திங்கள், 27 மே, 2024

"திங்க"க்கிழமை   :  நூல்கோல் குருமா  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 நூல்கோல் குருமா

நூக்கல் என்றும் சொல்வர்.. 

(ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும்!..)




தேவையான பொருட்கள்: 
நூல்கோல் கால் கிலோ 
தேங்காய் - ஒரு மூடி 
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
முந்திரிப்பருப்பு - 10
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
பூண்டு - 6 துணுக்கு 
பூண்டுக்கு சம அளவாக இஞ்சி
கொத்தமல்லி - சிறிது 
கல் உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு... 
பட்டை - 1 
கிராம்பு - 2 
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 1/2 டீஸ்பூன் 

தாளிப்பதற்கு...
பெருஞ்சீரகம்  - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்  கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
நெய் - 3 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:
நூல்கோலை சுத்தம் செய்து விரும்பியவாறு நறுக்கி நூல்கோல் துண்டுகள் மூழ்கும் வரை நீர் விட்டு  உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்..

தேங்காயைத் துருவிக்  கொண்டு வெங்காயத்தை சன்னமாக  நறுக்கிக் கொள்ளவும்.. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, சூடானதும்
அதில் சிறிது நெய் ஊற்றி , வறுத்து அரைப்பதற்கான   பொருட்களை ஒவ்வொன்றாக   வாசம் வரும் வரை வறுத்து  ஆற விடவும்..   முந்திரிப் பருப்பையும் சற்று வறுத்துக் கொள்ளவும்..

பின் மிக்ஸியில் வறுத்த பொருட்களுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு  அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து  சமையல் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, அதில் சிறிது நெய் விட்டு சூடானதும் - கறிவேப்பிலை பெருஞ்சீரகம், மிளகு சேர்த்து தாளித்து அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் பச்சை மிளகாய்
சேர்த்து  வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
ஓரளவுக்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், அரைத்தெடுத்த தேங்காய் விழுது, முந்திரிப்பருப்புடன் சுவைக்கேற்ப மேலும் சிறிது உப்பு சேர்த்து,  வெதுவெதுப்பான நீரை ஊற்றி தளதளத்து வரும்போது வெந்திருக்கும் நூல்கோலையும் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கி விட வேண்டும்...

நூல்கோல் நரம்பு தளர்ச்சியை தடுக்கின்றது..  சிவப்பு அணுக்களை அதிகரிக்கின்றது என்கின்றனர்..

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விரும்பினால் சமைத்து உண்ணவும்.. இல்லை எனில் விட்டு விடவும்..

உங்கள் நலன்
உங்கள் கையில்..

ஃஃஃ

41 கருத்துகள்:

  1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.... வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையற்களம் காண்பதற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இதனையும் ஒரு குறிப்பு எனக் கொண்டு பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்..

      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா.. வணக்கம், நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக நூல்கோல் குருமா நன்றாக உள்ளது. படங்களும் அழகாக இருக்கிறது.

    இதுவரை நான் நூல்கோலை சாதாரணமாக தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்திருக்கிறேன். தேங்காய் சீரகம், மி. வத்தல் சேர்த்து கூட்டு செய்திருக்கிறேன். (சாதத்திற்கும் , சப்பாத்தி போன்றவைக்கும்.) இப்படி மசாலா சேர்த்து குருமா செய்ததில்லை. இனி இப்படி ஒருநாள் செய்து பார்க்கிறேன்.

    அருமையான விபரங்களுடன் செய்முறையை சொல்லியிருப்பதற்கு நன்றி. நூல்கோலின் சக்தியையும் தெரிந்து கொண்டேன். அதன் பயனுள்ள விபரங்களை தந்தமைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குவைத்தில் இருந்த போது அடிக்கடி இந்த மாதிரி செய்து கொள்வேன்.. அங்கே எல்லா காலத்திலும் கிடைக்கின்ற நூல்கோல் இங்கே எப்போதாவது தான் கிடைக்கின்றது..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்...

    நேற்று தஞ்சையில் முத்துப் பல்லக்கு வைபவத்திற்கு செல்வதற்கு இயலாதபடி அசௌகரியம் ஏற்பட்ட நிலையில் காட்சிகளை வழங்கி மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன... ஆன்மீகச் செல்வர் பட்டத்தை இந்தப் பொடிப்பையர் ஶ்ரீராம் பெற்றுவிடத் துடிக்கிறாரே

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று இணையமும் சரியில்லை..

      பொழுது விடிந்து எழுவதற்குத் தாமதம்..

      பதிவு வெளியான பின்பு தான் காணொளி இணைக்கப்பட்டு உள்ளது..

      காண்க.. கண்டு மகிழ்க..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. துரை அண்ணா, அருமையாஅ செய்முறை. குறிப்புகளும் சூப்பர்.

    நான் நூல்கோலில் குருமா செய்வதுண்டு உங்கள் குறிப்புகளையும் பார்த்துக் கொண்டேன்.

    நாம் வழக்கமாகச் செய்யும் கோஸ் கூட்டு கறி போன்றவையும் நூல்கோலில் செய்வதுண்டு. ஆவியில் வேக வைத்து சலாடிலும் சேர்த்துக் கொள்வதுண்டு.

    ஆனால் தைராய்ட் பிரச்சனைகள் உள்ளவர்கள் நூல்கோல், கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, ப்ர்ஸ்ஸில்ஸ் ஸ்ப்ரௌட் இப்படியான குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் மிகவும் சத்துள்ளவை என்றாலும் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. எப்போதேனும் அரிதாக எடுத்துக் கொண்டாலும் பச்சையாகச் சாப்பிடாமல் நன்றாக வேக வைத்துக் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் கீதா ரங்கன்(க்கா)விற்கு நல்வரவு

      தைராய்ட் பிரச்சனை உள்ளவர்கள் பட்டினி கிடப்பதைத் தவிர வேறு என்ன காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

      நீக்கு
    2. ஹாஹாஹா...நெல்லை டாக்டர் னு என்னைக் கலாய்த்தாலும் பொதுவெளில இப்படி சொல்லி அப்புறம் நிஜமாவே நான் டாக்டர் நு நம்பிடப் போறாங்க...ஹிஹிஹிஹி...

      பட்டினி எதுக்கு. சாப்பிட நிறைய இருக்கே...தவிர்க்க்ச் சொல்லப்பட்டவையும் கூட கொஞ்சமாகச் சாப்பிடலாம் நெல்லை.

      புரதச்சத்து சேர்த்துக்கச் சொல்வாங்க. பெர்ரி வகை பழங்கள், தயிர், (அசைவத்தில் சொல்வதுண்டு ஆனால் எனக்கு அது பற்றியது தெரியாது என்பதால் சொல்லவில்லை)

      மற்ற காய்கள் இருக்கே நிறைய, அதெல்லாம் சேர்த்துக்கலாம்.

      ஆனா ஒண்ணு இதெல்லாம் பொதுவா சொல்றது. தைராய்டோடு வேறு பிரச்சனைகள் இருந்தா அதெல்லாம் நல்ல மருத்துவரைக் கேட்டுக் கொள்வதுதான் நல்லது. ஒரு சில மருத்துவர்கள் தான் சரியான உணவுகள் மூலமாக எப்படிச் சமாளிக்கலாம்னு சொல்றாங்க. ஆனா அதையே நாம கேக்கறதில்லை.

      என்னைப் பொருத்தவரை உணவும், உடற்பயிற்சிகளுமே மருந்து! மாத்திரைகள் எல்லாம் தவிர்க்க முடியாத சப்ளிமென்ட்!

      கீதா

      நீக்கு
    3. /// உணவும், உடற் பயிற்சிகளுமே மருந்து!.. ///

      உண்மை தான்..

      மற்ற காய்கள் இருக்கின்றனவே , அதெல்லாம்
      நிறைய
      சேர்த்துக்கலாம்.

      இதுவும் சரிதான்...

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  11. பஹ்ரைனில் கடைகளில் பெரும்பாலும் நூல்கோல், உருளை போட்ட குருமாதான். எனக்குப் பிடித்தமானது. சென்ற முறை இதற்காகவே வாங்கிவந்த நூல்கோலு கூட்டு செய்துவிட்டார் மனைவி.

    பொதுவா நான் குருமா தவிர வேறு எதற்கும் நூல்கோலைப் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. பல ஹோட்டல்களிலும் நூல்கோல், கோஸ் போன்றவை சீப் என்பதால் உபயோகப்படுத்தப்படுவதால் (பஹ்ரைன்)

    இதே முறையில் வரும் வாரத்துக்குள் செய்துபார்க்கச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இதே முறையில் வரும் வாரத்துக்குள் செய்து பார்க்கச் சொல்கிறேன்.. ///

      மகிழ்ச்சி..
      நன்றி... நன்றி..

      நீக்கு
  12. நான் குறிப்புகளில் தேங்காய் சேர்ப்பது சொன்னாலும் நம் வீட்டில் தேங்காய் சேர்ப்பது அரிது. பெரியவருக்குச் சர்க்கரை, கொழுப்பு எனக்குச் சர்க்கரை என்பதால் தேங்காய்க்குப் பதில் விதைகளையும், பொட்டுக் கடலையையும் பொடித்துச் சேர்ப்பது வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரை இருப்பதால் அரிசிச் சாத்த்துக்குப் பதில் காலிஃப்ளவர் ரைஸ், எனக்கு சர்க்கரை கூடுதலாக இருப்பதால் தட்டில் சாதம் இருப்பதாகப் பாவனை செய்துகொண்டு மற்றவற்றைப் போட்டுக்கொள்வேன் னுலாம் இவங்க எழுதிடுவாங்களோ?

      நீக்கு
    2. /// சர்க்கரை இருப்பதால் அரிசிச் சாத்த்துக்குப் பதில் காலிஃப்ளவர் ரைஸ், ///

      இப்படியும் இருக்கின்றதோ?..

      நீக்கு
    3. காலிஃப்ளவர் ரைஸ் என்றால், காலிஃப்ளவர் நன்றாக உதிர்த்து வேக வைத்துக் கொண்டு (சாதத்திற்கு பதிலாக, அதை அறவே தவிர்த்து ) அதில் சாம்பார், ரசம், தயிர் மற்ற காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதா? ரொம்ப சர்க்கரை இருப்பவர்கள் இப்படி சாப்பிட வேண்டுமென கொஞ்சம் கேள்விபட்டுள்ளேன். அதனால்தான் விபரமாக கேட்கிறேன். ஆனால் காலிஃப்ளவரில் புழு நிறைய இருக்குமென்பதால் நான் அந்த காய்கறியே வாங்குவதில்லை.

      எனக்கு சர்க்கரை நிறையவே இருக்கிறது. ஒரு வருடங்களுக்கும் மேலாக நடுவில் செக் பண்ணவேயில்லை. கால் பாதங்கள் இரண்டும் எப்போதுமே மதமதப்பாக இருப்பதை உணர்கிறேன். மருத்துவரிடம் சென்றால் இப்படியெல்லாம் (காலிஃப்ளவரை சாப்பிடச் சொல்லி) பயமுறுத்துவார்களே என செல்லவேயில்லை. ஆரம்பத்திலிருந்து சுகருக்கமான மருந்தும் என் உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ள வில்லை. நடப்பது "அவன்" செயல் என விட்டு விட்டேன். என்ன இருந்தாலும் முடிவு "அவன்" விருப்பந்தானே..!

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா நெல்லை .....சிரித்துவிட்டேன். அது காலிஃப்ளவர் ரைஸ்னு சாப்பிடறது...நினைவுக்கு வந்திருச்சு கீட்டோ டயட். அதுல சொல்றதுண்டு. ஆனா நான் செய்து பார்க்கலை. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அதைச் சாப்பிடுகிறார். கூடவே நடைப்பயிற்சி. இன்சுலின் குத்திக் கொள்ள வேண்டியதாக இருந்ததிலிருந்து இப்ப மிகச் சிறிய அளவு மாத்திரை போதும் என்ற லெவலில் வந்திருப்பதாக அறிந்தேன்.

      காலிஃப்ளவர் தினமும் என்பது எல்லாராலும் முடியுமா, சாப்பிடலாமா என்பது தெரியலை. என்னைக் கேட்டால் அளவோடு எதையும் சாப்பிட்டா நல்லது.

      சர்க்கரை உள்ளவர்கள் கூடியவரை வெள்ளை அரிசியைத் தவிர்ப்பது நல்லது.

      ஒரு நாள்தானே ஒன்றும் ஆகிவிடாது....ஒரு தடவை தானே ஒன்றும் ஆகிவிடாது....இன்று நல்ல நாள் ..வெல்லம் போட்ட இனிப்புதான் தேன் விட்ட இனிப்புதான் என்று .இப்படி சென்டிமென்ட்ஸ் ஸ்வீட் சாப்பிடுவோம் அப்படி ஒரு மாதத்தில் சில நாட்கள் ஆகிவிடும்.

      இது பத்தி நான் சொன்னா லெக்சர் மாதிரி ஆகிடும். ஸோ தவிர்க்கிறேன்.

      அவரவர் உடலை, உடல் ஆரோக்கியத்தை அவரவர் மதிக்க வேண்டும். இயற்கையால், மாபெரும் சக்தியால் வழங்கப்பட்டிருக்கும் நம் உடலுக்கும், நமக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்னும், நம்மைச் சுற்றி உள்ளவங்களைக் கஷ்டப்படுத்தாம இருக்கணும்னும்ன்றது என் தனிப்பட்ட எண்ணம்.

      //எனக்கு சர்க்கரை கூடுதலாக இருப்பதால் தட்டில் சாதம் இருப்பதாகப் பாவனை செய்துகொண்டு மற்றவற்றைப் போட்டுக்கொள்வேன் னுலாம் இவங்க எழுதிடுவாங்களோ?//

      ஹாஹாஹாஹா இது பத்தி முன்னரே சொல்லிருக்கேனே நெல்லை. எனக்கு சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில்தான் இருக்கு சாஃப்ட் டாப்லெட் தான். ஆனால் அதைப் பராமரிக்க உண்மையாகவே நான் விருந்துகளில்/கல்யாணங்களில் இரவு உணவு தாமதித்தால் தவிர்த்துவிடுவேன். அல்லது தவிர்க்க முடியாத சூழல் என்றால் காய்கள், சூப் இருந்தால் சூப் என்று மட்டும், சாப்பிடுவது வழக்கம்.

      கீதா

      நீக்கு
    5. காலிப்ளவர், முட்டைகோஸ் முதலானவை தைராய்ட், ஆர்த்ரைடிஸ் போன்றவை இருப்பவர்கள் சாப்பிடக் கூடாதே....

      நீக்கு
    6. //காலிஃப்ளவரில் புழு நிறைய இருக்குமென்பதால்// - இதனை வெந்நீரில் சுத்தம் செய்யணும். யாரும் பொறுமையாச் செய்ய மாட்டாங்க. ஹோட்டல்ல கேட்கவே வேண்டாம்.

      அது சரி..மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் நம் இட்லி தோசை மாவிலும்தான் புழு நெளியும் என்கிறார்கள்.

      கமலா ஹரிஹரன் மேடம்.... எல்லாம் அவன் செயல்தான். ஆனால் உள்ள தள்ளினது நம்ம தானே... அதனால் அதற்கேற்ற மருந்தும் நாமதான் சாப்பிடணும். பெண் திருமணத்திற்குப் பிறகு (இனிப்புகள் ஏகப்பட்டது உள்ள தள்ளி) எடையும் கூடிவிட்டது. அதனால் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று நினைத்து இரண்டு நாளாகிறது (நாட்கள் எவ்வளவு மெதுவாக நகர்கின்றன ஹா ஹா)

      நீக்கு
    7. //சர்க்கரை உள்ளவர்கள் கூடியவரை வெள்ளை அரிசியைத் தவிர்ப்பது நல்லது.// - அப்போ கலந்த சாதம் சாப்பிட்டுடலாமா?

      திடுமென, கடந்த சில நாட்களாக நான் பல வருடங்களாக உபயோகப்படுத்தும் கோலம் அரிசி (60 ரூ இருந்து இப்போ 80 ரூ க்குப் போயாச்சு) போன்றவற்றை நிறுத்தி சாதா பச்சரிசி (தோசா பச்சரிசி) சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.

      நீக்கு
    8. /அது சரி..மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் நம் இட்லி தோசை மாவிலும்தான் புழு நெளியும் என்கிறார்கள்./

      ஹா ஹா. அது வேறேயா? ஆம். ஹோட்டலில் இந்த காலிஃப்ளவரை எப்படி சுத்தம் செய்வார்கள் என்ற சந்தேகம் எனக்கும் வருவதுண்டு. அதனால்தான் உணவகங்களில் கோபிமஞ்சூரியன் என்ற உணவை குழந்தைகள் (அவர்களுடன் சேர்ந்து செல்லும் போது.) ஆர்டர் செய்தால், எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

      நாங்களும் கோலம் ரைஸ்தான் எப்போதுமே வாங்குகிறோம். முப்பது நாற்பது ரூபாயிலிருந்து இன்று 90 என வந்து விட்டது. தோசா ரைஸ் சாதத்திற்கு எப்படி இருக்கும்? நானும் சாதத்தை அறவே தவிர்க்கப் பார்க்கிறேன். கோதுமையும், அரிசியும் இனிப்பை கூட்டுவதில் ஒரே மாதிரிதான் எனும் போது, சப்பாத்தி செய்வதிலும் ஆர்வம் குறைந்து விட்டது. என்னவோ!! பசித்துப் புசித்தாலும் பிரச்சனைதான் என்ற ரீதியில், இப்போது பயமுறுத்தல்கள் நிறையவே வந்து விட்டது.அதனால்தான் நடக்க நடக்க நாராயணன் செயல். படுக்கப் படுக்க பரந்தாமன் செயல். என்கிறேன்.

      நீக்கு
    9. ஆ,மா ஸ்ரீராம், தைராய்ட், அர்த்ரைட்டிஸ் இருக்க்றவங்களும் காலிஃப்ளவரை அதைப் போன்ற குடும்பக் காய்களைத் தவிர்ப்பது நல்லதுந்னுதான் சொல்லப்படுகிறது.

      //காலிஃப்ளவர் ரைஸ் என்றால், காலிஃப்ளவர் நன்றாக உதிர்த்து வேக வைத்துக் கொண்டு (சாதத்திற்கு பதிலாக, அதை அறவே தவிர்த்து ) அதில் சாம்பார், ரசம், தயிர் மற்ற காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதா? ரொம்ப சர்க்கரை இருப்பவர்கள் இப்படி சாப்பிட வேண்டுமென கொஞ்சம் கேள்விபட்டுள்ளேன். அதனால்தான் விபரமாக கேட்கிறேன்.//

      கமலாக்கா, நானும் காலிஃப்ளவர் ரைஸை செய்து பார்த்ததுண்டு ஆனால் என் சுகருக்கு என்று அதை முயற்சி செய்ததில்லை. ஆமாம் நீங்க சொல்லியிருப்பது போலத்தான் நன்றாகச் சோதித்துப்பார்த்துக் கொண்டு உதிர்த்து துருவி வேக என்பதை விட ஆவியில் வைத்து அதில் நாம் வழக்கமாகக் குழம்பு ரஸம் என்று சாப்பிடுவது போல...

      ஆனால் உங்களுக்குத் தைராய்ட் அல்லது ஸ்ரீராம் சொல்லுவது போல அர்த்ரைட்டிஸ் மூட்டுவலிகள் இருந்தால் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கோங்க. மத்தவங்களுக்கு அரிசி சாதம் செய்தாலும் உங்களுக்கு மட்டும்னு கொஞ்சமா செய்துக்கோங்க. ஏன்னா விலை அதிகம்தான். அளவும் வைச்சு சாப்பிடுங்க. சர்க்கரை கட்டுப்பட்டில் சரியாக இருந்தால் மற்ற பிரச்சனைகளைச் சமாளிக்கலாம் அக்கா.

      நெல்லை
      //எல்லாம் அவன் செயல்தான். ஆனால் உள்ள தள்ளினது நம்ம தானே... அதனால் அதற்கேற்ற மருந்தும் நாமதான் சாப்பிடணும். //

      யெஸ் டிட்டோ டிட்டோ....அப்படியே சொல்வேன் நானும். அவன் கொடுத்த புத்திய நாம பயன்படுத்தாம

      கீதா

      நீக்கு
  13. நூல்கோல் மசாலாக் குருமா நன்றாக இருக்கிறது.

    நாங்கள் கூட்டு, தேங்காய் பால் கறி செய்வோம். இம்முறையில் முந்திரி,மசாலாக்கள் அரைத்து செய்தால் நன்றாகத்தான் இருக்கும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நன்றாகத்தான் இருக்கும்..

    செய்து பாருங்கள்.

    மகிழ்ச்சி..
    நன்றி மாதேவி..

    பதிலளிநீக்கு
  15. பெயர் புதுமையாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  16. நூல்கோல் குருமா நன்றாக இருக்கிறது. செய்முறை குறிப்பும், படங்களும் அருமை. நான் சாம்பாரில் போடுவேன், கூட்டு செய்வேன். குருமா மாதிரி இல்லாமல் மசாலா கூட்டு போல செய்து சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்வேன்.
    குருமா செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலிஃப்ளவரை நன்றாக வெந்நீரில் சுத்தம் செய்ய வேண்டும்...

      அது நல்லது தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  17. /// காலிஃப்ளவர் ரைஸ் என்றால்.. ///

    அவசரப் பதிவாகத் தருகின்றேன்...

    ஸ்ரீராம் அவர்களது அனுமதி வேண்டும்!...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!