வியாழன், 9 மே, 2024

மன் சாஹே கீத்

 நாங்கள் ஒரு பிலிப்ஸ் வால்வ் ரேடியோ வைத்திருந்தோம். 

நினைவு தெரிந்து நான் முதலில் பார்த்த பாடல்கள் உள்ள  மற்ற மொழித் திரைப்படம் ஹிந்தியில்.  யாதோங்கி பாராத்.  அதன் பாடல்கள் அப்போதே மனதில் தங்கி விட்டன.  காட்சி அமைப்புகளும் காரணமாக இருக்கலாம்.

வழுவழுப்பான பிரௌன் நிறத்தில் இரு பக்கமும் பிளைவுட் போன்ற மெடீரியல்.  பின்னால் பிரிக்கக் கூடிய நிலையில் சாதாரண பிளைவுட் அட்டை.  ரிப்பேரானால் வசந்தராஜ் அதைப் பிரித்துதான் வேலை பார்ப்பார்.  அப்பா ஆஃபீஸில்  கீழே வேலை பார்த்தவர்.  ரேடியோ இப்போதைய அளவில் ஒரு 14 இன்ச் டிவி அளவில் செவ்வகப் பெட்டி.  கொஞ்ச நாள் மேஜை மேல் இருந்த ரேடியோ, பின்னர் சுவரில் சற்றே உயரத்தில் ஒரு ஸ்டான்ட் அடிக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டது.  எங்களுக்கெல்லாம் எட்டக் கூடாதாம்...  எங்களிடமா? 

இதைப்பற்றி எங்கு எப்போது பேசினோம் என்று நினைவில்லை.  எப்படி ரேடியோவில் இதுபோன்ற சுகமான சுவையான ஹிந்திப்பாடல்கள் கேட்கலாம் என்று தெரிந்தது என்றும் நினைவில்லை.  அநேகமாக என் மாமன் ஜவர்லால் மூலம் தெரிந்திருக்கும்.  என் அண்ணனும் ஜவர்லாலும் ஒரே வயது.  எனவே நெருங்கிப் பழகுவார்கள்.  ஜவர்லால் மூலம் நாங்கள் அறிவு பெற்ற விஷயங்கள் நிறைய...  காபி அடித்ததும் கணிசம்!

ரேடியோவின் முன்புறம் மேல்பகுதியில் மினுமினு தகதக மஞ்சள் நிறத்தில் ஒரு வெல்வெட் துணி ஸ்பீக்கரை மூடி இருக்கும்.  அழுத்தித் தொட்டால் சற்றே உள்ளமுங்கும் (உள் அமுங்கும்!)  மேலே வலதுபக்க மூலையில் மொழுக்கென்று ஒரு குண்டு பல்பு துருத்திக் கொண்டிருக்கும்.  ரேடியோ ஆன் செய்த உடன் அதுதான் ரேடியோ உயிர்ப்பதை ஒளிர்ந்து காட்டிக் கொடுக்கும்.  அது மங்கலாக ஒளிரத்தொடங்கி பளிச்சென்று ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.  அதிகமில்லை சுமார் பத்து வினாடிகள் போதும்.

அப்பா அலுவலகம் சென்ற உடன் எங்கள் ராஜ்ஜிம் தொடங்கும் என்றேன் அல்லவா...  அலமாரி அலமாரியாக  இருந்த புத்தகங்களிலிருந்து 'நல்ல பைண்டிங் புத்தகம்' ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவசரம் அவசரமாக ஈஸி சேரைக் கைப்பற்றி உட்காருவோம்.  யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு ஈஸிச்சேர்.  அது கிடைக்க நாட்களில் - பெரும்பாலும் எனக்கு கிடைக்காது - கட்டிலில் உள்ள தலையணை, போர்வை எலலவற்றையும் கலைத்து சுற்றிப்போட்டு மெத்தை அமைத்து அதில் படுத்து புத்தகம் படிப்போம்.  ரேடியோ ஆனில் இருக்கும்.  காலை 10.30 முதல் 12 மணிவரை நாங்கள் கேட்கும் வண்ணம் ரேடியோவில் ஒன்றும் இருக்காது!  அப்புறம் மெதுவாய்த் தொடங்கும்.

அதை அப்பா எப்போது, எந்த வருடம் வாங்கினார் என்று தெரியாது.  வீட்டு வாசலில் பாரதியார் வலதுகை சுட்டுவிரலை உயர்த்தியபடி நடந்து வருவது போல ஒரு படம் வைத்திருப்பார்.  அதில் "பெரிதினும் பெரிது கேள்" என்று எழுதி இருக்கும்.  அது போல இந்த ரேடியோவும் அவர் பார்த்துதான் காத்திருந்து உயர்ந்த ரகமாய் வாங்கி இருப்பார்.  எல்லோரும் சொல்வது போல ஜெர்மன் பிலிப்ஸ் அது இது என்று உயர்ந்த ரகம். ஒலித்தரமும் உயர்ந்த ரகம்.  முழு அளவில் ஒலியைக் கூட்டினால் மூன்று வீடு தள்ளிக்கூட கேட்கலாம்.  ஒலியைக் கூட்டக் கூட்ட அந்த வெல்வெட் துணி மெல்ல நடுங்கும்!

மதியம் ஒரு மணிக்கு விவித்பாரதி வைப்போம்.  அது விவித் பாரதியா விவித பாரதியா?  மன் சாஹே கீத், இரண்டரை மணிக்கு மனோரஞ்சன், (இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் 'லோக்சங்கீத்' கேட்கமாட்டோம்.  டொய்ங் டொய்ங் என்று பாடுவார்கள்!)  இரவு ஏழு மணிக்கு ஆப் கே ஃபர்மாயிஷ், இரவு பத்து மணிக்கு சாயா கீத், பத்தரை மணிக்கு சித்திரபட் சங்கீத் கேட்போம்.  வியாழன் அல்லது புதன் கிழமைகளில் இரவு பினாகா கீத்மாலா வைத்து புதிய பாடல்கள் அறிமுகம் தெரிந்து கொள்வோம்.  ஆனந்த்பக்ஷி, மஜ்ருசுல்தான்பூரி, ஆர் டி பர்மன், கிஷோர்குமார், ரஃபி போன்ற பெயர்கள் எங்களுக்கு அறிமுகமாகின.

எனக்கு நினைவு தெரிந்த வகையில் இருபது வருடங்களுக்கும் மேலாக எங்கள் வீட்டில் சேவையாற்றி இருக்கிறது அந்த பிலிப்ஸ் ரேடியோ.  அது ரிப்பேராகும் வேளை ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.  வசந்தராஜ் சமயங்களில் ரேடியோவை அவர் வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி விடுவார்.  என் அண்ணனும் அவர் நண்பர் ராஜு எனப்படும் தியாகராஜனும் அவர் சைக்கிளில் பின்னே கேரியரில் கட்டி ரேடியோவை அவர் வீட்டுக்கு தள்ளிக்கொண்டே எடுத்துச் செல்வார்கள்! நானும் ஓரிருமுறை உடன் செல்ல முயன்றிருக்கிறேன்,  இடைவெளி இல்லாமல் ராஜு பேசிக்கொண்டே வருவார்.  என் அண்ணன் 'உம்' கொட்டிக் கொண்டே வருவார்.  எனக்கு போர் அடிக்கும்!

நாளை நமதே வெளியானபோது யாதோங்கி பாராத்தின் தமிழ்ப்படம் என்று அறிந்து அருள் தியேட்டர் சென்று 'குடும்பத்துடன்' பார்த்து வந்தோம்!  கதை புரிந்ததால் ஹிந்திப் பாடல்களுக்கு இணையாக நாளை நமதேயின் தமிழ்ப் பாடல்களும் மனதில் இடம்பிடித்தது.  இதில் விசேஷம் என்ன என்றால் அப்போது நாங்கள் சிவாஜி ரசிகர்கள்,  எம் ஜி ஆர் பிடிக்காது!

தஞ்சையை விட்டு மதுரை வந்த நேரம் பிலிப்ஸ் வேலை இழந்ததது.  அது தன் முதுமையில் இருந்தது.  அதன் ஸ்பீக்கரை நாங்கள் வேறு எதற்கோவும் உபயோகப்படுத்திய நினைவு.  பின்னர் அதை நான் வந்த விலைக்கு விற்றேன்!

இலங்கை ரேடியோவில் ஒலிச்சித்திரம் எல்லாம் வைப்பார்கள்.  'அன்பு சகோதரர்கள்' ஒலிச்சித்திரம் கேட்டு அழ, மூன்றாம் வீட்டிலிருந்து பதினைந்து வயதுப் பெண் ஒருத்தி எஜமானியின் கைக்குழந்தையோடு வருவாள்.  ஒலிச்சித்திரம் கேட்டு அவள் அழுததும் நான் ரேடியோவை அணைத்து விடுவேன்.  அவள் கெஞ்சி கெஞ்சி மறுபடி வைக்கச் சொல்வாள்.  என் அம்மாவிடம் சிபாரிசு செய்து வைக்கச் சொல்வாள்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் இருந்த எல்லாம் அநேகமாக எங்கள் வீட்டில் மட்டும்தான் ரேடியோ இருந்தது என்று நினைக்கிறேன்.  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.  நாற்காலியைப் போட்டு மேலேறி ரேடியோ வைக்கத்தெரியும்.  ஆனால் அப்பா அலுவலகம் சென்ற பிறகுதான் இதெல்லாம்.  அப்புறம் என், என் அண்ணனின் ராஜ்ஜியம்!  அப்பா காலை பக்தி மாலை வைத்து விடுவார்.  அப்புறம் ஏதோ பக்தி பேச்சு அது இது என்று போகும்.  அவர் போகும்போது அணைத்துவிட்டு செல்வார்.  அடுத்த பத்து நிமிடங்களில் அது மறுபடி ஆன் செய்யப்பட்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் (தமிழ்சேவை இரண்டு) வைக்கப்படும்.

பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி காதில் விழும் பாடல்கள் அடுத்தடுத்த வாரங்களில் அறிமுகமான பாடல்களாகி விடும்.  நிறைய கிஷோர் குமார், ஆர் டி பர்மன் பாடல்கள் கேட்கும்போதே மனதில் ஒட்டிக்கொள்ளும்,  நாங்கள் புத்தகம் படித்தபடி இருப்போம்.  கதைப் புத்தகங்கள்தான்!  தானாக ஓடிய ரயில் எஞ்சினை ஒரு டிரைவர் பாய்ந்து நிறுத்திய கதை, பிலோ ருயநாத் கட்டுரைகள், பிலஹரி கதைகள், மஞ்சரி கட்டுரைகள், தமிழ்வாணன் கதைகள், சாண்டில்யன் கடத்தி  எங்கள் பேவரைட்.  நடுநடுவே தெரிந்த பாடல்கள் வரும்போது துள்ளிக் குதித்து எங்களுக்கு அவை தெரிந்த பாடல்கள் என்பதை விளம்பரப்படுத்தி ரசிப்போம்!  அது கூட ஜவர்லாலிடமிருந்து காபி அடித்ததுதான்.  "வாத்தியார்தான் அது" எனும் வார்த்தை,  உங்களுக்குத் தெரிந்த பாடல் வரப்போகிறது என்று அறிவிப்பு வந்த உடனேயே நாங்கள் சொல்வது அது!

===================================================================================================

ஜீவி ஸார் விருப்பப்படி துரை செல்வராஜூ எழுதிய கவிதை இந்த வாரம்...  சென்ற வாரமே வெளியிட்டிருக்க வேண்டும்.  தவறி விட்டது.  செல்வாண்ணா மன்னிக்க...  கதையும் வந்து விட்டது.  அது ஜூலை மாதம் வெளியாகும்!

நேற்றைய பதிவில் - அன்பின் ஜீவி அண்ணா அவர்கள்,

தம்பி செல்வராஜூ,

இதோ ஊற வைத்த இட்லி அரிசி, உளுந்து, கொஞ்சம் வெந்தயம் எல்லாம் ரெடி..

ஒரு செவ்வாய்க்கு?...

- என்ற ஒரு கருத்தினை (கொஞ்சமாய் பொடியுடன்)
 முன் வைத்திருந்தார்.. 

இதில்,
செவ்வாய்க்கு - என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு நேற்றிரவு எழுதியதை தங்களுக்கு அனுப்பியிருக்கின்றேன்..
கதை பிறகு!..

மகிழ்ச்சி.. நன்றி..

***
அவன் :
செவ்வாய்க்கு 
சிவப்பெழுதி
வந்தவளே வா வரங்கொடு..
செந்தாழம் பூமணமாய்
வந்தென் நெஞ்சில் கலந்து விடு..

அவள்:
தண்முல்லை தாமரை
என்றிங்கு வந்தவனே..
கண்கொண்ட கவிதைக்குள்
பண்கொண்டு நின்றவனே..

ஊருக்கும் உறவுக்கும் 
கருத்தழிந்த நேரத்தில்
நீமட்டும் கண்கொண்டு
கவிதையென வந்தனையா?..

அடுத்தொரு நாள் ஆகுமென..
ஆனமட்டும் பார்க்கின்றேன்..
இலவு காக்கும் கிளிக்கென்று
எனையே நான் வைக்கின்றேன்..

மீண்டொரு நாள் வருவேன்..
உறங்கா விழி ஒற்றைப் பூவுடன்..

சொல் எந்தப் பூ உனக்குப் பிடிக்கும்?..
ஈரக் கூந்தலும் பனியிதழ்ப் பூவுமாய்
நான் வருவேன் நானே வருவேன்..

***
================================================================================================

படித்ததிலிருந்து பகிர்வது...   சினிமா செய்திகள் எப்போதுமே சுவாரஸ்யம் என்றாலும், சிலபேரின் குணாதிசயங்கள் தெரியவந்து அதிசயிக்க வைக்கும்.


கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுகிறார் குமரி முத்து.

2016 ல் இறந்து விட்ட குமரி முத்து, எப்போதோ தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டி அது.

அதில் விவேக் பற்றியும் ஒரு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

குமரி முத்துவின் கடைசிப் பெண்ணுக்கு கல்யாணமாம். 
ஆனால் அப்போது அவர் கையில் போதுமான அளவு பணம் இல்லையாம்.

அந்த நேரத்தில் இலங்கையில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள்.  50 ஆயிரம் ரூபாய் தருவதாக பேசியிருக்கிறார்கள்.

சரி எனச் சொல்லி விட்டார் குமரி முத்து. அடுத்ததாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்ட கேள்வி: "விவேக்கையும் அழைத்து வர முடியுமா?"

விவேக்கிடம் போயிருக்கிறார் குமரி முத்து. விஷயம் முழுவதையும் சொல்லி இருக்கிறார்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த விவேக், அதன்பின் கேட்டிருக்கிறார்.

"உங்களுக்கு ஐம்பதாயிரம் சரி. எனக்கு எவ்வளவு கொடுப்பார்கள்..?"

எப்படியாவது விவேக்கை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என நினைத்து, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து.

'அப்படியானால் சரி' என்று சம்மதித்தாராம் விவேக். 

நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. ஐம்பதாயிரம் ரூபாயை கொண்டு வந்து குமரிமுத்துவிடம் கொடுத்திருக்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். 

"விவேக் சார் எங்கே" என்று கேட்டிருக்கிறார்கள்.

விவேக் தங்கியிருந்த அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாராம் குமரிமுத்து. 

பேசியபடியே இரண்டு லட்சம் ரூபாயை விவேக் கையில் கொடுத்து இருக்கிறார்கள். 

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட விவேக், சற்று தள்ளி நின்ற குமரிமுத்துவை அருகில் அழைத்தாராம்.

தன் கையிலிருந்த இரண்டு லட்ச ரூபாயை அப்படியே குமரி முத்துவின் கையில் கொடுத்துவிட்டாராம்.

எதுவும் புரியாமல் விவேக்கை பார்த்திருக்கிறார் குமரிமுத்து. 
விவேக் புன்னகை மாறாமல் சொன்னாராம். "உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்தமுடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்களே, இதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்.  இதற்காகத்தான் நீங்கள் கேட்டவுடன் நான் இந்த நிகழ்ச்சிக்கே வர சம்மதித்தேன்."

"வாழ்க்கையில் சந்தோஷம் தாங்காமல் நான் அழுதது அதுதான் முதல் முறை" என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் குமரிமுத்து.

சினிமாவில் மட்டுமல்ல.  நிஜ வாழ்க்கையிலும் தன்னை சுற்றி இருந்த எல்லோரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைத்து, ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டுப் போயிருக்கிறார் விவேக்.

(17 ஏப்ரல் 2021)

John Durai Asir Chelliah

==========================================================================================

நியூஸ்ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


Newsroom 9.5.24

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 30 வயதாகும் தான்சேன் தன்னுடைய பத்தாவது வயதில் ஒரு மின்சார விபத்தில் மூட்டுக்கு கீழ் தன் இரு கைகளையும் இழந்தவர். 

தொழிலதிபர் ஸ்ரீவாரி சங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியோடு கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்த பொழுது, தானியங்கி கியர் உள்ள வண்டியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு ஏற்றார் போல வண்டியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அந்த வண்டியை RTO அதிகாரி திருப்தியுறும் வண்ணம் கார் ஓட்டி உரிமம் பெற்றிருக்கிறார்.  தமிழகத்தில் இரண்டு கைகளும் இல்லாமல் உரிமம் பெற்ற முதல் நபர், இந்தியாவில் மூன்றாவது நபராவார்.

- பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை. உத்தரகண்ட் அரசு அதிரடி உத்தரவு.

- விமானியான கணவர், மற்றும்  அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளித்து,அதன் அடிப்படையில் விவாகரத்து கோரி பெண் விமானி தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 'உரிய முறையில் சடங்குகள் நடைபெறாத ஹிந்து திருமணங்கள் செல்லாது, அப்படி நடைபெற்ற திருமணங்களுக்கு வழங்கப்பட்ட திருமண சான்றிதழ்களும் செல்லாது' என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

- தன்னிடம் தேர்தல் செலவுகளை சமாளிக்க பண வசதி இல்லை, காங்கிரஸும் உதவவில்லை, எனவே தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் ஒடிசாவில் புரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசித்ரா மொகந்தி. 

- தமிழக காவல் துறையின்  இணையதளம் முடக்கம்.  சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை.

- பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது யோகா.

- எல்.ஈ.டி. பல்லை விழுங்கிய ஐந்து வயது சிறுவனின் நுரையீரலில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை ப்ராங்கஸ்கோபி மூலம் வெற்றிகரமாக வெளியேற்றிய ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள்.

- கொடைக்கானலுக்கு காரில் செல்ல 9222 பேர்கள் ஈ பாஸிற்கு விண்ணப்பித்திருந்தனர் ஆனால் 1217 கார்கள் மட்டுமே வந்திருக்கின்றன. 85000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் 15000 பேர்களே வந்திருக்கிறார்கள்.

- அ.இ.அ.தி.மு.க. வின் கொள்கை பரப்புச் செயலாளராக கலைப்புனிதன் 37 ஆண்டுகளாக தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகள் எழுதி எட்டாவது முறையாக உலக சாதனை. இவர் 145 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். உலகிலேயே அதிக முதுகலை பட்டங்கள்(42), அதிக எம்.ஏ.(26), ஒரே பல்கலை கழகத்தில் அதிக முதுகலை பட்டங்கள்(17), ஒரே பல்கலைகழகத்தில் அதிக பட்டங்கள், 'சொர்கத்தில் இருக்கும் அப்பாவுக்கு மகன் எழுதும் கடிதம்' என்ற தலைப்பில் உலகிலேயே மிக நீளமான கடிதத்தை 100 மணி நேரம் 10 நிமிடத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் வார்த்தைகளை கொண்டு எழுதிய சாதனை, 1330 திருக்குறளுக்கு மனப்பாடம் செய்து 5 மணி நேரம், 48 நிமிடங்களில் எழுதி சாதனை, என்று பல சாதனைகள் செய்திருக்கிறார்.

=========================================================================================

பூண்டுப்பொடி செய்வதற்கு பூண்டை உரித்தபோது தெரிந்த சில வித்தியாச தோற்றங்களை படமெடுத்தபோது...!









========================================================================================================


ஃபேஸ்புக்கில் படித்தது.  "நுங்குநாடு" என்னும் பக்கத்திலிருந்து...


இரண்டு இசை மேதைகள் சந்தித்து கொண்டால் ...
தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம்.
அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம். நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது.
அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.
இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.
அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்
வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!
அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில். "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார். "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன். "ம்... அதை பிடித்துவிடு'' என்றார். அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம்.
இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன! உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

==========================================================================================

பொக்கிஷம் 












63 கருத்துகள்:

  1. வித்தியாசமான கதம்பம் இன்று. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இரவு வரை உங்கள் அப்பா வரமாட்டாரா உங்கள் ரேடியோ திருட்டைக் கண்டுபிடிக்க? அம்மாவும் உங்களுக்கு ஆதரவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா மாலை வந்து விடுவார். இரவு ஏழு மணி நிகழ்ச்சி கேட்கும் நேரம் குறைவு. அதற்கு பதிலாக தமிழில் உங்கள் விருப்பம் கேட்கப்படும். அதன் இசை நினைவிருக்கிறதா உங்களுக்கு?!!

      நீக்கு
  3. விவேக்கின் குணநலன் வெளிப்பட்டது. குமரிமுத்து நிறையப் படித்தவர் நன்கு பேசுவார் என்பதைக் கண்டு அதிசயத்திருக்கிறேன். அவர் இமேஜ் அசட்டுச் சிரிப்பு குமரிமுத்து என்றே எண்ணியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமரி முத்து நிறைய இலக்கியம் பேசி கேட்டிருக்கிறேன் நானும்.

      நீக்கு
  4. செவ்வாய் கவிதைக்கு கேஜிஜி சாராக இருந்தால் ஒரு செவ்வாயின் படம் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. 1971 வரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. 1971 லோ அல்லது 1972லோ ஒரு பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர் வாங்கினோம். அதுவரை ரேடியோ கேட்பது என்று நண்பன் வீட்டிற்கு செல்வேன். முக்கியமாக கிரிக்கெட் மேட்ச் கமென்டரி, ஒலிச்சித்திரம்.. மற்றும் நேயர் விருப்பம் தான். அந்தக் காலத்தில் திருவனந்தபுரம் நிலையத்தில் இரவு 8 மணிக்கு ஒரு 5 நிமிட skit கண்டதும் கேட்டதும் என்று ஒளிபரப்புவார்கள். அதை தவற விட மாட்டோம்.
    இந்து திருமணம் பற்றிய தீர்ப்பு (நியூஸ் ரூம்) விவாதப் பொருளாகிவிட்டது. ஒவ்வொரு குலத்தவருக்கும், ஒவ்வொரு சமுகத்தவர்க்கும் இடையே திருமண சடங்குகள் வேறுபடுவது இயற்கை. தீர்ப்பு மாற்றப் படவேண்டியது.
    பூண்டு போட்டோ புது மருமகள் கண்டுபிடிப்பா? பூண்டுபொடி கோழிப்பொடி ஆகிவிட்டது?
    பையில் காய் விட்டு லஞ்சம் எடுக்கும் வழக்கம் சாதாரணம் தானே, ஜோக் இல்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் தெருவில் ஒருந்த நிறையபேர் எங்கள் வீட்டில் வந்து ரேடியோ கேட்பார்கள்.  பூண்டுப்பொடி எங்கள் அம்மா வழக்கம்.  நான் சொன்னபடி பாஸ் செய்து வழக்கம்.  பலவருடங்களாக அவ்வப்போது செய்து சாப்பிடுவோம்.  தோசைக்கு, இட்லிக்கெல்லாம் நல்லெண்ணெய் விட்டு குழைத்து சாப்பிட்டால் அப்படி இருக்கும்!  மோர் சாதத்துக்கும் நன்றாய் இருக்கும்.

      திருமணம் மற்றும் கோவில் சட்டங்கள் இந்து சமயத்துக்கு மட்டும்தான்.  மற்ற மதங்களை அரசு கண்டுகொள்வது இல்லை!  சமீபத்தில் இந்திய ஜோடிகள் எல்லோரும் தங்கள் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் வநதது, நினைவிருக்கிறதா?

      நீக்கு
  6. இளையராஜா, கல்யாணம் சம்பந்தப்பட்ட தனராஜ் மாஸ்டர் நிகழ்வு நெகிழவைத்தது. தன் பக்தி உணர்வு, தேசிய எண்ணம், பாஜகவின் ஆதரவு போன்றவற்றால் புல்லுருவிகள்கூட இளையராஜாவைப் பற்றிக் கருத்துகள் சொல்லும் காலம் இது. அவர் பிறவி மேதை, இறைவனின் அருள் பெற்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். என்றாலும் அவர் சில சமயங்களில் பேசுவது கேட்க தர்மசங்கடமான இருக்கும்! அவர் பேச்சைக் கேட்பதைவிட இசையைக் கேட்கலாம்.

      நீக்கு
  7. பூண்டுப் படங்கள் பக்கத்தை நிரப்பும் உத்தியா?

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  11. சென்ற வாரமே வெளியிட்டிருக்க வேண்டும். தவறி விட்டது. செல்வாண்ணா ...

    இதெல்லாம் எதற்கு?...

    தங்கள் அன்பு ஒன்றே போதும்!...

    மகிழ்ச்சி..
    நன்றி...

    பதிலளிநீக்கு
  12. /// பெண் ஒருத்தி எனமானியின் கைக்குழந்தையோடு... ///

    எஜமானியின்!...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியாக ரேடியோவின் நினைவுகள் அருமை. அந்தக் காலத்தவர்களுக்கு முதன் முதலாக வந்த விஞ்ஞான வளர்ச்சிகளில் இது ஒரு முதலிடத்தைப் பெற்றவை. அதனால், நம்மால் மறக்க இயலாத நினைவுகளுடன் இருப்பவை. இப்போது உள்ளவர்களிடம் (இளைய தலைமுறைகள்) சொன்னால், இப்போதுதான் ஃபோனில் நிறைய பாடல்கள் (பழசும், புதுசுமாக) கேட்கலாமே என சாதாரணமாக சொல்கிறார்கள்.

    அன்று ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்ட அந்த அனுபவ மகிழ்வை, இன்று ஒரு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து, கேட்டால் கூட பெற முடியாது. அது ஒரு காலம். உறவுகள், நட்புகள் சூழ அதில் , படத்தின் கதையை சுவாரஸ்யமாக போது, கேட்கும் ஒவ்வொருவரின் முகபாவங்களுடன் அந்த பொழுதின் இனிமையை எப்படி வர்ணிப்பது..! நல்ல நினைவலைகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தந்த காலத்துக்கு அந்தந்த விஷயங்கள் சுவாரஸ்யம் இல்லையா?

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. அந்த கால வானொலி நினைவுகள் அருமை.
    தொலைக்காட்சி பெட்டி வீட்டுக்கு வரும் முன் பாடல்கள், ஒலிச்சித்திரம், டிசம்பர் இசை கச்சேரிகள். தொடர் நாடகம் , பாப்பா மலர், ரேடியோ மாமா, மகளிர் நிகழச்சிகள் என்று எவ்வளவு நிகழச்சிகள் ரேடியோவில், டிரான்சிஸ்டரில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.

    இலங்கை வானொலி தொகுத்து அளித்த இசையும், கதையும் , பாட்டுக்கு பாட்டு எல்லாம் மறக்க முடியாது.
    அண்ணனுடன் விவித் பாரதியில் இந்தி பாடல்கள், நடிகர், நடிகைகள்
    பேட்டிகள், விரும்பி கேட்டவை எல்லாம் மறக்கவே முடியாத காலம்.
    உங்கள் மலரும் நினைவுகள் இளமைகால நினைவுகளை கொண்டு வந்தது.

    பதிவை படித்தவுடன் விவித் பாரதி கேட்க ஆசைபட்டு இப்போதும் விவித் பாரதி சென்னை வானொலி கேட்டேன். 7 மணி வாஷிங்க் பவுடர் நிர்மா சொல்கிறது விளம்பரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் விவித் பாரதி வருகிறதா?  எங்கள் வீட்டில் இப்போது ரேடியோவே இல்லை.

      நீக்கு
  16. வழக்கம் போல அருமையான தொகுப்பு..

    தனிச் சிறப்புகளை மதிப்புக்குரிய கமலா ஹரிஹரன் அவர்களும் கோமதி அரசு அவர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  17. சகோ துரை செல்வராஜூ அவர்கள் கவிதை அருமை.

    பூண்டு உரிக்கும் போது கிடைத்த தோற்றங்கள் அருமை. கோழி அழகாய் தெரிகிறது, பறவை தெரிகிறது.

    விவேக் பற்றி குமரி முத்து சொன்னது அருமை. முன்பு படித்து இருக்கிறேன். நியூஸ் ரூம் மூலம் நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன்.

    இளையராஜ் இசை குரு தன்ராஜ் மாஸ்டர் பற்றி தெரிந்து கொண்டேன்.
    பொக்கிஷ பகிர்வுகள் சிரிப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கவிதை குறித்து தங்களது கருத்து மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. உருவங்களை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  18. இதே வகை ரேடியோதான் எங்கள் வீட்டிலும் இருந்தது அதாவது பெரியமாமா வீட்டில். பெரியமாமாவின் பெரிய பெண் தான் அதைப் போடுவார் அதுவும் வீட்டில் பெரியவங்க இல்லாதப்ப. நாங்கலாம் பவ்யமாக அவள் எப்படி வைக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருப்போம். பாட்டு வந்ததும் நான் செய்வது ரகளைதான். வீட்டில் யாரும் இல்லைனா நான் கொஞ்சம் ரௌடிதான் அப்ப.

    இந்த ரேடியோ பீரோ மேல் இருக்குமா எனக்கெல்லாம் எட்டாது அதனால மாமா பெண்ணின் தயவில்தான் நாங்க பவ்யமா இருப்போம்! வீட்டுப் பெரியவங்களுக்கும் அதான் என் பாட்டிக்கு அவள் செல்லம் என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் கொஞ்சம் ரௌடிதான் அப்ப. //

      ஆ... ரௌடி ராக்கம்மா!

      அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் நாங்க அந்த ரேடியோவை கையாளும் ஸ்டைலே தனி!

      நீக்கு
  19. நாற்காலியைப் போட்டு மேலேறி ரேடியோ வைக்கத்தெரியும். ஆனால் அப்பா அலுவலகம் சென்ற பிறகுதான் இதெல்லாம். அப்புறம் என், என் அண்ணனின் ராஜ்ஜியம்! அப்பா காலை பக்தி மாலை வைத்து விடுவார். அப்புறம் ஏதோ பக்தி பேச்சு அது இது என்று போகும். //

    வீட்டுக்கு வீடு வாசப்படி போல!!! எங்க வீட்டை முந்தைய கருத்தில் சொல்லிட்டேன்.

    பக்தி இசை அப்புறம் ஆகாஷவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணன்! இதுவும் ஒலிக்கும் எங்க வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரோஜ் நாராயணன் இல்லை கீதா நாராயணஸ்வாமி!  இந்தப் பெயர் நினைவிருக்கும் அளவு மற்ற பெயர்கள் நினைவில் இல்லை!

      நீக்கு
  20. நாங்களும் இலங்கை நிகழ்ச்சிகள் தான் கேட்பது. ஆனால் என்னவென்றால் வெகு குறைவு. மாமாக்கள், பாட்டி இல்லை என்றால்தான் கேட்போம் மாமிகளை என் அம்மாவை டபாய்ப்பது எளிது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு என்பார்கள்.  தமிழ்ச்சேவை ஒன்று என்பது என்ன என்று கேட்டதே இல்லை.

      நீக்கு
  21. துரை அண்ணாவின் கவிதை அருமை!!!

    துரை அண்ணா, கவிதையிலும் கூட ஆண் கொஞ்சமாதான் பேசுவான் போல!!!! Man of few words!!!??? பெண் தான் அதிகம் பேசுகிறாள்! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கவிதைகள் மட்டுமல்ல கதைகளிலும் பெண்களுக்குத் தானே சிறப்பு...

      எல்லாம் அறிந்திருந்தும் அறியாதவர் போல் ஏன் இந்த நாடகம்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  22. விவேக் பற்றிய செய்தி படிக்கும் போதே தெரிந்துவிட்டது என்றாலும் மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவர் வெளியில் தெரியாமல் செய்த நல்ல விஷயங்கள் பல.
    சமீபத்தில் அவரது பெண்ணிற்கும் திருமணம் நடந்ததே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நெகிழ்வு.  சமீபத்தில் விவேக் அக்கா விவேக் பற்றியொரு பேட்டி கொடுத்திருந்தார்.

      நீக்கு
  23. நினைவுகள் சங்கீதம்.

    விவேக் விடயம் ஏற்கனவே அறிந்து இருக்கிறேன் ஜி.

    துரை ஜி அவர்களின் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  24. 'உரிய முறையில் சடங்குகள் நடைபெறாத ஹிந்து திருமணங்கள் செல்லாது, அப்படி நடைபெற்ற திருமணங்களுக்கு வழங்கப்பட்ட திருமண சான்றிதழ்களும் செல்லாது'//

    அப்படினா பதிவுத் திருமணங்கள், கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர் வீட்டுத் திருமணங்கள், சடங்குகள் இல்லாமல் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் திருமணங்களின் சான்றிதழ் செல்லுபடியாகாதா? அப்படினா இதுக்குத் தனி சட்டம் இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் ஒரு கழுதை. சட்டம் ஒரு இருட்டறை. என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்!

      நீக்கு
  25. பூண்டு போல, வெங்காயத்திலும் இப்படிச் சில வித்தியாசமான தோற்றங்கள் இருக்கும் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூண்டின் முதல் இரு படங்கள் பறவை/மயில் அல்லது ஏதோ ஒரு பறவை தன் இறகை/தோகையை விரித்து கம்பின் மீது நிற்பது போல இருக்கு

      மூன்றாவது படம் முட்டையிலிருந்து உடைத்து உயிரினம் ஒன்று மெல்ல தலையை வெளியே விட்டு உலகைப் பார்ப்பது போன்று!!

      க்டைசிப்படம் குவிந்திருக்கும் மொட்டுப் பூ! போல

      கீதா

      நீக்கு
    2. ரசித்ததற்கு நன்றி கீதா.

      நீக்கு
  26. தன்ராஜ் மாஸ்டர் பற்றி ராஜா சொல்லியிருக்கும் செய்தி நெகிழ்ச்சியான செய்தி. இசையில் எந்த அளவு மூழ்கியிருந்திருந்தால் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்திருந்தால் தன்ராஜ் மாஸ்டர் அப்படியான இசைச் சொற்களைச் சொல்லியிருப்பார்! ஆச்சரியப்பட வைத்த ஒன்று!.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பொக்கிஷ ஜோக்குகள் சிரித்துவிட்டேன் லஞ்சம் தவிர!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. 'உரிய முறையில் சடங்குகள் நடைபெறாத ஹிந்து திருமணங்கள் செல்லாது, அப்படி நடைபெற்ற திருமணங்களுக்கு வழங்கப்பட்ட திருமண சான்றிதழ்களும் செல்லாது' //

    இதில் இன்னொன்றும் இருக்கு. ஹிந்து முறைப்படியான திருமணம் என்று நாம் குறிப்பிட்டிருந்தால் அதில் எந்தச் சமூகம் படி அத்திருமணம் நடந்ததோ அதன் படியான சடங்குகள் புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும்.

    அல்லாமல் ஸ்பெஷல் மேரெஜ் ஆக்ட் படி

    Under special marriages act 1954 parliamentary law no rituals are required. Any indian individual of any religion can marry another indian or foreign individual of any religion including hindus. This is also applicable for indians living abroad.

    Only conditions Groom should be atleast 21 and Bride should be atleast 18. Both Groom and bride should be in appropriate mental state to give consent.

    For any marriages under this act no rituals are required and registration of marriage alone is sufficient proof for legal marriage.

    Rituals are only required if you specifically call it Hindu marriage. Which is not necessary if you register under special marriages act 1954.

    There is separate hindu marriage act which requires rituals atleast saptapadi to call it legal

    காலையில் இதையும் சொல்ல விட்ட்டுப் போச்சு. ஏற்கனவெ கொடுத்த கருத்தும் ஒளிந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த ஸ்பெஷல் மேரேஜஸ் ஆக்ட் பற்றி படித்திருந்தேன்.  குழப்பம்தான்.  ஹிந்து திருமணத்தை அங்கீகரிக்க குறைந்தபட்சம் சப்தபதி செய்திருக்கவே வேண்டும் என்பார்கள்.

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் கவிதை அருமையாக உள்ளது.

    செவ்வாய் உதிர்த்த கவிதையை தொடர்ந்து இனி செவ்வாயில் உதிக்கும் கதையையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

    நடிகர் விவேக்கின் பெருந்தன்மை பற்றிய செய்தியறிந்தேன். இதை முன்பே படித்துள்ளேன். நல்ல மனிதர். தம் நல்ல செயல்களால், மனம் கனிய வைத்துள்ளார்.

    பூண்டின் படங்கள் நன்றாக உள்ளது. முதலில் பிள்ளையார் என நினைத்தேன். பிறகு பெரிதுபடுத்தி பார்த்ததில் கோழி முகம் தெரிந்தது. மூன்றாவது படம் அசல் கோழி போன்ற அமைப்புதான். கூடவே கொண்டமைக்கு கலர் எல்லாம் தந்து வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    செய்தியறை பகுதியில் பல செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன்.

    பொக்கிஷ பகிர்வில் ஜோக்ஸ் அனைத்தும் படித்து ரசித்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  30. ரேடியோ அந்தக்கால வாழ்க்கையில் பிரிக்க முடியாதது. உங்கள் நினைவலைகள் ரசனை.

    கவிதை "ஈரக் கூந்தலும் பனியிதழ்ப் பூவுமாய்
    நான் வருவேன் நானே வருவேன்.." பிடித்தமான வரிகள்.

    நியூஸ் ரைம், ஜோக்ஸ் நன்று.

    விவேக் உதவும் பண்புள்ள மனிதர் மனதில் நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
  31. வானொலி குறித்த சுவாரஸ்யமான நினைவலைகள் அருமை. ’உள் அமுங்கும் வெல்வெட் துணி’ எங்கள் வீட்டு வானொலியிலும் இருந்தது. பெரும்பாலும் இலங்கை வானொலி கேட்டே வளர்ந்தோம். நடிகர் விவேக் குறித்த பகிர்வு நெகிழ்வு. மூன்றாவது படத்தில் பூண்டு கோழி போல் போஸ் கொடுக்கிறது. சில துணுக்குகள் வாய் விட்டு சிரிக்க வைத்தன. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!