புதன், 22 மே, 2024

திருக்காட்டுப்பள்ளி மற்றும் சென்னை விடுமுறை விஜயம்.

 

சென்ற வாரம் எங்களை யாரும் கேள்விகள் கேட்கவில்லை. 

😩

அதனால நாங்க கேட்கிறோம்! 

1 ) உங்கள் முன் சம அளவுள்ள  ஐந்து பாட்டில்கள் ( ஒவ்வொன்றிலும் நூறு கிராம் பொருள் உள்ளது) வைக்கப்பட்டுள்ளன என்று கொள்வோம். அவற்றிலிருந்து ஏதேனும் ஒரு பாட்டிலை மட்டுமே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தேர்வு எது?

அ ) பாதாம் ( Almonds )

ஆ ) பிஸ்தா பருப்பு 

இ ) வால் நட் 

ஈ ) முந்திரி பருப்பு 

உ ) உலர்ந்த திராட்சை 

2) ஒரு இட்லித் தட்டின் எடை 100 கிராம். நான்கு இட்லி ஊற்றிய பிறகு, அதன் எடை 300 கிராம். (200 + 100) இட்லியை தட்டுடன் குக்கரில் வேக வைத்து வெளியே எடுத்து, பிறகு எடை பார்த்தால், அப்பொழுது என்ன எடை வரும்? 

அ) 300 + 

ஆ ) 300 - 

இ) 300 

ஈ) தெரியவில்லை. 

= = = = = = = = =

KGG பக்கம் : 

சென்ற வாரம் திருக்காட்டுப்பள்ளி விடுமுறை காலம் குறித்து எழுதியிருந்தேன். 

அங்கு இருந்த நாட்களில், அதிகாலையில் சுற்றுப்புற குடிசைகள், சிறு வீடுகள் இவற்றிலிருந்து நாதஸ்வர இசை தவழ்ந்து வந்து நம் காதுகளை நிறைக்கும். நாதஸ்வரக் கலைஞர்கள் நிறைந்த ஊர் அது! எல்லோரும் அதிகாலையில் எழுந்து இசைப்  பயிற்சி செய்வார்கள்! 

அங்கு அப்போது கேட்ட தோடி, கல்யாண வசந்தம் ( ஆஹா - நாதஸ்வரத்திற்காகவே ஏற்பட்ட ராகம் - கல்யாண வசந்தம் !) மோகன ராக ஆளாபனைகள் மறக்க முடியாதவை. 

அங்கே கேட்ட தோடி இப்படி இல்லை என்றாலும், இதை நினைவுக்குக் கொண்டுவந்தது! 


திருக்காட்டுப்பள்ளி சென்ற அந்த விடுமுறை தினங்களில், பக்கத்தில் இருந்த திருவையாறு, கல்லணை போன்ற இடங்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பல நூற்றாண்டுகள் கடந்த கல்லணையும், ஒன்றரை நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த திருவையாறும் கண்டு சந்தோஷத்தின் எல்லைக்கு சென்று திரும்பினேன். 

= = = = = = = =

1967 ஆம் வருடம் நவராத்திரி லீவு சமயம் நானும் என் தம்பியும் விடுமுறைக்கு சென்னை வந்தோம். 
புரசவாக்கம் அண்ணன் வீட்டிற்கு வந்து, பிறகு சைதாபேட்டையில் நூர்ஜஹான் தியேட்டர் அருகே இருந்த உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். 
வீட்டுப் பக்கத்தில் வசித்த மோகன் என்றொரு பையனுடன் எங்கள் இருவரையும் ஊர் சுற்றிப்பார்க்க அனுப்பி வைத்தார்கள். 
மோகன் எங்களைப் போலவே தெலுங்கு பேசும் பையன். எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சுற்றுப் பக்கத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் எல்லாவற்றிற்கும் கொண்டு போய் தனக்குத் தெரிந்த விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டான். 

முதலில் சைதாபேட்டை மார்மலாங் பாலம். அந்தக் காலத்தில் அதுதான் சென்னையின் மிக நீளமான பாலம் என்று மோகன் சொன்னான். அப்புறம் அந்த மார்மலாங் பாலத்தில்தான் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்தின் ஆரம்பக் காட்சியாகிய கல்பனா ஓடி வரும் காட்சி படமாக்கப்பட்டது என்றும் அந்த ஷூட்டிங் நடைபெற்றபோது அவன் எங்கே நின்று அந்தப் படப்பிடிப்பை பார்த்தான் என்ற அரிய விவரத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டான். 


நானும் என் தம்பியும் மெய் சிலிர்த்து அந்த இடத்தை எல்லாம் ஆனந்தமாக தரிசித்தோம். 

பிறகு நாங்கள் சென்ற இடம், கிண்டி சில்ட்ரன்'ஸ் பார்க். சைதையிலிருந்து நடந்தே சென்றோம். 

வழியில் பெரும்பாலும் எல்லோரும் நவநாகரிக உடை அணிந்து, மிகவும் ஸ்டைலாக இருந்தனர். 

ஆனால் பாண்ட் சட்டை (அதிலும் கலர் சட்டை ) அணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்த சிலரைப் பார்த்தால் மட்டும் மோகன் எங்களுக்குக் கூறிய அறிவுரை : " அவங்க பக்கத்துல போயிடாதீங்க. எல்லோரும் பொறுக்கிப் பசங்க ( அந்துரும் பொறுக்கிப் பில்லகாயலு !) "
" அப்படீன்னா என்ன ? அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். 
" எல்லோரும் ரவுடிகள். பிக்பாக்கெட் ஆசாமிகள் " என்று மோகன் சொன்னான். 
அன்றிலிருந்து, சென்னையில் கூலிங் கிளாஸ் அணிந்த யாரைப் பார்த்தாலும் மோகனின் எச்சரிக்கைதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். 

அதற்குப் பிறகு, நான் சென்னையில் இருந்த 1971 to 2008 காலத்தில் கூலிங் கிளாஸ் வாங்கியதும் இல்லை; அணிந்ததும்  இல்லை! எப்பொழுதாவது மற்றவர் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸை அவர்களிடமிருந்து வாங்கி, கொஞ்ச நேரம் போட்டுப் பார்த்தது உண்டு! 

( சென்னை விடுமுறை அனுபவங்கள் தொடரும்) 

39 கருத்துகள்:

 1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு..

  குறள் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
  தளிர் விளைவாகித்
  தமிழ் நிலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. இட்லி கேள்வி நல்ல கேள்வி. எடை 300+ ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. சமீபத்து பூரி தல யாத்திரையின்கோது, இரண்டு இடங்களில் முந்திரி கிலோ 350ரூபாய்க்கு விற்பதைப் பார்த்தேன். 400 ரூபாய்க்கு இன்னும் அழகான பெரிய முந்திரி. முதல் கேள்விக்கான பதில், எதிலும் விருப்பம் கிடையாது.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான தொகுப்பு..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 7. திருக்காட்டுப்பள்ளி பற்றிக் குறிப்பிட்டது சில நினைவுகளை எழுப்பிற்று.

  அவ்வளவு பெரிய கோவிலான திருப்பதியில் மற்றும் சில பெரிய கோவில்களில் நாமஸ்வரக் கலைஞர்கள் இல்லை. தவிலும்தான். வாத்திய வாசிப்பு வெகு சுமார்.

  நாச்சியார் கோவில் கல் கருடசேவை இரவு, ஏழு நாதஸ்வரக் கலைஞர்கள், ஐந்து தவில் வித்வான்கள் இசையைக் கேட்டது மறக்க இயலாது. தஞ்சை, இசையின் மையப் புள்ளி என்பதைக் காட்டினர். அந்தக் கலைஞர்களை நாம் வளர்க்கிறோமா, ஆதரிக்கிறோமா? கேள்விக்குறிதான். ஆதரிக்காமல் கலை அழிந்துவிட்டது எனப் புலம்பலாமா?

  மகள் திருமணத்தின்போது கேடர்ர் வசமே நிறைய பொறுப்புகளை விட்டிருந்தேன். நாதஸ்வரம் நன்றாக இசைத்தனர். நாதஸ்வரக் கலைஞர் கேட்டுக்கொண்டும், இம்மியளவும் நேரமில்லாமல் பரபரப்பில் இருந்த நான், அவருக்கு தனியாக சன்மானம் வழங்கத் தவறிவிட்டேன். தம்பியிடமாவது பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். நினைத்தால் வருத்தம்தான்.

  பதிலளிநீக்கு
 8. /// வழியில் பெரும்பாலும் எல்லோரும் நவநாகரிக உடை அணிந்து, மிகவும் ஸ்டைலாக இருந்தனர்.. ///

  ஆண்களும்
  பெண்களும்!..

  குறிப்பாக பெண்கள்
  தானே!..

  அப்போது ஆகா..
  இப்போது ஆகா க ஆகா!..

  பதிலளிநீக்கு
 9. இட்லி கேள்விக்கு - கண்டிப்பாக 300+

  பருப்புகள்ல ஒன்று மட்டும்தான்னு சொன்னதால நான் பதில் சொல்ல மாட்டேன் ஹாஹாஹாஹா
  என் பதில் உங்க கேள்விக்கு சரியானது இல்லை ஏன்னா எனக்கு முந்திரி கொஞ்சம் மத்தது எல்லாம் அப்படியே எடுத்துக்குவேன்!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. ஆஹா கௌ அண்ணா கொடுத்து வைச்சிருக்கீங்க. நாதஸ்வரத்தில் கல்யாண வசந்தம் ராகம்...மனதை மயக்கும் ராகங்களில் ஒன்று!

  இப்போதெல்லாம் நாதஸ்வரம், தவில் கேட்பதே அரிதாகி வருகிறது. கோயில்களில் இப்போது மிகவும் குறைவு என்பதோடு பாவம் அவர்கள். மேம்படுத்திக் கொள்ள முடியாமல் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்தான் தமிழகக் கோயில்களில் வாசிக்கிறார்கள்.

  கோயில் திருவிழாவில் மட்டும் அதுவும் கருட சேர்வை பல்லக்கு சேர்வை நாட்களில் மட்டும் நல்ல குழுவினர் வாசிக்கிறார்கள்.

  அந்தக் கலை நலிவடையக் காரணம் பொதுமக்களிடையேயும், சங்கீத உலகிலும் சரியான ஆதரவு இல்லாமைதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 11. இட்லி - கணிப்பு 300 +

  பித்ஸா.

  விடுமுறைகாலம் நாதஸ்வரம் ரசனை. எங்கள் ஊரில் கோவில் வீதியின் பின்னால் ஒரு இசைக்குழுவினர் கோயில் தர்மகர்த்தா இருத்தி இருந்தார். கோவிலுக்கு சென்ற நேரம் அவர்கள் வீட்டிலிருந்து நாதஸ்வர இசையை கேட்கலாம். இப்பொழுது குடும்பம் இல்லை. விசேட நாட்களுக்கு வேறு ஊரிலிருந்து கலைஞர்கள் வரவேண்டும்.

  கறுப்புக் கண்ணாடி பொறுக்கிகள் :( எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய புதன் பதிவு அருமை.

  முன்பு இந்த பருப்புகள் எங்கள் வீட்டில் உபயோகத்தில் இல்லை. இப்போது எல்லாமே பிடிக்கிறது. முந்திரி அதிக கொழுப்பு சக்தி உள்ளதாகையால், நிறைய எடுத்துக் கொள்ள இயலாது. பாக்கி எல்லாம், தினமும் இல்லாவிடினும், தினமும் ஒன்றாக அவ்வப்போது அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

  இட்லி மாவின் அடர்த்தி காரணமாக வார்க்கும் போது எடை அதிகமாக இருக்கும். அது வெந்ததும் அதன் எடை குறைந்து விடுமெனவும் நினைக்கிறேன். என் ஊகம் இது. எனவே அதன் எடை 300- ஆக இருக்குமோ?

  தங்கள் இளமை கால விடுமுறையில் கழிந்த பொழுதுகளைப்பற்றி அறிந்து கொண்டேன். கூலிங் கிளாஸ் அனுபவம் சுவாரஸ்யமாக இருக்கிறது. எனக்குமே அந்த மாதிரி கிளாஸ் போடுபவர்களை கண்டால், ஒரு வித அச்சம் வரும். :))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. அவரவரும் கழித்த இளமைக் கால பள்ளி விடுமுறையின் நினைவுகள் தற்சமயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றா நினைக்கின்றீர்கள்!...

  பதிலளிநீக்கு
 14. இன்னமும் அருமையான இசைக் கலைஞர்கள் இங்கே இருக்கின்றனர்..

  திருவிழா நாட்களில் தான்!..

  பதிலளிநீக்கு
 15. கோயில்களைச் சார்ந்து வாழ்ந்த இசைக் கலைஞர்கள் எங்கே?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே? கோவில்களே காணாமல் போகும் காலத்தில் .... சார்ந்தவர்களைத் தேடலாமா!

   நீக்கு
 16. சம அளவுள்ள இன்னொரு பாட்டிலை எடுத்து எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொண்டு எடுத்துப்பேன்.

  பதிலளிநீக்கு
 17. இட்லி சுமாராக 300 கிராம் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் சரியான பதில்! எடையில் வார்த்த இட்லிக்கும் வெந்த இட்லிக்கும் எடையில் மாற்றம் இல்லை என்று நடைமுறையில் நிறுத்துப் பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. இரண்டுமே 300 கிராம்தான் இருந்தது.

   நீக்கு
 18. 63 ஆம் வருடம் முதல் முதல் சென்னை வந்தோம் குடும்பமாக. அந்த அனுபவங்களை 20 வருஷங்கள் முன்னாடியே ஆரம்ப காலத்தில் எழுதிட்டேன்னு நினைவு. அப்போவே சென்னை பிடிக்கலை,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் என் தம்பிக்கும் சென்னை மிகவும் பிடித்திருந்தது!

   நீக்கு
 19. முந்திரி பருப்பு உணவில் எல்லாவற்றிலும் போடலாம், அதனால் அதை எடுத்து கொள்கிறேன். வீட்டில் அதன் பயன்பாடு தான் அதிகம்.
  இட்லி தட்டு ஆராய்ச்சி நன்றாக இருக்கிறது. அதே எடைதான் இருக்கும் என்று நினைத்தேன்.

  திரு, ராஜரத்ன பிள்ளை அவர்களின் தோடி இசையை கேட்டேன்.
  காலை நேரம் நாதஸ்வர இசை கேட்பது மகிழ்ச்சிதான், சிறு வயது நினைவுகள் அருமை. வானெலியில் முதலில் நாதஸ்வர இசை ஒலிக்கும் முன்பு. இப்போது தீபாவளி அன்றுமட்டும் சில தொலைக்காட்சியில் மங்கள இசை என்று வைப்பார்கள்.

  சென்னை அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

  கூலிங் கிளாஸை நாகரீகத்தின் அடையாளம், வெயிலில் கண் கூசாமல் இருக்க அணிந்து கொள்வது. வேறு மாதிரி சொல்லி பயமுறுத்தி விட்டாரே. பழைய சினிமாக்களில் வில்லன்கள் கறுப்பு கண்ணாடி அணிந்து கழுத்தில் கைகுட்டை கட்டி பிக்பாக்கெட் அடிப்பார்கள். அதை வைத்து சொல்லி விட்டார் போலும்.

  இளமைகாலம் பயம் தெரியும் தான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!