செவ்வாய், 28 மே, 2024

சிறுகதை  :   பாட்டியும் பகவானும்  -   கீதா ரெங்கன் 

பாட்டி

பாட்டியும் பகவானும் உறவுகளும்


வீட்டில் நெருங்கிய சுற்றம் குழுமியிருந்தது.

பாட்டி கட்டிலில் அசைவற்றுப் படுத்திருந்தாள்.

முந்தைய தினம் வைஷ்ணவியும் அவள் மகளும் பாட்டியை குளிப்பாட்டுவதற்காக வழக்கம் போல் தூக்கிக் கொண்டு சென்று பாத்ரூமில் உட்கார்த்தி வைக்க பாட்டி உட்கார முடியாமல் மூச்சு வாங்கி பின்பக்கம் சரிந்தாள். மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினார்கள்.

மூச்சு மட்டும் இருந்தது தெரிந்தது. ஆனால் சீராக இல்லை. பாட்டி அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்ததும் வைஷுவின் அப்பா டாக்டரை அழைத்தார்.

“நெருங்கிய உறவுக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிடுங்க. எப்ப வேணா பிரியலாம்” – டாக்டருக்கே உரித்தான கடமை உணர்ச்சியுடனான வார்த்தைகள்.

“பல்ஸ்?” - வைஷு

“நார்மலா இல்ல…..”

வைஷுவின் மனம் விசித்தது. பிறந்தது முதல் 7 ஆம் வகுப்பு வரை கூட்டுக் குடும்பமாகப் பாட்டியிடம் வளர்ந்த அவளுக்குப் பாட்டி அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு பல நல்லொழுக்கக் கதைகள் சொல்லி, இறை துதிப் பாடல்களும் சொல்லிக் கொண்டே பருப்புசாதம் கீரை என்று ஊட்டி, வளர்ந்ததும் நடனம், கர்நாடக இசை என்று கற்றுக் கொடுத்து வளர்த்த வருடங்கள் நிழற்படங்களின் தொகுப்பாக ஆல்பத்தைப் புரட்டுவது போன்று மனதில் ஓடியது.  

பிற்காலத்தில் அவள் உளவியல் கற்ற போது தன்னைத்தானே ஆராய்ந்த போது, எந்தக் கல்வி அறிவும் இல்லாத பாட்டி, உளவியலில் பேசப்படும் free child ego state ல் அவளை சுதந்திரமாக அதே சமயம் பொறுப்பும் கற்றுக் கொடுத்து வளர்த்து, தன் கற்பனைத் திறனையும், திறமைகளையும் வளர்த்து பொறுப்புமிக்க வாழ்க்கைப் பாடம் வரை இயல்பாகப் போகிற போக்கில் கற்றுக் கொடுத்தவையும், 7 ஆம் வகுப்பிற்குப் பிறகு தன் வாழ்க்கை தடம் புரண்டு மற்றொரு பாட்டியிடம் வளர்ந்த போது தன் அனைத்து திறமைகளும் முடக்கப்பட்டு, rebellious child ஆக மாறியது…. என்று அனைத்தும் அவளை ஆச்சரியப்படுத்தியது! வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியமாகிறது!

தன் மகளை வளர்த்த போது பாட்டியின் இந்த வளர்ப்புமுறை தானே அவளுக்கும் உதவியது!  அப்படியான பாட்டியை, கடைசி முயற்சி கூட செய்யாமல் இப்படியே விடுவதா? அவள் மனம் தவித்தது.

வைஷுவின் தாத்தாவும், அம்மாவும் இறக்கும் வரை பாட்டியும் அப்பாவும் எல்லோரும் ஊரில்தான் இருந்தனர். அதன் பின் தான் அப்பாவும் பாட்டியும் வைஷுவோடு வந்திருக்க, அவள் அண்ணா, அவன் மனைவியின் உதவியுடன் பார்த்துக் கொண்டார்கள்.

ஜனனம் கூட நிகழாமல் போகலாம் ஆனால் ஜனித்தவற்றிற்கு மரணம் நடந்தே தீரும் என்பதை மனம் ஏற்றாலும் மனதிற்கு நெருங்கியவரின் மரணம், அது வயதான மரணம் என்றாலும் கூட உலுக்கத்தான் செய்கிறது.

“டிரிப்ஸ் கொடுத்துப் பார்க்கலாமா டாக்டர்? எப்படி சாப்பாடு தண்ணி இல்லாம…….” வைஷு இழுத்தாள்.

“ம்ம்…ஆனா நோ யூஸ்”.

என்ன சொல்ல வருகிறார்? இப்படியே போய்டட்டும் முயற்சி கூட வேண்டாம் என்றா? உயிர் போவது நம் கையிலா என்ன?

வைஷு விடவில்லை. “ப்ளீஸ் டாக்டர்…ஒரு லாஸ்ட் சான்ஸ்?.....”

பிழைத்தாலும் கூட அவளுக்கு ஒழுங்கான நினைவு இருக்கப் போவதில்லைதான். யதார்த்தம் கஷ்டம்தான். ஆனாலும் ஸ்வாசத்துடன் பாட்டி இருக்கிறாள் எனும் ஆசுவாசம்? உயிருடன் தத்ரூபமாக இருப்பது போல் உள்ள ம்யூஸியம் அவள் நினைவுக்கு வந்தது.

டாக்டர் மோவாயைத் தடவினார். யாருக்கோ ஃபோன் செய்தார். அரை மணி நேரத்தில் டிரிப்ஸ் போடப்பட்டது.

“இருந்தாலும் எல்லாருக்கும் சொல்லிடுங்க”

வாட்சப் இருக்கப் பயமென்! சித்தப்பாக்கள், பாட்டியின் உடன் பிறப்புகளுக்குத் தகவல் பறந்தது! அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

“என்னாச்சு?”……

“மூச்சு இருக்கான்னு நன்னா செக் பண்ணினியா?”…. 

“இருக்கால்லியோ?”

“ம்ம்ம் வயசாச்சு ….போறதுக்காச்சே….”

“நாங்க வரது வரை உயிர் இருக்குமா? கடைசியா ஒரு தடவை பார்த்துக்கலாமே!”

கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன.

என்ன உறவுகளோ? வைஷுவுக்கும் அவள் மகளுக்கும் கோபம் வந்தது. யாரும் எந்த உதவிக்கும் வந்ததில்லை. இப்ப  மட்டும் என்ன?

“அப்பா, இதுங்க எல்லாம் வரலைனா என்ன இப்ப?”

வைஷுவின் கோபம் வார்த்தைகளில் வெடித்தது.

இட்லிக்கு ஊறப் போட வேண்டும். சாதம் வடிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் டிஃபன், காஃபி, சாப்பாடு என்று. காஃபி பொடி, டீத்தூள் எல்லாம் இருக்கா என்று பார்த்துக் கொண்டாள். யாரெல்லாம் வருகிறார்களோ? அத்தனை வம்புக் கூட்டத்திற்கும்…. வைஷுவிற்கு ஆயாசமாக இருந்தது.

அப்பாவின் தம்பி மனைவி – சித்தியிடமிருந்து அழைப்பு. இதுவரை என்ன ஏது என்று கேட்டதில்லை. இத்தனைக்கும் 2 மணி நேரப் பயண தூரத்தில் இருப்பவர்கள்.

“இன்னிக்கே வரணுமா?”

“இப்ப, ‘அவள்’. டாக்டரோட கணக்குப் படி எப்ப வேணாலும் 'அது'வாகிடப் போறவ. உங்க இஷ்டம் சித்தி” வைஷுவின் கோபம் நக்கலாகத் தெறித்தது. சித்தி ஃபோனை வைத்துவிட்டாள்.

தொடர்ந்து அழைப்புகள். சுற்றங்கள் ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை. மிஞ்சிப் போனால் 4 மணி  நேரப் பயணம்.

“இந்த ஒண்ணுக்குப் போற தொல்லை. ரயில் டிக்கெட் இல்லைனா,  பஸ்ல வரணும்…. இடைல நிப்பாட்டுவானா தெரியலை”……..

“பேரன் பேத்திகளுக்குப் பரீட்சை அதான் யோசனையா இருக்கு……”

“இப்பதான் ஆஸ்பத்திரிலருந்து வந்தேன்……..எனக்கே முடியலை”…

பல கேள்வி பதில்களுக்குப் பிறகு, சில மணி நேரங்களில் சில சுற்றங்கள் வந்து சேர்ந்தன. 

“உசுர் இழுத்திண்டிருக்கறதைப் பாத்தா இன்னிக்கு ராத்திரி வரை கூடத் தாங்காது போல....”

“கொர் கொர்னு சத்தம் வேற கேக்கறது பாரு….”

“அக்கா, எங்களுக்கு எவ்வளவோ செஞ்சுருக்கா……உங்கம்மா அவள நன்னா பாத்துண்டா. போய் சேந்துட்டா…..நீயும் உங்கண்ணாவும், உங்கப்பாவும் நன்னாதான் பார்த்துக்கறேள்…..என்னவோ போ... அவ இன்னும் கிடக்காம நல்லபடியா போய் சேர்ந்தா நல்லது…..”

“எனக்கும் என் பேரன் பேத்திய பாத்துக்கணும். பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கிட்டதானே குழந்தைகளை விட்டுப் போறா……அது வேற யோஜனையா இருக்கு….”

“என் பிள்ளைக்கு ஆஃபீஸ் ப்ரமோஷன் எக்ஸாம்…. கல்யாணம் ஆகலையே அது வேற தள்ளிப் போயிண்டே இருக்கு. பொண்கள் எல்லாம் சம்பளம் ரொம்ப எதிர்பார்க்கறா. எங்காத்துக்காரர் என்னத்த சமைச்சு என்னத்த பண்ணுவரோ..வீடு முழுக்க அமக்களமா இருக்கும்…..எல்லாம் சரி பண்ண எனக்கு ஒரு வாரம் ஆகும்”

“என் நாட்டுப் பொண் வேற பொறந்தாத்துக்குப் போயிருக்கா, நான் அங்க இருக்கணும்…….இப்ப அம்மாவோட உசிர் இப்படி ரெண்டாங்கெட்டானா இருக்கே….!!!”

வைஷுவுக்கு இந்த யதார்த்தப் பிரச்சனைகள் புரியாமல் இல்லை. ஆனால், அதை இப்படி வெளிப்படுத்த வேண்டுமா? அல்லது இப்படி சொல்லிக் கொண்டே வரத்தான் வேண்டுமா? என்று தோன்றியது.

மூச்சு இருக்கிறதா என்று அவ்வப்போது எழுந்து எழுந்து சென்று பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தது சுற்றம்.

வைஷுவும், மகளும் சமையலையும், பாட்டியையும் கவனித்துக் கொண்டும்  டிரிப்ஸ் ஒழுங்காகப் போகிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொர் சத்தம் இல்லை. சுவாசம் இருந்தது.                  

கவானே எப்போதான் என்னை அழைச்சிண்டு போகப் போறியோ” ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய, பாட்டியின் நித்ய பாராயணம்.

“ராங்க் அட்ரெஸ். இட்ஸ் நாட் மை டிப்பார்ட்மென்ட்”

கட்டிலில் நீட்டி நிமிர்ந்து, நெஞ்சின் மேல் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு படுத்திருந்த பாட்டி கண்ணைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ஆராக்கும்?”

“பாட்டி, நீ அழைச்ச பகவானோட குரல்” கொள்ளுப் பாட்டியிடம் இப்படிப் பேசுவதில் கொள்ளுப் பேத்தி வைஷுவின் மகளுக்கு அலாதி ஆனந்தம்.

“பகவான் இங்கிஷ்லயா பேசுவர்?” பாட்டியும் விடவில்லை.

“ஒவ்வொருத்தருக்கும் என்ன தாய்மொழியோ அந்த மொழிலதான் அவர் பேசுவர்”

“அப்போ சம்ஸ்கிருதத்துலயோ தமிழ்லியோனா பேசியிருக்கணும்”

“பகவான் பாஷை சம்ஸ்கிருதமா? பாட்டி! அப்ப நீ சம்ஸ்கிருதத்துலயா பேசற அவரோட?”

“ஸ்லோகம் சொல்றேனே? பேசறதுனுதானே அர்த்தம்” 

“எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாதே!....”

“ஓ அப்போ நீதானா இங்கிலிஷ்ல சொன்னது? நேக்கு இங்கிலிஷ் தெரியாதே”

“அது வேற ஒன்னுமில்ல பாட்டி. “இது தப்பான அட்ரெஸ், இது என் துறை இல்லை” ன்னு பகவான் சொல்றார்னு உன் கொள்ளுப் பேத்தி சொல்றா”.

“என்னடி பெனாத்தல்? பகவான் தானே அழைச்சுண்டு போவர்?”

“அது யமராஜா டிப்பார்ட்மென்ட். யமன், சித்ரகுப்தன்னு நீதானே பாட்டி எனக்குச் சின்ன வயசுல கதை சொல்லிருக்க?”

“போடி போ, நான் அவனை எல்லாம் கூப்பிடமாட்டேன். பகவானைத்தான் கூப்பிடுவேன். ஆண்டாள் பகவானோடுதானே ஐக்கியமானா”

“சரி அத விடு. இப்போதைக்கு உனக்கு அழைப்பு இல்லையாம். ஏன்னா அங்க இடம் இல்லையாம்..  வெயிட்டிங்க் லிஸ்ட். இன்னும் கொஞ்ச வருஷம் இங்கதான் இருப்பியாம், உன் கொள்ளுப் பேத்திக்குக் கதை சொல்லிண்டு”

“என்னமோ போ….எல்லாருக்கும் பாரமா நான் இருந்துண்டு…..சின்னதுகள எல்லாம் பறிகொடுத்துட்டு, பகவானே…..ஏன் என்னை சோதிக்கறியோ”

“பாட்டி நீ எனக்குச் சொன்ன கதைய வேற மாதிரி உனக்குச் சொல்றேன் கேளு….. இங்க நம்ம உலகத்துல கோர்ட் எல்லாம் இருக்காப்ல அங்கயும் இருக்காம். பகவான் உன்னை அழைச்சுண்டு போனாலும் கோர்ட்ல பெஞ்ச்ல உக்காத்தி வைச்சிருவா உன் டர்ன் வர வரைக்கும்.

“இதென்னது கோர்ட்? சொர்கத்துலயா?”

“நீ சொல்லிக் கொடுத்ததுதான்…. நாம பண்ணற பாவ புண்ணியம் பாத்துதான் நம்மள சொர்கத்துக்கு அல்லது நரகத்துக்கு அனுப்புவான்னு!!!!”

“அதுக்கு எதுக்கு கோர்ட்டு?”

“பின்ன? அதுவும் கோர்ட் தானே! ஹைகோர்ட்ல எமனோட அஸிஸ்டன்ட் சித்ரகுப்தன் ஒவ்வொரு பெயரா கூப்பிடுவார். கூப்பிட்டு பாவ புண்ணிய அக்கவுண்ட வாசிப்பார். உனக்கு நீயேதான் வாதிடணும். வக்கீல் எல்லாம் கிடையாது. அத வைச்சு எமன் ஒரு லிஸ்ட் போடுவார். நீ சுப்ரீம் கோர்ட் பகவான் கிட்ட அப்பீல் பண்ணிக்கலாம். அப்புறம் பைனல் தீர்ப்பு கொடுப்பா!!!!” சொல்லிக் கொண்டே அடக்க முடியாமல் சிரிப்பு வந்து வைஷுவின் மகள் சிரித்துவிட்டாள்.

“போடி போ! பகவான் பாத்துப்பர். நான் அவர்கிட்டதானே மல்லாடறேன்! ஆழ்வார், ஆச்சாரியர், பெரியவா எல்லாம் பகவான்கிட்டதானே மல்லாடினா”

“அப்புறம் எதுக்கு இப்படி ஒரு கதை எங்களுக்குச் சொன்ன? எமன், சித்ரகுப்தன், நரகம், எண்ணைக் கிடங்குன்னு இந்த அந்நியன் படத்துல வராப்ல. நான் என் பொண்ணுக்கு அதெல்லாம் சொல்லி பயமுறுத்தலையாக்கும்.”

“நோக்குதான் பகவான் நம்பிக்கை கிடையாதே. என்னவோ பண்ணிட்டுப் போ. நான் எனக்கு எங்க அம்மா, சித்தி எல்லாம் என்ன சொன்னாளோ அதைச் சொன்னேன்.”

இறைவனைப் பற்றிய வைஷுவின் புரிதல் வேறு. பாட்டியின் நம்பிக்கை வேறு. பாட்டியைப் பொருத்தவரை வைஷுவுக்கு இறை நம்பிக்கை  கிடையாது. ஆனால் வைஷுவையோ அவளது மகளையோ ஒரு நாளும் வற்புறுத்தியது இல்லை! அவர்களின் சுய எண்ணங்களுக்கு வழி கொடுத்தவள்.

பாட்டியின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொடுத்தார்கள் வைஷுவும் அவள் மகளும்.

பாட்டி, கை விரல்களை விரித்து மடக்கி ஏதோ எண்ணுவது போல் உதடுகள் பிரிந்து தனக்குள் பேசிக் கொள்வது போல் இருந்தது. ‘திங்களோடு திங்கள் எட்டு….செவ்வாய் ஒம்பது……ஞாயிறு”

“இன்னிக்கு அமாவாசைனு நினைக்கறேன். சரியா பாரு. வெங்காயம் போட்டுப் பண்ணிப்டாத, என் பிள்ளைக்கு இன்னிக்கு வேண்டாம். வேணும்னா வழக்கம் போல நோக்கும் ஒம் பொண்ணுக்கும் தனியா பண்ணிக்கோ.” இதுதான் அவளது ஃப்ரீ சைல்ட் வளர்ப்பு!

வைஷுவின் அப்பா தர்ப்பணம் செய்யக் கூடத் தொடங்கியிருக்கவில்லை,  பாட்டிக்கு அன்று அமாவாசை என்று தெரிந்திருந்தது. 91ல் அடி எடுத்து வைந்திருந்தவளின் நினைவுத் திறனில் வியந்து போனாள். எல்லாமே மனக்கணக்குதான்.

கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்கும் திறன், “உப்பு, புளி தூக்கலா இருக்கோ?” என்று குழம்பு, ரசம் கொதிக்கும் போது மணம், சுவை உணறும் திறனுக்கு எந்தக் குறைவும் இல்லை. நினைவுத்திறனும்தான்.

“சரி அதென்ன? பகவான் தான் இந்த உலகத்தையும் எல்லாத்தையும் படைச்சார்னு சொல்லுவியே அப்ப இந்த வெங்காயம் பூண்டும் கூட அவர் படைச்சதுதானே!? அப்ப ஏன் அதை மட்டும் ஒதுக்கணும்?” கொள்ளுப் பேத்தியின் வாதம்.

“பகவான் எல்லாத்தையும் நல்லதையும் கெட்டதையும் காமிப்பர். நீதான் நோக்கு என்ன வேணுமோ, எது சரிப்படறதோ அதை எடுத்துக்கலாம். எதை எடுத்துக்கறோமோ அதுபடி நம்மளோட வாழ்க்கை அமையும்….பாவ புண்ணியக் கணக்கும். கர்மவினைன்னு சொல்றதுண்டே. "

பாட்டி அடிக்கடி சொல்லும் இந்த வரிகள் உளவியல் படித்த வைஷுவை ஆச்சரியப்படுத்துபவை.

"நீ முன்னாடி ஏதோ மனோதத்துவம்னு படிக்கறதா சொன்னியே இங்கிலீஷ்ல ஏதோ சொன்ன…..”

ஆமா பாட்டி. Life is full of choices. What and how we choose we reap! Consequences! பின் விளவுகள். அதனால நாம எடுக்கற பாதைய முடிவுகளை யோசிச்சு எடுக்கணும்னு............”

“ஆனா பாரு நாம மனுஷாதானே. தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிடறோம் அனுபவிக்கறோம். இப்ப பாரு நான் அனுபவிக்கறேனே.”

“ஓ பாட்டி ப்ளீஸ். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த மாதிரி யோசிக்காத. நல்லதில்ல. பின் விளைவுகள யதார்த்தமா ஏத்துக்கற சக்தி இருந்தா போறும். இல்லைனா குற்ற உணர்ச்சி மனோ சக்திய வீழ்த்திடும். மனோவியாதிக்குக் கொண்டுவிடும்.”

“எங்க திருவேங்கட சித்தி இருந்தார்லியோ…..”

“பாட்டி நான் சமையல முடிச்சிட்டு வரேன். அப்புறம் உன் கதைய சொல்லு….இன்னிக்கு ஞாயித்துக்கிழமை….உன் கொள்ளுப் பேத்திக்குக்கும் லீவுதானே”

“மறந்து போய்டும்….”

“உனக்கா!!!”

சிரித்துவிட்டார்கள்.

அமாவாசை சமையலை முடித்துவிட்டு, பாட்டியையும் குளிக்க வைத்து சாப்பிடத் தயாரானார்கள்.

கூன் போட்டு நடந்து கொண்டிருந்த பாட்டிக்கு 88 வயதான போது நடக்க முடியாமல் தரையில் அமர்ந்து கொண்டே உட்கார்ந்த வாக்கில் கையை ஊன்றிக் கொண்டு நகரத் தொடங்கினாள். கழிவறைக்குக் கூட அப்படிச் சென்றாலும் அங்கு குத்திட்டு உட்கார்ந்து தன் இயற்கை அழைப்புகளைச் செய்ய முடிந்த காலம் அது. கட்டிலைப் பிடித்துக் கொண்டு எழுந்து அதில் அமர்ந்து கொள்ளவோ, படுக்கவோ முடிந்தது.

சாப்பிடும் போது தினமும் அன்றைய சாப்பாட்டின் தொடர்பாக ஏதேனும் ஒரு அனுபவக் கதை இருக்கும். அன்றும் அப்படித்தான்.

“இன்னிக்கு அமாவாசைனால சுண்டைக்கா வத்த குழம்பா? நன்னாதான் இருக்கு. ஆனாலும் எங்க திருவேங்கடச் சித்தி அவர் சுண்டைக்கா வத்தக் குழம்பு பண்ணினா நாக்கை சப்புக் கொட்டிண்டு சாப்பிடுவோம்.”

“அப்போ நான் பண்ணினது நாக்கை சப்புக் கொட்டிக்கறாப்ல இல்லையா?”

“இல்லை. தளிப்பண்ணின பாசிப்பருப்பு இன்னும் கொஞ்சம் போடு. வாழைக்கா கரைமதுல கொஞ்சம் உப்பு வேணும் போலருக்கு. என் பிள்ளைக்கு, உங்களுக்கெல்லாம் உப்பு பிடாதுன்னு போடலை போலருக்கு”

“உனக்குக் கொஞ்சம் உப்பு வேணும்னா குழம்பு சாதத்துல கலந்துக்கறயா?”

“அப்படிப் போட்டா உப்புக் கரிக்கும். உப்பு சேர்த்தா கொதிக்க விடணும் இல்லைனா அடுப்புல வைச்சு வதக்கிக் கொடுக்கணும். எங்க திருவேங்கட சித்தி வாழக்காய தளிப்பண்ணிண்டு, சீவல்ல பூவா சீவிண்டு தெவசத்துக்குப் பண்றாப்ல பண்ணுவர். பாக்கவே கண்ணுல ஒத்திக்கறாப்ல இருக்கும்”

“ஐயோ, பாட்டி கண்ணு எரியும்” – கொள்ளுப் பேத்தி சீண்டி விளையாடினாள்.  

“போடி போ கண்ணுல ஒத்திக்கறாப்லனுதானே சொன்னேன். ஏ குட்டி! கொஞ்சம் முன்ன ஏதோ சொன்னியே ஐனொண்ணு யோனொண்ணு அதைச் சொல்லப்டாது. உங்கம்மா, நோக்குச் சொல்லியிருப்பளே”

குழந்தைகளுக்குத் தெரியாமல் ரகசியமாகவோ, சொல்லக் கூடாத வார்த்தைகளையோ வைஷுவின் அத்தைகளும் பாட்டியும் இப்படி முதல் எழுத்துடன் வேறு வார்த்தைகளைச் சேர்த்து சங்கேதமாகச் சொல்வது வழக்கம்.

சாப்பாடு கூட முடிந்திருக்கவில்லை அதற்குள் பாட்டி “ராத்திரிக்கு என்ன பண்ணப் போறியோ?” என்ற கேள்வி.

“அடை பண்ணட்டா? ஆனா நீ அரிசி உப்புமா பண்ணனும்பியே!”

“நேக்கு 12 வயசுலயே கல்யாணம் ஆயிடுத்தோல்லியோ. எங்க திருவாங்கடச் சித்தியும், மாமியும் அதான் உங்க தாத்தா நேக்கு மாமா பிள்ளைதானே அவா தான் அடை வாக்கச் சொல்லிக் கொடுத்தா. நான் அடை வாத்தா ஊரே மணக்கும். எங்க சித்தி, மாமி, பாப்பா மாமி எல்லாரும் ஊருக்கே தளிப் பண்ணிப் போட்டு, வியாபாரமும் பண்ணினவா. அடைய நாளைக்கு வைச்சுக்கோ. இன்னிக்கு அரிசி உப்புமா பண்ணிடு.”

“நினைச்சேன்.”

“நோக்குதான் எதிலயுமே நம்பிக்கை இல்லையே. அதனால ஒண்ணும் குறைஞ்சு போய்டலைதான். என்னை நன்னா பாத்துக்கறயே. அது போறும். அதுவே புண்ணியம்”

“பாட்டி நான் இந்த பாவ புண்ணியம் எல்லாம் கணக்குப் பண்ணி செய்யறது இல்லை. என்னைப் பொருத்தவரை புண்ணியம் கூட ஒருவகை எதிர்பார்ப்புதான் பாட்டி. உனக்கு அதெல்லாம் புரியாது. விடு.”

“போறும் போ. நோக்கு எதுலதான் நம்பிக்கை இருக்கு?”

வாழை இலையில் சாப்பாடு என்பதால், கையை ஒரு கப்பில் கழுவிவிட்டதும் மெதுவாக நகர்ந்து சென்று கட்டிலைப் பிடித்துக் கொண்டு ஏறிக் கொண்டாள்.

வைஷுவும் வேலைகளை முடித்துக் கொண்டு பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“பாட்டி இங்க பாரு, கார்த்தால நீ ஏதோ “பகவானே நீ எப்ப வந்து என்ன கூட்டிண்டுப் போகப் போறேன்னு” சொன்னியே! நான் ஒண்ணு வாசிக்கறேன் கேளு.

டவுளே

-----------------------------

த்ரேதாயுகம் த்வாபரயுகம்

என்கிறார்கள்

அந்தக் காலத்தில் நான் இருந்தேனா அறியேன்

அந்தக் காலத்தில்

நேரில் வந்தவன் நீ என்கிறார்கள்

கடவுளே என்றழைத்தவனுக்கு

உடனே

கஷ்டம் தீர்த்தாயாம்.

சொல்லக் கேள்வி.

விரல்காட்டி வித்தைகள்

புரிந்து

விந்தைகள் செய்தாயாம்.”

“ராமர, கிருஷ்ணர சொல்றாரா? யார் எழுதினது”

“இரு நான் முழுசும் வாசிக்கறேன்.”

“அப்போதுதான் கஷ்டங்களா?

இப்போதில்லையா?”

“அதானே! கஷ்டம் இல்லாத காலம் உண்டா? மனுஷானா கஷ்டம் இல்லாமதான் இருக்குமா? லோகத்துல?”

விண்ணுலகம்தான் உன்னுலகமா?

சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

மேகங்களின் ஓரங்களில்

தேடுகிறேன்

சரிகை வேட்டியுடன் நீ அங்கு

தென்படுகிறாயா என்று

இருட்டில் ஒருநாள்

ஒளியாய் வருவாய்

என நான்

இன்னமும் காத்திருக்கிறேன்”

“காத்துண்டுதானே இருக்கேன் சங்குச் சக்கரத்தோட வந்து என்னை அழைச்சுண்டு போவார்னு. எங்க வந்தார் வெளிச்சத்துலயும் வரலை, இருட்டுலயும் வரலை”

உனைக் கண்டேனென்று

நீ

விரும்பவில்லை என்றால்

விண்டிலேன் ஒருவரிடமும்

“எப்படிச் சொல்ல முடியும்? என்னை அழைச்சுண்டு போனப்புறம்”

வாயேன்...

நம்பு நம்பு என்று படுத்தாமல்

வந்துவிடேன் ஒருதரம் நேரில்

விஞ்ஞானம் உன்னை மறுக்கிறது

என் ஞானமோ

இரண்டுக்கும் நடுவில் தவிக்கிறது”

“நீ தான் தவிக்கற நோக்கு நம்பிக்கை இல்லை. இத எழுதினவர் தவிக்கறார். என் ஞானம் ரெண்டுக்கும் நடுல தவிக்கலை. பகவான் வருவர் என்னை அழைச்சுண்டு போகன்னு. நான் ஸ்திரமா நம்பறேன். ஆனா எப்போன்னுதான் தெரியலை”

ப(க)ட்டாடை உடுத்தி

வந்தால்தான் தெய்வமா?

பராரியாய் வந்தால் மாறுவேஷமா?

நீ கொடுப்பதுதானாமே...

கஷ்டங்கள் நானும் வைத்திருக்கிறேன்

கண்ணீரை நாளும் மறைத்திருக்கிறேன்

கடவுளே வா

வந்தென்னை ஒருதரம் சந்தி. 

 “எழுதினது யாரு? வயசானவாளா?”

“ஹோ! பாட்டி இது என் ஃப்ரென்ட். ஸ்ரீராம். சின்னப் பையன்தான். நாம எல்லாரும் பகவான் பகவான்னு சொல்றோமே, கதைகள்லயும் படங்களையும் டொட்டொடெய்ங்குனு குதிச்சுக் காப்பாத்த வந்துடறதா சொல்லிக் காட்டறாளே. ஆனா நேர்ல பார்த்ததில்லையேன்னு வருத்தப்பட்டுச் சொல்றார்!”

கவிதையின் பொருளை பாட்டி தன் மன நிலையில் பார்த்த விதம் வைஷுவை ஆச்சரியப்படுத்தியது.

“போச்சு போ! உன் சேத்தியா? அதான் அப்படி இருக்கான். கேக்க நன்னா இருந்தாலும் சின்னப் பையன் இப்படி எல்லாம் அலுத்துண்டு எல்லாமா எழுதுவா? இப்படி சலிச்சுண்டா எப்படி? நம்பிக்கை இல்லைனா சலிப்புதான் வரும். நம்மாத்துக்கு வந்துருக்கானா? நேக்கு எப்படி நினைவில்லாம போச்சு?”

“வந்திருந்தா உனக்கு நினைவுல இல்லாம இருக்குமா? இது வரை வந்ததில்ல. வந்தார்னா உன் ஞாபக சக்திய பாத்து சாஷ்டாங்கமா உன் கால்ல விழுந்திருப்பார்!”

“ஏன் அவனுக்கும் உன்னை மாதிரி மறதியா? உங்களுக்கெல்லாம் இந்தச் சின்ன வயசுலயே மறதி. என்னவோ போ! நீ போய் காபி போடு. போடறவரைக்கும் நான் சித்த கண்ண மூடிக்கறேன்”

“பகவானோட பேசப் போறியா? வந்து கூட்டிண்டு போன்னு?”

“நான் என்னவோ பண்ணிட்டுப் போறேன். ஒனக்கென்ன?”

ன்று ப்படி பாட்டியோடு விளையாடிய வைஷுவுக்கு, மறதி என்பதே இல்லாத அந்த மனுஷியா தன் நினைவு கூட இல்லாமல் கிடக்கிறாள் என்று வருத்தத்தில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவள் மேல் வயிறும் ஏறி இறங்கியது தெரிந்தது. ஸ்வாசம் நார்மலாக இல்லையோ?

சுற்றங்களின் வாய், சாப்பாட்டையும் வீட்டு வம்பையும் மென்று கொண்டிருந்தது.

“போன வாட்டி வந்து பாத்தப்ப கூட நன்னாதான் இருந்தா”

“பல வருஷம் ஆச்சே”

“டயாபர் போட்டிருந்தே இல்லியா அப்போ?”

“இல்லை சித்திப்பாட்டி, இப்ப  ஒரு 4, 5 மாசமாதான் போடறது”

“செலவுக்கு என்ன பண்ணறேள்?” – மாமா தாத்தா.

“எல்லாம் நாங்களும் தானே கொடுக்கறோம்” இரு சித்திகளும் அழுத்தமாகச் சொன்னார்கள்.

பாட்டியின் கூடப் பிறப்புகளிடம் இவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வதற்கான அழுத்தமான வசனங்கள்.

பணம் கொடுத்தால் போதுமா?  எல்லாம் நிறைந்து விடுமா?  ஆத்மார்த்தமாக பார்த்துக்கொள்வதற்கு ஈடாகுமா?  

வைஷுவுக்குச் சிரிப்பு வந்தது. எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தானே செய்யும். தானும் தன் அண்ணாவும் யாரிடமும் கேட்டதும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லையே. எதிர்பார்ப்பும் இல்லையே என்று.

அவ்வப்போது பாட்டியின் மூச்சை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வைஷு, பாத்திரங்களை ஒழித்துப் போட்டுத் தேய்க்கத் தொடங்கிய போது மீண்டும் மனம் 7, 8 மாதங்களுக்கு முன், பாட்டியின் நினைவு தப்பும் முன்னான நிகழ்வுகளுக்குச் சென்றது.

கோந்தே, நோக்கு நானும் உன் அத்தை ராஜமும் உன் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது.....எழுதினது தண்டபாணி தேசிகர்னு நினைவு  “அருள வேண்டும் தாயே அங்கயற்கண்ணி நீயே” நெனைவிருக்கோ?”

“ஓயெஸ்! அதெப்படி மறக்கும்! அந்த இத்துனூண்டு வயசுல… 5, 6 வயசிருக்குமா…. கனமான சாரமதி ராகத்துல ஆன இந்தப் பாட்டை ராகம் சறுக்கிப் போக எம்புட்டுக் கஷ்டப்பட்டுக் கத்துண்டேன்!”

“இப்ப கஷ்டமா இருக்காதே நோக்கு. நீ பாடறதே இல்லை. கொஞ்சம் பாடேன்.”

பாடினாள்.

“என்னவோ போ நீ பாட்டுல நன்னா வருவேன்னு நினைச்சேன். பகவான் உன்னை வேற பாதைல திருப்பி விட்டுட்டார்.”

“நாம எதை தேர்ந்தெடுக்கறோமோ அப்படித்தானே அமையும், வினைன்னு நீயே சொல்லிட்டு இப்ப பகவான் மேல பழிய போடலாமா? ஏதோ நான் எடுத்த சில முடிவுகள் தப்பாயிருக்கு. விளைவுகள நான் ஏத்துண்டுதானே ஆகணும்!”

மூடியிருந்த கண்ணுள் அங்குமிங்கும் அசைவு. வைஷுவின் பதிலை ஒட்டி பாட்டியின் மனதில் ஏதோ யோசனைகள் ஓடியது போலும். பாட்டி அமைதி காத்தாள்.

அதுதான் பாட்டி வைஷுவிடம் கடைசியாகப் பாடச் சொல்லிக் கேட்ட பாட்டு. எத்தனையோ பாடல்கள் சொல்லிக் கொடுத்திருந்தாள் ஆனால் இதை மட்டும் ஏன் கேட்டாளோ? நினைவில் இது தான் இருந்ததோ?

கொத்தமல்லி, கீரை, புதினா எல்லாம் நன்றாக ஆய்ந்து தந்து கொண்டிருந்த 92 வயதை எட்டிய பாட்டி, திடீரென்று ஒரு நாள் சாப்பாட்டின் போது சாதத்தைக் குழம்புடன் பிசையத் தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். வைஷு பிசைந்து வைத்தாள். உருட்டி உருட்டி கனுப்பிடிக்கு வைப்பது போல வைக்கத் தொடங்கினாள். எடுத்து சாப்பிடச் சொன்னாலும் ஒன்றைத் தட்டுத் தடுமாறி சாப்பிட்டாலும் மீண்டும் உருட்டினாள்.  

ஓ! டெமன்ஷியா! தொடக்கம் புரிந்தது, வைஷுவிற்கு.

நாட்கள் செல்லச் செல்ல பாட்டியின் மொபிலிட்டி குறைந்தது. இயற்கை உபாதைகளைச் சொல்லத் தெரியவில்லை. பசியும் தெரியவில்லை.

டயபர் போடத் தொடங்கினார்கள். ஊட்டிவிடத் தொடங்கினார்கள். பேச்சு இருந்தது. ஆனால் தொடர்பற்ற பேச்சுகள். நிகழ்காலம் தெரியவில்லை.

4 மாதங்களுக்கு முன் வைஷுவின் அத்தையின் மகள் பாட்டியைப் பார்க்க வந்திருந்த போது

“பாட்டி நான் யார்னு தெரியறதா?”

“பத்மாவா? ராஜமா வந்திருக்கா”

“பாட்டி பாதி கரெக்டுதான் உன் பொண்ணு ராஜத்தோட பொண்ணு, உன் பேத்திதான் வந்திருக்கேன்”

சரி என்றாகத் தலையை ஆட்டினாள்.

“ராஜம் வரலையா?”

‘உன் பொண்ணு ராஜம் இப்ப இல்லையே’ என்று சொல்ல வந்த அத்தை மகளை பார்வையாலும் சைகையாலும்  சொல்ல வேண்டாம் என்றாள் வைஷு.

“ராஜம், பத்மா எல்லாரும் வந்திருக்கா பாரு.” யாரிடம் சொன்னாளோ?

சாப்பாடு கொடுத்தால் வாயைத் திறப்பாள். அது அவளால் முடிந்தது அப்போது. வாயில் போட்டால் மெதுவாக முழுங்குவாள். ஆனால் திதிப்பா, உப்பா, என்ன சாப்பிடுகிறாள் என்பது தெரியாது.

வைஷுவும் அவள் மகளும் பாட்டியைக் குளிப்பாட்ட தூக்கிக் கொண்டு சென்று பாத்ரூமில் உட்கார வைத்துக் குளிப்பாட்டி, பெட் சோர் வராமல் இருக்க பௌடர் போட்டு, டயபர் கட்டி, பாட்டியின் இப்படியான நினைவற்ற, மாற்றி மாற்றி பேசும் பேச்சுகள் தொடர்ந்த நிலையில்….

ன்று காலை டாக்டர் கெடு வைக்க, கடைசி நிமிட முயற்சியில் ஒரு நாள் கடந்து கொண்டிருந்தது.

“என்ன இப்படி இழுத்துண்டுருக்கு. எங்களுக்கு எல்லாம் வீட்டு வேலை கடமை எல்லாம் இருக்கே. இப்ப என்ன பண்ணறதுன்னு குழப்பமா இருக்கு. ஊசலாடிண்டுருக்கு உசுரு.”

“நமக்கும்தான் கஷ்டம்.”

யார் வீட்டில் விசேஷம் என்றாலும் முன்னாலே சென்று அத்தனை பட்சணங்களும் செய்து சமையல் செய்து, குடும்பம் முழுவதிற்கும் உடலாலும், பொருளாலும் உழைத்த அந்த உயிரின் கடைசி நிமிடங்களில், உதவி பெற்றுக் கொண்ட அத்தனை உறவுகளின் பேச்சுகளும் வைஷுவின் மனதைப் பிழிந்தது.

புலம்பிக் கொண்டே எல்லாரும் அன்றைய இரவு படுத்தார்கள்.

வழக்கம் போல வைஷுவும் மகளும் பாட்டியின் கட்டிலுக்குச் சற்றுத் தள்ளிப் படுத்துக் கொண்டார்கள். வைஷுவிற்குத் தூக்கம் வர மறுத்து, எப்போது கண் அசந்தாளோ?  

திடீரென்று யாரோ பேசுவது போன்ற சத்தம் கேட்கவும் வைஷு விழித்தாள். இருட்டு. தெருவிளக்கும் இல்லை. கரண்ட் இல்லை என்று தெரிந்தது. கட்டிலில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் பசபசப்பாகத் தெரிந்தது. பாட்டியா? எப்படி? பிரமையோ? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். பரபரப்பில் வைஷுவுக்கு இதயத் துடிப்பு அதிகமாகியது.  ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்ததே? மொபைல் டார்ச்சை அடிக்க பயந்து மகளை மெதுவாக எழுப்பினாள்.

“பாட்டிதாம்மா உட்கார்ந்திண்டிருக்கா. எப்படிம்மா? ஐ ஆம் ஸ்கேர்ட்” வைஷுவின் கையைப் பிடித்துக் கொண்டாள். பாட்டி என்று மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கட்டிலின் அருகில் நகர்ந்தார்கள்.

“சங்குச் சக்கரத்தோட பகவான், திருவேங்கட சித்தி, மாமி, எங்காத்துக்காரர், பாப்பா மாமி எல்லாரும் வந்திருக்கா. என்னை கூட்டிண்டு போக. வாசல்ல நிக்கறா.” குத்திட்டு உட்கார்ந்து கொண்டு கைகளைப் பின்னால் ஊன்றிக் கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டு வாய் குழற உரக்கப்  பேசினாள்.

குரல் கேட்டு அதிர்ச்சியில் எழுந்தது சுற்றம்.  எதிர் பாரா நேரத்தில் எதிர்பார்த்த முடிவு நேர்ந்தது.  சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் முடிந்தன.  பேச்சற்று காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த வைஷு மனதில் வரிகள் ஓடின.

“கழுவித் துடைக்கப்படும் வீட்டில்

அடையாளமற்றுப் போகிறார்

உயிரிலிருந்து உடலானவர்” 

சிரமத்துடன் ஒரு பெருமூச்சு விட்டாள்.

சிறிது நேரத்தில் வீடு இனம் காண முடியாத உணர்வுகளுக்குள்ளாகி அமைதியானது.  பின் மெல்ல மெல்ல அனைவரும் இயல்பு நிலை அடைந்து அவரவர் ஊர் திரும்புவது பற்றியும் அடுத்த வேலைகள் பற்றியும் பேசத்தொடங்கினார்கள்..  சட்டென மீண்டும் வைஷு மனதில் கொஞ்சநாட்கள் முன்பு படித்த சில வரிகள் ஓடின.

“அழுது கொண்டிருந்த

அனைவரும்

ஆற்றங்கரைக்குப் போய்க்

குளித்து விட்டு

வந்த பிறகு

புன்னகைக்கத் தொடங்கினார்கள்.

அடுக்களையை எட்டிப் பார்த்த

அக்கா சொன்னாள்.

எளவு…

எலையப் போட்டா

சாப்பிட்டுக் கிளம்பிடலாம்.

டிரெயினுக்கு நேரமாகுது….

இவ்வளவுதானா...   ஒரு வாழ்க்கை என்பது இவ்வளவுதானா....  நம்முடனே உயிரும் உடலுமாய் இருந்து பழகிய ஒரு அருமையான மனுஷியின் நெடிய சரிதம் அவ்வளவுதானா?  திடீரென நெஞ்சே வெடித்துப் போகிற மாதிரி கதறி அழத் தொடங்கினாள், வைஷு..


குறிப்பு :

[ கதையில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் கவிதைகள் 'எங்கள் பிளாக் ஸ்ரீராம்' எழுதியவை ]

52 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. கதை பல காலகட்டங்களில் விட்டு விட்டு எழுதப்பட்டது போல் உள்ளது. வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே விவரிப்பது போல் உள்ளது. நடுவே நகைக்கு வைரம் கட்டுவது போல் கவிதைகளை புகுத்தி எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே நீளம் கூடிவிட்டது. கதையின் முடிவு தெரிந்தது தான் . கதையில் ஒரு முடிச்சு இல்லை.

  ஸ்ரீராம் சாருக்கு நல்ல ஐஸ்.

  கதை சுஜாதா தன்னுடைய அப்பாவின் கடைசி காலம் பற்றி ஒரு கதை எழுதியதை நினைவூட்டியது.

  தொடரட்டும் கதை முயற்சி.

  மொத்தத்தில் கதைக்கு 60 பெர்ஸன்ட் மார்க் தருகிறேன்.

  கொஞ்சம் கூடுதல் சீரமைத்து சில ப்குதிகளை வெட்டி சுருக்கி மெருகூட்டலாம்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜெ கே அண்ணா உங்க கருத்துக்கு, 60 % க்கும். நோட்டட்.

   ஸ்ரீராம் சாருக்கு நல்ல ஐஸ்.//

   ஹாஹாஹாஹா....ஜெ கே அண்ணா, ஸ்ரீராமிற்கு நான் ஐஸ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் நட்பு பரஸ்பரம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அதை எல்லாம் தாண்டிய நட்பு. அவர் பாஸும் எனக்கு நட்புதான்.

   இதற்கு முன்னும் என் கதைகளில் ஸ்ரீராமின் கவிதைகள் சில பயன்படுத்தியதுண்டு. வேறு சிலரின் கவிதைகள் இல்லை என்றால் புத்தகங்கள் (குறிப்பா ராஜம் கிருஷ்ணன், சுஜாதா, ) வரிகளைப் பயன்படுத்தியதுண்டு.

   ஒருவரின் எழுத்தை நாம் ரசிக்கும் போது அதை நாம் கோட் செய்தால் அவர்களுக்கு அதில் ஒரு சிறு மகிழ்ச்சி கிடைக்கும். சிலாகிப்பது போல் அவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறு அங்கீகாரம்.

   பெரிய எழுத்தாளர்களை நாம் கோட் செய்தால் அவர்கள் அதை எல்லாம் நோட் செய்யப் போவதில்லை. ஆனால் இப்படி நமக்குத் தெரிந்த நம்மோடு இருப்பவரையும் சேர்க்கும் போது அது ஒரு சந்தோஷம். அவ்வளவே.

   சமையல் குறிப்புகளில் கூட இங்கு வரவங்க எல்லாரையும் சேர்த்து எழுதியதுண்டு.

   வீட்டில் நடந்த நிகழ்வு என்றால் அதில் ஒரு சிலதுதான் கதையில். மற்றவை எல்லாம் நான் பல மரண நிகழ்வுகளில் பார்த்தது கேட்டவை என் மனதை வருத்தப்படச் செய்தவை.

   மிக்க நன்றி ஜெ கே அண்ணா, கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  2. முதலில் முடிவு வேறு. பாட்டி எழுந்து உட்கார்ந்துவிடுவாள்!! அதை யூகத்துக்கு விட்டு....சுற்றம் அலுத்துக் கொண்டு கிளம்பும்.!!!!!!!! என்பதாக இருந்தது.

   கீதா

   நீக்கு
  3. ஜெ கே அண்ணா நீங்க என்னை சும்மா கலாய்ச்சிருக்கீங்கன்னு தெரியும்....

   சும்மா எனக்குச் சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன் அம்புட்டுத்தான்.

   கீதா

   நீக்கு
  4. பாட்டி எழுந்து உட்கார்ந்தால் எம்டன் மகன் திரைப்படக் காப்பியா என்ற கேள்வியும் வரும்.

   நாம் எல்லாருமே, விதிவிலக்குகள் இல்லாமல், கற்பனை உலகில் வாழ்கிறோம். ஏகப்பட்ட வேலைகள் நம்மைத்தான் நம்பிக்கொண்டு காத்திருப்பது போலவும், குடும்பத்தை நாம்தான் தாங்குவது போலவும் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உலகியல் வேலைகள் நம்மை நம்பி இல்லை. கல்யாணத்துக்குப் போனால் நாம் போன உடன், தாலிகட்டல் நடந்து சாப்பாடு போட்டு உடனே கிளம்பிவிட வேணும், வாத்தியார் வந்தால் சட்டுப்புட்டென மந்திரங்கள் சொல்லி ச்ராத்தத்தை சீக்கிரமாக முடிக்கவேண்டும், ஏதேனும் சாஸ்திரம் இருக்குமாயின் அடுத்த வருட ச்ராத்தத்தையே இப்போதே ஒரே வாட்டி முடித்துவிட வேண்டும், நாம டிக்கெட் புக் பண்ணியாச்சுன்னா, சேர்ந்தவுடன் போக வேண்டியவர்கள் சட்டெனப் போய் காரியங்கள் நடக்கவேண்டும், வேகமா காரணம் சொல்லி திரும்பிவிட வேண்டும், நம்மை நம்பி ஏகப்பட்ட கடமைகள் இருக்கு என்ற கற்பனை உலகில்தான் நாம் சஞ்சரிக்கிறோம்.

   கதை நன்றாக இருக்கிறது. நெடுங் கவிதை ட்ரிம் பண்ணப்பட்டிருக்கலாம், சொந்தச் சிந்தனைகளில் சிலவற்றைக் கத்தரி போட்டிருக்கலாம்.

   நீக்கு
  5. பாட்டி எழுந்து உட்கார்ந்தால் எம்டன் மகன் திரைப்படக் காப்பியா என்ற கேள்வியும் வரும்.//

   ஓ அப்பட் ஒன்றுஇருக்கா? நான் எங்க படம் எல்லாம் பார்க்கிறேன், நெல்லை. இப்பதான் அதுவும் ரொம்ப செலக்ட்டிவாகத்தான் பார்ப்பேன். எல்லா படங்களும் பிடிபப்தில்லை.

   ஆமாம் எல்லாம் அவசர யுகம் போல எல்லாமே நாம செய்யறாப்ல உண்மைதான்..கால்ல சக்கரம் கட்டி இல்லைனா கஞ்சிதண்ணிய விட்டு வராப்ல ....உண்மைதான். மனோபாவங்கள் மாறிவிட்டன.

   கதை நன்றாக இருக்கிறது. நெடுங் கவிதை ட்ரிம் பண்ணப்பட்டிருக்கலாம், சொந்தச் சிந்தனைகளில் சிலவற்றைக் கத்தரி போட்டிருக்கலாம்.//

   மிக்க நன்றி நெல்லை. நோட்டட்.

   கீதா

   நீக்கு
  6. உணர்வு பூர்வமா எழுதறப்ப அப்படி ஆகிவிடுகிறது நெல்லை. கதையில் ஆழ்ந்துவிட்டால் வாசிப்பதும் சரி, எழுதுவதும் சரி ( அது போல படம் பார்க்கறப்பவும் பிடித்துவிட்டால்...ஆழ்ந்துவிடுவேன்) அப்படியே போய்டும்.

   கீதா

   நீக்கு
  7. முடிச்சு இருப்பது கதையை சுவாரஸ்யமாக்கும், இப்படியும் எண்ணங்களின் தொகுப்பாக எழுதலாமே ஜே.கே. சார்.

   நீக்கு
  8. சென்ற வாரம் என் கதைக்கு நீங்கள் விமர்சனம் எழுதவில்லை.

   நீக்கு
 3. கதை மிக இயல்பானது. மனதைக் கவர்ந்தது.

  கீதா ரங்கன்(க்கா) சிறு கதையே நெடுங்கதையா இருக்கும். அதில் ஶ்ரீராமோட நெடுங்கவிதையுமா? தாங்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லை. முதல் லைனுக்கு.

   //கீதா ரங்கன்(க்கா) சிறு கதையே நெடுங்கதையா இருக்கும். அதில் ஶ்ரீராமோட நெடுங்கவிதையுமா? தாங்குமா?//

   ஹாஹாஹாஹாஹா.....சிரித்துவிட்டேன்...

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  இன்றைய கதை நன்றாக உள்ளது. கதையோடு, நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கவிதைகளையும் பொருத்தமாக இணைத்தது உங்களின் தனிப்பட்ட சிறப்பு. உங்கள் வாழ்க்கையின் அனுபவ வரிகள் கதையோடு இணைவதும் அதனினும் சிறப்பு. (நீங்கள் உங்கள் பாட்டியிடம் எவ்வளவு பாசமும், அன்பும், மரியாதையும் வைத்திருந்தீர்கள் என்பதை பதிவுகளில் உங்களின் பல கருத்துக்களில் கண்டிருக்கிறேன்./ உணர்ந்திருக்கிறேன். )

  கதையை கண்களில் பெருகும் கண்ணீருடன் படித்தேன். ஏனெனில் கதையின் பல சம்பவங்கள் எங்கள் பாட்டியின் உறவையும், பிரிவையும் நினைவூட்டியது. மனது சிறிது பாரமாகி விட்டது.

  எப்போதும் மனிதர்களின் வாழ்க்கைதானே ஒரு கதையாகிறது. ஒரு கதையில் நடப்பதில், காண்பதில், முக்கால்வாசி எப்போதாவது நம் வாழ்கையாகியும் போகிறது. கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள் சகோதரி மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலாக்கா.

   //(நீங்கள் உங்கள் பாட்டியிடம் எவ்வளவு பாசமும், அன்பும், மரியாதையும் வைத்திருந்தீர்கள் என்பதை பதிவுகளில் உங்களின் பல கருத்துக்களில் கண்டிருக்கிறேன்./ உணர்ந்திருக்கிறேன்.//

   ஆமாம் அப்பப்ப சொல்லுவேன். கதையை ஸ்ரீராமிற்கு அனுப்பும் முன் இருவரிடம் கருத்து கேட்டேன். கதை என்னுடைய அனுபவம்னு வாசிக்கறவங்களுக்குத் தெரிந்துவிடும்னும் கதையை வாசித்துக் கருத்து சொன்ன ஒருவர் சொன்னார். ஆனால் இதில் ஒரு சிலது மட்டும்தான். மற்றவை எல்லாம்

   //ஏனெனில் கதையின் பல சம்பவங்கள் எங்கள் பாட்டியின் உறவையும், பிரிவையும் நினைவூட்டியது. மனது சிறிது பாரமாகி விட்டது.//

   இப்படித்தான் பல இடங்களில் பார்த்தவை கேட்டவை கலந்து கட்டித்தான். இன்னும் உண்டுதான்.

   ஆமா ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் நடப்பவை, நாம் சுற்றிலும் பார்ப்பவைதான் பெரும்பாலும் கதைகளாக மாறுகின்றன. கதையை பற்றிய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கமலாக்கா.

   கீதா

   நீக்கு
  2. கமலாக்கா உங்களுக்குப் போட்ட கருத்து ஒளிந்து கொண்டு இருக்குன்னு நினைக்கிறேன் இல்லேனா நெட் போனதில் பப்ளிஷ் ஆகாம போய்டுச்சோ?

   ஸ்ரீராம் பார்த்து சொல்லணும்.

   கீதா

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   நேற்றைய பதிவில் உங்கள் கருத்தைப் பார்த்து விட்டேன் சகோதரி. உங்கள் அ ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. அதன்படி நடக்க முயற்சி செய்கிறேன். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி ஸ்ரீராம்....முதல்ல...

  இன்னிக்கு முதல்ல செவ்வாய் தேதி எல்லாம் நினைவில்லாம இப்பதான் வீட்டில் ஒரு நிகழ்வு குறித்துப் பேசிய போது நினைவுக்கு வர .....கணினி ஓப்பன் செய்தால் நேற்றைய பதிவு வர....அதில் உங்களுக்கு நெல்லைக்கு கமலாக்காவுக்கு ஒரு கருத்து போட்டு இங்க வந்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அந்த நெடுங் கவிதை தவிர மற்ற எல்லாமே (சிறு கவிதைகள் உட்பட) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாருடைய கவிதை என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டிருக்க வேண்டாம். ஒரு நண்பர் என்று நிறுத்தியிருக்கலாம்.

  அவசர உலகில் நினைவுகளுக்கே கொஞ்சம்தான் நேரம் கிடைக்கும் என்கிறபோது, உடல் உதவிக்கு பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை.

  என்னுடைய எண்ணம்.. இந்த உலகில் நாம் பிறந்த பிறகு, அல்லது அதற்காக, பிறகு வளர்ந்து ஆளாக எத்தனையோ பேரின் உதவி, உடலுழைப்பு தேவையாக இருக்கிறது. இந்தக் கடன்களையெல்லாம் ஓரளவு தீர்க்காமல், அவர்களுக்கே செய்யும் வாய்ப்பில்லாதகோது அவரைப் கோன்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால், கடனாளியாகவே இறப்போம். கடனாளியை இறைவன் தன்னிடம் எப்படி ஏற்றுக்கொள்வார்? மீண்டும் பிறப்பு, கொஞ்சம் கடன் அடைத்தல், புதிய கடன்களை வாங்குதல் என்று வாழ்வு சுழல்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெடுங்கவிதையை ஸ்ரீராம் வியாழனில் பகிர்ந்த போதே அதில் கதையில் வருவது போன்ற கோணத்தில் சிந்தனை வந்தது பாட்டி இருந்திருந்தால் அவளிடம் இதை நான் பகிர்ந்தால் அவள் பதில் என்னவாக இருந்திருக்கும் என்ற கற்பனை எழுந்ததால் அதைச் சொல்லியிருந்தேன்.

   எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாருடைய கவிதை என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டிருக்க வேண்டாம். ஒரு நண்பர் என்று நிறுத்தியிருக்கலாம்.//

   ஓ அப்படின்றீங்களா. ஆனா பொதுவா ஒருவரது வரிகளை எடுத்துக்கறப்ப அவர் பெயரைப் போடுவதுதானே க்ரெடிட் இல்லையா....இங்க வரவங்களுக்கு அது ஸ்ரீராம்னு தெரியும். ஆனா பலரும் நமக்குத் தெரியாதவங்க வாசிக்கறப்ப?

   உங்க எண்ணம் எனக்கும் உண்டுதான் நெல்லை. ஆமா நன்றிக்கடன் நிறைய உண்டு. கூடியவரை அதை நான் உடலாம் ஆற்ற நினைப்பதுண்டு.

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  2. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாருடைய கவிதை என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டிருக்க வேண்டாம். ஒரு நண்பர் என்று நிறுத்தியிருக்கலாம்.//

   நோட்டட், நெல்லை. வேறு வகையிலும் கொடுக்கலாம்னு வேறொரு சஜஷன் தனிப்பட்ட முறையில் வந்தது.

   கீதா

   நீக்கு
 8. கதையின் உரையாடல்கள் எண்ணவோட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்குத் தெரிந்த சமூகச் சூழலில் கதைச் சம்பவங்கள் நடப்பதால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி நெல்லை. என் பாட்டியோடு நான் வாயாடியது....உரையாடல்கள் சில....சில அவர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்ற கற்பனை.

   பாட்டிதான் எனக்குத் திருப்பாவை, சில தமிழ்க்கிருதிகள் அத்தைகளும் சேர்ந்து கற்றுக் கொடுத்தாங்க.

   கீதா

   நீக்கு
 9. கதை நன்றாக இருக்கிறது கீதா.
  கதைக்கு பொருத்தமாக ஸ்ரீராம் அவர்களின் கவிதை அமைந்து விட்டது.
  பாட்டியின் திறமைகள், பேத்தியின் நினைவுகள் மூலம் மிக அருமையாக சொல்லி விட்டீர்கள்.

  யதார்த்தப் பிரச்சனைகளை அப்படியே சொல்லி விட்டீர்கள்.
  உடம்பு சுகமில்லாமல் படுத்து விட்டால் பாயுக்கும் நோவு என்பார்கள்.

  //பணம் கொடுத்தால் போதுமா? எல்லாம் நிறைந்து விடுமா? ஆத்மார்த்தமாக பார்த்துக்கொள்வதற்கு ஈடாகுமா? //

  ஆத்மார்த்தமாக பார்த்து கொள்ளும் உறவு கிடைப்பது வரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதிக்கா.

   //யதார்த்தப் பிரச்சனைகளை அப்படியே சொல்லி விட்டீர்கள்.
   உடம்பு சுகமில்லாமல் படுத்து விட்டால் பாயுக்கும் நோவு என்பார்கள்.//

   ஆமாம் கோமதிக்கா. ஒரு சிலரது கடைசிகாலத்தில் நடப்பவற்றைப் பார்த்ததால் வந்தவைதான்.

   //ஆத்மார்த்தமாக பார்த்து கொள்ளும் உறவு கிடைப்பது வரம்.//

   உண்மைதான் கோமதிக்கா.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
  2. //பணம் கொடுத்தால் போதுமா? எல்லாம் நிறைந்து விடுமா? ஆத்மார்த்தமாக பார்த்துக்கொள்வதற்கு ஈடாகுமா? //

   இந்த வரிக்கு நன்றி ஸ்ரீராமிற்கு!!!!

   கீதா

   நீக்கு
 10. பாட்டியும் , பேத்தியும் பேசும் போது பாட்டி தன் நினைவுகளிலிருந்து பல விஷயங்களை சொல்லி கொண்டு வருவது, பேத்தி அதற்கு பதில் சொல்லும் உரையாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது.

  //யார் வீட்டில் விசேஷம் என்றாலும் முன்னாலே சென்று அத்தனை பட்சணங்களும் செய்து சமையல் செய்து, குடும்பம் முழுவதிற்கும் உடலாலும், பொருளாலும் உழைத்த அந்த உயிரின் கடைசி நிமிடங்களில், உதவி பெற்றுக் கொண்ட அத்தனை உறவுகளின் பேச்சுகளும் வைஷுவின் மனதைப் பிழிந்தது.//

  மனதை நெகிழ செய்த வரிகள்.

  உங்கள் கதையை படிக்கும் போது லா ச. ரா ((லா. ச. ராமாமிர்தம்)
  நினைவுக்கு வந்தார். நினைவையும், நடப்பையும் கலந்து கலந்து கதை எழுதி இருப்பார். நினைவு அடுக்குகளில் என்ன வெல்லாம் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவை இறப்பு நேரத்தில் வருமோ!

  உங்கள் கதையை இரண்டு வாரம் கொடுத்து இருக்கலாம்.
  திரும்ப திரும்ப படிக்க வேண்டும். யாதர்த்த நடையில் மிக அருமையாக கதை வந்து இருக்கிறது. வாழ்த்துகள், பாராட்டுக்கள் கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா சில விஷயங்கள் உரையாடல்கள் நான் பாட்டியோடு இருந்ததால் வந்தவை. மற்றவை சுற்றிலும் பார்த்தவை, கேட்டவைதான். என்னை பாதித்த விஷயங்கள்.

   நமக்கு முந்தைய தலைமுறையினர் பாட்டிகள் பலரும் உடலால் குடும்பத்துக்கே உழைத்தவர்களாகத்தான் இருப்பாங்க. சிலர் ஊருக்கே கூட உழைச்சிருப்பாங்க. நான் கிராமத்தில் கண்டவை பலதும்.

   //உங்கள் கதையை படிக்கும் போது லா ச. ரா ((லா. ச. ராமாமிர்தம்)
   நினைவுக்கு வந்தார். நினைவையும், நடப்பையும் கலந்து கலந்து கதை எழுதி இருப்பார். நினைவு அடுக்குகளில் என்ன வெல்லாம் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவை இறப்பு நேரத்தில் வருமோ!//

   ஆ!!! அக்கா...லாசரா எங்கே நான் எங்கே!! அவரது கதைகளை வாசித்ததுண்டு. எனக்குப் பிடிக்கும் அவர் எழுத்து. சில இரு முறை மூன்று முறை வாசிக்க வேண்டியிருக்கும்.

   கோமதிக்கா, சமீபத்துல ஸ்ரீராமிடம் அவர் அனுபவத்தை எழுதியிருந்த போது கதையாக்கியிருக்கலாம் என்ற போது செவ்வாய் ஃபுல் என்று சொல்லியிருந்தார். அதனால போட்டிருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் இல்லேனா அவரே சொல்லியிருப்பார்.

   //திரும்ப திரும்ப படிக்க வேண்டும். யாதர்த்த நடையில் மிக அருமையாக கதை வந்து இருக்கிறது. வாழ்த்துகள், பாராட்டுக்கள் கீதா.//

   மிக்க நன்றி கோமதிக்கா.

   கீதா

   நீக்கு
 11. //இருட்டில் ஒருநாள்

  ஒளியாய் வருவாய்

  என நான்

  இன்னமும் காத்திருக்கிறேன்”//

  அப்படித்தான் எல்லோரும் காத்து இருக்கிறார்கள்.


  ஸ்ரீராம் கவிதை வரி பிடித்த வரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு அந்தக் கவிதை பிடித்திருந்தது வேறொரு கோணத்திலும் சிந்தனை எழுந்ததால் உட்படுத்தினேன்.

   ஆனால் கதை நீண்டுவிட்டதுதான்...ஸ்ரீராமிடமும் சொன்னேன் தான்.

   கீதா

   நீக்கு
 12. //சங்குச் சக்கரத்தோட பகவான், திருவேங்கட சித்தி, மாமி, எங்காத்துக்காரர், பாப்பா மாமி எல்லாரும் வந்திருக்கா. என்னை கூட்டிண்டு போக. வாசல்ல நிக்கறா.”//
  பாட்டியின் நம்பிக்கை படி பகவான் வந்து விட்டார்.
  இந்த வரிகளை படிக்கும் போது என் அம்மா நினைவுக்கு வந்தார்கள்.
  என் அம்மா கடைசியில் அப்பா, என் பாட்டி, தாத்தாவை நினைத்து வந்து விட்டார்கள் அழைத்து போக என்று சொன்னது நினைவில் வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா, டக்குன்னு போறவங்க, தூக்கத்துல போறவங்களை விட இப்படிக் கொஞ்சம் படுக்கையில் இருப்பவங்க இல்லைனா வயசானவங்க, கடைசி காலம் என்று நினைப்பவங்க பொதுவா இப்படிச் சொல்வதுண்டு என்று தெரிகிறது. சமீபத்தில் என் மாமா கூட கடைசியில் மருத்துவமனையில் இருந்தப்ப, எங்கள் ஊர் சுவாமியையும், அவர் அம்மாவையும் கூப்பிடத் தொடங்கியதாக அவர் பேத்தி சொன்னாள்.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 13. கழுவித் துடைக்கப்படும், அழுதுகொண்டிருந்த... இந்த இரண்டு கவிதைகளும் பொருத்தமாக உட்கார்ந்துகொண்டன. கவிதைகளுக்குப் பாராட்டுகள் ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லை. ஸ்ரீராம் முன்னரே எழுதியவைதான்.

   மிக்க நன்றி நெல்லை! ஸ்ரீராமுக்கும் சேர்த்து!!

   கீதா

   நீக்கு
 14. பலரது வீடுகளில் நிகழ்ந்த, நிகழும் ஓரிரு தினங்களின் சம்பவம் கண்முன் நிகழ்ந்து கடந்து போனது போன்ற உணர்வு.

  நானும் இவைகளை கடந்து இருக்கிறேன்....
  கவிதை வரிகள் சிறப்பு வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி. ஆமாம் பலரது அனுபவங்களும்...

   கீதா

   நீக்கு
 15. துரை அண்ணாவைக் காணலை? காலையிலேயே பிரார்த்தனை சொல்லி வந்துவிடுவார். நலம்தானே? இல்லை திருவிழா பற்றி சொல்லியிருந்தாரே கருடசேவை என்று அது காண போயிருக்கிறாரோ!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. /// துரை அண்ணாவைக் காணலையே?.. காலையிலேயே பிரார்த்தனை சொல்லி வந்துவிடுவார். நலம்தானே? ..///

  நலம் தான்..
  நடுக்கடல் காக்கைக்குப் போக்கிடம் ஏது?..

  விடியற்காலையில் நான் தான் முதலில் படித்தேன்.. மனசு சரியில்லை..

  யதார்த்தமான நடை..
  இன்னமும் மனதுக்கு என்னவோ போல் இருக்கின்றது..

  அவர்களைப் போல விவரித்து எழுதுவதற்கு இயலவில்லை..

  /// கருட சேவை என்று அது காண போயிருக்கிறாரோ!.. ///

  கருட சேவை நாளைக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா, இப்படியானதுதானே வாழ்க்கை.

   வாழ்க்கையில் நடப்பதுதானே...அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்துவிடவில்லையா பழைய நிலைக்குத் திரும்புவதில்லையா... எனவே கதையை கதையாகக் கொள்வோம் துரை அண்ணா.

   அதனால் என்ன விவரித்து எழுதவில்லை என்றால்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி துரை அண்ணா.

   ஓ நாளைதான் கருட சேவையா...போக முடிந்தால் போய் வாருங்கள்.

   மீண்டும் நன்றியுடன்

   கீதா

   நீக்கு
 17. வணக்கம் சகோதரி

  தங்களின் இயல்பான நடையில், ஸ்ரீராம் சகோதரரின் இயல்பான கவிதைகளை கையாண்டு எழுதிய கதை படிக்க நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். கதையில் வந்த முடிவின் சோகம் என் மனதை விட்டு அகலவில்லை. இருந்தாலும், இப்படியான நிதர்சனங்கள் நம் வாழ்வில் நியதிதானே..!

  கவிதைகளை ஆழமான வரிகள் கொண்டு புனைந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கமலாக்கா மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு. இப்படி எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுதானே கமலாக்கா இல்லையா. சில கதைகள் நமக்குச் சில நினைவுகளை எழுப்பலாம்தான். கதையை கதையாகக் கொள்வோம்.

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 18. கருத்து சொன்ன நட்புகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  பத்திரிகைக்குக் கதை அனுப்பினால் அனுப்பிய பிறகு நமக்கு மாற்றங்கள் ஏதேனும் தோன்றினால் செய்ய இயலாது. ஆனால் ப்ளாகில் அப்படி இல்லை. மாற்றங்கள் கொஞ்சம் மேம்படுத்தல் தோன்றும் போது செய்து கொள்ளலாம்.

  அப்படியாகக் கதையில் இறுதிப் பகுதியில் அந்தக் கவிதைகள் வரும் பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் கருத்து சொல்ல முடியலைனாலும் வாசித்துப் பார்க்கலாம். குறிப்பாக JKC அண்ணா

  ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் ஸ்ரீராமின் பெயர் போட்டதை எடுத்துவிட்டு (அதுக்குக் காரணம் நான் வியாழன் பகுதியிலிருந்து அப்படியே காப்பி எடுப்பதால் ஸ்ரீராமின் பெயரும் அதோடு வந்துவிடும்...அதை அப்படியே கதையில் போட்டுவிட்டுத் தட்டிக் கொட்டும் போது விட்டுவிட்டேன்) கதையின் முடிவில் குறிப்பாக அடைப்புக் குறிக்குள் கொடுத்தாச்சு.

  மீண்டும் எல்லோருக்கும் நன்றியுடன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா வாழ்க வளமுடன்
   ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் ஸ்ரீராம் பேர் போட்டதை மாற்றியதும், கடைசியில் கவிதை வழங்கியவர் ஸ்ரீராம் என்று போட்டதும் அருமை கீதா.

   நீங்கள் சொல்லி ஸ்ரீராம் மாற்றியது மகிழ்ச்சி.

   //பத்திரிகைக்குக் கதை அனுப்பினால் அனுப்பிய பிறகு நமக்கு மாற்றங்கள் ஏதேனும் தோன்றினால் செய்ய இயலாது. ஆனால் ப்ளாகில் அப்படி இல்லை. மாற்றங்கள் கொஞ்சம் மேம்படுத்தல் தோன்றும் போது செய்து கொள்ளலாம்.//

   ஆமாம். பத்திரிக்கையில் கதை அனுப்பினால் அவர்கள் இஷ்டம் கதையை இஷ்டபடி மாற்றவும் ,குறைக்கவும் அவர்களுக்கு உரிமை இருப்பதாக சொல்வார்கள்.

   //அப்படியாகக் கதையில் இறுதிப் பகுதியில் அந்தக் கவிதைகள் வரும் பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.//

   இறுதி பகுதி மாற்றமும் நன்றாக இருக்கிறது.
   எல்லோரும் போன பின் தான் மனம் உடைந்து வைஷூ அழும் போது நமக்கு கண்ணீர் வருகிறது.
   பாட்டியின் நினைவுகளில் மனம் கரைந்து போகிறது.
   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   இறுதி மாற்றங்களை நீங்கள் இங்கு சொன்னவுடனே படித்து விட்டேன். இந்த திருப்பும் நன்றாக உள்ளது. எல்லாம் முடிந்த பிறகு, வைஷு கதறி அழுவது மாதிரி காட்டியுள்ள திருப்பும், கவிதையை அந்த இடத்திற்கு பொருந்தும்படி எழுதியிருப்பது நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் சகோதரி.

   நானும் இதைப் போலவே இரண்டு கதைகளை எழுதியிருப்பது என் நினைவுக்கு வருகிறது. இரண்டிலும் சில மாறுதல்கள். "தீயின் ஆரம்பம்" அம்மா"என்ற கதைகள் உங்களுக்கும் நினைவிருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. மிக்க நன்றி கோமதி அக்கா.

   கீதா

   நீக்கு
  4. கமலா அக்கா மிக்க நன்றி.

   ஆமாம் நினைவு இருக்கு அக்கா.

   கீதா

   நீக்கு
 19. கீதாவுக்கே உரிய நீண்ட, உணர்ச்சிபூர்வமான கதை.

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம் சின்னப் பையனா??? இதெல்லாம் ரொம்ப ஓஓஓஓவர்! அடுத்த வருடம் தாத்தாவாகவே ஆகிவிடுவார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா பானுக்கா நீங்களுமா??!!!!!!!!!!!!!!!!!!!!!! இது கதை கதையில் அந்த ஸ்ரீராம் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ப் பையன் தான்!!! மனதிற்கும் உண்டோ வயது!!!?

   கீதா

   நீக்கு
 21. கதை இக்காலகட்ட வாழ்க்கையை எடுத்துக்காட்டும் உணர்ச்சிகரமானதாக இருந்தது.

  படிக்கும் போதுசற்று நீளம் என்பதாக உணர்ந்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!