இப்படியெல்லாம் கண்ணில் தென்படுகின்ற போது குழம்பி விடுவான் ரகு..

' என்னடா இது.. ' மனதிற்குள் சலித்துக் கொண்டாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது..

இங்கேயே வாங்கிடலாம் என்ற நினைப்பு வந்தது..

' இங்கேயா.. வரிக்கு வரி ன்னு  வசூல்  பண்ணுவாங்களே..  '

நான்கு கடைகளுக்கு அந்தப் பக்கமாக வண்டியில் வைத்து இட்லி விற்பனை.. அருகில் சென்றான்.. 

" டே... அந்த ஸ்டூலை எடுத்துப் போட்றா.. "

" வாங்கிட்டுப் போகலாம் ன்னு.. "

" சரி.. ஒரு செட் கட்டிடவா.. "

" ம்.."

விறுவிறு என்று வேலையாகி - சில நிமிடங்களில் சாம்பார் சட்னி பொட்டலங்களுடன் இட்லி பை கைக்கு வந்தது..

"அஞ்சு இட்லியும் ஒரு வடையும் இருக்குங்க.. முப்பது ரூபாய்.. "

வாங்கிக் கொண்டு வந்தால் இங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை..

அங்குமிங்கும் விழிகளால் தேடினான்.. அகப்படவில்லை..


செய்தித் தாளுடன்   ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்தவரிடம் ஆதங்கத்துடன் விசாரித்தான்..

" இப்போ தானே சிவனடியார் அன்னதான ஆட்டோ வந்துட்டுப் போகுது.. அந்தப் பொண்ணு கையில ரெண்டு பை கொடுத்தாங்க.. எங்கேயாவது உட்கார்ந்து சாப்பிடுவா.. தேடிப் பாருங்க.. "

தகவல் சொல்லி விட்டு மீண்டும் செய்தித் தாளுக்குள் புகுந்து கொண்டார்..

எதிரில் பேருந்து நிலையத்தில் இருந்து  கும்பகோணம் சீர்காழி - என்று சத்தம்..

 ' சரி.. நேரமாகின்றது.. எதிரில் யாரிடமாவது கொடுத்து   விடலாம்.. '

நினைத்த மாதிரியே எதிரில் ஒருவர்..

" ஐயா.. சாப்டறீங்களா.. "

" நான் சாப்பிட்டுட்டேன்.. ராஜா.. பஸ்டாண்டு புள்ளையார் கோயில் ல ஆள் இருக்காங்க.. கேட்டுப் பாருங்க.. "

பஸ்டாண்டுக்குள் விரைந்து நடக்க - அங்கே கோயில் வாசலில்  இரண்டு பேர்..

கையில் இருந்த பையை நீட்டினான்..

" ... எல்லாரும் இப்படியே கொடுத்தா நாங்க என்ன தான்  செய்றது?.. சட்னி சாம்பார் ஊசிப் போயிருக்கும்.. அதுவேற பிரச்னை.. "

திக் என்றிருந்தது ரகுவிற்கு..

" படிச்சவங்களா இருக்கீங்க.. வெவரம் பத்தலையே.. காசு தர்மம் பண்ணுங்க காசு... "

எகத்தாளம் இருவரிடமும்..

காசு.. காசு.. காசு..
காசு.. காசு.. காசு.. 

எங்கும் இதுதானா..

' இனி யாரிடம் கொடுப்பது?..  இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.. தூக்கிப் போடவும்  வேண்டாம்.. '

யோசித்தான் ரகு.. பழைய சோற்றுக்குக் கஷ்டப்பட்ட காலம் நினைவுக்கு வந்தது..

பிள்ளையார் கோயில் வாசலில் பயணியருக்கான இருக்கைகள் இருந்தன.. சென்று அமர்ந்தான்..  

பொட்டலத்தைப் பிரித்தான்.. சாம்பார் சட்னியை ஊற்றிக் கொண்டான்..

எங்கிருந்தோ நாய் ஒன்று ஓடி வந்தது.. அருகில் நின்று நிமிர்ந்து பார்த்தது..  இட்லிகளை இலையோடு அதனிடம் வைத்தான்.. 


ஆவலுடன் தின்று முடித்து விட்டு நன்றியுடன் வாலை ஆட்டியது.. அங்கேயே படுத்துக் கொண்டது.

ரகு குனிந்து இலையைச் சுருட்டி எடுத்து  அங்கிருந்த குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு நடந்தான்..   

கோயில் பிச்சை கடுப்பாகி கைத்தடியால் தரையைத் தட்டியது.. படுத்துக் கிடந்த நாய் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒருபக்கமாக ஓடித் தப்பியது..

எதிரில் கும்பகோணத்திற்கான பேருந்து வந்து நின்றது..

ஃஃஃ

= = = = = = = = = = = = = =
எ பி ஆசிரியர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்வது: 

இன்றைய பதிவு எங்களுடைய 5000 ஆவது பதிவு. 


தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும், நம் நண்பர்களுக்கும், எங்கள் நெஞ்சார்ந்த நன்றி! 
= = = = = = =

91 கருத்துகள்:

  1. 5000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    5000/360--13.888888 என்று கணக்கு சொல்கிறது. சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் சில வருடங்கள் 360 க்கும் குறைவான பதிவுகள் மட்டுமே.

      நீக்கு
  2. சென்ற வாரம்தான் பேருந்து நிலையத்துக்கு எதிரிலுள்ள சானத்தில் தங்கினேன். இவர் எந்த உணவகத்தைச் சொல்லறார்னு தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானம்!...

      நான் நினைப்பது சரியா?..

      இங்கே சொல்லப்படுவது வேறு உணவகம்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இரப்பவர்களில் அனேகர் உணவை விரும்புவதில்லையே... காரணம் என்னவாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சம்பந்தமான என் மயிலை அனுபவத்தை முன்னர் நானும் எழுதி இருந்தேன்.  சமீபத்தில் தி நகரிலும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.  எழுத நினைத்தும் பெரிய விஷயமாக வராததால் விட்டு விட்டேன்!

      நீக்கு
  4. இயல்பான கதை.. இன்றைய நிலையைச் சொன்னது.

    தான் சாப்பிட்ட இடத்திலிருந்து அல்லவா தானம் செய்திருக்கணும்? இலவசமாக்க் கிடைக்கும் உணவிற்கு இத்தனை விமர்சனமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'உணவிற்கு' என்று வராது என்று நினைக்கிறேன்.  'உணவுக்கு' ன்பதே சரி என்று தோன்றுகிறது.

      நீக்கு
  5. 5000 பதிவிற்கு வாழ்த்துகள். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுத் தவமல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவம் என்பது பெரிய வார்த்தை.  பொருத்தமும் இல்லை.  வேறு சரியான வார்த்தையைத் தேடுகிறேன்!

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. இன்று யான் எழுதிய கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  9. சில்லறைகளைச் சிதற விட்டிருக்கும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வழியில் ஐந்தாயிரம்..
    அடுத்தொரு தவமாய் நூறாயிரம்..


    அமுதத் தமிழில் சொல்லாயிரம்..
    அவளே தருவாள்
    பல்லாயிரம்!..

    அன்பின் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  12. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  13. முதல் பதிவின் சிறப்பு பற்றி ஒரு விரிவான கட்டுரை விரைவில எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. @அன்பின் நெல்லை..

    /// தான் சாப்பிட்ட இடத்திலிருந்து அல்லவா தானம் செய்திருக்கணும்?.. ///

    இந்த நுணுக்கம் நுண்ணோக்கம்,
    இலக்கணம் இலக்கியம் -

    இதெல்லாம் நம்ம கதாநாயகனுக்குத் தெரியாதுங்க.. நெல்லை!..

    எனக்கும் தெரியாது..

    எனக்குத் தெரிந்தால் தெரிந்தால் அல்லவோ அவனுக்குத் தெரிந்திருக்கும்!?..

    இருப்பினும் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. இன்றைய பதிவு எங்களுடைய 5000 ஆவது பதிவு. //


    5000 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
    மேலும், மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. @ அன்பின் நெல்லை..

    ///இரப்பவர்களில் அனேகர் உணவை விரும்புவதில்லையே...///

    இதுதான் இன்றைய தொழில் நுட்பம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  18. @ அன்பின் நெல்லை..

    ///இரப்பவர்களில் அனேகர் உணவை விரும்புவதில்லையே...///

    இதுதான் இன்றைய தொழில் நுட்பம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  19. நான் அளித்த சில கருத்துகள் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கின்றன..

    கௌதம் ஜி கவனிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  20. ஐந்தாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள்!..

    அணுவளவாக எனது பங்களிப்பும்.. ஆச்சரியம்..

    வாழ்க நலமுடன்!..
    மேலும், பல பதிவுகளில் நமது நட்பு தொடர்ந்திட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வு அருமையாக உள்ளது. பணம் ஒன்றைத்தான் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என எல்லோருமே விரும்புகிறார்கள் என்பதை கதை தெளிவாக்குகிறது.

    தருமமாக ஏதாவது செய்ய வேண்டுமென கதாநாயகன் நினைத்தது நல்ல செயல். அதற்குள் அதற்கும் போட்டிகள் உருவாகி விட, பின்னர் எகத்தாளமான பேச்சுக்களை சகிக்க இயலாமல், தான் வாங்கியதை வம்பாக்க மனமும் இல்லாமல், தான் வாழ்ந்து வந்த பழைய கால வாழ்வை நினைத்துப் பார்க்கும் இடம் மனம் நெகிழ்கிறது.

    இறுதியில் நன்றி உள்ள ஜீவனுக்கு அது போய் சேர்ந்தவுடன் கதை நாயகனுக்கு மட்டுமின்றி, நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி. (ஏனெனில் நாமும் சில விஷயங்களில் நம் வாழ்வின் இந்தப் பழையதைச் சொல்லி, நம் குடும்பத்தின் உறவுகளுக்கு எதிராகிறோம். :)) )

    நல்ல கதை. நல்ல முடிவு. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    கதைக்குப் பொருத்தமாக காசுக்கள் படத்தை தேர்ந்தெடுத்து, அதில் கதைக்கு இயல்பான முகம் பதித்து ஓவியமாக்கிய கௌதமன் சகோதரருக்கும் மனமுவந்த பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய விஷயங்களைச் சொல்லி, எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதை வலியுறுத்தினால், வீட்டில் உள்ளவர்களுக்கு நாம் எதிரியாகிவிட வேண்டியதுதான். காசு செலவழிக்கும்போது இன்னும் கவனமாக இருக்கவேண்டும், சிக்கனமாக இருப்பதுதான் வாழ்க்கைக்கு நல்லது என்றால் யார்தான் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்?

      நீக்கு
    2. .// சிக்கனமாக இருப்பதுதான் வாழ்க்கைக்கு நல்லது என்றால் யார்தான் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்?.. //

      அதானே..
      யார் கேட்கிறார்கள்??...

      நீக்கு
    3. @ கமலா ஹரிஹரன்..

      /// நன்றி உள்ள ஜீவனுக்கு அது போய் சேர்ந்தவுடன் கதை நாயகனுக்கு மட்டுமின்றி, நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி.. ///

      தங்களது அன்பான கருத்திற்கு வணக்கம்..

      மிக்க மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    4. கமலா அக்கா... 'காசுக்கள்' என்று வராது!  காசுகள் என்பதே ஓரளவு சரி..  சொல்லப்போனால் காசு மட்டுமே போதும்! :))

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    எ. பியின் பெரும் சாதனையாக இன்று 5000 பதிவுகளை எ. பி எட்டியிருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல்லாயிரம் பதிவுகளை சந்தித்து, ஒரு கூட்டு குடும்பமாக எ. பி வாழ்ந்து மென்மேலும் சிறக்க வேண்டுமென இறைவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மேலும் பல்லாயிரம் பதிவுகளை சந்தித்து, ஒரு கூட்டு குடும்பமாக எ. பி வாழ்ந்து மென்மேலும் சிறக்க வேண்டுமென,,///

      ஆகா..
      அருமை..

      நீக்கு
    2. // எ. பியின் பெரும் சாதனையாக இன்று 5000 பதிவுகளை எ. பி எட்டியிருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல்லாயிரம் பதிவுகளை சந்தித்து, ஒரு கூட்டு குடும்பமாக எ. பி வாழ்ந்து மென்மேலும் சிறக்க வேண்டுமென இறைவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். //

      நன்றி... நன்றி.

      நீக்கு
  23. கதை நன்றாக இருக்கிறது.

    //கையில் குழந்தையுடன் இளம் பெண் ஒருத்தி.. கண்களில் பரிதவிப்பு.. இப்படியெல்லாம் கண்ணில் தென்படுகின்ற போது குழம்பி விடுவான் ரகு..//

    ஓட்டலில் நாம் சாப்பிட்டு வெளியே வரும் போது யாராவது கையேந்தினால் கஷ்டமாகதான் இருக்கும்.

    //" படிச்சவங்களா இருக்கீங்க.. வெவரம் பத்தலையே.. காசு தர்மம் பண்ணுங்க காசு... "

    எகத்தாளம் இருவரிடமும்..//

    சாப்பாடு ஒன்றுதான் போதும் என்று சொல்லமுடியும் எல்லோரும் சாப்பாடு கொடுத்து வயிறு நிறைந்து விட்டது போலூம் யாசிப்பவருக்கு. இதர செலவுகளுக்கு காசு தேவைபடுகிறதே!
    இருந்தாலும் யாசிப்பவர் இந்த அளவு பேசி இருக்க கூடாது.
    இப்படியும் சிலர் பேசுவது வருத்தமான விஷயம்.
    பாவம் நாய் அதை வேறு விரட்டி அடிக்கிறார்.
    இப்படியும் சில மனிதர்கள்.







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஓட்டலில் நாம் சாப்பிட்டு வெளியே வரும் போது யாராவது கையேந்தினால் கஷ்டமாகதான் இருக்கும்.//.

      நெகிழ்ச்சியான கருத்து..

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  24. சாரின் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. தஞ்சை பெரிய கோயில் அருகில் துறையூர் ஓங்காரக் குடில் அமைப்பினர் நிதமும் காலையில் இட்லி பொங்கல் என வழங்கி வருகின்றனர்.. மதியத்தில் தஞ்சை அகத்தீசர் மன்றத்தின் அன்னதானம்..

    தினம் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்கின்ற இடத்திலும் இரவு வரை நித்ய பிச்சைகளின் வசூல் வேட்டை..

    வழக்கம் போல மனம் இரங்கினாலும் என்னைப் போன்றோர் என்ன செய்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தஞ்சை பெரிய கோயில் அருகில் துறையூர் ஓங்காரக் குடில் அமைப்பினர் நிதமும் காலையில் இட்லி பொங்கல் என வழங்கி வருகின்றனர்.. மதியத்தில் தஞ்சை அகத்தீசர் மன்றத்தின் அன்னதானம்.. //

      புதிய தகவல்.  எனினும் மனதுக்குள் ஒரு எண்ண ஓட்டம்..  மக்களை சோம்பேறியாக்குகிறார்களோ...   இலவசங்களுக்கு பழக்குகிறார்களோ....

      நீக்கு
    2. இது பல காலமாக நடந்து வருகிறது..

      காலையில் பார்க்க வேண்டுமே!...

      நீக்கு
  26. எபி க்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் மேலும் பெருகிட வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இன்று வருடத்தின் முதல்
    அமாவாசை..

    திருவையாற்றில் தண்ணீர் இல்லை.. ஓரளவுக்குக் கூட்டம்..

    யாசகர்களும் சரிக்கு சரியாக இருக்கின்றனர்.. காய்கறிப் பை ஒன்றுக்கு நூறு ரூபாய்..

    நித்ய பிச்சை அல்லாத சிலரும் யாசகத்தில்.. அவர்களும் காய்கறிப் பையை மதிப்பதில்லை.. இட்லி மற்ற உணவுகளை வாங்கிக் கொள்வதில்லை..

    இன்றைக்கு திருவையாறு செல்லவில்லை..

    தை அமாவாசையின் போது அருகிலுள்ள கண்டியூரில் யாசகி ஒருவரை சாப்பிட அழைத்த போது கடுப்புடன் மறுத்தது வேதனை..

    பதிலளிநீக்கு
  28. கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையிலும் இப்படித்தான்...

    புரோகிதர்களின் கையாள் ஆன பிச்சை ஒன்று எனக்கு சாபம் இட்டது போல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  29. ஐந்து ரூபாய் கொடுத்தால் கண்டிப்பாக அவமரியாதை தான்..

    இருபதும் ஐம்பதும் கொடுக்க பொருளாதாரம் இல்லையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பினால் உதவலாம் என்கிற நிலை போய் எல்லாவற்றுக்கும் ஒரு விலை வந்து விட்டது. கலிகாலம்.

      நீக்கு
  30. கதை நன்றாக இருக்கிறது துரை அண்ணா. இயல்பான பலருக்கும் மனதில் தோன்றும் ஒரு விஷயம் கதையாகியிருக்கிறது.

    சாப்பிட்ட உணவகத்திலேயே வாங்கிக் கொடுத்திருக்கலாமோ? பரவாயில்லை. எப்படியும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் ஆகச் சிறந்தது.

    ஆனால் நாம் உணவு கொடுத்தால் வாங்குவதை விட பைசாதான் கேட்கிறார்கள். ஒரு வேளை நாம் வாங்கிக் கொடுக்கும் உணவை விட அவர்களாகவே விரும்பியதை வாங்கிச் சாப்பிடுவதற்காக இருக்குமோ?

    இல்லை சாப்பாடு என்றால் அவர்கள் மட்டும்தானே....பைசா என்றால் கூட இருக்கும் குடும்பத்திற்கும் உதவுமே என்பதாலோ? இப்ப எல்லாம் யாசித்துக் குடும்பம் நடத்தும் குழுக்களையும் பார்க்க முடிகிறது.

    நாம் சாப்பிட்டு விட்டு வரும் போது அல்லது கல்யாண வீடுகளில் சாப்பிட்டுவிட்டு வரும் போது வெளியில் யாரேனும் யாசித்தால் மனம் மிகவும் நொந்து போய்விடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நாம் சாப்பிட்டு விட்டு வரும் போது அல்லது கல்யாண வீடுகளில் சாப்பிட்டுவிட்டு வரும் போது வெளியில் யாரேனும் யாசித்தால் மனம் மிகவும் நொந்து போய்விடும்...///

      உண்மை தான்..

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  31. நட்பு ஒருவர் தன் பெண்ணின் கல்யாணத்தின் போது இப்படி மண்டபத்தின் அருகில் யாசிப்பவர்களை - சும்மா யாசிப்பவர்கள் இல்லை. நிஜமாகவே ஏழ்மையில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் = எல்லாம் நன்றாகக் குளித்து வரச் சொல்லி, நல்ல உடை வாங்கிக் கொடுத்து மண்டபத்தில் அவர்களனைவரையும் ஒரு வரிசையில் அமர்த்தி சாப்பாடு கொடுத்தார். என் மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. எவ்வளவு பெரிய மனம்! அவர் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. கல்யாணம் நடந்த 3 நாளும் சாப்பாடு.
    அது தவிர இல்லங்களுக்கும் சாப்பாடு சென்றது. இத்தனைக்கும் அவர் அம்பானி, டாடா போன்ற செல்வந்தரும் கிடையாது. நம்மைப் போன்றோர்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// யாசகர் அனைவரையும் ஒரு வரிசையில் அமர்த்தி சாப்பாடு கொடுத்தார். என் மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது...///

      சிறப்பான நிகழ்வு..

      நீக்கு
  32. கௌ அண்ணா படம் பார்த்ததும்

    "காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது......வாசக்கதவை ராச லட்சுமி தட்டுகிற நேரமிது -.......இதன் தொடர்ச்சியாக எழுதியிருந்ததை இப்ப இங்க தரலை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. நன்றியுள்ள ஜீவனுக்கு உணவு கிடைத்தது மகிழ்ச்சி.

    ஐயாயிரமாவது பதிவுகளுக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  34. பதிவுகள் 5000. வாழ்த்துக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  35. //பஸ் ஸடாண்டுக்குள் விரைந்து நடக்க அங்கே கோயில் வாசலில் இரண்டு பேர்//

    -- இங்கு தான் கதை உருக்கொள்கிறது.

    மெல்ல முடிவிற்கான சீற்றத்திற்காக நகர்கிறது.
    அந்த நகரல் தீர்மானிக்கப் பட்ட ஒன்றாகத் தெரிகிறது.

    //பொட்டலத்த்தைப் பிரித்தான். சாம்பார் சட்னியை ஊற்றிக் கொண்டான்.//

    தீர்மானம் தீர்க்கமான செயல்பாட்டிற்குத் தயாராகி விட்டது.

    //இட்லியை இலைகளோடு அதன் (அந்த ஜீவன்) முன் வைத்தான்.//

    ஒப்வொரு வார்த்தையும் முக்கியம்.

    தீர்மானம் நிறைவேறியதில் மனசுக்கு கெக்கலிப்பு, சந்தோஷம்.

    அட போங்கடா!.. பசி எல்லாத்தும் பொது தானடா..

    எல்லாத்துக்கும் இதுப்பது ஓர் உயிர் தானடா!...

    //ரகு குனிந்து இலையை சுருட்டி எடுத்து அங்கிருந்த் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு நடந்தான்...//

    ஒரு உயிருக்குப் பரிமாறி இலையையும் எடுத்துப் போட்டதில் பெருமிதம்.

    கதையை வாசித்த நமம்கும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஜீவி அண்ணா..

      /// ஒரு உயிருக்குப் பரிமாறி இலையையும் எடுத்துப் போட்டதில் பெருமிதம்.

      கதையை வாசித்த நமக்கும் தான்.///

      மனதில் தோன்றிதை எழுதினேன்..

      தங்களது அன்பின் விமர்சனம் எனக்கும் பெருமிதம் தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி அண்ணா..

      நீக்கு
  36. அன்பின் ஸ்ரீராம்..

    /// தவம் என்பது பெரிய வார்த்தை.. ///

    தமிழுடன் வாழ்வதே தவம்..

    உண்மை..
    உண்மை!..

    பதிலளிநீக்கு
  37. தற்சமயம் தமிழால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  38. அதுவா இதுவா என்று அதகளம் நடக்கின்றது ..

    ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்கின்றார் திருநாவுக்கரசர்

    ஓசை எது?..
    ஒலி எது?...

    பதிலளிநீக்கு
  39. இதுக்குத்தான் தேவாரம் படிங்க.. பாடுங்க... என்று சொன்னார்கள்...

    நமக்கெல்லாம் அகம்பாவம் ஜாஸ்தி...

    எவனாவது ××× கழுவாதவன் வந்து சொன்னால் தான் புரியும்!..

    பதிலளிநீக்கு
  40. /இன்றைய பதிவு எங்களுடைய 5000 ஆவது பதிவு/

    வாழ்த்துகள்! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தொடர்ந்து வர எல்லாம் வல்ல சிவகாமசுந்தரி சமேதத் தில்லை நடராஜன் துணை புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  41. /இந்தக் காலத்திலும் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த ஒருவர் புன்னகையுடன் பணத்தை வாங்கிக் கொண்டார்..
    முன் மேஜையில் சந்தனப் பிள்ளையார்.. அருகில் பாரம்பரியமான தாம்பூல மடிப்புகள்..
    பக்கத்தில் கண்ணாடிப் பேழைக்குள் தங்க மயமான திருமகள் சித்திரம்.. அருகிலேயே ததும்பும் இளமையுடன் தலையாட்டிச் சிரிக்கின்ற சிங்காரம்../
    என்ன ஒரு அருமையான நடை! அற்புதமாகக் கண் முன்னால் அந்தக் காட்சியை அப்படியே கொண்டு நிறுத்தும் வரிகள். சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      தஞ்சாவூர்க்காரனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்,!...
      மகிழ்ச்சி..
      மகிழ்ச்சி..

      நன்றி ஐயா!..

      நீக்கு
  42. 5000 மாவது பதிவு! வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் உழைப்பும், பதிவர்கள் ஒத்துழைப்பும்!! 👍 👌

    பதிலளிநீக்கு
  43. எனது கருத்துரைகள் சில ஒளிந்து கொண்டு விட்டன..

    கண்டுபிடித்துத் தர வேண்டும் ..

    பதிலளிநீக்கு
  44. 5ooo பதிவுகளுக்கு வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதிவரும் பதிவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. தொடர்ந்து பல்லாயிரங்களாக வளரட்டும் உங்கள் பதிவுப்பணி. அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!