வியாழன், 23 மே, 2024

நான்தானா அவர் நினைத்தது?

 என்னைப் பார்த்தவர், என்னையே பார்த்தபடி மக்களை விலக்கி ஓரம் நோக்கி நகரத் தொடங்கினார்.  என்னிலிருந்து விலகாத அவர் பார்வையிலிருந்து என்னை நோக்கிதான் அவர் வருகிறார் என்று புரிந்தது.

ரங்கநாதன் தெருவின் அடர்மக்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருக்க, 'வந்து இணைந்து கொள்கிறேன், அங்கேயே காத்திரு' என்று சொன்ன நண்பனுக்காக ஓரம் நின்று  காத்திருந்தேன்.

மக்களை, அவர்களது நகர்வை, பரபரப்பை,  ஆயாசத்தை ஆர்வத்தை, முகபாவங்களை வழக்கம்போல சுவாரஸ்யமாக அளவெடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்போதுதான் அவரை கவனித்தேன்.

எனக்கு தெரிந்தவரா?  நினைவு அடுக்குகளில் தேடிப்பார்த்தேன்.  எதிர்க்கடையில் ஒரு செவ்வக இயந்திரத்தில் எண்பத்தொரு எண்பத்தொரு இட்லிகளாக அவித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த அடுக்கில் ஒரு இட்லியில் கூட அவர் யாரென்று எனக்கு தோன்றவில்லை.

எதிர்ப்புன்னகையை எதிர்நோக்கி என்னிடம் வந்தவர், தாமதமானதால் தயங்கினாலும் நெருங்கினார்.  அவர் கை எனக்காய் நீண்டது.

"எப்படி இருக்கீங்க...   சௌக்கியமா?" என்றார் அகலமான புன்னகையோடு.

கையை அளவாய்ப்பற்றி "ம்ம்ம்...   நீங்க?" என்றேன் அளவான புன்னகையோடு.  'யாரு?'

இவ்வளவு நம்பிக்கையுடன் பேச வந்தவரிடம் "யார் நீங்க...  எனக்கு தெரியலையே" என்று சொல்ல நாகரீகம் தடுத்தது. 

"இன்னும் அங்கேயேதானா?"  -  எங்கே?  எங்கே சொல்கிறார்?  வீடா?  ஆபீஸா?  இன்னமும் பிடி கிடைக்கவில்லை எனக்கு.

"ஆமாம்" -  நடுவாந்திரமாய் சிரித்து வைத்தேன்.  ஏனோ மையமாய் என்று சொல்ல வரவில்லை.

"நீங்க...?" என்றேன்.  'இப்போ கண்டு பிடித்து விடலாம்'.

சிரித்தார்.  "நானும் அதே இடம்தான்!"   'யோவ்....'

"பார்த்து நாளாச்சு போல...   (என்னதான் மறதி இருந்தாலும் சமீபத்தில் பார்த்திருந்தால் கொஞ்சமாவது மனதில் மணி அடித்திருக்குமே)  லாங் டைம் நோ ஸீ.."   நகைச்சுவையை அளவாய்க் கலந்து கொஞ்சம் சௌஜன்யத்தைக் காட்டி அறிய முயன்றேன்.

"என்ன..  இங்க நிக்கறீங்க?"  'யோவ்...   என் கேள்விக்கு பதில் எங்கேய்யா?'

சொன்னேன்.

"என்ன ஹெவி பர்சேஸா?" என்றேன்.  கையில் கொஞ்சம் பொருட்கள் வைத்திருந்தார்.

"கொஞ்சம்...    ஜி பே வொர்க் ஆகலை.  ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்னு போறேன். அவ நிக்கறா கடைல"  '  அவளா?  எவ?  அதில் நமக்கு டிப்ஸ் கிடைக்கலாமோ...   அல்லது ஏமாற்றுப் பேர்வழியா..  நாம் நினைத்தது சரிதானா?  நம்மிடம் எதாவது பணம் கேட்கப் போகிறாரா?'

"ஓ..   வொய்ஃபும் வந்திருக்காங்களா?  நல்லா இருக்காங்களா?"

".ம்ம்ம்.  பழைய ப்ராப்ளம் கொஞ்சம் இருக்கு..   உங்களுக்குதான் தெரியுமே..."  'எனக்கு என்னய்யா தெரியும்..  உன்னையே இன்னும் யாருன்னு கண்டு பிடிக்க முடியல...'

"வாங்க..  ஒரு ஜூஸ் குடிப்போம்..  அப்பா...  என்ன வெயில்...  வெக்கை.."  பக்கத்து ஜூஸ் கடைக்குள் நுழைந்தார்.  'ஓ..  ஒரு ஜூஸுக்காகததான் இவ்வளவுமா?  ஒழியட்டும்..  சீப்பாகத்தான் இருக்கு..'

அமர்ந்து கொண்டோம்.  "ரெண்டு சாத்துக்குடி" என்றார் அவர் கடைக்காரரிடம்.  சட்டென அவர் போன் ஒலித்தது.  எடுத்து அலைபேசி திரையை உற்று நோக்கியவாறு சில வினாடிகள் தாமதித்து அட்டெண்ட் செய்து பேசத்தொடங்கினார்.

'இப்போ கண்டுபிடிச்சுடலாம்....'  என்ன பேசுகிறார் என்று எங்கோ பார்த்தபடி கவனமாக கேட்டேன்..

'ம்ம்... சரி, வந்துடறேன்...முடிச்சிடலாம்...ஓகே' இந்த வார்த்தைகளை வைத்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.

மொபைலை எடுத்து நண்பன் அனுப்பி இருந்த லைவ் லொகேஷனைப் பார்த்தேன்.  இன்னும் கால் மணி ஆகும், அவன் இங்கு வர!

கடைக்குள் சிறிய சலசலப்பு எழுந்தது.  ஒரு பையன் வினோதமான தலைமுடியுடன் கல்லாக் காரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.  என்ன பேச்சு யார் பக்கம் நியாயம் என்று அறியும் முன்னரே நான் என் மனதுக்குள் அந்த இளைஞனுக்கு எதிர்ப் பக்கம் எடுத்ததற்கு அவன் ஹேர்ஸ்டைல்தான் காரணம்.  ஜுஸைக் குடித்துக் கொண்டே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

மறுபடியும் அவர் போன் மணி அடிக்க, திரையைப் பார்த்தேன். 'Pondaatti ' என்று ஒளிர்ந்தது.  கிளாஸை வேகமாகக் கீழே வைத்து விட்டு போனை எடுத்தார்.  "இதோ..  இதோ...  வந்துட்டேன்மா...  ஏ டி எம் எதுவுமே பக்கத்தில் இல்லை...  இதோ வந்துடறேன்" என்றவர் போனை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு காசு எடுத்த என் கையைப் பிடித்து அமுக்கி விட்டு அவர் கொடுத்தார்.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"போன வாட்டியே சொன்னேன்ல..  அடுத்த வாட்டி நான்தான் கொடுப்பேன்னு...  வர்றேன்..  பார்ப்போம்" என்று புன்னகையுடன் வேகமாக நடந்து சென்றார்.

ஆமாம், யார் அவர்?

நானாவது அவர் நினைத்தவர்தானா?

நண்பன் வந்ததும் நடந்ததைச் சொன்னேன்.  "அவர் பேர் என்ன மணிவண்ணனான்னு கேட்டியா?  உன்ன போட்டுப் பார்த்துட்டு போயிருக்கார் ஒருத்தர்" என்றான்.

===============================================================================================

ஃபேஸ்புக்கில் படித்ததை....

1930 கால பேருந்தின் கட்டமைப்பு :


பஸ்ஸின் உள்பகுதி டாப்பில் இப்போது இருப்பது போல அழகழகான மைகா ஷீட் இருக்காது. ரீப்பர்கள் குறுக்கும் நெருக்கமாக இருக்கும். பெரும்பாலும் இளம்பச்சை அல்லது நீல வர்ணம்தான் உட்புறத்தில் அடித்திருப்பார்கள்.
சீட்டுகள் எதிர் எதிராக ரயிலில் இருப்பது போல இருக்கும். நான்கு பேர் அமரலாம்.
இன்னொரு பக்கம் ஏறும் பாதைக்கு மட்டும் இடம் விட்டு இருபக்கமும் நீளமான ஒரே சீட்டு. பெரும்பாலும் ஏறி இறங்க ஒரே வழிதான் இருக்கும். அது அநேகமாக பஸ்ஸின் கடைசியில் இருக்கும். கண்டக்டர் அரை டிரௌசர் அணிந்திருப்பார். டிரைவர் தொப்பி அணிந்திருப்பார். அதிக பட்சமாக ஐம்பது கிலோ மீட்டர் வேகம்தான். அதுவே அதிகம் என்பார்கள். ஒவ்வொரு நிறுவன பேருந்துக்கும் பேருந்து நிலையத்தில் அது நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே முன்கூட்டியே டிக்கெட் வாங்க ஏற்பாடு இருக்கும். ஓவர் டிக்கெட் மற்றும் ஸ்டாண்டிங் கிடையவே கிடையாது. வழியில் முக்கிய நிறுத்தங்களில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றியதும் கண்டக்டர் சொல்ல சொல்ல டிரைவர் பயணிகள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இறங்கும் இடங்களை தன்னிடம் இருக்கும் டிரிப் ஷீட்டில் எழுதிய பிறகே வண்டியை ஸ்டார்ட் செய்வார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் வண்டி நிற்கும் போதும் இன்ஜினை ஆஃப் செய்து விடுவார். தபால் பார்ஸல்களை தபால் துறை ஆள் கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட அந்தந்த இடத்தில் சரியாக அதை கண்டக்டர் அங்கே காத்திருக்கும் தபால் ஊழியரிடம் கொடுப்பார். சினிமா பட ரீல்கள் உள்ள பெட்டிகள் பஸ்ஸில்தான் வந்து இறங்கும். பஸ்ஸை எடுக்கும் முன் டிரைவர் கண்டிப்பாக பஸ்ஸின் கீழே குனிந்து எதாவது பிராணிகள் இருக்கிறதா என்று செக் செய்த பிறகுதான் தனது சீட்டில் ஏறி உட்காருவார். மூன்று விரக்கடை அளவு உள்ள மஞ்சள், பச்சை, ரோஸ், நீலம் போன்ற கலர்களில் இருக்கும் டிக்கட்டுகளில் கார்பன் பேப்பர் வைத்து பென்ஸிலில் ஊர் பெயர், தொகை விவரங்களை எழுதி கிழித்து கொடுப்பார் கண்டக்டர். பஸ்ஸின் உள்ளே பின் புற கடைசியில் இருந்து டிரைவர் சீட் வரை ஒரு கயிறு கட்டி டிரைவரின் தலைக்கு மேலே ஒரு பெல் கட்டி இருக்கும். கண்டக்டர் அந்த கயிறை இழுத்தால் டிரைவருக்கு மட்டுமே கேட்கும் ஒரு மெல்லிய அழகிய ஒரே டிங் ஒலி. பஸ் நிற்க, புறப்பட அதுதான் சிக்னல். காதருகே விசில் சத்தம் எல்லாம் பிறகு வந்தது.
நன்றி:  Seelan jaankiraaman

Classic TNSTC KL buses

==============================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

Newsroom 23.05.24

- சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 13 லட்சம் பேர்கள் அதிகமாக ஆன் லைனில் மின்சாரக் கட்டணம் கட்டியிருக்கிறார்கள்.

- இந்தியாவில் சிறிய கார்களை வாங்குபவர்கள் குறைந்ததால் அதை ஏற்றுமதியில் ஈடுகட்ட முனையும் கார் உற்பத்தி நிறுவனங்கள்.

- பறக்கும் படை என்று கேள்வி பட்டிருக்கிறோம். 'பீஷ்ம்' என்னும் 720 கிலோ எடை கொண்ட பறக்கும் மருத்துவமனையை ஐ.ஏ.எஃப். நிறுவி அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாராசூட் மூலம் வெற்றிகரமாக ஆக்ராவில் தரையிறக்கியிருக்கிறது. பேரிடர் காலங்களில் வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டவர்கள் உயிரை காப்பாற்றும் விதமாக இந்த மருத்துவமனை அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 200 பேர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். 

- ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்.

- பொருளாதார நஷ்டத்தை ஈடுகட்ட முடியாததால் ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரிட்டிஷ் பதிப்பு இந்த மே மாதத்தில் முடிவுக்கு வருகிறது. கடந்த 86 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த சஞ்சிகை என்பது குறிப்பிடத் தக்கது.

- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1967 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய விஜயலட்சுமி என்னும் 71 வயதாகும் பெண்மணி சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாற்றுச் சான்றிதழ்(TC) கோரி பள்ளிக்குச் சென்று விண்ணப்பித்தார். அதை பரிசீலித்த பள்ளித் தலைமை ஆசிரியர் வெ. பழனிவேல் மிகுந்த சிரமத்திற்கிடையில் அதைத் தேடி எடுத்து விஜயலட்சுமியிடம் வழங்கினார். இந்த விஜயலட்சுமி திரைப்பட இயக்குனரும், நடிகருமான E.V. Ganesh Babu என்பவரின் தாயார் ஆவார்.
========================================================================================

ரசித்த புகைப்படம் ஒன்று வெளிநாட்டு இணையத்திலிருந்து எடுக்காமல் நம்மூர் தினமலரிலிருந்து...


===============================================================================================

"மனுஷனுக்கு வயோதிகம் ஆக ஆக வெளியில இருக்கிற ஆட்கள்கிட்ட மதிப்பு கூடிக்கிட்டே போகும்... உள்ளே இருக்கிற ஆள்களுக்குப் பிடிக்காமப் போயிடும்"


-கி.ரா.

நன்றி: விகடன் நன்றி: கந்தசாமி R, Face Book

=================================================================================

எங்குதான் கவிதையில்லை. என் கவிதையை நான்தான் எழுத வேண்டுமென்ற நிர்பந்தம் இல்லை. படித்த புத்தகங்கள், என் போன்ற பிறர், கிடைத்த அனுபவங்கள், கண்ட கனவுகள், நினைவுகளின் பேயாட்டம் எல்லாவற்றிலும் என் கவிதைகளை அல்லது நான் எழுதத் தவறிய கவிதைகளைக் காண்கிறேன்.
சிருஷ்டி நியதியில், எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்.
எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை.
- நகுலன்
நன்றி: அந்திமழை, கந்தசாமி R, Face Book

==================================================================================================

சென்ற வாரம் ஜீவி ஸார் பின்னூட்டத்தில் நகுலனின் கவிதை ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  நானும் அதை முன்பே படித்திருக்கிறேன்.  இப்போது அந்தக் கவிதையைப் படித்ததும் அது போல ஒன்று எழுத எண்ணினேன்.  இதை எழுதினேன்.  பின்னர் ஒரு யோசனையில் இதையே விரித்து எழுதி வியாழன் பதிவாகவே போட்டு விட்டேன்!  ஹிஹிஹிஹி...   எப்பூடி?

பார்த்துச் சிரித்து 
பல நிமிடம் 
பேசிக்கொண்டிருந்தோம் 
நான் நினைத்தவர்தானா அவர் 
என்று எனக்குத்
தெரியவில்லை.
அவருக்காவது 
அவர் நினைத்தவர் 
நானாகத்தான் 
இருந்திருக்க வேண்டும்!

=======================================================================================


=============================================================================================


========================================================================================

படித்ததிலிருந்து பகிர்வது....

அ மா சாமி 

தமிழ் வாசகர்களுக்கு அ.மா.சாமி அவர்களின் பெயர் பெரும்பாலும் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய எழுத்தை படிக்காத வாசகர்களும் இருக்க மாட்டார்கள். ராணி வார இதழின் ஆசிரியராக 44 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவ்விதழில் குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,கும்பகோணம் குண்டுமணி போன்ற பல பெயர்களில் எழுதினார். அல்லி பதில்கள்கூட நெடுங்காலம் அவரால்தான் எழுதப்பட்டன.

ராணி வார இதழை பெரும்பாலும் தனியாளாகவே எழுதி நிரப்பி வாராவாரம் கொண்டுவந்தார். ராணி வார இதழ் ஆரம்பநிலைக் கல்வி மட்டுமே பயின்ற வாசகர்களுக்கு உரியது. ஆகவே மிகமிக எளிய மொழி கொண்டது. அதற்கான ஒரு நடையை அவர் உருவாக்கிக் கொண்டார். அந்த நடையே பின்னர் தினமலர் நாளிதழின் நடையாக ஆகியது. இன்று முகநூலில் புழங்கும் நடை அதுதான். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி.

ராணி வார இதழ் ஒருகாலத்தில் தமிழில் மிக அதிகமாக விற்பனை கொண்டதாகவும் இந்திய அளவில் மலையாள மனோரமா வார இதழுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்திலும் இருந்தது.விற்பனையை கருத்தில் கொள்வதென்றால் இதழியலில் அவர்தான் தமிழின் மிகப்பெரிய சாதனையாளர்.

ஆனால் அவ்வடையாளங்களை அவர் விரும்பியதில்லை. அவர் எந்த மேடையிலும் அவ்வண்ணம் தோன்றியதில்லை. அவருடைய எந்தப் புகைப்படமும் எங்கும் வெளியானதில்லை. அவருடைய முகமே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. நான் அவரை ஒருமுறை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்

அவருடைய அறிவுலகச் சாதனை அவர் தமிழ் இதழியலின் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதியவர் என்பதே. நீண்டநாட்களாக அவர் அதற்கான தரவுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்த இதழ்த்தொகுப்பு மிகப்பெரியது.

அவருடைய தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி  என்ற நூல் 1987ல் வெளிவந்தது.தமிழ் இதழியல் வரலாற்று ஆய்வில் அதுதான் இன்றும் அடிப்படையான முன்னோடி நூல்.

அதன்பின்னர் திராவிட இயக்க இதழ்கள்,வரலாறு படைத்த தினத்தந்தி, தமிழ் இதழ்கள் வரலாறு,இந்திய விடுதலைப் போர் , இந்து சமய இதழ்கள், தமிழ் இசுலாமிய இதழ்கள், தமிழ் கிறித்தவ இதழ்கள்,19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் என இதழியல் வரலாறு சார்ந்தே பல நூல்களை எழுதியிருக்கிறார்.

அ.மா.சாமியின் ஆய்வுநூல்கள் அனைத்துமே முறையான சான்றுகளுடன் தொகுக்கப்பட்ட சீரான ஆவணத்தொகைகள். பொதுவாசகனுக்குக் கூட வியப்பும் திகைப்பும் அளிக்கும் செய்திகள் கொண்டவை. தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் இன்றியமையாதவை

அ.மா.சாமியின் இயற்பெயர் அருணாச்சலம் மாரிச்சாமி. தன் 85 ஆவது அகவையில் காலமானார்.தமிழ் இதழியல் ஆய்வுகளில் அவர் என்றும் பேசப்படுபவராகவே இருப்பார்.

- ஜெயமோகன்

நன்றி R கந்தசாமி ஸார்.
=======================================================================================

எம் எஸ் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத குழந்தை பருவ நிகழ்ச்சி எது?

எம் எஸ் என் தாயார் திருமதி சண்முக வடிவு ஒரு சமயம் மதுரை ராஜா சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வீணை கச்சேரி செய்து கொண்டிருந்தார் குஞ்சாவுக்கு (எம் எஸ் இன் செல்ல பெயர்) அப்போது எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும் கச்சேரி நடைபெற்ற இடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் குஞ்சாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்கள். மேடை மீது உட்கார வைத்தார்கள் ஒரு பாட்டு பாடும்படி தாயார் சண்முக வடிவு கூறினார் சில தினங்களாகவே குஞ்சா 'ஆனந்த ஜா' என்ற மராட்டிய பாடலை அடிக்கடி ஒரு பரவசமான நிலையில் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பாடலை யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை சிறிதும் பிழை இல்லாமல் தன்னுடைய இனிமையான குரலில் குஞ்சா அந்த பாடலை சபைக் கூச்சம் இல்லாமல் பாடியதை கேட்டபோது சண்முக வடிவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை குழந்தையின் பாடலை சபையோர் மெய் மறந்து கேட்டு ரசித்தனர் எம் எஸ் ஸின் முதல் மேடைக் கச்சேரி இதுதான் 

எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய முதல் இசைத் தட்டு எது? 

'மரகத வடிவம்' என்று துவங்கும் முருகப்பெருமானின் துதி பாடல் ஒன்றை ஹெச் எம் வி கம்பெனியார் இசைத்தட்டாக வெளியிட சண்முகவடிவ அம்மையாரை ஒப்பந்தம் செய்திருந்தார்கள் ரெக்கார்டிங் நடைபெறும் போது 10 வயது குழந்தையாக இருந்த குஞ்சாவின் இனிமையான குரலும், பாட்டும் அவர்கள் கவனத்தை பெரிதும் கவந்தன 'மரகத வடிவம்' பாடலை எம் எஸ் இன் குரலில் இசைத்தட்டாக வெளியிட்டார்கள் சுப்புலட்சுமிக்கு இசைத்தட்டுகள் சேகரித்து வைக்கும் பழக்கம் கிடையாது ஆனால் திருமதி ராதா ஒன்று விடாமல் சேகரிப்பார் இப்போது கூட எம் எஸ் என் முதல் இசைத் தட்ட ராதாவிடம் இருக்கிறது.\\

'பவன்ஸ் ஜர்னல்; பத்திரிக்கையில் ரா. கணபதி எழுதிய கட்டுரையிலிருந்து...

===========================================================================================

பொக்கிஷம்  :-






122 கருத்துகள்:

  1. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாழ்க.. வாழ்க.. வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  4. இந்த முதல் பகுதி எந்த மாதிரியான தமிழ்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது?  இதுவா?

      தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

      ஹிஹிஹி... நல்ல தமிழ்தான்

      நீக்கு
  5. உனது பார்வை என்று அந்த காலத்தில் படித்த வார்த்தைகள்
    இன்றைக்கு

    உன்னின் பார்வை

    என்று அறிவுலக வல்லுநர்களால் இன்றைக்கு சொல்லப்படுகின்றது..

    பதிலளிநீக்கு
  6. பிரிஞ்சி இலை என்பதை Bay leaves என்று மாற்றி - கூகிளானது
    வளைகுடா இலை என்று மாற்றித் தருகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றிலிருந்து ஒன்று... அதிலிருந்து இன்னொன்று!

      நீக்கு
  7. ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் முதல் பகுதி வாசித்து! கிட்டத்தட்ட ராங கால் போலனு சொல்லுங் க. ராங கால் ல ஜூஸ் கிடைக்கா து இதுல ஜூஸ் கிடைத் த து!

    இணையத்தில் அடிக்கும் போ து மட்டும் சில தமிழ் எழு த் து ருக்கள் இப்படி த் தள்ளி தள்ளி அடிச்சாதான் வருது! என்ன பிரச்சனையோ...வேர்டில் பிரச்சனை இல்லை.

    கீ தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ த னா ல் எ ன் ன... எ ப் ப டி யோ க ரு த் து வ ந் திரு க் கி ற து... அ து வு ம் பு ரி கி ற து... அ து போ து ம் கீ தா !

      நீக்கு
    2. ஹாஹா ஹா ஹ்ா ந ன் றி! ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. /// பஸ்ஸை எடுக்கும் முன் டிரைவர் கண்டிப்பாக பஸ்ஸின் கீழே குனிந்து ஏதாவது பிராணிகள் இருக்கிறதா என்று ///

    இப்போதெல்லாம்
    கண்ணாடிக் கதவு பிடுங்கிக் கொண்டு விழுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணணாடிக் கதவு இல்லீங்கோ.....  படிக்கட்டு, அப்புறம் கண்டக்டர் ஸீட்!

      நீக்கு
  9. நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன?..

    நடுவில் கடித்து வைக்காமல் போனால் சரி!..

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. பல விஷயங்களில் பால பாட்ம் தினத்தந்தியும் ராணியும் தான்..

    அ.மா.சாமி அவர்களது கதைகள் தனி ரகம்...

    திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் குரும்பூர்..

    கடந்து செல்கின்ற போதெல்லாம் குப்புசாமி நினைவுக்கு வருவார்...

    அமுதாகணேசன் பக்கத்து வீட்டு அக்கா அல்லவா?...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. செய்தியறை பக்கம் கதவு பூட்டியுள்ளது என் கண்களுக்கு மட்டுந்தானா ?

    இன்று தங்களின் முதல் பக்கம் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. கவிதையும் அருமை. இரண்டும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி அறை கதவை திறந்து விட்டேன் அக்கா...  தாமதத்துக்கு மன்னிக்கவும்!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் பகுதி படிக்க நன்றாக உள்ளது. ஆனால், படிக்கும் பொதே ஏதோ வில்லங்கம் வந்து விடுமோ என மனதுக்குள் ஒரே உதைப்பாக இருந்தது. நல்ல வேளை! அவர் யாரென்று காட்டிக் கொள்ளாமலே நகர்ந்து விட்டார். மறுபடியும் என்றாவது ஒருநாள் அவர் நினைவிருந்து உங்களிடம் அகப்படும் போது, கவனமாக இருங்கள். /இருப்பீர்கள். ஹா ஹா.

    அதைப் படித்ததிலிருந்து நிஜ வாழ்வில் சினிமா மாதிரி இப்படியெல்லாம் கூட நடக்குமா என என் மனது ஆச்சரியத்தில் தவித்துக் கொண்டேயுள்ளது.

    செய்தியறையை காணவில்லையே என உரிமையுடன் கூறி விட்டேன். இதற்கு நீங்கள் மன்னிப்பெல்லாம் ஏன் கேட்ட வேண்டும்.? இப்போது செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். பயனுள்ள செய்திகள். பறக்கும் படை மாதிரி பறக்கும் மருத்துவமனை ஒரு நல்ல செய்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பகுதியில் கடைசி வரியை சேர்க்க வேண்டுமா என்று யோசித்தேன்.  சேர்த்தபின் ஒரு காணொலி இணைப்பை இணைக்க நினைத்திருந்தேன்.  மணிவண்ணன் பஸ்சடாப்பில் அடிக்கும் அந்த லூட்டியை இணைக்க நினைத்திருந்தேன்.  விட்டுப்போய் விட்டது!

      எதிரில் பேசிக்கொண்டிருப்பவர் சட்டென யாரென தெரியாமல் இருந்து, நாமும் அவர் யாரென தெரியவில்லை என்று சட்டென சொல்லிவிட மனம் இல்லாதவர்களாய் இருந்து விட்டால் இப்படி நடக்கலாம்!

      செய்தியறைக்கு தகவல்கள் இரவு சற்று தாமதமாக வரும்.  பெரும்பாலும் காலை (எப்போதும் நாலேகால் மணிக்கு எழுந்து விடுவேன் என்பதால்) காலை இணைத்து விடுவேன்.  சில சமயங்களில் காலை போஸ்ட் வெளியாகி யாரும் பார்க்கும் முன் கூட இணைத்திருக்கிறேன்.   இன்று நான் எழுந்தது தாமதம்.

      நீக்கு
    2. நண்பன் வந்ததும் நடந்ததைச் சொன்னேன். "அவர் பேர் என்ன மணிவண்ணனான்னு கேட்டியா? உன்ன போட்டுப் பார்த்துட்டு போயிருக்கார் ஒருத்தர்" என்றான்.//

      ஓ அதான் மணிவண்ணன்!!! ஸ்ரீராம் நீங்க இதை அழகா கதையா எழுதியிருக்கலாமோன்னு தோணுது! கவிதையோடு!

      கீதா

      நீக்கு
    3. //செய்தியறைக்கு தகவல்கள் இரவு சற்று தாமதமாக வரும்.// இரவு ஒன்பது மணி தாமதமா? நேற்று செய்தி அனுப்பி விட்டு உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை.

      நீக்கு
    4. மன்னிச்சுக்குங்க அக்கா...   தவறாய்ச் சொல்லவில்லை.  நான் ஒன்பது மணிக்கு படுத்து விடும் கெட்ட பழக்கம் கொண்டவன்!

      நீக்கு
    5. பந்திக்கு முந்திக்கோன்னு சொல்வது போல செவ்வாய்க்கும் முந்திக்கணுமோ!! ஆ ஆ எனக்கு அதுதானே கஷ்டமாகிறது! அப்ப இனி அனுப்பினா அது 25 லதான் வருமோ! பரவால்ல. என்னால அப்படி ஓட முடியறதில்ல!! ஸ்ரீராம்.

      முதல்ல நீங்க அனுப்புங்கன்னு நீங்க சொல்றது இங்க வரை கேக்குது!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    6. ஆம்.  அந்தப் பொறுமை இல்லாததால்தான் இங்கேயே வெளியிட்டு விட்டேன் என்பது மட்டுமல்லாமல் ஒரு வியாழனையும் ஒப்பேற்ற முடிகிறது பாருங்கள்!

      நீக்கு
  14. திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் குரும்பூரை (இரயில் நிலையமும் உண்டு என நினைவு) பார்க்கும்போதெல்லாம் குரும்பூர் குப்புசாமி என்ற பெயர் நனைவுக்கு வரும். அவர்தான் அ மா சாமி என்பது தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் ராணிமுத்துவில் அவர் படைப்புகள் வரும். முதல் முதலாக நாவல்களை புத்தக வடிவில் குறைந்த விலையில் மாதம் ஒரு புத்தகமாக தந்தது ராணி முத்துதான் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. எனக்கு உங்களை நினைவில்லை என்று சொல்லியிருக்கலாமே... எனக்கு முகங்கள. நினைவுல் இருக்காது. பலமுறை பார்த்திருந்தால், எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுமே தவிர இன்னார் என்று நினைவில் இருக்காது. இந்தப் பிரச்சனை பற்றி நான் சொல்லிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரென நாமே கண்டுபிடித்து விடுவோம் என்னும் நம்பிக்கை, அவர் Feel செய்யக்கூடும் என்னும் மென்மனம்...  ஆங்...   நெல்லை, இது முழுக்க முழுக்க கற்பனை!

      நீக்கு
    2. அட..! கற்பனையா? உண்மை எனவே நினைத்து விட்டேன் நான். ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இனி கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

      நீக்கு
    3. உண்மை எனவே நினைத்து விட்டேன் என்பதை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.  நன்றி கமலா அக்கா.  அனுபவங்கள் எல்லோருக்கும் பொதுதானே?

      நீக்கு
  16. மனுசனுக்கு வயோதிகம் ஆக ஆக..... இதன் காரணம் எதுக்கெடுத்தாலும் வீட்டில் உள்ளவர்களைத் தொந்தரவு செய்வதாலும், சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்லி அறுப்பதாலும்தான் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைப்பதென்ன, அதேதான்!  வெளியில் அந்த வயோதிகர்களை மதிக்கும் அதே நபர்கள், தங்கள் வீட்டு வயோதிகர்களை மதிக்க மாட்டார்கள்!  கி ரா வின் அனுபவ வரிகள்!

      நீக்கு
    2. அதுவும் உண்மைதான். எத்தனை காலம்தான் கேட்டதையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும், இவர்கள் ஒரு நம்பிக்கையுடன் சொல்வதையும் மாற்றிக் கொள்ள முடியாதுதான். எல்லோருக்கும் இப்படியான சொந்த அனுபவங்கள்தான் இப்படி சொல்ல வைக்கிறது. (என்னையும் சேர்த்துத்தான் இந்த வரி.) ஹா ஹா.

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... சில சமயம் பாடம் படிப்போம். ஆனால் பாடம் மறந்து போகும். உணர்வுகள் மேலேறி நிற்கும்!

      நீக்கு
  17. ஹா.. ஹா.. கடைசி வரையில் அவர் யாரென்று தெரியவில்லையா... ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கற்பனைதானே ஜி..   ஆனால் சமயங்களில் அப்படியும் எனக்கே ஆவதுண்டு.  பின்னர் யாரையாவது கேட்டு தெளிவு பெறுவேன், அல்லது எனக்கே ஞாபகம் வரும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், அனுபவத்தைக் கதையாக, கட்டுரையாக எழுதும் போது அது கதை என்றும், கற்பனையில் கதையாகக், கட்டுரையாக எழுதும் போது அது அனுபவமோ என்று நினைக்கும் போதும் எழுத்தாளருக்குக் கிடைத்த பாராட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா. அப்படி உங்களுக்கு உங்கள் எழுத்துக்குக் கிடைத்த பாராட்டு!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.. உண்மைதான். நன்றி கீதா.

      நீக்கு
  18. அது சரி ஸ்ரீராம், நீங்க ரங்கநாதன் தெருல நின்னுட்டுருந்தீங்க!!!!????? கூட்டம்னாலே அலர்ஜியான நீங்க!!!?

    அத விடுங்க உங்க அனுபவமோ இல்லை கூர்ந்து நோக்கிய சம்பவமோ சொன்னவிதத்தை ரொம்ப ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    மேலே நெல்லைக்கான கமெண்ட்டை நீங்க படிக்கவில்லை போல...

      நீக்கு
    2. பார்த்துவிட்டேன் ஸ்ரீராம். கற்பனைன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பர்!!! டபுள் தமாக்கா!

      கீதா

      நீக்கு
    3. மெட்ரோ வேலை மேம்பாலம் வேலைகளால் ரங்கநாதன் தெருவில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பதாய்ப் படங்களுடன் செய்திகள் பார்த்த நினைவு.நீங்க என்னன்னா ரங்கநாதன் தெருக் கூட்டம்னு சொல்றீங்க. அதுவும் கற்பனையோ?

      நீக்கு
  19. தலைப்பு பார்த்ததும் எனக்கு டக்கென்று "நீ தானா அந்தக் குயில்” பாடல் நினைவுக்கு வந்தது!"

    முதல் பகுதியின் பிரதிபலிப்புக் கவிதை சூப்பர்! பொறுக்கியாச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற பாட்டு... மாயாபஜார் கண்டசாலா பாட்டு... நீதானா என்னை அழைத்தது...

      நீக்கு
    2. ஆமால அந்தப் பாட்டு டக்குனு நினைவுக்கு வரலை! நீங்க இப்ப சொன்னதும் பொருத்தம்!! தோன்றியது.

      கீதா

      நீக்கு
  20. இந்நேரத்துக்கு ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் கமெண்ட் வந்திருக்கணும்.  ஏன் வரவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  21. வேர்ட்ல அடிச்சு காப்பி பண்ணி எப்பவும் போடுவது போல் இங்கு. ப்ளாகர் சிலப்போ கருத்தை போடாது. இல்லைனா மறைச்சுரும் அதனால இது சௌகரியம். இணையத்தில், கம்ப்யூட்டர் வாட்சப் உட்பட தமிழ்ல த், ஞ் ங்க், ந்த, தி சி போன்றவை சேர்ந்து வந்தால் வேகமாக அடிக்க முடிவதில்லை. கீ போர்டும் பிரச்சனைன்னு தோணுது.

    அந்தக்கால பேருந்து தகவல்கள் சுவாரசியம். வாசிக்கும் போதே ஒருவிதமான சுகமான உணர்வு. கூட்டம் இல்லாத பேருந்து. தொப்பி, அரை டிராயர் எல்லாம் ஏதோ ஒரு பழைய சினிமாவில் பார்த்த நினைவு வருகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ நீங்களும் கமெண்ட்ஸ் அடிச்சுது தள்ளிட்டீங்க...  நன்றி கீதா.

      நீக்கு
  22. அட! ஆன்லைன் பேமென்ட் நல்ல விதத்தில் வேலை செய்யுது போல.

    ஒன்று, பெரிய பெரிய கார்கள் பெருமளவில் வாங்கும் அளவு இந்தியாவில் பணக்காரர்கள் பெருகியிருக்காங்க அல்லது வாங்குபவர்கள் பெரிய கார்கள் வாங்கும் அளவு பணக்காரராக ஆகியிருக்காங்க!
    ஆனால் சின்ன கார் கூட வாங்க முடியாத மக்கள் தொகையும் கூடுதல் மறுபக்கம் என்பதும்

    பறக்கும் மருத்துவமனை!!! ஆச்சரியமான விஷயம்.

    ரீடர்ஸ் டைஜஸ்ட் நல்ல இதழ். ஆனால் விலை தான் எட்டாக்கனி. முன்பு பழைய புத்தகக் கடையில் வாங்கியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார் வாங்குவது என்பதே, உபயோகத்தைவிட மற்றவர்களிடம் நான் உன்னைவிடப் பெரியவன் என்று காட்டும் உத்திதான் எனத் தோன்றும். சமூக அந்தஸ்து என நாமே ஒன்றைக் கற்பனை செய்து நம்மை ஏமாற்றிக்கொள்ளும் வித்தை அது.

      நீக்கு
    2. நெல்லை எல்லாரையும் அப்படிச் சொல்ல முடியாது. நீங்க சொல்றது போல அது சமூக அந்தஸ்தாக நாம கற்பனை செய்து கொண்டது, கொள்வதுதான். ஒரு சில விஷயங்களுக்குக் கார் இருப்பது தற்போது சௌகரியம்தான் அதுவும் வீட்டில் வயதானவர் மருத்துவ நெருக்கடி என்று வரும் போது.

      அது போல சிலரிடம் பணம் இருந்தாலும் கூட சிம்பிள் லைஃப் என்று வாழ்ந்தாலும் ஏதோ அவங்க கஞ்சூஸ் என்றும் இல்லை வாழத் தெரியலை வாழ்க்கைய அனுபவிக்கத் தெரியலை, என்றோ இல்லை சமூக அந்தஸ்துக்கு இல்லை என்றோ ஒதுக்கப்படுவதும் நடக்கிறது. பார்க்கப் போனா அவங்க ரொம்ப ஆரோக்கியமான வாழ்வு வாழறாங்க! மன நிறைவோடு சந்தோஷமா வாழறாங்க! நோய்நொடி இல்லாம.

      ஆனா மக்களின் பார்வை அப்படியாகிவிட்டது. ஆனா பாருங்க எதிர்காலத்துல உலகமே திரும்பவும் கற்காலத்துக்குப் போற நிலை ஏற்படும். ஆனா அதைப் பார்க்கவோ அனுபவிக்கவோ நாம இருக்க மாட்டோம்

      கீதா

      நீக்கு
    3. நானும் ஏற்கிறேன் கீதா.

      நீக்கு
  23. புகைப்படம் செம ஷாட்.

    கி ரா வின் அனுபவ வரிகள் யதார்த்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டையுமே  நானும் ரசித்தேன் என்று சொல்ல வேண்டியதில்லை இல்லையா?!

      நீக்கு
    2. ஆஅமாம் ஸ்ரீராம் சொல்லத் தேவையே இல்லை!!!

      கீதா

      நீக்கு
  24. ஹி.ஹி....

    ஜெஸி ஸாருக்கு
    சிறுகதை.காம் - ன்னா
    உங்களுக்கு
    இந்த கந்தசாமி ஸாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தகவல் களஞ்சியம் ஜீவி ஸார்.  எட்டுத்திக்கும் தேடி எக்கச்சக்கமாய் ஷேர் செய்கிறார்.  மிக ரசிக்கலாம்.

      நீக்கு
  25. குரங்குகள், காட்டு விலங்குகள் தங்களுக்குத் தாங்களே வைத்தியம் பார்த்துக் கொள்ளும் சிறிய பிரச்சனைகளுக்கு. வயிற்றில் பூச்சி, சின்ன காயங்கள் என்று. பெரிதாக இருந்தால் அவை கஷ்டப்படும். அந்தச் சமயங்களில் உதவி கிடைக்கும் என்று தெரியும் இடங்களின் அருகில் வரும் என்றும் அறிந்ததுண்டு. இப்போ எல்லாம் வனங்களில் கேமரா வைச்சிருக்காங்களே அதில் அவற்றின் நடமாட்டம். குரல் உடல் மொழி வைத்துக் கண்டு வனத்துறையினர் அவற்றை எப்படியேனும் பிடித்து, காட்டுவிலங்கு மருத்துவர்களிடம் வைத்தியத்திற்குக் கொண்டு வருவதுண்டு.
    தெருவில் வளரும் வீட்டு விலங்குகள் கூட தங்கள் உபாதைகளை இயற்கையாகச் சரி செய்து கொள்ளும்.

    எங்கள் வீட்டுக் கண்ணழகி, ப்ரௌனி இருந்தவரை, மகன் கால்நடை மருத்துவராக இருந்தாலும், சாதாரண தொந்தரவுகளுக்கு வைத்தியம் பார்த்ததில்லை. அவனைப் பொருத்தவரை தேவையில்லாமல் மருந்துகள் கூடாது, ஆன்டிபயாட்டிக் கூடாது என்பதால்.
    அவை தங்களுக்கு வயிறு சரியில்லை என்றால் சாப்பிடாதுங்க. எங்களைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். வெளியில் செல்ல, நமக்குத் தெரியும், அதன் மொழிகள் உடனே அழைத்துச் சென்றால் புல்லைத் தின்னு அங்கேயே கக்கும், அல்லது புல் சாப்பிட்டுவிட்டு அன்று பத்தியமாக இருக்கும். உபவாஸம்!!! மறுநாள் வெளிக்குப் போகும் போது புல்லும் சேர்ந்து வந்துவிடும்.
    அருகம் புல், மற்றும் கொஞ்சம் சொர சொரன்னு இருக்குமே ராவணன் மீசை? புல்? அதைத் தின்னும். அது போன்று வேலிகளில் படரும் கோவைக்காய் இலைகளைத் தின்னும். பூஷணி இலைகளையும் திம்பாங்க ரெண்டு பேரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  விலங்குகளுக்கு அந்த அறிவை இறைவன் கொடுத்திருக்கிறார்.  இல்லாவிட்டால் யார் அங்கு நீட் தேர்வெல்லாம் எழுதி டாக்டராகி சேவை செய்வது!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா பட்டுனு விவி சிரித்துவிட்டேன்!!! கொஞ்சம் நினைத்துப் பார்த்தேம் எல்லாம் கழுத்துல ஸ்டெத், கண்ணுக்குக் கண்ணாடி!! போட்டுட்டு வந்தா எப்படி இருக்கும்னு!!!!!

      கீதா

      நீக்கு
  26. ராணி இதழின் ஆசிரியரின் புனை பெயர்களில் அமுதா கணேசன், குண்டுமணி - அறிந்த பெயர்கள். ஆனால் மற்ற விவரங்கள் இப்பதான் தெரிகிறது. எவ்வளவு நல்ல எண்ணம். //ஆரம்பநிலைக் கல்வி மட்டுமே பயின்ற வாசகர்களுக்கு உரியது//

    அந்த மக்களையும் சென்றடைய வேண்டும், வாசித்தல் வளர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வாவ் போட வைத்தது தகவல்கள்.
    ராணி இதழ் எல்லாம் எப்போதாவது பார்த்ததுதான். வீட்டில் அதற்கெல்லாம் தடை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைப்ரரியில் சுலபமாக அப்பிடிக்கக் கிடைக்கும். ஆனால் நான் அதை புரட்டியது கூட இல்லை. சுஜாதா அதில் கூட ஒரு கதை எழுதினர் என்று ஞாபகம்/

      நீக்கு
    2. பாட புஸ்தகம் தவிர வேற எதுவுமே எங்க வீட்டுல எந்த இதழுமே எட்டிப் பார்க்காதுன்றப்ப ராணி இதழ் எல்லாம் எங்கே! நானும் ராணி இதழ் எல்லாம் வாசித்தது இல்லை. அட சுஜாதா அதிலும் எழுதியிருக்காரா? தகவல்.

      கீதா

      நீக்கு
    3. அப்படிதான் நினைவு. எந்தக் கதை என்று நினைவில் இல்லை.

      நீக்கு
  27. எம் எஸ் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.

    பொக்கிஷம் பகுதியில் கடைசி மூன்றும் புன்னகைக்க வைத்தாலும் வாழைப்பூ கொஞ்சம் ஒவர்!!??

    கீதா

    பதிலளிநீக்கு
  28. நான் தானா அவர் நினைத்தது? -- பகுதியை
    ஒரு செவ்வாய்க் கிழமைக்கு சிறுகதை ஆக்கியிருக்கலாம்.

    ஒரு மாறுபட்ட வாசிப்பை
    இழந்து விட்ட உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறுபட்ட வாசிப்பு சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது.

      பின்னூட்டங்களைக் கூட பதிவின் அடியொற்றி இல்லாமல் நீங்கள் எழுதியதையே வேறொரு கோணத்தில் பார்க்கிற பார்வையில் அமைகிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன்.
      இதுவும் கொஞ்ச நாட்களுக்குத் தான்.
      அதற்கு பிறகு வேறொரு மாதிரி.
      முடிந்த வரை எழுதும் பாணியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

      இதெல்லாம் ஆசான் ரா.கி.ரங்கராஜன் கற்றுக் கொடுத்த பாடங்கள்.

      நீக்கு
    2. உண்மையில் ஜீவி ஸார், நகுலன் கவிதை இன்ஸ்பிரேஷனில் அந்தக் கவிதைதான் முதலில் எழுதினேன்.  அதையே விவரித்துதான் முதல் பகுதியை எழுதினேன்.  அதையும் அங்கே குறிப்பிட்டு மறைத்து வைத்துள்ளேன்!

      நீக்கு
    3. வாசிக்கும் போதே தெரிந்து விடுகிறதே!

      நீக்கு
    4. பின்னர் ஒரு யோசனையில் இதையே விரித்து எழுதி வியாழன் பதிவாகவே போட்டு விட்டேன்! //

      ஸ்ரீராம் இதை இப்பதான் கவனித்தேன். அங்கு கோட் செய்ய மௌஸ் கொண்டு வைத்து ஹைலைட் செய்யறப்ப அந்த வரி தெரிகிறது. ஓ அப்ப கவிதையில் பிறந்தது முதல் பகுதி. நீங்களே சொல்லிட்டீங்க இங்க கருத்துகளுக்கான பதிலில். நான் லேட்டு!

      அந்த டெக்னிக் என்ன என்று புரிந்தது! ஆனால் டக்கென்று பிடிபடாது. நாம் அதை கோட் செய்ய போனால்தான் தெரியும் என்று தோன்றுகிறது ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    5. மறைத்து வைத்திருந்த வரியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா!!!

      நீக்கு
    6. எப்பூடி வரிக்கும் அதற்கு முந்தைய வரிக்கும் நடுவே ஏன் இந்த இடைவெளி, அலைன்மெண்ட் சரியில்லையா வேறு ஏதாவதா என்று பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்!  யார் கண்டு பிடிக்கிறீர்கள் என்று பார்த்தேன்!~

      நீக்கு
  29. நான்தானா அவர் நினைத்தது….என்ன இது எப்படி முடியும் என நினைத்தேன்! வாசித்ததும் புரிந்தது. எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாமல் அல்லது நினைவில் வராமல் அறிய முயன்றும் அவரும் அதற்குப் பிடிகொடுக்காமல் பேசிச் செல்வது என்று.
    மனதை எப்படியோ எங்கோ ஏதோ ஒரு விதத்தில் தொட்டுவிடும் ஒன்று மறைந்திருக்கிறது. அந்த மனிதரின் செயல்பாடு!

    அதுதான் கவிதையாய் பிறந்ததோ! அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளஸிஜி...  நன்றி...  கவிதைதான் கட்டுரையாக, அனுபவமாக  மலர்ந்தது!

      நீக்கு
  30. ராணி வார இதழ் எல்லாம் பார்த்து எவ்வளவு வருடங்கள் ஆகின்றது. என் அம்மாவிற்கு வாசித்துக் காட்டிய அனுபவம் நினைவிற்கு வருகிறது. ராணி ஆசிரியர் பற்றிய தகவல்கள் அருமை. நல்ல மனம் படைத்தவர் என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில்தான் குரங்குக்கு குசலா வரும் இல்லையா? என் நண்பர்களில் சிலர் வாசிப்பார்கள்!

      நீக்கு
  31. இணையத்திலிருந்து பகிர்ந்த படம் டைம்லி ஷாட். இப்படியான ஷாட்கள் எடுப்பவர்களின் திறமை வியக்க வைக்கும்.

    எம் எஸ் அம்மா பற்றிய தகவல்கள், பழையகாலத்து பஸ் பற்றிய தகவல்கள் சுவாரசியம். நீங்கள் பகிர்ந்திருக்கும் படம் கூட நானும் இணையத்தில் பார்த்திருக்கிறேன் என் பதிவு ஒன்றிற்கு வீடியோவில் சேர்த்திருக்கிறேனோ என்று நினைக்கிறேன்..

    குரங்கு – சிம்பன்ஸி, ஒராங்குட்டான் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.

    பறக்கும் மருத்துவமனையா? ஆச்சரியமாக இருக்கிறதே. விமானம் போல இருக்குமோ?

    பொக்கிஷ ஜோக்குகள் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரந்துபட்ட கருத்துகளுக்கு நன்றி துளசி ஜி.

      நீக்கு
  32. பார்த்துச் சிரித்து
    பல நிமிடம்
    பேசிக் கொண்டிருந்தோம்
    என்ன யோசித்தும்
    யாரென்றே
    நினைவுக்கு வரவில்லை
    அவருக்கு எப்படி என்று
    தெரியவில்லை.
    தெரிந்திருந்தால் தான்
    பேச வேண்டுமா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இல்லாவிட்டால் பிராந்து என்பார்களே!

      நீக்கு
  33. ஆள்குறைப்பு செய்வதற்கு கிடைத்ததொரு சாக்கு
    ஆன்லைன் பட்டுவாடா அதிகரிப்பு.

    செவ்வாய் தவிர்த்தல் இப்போதைக்கு நலமென்று
    வியாழன் வந்தேன் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழில்நுட்பம் வளர வளர ஆட்குறைப்பு நிகழ்கிறது!

      நீக்கு
    2. //செவ்வாய் தவிர்த்தல் இப்போதைக்கு நலமென்று
      வியாழன் வந்தேன் சகோதரி.// அது எங்களுக்கு இழப்பு

      நீக்கு

  34. ஆள் கணக்கெடுப்பிற்கு
    கால்களையா
    தலைகளையா
    எதைக் கூட்டுவது ஈஸி?
    வகுத்தல் வேண்டுமென்றால் கால்கள்
    வேண்டாமென்றால் தலைகள்.

    பதிலளிநீக்கு
  35. /// இப்போதெல்லாம்
    கண்ணாடிக் கதவு பிடுங்கிக் கொண்டு விழுகின்றது..///

    இந்த சம்பவம் விமான நிலையத்தில்..

    பொது வெளியில் எதையும் பேசக் கூடாது..

    பதிலளிநீக்கு
  36. நான்தானா அவர் நினைத்தது? உங்கள் பதிவின் தலைப்பும், தெரிந்தும் தெரியாத நண்பருடன் உரையாடியதும், உங்கள் கவிதையும் பொருத்தம்.

    "//அவர் பேர் என்ன மணிவண்ணனான்னு கேட்டியா? உன்ன போட்டுப் பார்த்துட்டு போயிருக்கார் ஒருத்தர்" என்றான்.//

    நண்பர் கேட்ட மணிவண்ணன் யார் என்று தெரிந்ததா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயக்குனர் மணிவண்ணன். சமுத்திரம் படத்தில் வரும் காட்சி அது.

      நீக்கு
  37. பானுமதி அவர்களின் நியூஸ் படித்தவுடன் என் சான்றிதழ் மதுரை காமராஜர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இருந்து பெற வேண்டும் என்ற நீண்ட நாள் நினைவு மீண்டும் வந்தது.

    பதிலளிநீக்கு
  38. 1930 கால பேருந்தின் கட்டமைப்பு தகவலும் படமும் அருமை.
    ரசித்த புகைப்படம், மற்றும் கந்தசாமி அவர்கள் பகிர்வு அருமை.
    மருத்துவம் அறிந்த மனித குரங்கு போல பல விலங்குகள் , பறவைகள் தங்களுக்கு தாங்களே மருத்து கண்டுபிடித்து சாப்பிடும்.

    அந்த அறிவை, இயற்கை, இறைவன் கொடுத்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எல்லா விலங்குகளுக்குமே அந்தத் திறமை உண்டு.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  39. பவன்ஸ் ஜர்னல்; பத்திரிக்கையில் ரா. கணபதி எழுதிய கட்டுரை, மற்றும் பொக்கிஷ பகிர்வுகள் நன்றாக இருக்கிறது.
    இன்றைய கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு


  40. "அவர் யாரோ"......சுவாரஸ்யம்.

    எம்.எஸ் அம்மாவின் திறமை அறிந்தோம்.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  41. எம்.எஸ்.பற்றிய செய்திகள் சுவாரஸ்யம். உங்கள் கட்டுரை வெகு சுவாரஸ்யம்! மிருகங்கள் தங்களுக்குத் தாங்களே வைத்யம் செய்து கொள்ளும் என்று இன்று காலையில்தான் தொலைகாட்சியில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  42. பதில்கள்
    1. ஆம். சட்டென கண்ணைக் கவர்ந்து நிறுத்தியது. கனஜோர் என்பது சரி என்றாலும் அந்த ஒரு கணத்தை சட்டென Freeze செய்ததால் இதுவும் பொருத்தமே!

      நீக்கு
  43. ராணியின் ஆசிரியர் அ.மா.சாமி, பிரபல எழுத்தாளர் ரமணி சந்திரனின் சகோதரியின் கணவர். ரமணி சந்திரனை கதை எழுத ஊக்குவித்தவர் அவர்தானாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  எப்படியும் ஒரு புதிய தகவல் கொடுத்து விடுகிறீர்கள்.

      நீக்கு
  44. தெரிந்தவர் போல காட்டிக் கொண்ட கற்பனை சம்பவம் சுவை. என்னிடம் ஒரு பழக்கம் தெரியாதவர்கள் புன்னகைத்தால் கூட பதிலுக்கு புன்னகைக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.  ஒருவர் புன்னகைக்கும் எப்படி பதிலுக்கு புன்னகைக்காமல் இருப்பது?   நேற்று பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும்போது அந்தப் பக்கம் இன்னொரு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த பெண்மணி மறுபடி மறுபடி என்னை உற்றுப் பார்த்து விட்டு புன்னகைத்தார்.  நானும் புன்னகைத்து வைத்தேன்!

      நீக்கு
  45. அனுபவம் கவித்துவமானது. அதுவே இவ்வாரக் கவிதையுமானது. அருமை.

    2012_ஆம் ஆண்டு அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்த கீழ் வரும் கவிதையும் நினைவுக்கு வந்தது. “என் விகடன்” வலையோசை பகுதியிலும் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்தார்கள்:

    அறிமுகமற்ற பெரியவர்
    என்னை நிறுத்தி,
    என்னுள் தேடுகிறார்
    அறிமுகமான யாரையோ.
    ***
    HITOMARO (8th century)

    ------------

    1930-களின் காலக்கட்ட பேருந்தின் கட்டமைப்பு குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யம். என் தம்பியுடன் பகிர்ந்து கொண்டேன்.

    -----------

    புகைப்படம் அருமை. நியூஸ் ரூம்... நன்றி. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!