புதன், 29 மே, 2024

பூமியில் இருப்பதும்; வானத்தில் பறப்பதும்!

 

நெல்லைத்தமிழன் : 

சமீபத்தைய ஃபோர்ஷே கார் விபத்தைப் போல, minor பசங்களுக்கு காரைக் கொடுத்து இந்த மாதிரி தறுதலைத்தனத்தை வளர்த்துவிடும் அப்பாவுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க வேண்டாமா?

# சட்டத்தில் அதற்கு இடமில்லை. மேலும் பெற்றோர் சொல்லியும் கேட்காத முரட்டுப் பிள்ளையாகவும் இருக்கலாம்.

& நீங்கள் சொல்வது நியாயமான விஷயம். ஆனால் .. .. ஹூம் என்ன சொல்வது :(( 😔

= = = = = = = = =

எங்கள் கேள்விகள்: 

1) நெல்லை மேலே கேட்டிருப்பது போல - பணத்திமிர் கொண்டு எதையும் செய்வேன், எப்படியும் செய்வேன் என்று திரியும் ஆட்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? 

2) இந்தியாவிற்காக ஒரே ஒரு சட்டம் மட்டும் இயற்றும் அதிகாரம் உங்களுக்கு உண்டு என்றால், நீங்கள் என்ன சட்டம் போடுவீர்கள்? 

3) ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு எது? பிடிக்காத விளையாட்டு எது? 

= = = = = = = = =

KGG பக்கம் :

சென்னையில் கழித்த விடுமுறை நாட்கள். 

மோகன் அதற்குப் பிறகு எங்களை அழைத்துச் சென்ற இடம், மீனம்பாக்கம் விமான நிலையம். 

நாகையில் இருந்த சமயங்களில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே வெளியில் ஓடி வந்து வானத்தில் பறக்கும் விமானத்தை மகிழ்ச்சியாக, ஆர்வத்துடன் கவனிப்பது எங்கள் வயது இருந்த எல்லோருக்கும் வழக்கம். 

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களும் / வந்து இறங்கும் விமானங்களும் சைதாப்பேட்டையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியிலிருந்து பார்த்தால் - நாங்கள் நாகையில் பார்த்த விமான அளவை விட இரண்டு / மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். 

விமான நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அவைகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கின்றன என்று மிகவும் அதிசயமாக இருந்தது. 

எங்கள் ஆசான் மோகன் அப்பொழுது காரவீல் விமானம் மற்றும் போயிங் விமானம் இரண்டையும் காட்டி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறினான். போயிங் விமானம் டேக் ஆஃப் சமயத்தில் எழுப்பும் பெருத்த ஓசை மிகவும் பயங்கரமாக இருந்தது. 

இவ்வளவு சத்தத்திற்கு நடுவே எப்படி ஆட்கள் விமானத்தில் பயணம் செய்கிறார்கள் என்று அந்தக் காலத்தில் அதிசயப்பட்டேன். (உள்ளே பயணம் செய்பவர்களுக்கு விமானத்தின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்காது என்பது பிறகுதான் தெரிந்துகொண்டேன். ) 

விமானங்களை தூரத்திலிருந்து பார்த்தது அந்த 1967 ஆம் வருடத்தில் என்றாலும் ஒரு விமானத்தின் உள்ளே சென்று பார்த்தது 1970 டிசம்பர் மாதத்தில், பாலிடெக்னிக் எஜுகேஷன் டூர் வந்த சமயம். 

எங்களுக்குப் பார்வையிடக்  கிடைத்தது அப்பொழுது THE HINDU பத்திரிக்கைக்குச் சொந்தமான ஒரு சிறு விமானம். எங்களை அழைத்துச் சென்ற ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த விமானத்தின் பைலட் ஐந்தே நிமிடங்களில் படபடவென விமானத்தின் பாகங்களைக் காட்டி அதன் முக்கியத்துவங்களை பொரிந்து தள்ளினார். 

ஆனால் முதல் விமானப் பயணம் வாய்த்தது எப்போது என்றால் - 2003 ஆம் வருடத்தில்தான்! சென்னை to மும்பை + மும்பை to இந்தூர் - இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதே வழித்தடத்தில் திரும்பி வந்த பயணம். அதற்குப் பிறகு 2009 சமயத்தில் ஒருமுறை சென்னை to பெங்களூர். ஆக வாழ்க்கையில் இதுவரை நான் மேற்கொண்டது ஐந்தே ஐந்து விமானப் பயணம் மட்டுமே! 

ஆனாலும் விமானப் பயணம் என்றால் மனதுக்குள் ஒரு பயம் எப்போதும் எனக்கு உண்டு! 

பயத்துடன் பயணம் செய்ய விமானத்தில் ஏறி உள்ளே உட்கார்ந்தவுடனேயே அஸ்து பாடுவதுபோல இரண்டு பேர் மௌன மொழி - சைகைகளால் விமானம் விபத்துக்கு உள்ளாக நேர்ந்தால் என்னென்ன செய்யவேண்டும் என்று miming செய்து காட்டி வயிற்றில் புளி கரைப்பார்கள். 

விமானம் கிளம்பும்போது அடைத்துக்கொண்ட காதுகள், விமானத்திலிருந்து கீழே இறங்கி அடையவேண்டிய ஏர்போர்ட் சென்று அடையும்போதுதான் திரும்பக் கேட்கத் தொடங்கும்! 


= = = = = =

70 கருத்துகள்:

 1. இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு..

  குறள் வாழ்க

  பதிலளிநீக்கு
 2. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
  தளிர் விளைவாகித்
  தமிழ் நிலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. புத்தம் புதுக்காலை வரும் - அது
  புதன் என்ற பேரில் வரும்..
  வித்தகத்தின் வித்தகமாய்
  விளைந்து வரும்..
  முத்தம் இடும் தென்றல் எனத் தேரில் வரும்..

  பதிலளிநீக்கு
 5. தறுதலைத் தனத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்..

  பதிலளிநீக்கு
 6. விமானத்தை அருகிலிருந்து மேலே பறப்பதைப் பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த ஒன்று என நினைக்கிறேன். மனைவியுடன் முதன் முதலில் பயணம் செய்தபோது விமானத்தின் வெளியே படங்கள் எடுத்தது நினைவுக்கு வருது. நான் சுமார் 250-300 முறை பயணித்திருப்பேன். நிறைய தடவை உள்ளே கொடுக்கும் உணவைப் பெற்றுக்கொள்ளாமலேயே இருந்துவிடுவேன் போரடிக்கும் உணவு என்பதால்.

  பதிலளிநீக்கு
 7. நிலைமையை நினைத்து மனம்/
  வயிற்றெரிச்சல் தாளவில்லை எனில்,

  மனுநீதிச் சோழனை நினைத்துக் கொள்ளலாம்...

  பதிலளிநீக்கு
 8. அன்னைக்கே பெண்டு நிமித்தி இருந்தா,

  இன்னிக்கு இவ்ளோ கஷ்டம் இருந்திருக்காது..

  பதிலளிநீக்கு
 9. சென்னை மற்றும் மற்ற இந்திய நகரங்களில் விமானம் இறங்கப்போகும்போதுதான், விமானம் நிற்பதற்கு முன் அவசர அவசரமாக மேலே உள்ள லக்கேஜை எடுத்து கியூவில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள். பைலட் மற்றும் அறிவிப்பாளர்கள், பயணிகள் எழுந்துகொள்ள வேண்டாம், அமரவும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுபோல ஓசியில் குடித்து அலப்பறை செய்வதும் இந்தியர்கள்தாம்.

  பதிலளிநீக்கு
 10. /// பைலட் மற்றும் அறிவிப்பாளர்கள், பயணிகள் எழுந்துகொள்ள வேண்டாம், அமரவும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்... ///

  குவைத் விமானங்களில் இந்த மாதிரி செய்ய முடியாது..

  விமான நிலையத்திலேயேசிறைப்பட வேண்டியதாகி விடும்...

  பதிலளிநீக்கு
 11. பிஸினெஸ் வகுப்பு, Frequent Flyer Gold, Silver Card இருக்கும்போது, Gateல் நெடும் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்கும்போது, எங்கும் நிற்காமல் லேட்டாக வந்து எல்லோரையும் தாண்டிக்கொண்டு முதலில் விமானத்துக்குள் ஏறுவதில் அல்ப சந்தோஷம். அதுபோல் செக்கின் செய்வதிலும். ஆனால் எப்போதும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு அது போரான விஷயம். கடந்த ஐந்து வருடங்களாக விமானத்தில் பயணித்ததில்லை, விருப்பமில்லை..

  பதிலளிநீக்கு
 12. நேற்றைய கதையை படித்தவர்களுக்கு ஒரு தகவல்.  மாலை ஆறு மணிக்கு மேல் கதையில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  குறிப்பாக இரண்டாவது கவிதைக்கு முந்தைய பாராவிலிருந்து கதையின் முடிவு வரை சில மாறுதல்கள் செய்திருக்கிறார் கீதா.  ஒருமுறை நண்பர்கள் அதைப் படித்து விட வேண்டுகிறேன்.  நண்பர்களின் பின்னூட்டங்களின் பேரில், உணர்ந்து செய்யப்பட்ட மாறுதல்கள்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகர்கள் கதையை போட்டோ பிடித்து நினைவில் பதிக்கவில்லை. பழைய வெர்சன் இல்லாமல் புதிய வெர்சன் மாற்றங்கள் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனாலும் பிடித்த உணவு வகைகள், சுண்டைக்கா வத்தல் குழம்பு, பூண்டு, வெங்காயம் தவிர்த்தலில் உள்ள ஆசாரம் சமையல் ருசி போன்று சில அனாவசிய bells and whistles சேர்க்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. மேலும் ஆசிரியர் psychology படித்திருப்பவர் என்பதை கூடுதல் மேற்கோள்கள் மூலம் சுடுகிறார்.
   இதைத்தான் jumping thoughts என்று சொல்வதோ? ஒன்றை நினைக்கின் வேறொன்று வந்து முளைக்கும்.

   கடைசியில் பெண்களுக்கே உரித்தான சென்டிமென்டல் அழுகை வேறு!

   மெருகூட்டல் தேவைதான். கூடுதல் ஆகிவிட்டால் திகட்டிவிடுகிறது.

   நடுவில் இருந்த ஸ்ரீராமை கடைசி வரிக்கு தள்ளி கொண்டு போய் நிறுத்தி விட்டார்.
   Jayakumar​

   நீக்கு
  2. அன்புள்ள JKC ஸார்... சென்ற வியாழனுக்கான உங்கள் கமெண்ட்டை மிஸ் செய்கிறேன்!

   நீக்கு
  3. கவிதைகளுக்கு கீழே ஸ்ரீ என்று போட்டு யார் இந்த ஸ்ரீ என்று வாசிப்பவர் எவரிடமிருந்து கேள்வி வரும் பட்சத்தில் 'வேறு யார்? நம்ம ஸ்ரீராம் தான்' என்று பதில் சொல்லியிருக்க வேண்டும்.

   ஒளித்து வைத்து ஆர்வத்தைத் தூண்டி வெளிப்படுத்துவதில்
   இருக்கும் இன்பம் அலாதியானது.

   எபியில் வியாழன் தவிர எடிட்டர் சைடு நகாசு வேலைகள் ரொம்ப குறைச்சல்.

   நீக்கு
 13. விமானப் பயணங்களில் இரண்டு நிகழ்வை மறக்க இயலாது. ஒன்று, பஹ்ரைன்-லண்டன் ஹீத்ரூ பயணம். பயங்கரமான டர்புலன்ஸ். மிகவும் பயந்ததனால் பின்னால் மூன்று சீட்டுகள் காலியாக இருக்கும் இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு போர்வையால் கவர் பண்ணிக்கொண்டு படுத்துவிட்டேன். ரொம்பவே திகிலாக இருந்த பயணம்.

  இரண்டாவது, பிரிட்டிஷ் ஏர்வேசில் மெக்சிகோ பயணம். எட்டு மணி நேரத்திற்கு குறைவான பயணம் என்றால் இடையிடையில் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள், விமானத்தின் பின்பகுதியில் சாக்லேட் பிஸ்கட் என விதவிதமாக அடுக்கி வைத்திருப்பார்கள், போய் எடுத்துக்கொள்ளலாம் என்று புரிவதற்குள் பாதிப் பயணம் முடிந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 14. பணத் திமிர் கொண்டு எதையும் செய்வேன் என்று திரிபவர்களுக்கு காலம் நல்ல பாடத்தைப் புகட்டும்.

  பதிலளிநீக்கு
 15. இந்தியாவுக்கான ஒரே சட்டம், மைனாரிட்டி என்ற பெயரில் யாருக்கும் சலுகைகள் கூடாது. மதம் என்பது எங்குமே ஒரு க்ரைடீரியாவாக இருக்கக் கூடாது, வழிபாட்டுத் தலங்கள் தவிர

  பதிலளிநீக்கு
 16. தடகளப் போட்டிகள் எல்லாவற்றையும் பிடிக்கும். இசைக்குத் தகுந்தபடி நீரில் ஆடும் விளையாட்டு எனக்குப் பிடிக்காது, அதில் உள்ள கவர்ச்சி தவிர. ட்ரிபிள் ஜம்பிலும் விஷயம் ஒன்றுமில்லை என்பது என் அபிப்ராயம்.

  கொஞ்சம் விட்டால் கின்னஸ் ரெகார்டுக்குச் செய்வதுபோல், விடாமல் சாட்டையால் அடித்துக்கொள்வது, பரதநாட்டியம், கில்லி, நொண்டி போன்றவற்றையும் ஒலிம்பிக்கில் சேர்த்துவிடுவார்கள் போலிருக்கு. கின்னஸில்தான் விடாமல் பல்லிளித்தார், நீளமா கால்நகம் வளர்த்தார், பூக்கினாயே சாப்பிட்டார் என்பதையெல்லாம் சாதனைன்னு சொல்லிக்கறாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூக்கினாலேயே சாப்பிட்டார் என்று சொல்ல வந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 17. சின்ன வயதில் விமான சத்தம் கேட்டால் ஆகாயத்தைப் பார்ப்பது இப்போதும் உண்டுதான். ஆனால் அதற்காக வெளியே ஓடிப்போய் பார்ப்பதில்லை. என்ற வித்தியாசம் மட்டும். பார்த்தால் ஒரு சந்தோஷம். பெரும்பாலும் பார்ப்பது சிரமம். வீட்டைச் சுற்றி மரங்கள் அதிகம். என்பதால்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 18. எனக்கும் 5 முறை பயணம் செய்ய முடிந்திருக்கிறது. .சைகை மொழி பயத்தைத் தருவதுண்டு. ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தைரியத்தை வரவழைத்து அமைதியாவதுண்டு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 19. நெல்லையின் முதல் கேள்வி - நிச்சயமாகப் பெற்றோருக்குத்தான் முதல் தண்டனை. இங்கு பக்கத்துவீட்டுச் சின்னப் பையன் அப்பாவின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஓட்டுகிறான் அப்பா அதை அவரே கொடுத்தும் ஓட்டச் சொல்கிறார். அவர் பிள்ளை விழுவது இருக்கட்டும், மத்தவங்க மீதுமோதினா? அவர் பொறுப்பேற்பாரா?

  கீதா

  பதிலளிநீக்கு
 20. முரட்டுப் பிள்ளைகள் என்று சொன்னாலும் அங்கும் கேள்வி எழுவது வளர்ப்பு முறைதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 21. உங்கள் கேள்விகள் - பணத் திமிர் கொண்டு திரிபவர்களுக்கு என்னத்த சொல்ல? நம் அருகே வந்தால், நாம் விலகி இருப்பது நல்லது என்று தோன்றும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இன்றைய சூழலில் தகப்பனார் செல்வந்தரோ, ஏழையோ பிள்ளைகளை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். (இதனுள் பெண் பிள்ளைகளும்)

  பதிலளிநீக்கு
 23. 2. இந்தியாவில் சட்டமா?!!!! ஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் கௌ அண்ணா. பின்ன சுப்ரீம் கோர்ட் பொதுவெளியில் புகைக்கக் கூடாதுன்னு எப்பவோ சட்டம் போட்ட நினைவு. புகைக்காம இருக்காங்களா? இதுல என்னவோ இ ஸ்மோக்காம்!! கள்ளுக் கடைய ஒழிக்க முடிந்ததா? பாலியல் கொடுமைகளை, கொலைகளை ஒழிக்க முடிந்ததா? அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள்....போதையை ஒழிக்க முடிந்ததா...இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ஒரு வேளை அதிகாரம் கிடைத்தாலும் அதுக்கு வேல்யூ இல்லாத போது ...democratic நாடு!!!!!!!! எனும் பெயரில்......சட்டம் போட்டா என்ன போடாட்டி என்ன. அந்த அதிகாரமே வேண்டாம்னு போய்டலாம்னு தோணும்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 24. ஒலிம்பிக்ஸில் தடகளப் போட்டிகள் பிடிக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. இனி பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்க்கப்படுவது கட்டாயமாக வேண்டும் என்றால் ???

  கல்லூரி முடிந்து இரண்டு வருடம் இராணுவத்தில் வேலை பயிற்சி பெற வேண்டும் விருப்பம் இருந்தால் தொடரலாம்.....

  பதிலளிநீக்கு
 26. ரொம்பச் சின்னப் பிள்ளையா இருந்தப்பவே விமானத்தில் சென்றதுண்டு என்றாலும் அந்த அனுபவங்கள் நினைவில் இல்லை. அத்தனை சிறுவயது. நினைவறிந்து செய்தது கப்பல் பயணம். அதனால் விமானத்தைக் கண்டு உங்களைப் போலவே அதிசயித்ததும், பறக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்த காலம் உண்டு. பறந்ததும் உண்டு. ஜன்னல் வழி பார்க்கறப்ப மேகக் கூட்டம் கீழே எல்லாம் ரசித்தாலும் கூட கொஞ்சம் பயம் வருவதும் உண்டு.

  பிடித்த பயணம் ரயில் தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. சிறுவயதில் வானத்தில் விமானத்தை பார்த்து ரசித்ததுண்டு. அப்புறம் பதின்ம வயதில் விமானநிலையம் சென்று பார்த்தோம்.
  திருமணத்தின் பின் விமானத்தில் பறந்ததுண்டு பலதடவைகள்.

  பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து அவர்களை பழுதாக்கக் கூடாது அன்புடன் கண்டிப்பும் இருத்தல்வேண்டும்.பிழை சரியை எடுத்துக் கூற வேண்டும்.


  பதிலளிநீக்கு
 28. //பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே// இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். ரொம்ப நாட்களுக்குப்பின் அதை நினைவு படுத்தியதற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 29. 1976லிருந்து இன்று வரை ஐக்கிய அரபு குடியரசிற்கு விமானப்பயணங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது! இந்த 48 வருடங்களில் எத்தனை முறைகள் பறந்திருக்கிறோம் என்பதற்கு கணக்கில்லை! முதல் முறை பறந்த போது எனக்கிருந்த பயமோ, பிரமிப்போ இன்றைய தலைமுறைக்கில்லை! முதல் முறை திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது ஒரேஒரு சாதாரண கழிப்பறையும் புதர்கள், செடி கொடிகள் இடையே பெட்டிகளை சுமந்து தள்ளாடிய கன்வேயர் பெல்ட்டும் சீரற்ற ஓடுதளத்தில் சரேலென்று அகல பாதாளத்தில் விழுவது போல குதித்து இறங்கிய விமானமும் என்று எல்லாம் நினைவுக்கு வருகிறது! அப்போதெல்லாம் மும்பையில் இறங்கி தங்கி அடுத்த நாள் தான் கிளம்ப முடியும். ஏர் இந்தியா பயணிகளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கும். முதன் முதலாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் துபாயிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தை ஆரம்பித்திருந்தது. முதல் பயணம் செய்தவர்களுக்கு சந்தனமும் இனிப்புகளும் கொடுத்து ஊழியர்கள் வரவேற்றார்கள்!
  விமான பயணங்களைப்பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!

  பதிலளிநீக்கு
 30. சகோதரி மட்டும் தான் கதையை திருத்துவாங்களா?..

  நாங்களும் திருத்துவோமில்லே!!..

  ///புத்தம் புதுக் காலை வரும் - அது
  புதன் என்ற பேரில் வரும்..
  வித்தகத்தின் வித்தகமாய்
  விளைந்து வரும்..
  முத்தம் இடும் தென்றல் எனத் தேரில் வரும்..///

  அது விடியக் காலையில்...

  இது இப்போது!.. கருட சேவை கண்ட பிறகு

  புத்தம் புதுக் காலை வரும் - அது
  புதன் என்று பூத்து வரும்..
  வித்தகத்தின் வித்தகமாய்
  விளைந்து வரும்..
  முத்தம் இடும் தென்றல் எனத் தித்தித்து வரும்!..

  பதிலளிநீக்கு
 31. அடேய்.. திருந்தவே மாட்டாய் நீ!...

  எதுக்காகத்
  திருந்த வேணும்?..

  பதிலளிநீக்கு
 32. கேள்விகளும் , பதில்களும் அருமை.
  தலைப்பாக வைத்து இருக்கும் பாடல்வரியை நானும் ஒரு பதிவுக்கு தலைப்பாய் வைத்தேன். பிடித்த பாடல், பிடித்த படம்.

  உங்கள் விடுமுறை நாட்கள், விமானநிலையம் சென்றது, பயண அனுபவங்கள் அருமை.


  சிறு பிள்ளையாய் இருக்கும் போது விமானங்களை பார்த்தேன் தலையை உயர்த்தி. இப்போதும் மகன் வீட்டு தோட்டத்தில் 5 நிமிடத்திற்கு ஒரு தரம் பறக்கும் பயிற்சி விமானங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன். விடுமுறை காலங்களில் ரோந்து சுற்றும்
  ஹெலிகாப்டரை பார்க்கிறேன்.

  கோவையில் பள்ளியில் படிக்கும் போது விமான நிலையத்தை காட்ட பள்ளியில் அழைத்து போனார்கள். அப்போது எல்லாம் யாராவது தலைவர்கள் வந்தால் , தெரிந்தவர்கள் வந்தால் விமானநிலையத்திற்கு வரவேற்க உள்ளே அனுமதி உண்டு . இப்போது அனுமதி இல்லை. விமானம் தரை இறங்குவதை பார்த்து மகிழ்ந்த காலம்.

  இந்திரா காந்தி அவர்களை பார்க்க ஒரு தடவை பள்ளியில் அழைத்து போனார்கள். அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை பார்த்தோம்.
  பள்ளி பிள்ளைகள் எல்லாம் வெயிலில் அவதிபட்டோம். கொண்டு போன பிஸ்கட், தண்ணீர் எல்லாம் காலி செய்து விட்டு அவதி பட்டது எல்லாம் நினைவுகளில்.

  விமான முதல் பயணம் டெல்லி , மாமனார், மாமியாரை அழைத்து கொண்டு போனோம். பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டியை விமானத்தில் அழைத்து வர டிக்கட் எடுத்து கொடுத்தார்கள்.
  அடுத்து புனித யாத்திரைகள், மகன், மகள் வீடு என்று விமானபயணம் செய்து கொண்டு இருக்கிறேன். ஏறும் போது இறைவனுக்கு ஒரு பிரார்த்தனை, தரை இறங்கியவுடன் நன்றி சொல்லி ஒரு பிரார்த்தனை.

  ஜன்னல் ஓரம் கிடைத்தால் வெண் மேகங்களை படம் பிடிப்பேன்.
  ஆறுகள் சூரிய வெளிச்சத்தில் தங்கம் உருகி ஓடுவது போல ஓடுவதை ரசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் அருமை.தலைப்பின் பாடல் எனக்கு பிடித்தமானது. சாந்தி நிலையம் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். இதில் நாகேஷ அவர்களின் ஸ்டைலுக்காகவே இந்தப்பாடலை விரும்புவேன்.

  உங்கள் சிறு வயது நினைவுகளும் அருமை. படித்து ரசித்தேன். விமானங்கள் பறந்தால் நானும் மேலே பார்த்து அது கண்களுக்குத் தெரியும் வரை பார்ப்பேன். (இப்போதும்.) நான் விமான நிலையம் சென்று பார்த்ததில்லை. எங்கள் பெரிய மகன் அலுவலக வேலையாக அமேரிக்கா சென்ற போது அவரை வழியனுப்ப சென்றிருந்தோம். பின் இருதடவைகளாக சென்னைக்கும், ஹைதராபாத்தும், விமானம் ஏறி பயணிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பயணிக்கும் நேரங்களில் சற்று படபடப்பாகத்தான் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!