புதன், 15 மே, 2024

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே கேள்வி!

 

ஜெயக்குமார் சந்திரசேகரன்: 

ஒரு லோக்சபா தேர்தலையே ஒரே நாளில் நடத்தி முடிக்காமல் ஒன்றரை மாசம் நீட்டுகிறார்களே, ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பதை எப்படி ஒரே நாளில் நடத்துவார்கள்?

# ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றரை மாதத்தில் நடத்த  முடியுமல்லவா ?

& ஒரே நாடு,  ஒரே தேர்தல் என்பதை ஒரே நாளில் நடத்துவோம் என்று யாரும் சொல்லவில்லை! 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது, நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்கள் ( முடிந்தால் நகரசபை / பஞ்சாயத்து தேர்தல்கள் உட்பட ) எல்லாவற்றையும் ஒன்றாக நடத்துவது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் - எல்லா தொகுதிகளுக்கும் ஒன்றாக நடந்தாலும் - சட்டசபை தேர்தல்கள் ஒவ்வொரு  மாநிலத்திலும் ஒவ்வொரு காலத்தில் நடந்து வருகிறது. 

1957 காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றுதான் நடந்தது. ஆட்சி கலைப்பு, ஆட்சி கவிழ்ப்பு, முன்கூட்டியே சட்டசபை ராஜினாமா செய்வது போன்ற சூழ்நிலைகளால் சட்டசபை தேர்தல்கள் திசை மாறிப் போயின. 

அநேகமாக 2029 முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று நினைக்கிறேன். 

ஆனால் - நிச்சயம் ஒரே நாளில் நடத்த இயலாது. ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாத காலம் - படிப்படியாகத்தான் தேர்தல் நடக்கும். எல்லா தேர்தல்களும் நடந்து முடிந்தபின்தான் வோட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இது தேர்தல் கமிஷனின் சௌகரியத்திற்காக மட்டுமே.  

நெல்லைத்தமிழன்: 

இரப்பவர்களில் அனேகர் உணவை விரும்புவதில்லையே... காரணம் என்னவாயிருக்கும்?

# "வேறு செலவு"க்காக இரக்கிறார்கள்.! 

& ஒருவேளை இறந்தவர்களுக்கும் ஒரு சாய்ஸ் கொடுத்தால் - " எனக்கு உணவு வகைகள், தயிர்வடை எல்லாம் படைக்காதீர்கள் - பணம், தங்கம், வெள்ளி எல்லாம் படையுங்கள் " என்று கேட்பார்களோ! 

முன்பு கிராமங்களில் இருந்த வழக்கத்தைப் போல, நாட்டாமைகள் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வாசித்து வழக்கை பைசல் செய்வது போல, எந்த வழக்கையும் பைசல் செய்யமுடியாத நீதிமன்றங்களால் நாட்டுக்கு என்ன பயன்?

# நாட்டாமை ,  பஞ்சாயத்து மக்களும் முன்போல் இல்லை. வழக்குகள் தீர்க்காயுசாக இருப்பது ஒரு தரப்பு செல்வாக்காக இருப்பதுவும், கோர்ட் ஓவர்லோடும் காரணமாக இருக்கும்.

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

நீங்கள் வழக்கமாக விரும்பிப் பயன்படுத்தும் 

அ ) டூத் பேஸ்ட் 

ஆ ) சோப் 

இ ) காபிப்பொடி 

ஈ ) ஹேர் ஆயில் 

எவை? அதைப் பற்றி உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்னென்ன? 

= = = = = = =

KGG பக்கம்: 

கிராமத்தில், சித்தப்பா வீட்டில் பழைய அம்புலிமாமா புத்தகங்கள் நிறைய இருக்கும். அவைகளைப் படித்து, பரோபகாரி பழனி, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள், வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள் என்று நிறையக் கதைகள் தெரிந்துகொண்டேன். 


எங்கள் கிராமத்தில் எனக்கு முற்றிலும் பிடிக்காத நேரம் இரவு நேரம். அந்த ஊரில் அப்பொழுது மின்சாரம் கிடையாது. அந்தி மங்கிய நேரம் தொடங்கி மறுநாள் காலை வரை இருட்டு சாம்ராஜ்யம்தான். வீட்டிற்குள் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கு மட்டுமே - எல்லோரும் பாய் போட்டுக் கொண்டு படுக்கும் வரை. அந்த ஒத்தை விளக்கு ஒளியில் யாராவது குறுக்கும் நெடுக்குமாக நடந்தால் - அவர்களின் உருவங்கள் சுவரில் பூதாகாரமான நிழல்களாகத் தெரியும்! ஏற்கெனவே பயந்த சுபாவம் உள்ள எனக்கு, அந்த இருட்டு, பூத நிழல்கள் எல்லாம் மேலும் பயம் காட்டும் ! 

இரவில் படுத்து உறங்கும்போது அல்லது உறங்க முயற்சி செய்யும்போது - நிலா முற்றத்தில் காயப் போட்டிருக்கும் தேங்காய் கொப்பரைகளின் அருகில் புரண்டு சென்று சில கொப்பரைகளை  நைசாக கவர்ந்து சாப்பிடுவேன்! ஆக எங்கள் சொந்த கிராமத்தில் எனக்குப் பிடித்தவை அம்புலிமாமா முதல் அரட்டைக் கச்சேரிகள் வரை இருந்தபோதிலும் இரவு இருட்டு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்தவுடன் சந்தோஷமாக வண்டி, பஸ் , ரயில் பயணங்கள் ! 

- - - - - - - - 

கோடை விடுமுறையின்போது ஒருமுறை திருக்காட்டுப்பள்ளிக்கு நானும் என் தம்பியும் சென்றிருந்தோம். 

அக்காவின் கணவருக்கு திருக்காட்டுப்பள்ளி ராஜம் காபி கடையில் வேலை. அந்த ஊரில் பலரும் அந்தக் கடையே அவருடையதுதான் என்று நினைத்திருந்தனர்! எனது பள்ளிக்கூட நோட்டுகளின் பின் பக்க அட்டைகளில் கூட அப்போதெல்லாம் ராஜம் காபி விளம்பரம் காணப்படும். 

நாகையில் நான் செய்த ட்ரான்சிஸ்டர் ரேடியோவில் ( அண்ணன் எனக்குக் கொடுத்த டயோடு, ட்ரையோடு, டியூனிங் கண்டென்சர், capacitor  resistor ஸ்பீக்கர் போன்ற சில பாகங்கள் கொண்டு - இணப்பு கொடுத்து உருவாக்கிய ரேடியோ ) நாகை அருகில் ஒலிபரப்பு நிலையம் எதுவும் இல்லாததால் அதில் எந்த ஒலிபரப்பும் கேட்கவில்லை! 

நாகையைவிட திருக்காட்டுப்பள்ளி திருச்சிக்கு அருகே இருப்பதால், அங்கு ஒருவேளை என் ரேடியோ பாடும் என்று எண்ணி எல்லா பாகங்களையும் அங்கு வைத்து இணைப்பு கொடுத்தேன். ஊஹூம் - அங்கும் பேட்டரி இணைக்கப்படும்போது கேட்கும் கொர் கொர் சத்தம் தவிர வேறு எதுவும் ஸ்பீக்கரிலிருந்து கேட்கவில்லை!  

அப்பொழுது அங்கே வந்த ஒரு அண்டை வீட்டுக்காரர், " தம்பீ - ரேடியோ எல்லாம் கரண்ட்ல வேலை செய்யும் விஷயம். நீ ஏதாவது எக்குத் தப்பாக வயர் கனெக்ஷன் செய்து, 'ஷாக்' வாங்கிக்கொள்ளாதே " என்று அறிவுரை கூறினார்! 

டிரான்சிஸ்டர்  ரேடியோ - (டார்ச் லைட்) பேட்டரி செல் இவற்றிலிருந்து ஷாக் வருமா ! திகைத்துப் போன எனக்கு, அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை! 

= = = = = = = = = =

35 கருத்துகள்:


  1. அது ஒரு காலம். வீடுகளில் சோப்பு செய்வது போல் டிரான்சிஸ்டர் ரேடியோ செய்வது. இதில் 7 ட்ரான்ஸிஸ்டர், 8 ட்ரான்ஸிஸ்டர் என்றெல்லாம் பீத்தல் வேறு.
    என்னுடைய பெரியப்பாவின் மருமகன் திருச்சியில் ரயில்வேயில் பணி புரிந்துகொண்டு இருந்தவர் ஒரு ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவை உருவாக்கி தன் மாமனாருக்கு பரிசளிக்க அதை பொன் போல் பாதுகாத்து வைத்திருந்தார் பெரியப்பா. கடலூரில் இரண்டு (திருச்சி, சென்னை) மட்டுமே அந்த ரேடியோவில் கேட்கமுடியும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கேள்விகள் என்னுள் பல நினைவுகளை உண்டாக்கிவிட்டன. என் பதின்ம, அதிலும் குறிப்பாக 14-15 வயதில் கிராமத்தில் இருந்தபோது என் வயதை ஒத்தவர்கள் சோப், பேஸ்ட் பிரஷ், ஷாம்பூ என ஜிலு ஜிலுவென இருந்தபோது, இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாத பெரியப்பா வீட்டிலிருந்து படித்த காலம். ஊர் வயதுப் பெண்கள் முன்னால் சாதாரணமாக இருந்தது மனதைக் கொஞ்சம் பாதித்தது. ஹாஸ்டல் போயிருந்தபோதும் மிக எளிமையாகவே வாழ்வு கடந்தது, மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. அதனால் வேலைக்குப் போனதும் சிறிது செலவழிக்க, கொஞ்சம் ஆடம்பரமாக இருக்க ஆரம்பித்தேன். அதன் விவரங்கள் பிறகு.

    நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில். அந்த நினைவுகளோ என்னவோ தெரியவில்லை.. நிறைய உடைகள், சோப்புகள், பேஸ்ட் பிரஷ்கள், தேங்காய் எண்ணெய் (வித வித வாசனைகள்), ஷேவிங் க்ரீம்கள், பெர்ஃப்யூம்கள், முகப் பவுடர்கள் வாங்கி வைத்துக்கொள்வது என் வழக்கமானது. இப்போதும் என் பாத்ரூமில் பத்மு சோப்புகள், ஐந்து பேஸ்ட்கள், ஷேவிங் க்ரீம்கள், பத்து பவுடர்கள், இருபது ஃபர்ப்யூம்கள் என வைத்துக்கொண்டிருக்கிறேன். அன்றன்றைக்கு மூடுக்குத் தகுந்த மாதிரி உபயோகிக்க. பலதும் வேஸ்ட் ஆகவும் செய்யும், பாதியில் தூரப்போடுவதால்

    இருந்தாலும், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக முடிந்தவரை இந்தியப் பொருட்களையே உபயோகிக்கிறேன். அதனால் கோல்கேட் என் தேர்வில் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமான கருத்துரை!

      நீக்கு
    2. ஓப்புகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது (உபயோகிக்கும் வாய்ப்பே கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லை என்பது வருத்தம்தான். ரசனை இல்லாத கம்பெனி) லைஃபாய் சோப். அதன் வாசனை அடடா. வீணாப் போன கம்பெனி கண்ட கண்ட ஃப்ளேவர்ல வெளியிட்டு லைஃபாய் பக்கமே போகவிடாமல் செய்துவிட்டது.

      நீக்கு
  5. காபி, டீ என்பவை வீட்டில் உபயோகிப்பது இல்லை. அதுக்கு ஏற்ற மாதிரி அதிசயமாக மனைவியும் அமைந்ததால், வீட்டில் இவற்றிர்க்கு வேலையில்லை. மாமியாருக்காகவும் வரும் விருந்தினர்களுக்காகவும் மாத்திரம் சிறிது ஸ்டாக் இருக்கும். அதனால் காபியில் ருசியை எதிர்பார்க்க முடியாது

    பதிலளிநீக்கு
  6. சிங்கப்பூரில் இருந்த போது சற்று ஆடம்பரம்.. ஆனால் முறை தவறியதில்லை..

    குவைத்தில் இருந்த காலத்தில் அங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி!!..

    தலைக்கு தேய்த்துக் கொள்ளும் தைலத்தில் பாமோலின் கலப்பு என்ற்றிந்த பின் அதை தொலைத்து விட்டேன்..

    குவைத்தில் என்னுடன் பயணித்தவை பாரதத்தின் தயாரிப்புகளே!...

    பதிலளிநீக்கு
  7. அரபு நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் இருந்தும் kfc க்குள் நுழைந்ததே இல்லை.. நான் அருந்திய Pepsi fanta எண்ணிக்கை பதினைந்து இருபதுக்குள் தான்..

    இத்தனைக்கும் எனது கிடங்கில் ஆயிரக்கணக்கில் பயன்பாடு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு குளிர்பானங்கள் ரொம்பப் பிடிக்கும். மதுரையில் படித்துக்கொண்டிருக்கும்போது மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் சாப்பிடுவேன் (இருந்த கொஞ்ச காசில்). சென்னையில் வேலை பார்க்க ஆரம்பித்ததும், கோல்ட் ஸ்பாட், லெஹர் பெப்சி, கரும்பு ஜூஸ் என ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது (குறைந்தபட்சம்) சாப்பிடுவேன். துபாயில் 93ல் இறங்கிய அன்று என் உயிர் நண்பன் என்னை அழைத்துச்செல்ல வந்திருந்தான் இரவு ஒரு திர்ஹாம் போட்டால் வெளியில் வரும் குளிர்பானம், இன்றே ஃபேன்டா மூன்று சாப்பிட்டேன் (இரவு பதினோரு மணி). பிறகு இந்தியா ஹவுஸில் இரவுணவு. அதன் பிறகு ஓவ்வொரு நாளும் இரண்டு மூன்று மிரான்டா இல்லை ஃபேன்டா சாப்பிடுவேன். பிறகு அளவு குறைந்து கடந்த இருபது வருடங்களில் கையில் எண்ணுமளவுதான் சாப்பிட்டிருப்பேன். அதுவும் பிட்சா சாப்பிட்டால் அதன் முடிவில் பெப்சி கோலா சாப்பிடுவேன்.

      நான் உயர் பொறுப்பில் இருந்ததால் எல்லாவித சாக்லேட் பாக்ஸ் 5மிக விலை உயர்ந்தவை) பார்கோட் போன்ற செக்கிங் காரணமாக எனது டேபிளுக்கு வரும். நானும் உபயோகித்ததில்லை, வீட்டிற்கும் கொண்டுசெல்ல மாட்டேன் (கொண்டுபோவதற்காக்க்்கொடுக்கப்படுபவைகளும்). பசங்களுக்கு இப்போ வரையில் அதில் ஏமாற்றம், சொல்லிக் காட்டுவாங்க. அந்தக் கதை பிறிதொரு சமயம்.

      நீக்கு
    2. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. Kgg சிறுவயது கால பக்கம் சுவாரசியம். எங்களையும் பழைய சிறுவர்கால நினைவுகளுக்கு இட்டுச் சென்றது.
    சிறுவயதில் பெரியப்பா ,மாமி மாமா, வீடுகளுக்கு சென்று சில நாட்கள் தங்கி வருவோம். எங்கள் வீட்டில் மின்சாரம் இருந்தது அவர்கள் வீடு களில் இருந்ததில்லை இருந்தும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். பிடித்தமானது அவர்கள் வீட்டு சிறு கிணறுகளில் நானே தண்ணீர் அள்ளிக் குளிப்பது. எங்கள் வீட்டில் பெரிய கிணறு என்பதால் எங்களை அள்ள விடுவதில்லை. விளையாடுவதும் உண்பதும் என மகிழ்ச்சியாக களித்த காலங்கள்.

    பற்பசை ப்ராண்ட் மாற்றி மாற்றி உபயோகிப்பது நல்லது என பல் வைத்தியர் பரிந்துரைத்ததால் அவ்வாறே செய்கிறேன்.

    சோப் முன்பு டவ். இப்பொழுது லிக்குயிட் சோப்.

    காப்பி அல்ல ரீ தான்.

    எண்ணை பலவருடங்களாக இல்லை. அதன் முன் நல்லெண்ணை.

    பதிலளிநீக்கு
  9. அம்புலிமாமா நினைவுகளை மீட்டி விட்டீர்கள் ஜி

    பதிலளிநீக்கு
  10. ஒரு நாஉ ஒரு தேர்தல். ஒரு நாடு இரண்டு கட்சிகள் இப்படி வந்தால் ஓரளவு வேற்றுமையில் ஒற்றுமை பார்க்கலாம். ஆனால் அதன் பின் அங்கும் எதிர்பாராத வேறு பிரச்சனைகள் வரலாம்.

    இரப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இல்லை என்பதை விட வேறு சிலதுதான் தேவை! விதவிதமான உணவு சந்தோஷமாய் வாழ்பவர்களுக்கு.

    நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு ...முன்பிருந்த கட்சிகள் நம் நினைவுப்பறவைகளின் சிறகேறி பறந்து காலத்தைக் கடந்து உண்மையிலேயே மாயை ஆகி விடுகிறதே. இது போல் 2015, 2070 களில் நாமும் அடுத்த தலைமுறையினரின் நினைவில் சிறகேறி பறப்போமோ!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. கோர்ட்டில் வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதும் பல வருடங்கள் எடுத்து ஆளே இறந்த பிறகு என்ன தீர்ப்பு கொடுக்க முடியும்?

    இதுக்கும் சட்டம் வரலாமே! இத்தனை நாட்களில் முடிக்க வேண்டும், என்று முடிக்கிவிடப்பட்டால் வாய்தா வாங்க அனுமதி இல்லாமல் கோர்ட்டில் ஆஜராகணும் என்றும் கேஸை ஒத்திப் போடக் கூடாது என்றும் சட்டம் வரலாமே!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. காபி பொடி காஃபி டே பயன்பாடு இப்ப வீட்டு பகக்த்தில் அதை மூடிவிட்டார்கள்....அடுத்து என்ன? அருகில் சிக்கரி இல்லாத காபி பொடி கிடைக்கலை அதனால ஆன்லைனில் தான் லியோ!

    தேங்காய் எண்ணை தவிர முடிக்கு வேறு எதுவும் பயன்படுத்துவதுஇல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தம்பீ - ரேடியோ எல்லாம் கரண்ட்ல வேலை செய்யும் விஷயம். நீ ஏதாவது எக்குத் தப்பாக வயர் கனெக்ஷன் செய்து, 'ஷாக்' வாங்கிக்கொள்ளாதே " என்று அறிவுரை கூறினார்! //

    ஹாஹாஹாஹா பாவம் விடுங்க. அவர் ஒரு வேளை பேட்டரி பயன்படுத்தியது இல்லை போல!

    நல்ல அனுபவங்கள் சூப்பர் கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை.

    தங்கள் இளமைக்கால அனுபவங்கள் படிக்க நன்றாக உள்ளது.

    பேஸ்ட் முன்பு மாற்றினோம். இப்போது ஒரே பேஸ்ட்தான். மாற்றினால் பல் பிரச்சனை வருகிறது. தலைக்கு முன்பு வாராவாரம் கண்டிப்பாக நல்லெண்ணை தேய்த்து குளித்தோம். இப்போது அந்தப்பழக்கமும் விட்டுப் போச்சு. தினமும் தலைக்கு தேங்காய் எண்ணைதான் பயன்பாடு. காஃபிப் பொடி காஃபி டே பல வருடங்களாக இருந்து வந்தது. இப்போது எது கிடைக்கிறதோ அது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. கேள்வி, பதில்கள் அருமை.
    உங்கள் கேள்விகளும் அருமை.
    டூத்பேஸ்ட் :- பற்களுக்கு நல்லது என்று உமிகரி உப்பு, மிளகு சேர்த்த பொடியும் வீட்டில் தயாரித்தது. ஒரு காலத்தில் அம்மாவீட்டில் உண்டு. கொலு பொம்மையில் பார்க்கில் வைக்க பறவைகள் , சின்ன விலங்குகள் கிடைக்கும் வாங்கி இருக்கிறோம் சிறு வயதில் . அதன் பின் நல்ல கம்பெனி என்று அப்பா வாங்கி தருவது. இப்போது பல்வைத்தியர் சொன்ன SENSODYNE REPAIR காலம் மாறும் போது பழக்க , வழக்கங்களும் மாறுகிறது. டவ் சோப் மற்றும் தலைக்கு டவ் ஷாம்புகள் தான்.

    உங்கள் இளமைகால அனுபவங்கள் நன்றாக இருக்கிறது. அம்புலிமாமா, கதைகள் படித்தது குழந்தைகளுக்கு அமர் சித்ரா , பூந்தளிர், முத்து காமிக்ஸ் (நாங்களும் படிப்போம் பிள்ளைகளும் படிப்பார்கள். )வாங்கி கொடுத்தது நினைவுகளில் வந்து போகிறது.
    எங்கள் வீட்டில் எப்போதும் மின்சாரம் இருந்து இருக்கிறது. மின்சாரம் தடை பட்டால் வித விதமான அரிக்கேன் விளக்குகள், மற்றும் சார்ஜ், மற்றும் பேட்டரி போட்டுக் கொள்ளும் விளக்குகள் இருந்தன.
    பிறகு இன்வெட்டர், இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஜெனரேட்டர் .

    காபி பொடி, டீ எல்லாம் நான் குடிக்க மாட்டேன் என்றாலும் வருபவர்களுக்கு வாங்கி வைத்து இருப்பேன். என் கணவர் காப்பி குடிக்கும் போது நரசுஸ் காபி பீபரி வாங்குவோம். இப்போது உதயம் நரசுஸ் வாங்கி வைத்து இருப்பேன்.

    என் கணவர் தான் தலைக்கு வித விதமான ஹேர் ஆபில் பயன்படுத்தினார்கள். நான் எப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!