26.5.26

சிறுகதை - கதாசிரியர் - ஸ்ரீராம்

நேற்று வெங்கட் தனது தளத்தில் இணையத்திலிருந்து ஒரு படம் வெளியிட்டு, அதற்கு அங்கு யாரோ எழுதி இருந்த கதையையும் கொடுத்திருந்தார்.  இன்னொரு படம் போட்டு அதற்கு கதை நம்மைக் கேட்டிருக்கிறார்.

எனக்கு படம் பார்த்து கதை எழுதி பழகி விட்டது.  எனவே அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த படத்துக்கு நானும் ஒரு கதை எழுதி அங்கு அனுப்...   இல்லை, இருக்கவே இருக்கு செவ்வாய்..  இங்கும் பகிர வேறு ஏதாவது தேடணும்..  எதற்கு தேடிகிட்டு?  இதை செவ்வாயில் போட்டுடலாம்னு இங்கே போட்டுட்டேன்!

அந்த இன்னொரு படத்துக்கு கதை?  அவர் கடைசி தேதி எதுவும் சொல்லவில்லை...  Mail IDயும் கொடுக்கவில்லை.  என்னிடம் அவர் ID இருக்கும்தான்.   பார்ப்போம்.  

========================================================================================


கதாசிரியர் 

- ஸ்ரீராம் -

 "பையா...   என்ன என்னை ரகசியமா படம் எடுக்கறே?  'இன்ஸ்டா'ல போஸ்ட் போடப்போறியா?"

"அய்யய்யோ..   மன்னிச்சுடுங்க தாத்தா...  தெரியாம எடுத்துட்டேன்.  எதற்காவது உதவும்னு எடுத்தேன்.."

"எடுத்துக்கோ தப்பில்லே..  நான் என்ன நடிகையா நடிகனா, எடுக்கக் கூடாதுன்னு சொல்ல..  என்னையும் ஒருத்தன் படமெடுக்கறானேன்னு சந்தோஷம்தான்"

"அப்புறம் தம்பி,,  தாத்தான்னு கூப்பிடாத...   அங்கிள்னு கூப்பிடு.  ஸ்கூல் பசங்க வேணா என்னை தாத்தான்னு கூப்பிடலாம்..  ஹா..  ஹா..  ஹா   

"சரி தாத்...   ஸாரி அங்கிள்..  சரி அங்கிள்"

"சரியா ஸாரியா ஒரு தெளிவில்லையே தம்பி உன்கிட்ட.."

"இல்லை அங்கிள்..  நரைச்ச தலை, கைல தடி.."

"ஓ..  இந்த தடியா?  எங்க தெருவிலும் சரி, இங்கயும் சரி, நாய் நிறைய இருக்கு.  ஒண்ணும் பன்ணறதில்லைதான்.  இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்கு...  திடீர்னு ஒருநாள், தப்பித்தவறி பக்கத்துல வந்தா மிரட்டறதுக்கு.  மிரட்டறதுக்குதான்..  அடிக்க மாட்டேன்...   அது என்னை ஒண்ணும் பண்ணாத வரை நானும் வன்முறையை கையில் எடுக்க மாட்டேன்!" கொஞ்சம் சத்தமாக சிரித்தவாறு, தொடர்ந்து  "இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணல்லன்னு கேர்லெஸ்ஸா இருக்கக் கூடாது பாரு.."

கொஞ்ச நேரம் இருவரும் கடலைப் பார்த்தபடி மௌனமாயினர்.

"ஏன் அங்கிள் வயசனாதை ஒத்துக்க மாட்டேங்கறாங்க?"

"யாரு?"

"பொதுவா எல்லோரும்..  ஏன், நீங்களே கூடதான்..."

"என்னை மட்டும் நேரடியா கேக்க தைரியம் வரலை இல்ல?"

"ஆமாம் அங்கிள்..  உங்களுக்கு தெரியாததா?  அது பயம் இல்ல..  மரியாதை, நாகரீகம்.."

"என்ன புண்ணாக்கோ..    இதுக்கு நீ கோச்சுக்காத..   எனக்கு கோவம்லாம் வராது.  சரி சரி..  படம் எடுத்தியே..  என்ன எழுதுவே?  எனக்கும் சொல்லு... நானும் ரசிக்கிறேன்"

"அப்போ என்ன தோணுதோ அதை எழுதுவேன் அங்கிள்.. ஒண்ணும் எழுதாம போட்டோ மட்டும் கூட போட்டுடுவேன்"

"சோகமா எழுதுவியா?  ஜாலியா எழுதுவியா?

"அது நான் எடுக்கும் படத்தைப் பொறுத்து..  இப்போ உங்க படத்தை வைத்து சோகமா எழுத முடியுமா?  இவ்வளவு சிரிச்ச மூஞ்சியோடு இருக்கீங்க.."

"அழுதால் அனைத்தும் நடந்துவிடுமா அன்பனே..  எப்படி நம்ம ரைமிங்?  நாங்களும் எழுதுவோம்ல..?"

"நீங்க எழுதுவீங்களா அங்கிள்?"

"கடல் அலைகள் கூட நமக்கு பாடம் சொல்லுது தெரியுமா?  பொங்கற அளவு பொங்கிட்டு அப்புறம் அமைதியாகி வீட்டுக்குப் போயிடணும்..  பொங்கி வரும் அலையெல்லாம் அடங்கி அமைதியா திரும்ப தன் வீட்டுக்குள்ள போறதைப் பார்த்தியா?   அதுலேருந்து மக்கள் பாடம் படிக்கறாங்களா?"

பொங்கும் அலைகள் 
போகிற போக்கில் 
மனிதனுக்கு 
ஒரு பாடம் சொல்லிச் 
செல்கின்றன 
பொங்கத் தெரிந்த மனதுக்கு 
அடங்கவும் 
தெரிவதுதான் 
வாழ்க்கையின் வெற்றி..

எப்படி?"

"நல்லாயிருக்கு அங்கிள், நான் இதுமாதிரி இதுவரை யோசிச்சதில்ல"

"எல்லோரும் சொல்றதையே நாமளும் எப்படிச் சொல்றது?  நாம என்ன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாங்க்ளாஸ் பாடமா படிக்கறோம்?"

"சரி அங்கிள்..  தினசரி வந்து உட்கார்ந்துட்டு போறீங்க..  இன்னிக்கிதான் நான் உங்களை போட்டோ எடுத்ததை பார்த்தீங்க..  நான் ஏற்கனவே வேற வேற நாள்ல இரண்டு மூன்று தடவ உங்களை போட்டோ எடுத்திருக்கேன்..  நீங்க கவனிக்கலை"
"இருக்கலாம்..  போன வாரம் நான் ஒரு குழந்தையோட விளையாடிக்கிட்டிருந்ததை நீ போட்டோ எடுத்ததை பார்த்தேன்..  அதனாலேயே கொஞ்ச நேரம் பாஸ் மாறாமல் இருந்தேன்.  நீயும்தான் அதை நோட்டீஸ் பண்ணலை"

'அட' என்று மனதுக்குள் வியந்து கொண்டான் அவன்.

"வீடு பக்கம்தானா அங்கிள்?"

"ஆமாம்ப்பா..  நடக்கற தூரம்தான்.  அதாவது என்னால நடக்க முடிஞ்ச தூரம்"  புன்னகைத்தார் அவர்.

"ஆண்ட்டி தொல்லை தாங்காம டெய்லி இங்க வந்துடறீங்க போல..  ஒரு நாள் கூட மொளகா பஜ்ஜி அது இதுன்னு எதுவும் வாங்கிட்டு போக மாட்டேங்கறீங்களே..  பேரப் பசங்க கேட்க மாட்டாங்களா?"

"பதில் சொல்லாமல் அவனை ஒருமுறை பார்த்து விட்டு அந்தப் பக்கம் திரும்பி கடலைப் பார்த்தார்.  சிரித்தார்.

"ஏதாவது கேக்கணும்னா நேரா கேளேன்.தம்பி..  உன் பேரென்ன..?"

"தம்பின்னே வச்சுக்குங்களேன்.."

"ஹா...  ஹா..  ஹா..  பதிலுக்கு பதிலா?   இப்படி உட்காரு தம்பி"

அவன் உட்கார்ந்ததும், தாண்டிச் சென்ற கடலைக்காரனைக் கூப்பிட்டு இரண்டு கடலைப் பொட்டலம் வாங்கி அவனிடம் ஒன்றை நீட்டினார்.  கொஞ்சம் தயங்கி விட்டு அவனும் வாங்கி கொண்டான்.

ஒவ்வொரு கடலையாக  நிதானமாக  தோல் உதிர்த்து வாயில்  போட்டபடி பேசினார் அவர்.

"வீட்ல ஆண்ட்டியும் நானும் மட்டும்தான்..."  ஆண்ட்டிக்கு ஒரு அழுத்தம் கொடுத்து சொல்லி சிரித்தார் மறுபடியும்.  

"நான் அங்கிள்னா அவங்க ஆண்ட்டிதானே?"

திரும்பி அவனைப் பார்த்தார்.   அவன் பார்வையைப் படித்தவர்.. "யங் மேன்..  டோன்ட் ஜம்ப் இன்டு கான்க்ளூஷன்ஸ்..  நீ நினைக்கற அளவு நான் தனியா கஷ்டப்படற சீனியர் சிட்டிசன் இல்ல"  மறுபடியும் சிரித்தார்.

"என்னோடது ஐடியல் குடும்பம்...  புரில?  ஒரு பையன் ஒரு பொண்ணு..  பொண்ணு கல்யாணமாகி திருச்சில இருக்கா..  பையன் நாங்க இருக்கற வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்கான்.."

வாயில் போட்ட கடலையை துப்பினார்.  "ஒரு பொட்டலத்துல எவ்வளவு சொத்தை கடலை பாரு..  இதுவரைக்கும் அஞ்சாறு சொத்தை"

"வேற இன்னொண்ணு வாங்கிட்டு வரவா அங்கிள்?"

"வேணாம் வேணாம்..  இன்று இப்படி போச்சு..  அவ்ளோதான்..  எல்லா நாளும் எல்லாமும் சரியா வந்துடாது. "

மீண்டும் கடலையும் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் பேச்சைத் தொடர்ந்தார்.

"என் மகனின் பசங்க..  அவனும் ஐடியல் பேமிலிதான்..   ஒரு பொண்ணு, ஒரு பையன்,,  சாயங்காலமானா ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு, அவங்க ஆண்ட்டி கிட்ட டியூஷன் படிக்க வந்துடுவாங்க.  இப்போ இப்போ அவங்களோட இன்னும் ரெண்டு பெரும் - அவங்களோட க்ளாஸ்மேட்ஸ் - வர்றாங்க..  ஆண்ட்டி எல்லோருக்கும் டியூஷன் எடுப்பா..  ஃப்ரீ தான்..   அவ படிச்ச படிப்பு வீணாகக் கூடாதே...  நான் அவங்களுக்கு தொந்தரவா இருக்க வேணாம்னு அந்த நேரம் இங்க வந்துடுவேன்.."

"ஓ.."  தலையாட்டிக் கொண்டான் தம்பி. 

"என்ன,  நீ எதிர்பார்த்த ஒரு சோகக்கதை இல்லையா? "

"அப்படியெல்லாம் இல்ல அங்கிள்.."  சிரித்தான்.  கொஞ்சநேரம் வேறு ஏதோ பேசிவிட்டு சொன்னான் "கிளம்பறேன் அங்கிள்..  மறுபடி பார்க்கலாம்"

கையாட்டி விடை கொடுத்தவர் மறுபடி மக்களையும் கடலையும் புன்னகையுடன் பார்க்கத் தொடங்கினார். 

கொஞ்ச தூரம் சென்றவன் ஏதோ சந்தேகத்துடன் திரும்பி அவரைப் பார்த்தான்.  அவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் மறுபடி சிரித்து கையாட்டினார்.

===========================================================================================

=======================================

குட்டி ஈன்ற தாய் யானையை காவல் காக்கும் தங்கை, மகன்: வால்பாறை வாகைமலையில் ஆச்சரியமூட்டும் காட்சி :

குட்டி ஈன்ற தாய் யானையை, கவனமாக கண்காணித்து, காவல் காத்து வருகின்றன அதன் சகோதரி யானையும், மகன் யானையும். வால்பாறை வாகைமலை பகுதியில் இந்த கண்கொள்ளக்காட்சியை கண்டு ஆச்சரியப்படுகின்றனர் பொதுமக்கள்.
தமிழக-கேரள வனப் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம் வால்பாறை. இங்குள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.
இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், குடியிருப்புகள், கடைகளை துவம்சம் செய்வதும், மக்கள் அவற்றை விரட்டுவதும் வழக்கம்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை வாகைமலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஈன்று, அந்தப் பகுதியை விட்டு நகராமல் உள்ளது.
யானைகள் கூட்டம்
இந்த யானையை, அதன் சகோதரி யானையும், மகன் யானையும் சில அடி தூரத்தில் நின்று காவல் காத்து வருகின்றன. இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் 13 யானைகள் சுற்றித் திரிகின்றன.
இந்த கண்கொள்ளாக் காட்சியை அப்பகுதி மக்கள் பரவசத்துடன் பார்க்கின்றனர். எனினும், யானைகள் இருக்கும் பகுதிக்கு அருகில் மக்கள் சென்றுவிடவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வனத் துறையினர் கண்காணிப்பு
“பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம்.
தன் குட்டிக்கு மற்ற விலங்குகளாலோ, மனிதர்களாலோ துன்பம் நேரிடுவது தெரிந்தாலும், குட்டியுடன் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரும். அப்படி நகரும்போது, குட்டி யானைக்கு ஆபத்து நேர்வதும்உண்டு. எனவே, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். மேலும், தாய் யானை இருக்கும் பகுதி, யானைக் கூட்டம் நிற்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் வனத் துறையினர்.
இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (என்.சி.எஃப்) நிர்வாகியும், வன விலங்குகள் ஆய்வாளருமான ஆனந்தகுமார் கூறியது:
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வால்பாறையில் யானைகள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கும். இதே சமயங்களில்தான், காட்டு யானைகள் குட்டி போடுவதும் சகஜம்.
பசுமையான வனப் பகுதி
பெரும்பாலும் அடர்ந்த வனப் பகுதியில், தண்ணீரும், பசுமையான உணவும் கிடைக்கும் பகுதியில்தான் யானைகள் குட்டி ஈனும். இந்த யானையும் பக்கத்தில் உள்ள காட்டில்தான் குட்டி ஈன்றுள்ளது. இப்பகுதியில் உணவும், நீரும் நிறைய இருப்பதால், அங்கிருந்து இங்கு வந்துள்ளது.
மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.
அந்த வகையில், இந்த யானைக்கு அருகில் நின்று கண்காணிக்கும் மற்றொரு பெண் யானை, இதன் சகோதரியாக இருக்கக்கூடும்.
மேலும், அதனுடன் இருக்கும் ஆண் யானைக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். இந்த யானையும் உடன் நிற்பதைப் பார்க்கும்போது, குட்டி ஈன்ற யானையின் பிள்ளையாக இருக்கும். அல்லது அதனுடன் நிற்கும் சகோதரியின் குட்டியாகவும் இருக்கலாம்.
பொதுவாக, ஆண் யானைகள் குறிப்பிட்ட பருவத்துக்குமேல் கூட்டத்தில் இருக்காது. அதற்கு பெண் யானைகளை விட கூடுதலான உணவு, நீர் தேவை. எனவே, அது தனியாகச் சென்று உணவு தேடி, சாப்பிடும். இந்த சிறிய ஆண் யானை, பெரிய யானையுடன் இருப்பதற்கு, அந்த 2 யானைகளில் ஒன்றின் குட்டியாக இருக்கலாம் என்று கருதவாய்ப்புள்ளது என்றார்.
ஆபத்தும் அதிகம்...
இதுகுறித்து வன விலங்கு ஆய்வாளர்கள் கூறும்போது, “யானைகள் பெரும்பாலும் காட்டுக்குள்தான் குட்டி ஈனும். மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, குட்டி ஈனாது. இங்கு தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்துக்குள் குட்டியுடன், தாய் யானையும் வந்துள்ளதற்கு, உணவும், நீரும் இங்கு கிடைப்பதே காரணம். இது மிகவும் ஆபத்தானது.
சில ஆண்டுகளுக்கு முன் சோலையாறு பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை, ஆற்றைக் கடக்கும்போது குட்டியைத் தவறவிட்டுவிட்டது. ஆற்று வெள்ளத்தில் குட்டி அடித்துச் சென்றதால், தாய் யானையுடன் வந்த யானைக் கூட்டம் குட்டியைத் தேடி அலைந்தன. அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றினர். யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால், யானைகள் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. பின்னர், அவற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்து, குட்டி யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்று, யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டனர். குட்டியும் அந்த கூட்டத்துக்குள் சென்று, தாயுடன் சேர்ந்துகொண்டது.
ஆனால், என்ன காரணத்தாலோ, யானையே குட்டியை சேர்க்காமல் துரத்தியடித்தது தாய் யானை. இதில், அந்த குட்டி யானை இறந்தே விட்டது. எனவே, தாய் யானை, குட்டியுடன் காட்டை விட்டு ஊருக்குள் வருவதால், அதைச் சார்ந்த யானைக் கூட்டத்தால் மக்களுக்கு மட்டுமல்ல; இயற்கை இடர்கள், வன விலங்குகளால் யானைக் குட்டிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, இவற்றின் அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது” என்றனர்.
- தி இந்து (தமிழ்) - நாளிதழிலிருந்து... 2016


இதுபற்றி பகிர்ந்தும் என் மாமா விசு பகிர்ந்த செய்தி ஒன்று.   அவர் அந்த ஏரியாவில்தான் பணிபுரிந்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயிலில் பர்லியாறு அருகில் குட்டி யானை ரயில்வே லைனைக் கடக்கும்போது ரயில் மோதியதில் குட்டிக்கு காயம். காலை 8-30 க்கு நடந்த இந்த சம்பவம்.... மாலை 5-00 மணிக்கு அதே ரயில் பர்லியாறு பக்கம் வரும்போது ரயில் ஓட்டுநர் ரயிலை தூரத்தில் நிறுத்தி விட்டார்.அவர் கண்ட காட்சி: காலையில் குட்டி அடிபட்ட இடத்தில் 5 யானைகளுக்குமேல் கூடி......வரட்டும் ரயில் நம்மைத் தாண்டி எப்படிப் போகிறது எனப் பார்ப்போம் என்ற பாணியில் நின்றுகோண்டிருந்ததுதான்.  விசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!