8.7.25

எ.போ.க - சிறுகதை : பொக்கிஷம் - அணைப்பு - மாலன்

                                            5664அணைப்பு 

- மாலன் -

இதயம் பேசுகிறது (1978)

பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. இது 'அந்த மாதிரி'ப் பெண் என்று, மழிக்கப்பட்ட புருவங்கள், அழைக்கிற விழிகள், பெரிய பிளாஸ்டிக் பொட்டு. தூக்கலான மேக்கப், அதற்கும் அப்பால்  தெரிகிற கீறல் விழுந்த நிஜமுகம், விலகாத தலைப்பை விலக்கி விலக்கிச் சரி செய்து கொள்கிற பொய்மை... அந்த மாதிரிக் கேஸ்தான்.

இவனுக்கு அருவருப்பாக இருந்தது. நாலடி தள்ளிப்போய் நின்று கொண்டான். என்ன பிழைப்பென்று பிழைக்கிறது இது...? இன்று பூரா கடை விரித்தால் என்ன கிடைக்கும் இதற்கு..?  என்ன இல்லை என்று இந்த வியாபாரம்...? குனிந்து நிமிர்ந்து தட்டுத் தூக்கிச் சாரம் ஏற வணங்காத உடம்பா...? மூளையைக் கசக்கி விட்டுக் கொண்டு மூலைக்கு மூலை பந்தாடப் படுகிற நடுத்தட்டு வேலைக்கு கிடைக்காத படிப்பா....? சுலபமாய்ப் பணம் எண்ணுகிற பேராசையா...? விதம் எண்ணுகிற ருசி பார்க்கிற வக்கிரமா?  என்னத்துக்காக இது சந்தியில் வந்து நிற்கிறது...? 

இரண்டு வாய் நிறைய மனிதர்களைத் திணித்துக் கொண்டு பஸ் வந்து நின்றது. திபுதிபு என்று நாலைந்து பேர் அடித்துக் கொண்டு இறங்கினார்கள். இந்த மாதிரி வந்து புறப்பட்டுப் போகிற பஸ்ஸாய் எத்தனை மனிதர்கள் இவள் வாழ்க்கையில்...! இந்த பஸ்கூட இவளுக்கு எப்படித் தோன்றியிருக்கும்? பலகை மாதிரி விரிந்த மார்பும், கண்டு கண்டாய்த் திரண்ட சதையுமாக நகர்கிற 'ஹீ-மானை' (He-Man) மாதிரி...? இவளுக்கு இந்த அடைசல் தெரிந்திருக்குமா...? இந்த அடைசல் நடுவில் இடம் பிடிக்கிற முண்டல் தெரியுமா...? பிடித்த இடத்திலிருந்து அடி அடியாய் நகர்ந்து முன்னேறு வதற்கானத் தவிப்புத் தெரிந்து இருக்குமா...?

இவளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் இருக்கிற ஒரே உறவு உடம்பாகதான் இருக்கும். இந்த உடம்பிற்கு சுரணை இருக்காது.மெலிதான கூச்சம் இருக்காது மழைக்கு முந்தின மண்வாசனையில் சிலிர்க்கிற மனசு இருக்காது.  சுவரில் நகம் படுகிற போது மயிர் கூச்சம் எடுக்காது  இது எல்லாம் மரத்துப் போனதாக இருக்கும். சூடு கண்டு காய்ப்புத் தட்டித் தடித்த மனதாக இருக்கும்.  இந்த மனத்தில் வேறு எந்த உணர்ச்சியும் தழும்பி நிற்காது. இந்த மனத்தில் பூப் பூக்காது, சிரிப்புக் கரை கட்டி இருக்காது. கருணை பொங்கி வராது. எல்லாம் அவிந்து அடங்கிப் போன சுடுகாடாய் இருக்கும். இந்தச் சமூகத்தை, சக மனிதர்களைப் பழி வாங்குகிற முள் மண்டின சுடுகாடு இல்லையென்றால் இவளுக்குள் ஒரு கட்டில் கிடக்கும். பூம்பஞ்சுமெத்தை கிடக்கும்.  சினிமாக் கட்டில் மாதிரி, பூ சரம் சரமாய்த் தொங்குகிற கட்டில், ஜிகினா மினுங்குகிற கட்டில்.

'செக்ஸ்' எத்தனை அற்புதமான விஷயம்! எத்தனை அழகான அனுபவம், காவிரியில் முங்கிப் போய் எதிர்க்க ரையில் பூப்பறித்து வருவது மாதிரி விடிகாலைப் பனியில் கிணற்றடி ஜலத்தில் உள்ளங்கால் படிந்த மாதிரி இவளுக்கு அந்த மெல்லிய இழைகளை தெரிந்திருக்குமா இதை எப்படி விற்று காசு பண்ண முடிகிறது இவளால் இதுவும் ஒரு வியாபாரமா நேரமாகிக் கொண்டிருந்தது இன்னும் இவனுடைய பஸ் வரவில்லை வரவர நகர பஸ்கள் ஞானிகள் ஆகஆகி வருகின்றன கால பிரக்ஞையை இழந்து வருகின்றன. ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்

இவளுக்கு இன்னும் ஏதும் கிராக்கிப் படிந்ததாகத் தெரியவில்லை. தெருவில் போன இரண்டு விடலைப் பையன்கள் இவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இவளைக் குறித்துப் பச்சையாக ஏதோ சொல்லிக் சிரித்துக்கொண்டிருந்தார்கள். இவளும் அதை ரசிப்பது மாதிரித் தெரிந்தது. கண்ணில் ஒரு சிமிட்டல் மினுங்கி மறைந்தது. 

சிரிப்பும் கேலியுமாக இருந்த பையன்கள் சில்விஷமம் பண்ணுகிற  தெம்படைந்திருந்தார்கள். சின்னச் சின்னக் காகிதப் பந்தாகச் சுருட்டி இவள் மீது வீசிக் கொண்டிருந்தார்கள்.  இவளின் ச சம்மதம் மெல்லிய சிரிப்பாக மொட்டுக் கட்டியிருந்தது. சிறுமையைத் தாங்கிக் கொண்டு, எப்படி சிரிக்க முடிகிறது..? 'நச்' சென்று முகத்தில் அறைந்த மாதிரி நாலுவார்த்தை ஆத்திரமாகக் கேட்கிற கோபம் வரவேண்டாம்? இழுத்துப் போர்த்திக் கொண்டு விலகுகிற வெட்கம் வரவேண்டாம். தன்மானம் கூடவா இருக்காது...? உலகத்தை நேசிக்க வேண்டாம். சக மனிதனை நேசிக்க வேண்டாம். தன்னையே நேசித்துக் கொள்கிற ஒருசுய  பிரியம் கூடவா இல்லாமல் போகும்  ஒரு ஜென்மத்திற்கு! சே...!

எல்லாரையும் நசுக்கிக் கொன்று விடுகிற மாதிரியான பாய்ச்சலுடன் பஸ் வந்து நின்றது. பூப் போட்ட முழுக்கைச் சட்டை, இறக்கிக் கட்டின சாரி, காய்கறிக் கூடையும், பித்தளைத் தூக்குமாய் இரண்டு மாமிகள், சுருட்டி மடக்கின வீக்லியுடன் ஒருயன். எல்லோரும் ஒவ்வொருவராக இறங்கினர் நிற்கப் பொறுக்காத அவசரத்தில் உறுமி உறுமிப் பயங்காட்டியது பல்லவன்.

பளபளவென்று வழுக்கை மினுங்கும் தலை, பழுத்து கனிந்த தர்பூசணி முகம், கொழு கொழுவென்று வயதில் தளர்ந்த உடம்பு, நடுங்குகிற கை.  வயது எண்பதை தொட்டு நரைத்து விட்டிருந்தது அனேகமாக கிழவர் இறங்கிவிட்டார் அடுத்த அடி எடுத்தால் தரை தான் பொறுக்க முடியாத அவசரத்தில் பஸ் கிளம்பியது நிற்க முடியாத முதுமை படி கிடைக்காத தடுமாற்றம் கிழவர் நிலைகுலைந்து விழுந்து....

இவள் பளிச்சென்று முன்னே பாய்ந்தாள். விழ இருந்த கிழவரை அணைத்துத் தாங்கிக் கொண்டாள். தோளைச் சுற்றிக் கையை எடுத்துப் போட்டுக் கொண்டு, இடுப்பில் இன்னொரு கையைக் கொடுத்துத்  தாங்கிப் பிடித்து மெல்ல நடத்தினாள். பிளாட்பார முனையில் உட்கார்த்தி வைத்தாள். மார்புச் சேலையை விலக்கி பிளவுசுக்குள் மெல்ல கையை விட்டு பர்ஸை எடுத்து, "சோடாக் குடிக்கிறாயா, பெரியவரே" என்று கடைக்கு நகர்ந்தாள்.

"என்னய்யா பெரிசு, வூட்ல சொல்லீக்கினு வந்துட்டியா.." என்று யாரோ கிண்டல் பண்ணினார்கள். கூட்டம் முழுசும் பெரிய ஜோக்கைக் கேட்ட மாதிரி கொல்லென்று சிரித்தது.  இதுதான் என்ன மாதிரிக் கூட்டம்?  உலகத்தை நேசிப்பதைப்பற்றிப் பேசுகிற கூட்டம்...!

ஆனால், அந்த அணைப்பு அவளுக்குத் தான் முடிந்தது. ரத்தமும் சதையுமாய் நடுத்தெருவில் சிதற இருந்த உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிற அணைப்பு. இது வெறும் கையின் அணைப்பாய் இல்லை. காசின் அணைப்பாய் இல்லை இதில்ஒரு பிரியம் இருந்தது. மனசின் ஒட்டுதல் இருந்தது. நிஜமான கரிசனம் இருந்தது. 

முதுமையின் தடுமாற்றத்தில், காசு, பண மதர்ப்பில், உடம்பின் தவிப்பில்,  இளமையின் விடலைத் தினவில் சறுக்கி விழுகிற உயிர்களைத் தாங்கிப் பிடிக்கிற எல்லையற்ற கருணையின் அணைப்பாக இருந்தது.

கூட வாழ்கிற சகமனிதனை சிநேகத்தோடு அணைத்துக் கொள்ள ஒரு தனி மனது வேண்டும். பரிவு வேண்டும். பார்வை வேண்டும். இந்த அணைப்புப் புத்தகப் படிப்பில் வராது. வேத விசாரத்தில் வராது. வெறும் பேச்சில் வராது.

இவனுக்கு அந்த மனதைக் கும்பிடவேண்டும் போல் இருந்தது.

21 கருத்துகள்:

  1. மாலன் என்ற பெயர் பெற்ற எழுத்தாளருக்கு உரிய திறன் இக்கதையில் இல்லை. யாரோ வாடகை எழுத்தாளர் எழுதியது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1978 ல் எழுதியது.  அவர் அப்போது இதயம் பேசுகிறது ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
    கதை துவங்குகிறபோதே அவள் நல்லவள் என்பதாகத்தான் முடியும் என்பது புரிந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அப்போது தொடங்கிய ட்ரெண்ட். இப்போது பழசாகிவிட்டது.

      நீக்கு
  3. @JKC Sir: மாலன் எழுத்து இப்படித்தானே இருக்கும். அவர் சிறந்த பத்திரிகையாளரே தவிர, நல்ல கதாசிரியர் என்று சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதைக்கு இலக்கணம் வகுத்தவர் அல்லவா மாலன். அவர் கதாசிரியர் தான்
      http://www.pichaikaaran.com/2022/09/blog-post_16.html

      நீக்கு
    2. பஞ்சாங்கம் இன்றி சிறுகதை எழுதாதீர்கள் − மாலன் சுவாரஸ்ய உரை

      நீக்கு
    3. அவர் சிறந்த கதைகள் எழுதினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! JKC Sir.. Link வேலை செய்யவில்லை.

      நீக்கு
    4. select the link by clicking on it, right click, go to link (3rd in the menu) opens. opens for me.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்தனைகள்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பொக்கிஷ கதை பகிர்வு நன்றாக உள்ளது. அவளை தப்பான கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் போதே அவளுக்குள் இருக்கும் நல்ல மனதை பற்றியும் கதையின் முடிவில் தெரிய வரும் என்பதை கதை ஊகிக்க வைத்தது. மனிதர்களின் தேவைகள், எண்ணங்கள் வேறாவதைப் போல அவர்களின் மறுபக்கமான மனதின் முகங்களும், நல்லவை கெட்டவையை சார்ந்து இருக்குமல்லவா? நல்ல அர்த்தமுள்ள கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையின் நாடியை சரியாகப் பிடித்தீர்கள். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  6. கதை முடிவு புரிந்தாலும் ரசிக்க வைத்தது. மாலனின் சமூகப் பிரக்ஞையை எடுத்துக் காட்டியது.

    பதிலளிநீக்கு
  7. கதையின் போக்கிலிருந்து முடிவில் அப்பெண்ணின் நல்ல மனது குறித்துச் சொல்லப் போகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அப்போதைய ட்ரெண்ட் நமக்கு இப்போது நன்கு பழகி விட்டது.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  8. முதல் பாரா வாசிக்கும் போதே.....ஓகே முடிவு இதுக்கு எதிராக இருக்கப் போகிறது என்று. முழுவதும் வாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எதிர்பார்த்த முடிவுதான். அதுவும் இப்படி அவள் யாருக்கேனும் உதவுவாள் அவன் மனதின் எண்ணங்கள் மாறும் என்றும் யூகிக்க முடிந்தது.

    பெண்ணின் தோற்றதைப் பார்த்து தன் மனம் எவ்வளவு வக்ரமாய் எண்ணியிருக்கிறது என்று முடிவு அவன் உணர்வது போலிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இக்கதையில் ஓரிரு விஷ்யாங்களையும் பார்க்க முடிகிறது.

    இப்படியான பெண்கள் இப்படித்தான் என்று நாமே ஒரு ஜட்ஜ்மென்டை வளர்த்துக் கொள்கிறோம் அதாவது இந்த சமூகம். அதுதான் அவனின் மன ஓட்டங்கள்.

    இப்படி இருந்தால் தப்பான வழியா இல்லை என்பதைப் போல் அவளின் செயல்.

    அடுத்து, ஒரு வேளை அவள் அப்படியான பெண்ணாகவே இருந்தாலும் கூட, ஏன் அவளுக்கும் ஈவு இரக்கம் இருக்காதா? உதவமாட்டாளா? பார்க்கப் போனால் மற்றவர்களை விட இவர்கள் டக்கென்று உதவச்செல்வார்கள். காரணம் அவர்களுக்கு வாழ்வின் வலி தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தப்பானவள் என ஆரம்பிக்கும் கதை அவளது மனித நேயத்தை நன்கு எடுத்துக்காட்டிவிட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!