28.2.26

பாசுரம் முன்னுரை பகுதி 9 --- நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் பகுதி 9 

ஆளவந்தார் குருகைக்காவலப்பனிடமிருந்து யோகாப்பியாசத்தைக் (தியான வழிமுறையை) கற்றுக்கொள்ள இயலாமல் போய்விட்டதைப் பற்றிச் சென்ற வாரம் பார்த்தோம். பிறகு மன வருத்ததோடு, ஆளவந்தார் தன் சிஷ்யர்களைக் கூட்டிக்கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து திரும்பவும் திருவரங்கம் வந்தார். 

முன்பு ஒரு சமயம் ஆளவந்தார் திருவாய்மொழி பேருரை (காலக்ஷேபம்) நிகழ்த்திக்கொண்டு வந்தபோது, அவருடைய சீடரான பெரிய திருமலை நம்பி, “ஒழிவில் காலமெல்லாம்" என்ற பாசுரத்தின் அர்த்தத்தைக் கேட்டு, திருமலைக்கே செல்ல ஆசைப்பட்டார். ஆழ்வார் பாசுரத்தின் அர்த்தமெல்லாம் இவர் நெஞ்சில் பரவிக்கிடந்தால் ஒழிய இத்தகைய ஆசை ஏற்படாது என்று எண்ணிய ஆளவந்தார், பெரிய திருமலை நம்பியை திருமலைக்குச் செல்ல அனுமதி அளித்தார்.  பெரிய திருமலை நம்பியும், தன்னுடைய தகப்பனார் தெய்வக்கரசு நம்பி மற்றும் இரண்டு உடன்பிறந்தார்களுடன் திருமலைக்குச் சென்று அங்கு எல்லாவித கைங்கர்யங்களையும் செய்துகொண்டிருந்தார். 


குறிப்பு: பெரிய திருமலை நம்பி, தினமும் திருமலையில் பாபநாச தீர்த்தத்தை ஸ்ரீநிவாசப் பெருமாளுடைய திருமஞ்சனத்துக்கு, நடந்து சென்று எடுத்து வருவார். (சுமார் 5 கிமீ) பிறகு பெருமாளின் விருப்பத்தால் ஆகாசகங்கையிலிருந்து (2 கிமீ தூரம்) திருமஞ்சனத்துக்கு தீர்த்தம் எடுத்துவர ஆரம்பித்தார். இன்றைக்கு உள்ள பயண வசதிகள் இல்லாத சமயம் அது. 

இந்தக் காலகட்டத்தில், ஸ்ரீபெரும்பூதூர் ஆஸூரி கேசவப் பெருமாளும் மதுரமங்கலத்தைச் சேர்ந்த (தற்போது மழலை மங்கலம் என்று வழங்கப்படுகிறது) கமல நயன பட்டரும், பெரிய திருமலை நம்பியிடம் அவருடைய உடன் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டனர். இவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் (திருவிலச்சினை மந்த்ரோபதேசம், வலது இடது தோள்களில் சங்கு சக்ர இலச்சினை பதித்து திருமந்திர உபதேசம் செய்து வைணவர்கள் ஆக்குதல்) செய்து, தன் சகோதரிகளான பூமிப்பிராட்டியை கேசவப் பெருமாளுக்கும், பெரிய பிராட்டியை கமலநயன பட்டருக்கும் திருமணம் செய்துகொடுத்தார். 

ஆஸூரி கேசவப் பெருமாள், புத்ர பாக்கியத்துக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்திர பாக்கியத்தை விரும்பி எம்பெருமானை உத்தேசித்து யக்ஞம் (யாகம், வேள்வி வளர்த்தல்) பண்ணினார்.  அவருக்கு 1017ம் வருடம் ஒரு குழந்தை பிறந்தது. அதே வருடம், மதுர மங்கலத்தில் கமல நயன பட்டருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.  தாய்மாமாவான பெரிய திருமலை நம்பிக்கு செய்தி சென்று சேர, அவரும் திருமலையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்பூதூருக்கு வந்து சேர்ந்தார்.  கேசவ சோமயாஜியாருக்குப் பிறந்த குழந்தைக்கு இளையாழ்வான் என்ற பெயரையும், கமலநயன பட்டருக்குப் பிறந்த குழந்தைக்கு கோவிந்தன் என்றும் பெயர் சூட்டிவிட்டு திருமலைக்குச் சென்றார். 

உரிய காலத்தில் இளையாழ்வாரை, திருப்புட்குழியிலிருந்த யாதவப் பிரகாசர் என்ற அத்வைத சன்னியாசியிடம் பாடம் கேட்க அனுப்பினார் அவருடைய தகப்பனார். அதற்கு முன்பு தாமும் வேதத்தைத் தன் மகனுக்குக் கற்றுக்கொடுத்தார். இளையாழ்வார் கற்றுக்கொள்ளும் அதே அத்வைத சன்னியாசியிடம் கமலநயன பட்டர், தன் மகன் கோவிந்தனையும் அனுப்பினர். 

பெரிய திருமலை நம்பியை, திருமலைக்குக் கைங்கர்யம் செல்லவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்திய திருமலை பற்றிய பாசுரங்களில் ஒன்று இந்த வாரம். 

##ஒழிவில் காலமெல்லாம்* உடனாய் மன்னி,*

வழுவிலா* அடிமை செய்ய வேண்டும் நாம்,*

தெழிகுரல் அருவித்* திருவேங்கடத்து,*

எழில்கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே   (3-3-1) 

பொருள்: கம்பீரமான ஓசைகளை எழுப்புகின்ற அருவிகள் நிறைந்த திருவேங்கடமலையில், அழகிய தேஜஸை உடைய, எம்முடைய குல நாதனான பெருமானுக்கு, அடியார்களாகிய நாம், ஓய்வு இல்லாமல் காலம் முழுவதும், எந்தக் கஷ்டத்திலும் பிரியாமல் கூடவே இருந்து குற்றமற்ற கைங்கர்யங்களைப் பண்ணுவோம். 

வழுவிலா அடிமை-குற்றமில்லாத கைங்கர்யங்கள், அதாவது மற்றை நம் காமங்கள் மாற்று என்ற பொருள்படி.  திருவேங்கடத்தை ஏன் எழில் கொள் சோதி என்கிறார்?  பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும் அவனே இருந்தாலும், பரமபதத்தில் அந்தச் சோதி பகல் வெளிச்சத்தாலும், திருப்பாற்கடலில் நீராழியாலும் அந்தச் சோதி ஒரு மாற்று குறைவாகவே இருக்கும், ஆனால் திருமலையில் குன்றிலிட்ட விளக்கு போல எழிலுடன் இருக்கும் என்கிறார். எந்தை தந்தை தந்தை எம் குலத்துக்கெல்லாம் நாதன். 

இந்தப் பத்துப் பாசுரங்கள் மிகவும் முக்கியமானவை. பெருமானுக்கு நாம் அடிமை செய்திருக்கவேண்டும் என்று வற்புறுத்துபவை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவனது திருவடிகளே நமக்குப் புகலிடம். 

தொடர்வோம்...

******************************************************************************************

நான் படிச்ச கதை

மேற்கில் தோன்றிய உதயம்

 கதையாசிரியர்: ஆர்.மணிமாலா


புஸ்தகாவின் அறிமுகம்.

சென்னையைச் சேர்ந்த ஆர்.மணிமாலா, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கியவர். இதுவரை 175 நாவல்கள், 145 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. எம்.ஏ. படித்திருக்கிறார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் மூன்று இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். இவருடைய கதையில் வெளிவந்த திரைப்படம் ‘அமுதே’. தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. ‘கண்மணி’ முதன்முதலாக நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசையும் மூன்றாம் பரிசையும் வென்றவர்.

மேற்கில் தோன்றிய உதயம்

கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள்.

”பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு இருக்கறதை? இந்த வயசிலேயும் அலையுதே!”

”ஆனா, அந்த ஐயா, இந்தம்மாவை கண்டுக்கறதே இல்லையே!” சின்னம்மாவே கேலி செய்வதால் தைரியமாக தன் கருத்தைச் சொன்னாள் சமையல்காரப் பெண் ருக்மணி.

”அவ்ளோ நல்லவங்க போலிருக்கு இவங்க. சரி.. சரி.. மாமா வர்ற நேரமாச்சு.. கிரேவிக்கு அரைச்சிட்டியா?”

மேலும் அரை மணி நேரம் அவளை நடக்க வைத்த பிறகே வந்தார் சிவகுமார்.

வீடு மொத்தமும் அவரை சூழ்ந்து கொண்டது. கௌசல்யா மட்டும் சுவரோரமாக, வாத்சல்யமும் ஏக்கமும் சுமந்து கொண்டு நின்றிருந்தாள். இவளிடம் காட்டாத மரியாதையை, பாசத்தை சைலஜா மாமனாரிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

கிஷோரும் மிருணாளினியும் தாத்தாவின் கழுத்தை கெட்டியாகப் பற்றி ஆடிக் கொண்டிருக்க.. தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி.

கணவரின் பார்வை தன் மேல் விழாதா என்று பந்துக்குக் காத்திருக்கும் விக்கெட் கீப்பரைப் போல் பார்வையை விலக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.

சாப்பாடு முடிந்து, குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, மசாலா டீயை சுவைத்து விட்டு புறப்படும் வரை மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர்.

”வர்றேன் என் செல்லக் குட்டிகளா.. தாத்தா அடுத்த வாரம் வர்றேன்” என்று எல்லோரிடமும் விடை பெற்று காரில் ஏறிய சிவகுமார், ரிஷியின் பக்கத்தில் நின்றிருந்த கௌசல்யா வைப் பார்த்தார்.

”வர்றேன்!” – உயிர்ப்பே இல்லாத குரலில் வந்தது வார்த்தை.

இது போதுமே..!

சிலிர்ப்புடன் அருகில் வந்தாள்.

”உடம்பைப் பார்த்துக்குங்க.. முன்னைக்கு இப்ப கொஞ்சம்.. மெலிஞ்சிரு..” அவள் சொல்லி முடிக்கும் முன் கார் சீறிப் புறப்பட்டது.

குபுக்கென்று பொங்கிய சிரிப்பை அடக்கியபடி சைலஜா நகர.. உயிர் வரை வலித்தது கௌசல்யாவுக்கு.

அடுத்த வாரத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை சிவகுமாரிடம். யோசனையிலேயே இருந்தார். கிளம்பும் முன் கௌசல்யாவிடம் வந்தார். நாசூக்காக குழந்தைகளை அப்புறப்படுத்தி நகர்ந்தனர் ரிஷியும் சைலஜாவும்.

”என்னை எப்பவுமே நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?”

சுரீரென்று வந்து விழுந்த வார்த்தைகளில் சுருண்டு போனாள்.

”நான்.. உங்களை.. என்ன ஆச்சு?”

”நல்ல மருமகளாதான் இருக்கலே. நல்ல மாமியாரா வாவது இருக்க முடியாதா?”

புரிந்தது. சில நாட்களாக சைலஜாவுக்கும் அவளுக்கும் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை, ஊதி பெரிசாக்கி இவரிடம் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்!

”என் மேல எந்தத் தப்புமில்லீங்க. சைலாதான் என்னை மரியாதை- இல்லாம..”

”அடச்சீ.. வாய மூடு! என்னிக்குதான் உன் தப்பை நீ ஒப்புக்கிட்டிருக்கே? உன்கூட மனுஷங்க வாழ்ந்துட முடியுமா? பெத்த புள்ளையக் கூட நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறே..!”

”நா.. னா?”

”உன் வாயைப் பத்திதான் எனக்குத் தெரியுமே!”

”…….?!”

”வெள்ளிக்கிழமை வர்றேன்.. உன் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு ரெடியா இரு!”

கௌசல்யாவினுள் குபீரென்று உற்சாக ஊற்று ஒன்று பொங்கியது.

”என்னை.. என்னை.. உங்க கூடவே கூட்டிட்டுப் போகப் போறீங்களா? இப்ப.. இப்பவே வந்துடறனே?” குழந்தை மாதிரி கேட்டாள்.

”ஏன்.. உனக்கு தீர்க்க சுமங்கலியா போய்ச் சேரணும்னு ஆசையில்லையா?”

அவள் முகத்தில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் உடனடியாக செத்து மடிந்தன.

”வே.. வேற எங்கே?”

”முதியோர் இல்லத்துக்கு!”

அழுதழுது உள்ளம் மரத்துப் போயிருந்தாள்.

‘என்ன கொடுமை இது? கட்டின புருஷனே, பெண்டாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்ப்பாரா?’

ஆயிற்று.. முப்பத் தைந்து வருடங்கள்! இன்னமும் சிவகுமாருக்கு அவள் மீது நம்பிக்கையோ, கருணையோ வரவேயில்லை. ஊசி மேல் தவமிருந்த அவள் நம்பிக்கை எல்லாம் பொத்தலாகிப் போனது.

இத்தனைக்கும்.. அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் புரிந்தவர்கள். வாழ்க்கை.. இன்பத்தை சுமந்து கொண்டு தங்குதடையின்றிதான் சென்றது. ஆனால், இவர்கள் வீட்டிலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆகாமலே போனது.

கௌசல்யா வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பாள். எந்தக் கேள்விக்கும் ஒரு பதிலை தயாராக வைத்திருப்பாள். பதிலுக்கு பதில் வாயாடும் அந்த குணம், மாமியார் வத்சலாவுக்கு பிடிக்காமல் போனது. ஏற்கெனவே மகன், அவன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதும் சேர்ந்து கொள்ள, வெறுப்பு மலைபோல் குவிந்தது.

சிவகுமார் மனைவியை ரொம்ப நேசித்தார். ஆனால், அதைவிட அதிகமாக அம்மாவை நேசித்தார். அதுதான் அந்த அம்மாவுக்கு சாதகமாகிப் போனது. கௌசல்யாவைப் பற்றி ஏதேனும் சொல்லிக் கொண்டே இருந்தார். சிறு உளிதானே பெரிய மலையை உடைக்கிறது? அவர்கள் தாம்பத்யத்திலும் விரிசல் விழுந்தது. பலன்.. சிவகுமார் கௌசல்யாவிடம் பேசுவதையும்கூட தவிர்க்க ஆரம்பித்தார். அப்போது ரிஷி, கௌசியின் வயிற்றில்!

ஒரே அறையில் கணவர் தன்னைத் தள்ளி வைத்த ஏமாற்றம், ‘எல்லாம் இந்த அம்மாவால்தானே’ என்கிற கோபம்.. எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் சண்டையில் கௌசல்யா வார்த்தைகளை விட்டு விட்டாள்.

”என்னைப் போயா சனியன்னு சொல்றீங்க? நீங்கதான் சனியன்! என் வாழ்க்கையை கெடுக்க வந்த சனியன். உங்களாலதான் புகுந்த வீட்டுலயே வாழாவெட்டியா அல்லாடறேன்” என்று அழுதாள்.

அது போதாதா வத்சலாவுக்கு! ஈறை பெருமாளாக்கி விட்டாள்.

தெய்வமாக தான் வணங்குகிற தாயை இவ்வளவு கேவலப்படுத்திய பின், அவளை மனதிலிருந்து தூக்கி எறிந்தார் சிவகுமார்.

அடுத்த ஆறு மாதத்தில் மஞ்சள்காமாலையில் வத்சலா போய்ச் சேர.. அதுவும் கௌசல்யாவால்தான் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாக பதிய, அவளைப் பார்ப்பதைக்கூடத் தவிர்த்து விட்டார்.

மனதை பிசினஸில் திருப்ப.. செல்வம் பெருகியது. நிச்சயம் கணவரின் மனம் ஒரு நாள் மாறும்.. தன் உண்மையான அன்பையும் தன்னையும் புரிந்து கொள்வார் என்று காத்திருந்தாள் கௌசல்யா.

ரிஷியும் வளர்ந்து கல்யாண வயதை அடைந்தான். அவன் கல்யாணம் எந்தப் பிரச்னையும் இன்றி நடக்கவே அதுவரை ஒரே வீட்டில் சேர்ந்திருந்த சிவகுமார், ரிஷியின் கல்யாணம் ஆனதும், தனியே கேளம்பாக்கத்தில் உள்ள தன் பண்ணை வீட்டுக்குச் சென்று விட்டார்.கௌசல்யா எவ்வளவோ கெஞ்சியும், அவளை உடன் அழைத்துச் செல்லவில்லை.

”இனியாவது என்னை நிம்மதியா விடு! எனக்கு தனிமை தேவை. என் தாயோடு வாழ்ந்த நாட்களை அசைபோட்டு வாழ தனிமை தேவை! ரிஷி.. நீயும் என்னை வற்புறுத்தாதே!” என்று போய் விட்டார்.

வாரம் ஒருமுறை, பிள்ளையையும் பேரக் குழந்தை களையும் பார்க்க வந்து விடுவார்.

கௌசல்யா கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

தாயின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசம் கூட இன்னொரு பெண்ணின் ஒரு ஜென்மத்தையே வீணாக்கி விட்டதே!

”அன்புள்ள உங்களுக்கு!

இந்தக் கடிதம் உங்களுக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியைத் தராது என்பதை அறிவேன்! பேசிப் பேசியே வாழ்க்கையை தொலைத்த நான்.. பேசாமலே உங்களை விட்டுத் தொலைந்து போகிறேன். என்றாவது ஒருநாள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று காத்திருந்தேன். நடக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதளவாவது நீங்கள் என் மீது வைத்திருக்கலாம். விளைவு.. இன்று கணவனே, மனைவியை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது. நீங்கள் நல்லவர். எத்தனையோ குடும்பங்களுக்கு அட்சயப்பாத்திரமாக இருப்பவர். அப்படிப்பட்டவர் இப்படியரு காரியம் செய்து என்னால் பாவச் சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது. அதனால் இந்த வீட்டை விட்டுப் போகிறேன். ஆதரவற்றோருக்கென்று எத்தனையோ புகலிடம் இருக்கிறது. அங்கு மீதி காலத்தை கழித்துக் கொள்கிறேன். என்னால், இனி எந்த சிரமும் உங்களுக்கு வராது.

விடைபெற்றுக் கொள்கிறேன்!

இப்படிக்கு,

எஸ்.கௌசல்யா”

”நோ..” – படித்து முடித்தவுடன், துளிர்த்த கண்ணீருடன் அலறினார் சிவகுமார்.

ரிஷி பதற்றத்துடன் அப்பாவைப் பார்த்தான்.

”என்ன ரிஷி இது? அவளை பத்திரமா பார்த்துக்குவேன்னுதானே உன்கிட்டே விட்டிருந்தேன்? அவளைத் தொலைச்சிட்டு, லெட்டரை கொண்டு வந்து கொடுக்கறியே..!”

”அ..ப்..பா!” அதிர்வுடன் ஏறிட்டான்.

”கௌசிக்கு எதுவுமே தெரியாதுடா! அவ குழந்தை மாதிரி.. உலகம் தெரியாதவ.. எங்கே போனாளோ.. எப்படி இருக்காளோ?”

ரிஷி இத்தனை வருடங்களில் அப்பாவை இந்தளவு உணர்ச்சிவசப்பட்டு.. அதுவும் அம்மாவுக்காக.. பார்த்ததே இல்லை.

”அப்பா.. அப்புறம் எப்படிப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்க்கணும்னு சொன்னீங்க?”

”சொன்னேன்தான்.. ஆனா, அது உன்மேல உள்ள கோபத்துல சொன்ன வார்த்தை. உன்கிட்ட கோபத்தைக் காட்ட சங்கடப்பட்டு, அவகிட்ட கத்திட்டேன்.”

”என் மேல கோபமா.. ஏன்ப்பா?”

”சைலஜாவுக்கு கௌசல்யாவை ஆரம்பத்துலயிருந்தே பிடிக்கலைனு எனக்கு நல்லா தெரியும். ஒரு பொண்ணுக்கு மரியாதை புகழாலோ, அந்தஸ்தாலோ வந்திடறதில்ல. கணவன் அவளுக்குத் தர்ற மரியாதையாலயும், முக்கியத் துவத்தாலயும்தான் கிடைக்குது. நான் கௌசியை ஒதுக்கி வச்சது, சைலஜாவுக்கு இளக்காரமாப் போய்டுச்சு. அது தெரிஞ்சும் என்னோட பாழாப்போன ஈகோவால கௌசியை இத்தனை நாளா ஒதுக்கியே வெச்சுட்டேன்.

எனக்குக் கல்யாணமான புதுசுல எங்கம்மா மேல தப்பு இருக்குனு தெரிஞ்சும் அவங்களை விட்டுக் கொடுக்காம கௌசியைத்தான் குறை சொல்வேன். சண்டை போடுவேன். ஆனா, நீ.. உன் அம்மாவை விட்டுக் கொடுத்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திருக்கே..!”

”அ..ப்..பா!” — குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தான் ரிஷி.

”எத்தனையோ முறை உங்கம்மாகூட பேசணும்னு நினைச் சிருக்கேன். ஆனா, என்னோட ஈகோவால..” என்று தடுமாறியவர், ”அவ மேல உண்மையிலயே வெறுப்பு இருந்திருந்தா, எப்பவோ டைவர்ஸ் பண்ணி யிருப்பேன். அவளை நானும் ரொம்ப நேசிக்றேன்டா! அவளை என் கூட அழைச்சிட்டுப் போக சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தேன். அவளை முதியோர் இல்லத்துல சேர்த்து விடற அளவுக்கு பாவியா நான்? என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் ஸ்வீட் சர்ப்ரைஸ் தரணும்னு நினைச்சிருந்தேன்.. அதுக்குள்ள..!” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டார்.

”அம்மா மேல உங்களுக்கு இவ்வளவு பாசமா?”

ஆச்சர்யத்தில் உறைந்து நின்றான் ரிஷி.

”அதான் சொன்னேனே.. எல்லாத்துக்கும் என் பொல்லாத ஈகோதான் காரணம்னு. புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்டை வரலாம், அடிக்கலாம், திட்டலாம்.. ஆனா, ஈகோ மட்டும் வந்திடவே கூடாது. அதுக்கு நான்தான் பெரிய உதாரணம். ஆனா, அவ என்னை விட்டு விலகிப் போனதும் ஈகோதான் ஓடிப் போயிடுச்சே.. கௌசியை கண்டுபிடிக்கறது எனக்குப் பெரிய விஷயமில்லே! இன்னிக்குள்ள அவளைக் கண்டுபிடிப்பேன். இனி, என்னால அவளை விட்டுப் பிரியவே முடியாது!” என்றவரின் முகத்தில் அன்பும் ஏக்கமும் நிறைந்திருந்தது.

கடவுள் சிலருக்கு வாரந்தோறும் சம்பளம் கொடுக்கிறார். சிலருக்கு வருடங்கள் பல கழித்துத் தருகிறார். கௌசல்யாவுக்கு போனசும் சேர்ந்து காத்திருக்கிறது.

– பெப்ரவரி 2008

சில வார்த்தைகள்

மேற்கில் தோன்றிய உதயம் என்ற தலைப்பிற்கும் கதைக்கும் என்ன பொருத்தம் என்று ஆலோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம். வயதானபின் தோன்றிய ஞானம் என்று கொள்ள முடியாது. ஆலோசித்ததில் ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற தலைப்பு இக்கதைக்கு பொருத்தும் என்று தோன்றுகிறது. சிவகுமார் என்ற கல்நெஞ்சக்காரரின் மனதில் மனைவியின் பெயரில் ஒரு சிறு  ஈரம் இருக்கிறது.

இந்த முதியோர் இல்லம் கதைகள் நிறைய வர ஆரம்பித்துவிட்டன. கூட்டுக் குடும்பங்களின் சிதைவும், வேலை, படிப்பு காரணமாக இடம் பெயர்ந்தும் குடும்பங்கள் வாழும் நிலையில் ஈகோ என்ற தற்பெருமை/தன்மான மதிப்பை விடுவதற்கு மனமில்லாமல் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். கதையில் வரும் நால்வரும் ஈகோவை விட்டுக் கொடுக்காதவர்கள் தாம். இதில் சிவகுமார் முதல்வர்.  

கடைசியாக ஒரு வார்த்தை. ஆசிரியர் அழகாக இருக்கிறார்.  

கதை sirukathaigal.com இல் இருந்து பெறப்பட்டது. சுட்டி  

======>மேற்கில் தோன்றிய உதயம்<========


2 கருத்துகள்:

  1. இது ஒரு நடக்காத டெம்ப்ளட் கதை.

    முதல்ல யாரு எவர்னு ஒவ்வொருத்தரையும் புரிஞ்சிக்கறதுக்குள்ள மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம். கணவனாம், அம்மா பாசமாம், மனைவி மகன்களை விட்டுட்டுப் பிரிஞ்சு வாரம் ஒரு தடவை வரானாம், அசமஞ்சம் மாதிரி பெண்டாட்டியாம், முதியோர் இல்லத்துல சேர்ப்பேன் என்ற அளவுக்கு கோபமாம், பிறகு கிளைமாக்சுல மனைவியின் மீதான பாசம் வெளிப்படுதாம். இந்த மாதிரி அத்தைப் பாட்டி கதைகளை எழுதறதுக்கே எழுத்தாளி ஆகிடறாங்களோ?

    பதிலளிநீக்கு
  2. உங்களின் அந்த 'கடைசியாக ஒரு வார்த்தை'யை வைத்தே ஒரு கதை எழுதலாம். அந்த அளவுக்கு கற்பனையைக் கிளர்த்தி ஊர்வலம் விடும் வரி அது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!