26.7.25

5 ரூபாய் கேன்டீன் மற்றும் நான் படிச்ச கதை

 


=============================================================================================


புதுடில்லி: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு, ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் மேஜர் முகுந்தன் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக, பயணி உயிர் பிழைத்தார். இதனையடுத்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  கடந்த 14 ம் தேதி சென்னையில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, மாலை 6:20 மணியளவில் அதில் இருந்த 75 வயதான பயணிக்கு திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் சுயநினைவை இழந்ததுடன், அதிக வியர்வை, நாடித்துடிப்பு குறைந்தது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைந்தது தெரியவந்தது. விமான குழுவினர் உடனடியாக ஆக்ஸிஜன் வழங்கி மருத்துவ உதவியை கோரினர்.  அப்போது, விடுப்பை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பிய ராணுவ டாக்டர் மேஜர் முகுந்தன் அவர்களுக்கு உதவினார். அவர் நோயாளியை பரிசோதித்த பின்னர், சர்க்கரை மற்றும் ஓஆர்எஸ் கரைசலை வாய்வழியாக கொடுத்தார். அவரது உடல்நிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவையும் கண்காணித்து வந்தார்.  விமானம் கவுகாத்தியில் தரையிறங்கியதும், நோயாளி விமான நிலைய அவசர அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் முகுந்தன் தொடர் சிகிச்சை அளித்தார். இதனால், இரவு 8:00 மணியளவில் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார். ராணுவ மேஜர் முகுந்தனின் விரைவான மற்றும் தன்னலமற்ற நடவடிக்கை, விமானக் குழுவினரின் உடனடி உதவி காரணமாக பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக இந்திய ராணுவம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

================================================================================================


காடுகள், மலைகள் நிறைந்த உத்தரகண்ட், சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமியாக திகழ்கி றது. குதிரை மற்றும் கழுதை சவாரி வாயிலாக சுற்றுலா பயணியர் இங்கு பயணிப்பது வாடிக்கை.  கரடுமுரடான பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாததால், சுற்றுலா பயணியர் இந்த கோவேறு கழுதை சவாரியையே நம்பி உள்ளனர்.  வறுமை குறிப்பாக, புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு செல்வதற்கு, கோவேறு கழுதை சவாரி உரிமையாளர்களின் உதவிகள் நிச்சயம் தேவை. மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் காலங்கள் தான், இந்த கழுதை சவாரி தொழிலாளர்களுக்கு பொற்காலம்.  கவுரிகுண்ட் பகுதியில் இருந்து கேதார்நாத் கோவில் வரையிலான 17 கி.மீ., நீள கரடு முரடான பாதையில், இவர்களை பார்க்காதவர்களே இருக்க முடியாது.  சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த தொழிலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான 21 வயது நிரம்பிய அதுல் குமார், தன் மேல்படிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி.,யில் தேர்வாகிஉள்ளார்.  இங்கு, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரோன் தேவால் கிராமத்தைச் சேர்ந்த அதுல் குமாரின் தந்தையும், ஒரு காலத்தில் கழுதை சவாரி தொழிலில் இருந்துள்ளார். அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த பொறுப்பு அதுல் மற்றும் தம்பி அமன் மீது சிறு வயதிலேயே விழுந்தது.  கேதார்நாத் கோவிலுக்கான சீசன் முடிந்ததும், உள்ளூர் திரும்பும் சகோதரர்கள், ஆற்றுப்படுகையில் இருந்து மண் அள்ளிச் செல்லும் பணியையும், உள்ளூர் வேலைகளையும் தங்கள் கழுதைகளுடன் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  வறுமையின் பிடியில் இருந்தாலும், உத்தரகண்ட் பல்கலையில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அதுல்.  படிப்பின் மீது, அவருக்கு இருந்த ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள், மேல் படிப்புக்கு ஐ.ஐ.டி.,யில் சேர அதுலை ஊக்குவித்தனர். ஒருபுறம் கழுதை சவாரி தொழில், மறுபுறம் படிப்பு என உழைத்த அதுல், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான ஜே.ஏ.எம்., எனப்படும் முதுகலை படிப்பிற்கான கூட்டு நுழைவுத் தேர்வுக்கு தயாரானார்.கணிதம் இதற்காக, 'ஆன்லைன்' பயிற்சியும் எடுத்தார். கடந்த பிப்ரவரியில், டேராடூனில் நடந்த தேர்வில் அவர் தேர்ச்சி அடைந்தார். சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.எஸ்.சி., கணிதம் படிக்க தேர்வாகி உள்ளார்.  இது குறித்து அதுல்குமார் கூறுகையில், “கேதார்நாத் பாதை எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்று. கடந்த சீசனில், தேர்வுக்கு படிக்க வேண்டும் என்பதால், 10 நாட்கள் மட்டுமே கழுதை சவாரி தொழிலுக்கு சென்றேன்,” என்றார்.
==========================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

க்ரீன் கார்டு

கதையாசிரியர்: அம்புஜவல்லி தேசிகாச்சாரி 

இவருடைய கதைகள்  அமெரிக்க தமிழ் மின் இதழான தென்றலில் வெளி வந்துள்ளன. சான் ஜோஸ் கலிபோர்னியா வில் வசிக்கிறார். பூர்வீகம் மதுரை. அமெரிக்காவில் சில உபன்யாசங்களும் செய்துள்ளார். 


இந்தக்கதையும் ஒரு அய்யங்கார் கதை தான். க்ரீன் கார்ட் உள்ள ஒரு அய்யங்கார் வாழ்வின் கடைசி நாட்களை கழிக்க தேர்ந்தெடுக்கும் ஊரைப்பற்றிய கதை. கதை க்ரீன்கார்டு  sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது. சரளமான நடை, இலக்கு ஒன்றை முடிவாக தீர்மானித்து அதை நோக்கி பயணம் செய்யும் கதை. திருப்பங்கள் இல்லாதது.


க்ரீன் கார்டு

கதையாசிரியர்: அம்புஜவல்லி தேசிகாச்சாரி

“பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ள வைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போலாகுமா?’

சென்னை நகரம் நான் போன வருடம் விட்டுச் சென்றபடியே இருந்தது. உறவினர்கள், அண்டை அயலாரின் விசாரிப்புகள், வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் வீட்டை ஒரு மாதிரி ஒழுங்கு படுத்துதல் எல்லாம் நான்கு நாட்களில் முடிந்த பின் தபால்களைப் பிரிக்க உட்கார்ந்தேன். குப்பைத் தபால்கள் சேர்வதில் சென்னையும் கிட்டத்தட்ட அமெரிக்கா அளவு ஆகிவிட்டிருந்தது. ‘கலம் புடைத்தால் மணி தேறாது’ என்பதுபோல் சிற்சில கடிதங்களே பார்வைக்குரியனவாக இருந்தன. ஒரே ஒரு கடித உறை, பென்சிலால் கொட்டை கொட்டையான எழுத்தில் விலாசமிடப்பட்டுத் தனித்துத் தெரிந்தது. இந்த மாதிரிக் கடிதம் வந்தால் கிராமத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்ற எல்லாவற்றையும் அப்பால் எடுத்து வைத்துவிட்டு அதை முதலில் பிரித்தேன்.

படிப்பதற்கு முன் என்னைப் பற்றிய அறிமுகம். நான் சுந்தர வரதன்; இரண்டு மகன்களின் தந்தை. மூத்தவன் மனைவி இரு குழந்தைகளுடன் மதுரையில் குடித்தனம். இளையவன் அமெரிக்காவில் நிலைத்துவிட்ட இந்திய ஜனத் தொகையின் ஒரு துளி. அவன் முயற்சியால் நிரந்தர வாசி என்னும் அந்தஸ்து கிடைத்தவுடன் உழைத்தது போதுமென்று விருப்ப ஓய்வு பெற்று ‘காடாறு மாதம், நாடாறு மாதம்’ முறையில் அமெரிக்காவுக்கும் சென்னைக்கும் பறக்கும் பச்சை அட்டையாளன். தனிக்கட்டை. சென்னை வீட்டில் தன்னந்தனிக் குடித்தனம். சுயம்பாகம். ஓரிரு மாதங்கள் மதுரை வாசம். நினைத்தபடி கோயில் குளங்களுக்கும் கச்சேரி, உபன்யாஸங்கள், கலை நிகழ்ச்சிகள் என்றும் போய் வந்து கொண்டிருக்கும் ‘டமாரக் காளை’. பின்னால் போகப் போக எப்படியோ, தற்பொழுது சுகவாசி. இனி கடிதத்துக்குப் போவோம்.

கடிதம் வாசு அத்தானிடமிருந்துதான் வந்திருந்தது. க்ஷேம விசாரிப்புகளைத் தவிர ஒரு நடை ஊருக்கு வந்து போகக் கூடாதா என்ற ஆதங்கம்தான் விஷயம். எனக்கும் வெட்டி முறிக்கும் வேலை ஒன்றுமில்லாததால் ராத்திரி ரயிலிலேயே கிளம்பி விட்டேன். இளந்தென்றல் மெல்லென வருட, நகரத்தின் கூப்பாடுகளற்ற அமைதியான விடியலில் கிராமத்தில் காலடியெடுத்து வைக்கும் பொழுதே வீடுகள்தோறும் பாய்விரித்தாற் போல் தெருவடைத்த கோலங்கள் வரவேற்றன. அட, மறந்தேவிட்டேனே! இது புரட்டாசி உற்சவ காலமில்லையோ! அமோகமாகப் பெருமாள் சேவையும், தேரும் தீர்த்தவாரியும் போனசாகக் கிடைக்கப் போகும் குஷியில் மனம் துள்ள, ஆற்றங்கரைத் தெருவிலிருந்த வாசு அத்தான் வீட்டை அடைந்தேன்.

வீட்டில் மன்னி மட்டும்தான் இருந்தாள். என்னைப்பார்த்ததும் “வாங்கோ, அத்தான் அக்கரைக்குப் போயிருக்கிறார். குளித்துவிட்டு வாங்கோ. காப்பி டிபன் சாப்பிடலாம்” என்று உபசரித்தாள். இன்னும் இந்த வீட்டில் குளிக்காமல் காப்பி குடிக்கும் வழக்கமெல்லாம் நுழையவில்லை. ஊரில் ஆறு என்று ஒன்று இருந்ததற்கு அடையாளமாக மணல் திட்டுகள் தாம் தென்பட்டன. இருகரைக்கும் நீந்தி ஆற்றை இரண்டுபடுத்திய நாட்களை நினைத்துக் கொண்டு கிணற்றடி ஸ்நானத்தை முடித்தேன். வாசலில் அத்தானின் குரல் கேட்டது. “சுந்தா, வந்தயாப்பா? உற்சவ சமயம் வந்தது நல்லதாகப் போச்சு. காப்பி சாப்பிட்டுக் கிளம்பு கோவிலுக்கு” என்று உற்சாகமாக வரவேற்றபடி நுழைந்தார். அத்தானுக்கு எழுபத்தைந்து வயது என்று சொன்னால் நம்பமுடியாது. ஒடிசலான உடல் வாகு. கணீர்க் குரல். விடுவிடுவென்று நடை அல்லது அரை ஓட்டம். கோயில் அத்யாபகம், அதாவது பெருமாளின் பூஜா காலங்களிலும், வீதிப் புறப்பாட்டின்பொழுதும் ஸ்வாமிக்கு முன்பாகத் திருவாய்மொழி, ப்ரபந்தங்களை ஓதிய வண்ணம் செல்லும் கோஷ்டியில் ஒருவர். முன்னோர்கள் வைத்து விட்டுப் போன நிலம், புழக்கடையில் காய்கறித் தோட்டம், பத்து தென்னை, ஐந்தாறு மாமரங்களிலிருந்து வருவதை வைத்துக்கொண்டு மன நிறைவுடன் காலட்சேபம். ஊர்க் குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் தம் குடும்பம் என்னும் ஒட்டுதலுடன் பழகுவார். மன்னி எல்லாவற்றிலும் சஹதர்மசரி; வெகு அன்னியோன்னியம்.

“இன்னிக்குத் தேர்; நியாயமாகப் பார்த்தால் விடியும்பொழுதே வடம் பிடித்திருக்க வேணும். இன்னும் ஆட்கள் வந்த பாடில்லை. உள்ளூரில் நாலைந்து தெரு போய் நம் பசங்கள் ஆட்களை அழைத்து வரப் போயிருக்கிறார்கள். நானும் அக்கரைக்குப் போய் எல்லாருக்கும் சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் அரைமணியில் பெருமாள் தேருக்கு எழுந்தருளிவிடுவார்” என்று சொன்ன அத்தான் “ஊர் ரொம்பவே மாறிப் போயிடுத்து. நிறையப் பேர் பல காரணங்களால் வெளியூர் போய்ட்டா. வாடகை குறைச்சல்னு இங்கே குடியிருந்துண்டு நெல்லிக்குப்பம், பண்ருட்டின்னு வேலைக்குப் போறவாளுக்கு நம் ஊர், நம் பெருமாள்னு அவ்வளவு சிரத்தை எப்படி வரும்? வடத்தைத் தொட்டுக் கண்ணில ஒத்திண்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவா. தேர் இழுக்க வெளியூராரை வருந்தி அழைக்கணும்னா மனசு ரொம்ப விட்டுப் போறது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

 

கோவிலில் நுழையவும், குதிரை வாகனத்தில் பெருமாள் சர்வாலங்கார பூஷிதராய்த் தேருக்குப் புறப்பட்டு வரவும் சரியாக இருந்தது. அத்தான் கோஷ்டியில் சேர்ந்துகொண்டு விட்டார். எனக்குத் தெரிந்து முப்பது, நாற்பது பேர் இருந்த கோஷ்டியில் அத்தானும், கூட மூன்று பேரும் மட்டும் “பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாசுரங்களை ஓதிய வண்ணம் சென்ற காட்சி மனசை சங்கடப்படுத்தியது. வீட்டு வாசலில் சில பெண்மணிகள் கோஷ்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு வாகனப் பெருமாளையும் சேவித்துச் சென்றனர்.

பெருமாள் தேரில் வலம் வர ஆரம்பித்தார். தேர் நகருவதுபோல் ஆடி அசைந்து வரவில்லை. வடம் பிடித்தவர்கள் ஏதோ கடமையை முடித்தால் போதுமென்பது போல் தடதடவென்று இழுத்துக் கொண்டு வந்து ஒரு மணி நேரத்திலேயே நிலையில் சேர்த்து விட்டனர். அவசர யுகத்தில் இந்த மட்டுமாவது நடக்கிறதேயென்று தேமேன்னு பெருமாள் தேரடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார். துணைக்கு அர்ச்சகரும் கோஷ்டி எனப்பட்ட நாலு பேரும்தான். வீடுகளிலிருந்து அரை டிக்கெட்டுகள் சிலர் வந்து அர்ச்சனை செய்துகொண்டு போனார்கள். பூஜா காலம் முடிந்து அத்தான் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டார்.

“பாவம் வெளியூர் ஆட்கள். கடலை வெட்டுக்குப் போக வேணுமாம். இத்தனைக்கும் நடுவில் வந்து ஸ்வாமி கைங்கர்யம் செய்வதே பெரிசு. இவர்களுக்குப் பானகம் நீர் மோர் தரக்கூட ஆளில்லை. நம்மாத்தில் ஒரு கதம்ப சாதமும் மோரும் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். ஏதோ என்னாலானது” என்று கூறுகையில் பெருமாளைவிட அவர் பரிதாபமாகத் தெரிந்தார்.

“ஏன் அத்தான், கோவிலில் இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ய மாட்டார்களா?” என்று கேட்டேன்.

“கோவில் மேஜர் கோவில் லிஸ்டில் இருக்கு. வரும்படிக்கும் குறைவில்லை. ஆனால் தொள்ளாயிரத்து ஐம்பதில் கைங்கர்யக் காரர்களுக்காக ஒதுக்கின படித்தரத்தை இன்று வரை உயர்த்தவில்லை. அந்தப் படித்தரத்தை வைத்துக்கொண்டு இன்றைக்கு நாலுபேருக்குக் கூட வயிறு நிறையப் போட முடியாது. எதற்கு வம்பு என்று ஒரேயடியாக நிறுத்தி விட்டார்கள்” என்று பதிலிறுத்தார்.

“கோஷ்டியும் ரொம்ப இளைத்துப் போய் விட்டது. நாலு குழந்தைகளைக் கூட்டி வைத்துப் பாசுரம் பாடம் சொல்லலாமென்றால் ஹோம்வொர்க் முடித்துவிட்டு டிவி முன்னால் உட்கார்ந்து விடுகிறதுகள். பெற்றவாளுக்கும் அதிகம் நாட்டம் இல்லை. கடை விரித்தேன், கொள்வாரில்லை என்னும் நிலைதான்” மனம் நொந்து பேசினார்.

மறுநாள் தீர்த்தவாரியும் வற்றிப்போன ஆற்றின் கரையிலிருந்த மண்டபத்தில் சுருக்கமான அபிஷேகமுமாக எண்ணி எழெட்டுப் பேர் முன்னிலையில் நடந்து முடிந்துவிட்டது. நானும் ஊர் வந்து சேர்ந்தேன், ஒரு தீர்மானத்துடன்.

ஊரில் நடந்த தேரோட்டம் என் வாழ்க்கைத் தேரைத் திசை திருப்பிவிட்டது. அடுத்து வந்த ஒரிரு மாத காலம் என்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டது. ஒரு நல்ல குடும்பத்துக்கு வீட்டை வாடகைக்கு விட்டேன். பென்ஷன், வாடகை மற்றும் மாதாந்தர வருமானத்தை கிராமத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டேன். அத்தானுக்கு ஒரு கார்டு எழுதிப்போட்டுவிட்டு கிராமத்தை அடைந்தேன். அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அத்தியாவசியமான சமையல் சாமான்களுடன் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை கிராமத்தில் தொடர்ந்தேன். ஆனால் மிகுந்த பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும். அவ்வப்பொழுது விட்டேற்றியாகக் கற்றுவந்த பிரபந்த பாசுரங்களை அத்தானுடன் சேர்ந்து தினமும் சொல்லிப் புதுப்பித்துக் கொண்டேன். கோவில் அத்யாபக கோஷ்டியில் வெளியூரிலிருந்து வந்த நான் சேர்ந்துகொண்டதைப் பார்த்த சில பெரியவர்களும், அவர்களின் தூண்டுதலால் சில இளைஞர்களுமாகக் கணிசமான எண்ணிக்கையில் வந்து அத்தானிடம் பிரபந்த பாடம் கற்க ஆரம்பித்து விட்டனர். அடுத்த உற்சவத்துக்குப் பெருமாள் முன்னால் இன்னும் ஏழெட்டுப் பேராவது கோஷ்டியில் செல்ல முடியும்.

ஒரு காலத்தில் உத்தியோகம் செய்த அனுபவத்தை வைத்து, கோவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அவர்கள் மூலம் அறநிலையத் துறையையும் அசைக்க ஆரம்பித்தேன். மாறுதல் சிறிது சிறிதாக வரும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

நாள் போனதே தெரியவில்லை. ஒரு நாள் என் இளைய மகன் போன் செய்து “அப்பா, உங்கள் கிரீன் கார்டு இன்னும் நாலு மாசத்தில் காலாவதியாகிறது. அதைப் புதுப்பிக்கவேண்டும்” என்று நினைவு படுத்தினான். மூத்தவனோ அமெரிக்காவில் தங்க விருப்பமில்லாவிட்டால் தன்னோடு வந்து மதுரையில் இருக்குமாறு கூப்பிடுகிறான்.

‘இந்த கிராமத்துக்கான கிரீன் கார்டை இப்பொழுதுதான் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே நிரந்தர வாசத்துக்கான தகுதியைப் பெறவேண்டும். உங்கள் இருவரைத் தவிரவும் வேறு கடமைகள் இந்த அப்பாவுக்கு இருக்கின்றன’ என்று சொன்னால் அவர்களுக்குப் புரியுமா?

பின்னுரை

// உங்கள் இருவரைத் தவிரவும் வேறு கடமைகள் இந்த அப்பாவுக்கு இருக்கின்றன’ //கடமைகளா, விருப்பங்களா? விரும்பிய கடமைகள் என்று சொல்லலாமோ?

இந்நிலை தற்போது கடலூர் திருவந்திபுரம் தேவநாத பெருமாள் நிலையை ஒத்திருக்கிறது. உச்சி பூஜை சேவையில் பிரபந்தம் சேவித்தவர்களுக்கு கொடுக்கும் பட்டை சாதத்தை குறைத்து விட்டார்கள்.

– நவம்பர் 2003

 

11 கருத்துகள்:

  1. மேஜர் டாக்டர் முகுந்த் அவர்களைப் பாராட்டுவோம். பெயரைப் பார்த்ததுமே மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவுக்கு வந்தார்.

    5ரூ க்குச் சாப்பாடு கொடுக்கும் சேவை தொடர்ந்திட வாழ்த்துகள்.

    அதுல்குமார் முன்னுதாரணம். மேன்மேலும் வாழ்க்கையில் முன்னேறிட வாழ்த்துகள். எந்தச் சூழலில் இருந்தாலும் உழைப்பும் ஆர்வமும் ஒருவரை முன்னேறும் பாதையில் வழிநடத்தும் என்பதற்கு உதாரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் மேஜர் முகுந்த் என்று வர வேண்டும் மாறிவிட்டது

      கீதா

      நீக்கு
  2. அம்புஜவல்லி மாமியின் கதை நன்றாக உள்ளது. எழுத்தும் ஃப்ளோவும்.

    கடமைகளா, விருப்பங்களா? விரும்பிய கடமைகள் என்று சொல்லலாமோ?//

    இதை விருப்பங்கள் என்றுதான் சொல்ல முடியும். சுந்தரவரதனுக்கு ஒரு வேளை அது தன் சமூகக் கடமையாக நினைத்திருக்கலாம்! அவர் மனதில் தானும் தன் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் தன் அத்தானைப் பார்த்ததும் வந்திருக்கலாம். அதனால், நீங்க சொல்லிருப்பது போல் தன் விருப்பத்தை ஒரு கடமையாகத் தன் மனதில் நினைத்திருக்கலாம். அவருடைய தனிப்பட்ட ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஐந்து ரூபாய் கேண்டீன் நல்ல விஷயம்தான், அதனால் பயன் பெருகிறவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருந்தால் செய்தி முழுமை அடைந்திருக்கும்.
    மருத்துவர் மேஜர் முகுந்த் தன் கடமையைத்தானே செய்திருக்கிறார்?
    சென்னை ஐ.ஐ.டி. கழுதை சவாரி தொழிலாளிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்! ஐ.ஐ.டி.யில் ஹையரார்க்கி நிறைய உண்டு என்று கேள்விப்பட்டிருகிறேன். அதனால் அவர் பாதிக்கப்படாமல் கல்வியை சிறப்பாக முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. கதை ஓகே. பல கிராமங்களின் நிலை தற்சமயம் இப்படித்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் கதாநாயகனைப் போல் பலர் தங்கள் தங்கள் கிராம க்ரீன் கார்டுகளை புதுப்பித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. சஹதர்மசரி ஆ இல்லை சஹதர்மசாரியா?

    கதை நன்றாக இருக்கிறது. எங்கோ முன்பு படித்த நினைவு வருகிறது.

    பெரும்பாலான கோயில்களில் இதுதான் நிலைமை.

    க்ரீன் கார்டு என்றதும், அடடா இன்னும் குடிமகனாக ஆகவில்லையா? எந்த நேரத்திலும் கிரீன் கார்டை வாபஸ் வாங்கிவிடுவார்களே என்று தோன்றியது. இதுதான் தற்போதைய நிலைமை இல்லையா?

    திரும்பவும் கிராமத்துக்கே சென்றுவிடுவது என்பது கதைகளில் சாத்தியம். ஒரு சில உதாரணங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் மெடிகல் எமெர்ஜென்சியின்போது மிகக் கஷ்டப்படுவதால், அவங்க அவங்க பசங்க, பேசாமல் நகரில் வந்து இருந்துக்கோங்க என்று (அமெரிக்காவில் அல்லது வெளிதேசத்தில் இருந்துகொண்டு) நெருக்கடி கொடுக்கறாங்க.

    //கடமைகளா, விருப்பங்களா?// - கடமைகள்தாம்.

    பதிலளிநீக்கு
  6. ஐஐடி சேர்வது... மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அவரைப்போன்றவர்கள் மிக நன்றாக நடத்தப்பட்டு, வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கப்படவேண்டும். அவர் முன்னேறினால், அவரைச் சூழ்ந்துள்ளவர்களும் முன்னேறிவிடுவார்கள். அதற்கு அவர் பிற்காலத்தில் உதவ வேண்டும்

    ஐந்து ரூபாய் உணவு... பாராட்டப்படவேண்டும். யாருக்குச் சென்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  7. அன்பு சூழ் 5 ரூபாய் கான்டீன் எத்தனையோ பேருக்கு வயிற்றுப் பசியைப் போக்கும் நல்ல விஷயம்.

    ராணுவ டாக்டர் அன்று விமானத்தில் பயணித்தது, உடல்நலம் பாதிக்கப்பட்ட அப்பயணியின் அதிர்ஷ்டம் எனலாம்.

    ஐஐடியில் சேர்வது என்பது அதுல் போன்ற மாணவர்களுக்கு மிகப் பெரிய விஷயம் என்பதோடு பாராட்டவும் வேண்டும். வாழ்க்கையில் அவர் முன்னேறி தன் குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும். அவர் வாழும் கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல வெளிநாட்டிற்குச் செல்லும் போதுதான் நம் நாட்டின் பெருமைகளும் நம் நாட்டின் இனிமையையும் உணர்கிறோம். இதைச் சொல்லும் கதை நன்றாக இருந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. ஐந்து ரூபாவுக்கு உணவு என்னும் சேவை பாராட்டுகள். தொடர்க அவர்கள் பணி.

    விமானத்தில் பயணித்து உயிரைக்காத்த டாக்டர் முகுந்த் அவர்களுக்கு பாராட்டுகள்.

    கிராமத்து கதை நல்ல நடையில் சென்றது.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை,
    உதவும் உள்ளங்கள் வாழ்க! அதுல்குமார் வாழ்க!
    கதை பகிர்வும் மிக நன்றாக இருக்கிறது.
    வயதான காலத்தில் பிடித்த இடத்தில் பிடித்தமாதிரி இருப்பதுதான் நல்லது. விரும்பிய கடமைகளை செய்து கொண்டு இறைவன் புகழ்பாடி மன நிம்ம்மதியாக வாழட்டும் சுந்தர வரதன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!